பெரம்பலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அகவி. தலித் கவிதையியல் என்ற கவிதைகள் குறித்தான ஒரு ஆய்வு நூலோடு, சுமாடு, தொப்புள் புள்ளி என்ற இரண்டு கவிதை தொகுப்பிற்கு பிறகாக மூன்றாவதாக கொண்டுவந்திருக்கும் கவிதை தொகுப்புதான் ”காலி போத்தலில் நிறைந்திருக்கும் காற்று”

மரணம் என்னை நெருங்கி வருகையில்சகூட ஒரு கவிதைப் புத்தகத்தினை என்னிடம் கொடுத்தால் நெருங்கிவரும் மரணத்தைகூட பிடித்து கிடாசுவதற்கு எத்தனிப்பேன் என கவிதையினை சிலாகித்து அவற்றினை தனக்குள்ளே நெகிழ்த்துப் பார்க்கும் அகவி எதையுமே வியந்தே பார்க்கத் தெரிந்த கவிதைக் கலைஞன். அந்த இடத்திலேயே தான் ஒரு கவிஞனுக்கான அத்தனை குணாதிசியங்களையும் கொண்டவராக நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களின் மீது சம்மணக்கால் போட்டு அமர்ந்துகொள்கிறார் அகவி.

அகவியின் கவிதைகள் கன்பெஷ்ணல் வகைமையினைச் சாராமல் தனது அகதரிசனங்களை வாசகனின் கண்களுக்கு முன்னால் காட்சிகளாக செய்யும் அளவிற்கு அகவி காலியாக இருக்கும் போத்தல்களில் தனது கவிதைகளை நிரப்பித் கொடுத்திருக்கிறார் அகவி.. ஒரு கவிதையினை நோக்கி நெருங்கி அமரும் ஒரு வாசகனின் மனதில் எந்தவித சிக்கல்களையும் கொடுக்காமல் நேர் நின்று தர்க்க ரீதியாக விசாரணை செய்வதாக இருக்கிறது காலி போத்தலி்ல் நிறைந்திருக்கும் காற்று.

”மழையை வேடிக்கைப் பார்க்கும்

ஒவ்வொருவர் கண்களும் நட்சத்திரங்கள்”

என கண்களை நட்சத்திரங்களாக்கி மழையினை காணும் கவிதைகள் வெயிலை முத்தமிடுவதோடு சூரியனை மஞ்சள் பூனையாக பாவிக்கும் தருணங்களில் அவற்றிற்கு ஒருவேளையாவது ஒரு கருவாட்டுத் துண்டினை கொடுத்து ஒரு கூண்டில் அடைத்து வைப்பதோடு அதனையே இந்த கவிதைக்காரனுக்கு பரிசாக கொடுத்துவிட வேண்டுமாய் தோன்றியது. சூரியனை மஞ்சல் பூனையாக நேசிக்கும் ஒரு கவிஞன் அதனை தன் மடியில் அமர்த்தி அதற்கு கருவாட்டுத் துண்டினை தின்னக் கொடுத்து ரசிப்பதும் ஒரு கவிதைதான். ஒட்டுமொத்த மானுடனைத்தையும் தனது அகமாய் விரித்து வைத்திருக்கும் அகவியின் கவிதைகள் மனிதர்களின் ஆழ்மனக் கதவுகளைத் தனது வரிகளால் மென்மையாக தட்டி விசாரித்துவிட்டுப் போவது வெகு எதார்த்தம்தான்.

”அப்பாவிடம் பெற்றுப் பெற்று

வளர்ந்ததை மறந்து விடுகின்றனர் பிள்ளைகள்

அப்பாவால்தான் கொடுத்துக் கொடுத்து வாழ்ந்ததை

கைவிடவே முடியவில்லை”

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கலோடு முடிந்துவிடுவதில்லை என்பதோடு அங்கே ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு முடிவில்லா ஆழ்மன தொடர்பு இயங்கியல் (Infinitives of Emotional Connectivity) நிகழந்துகொண்டிருப்பதை அகவி நமக்கு காட்சிப் படுத்துகிறார். எப்பொழுதும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைக் கணக்கிற்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதைதான் தங்களின் இதய கணக்குப் புத்தகத்தில் வாங்கிகொள்வதாக எப்பொழுதும் வரவு வைத்துக்கொள்வர்கள் என்பதை அகவியின் கவிதைகள் வாகனுக்கு தரிசிக்க கொடுக்கின்றன.

காதல், பட்டப் பெயர்கள் என சொற்களை வைத்து பேசுவதோடு

”முட்டையை சமமாய் அறுப்பதுபோல

இப்பூமியை அறுத்தால்

சூரியனும் சந்திரனுமாய்

இருபாதி இருக்கும்”

என உலகத்தின் உயிர்களுக்கெல்லாம் உச்சமாய் இருக்கும் பேரண்டத்தின் அடையாளங்களைப் பிளக்கவேண்டும் என்கிறார்.

கடல்நீர் தான் உப்பாக கரித்துக்கொட்டுவதோடு யாருக்கும் பயனற்ற நிலையில் இருப்பதை நினைத்து கடற்கரையில் ஓயாது மாரடித்துக்கொண்டு அழுவதைப்போல

”சொற்களாக முடியாத

தமிழ் எழுத்துக்கள்

தனித்தனியே நின்று

தலையில் அடித்துக்கொண்டு அழுதன”

என்று சொல்லும் அகவி எழுத்து என்பதை மனதோடு பேசும் சித்திரம் என்பதாக உணர்ந்தவராக இருக்கிறார். ஓர் எழுத்து ஒர் வார்த்தை என்பதைப்போல மனிதன் தன் சகல வசதிகளுக்காகவும் மொழியினை பொதுவெளிக்கு கொண்டுவந்ததோடு அதனைக்கொண்டு அவன் அடைந்த உயரம் முடிவரா நிலையாக (infinitive hights) இருக்கின்றது.

”இறுதி அஞ்சலி செலுத்த வந்த

இருநூற்று நாற்பத்தி ஏழு

தழிழ் எழுத்துக்கள்

இன்னும் வீடு போய் சேரவில்லை”

வரிகளை அவ்வளது இலேசில் கடந்து போகமுடியவில்லை. ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் இருக்கும் கவிதையினை அகழ்ந்துப் பார்க்கும் தவிப்பில் பேசும் ஒரு பித்துநிலையாகவே இதனைப் பார்க்க முடிகிறது. எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அதனை சமைத்திருக்கும் மனிதன் அதற்கு பின்னதாகவும் அதற்கு ஈடானதாகவும் எழுத்துகளுக்குள் தன்னையே ஆதர்ஷ்சனமாக ஒப்புக்கொடுத்திருப்பதாகத்தான் பார்க்க முடிகிறது. அகவி தனது கவிதைகளிலிருந்து தன்னை விலக்கி வைத்துக்கொள்ளாமல் தன்னையே மொழிக்குள் கரைந்து இயங்கும் ஒரு விசையாக காலி போத்தலில் நிறைந்திருக்கும் காற்றாக தந்திருக்கிறார். அகவி சொற்களால் கவிதை செய்பவன் அல்ல, படைக்கும் கவிதைக்களுக்காக சொற்கள் காத்துக்கொண்டிருப்பதை அவரின் கவிதைகளில் ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட சொற்களில் காணமுடிகிறது.

அகவியின் புத்தக வெளியீட்டு விழாவில் போத்தல் காலியாவதற்கு முன்னதாக அதில் என்ன இருந்திருக்கும்? என்ற கேள்வியும் கூடவே சேர்ந்துதான் அறங்கேறியது. அகவி அதன் குறித்தெல்லாம் எதையும் மனதில் போட்டுக்கொள்வதாக இல்லை. ஆனால் காலி்யாக நமக்கு கொடுத்திருக்கும் போத்தலில் கவிதையினை நிறைத்து கொடுத்திருக்கிறார். காலி போத்ததில் நிறைந்திருக்கும் காற்றை கையில் பிடித்து அதில் தனது கவிதைகளை நிறைக்க தெரிந்திருக்கும் மாயவித்தைக்காரன்தான் அகவி.

”வெய்யில்

மரத்தைதான் முத்தமிடுகிறது

அதன் அடியில் அற்புத நிழல்

முத்தத்தின் அடியில்

நிற்பது எத்தனை சுகமானது”

என்ற உங்களின் பிரபஞ்ச தரிசனத்தோடு நானும் அந்த மரத்தின் அடியில் நின்ற யத்தனிக்கிறேன்.

- க.மூர்த்தி

Pin It