கொஞ்ச காலமாவே வயநாட்டுல இருக்கற சனங்கள வியாதியும் சுகக்கேடும் பாதிச்சுகிட்டே இருக்குது. ரத்தசோகை, பல மாதிரியான புற்றுநோய்க, பொறக்கும் போதே ஒடம்புல ஊனத்தோட பொறக்கறது, திடீர்னு செவுடாயிடறது, கண்ணுல கொறைபாடு வர்றது, பயங்கரமான கழுத்து வலி, தலைவலி, மூச்சடைப்பு, மூளை வளராமப் போறது... இப்படிப் பலப்பல வியாதிகளால அந்த சனங்க பாதிப்படைஞ்சுகிட்டே இருக்காங்க. எல்லாருக்குமே சின்ன அளவுலயாவது தீராத வியாதி இருக்குது. ஆனா இன்னைக்கு வரைக்கும் அரசாங்கத்தோட சுகாதாரத் துறையைச் சேர்ந்தவங்களோ, இல்லைன்னா தனியார் ஆளுங்களோ வயநாட்டுல இருக்கற மக்களோட சுகக்கேடப் பத்தியும், அவங்களோட ஒடம்பு நெலயப் பத்தியும் எந்தவிதமான உருப்படியான பரிசோதனையையோ, கணக்கெடுப்பையோ செஞ்சதில்ல. கேரளாவுலயே அதிக அளவுல பலவகையான புற்று நோய்களால சாகறது இந்த வயநாட்டு மாவட்டத்துல இருக்கற சனங்கதான்னு ஒரு அதிகார பூர்வமில்லாத அறிக்கை சொல்லுது! அதே நேரத்துல இங்க ஆஸ்பத்திரி வசதி சுத்தமா இல்ல. நோயாளிகளுக்கு சிகிச்சை தர்றதுக்குத் தேவையான எந்த வசதியும் கிடையாது. வியாதி முத்திப் போனவங்களும், ரொம்பவும் ஒடம்புக்கு முடியாமப் போனவங்களும் வயநாட்டுல இருந்து மங்களூருக்கோ இல்லைன்னா கோழிக்கோட்டுக்கோ தான் போகணும். அரசாங்க ஆஸ்பத்திரி இல்லாத கொடுமையான நெலமையில தனியார் ஆஸ்பத்திரி காரங்ககிட்ட போகணும்னா கொள்ளச் செலவு செய்யணும்.

இங்க sickle cell anemia-ங்கற நோவுதான் ஆதிவாசிகளத் தாக்கி அவுங்கள மொடக்கிப் போடறதுல முக்கிய பங்கு வகிக்குது. இந்த நோவு வந்தவங்களுக்கு மருந்து தர்ற டாக்டருங்க எல்லாருமே இவங்க உசுருக்கு உத்தரவாதம் தர்றதில்ல. அதிகபட்சம் போனாக்கா இந்த நோவு கண்டவர் 45 வயசு வரைக்குந்தான் வாழ முடியும்னு சொல்லிடறாங்க. அதுக்கும் மேல தங்களோட கையாலாகாத்தனத்த மறைக்க எந்த விதமான அறிவியல் ஆதாரமுமில்லாம ''இந்த நோவு தலைமுறை தலைமுறையா வர்ற நோவு. ஆதிவாசிங்க இனத்துல இது இருக்கத்தாஞ் செய்யும்”-அப்படின்னு புரளிகளப் பரப்பிவிடறாங்க. எந்த விதமான பரிசோதனையோ, விசாரணையோ இல்லாமலே இந்த புரளிக பரப்பப்படுது. இந்த நோவுக்குத் தர்ற மருந்து ரொம்ப சாதாரணமானது. ''*போலிக் ஆசிட்”-ங்கற மருந்த மட்டுமே நோயாளிங்களுக்குத் தர்றாங்க.

ரொம்பக் காலமா மரபு அணுவுல தங்கி வளர்ந்து அழியாம இருக்கிற கிருமிகதான் பின்னாடி மரபுரீதியான நோயா மாறிடுங்கறது உண்மைதான்! ஆனா இந்த வியாதி விசயத்துல இப்படி இருக்கிறதுக்கு சாத்தியம் இருக்கான்னு எந்தவித ஆராய்ச்சியும் பண்ணாமலயே குருட்டாம் போக்குல ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க. பொதுவா இந்த sickle cell anemia -ங்கற நோவு ஆதிவாசி கொழந்தைக மத்திலதான் அதிகமா இருக்குது. வயசு வந்த ஆம்பளைகளும், பொம்பளைகளும் கூட இந்த நோயால கணிசமா பாதிக்கப்பட்டிருக்காங்க. இந்த வியாதியால பாதிக்கப்பட்டவங்க ஒடம்பு முழுசும் சுருங்கிப் போயி, நோய எதிர்க்கற சக்திய சுத்தமா இழந்திடுவாங்க. மூளையோட செயல்பாடும் ஒடம்போட செயல்பாடும் கடுமையான பாதிப்புக்குள்ளாயி மொடங்கிடும். இந்த வியாதி வந்த கொழந்தைக சாதாரணமா இருக்கற பள்ளிக்கூடத்துல போய் படிக்க முடியாது. இப்படி வளர்ச்சி மொடங்கிப் போன கொழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிக்கூடங்க இங்க இல்லை. அதனால அவங்க காலம் பூரா படிக்காம வீட்டுக்குள்ளாறயே மொடங்கிக் கெடக்கிறாங்க. இப்படிப்பட்ட கொழந்தைகளோட எண்ணிக்கை கூடிகிட்டே வருது.

ஆதிவாசிங்கிட்ட மட்டுந்தான் இந்தக் கொடுமையான வியாதி இருக்குதுன்னு புரளி பரப்பினது தப்பானது, பொய்யானதுன்னு கொஞ்ச நாள் கழிச்சு நிரூபிக்கப் பட்டிருச்சு. ஆதிவாசி இல்லாத மத்த சனங்ககிட்டேயும் இந்த வியாதி இருக்கறதும், அதனால அவங்கள்ல பலபேரு செத்துப் போயிட்டதும் தெரிய வந்துச்சு. ஆதிவாசி அல்லாத சனங்ககிட்டயும் இந்த வியாதி பெருகிகிட்டே வருது. தங்களோட பூர்விகத்த விட்டு ஆதிவாசிகளோட இடங்களுக்கு வந்து குடியேறியிருக்கற செட்டிமாருங்க, கவுண்டருங்க, முசுலீமுக, கிறிஸ்துவங்க ஆகியவங்ககிட்டயும் இந்த வியாதி அதிகரிச்சுகிட்டே வருது. இத வச்சே இந்த வியாதி ஆதிவாசிங்களோட மரபுவியாதி இல்லன்னு சொல்லிரலாம். இது வயநாட்டுல பூராப்பக்கமும் பரவியிருக்கற கொடுமையான வியாதி. வேணும்னா மத்தவங்களவிட ஆதிவாசிங்ககிட்டதான் இந்த வியாதி அதிகமா இருக்குதுன்னு சொல்லலாம். ஆனா இங்க இயல்பாவே அமைஞ்சிருக்கற வறுமையும் சுரண்டலும்தான் வியாதிக்கான சமூக பொருளாதாரக் காரணங்களா இருக்குதுன்னு சொல்லலாம்.

வியாதிக்கான காரணங்கள்

ஆதிவாசிங்களும் மத்த சனங்களும் பயன்படுத்தற நிலம், நீர், காற்று, சாப்பாடு ஆகிய எல்லாத்தையும் அறிவியல் ரீதியா பகுத்து ஆராஞ்சு பாக்காம இந்த கொடுமையான கொலைகார வியாதிய பத்தி ஒரு முடிவுக்கு வர்றது சாத்தியமில்ல. அப்படி ஒரு ஆராய்ச்சிய செய்யறது இந்தக் கட்டுரையோட நோக்கமில்ல. இப்படிப்பட்ட ஆராய்ச்சி கூடிய சீக்கிரம் நடத்தப்பட்டு இந்த வியாதிய தீர்க்க வழி பொறக்கனும்னு நாம விரும்பறோம். ஆனாலும் இந்த மாதிரியான ஆராய்ச்சி எல்லாம் பண்ணாமலயே நாம சில முக்கியமான முடிவுகளுக்கு வந்துர முடியும். இத எழுதிகிட்டிருக்கிற கட்டுரை ஆசிரியர் (ஜேக்கப்) வயநாட்ல இருக்கற பெரிய பெரிய தேயிலைத் தோட்டங்கள எல்லாம் நேரடியா போய்ப் பாத்தவர். அங்க வேல செய்யற தொழிலாளிங்க எல்லாருமே ஏதாவது ஒரு வகையில மோசமான வியாதியோடவோ, சுகக் கேடோடவோ இருக்கறதைப் பாத்திருக்கார். குறிப்பா வயநாட்ல கட்டிக்குளத்துப் பக்கத்துல இருக்கற பாரிசன்ஸ்úஸôட டீ எஸ்டேட்ட இதுக்கு உதாரணமா சொல்லலாங்கறார்.

வயநாட்ல இருக்கற பெரிய பெரிய டீ எஸ்டேட்டுக எல்லாம் வெளிநாட்டுக்காரங்க கையில இருந்துச்சு. 1950ஆவது வருசம் வெளிநாட்டுக்காரங்க கிட்ட டீ எஸ்டேட்டுக இருக்கறது சட்ட விரோதம்னு முடிவு வந்த பெறகு இந்த பெரிய டீ எஸ்டேட்டுக பல பேருககிட்ட பல தடவ கைமாறிருச்சு. ஒரு கட்டத்துல தேயிலத் தொழில் இக்கட்டுல மாட்டிகிச்சு. அதுக்கப்புறம் இதுல சம்பாதிச்ச கொள்ளப்பணத்தை எடுத்து அனுபவிச்ச மொதலாளிக மறுமொதல் போட்டு எஸ்டேட்ட வளமாக்கல. சரியானபடிக்கு மராமத்தும் பண்ணல. பெரிய டீ எஸ்டேட்டுகள வச்சுகிட்டிருந்த மொதலாளிமாருங்க எல்லாரும் அந்த இடத்தில அடுக்கு மாடிக் கட்டடம் கட்டறதுக்கு முக்கியத்துவம் குடுத்து அந்த தொழிலுல நுழஞ்சிட்டாங்க. இதனால வயநாடு பேர்போன சுற்றுலா எடமா ஆயிட்டு வருது. தேயில உற்பத்தியும், அதனால வர்ற வருமானமும் லாபமும் கொறஞ்சு போனாலும் கட்டடங் கட்டற எடத்தோட மதிப்பும், அதனால வர்ற லாபமும் கூடிகிட்டே இருக்குது.

தேயிலத் தோட்டத்துல வேல செய்யற தொழிலாளிங்க எல்லாம் பெரிய அரசியல் கட்சிக தலைமையில நடத்தப்படற தொழிற்சங்களுலதான் இருக்காங்க. தொழிற்சங்க அதிகாரத்த வச்சுகிட்டிருக்கற கட்சிக் கமிசாருக எல்லாருமே மொதிலாளிகளுக்கு ஆமாஞ்சாமி போடறவங்களாகவே இருக்காங்க. இதுக்கு நெறைய உதாரணங்களக் காட்ட முடியும். அதவிடக் கொடுமை என்னன்னா, ''லாபம் கொறஞ்சு போச்சு, நட்டம் அதிகமாயிருச்சு” அப்படின்னு சொல்லி அரசாங்கமே நிர்ணயிச்சுருக்கற கூலியவிடக் கொறவான கூலிய மொதலாளிக தர்றபோது அதுக்கும் இந்த தொழிற்சங்கத் தலைவனுக ஆமாஞ்சாமி போட்டு மொதலாளிகள ஆதரிக்கறாங்க. எப்படிப் பாத்தாலும் அங்க தொழிலாளிங்க நெலம ரொம்ப பரிதாபத்துக்குரியதா இருக்குது. அப்படியும் டீ எஸ்டேட்டுகளக்கூட அவங்க விட்டு வைக்கறதில்ல. நெலத்திலிருந்து எதையெல்லாம் உறிஞ்சு எடுக்க முடியுமோ அத அத்தனையையும் தேயிலையாவே எடுத்துரணுங்கறது தான் மொதலாளிங்களோட திட்டமா இருக்குது.

அதுக்காக அவங்க கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம ரசாயன உரங்களையும், பலவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளையும், களைக்கொல்லி மருந்துகளையும் இஷ்டம் போலத் தெளிக்கறாங்க. குறிப்பிட்டிருக்கற அளவுக்கு மேல மருந்தத் தெளிக்கறாங்க. ஆனாலும் அந்த விஷத்தத் தெளிக்கற தொழிலாளிகளுக்கு பாதுகாப்பளிக்கற கையுறைகளையோ, முகமூடிகளையோ தர்றதில்லை. இந்த மாதிரி தெளிக்கிற விஷமேறிய பூச்சிக்கொல்லி மருந்துக பலவகையான புற்றுநோய்கள உருவாக்கற சக்தி படைச்சதுன்னு அறிவியல் ரீதியா உறுதி செய்யப்பட்டிருக்கு. சமீபத்துல தமிழ்நாட்டுல இருக்கற தேனி மாவட்டத்தில் ஆராய்ச்சி செஞ்ச பசுமை இயக்கத்துக்காரங்க இதைய உறுதிப் படுத்தியிருக்காங்க. இந்த வகையான புற்றுநோய்கதான் வயநாட்ல இருக்கற ஆதிவாசித் தொழிலாளிகளுக்கு இருக்குது.

பெரிய பெரிய தேயிலத் தோட்டங்க மட்டுந்தான் கொள்ளை நோய உற்பத்தி பண்ற இடம்னு சொல்லிட முடியாது. கொஞ்ச காலமாகவே வாழைப்பழம், இஞ்சி, பாக்கு மரங்கள வச்சு வளர்க்கறத வயநாட்டுல இருக்கிற எல்லாத் தரப்பு விவசாயிகளும் வெறித்தனமாச் செய்ய ஆரம்பிச்சாங்க. நெல்லு விவசாயம் பாத்துகிட்டிருந்த நெலத்துல இதுகள வளர்த்தாங்க. இந்த மாதிரியான விவசாயத்தை வயநாட்டு விவசாயிங்க கோவா வரைக்கும், சிலபேர் கொங்கணி எல்லை வரைக்கும் கூட விஸ்தரிச்சாங்க. பல இடங்கள அவங்க குத்தகைக்கு எடுத்து, வங்கியிலயோ அல்லது தனியார்ககிட்டயோ லோன வாங்கி, வயநாட்ல இருந்து கூலிக்கு ஒப்பந்த முறையில ஆளப்பிடிச்சுட்டு வந்து இந்தத் தொழிலச் செய்தாங்க. இதையெல்லாம் அவங்க செஞ்தோட நோக்கம் மிகப்பெரிய லாபத்த இது அள்ளித்தரும் அப்படிங்கறதுதான். ஆனா இது சுற்றுச்சூழல பெரிய அளவுல காவு கேட்டுச்சு. இந்த மாதிரி அதிதீவிர சாகுபடி செஞ்ச நிலங்க எல்லாம் நிறம் மாறிப்போச்சு. கடந்த சில வருசமா வயநாட்ல நெல் விவசாயத்துக்கு பதிலா இந்த அதிதீவிர சாகுபடியில விவசாயிக ஈடுபட்டதால வறட்சியும், நிலத்தடி நீர் மட்டக் குறைவும் ஏற்பட்டிருச்சு. எல்லாத்துக்கும் மேலா வாழைப்பழத்திலயும், இஞ்சிலையும் ரசாயனக் கலவையோட அளவு அதிகரிச்சிருச்சு.

கேரளாவுக்குள்ள இருக்கற பல பெரிய சந்தைகளிலயே வயநாட்டு வாழைப்பழங்கள விக்கக்கூடாதுன்னு தடைபோட்டுட்டாங்க. இந்த வாழைப்பழங்களில் இருக்கற விஷத்தன்மையை சனங்க ரொம்ப நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்காங்க. அப்படியும் இந்த மாதிரி விஷம் போட்டு உற்பத்தி செய்யறது கொறையவே இல்ல. உண்மையில இப்படி பயிர்செய்யப்பட்ட இஞ்சி சரியா வெளையாமப் போனதால நட்டம் ஏற்பட்டு கடனாளியாகிப்போன குடகு விவசாயிக பலபேர் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. ஒட்டு மொத்தமா தொகுத்துப் பார்த்தா இந்தமாதிரி தற்கொலைங்க அதிகரிச்சுகிட்டேதான் இருக்குது. ரொம்பவும் கேலிக்கூத்து என்னன்னா இந்த பயிர்கள உற்பத்தி செய்யற விவசாயிக இந்த வாழைப்பழத்தையும், இஞ்சியையும் பயன்படுத்தறதே இல்ல. பெரும்பாலும் இதை இவங்க பக்கத்து மாநிலத்துக்காரங்களுக்கு வித்திடறாங்க.

வாழைப்பழச் சாகுபடியப் பொறுத்த வரைக்கும் வாழை விதையையே விஷக் கலவைக்குள்ள ஊறவச்சு பெறகுதான் விதைக்கறாங்க. அது வளர்ற ஒவ்வொரு கட்டத்திலயும் உரமும் பூச்சி மருந்தும் அடிக்கறாங்க. அது பூ விட்டதும் அந்தப் பூவோட நுனிய சின்னதா வெட்டிவிட்டு அதுவழியா ரசாயனக் கலவைய உள்ள தெளிக்கறாங்க. இதனால வாழைப்பழம் சாதாரணப் பழத்தவிட நீளமாவும் மொந்தமாகவும் வளருது. ஆகமொத்தம் தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் வாழை விஷத்துலயே வளருது. மிளகோட வெலையும் காபியோட வெலையும் விழுந்து போனதாலயும், இந்த மாதிரி சாகுபடியில் வர்ற வாழைப்பழத்துக்கும் பாக்குக்கும் இஞ்சிக்கும் மார்கெட் அதிகரிச்சு நல்ல லாபம் கிடச்சதாலயும் விவசாயிய இத தேர்ந்தெடுத்துகிட்டாங்க.

வயநாட்ல விவசாயம் எப்படி அப்பட்டமான சூதாட்டமா மாறிப் போச்சுங்கறத புரிஞ்சுக்கறதுக்கு சில புள்ளி வெவரங்களப் பாப்போம். கடந்த இருபது வருசத்தில நெல்சாகுபடி 56% குறைஞ்சு போச்சு. அதே நேரத்துல விஷவாழைச் சாகுபடி 1660% அதிகமாகியிருக்கு. ஆச்சரிமாயிருந்தாலும் உண்மை நிலமை இதுதான்!. இந்தப் புள்ளி வெவரங்ககூட ஒரு குத்துமதிப்பானதுதான். ஏன்னா, கிராமப்புறங்கள ஆய்வு செய்கையில பெரும்பாலான கிராமங்க நெல் சாகுபடிய கைவிட்டிருப்பது தெரிய வருது. இத்தோட இஞ்சி, பாக்கு சாகுபடி செய்யற நெலங்கள சேத்துகிட்டா நெலம இன்னமும் மோசமாயிருக்கறது தெரியும்.

எல்லா விசயங்களயும் ஒதுக்கி வச்சுட்டுப் பார்த்தா ''குறைஞ்ச காலத்துக்குள்ளாற அதிகப்படியான லாபத்த” சம்பாதிச்சிடனுங்கற நோக்கம் மட்டுமே நெலம இவ்வளவு மோசமாப் போனதுக்கான முக்கிய காரணமா இருக்குது. இதனால நாசப்பட்டுப் போன மண்ணு தன்னோட பழைய உயிர்ப்புத் தன்மையில பாதியளவ திரும்ப அடையனுமா னாக்கூட கொறஞ்சது அதுக்குப் பலப்பல வருசம் ஆகும். நெல் வெளையற பூமியில எப்போதும் தண்ணி நிக்கறதால அது நெலத்தோட ஈரப்பதத்த காப்பாத்தி நிலத்தடி நீரையும் பாதுகாக்குது. அதுக்கும் மாறா வாழை, இஞ்சி இதெல்லாம் தண்ணி தேங்கி நின்னா அழுகிப் போற பயிர்கள். அதனால தண்ணிகட்டி நிறுத்த முடியாத நெலமா ஆயிர்றதால நிலத்தடிநீர் அழியுது. இதனால வயநாட்டு விவசாய நெலங்க பாலையாகிகிட்டு வருது.

விவசாய அறிவுக்குப் பொருத்தமில்லாத அளவுக்கு ரசாயன உரங்களப் போடறதுங்கறது உற்பத்தி செலவக் கூட்டுது. மேலும் கொஞ்ச காலத்துக்குள்ளயே உரத்தோட அளவக் கூட்ட வேண்டிய நெலமைக்கு நிலத்தப் பாழடிக்குது. அதுக்கும் மேலா அதிக அளவு தண்ணியையும் பாய்ச்ச வேண்டியிருக்கு. அப்படி பாஞ்சு நிக்கற தண்ணி உரத்தோட தன்மையால பூமிக்குள்ளாற எறங்கவும் எறங்காது. இது வயநாட்டுல மட்டுமில்ல, உலகத்துல எங்கெல்லாம் ரசாயன உரத்தப் போட்டு ''பசுமைப் புரட்சின்னு” செஞ்சாங்களோ அங்ககெல் லாமும் இதே கதைதான்னு நிரூபிக்கப்பட்டிருக்கு. இந்தியாவில பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரப் பிரதேசம் ஆகிய இடங்கள இந்தப் பிரச்சினைக்கு முக்கிய உதாரணங்களா காட்டலாம்.

நெல், கோதுமை மாதிரி இருக்கற பயிர்களுக்கு போடுற உரத்த விட பணப்பயிர்களாக இருக்கற டீ, மிளகு, வாழை, இஞ்சி - இதுகளுக்கெல்லாம் அதிக அளவுல உரம் போட வேண்டியிருக்கும். இதுக்கு வயநாடு நல்ல உதாரணம். வயநாட்டுல பயன்படுத்தற உரத்தோட அளவு அங்க இருக்கற வங்கிக தர்ற கடனோட சம்மந்தப்பட்டதா இருக்குது. கடன் தர்ற வங்கிகளே உரத்த சிபாரிசு செஞ்சு வாங்கித் தர்ற ஏஜெண்டுகளாகவும் இருக்காங்க. கடனுக்கு ஒரே கண்டிஷன் தான். அதாவது வாங்கற கடன்ல கொறஞ்சது பாதியளவுக்கோ அல்லது அதுக்கும் மேலயோ உரம் வாங்கியாகனும்.

சில நேரங்களில் அவங்களே உரத்த கொண்டு வந்து கொடுத்திடறாங்க. அப்படியே பணமா வாங்கிட்டாலும் உரம் வாங்கினதும் அதுக்கான பில்ல சரிபாக்கறதுக்காக அவங்ககிட்ட தந்துடனும். நெறய உரம் போட்டா அபரிமிதமான வெளச்சல் கிடைக்குமின்னு மூடத்தனமா நம்பவைக்கப்பட்டிருக்கற விவசாயிக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லையின்னு லாபத்தப் பத்திய கனவிலயே நெறைய உரத்த வாங்கிப் போடறாங்க. இதோட விளைவா கடைசில வயநாட்டு விவசாய நிலங்க எல்லாம் வீரியம் அழிஞ்சு போயி, உப்பேறி, ரசாயன உரத்தால மண்ண பதப்படுத்தற நுண்ணுயிரிகளயெல்லாம் இழந்து பாலைவனமா ஆயிட்டு வருது. அதோட காற்றும் தண்ணீரும் விஷமாயிருச்சு.

இதுனால பறவையினங்களில பெரும்பாலானதுக மெள்ள மெள்ள அழிஞ்சுகிட்டே வருது. அண்மையில வெளிவந்த ஒரு அறிக்கையில சுமார் 20 வகையான பறவையினங்கள் வயநாட்ல முற்றிலுமா அழிஞ்சு போச்சுன்னு சொல்லப் பட்டிருக்குது. விவசாயிக ரொம்ப ஆதர்சமா பயன் படுத்தற பல ரசயான உரங்களில Corinogenic -ங்கற ரசாயனப் பொருள் கலந்திருக்கு. இதுதான் அந்த மாவட்டத்துல பரவிவர்ற கொள்ளை வியாதிக்குக் காரணமா இருக்குது.

வயநாட்டு சனங்க சாப்பிடற உணவு, குடிக்கிற தண்ணி, விதைக்கிற நிலம் - இதிலெல்லாம் இருக்கற நச்சுப் பொருளோட அளவ உடனடியா பரிசோதிக்கனும். ஏன்னா, இந்த மண்ணோடும் காத்தோடும் நீரோடும் நிலத்தோடும் நித்தமும் உறவாடிகிட்டு இருக்கறது இந்த தொழிலாளிச் சனங்கதான். இவங்க வர்க்கந்தான் இதுனால வர்ற நோயால பாதிக்கப்பட்டுக் கிடக்கு. மேலும் இந்த பரிசோதனை மூலமா ரசாயன உரங்களுக்கும் வியாதிக்கும் இருக்கற நேரடி உறவை நிரூபிக்க முடியும். வெறும் தொழிலாளிங்க மட்டுந்தான் பாதிக்கப்படறாங்கன்னு சொல்ல முடியாது. அடிமாட்டுக் கூலிக்கு தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குப் போற தொழிலாளிகள், விவசாய அத்துக் கூலிகள், குறிப்பா ஏழைகளிலும் ஏழையாக இருக்கற ஆதிவாசிக் கூலிகள் - இவங்க எல்லாரும் பாதிக்கப்படறதோட தகுந்த சிகிச்சை கிடைக்காம பெருமளவில செத்தும் போயிடறாங்க.

குடி - பட்டினி - வியாதி

குடிப்பழக்கம், சத்துணவுக் குறைபாடு, வியாதி - இதுவெல்லாந்தான் வயநாட்டோட பிரச்சனை. குறிப்பா ஆதிவாசிங்க இதுனால பீடிக்கப் பட்டிருக்காங்க. அவங்களில ரொம்பப் பேருக்கு காசநோய் இருக்குது. 2001ஆவது வருசம் மகாசபை கிளர்ச்சி செஞ்சு மாநிலத்தோட தலைமைச் செயலகத்துக்கு முன்னாடி அகதிகள் முகாமை அமைச்சதுக்கு முக்கியமான காரணமே அதுக்கு முந்தின வருசம் நிலமில்லாத 30க்கும் அதிகமான ஆதிவாசிக பட்டினியால செத்துப் போனதுதான்! ஆனா வழக்கம் போல அரசாங்கம் அவங்கெல்லாம் பட்டினியால சாகல, சத்துணவுக் கொறையாலதான் செத்தாங்கன்னு சொல்லிடுச்சு.

வயநாட்டுல இருக்கற ஆதிவாசிய நடுவில பட்டினி கெடக்கறதுங்கறது ரொம்ப சகஜமான ஒன்ணு. அதுக்காக மாவட்டத்தோட மத்த இடமெல்லாம் ரொம்ப செழிப்புன்னு நெனச்சிக்க வேண்டாம். குறைஞ்ச வருமானம், பல பேருக்கு அந்த வருமானங்கூட இல்லங்கற நெலம. இதுதான் அவங்கள வியாதில கொண்டுபோய்த் தள்ளுது. காசில்லாததால சரியான வைத்தியத்துக்கும் அவங்களால போக முடியல. அரசாங்கத்தோட பொது சுகாதார வசதிக போதுமானதா இல்ல. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போயி வைத்தியம் பாத்துக்கற அளவுக்கு பழங்குடிககிட்ட பொருளாதார வசதியும் கிடையாது. தொடர்ந்து சத்தான ஆகாரம் சாப்பிடாததால அவங்க உடம்பு பலவீனமாகி வேலை செய்யத் தகுதியில்லாததா ஆயிடுது. அவங்க உசுர வச்சுகிட்டிருக்கறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுது.

விவசாயத்துல ஏற்பட்டிருக்கற நெருக்கடியால பல வருசங்களுக்கு முன்னாடி கிடைச்சுகிட்டிருந்த வேலைல பாதி அளவு வேலைதான் கிடைக்குது. ஆதிவாசிக அழிஞ்சுட்டு வராங்க அப்படிங்கறதுக்கு நல்ல எடுத்துக் காட்டா காசர்கோடு மாவட்டத்துல இருக்கற ''கொரகா’-ங்கற சமூகத்தை காட்டலாம். இந்த சின்ன ஆதிவாசிக பிரிவு பட்டினிச் சாவாலயும், குடி பழக்கத்தாலயும், வியாதிகளாலயும் அழிவோட விளிம்புல இருக்குது. சரியான மீட்பு நடவடிக்கை எடுக்காட்டி இன்னமும் 20 அல்லது 25 வருஷத்தில இந்த ஆதிவாசி சமூகம் சுத்தமா அழிஞ்சி போயிருமுன்னு சமூக ஆய்வாளர்க சொல்றாங்க. பாலக்காட்டுலயும் வயநாட்டுலயும் இருக்கற ஆதிவாசிக் குழுக்களோட நிலமைக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்ணும் கிடையாது.

ஆதிவாசிக பலசாலிங்க. அவங்களில பல பேர் பெரிய போர் வீரர்களாகவும், அடர்ந்து கிடக்கிற காட்டோட நுட்பத்தை அறிஞ்ச சிறந்த வேட்டைக்காரங்களாகவும் இருந்திருக்காங்க. இன்னைக்கும் ஒரு சில குழுக்கள் விவசாயம் பண்றதில திறமை படைச்சவங்களா இருக்கறாங்க. ஒட்டு மொத்தத்துல அவங்க எல்லாருமே கடுமையான இயற்கைச் சீற்றங்கள எதிர்த்து நின்னு மீண்டு வரக்கூடிய சக்தி படைச்சவங்க!. காலனி ஆதிக்கவாதிகளாலயும் நிலப்பிரபுக்களாலயும் வஞ்சிக்கப் பட்டு, தங்களுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து வெளியேத்தப்பட்டதோடு அடிமைகளாகவும் நடத்தப் பட்டுவர்றாங்க. ஆனாலும் அவங்க எல்லா நிலமையையும் சகிச்சுகிட்டு சமாளிச்சு வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

வந்தேறிகளோட பொருளாதார சமூக அரசியல் ஆதிக்கத்தால சொந்த மண்ணுல இருந்தே விலக்கப்பட்டு அநாதைகளாகவும் உரிமை எதுவும் இல்லாதவங்களாகவும் ஆக்கப்பட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வனத்துறைச் சட்டங்கள் அவங்க பரம்பரைத் தொழிலான வேட்டை யாடறத செய்யமுடியாத படிக்கும், இயற்கை உணவத் தேடி சேகரிச்சுக் கொண்டுவர முடியாத படிக்கும் இருக்கினதால அவங்க நெலம இன்னமும் மோசமாப் போயிருச்சு. அரைப்பட்டினியும் முழுப்பட்டினியும் கிடக்கிற நெலக்கி அவங்க தள்ளப்பட்டிருக்காங்க.

கேரளாவுல இருக்கற வயநாடு உட்பட எல்லா ஆதிவாசி காலனியிலயும் ஒரே மாதிரி காட்சியத்தான் நாம பார்க்க முடியும். அதாவது அங்கெல்லாம் ஒரு ஆதிவாசிகூட நல்ல ஆரோக்கியமா, உடல்நலத்தோட இருக்கமாட்டார் தூய்மயில்லாத சுற்றுப்புறம், சத்துணவுக் குறைபாட்டால உப்பித் துருத்தின வயிறோட திரியற கொழந்தைகள், எளப்பு நோயால மூச்சிறைச்சுகிட்டும் இருமிகிட்டும் இருக்கற ஆம்பள, பொம்பளைங்க..... இவங்கதான் நம்ம கண்ணுக்கு அங்க தென்படுவாங்க!. 100 கிலோ கனமுள்ள கோணிப்பைய சர்வ சாதாரணமா தூக்கித் தோள்ள வச்சுகிட்டு மலையேறும் வலுவோடிருந்த ஆதிவாசி ஆண்மகனோட உடலழகு இன்னைக்கு பழங்கதையாப் போயிருச்சு.

நிலத்திற்குச் சொந்தக்காரனா வாழ்ந்த ஆதிவாசியோட உடல் ஆரோக்கியத்துக்கும், நிலமற்ற கூலியாத் திரியும் ஆதிவாசியோட உடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கற வித்தியாசம் வெட்ட வெளிச்சமாத் தெரியுது. உண்மையில இவங்களுக்கு உடனடியா தேவைப்படறது நல்ல மருந்துக இல்லை. நல்ல வாழ்க்கைச் சூழ்நிலைதான் எப்பவாவது போடற இலவச ரேஷன் அரிசி இந்தச் சிக்கலுக்குத் தீர்வா இருக்க முடியாது. பொருளாதார ரீதியா சுயச்சார்புள்ள வலுவான மனுசங்களா அவங்கள மாத்த முயற்சி எடுப்பதுதான் சரியான வழியாகும். எந்த அரசாங்கமும் இதைப்பத்தி அக்கறை காட்டாத நிலையில இது ரொம்ப கஷ்டமான வேலையாகும்.

இந்தப் பின்னணியிலதான் நாம அவங்களோட நிலத்துக்கான போராட்டத்த வச்சுப் பரிசீலிக்கனும். பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்க மிகப்பெரிய தேயிலைத் தோட்டக்காரங்களால சட்டத்துக்குப் புறம்பா வளச்சுப் போடப்பட்டிருக்கு. பல பத்தாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்க சின்ன, நடுத்தர, பெரிய வந்தேறி விவசாயிகளால பறிக்கப்பட்டிருக்கு. இந்த நிலங்களில இருந்த வெறும் 10% நிலம் கிடைச்சாலே நிலமில்லாத ஆதிவாசிகள பழையபடிக்கு பொருளாதாரத் துல தன்னிறைவு பெற்ற குடிகளாக ஆக்கிற முடியும். விவசாய நெருக்கடிக்குள்ள சிக்கியிருக்கற வந்தேறி விவசாயிக இந்த அடிப்படையான விசயத்துல அவங்களுக்கு இருக்கற தார்மீக கடமைய தட்டிக் கழிக்கிறது சரியானதில்ல. நிலமற்ற இந்த ஆதிவாசிகதான் பணப்பயிர் செய்யற விவசாயிக பயன்படுத்தற எல்லையில்லா ரசாயன உரத்தால நாசமாகிப் போறவங்க. ஏன்னா, நேரடியாகவும், தொடர்ந்தும் அந்த ரசாயன உரங்களோட பொழங்கிகிட்டு இருக்கறவங்க அவங்க மட்டுந்தான்!

உசுரோட இருக்கறதுக்கான அடிப்படைத் தேவைகூட இல்லாத நிலையில இருக்கறவங்களத்தான் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால வர்ற பக்க வெளைவுகளும் மோசமா பாதிக்கும். அந்த வகையில பார்த்தாக்கா மொதல் மொதல்ல மோசமா பாதிக்கப்படறவங்க ஆதிவாசிங்கதான். ரெண்டாவதா பாதிக்கப்படறது தேயிலைத் தொழிலாளிங்க! மூணாவதா சின்ன நடுத்தர வந்தேறி விவசாயிங்க அபூர்வமா பாதிக்கப்படறாங்க! இவங்களோட பொருளாதார நெல ரொம்ப சுமாரானது மட்டுமல்ல, இவங்க பெரும்பாலும் சொந்த நிலத்தில தங்களோட சொந்த உடல் உழைப்ப பயன்படுத்தி மட்டுமே விவசாயம் பண்றவங்களாக இருக்காங்க. இத்தகைய போக்கு வயநாட்டுல அடிப்படையில இருந்தே சமத்துவமின்மையக் கட்டமைக்குது. அப்புறம் வயநாட்டு சனங்க மட்டுமல்ல, யாரெல்லாம் வயநாட்டுல உற்பத்தியாகிற பொருள்களை சாப்பிடறாங்களோ அவங்க எல்லாருமே பாதிக்கப்படு வாங்கங்கறதும் உண்மை.

மாற்றுகள்

தொழிற்சாலைல பொருள்கள உற்பத்தி செய்யற மாதிரி விவசாய பொருள்கள் உற்பத்தி செஞ்சுகிட்டிருக்கற இப்போதய முறைய முற்றிலுமா கைவிட்டுட்டு சுற்றுப்புறச் சூழலோட பொருந்திப் போற மாதிரியான விவசாய முறையக் கொண்டுவரணுங்கற விழிப்புணர்ச்சி வளர்ந்துட்டு வருது. சில விவசாயிக இயற்கை வேளாண்மைய மரபு வழியிலான முறையில நீண்ட காலமா செஞ்சுகிட்டு வராங்க. ஆனா இதுக்கும் சில கடுமையான வரம்புகள் இருக்குது. சிறிய பண்ணை நிலங்கள வெச்சிருக்கறவங்க அவங்களுக்குப் பக்கத்துல இருக்கற நெலத்துக்காரங்க ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது, இவங்க இயற்கை வேளாண்மைய செய்ய முடியாது. இத்தகைய சூழல் நாம எந்த மாதிரியான நடவடிக்கைய எடுக்கணும் என்பத தெளிவாக் காட்டுவது. அதாவது நாடு முழுவதும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தோட பயன்பாட்ட கறாராத் தடை செய்யணும்.

அதுக்கப்புறம் நிலத்தை இயற்கை தன்மைக்குத் திரும்பக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளணும். இந்த இடைக் காலத்துல நெலத்துல ஏற்படற இழப்புக்கு ஈடாக நெலத்தப் பாழடிச்ச உரக் கம்பெனிக கிட்டயிருந்து ஈட்டுத்தொகை பெற வகை செய்யணும். உலகத்திலயே கியூபா மட்டுந்தான் தன்னோட நாடு முழுசையும் இயற்கை வேளாண்மைக்குத் திருப்பிக் கொண்டு வந்திருக்கு. இயற்கை வேளாண்மையால எந்த வகையிலயும் விளைச்சல் கொறஞ்சுடாதுன்னு கியூபா அனுபவம் நமக்குக் காட்டுது. மேலும் நெலத்துல தொடக்கத்துல போடற முட்டுவளிச் செலவு ரொம்பவும் கொறஞ்சும் இருக்குது. தொடக்க நிலையில விளைச்சல்ல சின்னச் சின்ன பின்னடைவுகள் இருக்கலாம். ஆனா நெலமும், தண்ணியும் தங்களோட இயல்பான நிலைக்குத் திரும்பின உடனே வெற்றிகரமான விளைச்சலை தந்துடுது.

சில காலமா வயநாட்டில வேற ஒரு மாதிரியான இயற்கை வேளாண்மை முயற்சியும் நடந்துச்சு. கிறித்துவ தேவலாயம் மூலமா மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி இயற்கை வேளாண்மையின் நோக்கத்தையே கேலிக் கூத்தாக மாத்திச்சு. பங்குத் தொகைய அடிப்படையா வச்சு 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள இணச்சு அமைப்பாக்கி, அவங்களோட நிலத்துல இயற்கை வேளாண்மை செய்ய முடிவு செஞ்சாங்க. அப்படி விளையுற பொருள்கள மேற்கு நாடுகளுக்கு, குறிப்பா அய்ரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யறதுக்குத் திட்டம் போட்டாங்க. பெரிய அளவு லாபத்தத் தரக்கூடியதுன்னு உத்தரவாதம் தரப்பட்டுச்சு. செயற்கை உரம் போட்டு வெளவிச்ச பொருளுக்கும் இயற்கை உரம் போட்டு வெளவிச்ச பொருளுக்கும் கிட்டத்தட்ட விலைல 20-30% வித்தியாசம் அய்ரோப்பிய மார்க்கெட்டுல கிடைக்குமுன்னு சொல்லப்பட்டுச்சு. இதன் மூலமா இந்த இயற்கை வேளாண் பொருளுகள வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செஞ்ச தரகணுக கொழுத்த லாபத்த கண்டாணுக. இந்த இயற்கை வேளாண் பொருளுக உள்ளூர் சனங்களுக்கு கண்ணுல பார்க்கக்கூட கிடைக்கல. அப்படியே ஒன்ணு, ரெண்டு நகர்புறக் கடைகளில விக்கறதுக்காக வந்தாக்கூட அத சாதாரண சனங்களால வாங்க முடியல. அவ்வளவு விலை! மேட்டுக்குடிக மட்டுந்தான் பயன்படுத்த முடிஞ்சது.

இந்தமாதிரி முடிவுக ஏற்கனவே அதிகாரத்த வச்சுகிட்டிருக்கற ஆளுங்கள மேலும் அதிகாரம் படைச்சவங்களா மாத்தவே உதவி செய்யும். உண்மையில என்ன நடந்துச்சுன்னா, மேற்கு உலகம் விவசாயத்துக்கான ரசாயன உரங்கள உற்பத்தி செஞ்சு, வளர்ந்து வர்ற ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சு கொழுத்த லாபத்த அடைஞ்சுகிட்டிருந்துச்சு. மொதல்ல அவங்க நாட்டுல உரத்த உற்பத்தி செஞ்சு ஏற்றுமதி செஞ்சாங்க. பின்னாடி போகப் போக வளர்ற நாடுகளில குறைஞ்ச கூலிக்குக் கிடைக்கிற தொழிலாளர்கள வச்சு உரத்த உற்பத்தி செஞ்சு அதே வெலைக்கு வித்து மேலும் பெருத்த லாபத்த அடைஞ்சாங்க. மேற்கு நாட்டு சனங்ககிட்ட செயற்கை ரசாயன உரம் ஏற்படுத்தற நாசவிளைவுக குறிச்சு ஏற்பட்ட விழிப்புணர்வால அங்க இயற்கை வேளாண் பொருளுக்கு சந்தை ஏற்பட்டுது. அதனால அங்க இயற்கை வேளாண் பொருள் உற்பத்தியும், விற்பனையும் நல்ல லாபந்தரக்கூடிய தொழிலா மாறிடுச்சு.

அதையே ஏழை நாடுகளில உற்பத்தி செஞ்சா இன்னமும் கொழுத்த லாபம் அடையலாம்னு தெளிவா உணர்ந்துகிட்ட, எந்தவகையான லாபத்தையும் மறந்தும்கூட விட்டுவிடாத கிறிஸ்துவ நிறுவனங்கள் வயநாட்டுல ''இயற்கை வேளாண்மைக்குத் திரும்புதல்’ அப்படிங்ற பேர்ல தொழில் செஞ்சிச்சு. இத்திட்டம் வயநாட்டுல இருக்கற சில மேட்டுக்குடி விவசாயிகள செயற்கை உரத்தோட பிடியில இருந்து விடுவிச்சதோட அவங்களுக்கு இயற்கை வேளாண் பொருள் உற்பத்தி மூலமா கணிசமான லாபமுங் கெடைக்க வழி செஞ்சுது. இது ரெண்டு பேருக்கும் (அதாவது மேற்கு முதலாளிக, மேட்டுக்குடி விவசாயிக) வெற்றியத் தந்துச்சு.

இப்படி விவசாயிகள அமைப்பாக்கி இயற்கை வேளாண்மைய செய்ய வெச்சதுனால பொதுசனங்களுக்கு எந்த பலனும் கிடைக்கல. இந்த திட்டத்துல இது இயற்கை வேளாண்மை செய்யற நெலந்தான்னு சான்று தரப்பட்ட நெலத்துல வெளயறத மட்டுந்தான் ஏத்துக்கிட்டாங்க. இந்த சான்று அய்ரோப்பிய எசமானுககிட்ட இருந்து நேரடியா வந்துச்சு. அதுபோல அவங்களோட உள்ளூர் ஏஜெண்டுகளா இருக்கற சர்ச்சும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த சான்ற தந்தாங்க. இவங்ககிட்ட இப்படி சான்று வாங்கறது ஒன்ணும் அவ்வளவு எளிசான காரியமாவும் இருக்கல. சாதாரண விவசாயி நவீன வளர்ச்சிங்கற பேர்ல அவங்க போட்ட திட்டத்துக்குப் பலிகடா ஆனான். அதே இடத்துல இருந்த ஏழை மனுசங்க இயற்கைக்கு திரும்பறதுங்கற பேர்ல வெளிநாட்டு எசமானனுக தின்னு கொழுக்க தன்னோட வியர்வைய சிந்தினாங்க!.

கியூபா அனுபவம் இதற்கு நேர்மாறானதா இருந்துச்சு. அவங்களோட விவசாயிக இயற்கை வேளாண் பொருள்களை அவங்க சனங்களோட பயன்பாட்டுக்காக உற்பத்தி செஞ்சாங்க. மிஞ்சின உபரியத்தான் ஏற்றுமதி செஞ்சாங்க. முதலாளிய-ஏகாதிபத்திய சக்திய இயற்கை வேளாண்மைத் திட்டம் தங்களுக்கு நெறைய லாபந்தருன்னு கண்டுகிட்ட வுடன் எந்தவிதமான உறுத்தலுமில்லாம அதை ஆதரிக்க ஆரம்பிச்சாங்க. இதே ஆளுங்கதான் ரசாயனக் கலவை உரங்கள மிகச்சிறந்தவைன்னு சொல்லி இதுவரையிலும், இன்னமுங்கூட வித்துகிட்டிருக்கானுக. நம் சொந்த அனுபவத்துல இந்த மாதிரி முரண்பாட்டு மூட்டையா பேத்திகிட்டு இருக்கறதுக்கு நல்ல உதாரணமா தன்னை அறிவியல் அறிஞன்னு சொல்லிக்கற M.S.சாமிநாதனச் சொல்லலாம்.

இந்தாளத் தான் நம்மாளுக ரசாயன உரத்த மூலதனமா வச்சு ஏற்படுத்தின பசுமைப் புரட்சியோட நாயகனாச் சொல்றாங்க. இப்போ இவரு மரபணு மாற்றம் செஞ்சிருக்கற விதை பத்தின தொழில்நுட்பத்துக்கு வக்காலத்து வாங்கி பேசிக்கிட்டிக் காரு. இதுல அந்தாளோட அயோக்கியத்தனமான நிலைப்பாடு எதுன்னாக்கா, ஒரேநாள்ல மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைய பயிரிடுறதையும், இயற்கை வேளாண்மைக்குத் திரும்பறதையும் தொடங்கி வைக்கறார். ஒன்ணுக்கொன்ணு எதிரான இரண்டு விவசாயப் போக்குகளப் பத்தித்தான் தான் உளறிகிட்டிருக்கோம்னுகூட கவலைப்படாம பேசறார்.

உண்மையாகவே நமக்குத் தேவûயானது மக்கள் சார்பு இயற்கை வேளாண் திட்டம்தான். இருக்கற நிலவுரிமை சட்டத்துக்குள்ளேயே நாம செய்ய வேண்டியது நெறைய இருக்குது. நிலப்பங்கீடு சனங்களோட உற்பத்தித் திறன அதிகரிக்கும். அத்தோட நம்ம சுற்றி நடக்கற மரபார்ந்த விவசாய அனுபவங்களையும், முறைகளையும் கத்துக்கறது நல்ல பலனத் தரும். சொந்த மற்றும் கூட்டு அனுபவத்தி லிருந்து உருவாகற விவசாய உற்பத்தி முறை தனக்கு முன்னால நடந்திருக்கற தவறுகளிலிருந்து பாடங் கத்துகிட்டு மாபெரும் மரபுக்குச் சொந்தம் உடையதா மாறி தகுந்த அளவு தன்னை புதுப்பிச்சுக்கும். அத்தோடு அது அரசியல் தன்மை உடையதா இருக்க வேண்டியதும் அவசியமாயிருது. அந்த அரசியல் ஏகாதிபத்திய எசமானர்களுக்கு சேவகம் செய்யும் வகையிலான சுரண்டல், கொள்ளையிடல் போன்ற தன்மைகளில் இருந்து தன்னை முழுசும் விடுவிச்சுக் கொள்ளும் வகையிலும் இருக்கணும். சர்வதேச அனுபவங்கள் இப்படிப்பட்டதொரு உறுதியான நிலை தோன்றுவது சாத்தியம்தான்னு தெளிவாகச் சுட்டிக்காட்டுது.

ஒருதலைப் பட்சமாக உற்பத்திச் சக்திகளோட வளர்ச்சிக்கு மட்டுமே அழுத்தந்தர்ற எந்திரத்தனமான பொருள்முதல்வாத நிலையினை கைவிடற அதே நேரத்தில, அதன் மறுபக்கமாக இருக்கற, ஏகாதிபத்தியத்தோட கோரப்பிடிய வலுவாக்கற, உற்பத்தி முறையையும் கைவிட வேண்டியிருக்குது. அதன் பிறகு சுயச்சார்பும் தன்னிறைவும் உடைய பாதைய மக்களே உருவாக்கிக்குவாங்க.

வயநாட்டு உற்பத்தி முறையில தற்சார்பு இல்லாம இருக்கறது தெளிவாத் தெரியுது. இந்த சுயச்சார்பற்ற நெலமைக்குக் காரணம் ஈவு இரக்கமில்லாத கடங்காரங்க பிடியில விவசாயிங்க சிக்கியிருக்கறதுதான் இதுனால அவங்க கைகளும் கால்களும் சங்கிலியால கட்டிப் போடப்பட்ட நிலையில இருக்காங்க. நவீன விவசயாம்னு சொல்லப்பட் டதுக்கு தேவையான இடுபொருளோட செலவு ஏறிகிட்டே இருந்ததுதான் அவங்கள கடனோட பிடியில கொண்டு போயி ஆழமாச் சிக்கவைச்சுது. இதே நவீன விவசாய இடுபொருளுகதான் அவங்களோட விவசாய நிலத்த பாழாக்கிச்சு. மனநிலையையும் உடம்பையும் மோசமாக்கிச்சு. அந்த சனங்ககிட்ட இருக்கற வியாதிகளே அவங்க சிக்கிகிட்டிருக்கற நெருக்கடியோட தன்மைய வெளிச்சம் போட்டுக் காட்ட போதும்.

(டி.ஜி.ஜேக்கப்பின் "வயநாடு : மரகதக் கிண்ணத்தில் வழியும் துயரம்’ எனும் நூலிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது. ( Wayanad- Misery in An Emerald Bowl- T.G.Jacob, நன்றி : Frontier 2006)

Pin It