காலை 8.16. ஹிரோஷிமா நகரின் மத்தியப் பகுதிக்கு 1900 அடி உயரத்தில் பன்னிரண்டரை கிலோ டன் சக்தியுள்ள அணுவெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அந்த நகரம் முழுதும் நொடியில் பாழானது. அந்தக் கணத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் எரிந்தும், சிதறுண்டும், நசுங்கியும் இறந்தனர். இன்னும் பற்பல ஆயிரம் மக்கள் ஒவ்வொரு வகையிலுமாகக் காயப்பட்டோ, கதிரியக்க நோயால் சாக விதிக்கப்பட்டோ இருந்தனர். நகரின் மையப்பகுதி தரைமட்டமாயிற்று. நகரின் ஒவ்வொரு பகுதியும் சேதப்பட்டது. குண்டு விழுந்த இடத்திலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருந்த மூங்கில் மரங்களின் அடித் தண்டுகள்கூடக் கருகிப்போயின. ஒன்றே முக்கால் மைல் தூரத்துக்குள் இருந்த மரங்களில் பாதி, சாய்ந்துவிட்டன. பதினேழு மைல் தொலைவிலிருந்த சன்னல்கள் உடைந்தன. வெடித்த அரைமணி நேரத்துக்குப் பிறகு, அனல் துடிப்பாலும் கட்டிடங்கள் இடிந்து விழுவதாலும் உருவான தீ ஒரு நெருப்புப் புயலாகத் திரண்டெழுந்து ஆறுமணி நேரம் வீசியது.

குண்டால் ஏற்பட்ட ஒரு கறுப்பு மழை காலை 9 மணிமுதல் மாலை வரை நகரின் மேற்குப்பகுதிகளில் விழுந்துகொண்டிருந்தது. வெடிப்பிஹலிருந்து கதிரியக்கத்தை இந்த மழை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருந்தது. வெடிப்பினால் உண்டான வினோத வானிலையினால் ஏற்பட்ட வன்மையான சூறைக்காற்று நடுப்பகல் முதல் நான்கு மணிநேரம் நகரை மேலும் தாக்கியது. உடனடியாகச் செத்தவர்களும் காயங்களால் அடுத்த மூன்று மாதங்களில் இறந்து போனவர்களும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர். நகரிலிருந்தவற்றில் அறுபத்தெட்டு சதவீதக் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்தோ, செப்பனிட இயலாத அளவு சேதமடைந்தோ போயின. நகரின் மையப்பகுதி கற்கள் பரவிய தட்டைப்பரப்பாகி விட்டது. வலுவான கட்டிடங்களின் இடிபாடுகள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.

குண்டு வெடித்த சில நிமிடங்களில், கனத்த புழுதி மேகங்களும் புகையும் வானில் நிரம்பி, பகல் இருண்டது. முழு நகரமுமே ஒரு நொடியில் விழுந்து அதன் இடிபாடுகளுக்கு உள்ளேயும் அடியிலும் அதன் மக்கள் சிக்கிக்கொண்டனர். இன்னமும் உயிரோடிருந்தவர்களில் மிகப் பெரும்பாலோர் காயம் பட்டிருந்தனர், எரிந்தோ, நசுங்கியோ, இரண்டு வகையிலுமோ. மையப் பகுதியிலிருந்து ஒன்றேமுக்கால் மைல் தொலைவுக்குள் இருந்தவர்கள் தீவிர அணுக் கதிரியக்கத்திற்கு ஆளாகி யிருந்தனர், பலர் மரண அபாய அளவில் உணர்விழந்த நிலையிலிருந்து அல்லது அதிர்ச்சியிலிருந்து மீண்டு தம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று பார்க்கும் அளவுக்கு உணர்வு பெற்றபோது ஒரு அமைதியான, இதமான ஆகஸ்ட் மாதக் காலை நேரத்தில் தன் அன்றாட வேலைகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு நகரம் இருந்த இடத்தில் இப்போது இடிபாடுகளின் குவியலும், பிணங்களும், காயமடைந்த திக்பிரமையடைந்த மனிதக்கூட்டமும் இருக்கக் கண்டனர். ஆனால் முதலில் அவர்கள் விழிப்படைந்து திரளும் இருட்டில் தங்கள் சூழலைக் கண்டறிய முனைந்தபோது பலர் தாம் தொடர்பற்றுத் தனித்து இருப்பதாக உணர்ந்தனர். அந்த ஆகஸ்ட் காலையில் நடந்ததைச் சிறுமியாகவிருந்த ஹருகோ ஒகசவாரா சொல்கிறார்:

எடுத்த எடுப்பில் நான் உணர்விழக்குமாறு தாக்குண்டேன், எத்தனை கணங்கள், எத்தனை நிமிடங்கள் கழிந்தன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உணர்வு திரும்பியபோது மரத்துண்டுகள் பரவியிருந்த தரையில் நான் கிடப்பதைக் கண்டேன். சுற்றிலும் பார்ப் பதற்காக மூர்க்கமான முயற்சியுடன் நான் எழுந்து நின்றபோது ஒரே இருட்டாக இருந்தது. கொடுமையாக பயந்து போனேன். செத்துப் போன உலகத்தில் நான் மட்டும் தனித்திருப்பதாக நினைத்தேன். ஏதாவது வெளிச்சம் தெரியாதா என்று துழாவினேன். நான் எவ்வளவு பயத்தில் இருந் தேன் என்பதை யாராலும் புரிந்து கொள்ளமுடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. என் அறிவைத் திரட்டிக்கொண்டபோது, என் ஆடை கந்தல் கூளமாக ஆகியிருப்பதைப் பார்த்தேன். என் மரச் செருப்புகளையும் காணோம்.

மிக விரைவிலே, காயமடைந்தவர்களின் வலிக்கூச்சல்களும் உதவிகோரும் கெஞ்சல்களும் சுற்றுப் புறத்தை நிரப்பின. உயிருடன் தப்பியவர்கள், தங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இருளிலிருந்து கூவியழைப்பதைக் கேட்டனர். திடீரென்று, என் தாய்க்கும் தங்கைக்கும் என்ன நேர்ந்தது என்று ஆச்சரியப்பட்டேன். என் தாய்க்கு நாற்பத்தைந்து வயது. என் தங்கைக்கு ஐந்து வயது. இருள் மறையத் தொடங்கியபோது என்னைச் சுற்றிலும் ஒன்று மில்லாதிருக்கக் கண்டேன். என் வீடு, அண்டை வீடு, அதற்கடுத்த வீடு எல்லாமே மாயமாக மறைந்துவிட்டிருந்தன. என் வீட்டின் சிதைவுகளிடையே நான் நின்றுகொண் டிருந்தேன். சுற்றி யாரும் இல்லை. அது அமைதியான, மிக அமைதியான பயங்கர நிமிடம். என் தாய் ஒரு நீர்த்தொட்டியில் இருக்கக் கண்டேன். அவள் மயங்கிக் கிடந்தாள். அம்மா அம்மா என்று கூவிக்கொண்டே அவளைக் குலக்கி உணர்வுக்குக் கொண்டுவர முயன்றேன். உணர்வு பெற்றதும் எனதாய் எய்க்கோ! எய்க்கோ! என்று என் தங்கைக்காகக் கூவத்தொடங்கினாள்.

எவ்வளவு நேரம் கழிந்தது என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது தேடுபவர்களின் கூக்குரல்கள் கேட்டன. குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பெயர்களைச் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களைக் கூவியழைத்துக் கொண்டி ருந்தனர். நாங்கள் நம்பிக்கையற்றவர்களாய் என் தங்கைக்காகக் கூவிக்கொண்டு, அவள் குரல் எங்காவது கேட்கிறதா, அவள் எங்காவது தென்படுகிறாளா என்று தேடிக்கொண்டிருந்தோம். திடீரென்று என் தாய் 'ஓ எய்க்கோ’ என்று கத்தினாள்.

பத்துப் பதினைந்து அடி தூரத்தில் என் தங்கையின் தலை வெளியே நீட்டிக்கொண்டு என் தாயை அழைத்துக்கொண்டிருந்தது. என் தாயும் நானும் இடிந்த சுவர்களின் பாளங்களையும் தூண்களையும் கடும் முயற்சியுடன் அகற்றி மிகுந்த உழைப்புடன் அவளை வெளியே இழுத்தோம். புண்களால் அவள் உடம்பு முழுவதும் சிவந்து போயிருந்தது. அவள் புஜத்தில் பெரிய காயம். இரண்டு விரல் அகலத்துக்கு. ஒகசவாரா அளவுக்கு மற்றவர்கள் அதிருஷ்டசாலிகளாக இல்லை. ஒரு தாய் தன் குழந்தையைத் தேடித் தேடிப் பாதிப் பைத்தியமான நிலையில் குழந்தையின் பெயரைக் கூவிக் கொண்டிருந்தாள். கடைசியில் குழந்தை கிடைத்தான். அவன் தலை, வேகவைத்த அக்டோபஸ்போலக் காணப் பட்டது. அவன் கண்கள் பாதி மூடியிருந்தன. அவன் வாய் வெளுத்து, உப்பி, வீங்கியிருந்தது.

நகரெங்கிலும், பெற்றோர்கள் தங்களின் காயம்பட்ட அல்லது உயிரிழந்த குழந்தைகளைக் கண்டெடுத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் தங்களுடைய காயம்பட்ட அல்லது இறந்த பெற்றோர்களைக் கண்டுபிடித்துக் கொண் டிருந்தனர். கருவுற்றிருந்த ஒரு பெண் இறந்து போயிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மூன்று வயதுள்ள அவள் மகள் ஒரு காலிக்கோப்பையில் தண்ணீர் எடுத்து வந்து தன் தாய்க்கு ஊட்ட முயன்று கொண்டிருந்தாள்.

கிஷ்ஷோநிஷிடா நினைவு கூர்கிறார்: கடுமையாகக் காய மடைந்த என் மனைவியை நகஹிரேமாச்சிக் குன்றருகிலிருந்த ஆற்றங்கரைக்கு நான் எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது முற்றிலும் ஆடையற்ற ஒருவன் தன் கண் விழியை உள்ளங்கையில் ஏந்தியவனாக மழையில் நின்றுகொண்டிருந் ததைக் கண்டு நான் உள்ளபடியே பயத்தால் அதிர்ச்சியடைந்தேன். எழுத்தாளர் யோகா ஓட்டா சொல்கிறார்: ஒரு நொடியில் எங்கள் சுற்றுப்புறங்கள் அவ்வளவு மாபெரும் அளவில் ஏன் மாறிவிட்டன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. யுத்தம் சம்பந்தப்படாத வேறு எதனாலோ இப்படி நேர்கிறதென்று நினைத்தேன். குழந்தைப் பருவத்தில் நான் படித்திருந்ததுபோல உலகம் அழியப் போகிறதா?....

ஒரு வரலாற்றுப் பேராசிரியர் குண்டு வெடித்த பிறகு நகர்ப்பக்கம் பார்த்துவிட்டுச் சொன்னார்: ''இரோஷிமா காணாமற்போய்விட்டது.” காயம்பட்ட தம் குடும்பத் தாரையும் நண்பர்களையும் கண்டுபிடித்த பல மக்கள் அழிபாடு களிலிருந்து அங்கங்கே தீ தோன்றிப் பரவவே, தீக்கொழுந்து களில் அவர்கள் மடியுமாறு கைவிட்டுவிடவோ, அந்த நெருப்புப் புயலில் தங்கள் உயிர்களையும் இழக்கவோ வேண்டியதாயிருந்தது. குழந்தைகளை, கணவர்களை, மனைவிகளை, நண்பர்களை எரியவிட்டுவந்தவர்களுக்கு அந்த அனுபவம் அவர்கள் உட்பட்ட கொடிய சோதனைகளிலேயே மிகக் கொடியதாக இருந்தது.

ஒரு போராசிரியர் தம் மனைவியைக் கைவிட்ட காட்சியைப் பார்த்த மற்றொருவர் விவரிக்கிறார்: மியூகி பாலத்தை நான் கடந்தபோது பாலத்தின் அடியில் பேராசிரியர் தாகனேகா நின்றுகொண்டிருந்தார். உள் கால்சட்டை மட்டுமே அணிந் திருந்த அவருடைய வலது கையில் ஒரு அரிசி உருண்டை வைத்திருந்தார். தூரத்திலே தெருவில் வடதிசைப் பகுதியில் எரியும் செந்தீ வானத்தைப் பின்புலமாகக் கொண்டு தெரிந்தது. போராசிரியர் தாகனேகா அன்று ஹிரோஷிமா பல்கலைக் கழகத்துக்குச் செல்லவில்லை. அணுகுண்டு வெடித்தபோது அவர் தம் வீட்டிலிருந்தார். விழுந்திருந்த கூரை உத்திரத்தின் கீழ் சிக்கியிருந்த தம் மனைவியை மீட்க அவர் முயன்றார். அவருடைய முயற்சியெல்லாம் வீணாயிற்று. பரவிய தீ அவரையும் அச்சுறுத்தியது. ஓடிப் போயிடுங்க, ஓடிப் போயிடுங்க- என்று அவருடைய மனைவி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

அவர் தம் மனைவியைக் கைவிட்டு விட்டுத் தீயிலிருந்து தப்ப வேண்டியதாயிற்று. அவர் இப்போது மியூகி பாலத்தடியில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் கையில் அரிசி உருண்டை எப்படி வந்தது என்று தெரியவில்லை. தீப்பிழம்புகளின் முன்னே நின்று கொண்டிருந்த, கையில் அரிசி உருண்டை ஏந்திய அவரது உடையற்ற உருவம், மானிட இனத்தினரின் எளிய நம்பிக்கைகளின் சின்னமாகத் தோன்றியது.

சரிந்திருந்த வீடுகளின் பகுதிகள் தெருக்களில் சிதறிக் கிடந்தன. விழுந்திருந்த தந்திக் கம்பங்களும் கம்பிகளும்.... தயவு செய்து உதவுங்கள் என்று முறையான மரியாதையான கூக்குரல் ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது வீட்டிலும் புதையுண்டு கைவிடப்பட்ட மக்களிடமிருந்து கேட்டது. ஆனால், பரவி வந்த தீ அவர்களுக்கு உதவமுடியாமல் செய்துவிட்டது. மனிதர்களை ஒருவரை மற்றவரோடு பிணைக்கும் அன்பு, மதிப்பு என்கிற அனைத்துக் கட்டுகளும் ஹிரோஷிமா நெடுகிலும் இவ்வாறாக அறுந்துகொண்டிருந்தன. பரவிவந்த நெருப்புப் புயலால் விரைவிலேயே காயமடைந் தவர்களின் மந்தைகள்- வரலாற்றிலேயே எப்போதுமே காணப்படாத வகையிலான அணிவகுப்புகள்- நகரின் மையப்பகுதியிலிருந்து அதன் புறப்பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கின. மிகப் பெரும்பாலோர் தீப்புண் பட்டிருந்தனர். அதனால் பலரின் தோல் கறுத்துப்போயிருந்தது; அல்லது உரிந்துவிட்டிருந்தது.

அவர்கள் கைகளை முன்புறம் வளைத்துத் தொங்க விட்டிருந்தனர். அவர்களின் கைகளில் மட்டுமல்லாது உடல்களின்மீதான தோலும் தளர்ந்து தொங்கியது. ஒருவரோ இருவரோ மட்டும் அப்படி என்றால் மறந்துவிடலாம். எங்கு நோக்கினாலும் இத்தகைய மக்களே காணப்பட்டனர். அவர்களில் பலர் சாலையிலேயே மரணமடைந்தனர். இன்னும்கூட அவர்களை மனத்தில் காணமுடிகிறது- நடக்கும் ஆவிகளாக. அவர்கள் இந்த உலகத்து மக்களைப்போல் காணப்படவில்லை.

நீங்கள் அவர்களின் முன்புறத்தைப் பார்க்கிறீர்களா, பின்புறத்தைப் பார்க்கிறீர்களா என்று சொல்லமுடியாத அளவில் மக்களின் காயங்கள் இருந்தன. மக்கள் ஒருவரையொருவர் அடையாளம் காண முடியவில்லை. முகம் எரிந்துபோன ஒரு பதின்மூன்று வயதுப் பெண், அவளது முகம் அவ்வளவு விகாரமடைந்து மாறிப் போயிருந்ததால் அவள் யாரென்றே பிறரால் அறிய முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு பிறருடைய பெயர்களைச் சொல்லியழைக்க அவளால் முடிந்தபோதிலும் அவர்களால் அவளை அடையாளம் காண முடியவில்லை. காயமடைந்ததோடு மட்டுமல்லாமல் பலர் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர். கதிரியக்க நோயின் ஆரம்ப அறிகுறி அது. இறந்துகொண்டிருந்த மக்கள், மனத்தை அறுக்கும் பல காட்சிகளைக் கண்டனர்.

1. எரிந்த தொழில் உடுப்புகள் 2. உடைந்த சன்னல் கண்ணாடித் துண்டுகளால் காயம்பட்ட பாதங்கள், காயம்பட்ட தோள், தலையுடன் மக்கள் உதவிகோரி ஓடிக்கொண் டிருந்தனர். எங்கிலும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. 3. ஒரு பெண் 'ஐயோ, ஐயோ’ என்று அரற்றிக்கொண்டி ருந்தாள். 4. ஒரு பைன் மரம் எரிந்து கொண்டிருந்தது. 5. ஆடையற்ற ஒரு பெண் 6. ஆடையற்ற சிறுமிகள் 'மட அமெரிக்கா’ என்று சபித்துக் கொண் டிருந்தனர். 7. இயந்திரத் துப்பாக்கியால் சுடப்படலாம் என்று அஞ்சிய ஒருத்தி நீர்க்குட்டையில் குனிந்து பதிங்கி யிருந்தாள். அவள் மார்புகள் கிழிந்திருந்தன. 8. மின்கம்பங்கள் எரிக்கப்பட்டிருந்தன. 9. எரிந்து சாய்ந்திருந்த தொலைபேசிக் கம்பம். 10. இறந்துபோயிருந்த ஒரு குதிரை. 11. இறந்த பூனைகள், பன்றிகள், மக்கள்.

பூமியிலேயே ஒரு நரகம் அது.

உடல் குலைவு, தன்னோடு உணர்வுக் குலைவையும் ஆன்மக் குலைவையும் கொணர்ந்தது. பிழைத்தவர்கள் மொத்தத்தில் கவனமிழந்தும் உணர்வு மழுங்கியும் இருந்தனர். நெருப்புப் புயலிலிருந்து சிலர் தப்பியதற்கும் சிலர் தப்ப இயலாமைக்கும் பிறகு நகரின் மீதும் அதன் எஞ்சிய மக்கள் மீதும் ஒரு மௌன நிசப்தம் இறங்கியது. பேசாமலும், வேறு ஒலி எழுப்பாமலும் மக்கள் துன்புற்றனர். இறந்தனர். காயம்பட்டவர்களின் அணிவகுப்புகூட நிசப்தமாகவேயிருந்தது. நடக்க முடிந்த வர்கள் ஊக்கம் உடைந்தவர்களாக, முன்னடைவை இழந்தவர்களாக மௌனமாகத் தொலைவான மலைகள் சூழ்ந்த புறப்பகுதி நோக்கி நடந்தனர்.

எங்கிருந்து வருகிறீர்கள் என்று அவர்களைக் கேட்டபோது நகரைச் சுட்டிக்காட்டி 'அங்கிருந்து’ என்று சொன்னார்கள். எங்கே போகிறீர்கள் என்று கேட்டபோது நகருக்கு எதிர்த் திசையைச் சுட்டிக்காட்டி 'இங்கே’ என்றனர். தானியங்கி இயந்திரங்கள்போல அவர்கள் நகர்ந்தனர். செயல்பட்டனர். அவர்கள் அவ்வளவு நொறுங்கிப்போயிருந்தார்கள். அவர்களின் எதிர்வினைகள் வெளியாருக்கு வியப்பூட்டின. அருகிலேயே அதே திசை நோக்கி நல்ல சாலை இருந்தும் அதைவிட்டுக் குறுகிய கரடு முரடான பாதையை மந்தமாகப் பின்பற்றிய நீண்ட மக்கள் வரிசைகளின் காட்சி கண்டவரை வியக்கச் செய்தது. கனவுலகில் நடக்கும் மக்களின் ஒட்டுமொத்த வெளியேற் றத்தைத்தாம் காண்கிறோம் என்கிற உண்மையை அவர்கள் உணரமுடியவில்லை.

இன்னமும் செயல்படும் சக்தியோடிருந்தவர்கள் மடத்தனமாக வும் பித்துக்குனித்தனமாகவும்கூட நடந்துகொண்டனர். சிலர் மும்முரமாகச் செய்த பணிகள், சில நிமிடங்களுக்கு முந்தைய முழுமையான ஹிரோஷிமாவில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம்; ஆனால் இப்போது அவை முற்றிலும் பொருத்தமற்றவையாக இருந்தன. தீயிலிருந்து தாம் மீட்ட மாதாகோவில் கணக்குப் புத்தகங்களும் பணமும் அடங்கிய பெட்டியை எரியும் நகரின் வீதிகளில் கொண்டுவந்த சில பாதிரியார்கள் அதைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்ல முயன்று கொண்டிருந்தனர். சூழ இருந்த மக்கள் உதவிகோரிக் கதறிக்கொண்டிருந்தபோது ஓர் இளம் படைவீரர் எரிந்துபோன மிலிட்டரிச் சட்டப்புத்தகத்தின் சாம்பல்களைப் பாதுகாக்க முயன்றுகொண்டிருந்தார்.

மற்ற மக்கள் தங்கள் சிந்தனையை அறவே இழந்துவிட்டிருந்தனர். சில பாதிரியார்கள் தீப்புயலிலிருந்து தப்பியோடிக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஒரு மனிதனையும் சுமந்து வந்து கொண்டிருந்தார். அவனோ தான் எங்கும் போக விரும்பவில்லையென்றும் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனை அவர் கீழே இறக்கிய போது அவன் நகரை நோக்கித் திரும்பி ஓடத் தொடங்கினான். அருகிலிருந்த சில வீரர்களைநோக்கி அவனைப் பிடிக்கச் சொன்னார் பாதிரியார். அவனோ தீயை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

குண்டு விழுந்து சில வாரங்கள் ஆனதும் பிழைத்தவர்களின் தோலில் ரத்தக் கசிவால் சிறு புண்கள் தோன்றியிருந்தன. கதிரியக்க நோயின் கடுமையான கட்டம் வந்துவிட்டதற்கு இதுதான் வழக்கமான அறிகுறி. முதல் கட்டத்தில் அடிக்கடி வாந்தி வரும். காய்ச்சல் அடிக்கும். அதீதத் தாகம் எடுக்கும். குண்டு விழுந்த அன்று ஹிரோஷிமாவில் அதிகம் கேட்ட சில சத்தங்களில் 'தண்ணீர்! தண்ணீர்!’ என்பது ஒன்றாகும். பிறகு, சில மணிகள் அல்லது நாட்கள் கழிந்தபிறகு நம்பவைத்து ஏமாற்றுகிற தணிவு அறிகுறிகள் காணப்படுகிற உள்ளுறை பருவம் ஒரு வாரம் அல்லது நான்று வாரங்களுக்கு இருக்கும்.

செல்களின் பெருக்கப் பணியைக் கதிரியக்கம் தாக்குகிறது. ஆகவே, அடிக்கடி பெருகும் செல்கள் மிகவும் தாக்குண்டு போகின்றன. இரத்த செல்களை உற்பத்தி செய்கிற எலும்புச்சோறு செல்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. நோய்த் தாக்குதலை எதிர்க்கும் வெள்ளை வடிவங்களும், ரத்த உறைவுக்குத் துணையாகிற கூறுகளும் இத் தணிவுக்காலத்தில் மிக மிகக் குறைந்துபோகின்றன. எனவே நோய்த்தாக்குதலுக்கு எதிரான உடலின் தற்காப்பு மிகவும் குறைகிறது. ரத்தக் கசிவுக்கெதிரான பாதுகாப்பும் குறைகிறது. இறுதிக் கட்டமான மூன்றாவது கட்டம் பல வாரங்களுக்கு நீடிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் தலைமயிர் உதிர்கிறது. அதிபேதி ஏற்படுகிறது. குடல், வாய் மற்றும் பிற பாகங்களில் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. முடிவில் அவர் தேறிவிடலாம் அல்லது இறந்துவிடலாம்.

ஹிரோஷிமாவில் குண்டு விழுந்ததைத் தொடர்ந்த மாதங்களிலும் ஆண்டுகளிலும் கதிரியக்க நோய் தன் கைவரிசையைக் காட்டிய பிறகு காயம்பட்டவர்களில் பலர் காயங்களால் இறந்தோ அல்லது அவற்றிலிருந்து பிழைத்தோவிட்ட பிறகு, தங்கள் மீது பட்ட கதிரியக்கம் இன்னும் பல்வேறு வகை நோய்களை- கொல்லக்கூடிய நோய்களை-ஏற்படுத்தக்கூடு மென்பதை நகர மக்கள் அறியத் தொடங்கினர். ஆண்கள் மலடாகியும் பெண்கள் தம் மாதவிலக்குக் கால முறை திரிந்தும் மக்கள் தம் இனப்பெருக்க உறுப்புகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதைச் சில மாதங்களில் அறிந்தபோது, கதிரியக்கம் தரும் பாதிப்பு கதிரியக்க நோயோடு நின்றுவிடவில்லை என்று கண்டனர்.

ஆண்டுகள் செல்லச் செல்ல, கண்படலம், ரத்தப் புற்றுநோய், மற்ற வகைப் புற்றுநோய்கள் ஆகியவை வழக்கமான அளவைவிட அதிகமாக மக்களிடையே தோன்றலாயின. அவர்கள் குண்டுவெடிப்புக்கு எவ்வளவு அருகிலிருந்தனர் என்பதற்கேற்ப அவர்களின் நோய் இருந்தது. கருப்பையிலிருந்த கருக்கள் இயற்கைக்கு மாறான தன்மைகளையும் வளர்ச்சியற்ற நிலைகளையும் அடைந்தன. ஒன்றே முக்கால் மைல் தூரத்துக்குள் இருந்த கருப்பைக் கருக்கள் இறந்தன. அல்லது பிறந்ததும் இறந்தன. சில, குழந்தைப் பருவத்தில் இறந்தன. வாழ்ந்த குழந்தைகள், இயல்பான குழந்தைகளைவிடக் குள்ளமாகவும் எடை குறைவாகவும் இருந்தன. இவற்றுள் பல, மனவளர்ச்சி குறைந்திருந்தன. முக்கியமான ஒரு குறை, குழந்தைகளின் தலை மிகச் சிறயதாயிருந்தது. இவற்றின் மனவளர்ச்சி குன்றியேயிருந்தது.

(ஜொனதன் ஷெல்-லின் 'பூமியின் தலைவிதி’ என்ற நூலிலிருந்து சில பக்கங்கள் இவை.)

Pin It