103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (2019) 8 இலட்சம் கொண்ட வருமானம் உள்ள உயர்சாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், EWS பிரிவினர் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதல் இடங்களை ஏற்கனவே பிடித்திருப்பதால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களைத் தவிர்த்துவிட்டு வழங்கப்பட்டிருக்கும் 10% EWS இட ஒதுக்கீடு நியாயமானதாகத் தெரியவில்லை.

103 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் (2019) மூலம் அனைத்து அரசு வேலைகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் 10% இடங்களை உயர்சாதியினருக்கு ஒதுக்கும் நடவடிக்கையை பாராட்டும் சிலர் EWS இட ஒதுக்கீடு உயர்கல்வியையும் அரசு வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் மிகச் சிறந்த திட்டம் என்று புகழ்கின்றனர். ஏனையோர் இதை ஒரு மோடி அரசின் அரசியல் வித்தையாக கருதுகிறார்கள். 10% EWS இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உயர்கல்வி நிறுவனங்களில் 25% இடங்களை அதிகரிக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30 இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபான்மை நிறுவனங்களைத் தவிர மற்ற எல்லா (அரசின் உதவி பெறும் அல்லது உதவி பெறாத) உயர்கல்வி நிறுவனங்களுக்கும் 10% EWS இட ஒதுக்கீடு பொருந்தும். அரசுத் துறை வேலைவாய்ப்புகளுக்கும், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத வேலைவாய்ப்புகளுக்கும் இது பொருந்தும். இச்சட்டத் திருத்தத்தின் மூலம் 15(6), 16(6) என புதிய இரு உட்பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது.agitation for reservationஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என சொல்லப்பட்டாலும், அனைத்துவகை ஏழைகளுக்கும் EWS இட ஒதுக்கீடு செல்லாது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழைகள் இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியாது. ஆண்டுக்கு 8 இலட்சம் வருமானம் உள்ள உயர்சாதியினர் EWS பிரிவுக்குள் வருவார்கள் என்பதால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு பயன் தருமா என்ற கேள்வி உள்ளது. எனவே இன்னார் தான் ஏழைகள் என அடையாளம் காணமுடியாத குழுவாக உள்ளது.

தற்போதுள்ள பட்டியலின (SC), பழங்குடியின(ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBCs) 50% இட ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவிருப்பதால், மொத்த இட ஒதுக்கீடு அளவு 60 விழுக்காட்டைத் தொடும். இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரையறுத்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது. மேலும், இச்சட்டத் திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

103 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2019

இச் சட்டத் திருத்தத்தில் இரண்டு வகையான சட்ட விதிமீறல்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீட்டிற்கான ஒரே அடிப்படையாக இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. இரண்டு, அரசுத் துறைகளில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட வகுப்புகளுக்கு வாய்ப்புத் தருவதற்காக இட ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறி வந்திருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளை 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கேள்விக்கு உள்ளாக்குகிறது இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை காரணியாக பொருளாதார அளவுகோலை அங்கீகரிக்கிறது

சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை இட ஒதுக்கீடு பறிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கூறிவந்துள்ளது. எனவே, மொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவந்துள்ளது. இருப்பினும், இந்த 50 விழுக்காடு உச்சவரம்பு 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் செல்லாததாக ஆக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கூறுகளான ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மையை அழிக்கும் விளைவை ஓர் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஏற்படுத்துமானால், அத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் அதிகாரம் கொண்டது.

பட்டியிலன, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 46 ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 46 ன் படி, சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினர், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் கல்வி, பொருளாதார நலன்களில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களை சமூக அநீதியில் இருந்தும், அனைத்து வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாக்க வேண்டும். இந்தப் பிரிவே, SC, ST, OBC இட ஒதுக்கீட்டின் அடிப்படையாக அமைந்துள்ளது. பிரிவு 46 இல் கூறப்பட்டுள்ள காரணங்கள் EWS விஷயத்தில் முதன்மையானவை அல்ல என்பதால் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏழ்மை மட்டுமே அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில் 10% EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 46 இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை..

15(6), 16(6) ஆகிய இரு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமானால், "சமூக ரீதியாக பின்தங்கிய நிலை" மட்டுமல்லாது, "கல்வியில் பின்தங்கிய நிலையும்" கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், மேலும் தனி நபர்களுக்கு அல்ல, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியுள்ள குழுக்களுக்கு (Class) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. அதேபோல், அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 16(4), 16(4A) இன் கீழ் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால், "பின்தங்கிய நிலை" மட்டுமின்றி, அரசின் பொது வேலைவாய்ப்புகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவப் படுத்தப்படாத வகுப்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.

இருப்பினும், EWS பிரிவினரின் ”கல்வியில் பின்தங்கிய நிலைமையைப்” பேசாமல், 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பிரிவு 15(6), EWS பிரிவினருக்கு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குகிறது.

அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முக்கிய கூறான ”போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமை” குறித்து எதுவும் பேசாமல், பொது வேலைவாய்ப்பில் EWS பிரிவினருக்கு, அரசியலைப்புச் சட்டப்பிரிவு 16(6) இன் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. மேலும், 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இந்திரா சஹானி வழக்கில் (1992) உச்ச நீதிமன்றம் வரையறுத்த இட ஒதுக்கீட்டு உச்சவரம்பான 50 விழுக்காட்டை மீறுகிறது. இந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச வரம்பை காரணம் காட்டியே, EWS இட ஒதுக்கீட்டிற்கு முன்பு வரை, பல்வேறு பிரிவினரின் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

EWS இட ஒதுக்கீடு SC, ST, OBC இட ஒதுக்கீட்டை எவ்வாறு பாதிக்கும்?

ஒருவர் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும், EWS இட ஒதுக்கீடு EWS பிரிவினர் தவிர மற்ற அனைத்து வகுப்பாரின் இட ஒதுக்கீட்டையும் பாதிக்கும். EWS இட ஒதுக்கீடு எவரையும் பாதிக்காது என்று அரசு கூறியிருந்தாலும் EWS இட ஒதுக்கீடு SC, ST, OBC பிரிவினருக்கான தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு அளவை குறைத்துள்ளது. ஏனென்றால், 10% EWS ஒதுக்கீடு தற்போதுள்ள பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் (Open Category) இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்டியல் வகுப்பிற்கு (SC) 15% இடங்களும், பழங்குடி வகுப்பினருக்கு (ST) 7.5% இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தம் 49.5% இடங்கள் SC, ST, OBC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50.5% இடங்கள் உயர் சாதியினருக்கு மட்டுமல்லாமல், SC, ST, OBC உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவானது. எனவே தான் பொதுப் போட்டிக்கான இடம் (Open Category) என்றழைக்கப்படுகிறது.

பொதுப் போட்டிக்கான 50.5% இடங்களில் பெரும்பாலனவற்றை உயர் சாதியினரே பெறுகின்றனர். குறைந்த அளவிலான இடங்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் போது 50.5% பொதுப்போட்டி இடங்களில் அவர்கள் பெறும் பங்கும் உயரும் நிலை இருந்தது. இப்போது 10% EWS இட ஒதுக்கீட்டிற்குப் பின்னர், பொதுப் போட்டிக்கான இடம் 40.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் SC, ST, OBC மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இதை சமூக நீதி ஆர்வலரும், இந்திய அரசின் முன்னாள் செயலாளருமான பி.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

பொதுப்போட்டிக்கான 50.5% இடங்களை கைப்பற்றுவதில் பணக்கார உயர் சாதியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இருப்பினும் குறிப்பிடத் தகுந்த அளவு ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களும் பொதுப்போட்டி (OC) இடங்களுக்கு தகுதி பெறுகின்றனர். இச்சூழலில், பொதுப்பிரிவில் இருந்து 10% இடங்களை பிரித்து EWS பிரிவினருக்கு ஒதுக்கியுள்ளதால், பொதுப்போட்டியில் பங்குபெறும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேலும் பங்கு குறையும் என்கிறார் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே.

10% EWS இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதால், ஒருவர் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் 40.50% இடங்களுக்கு மட்டுமே போட்டியிட முடியும். ஏனெனில் 59.50% இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. அதேபோல், ST பிரிவினர் 48% இடங்களுக்கும் (7.5% ST Reservation Seats, 40.5% Open Category Seats), SC பிரிவினர் 55.5% இடங்களுக்கும் (15% SC Reservation Seats & 40.5% Open Category Seats) OBC பிரிவினர் 67.5% இடங்களுக்கும் (27% OBC Reservation & 40.5% Open Category Seats) மட்டுமே போட்டியிட முடியும்.

 ஆகையால், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள EWS பிரிவுக்குள் வராத SC, ST, OBC மக்களுக்கு பொதுப்பிரிவில் 10% இடங்கள் குறையும். உதாரணமாக, 77.5% இடங்களில் (27% OBC Reservation & 50.5% Open Category) போட்டி போட உரிமை பெற்றிருந்த OBC மக்களின் உரிமை 67.5% ஆகக் குறையும்.

உண்மையில், EWS இட ஒதுக்கீடு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளை நீர்த்துப்போகச் செய்வதாகக் கருதப்படுகிறது. ஒடுக்குமுறை, சாதிய இழிவு தீண்டாமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதின் ஆரம்பமே பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒற்றை அளவுகோலாக மாற்றும் முயற்சி.

சாதியால் ஒதுக்கப்பட்டு, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றி, கல்வியிலும் ,அரசுப்பணியிலும், நிர்வாகத்திலும் நிலைபெற்றுள்ள சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான ஒரு கருவியாக இட ஒதுக்கீடு இருக்கவேண்டும், என்பதுதான் அரசியலமைப்பின் எதிர்பார்ப்பும் நோக்கமும் ஆகும். வறுமையும், பொருளாதார நிலையும், வேலையில்லாத் திண்டாட்டமும் இட ஒதுக்கீட்டிற்கான காரணங்களாக அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. 

EWS இட ஒதுக்கீடு உயர்கல்வித்துறையில் ஏற்படுத்தும் விளைவுகள் 

10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, போதிய நிதி ஒதுக்கி, கல்வி நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 25% இடங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், கற்றல், கற்பித்தலின் தரம் மோசமாக பாதிக்கப்படும. EWS இட ஒதுக்கீட்டை அவசரகதியில் நடைமுறைப் படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்த பரந்து பட்ட விவாதத்திற்கான தேவை கல்வித் துறையில் ஏற்பட்டுள்ளது. 

ஆசிரியர் பற்றாக்குறை

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பாராளுமன்றத்தில் வழங்கிய தரவுகளின் படி மொத்த ஆசிரியர் பணியிடங்களில் 53.86% பேராசிரியர், 45.34% இணைப் பேராசிரியர், 21.87% உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் காலியாக உள்ள நிலையில், EWS இட ஒதுக்கீட்டால் உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கப்படும் இடங்களால், இன்னும் கூடுதல் பேராசிரியர்கள் தேவைப்படுவர். இதன் விளைவாக தேவையான பேராசிரியர்கள் பணியமர்த்தப்படாத நிலையில் தற்போதுள்ள பேராசிரியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும்.

மாணவர் ஆசிரியர் விகிதம்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயித்த விதிமுறைகளின் படி, முதுகலை அறிவியல் பாடப்பிரிவுகளில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கட்டாயமாக இருக்கவேண்டும். முதுகலை சமூக அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு 15 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியராவது கட்டாயமாக இருக்க வேண்டும். இளங்கலை மட்டத்தில் அறிவியல் துறைகளில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், சமூக அறிவியல் துறைகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் மாணவர் – ஆசிரியர் விகிதம் இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கிறது. EWS இட ஒதுக்கீட்டால் மாணவர் சேர்க்கை 25% அதிகரிக்கப்படுவதால், ஆசிரியர்களின் எண்ணிக்கை அதற்குத் தகுந்தாற் போல் அதிகரிக்கப்பட வேண்டும் .

நிதி நெருக்கடிகள்

EWS இட ஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் பெரும் செலவு ஏற்படும். அரசாங்கம் கல்வி நிறுவனங்களுக்கு ஒரே தவணையில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குமா அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு தவணை முறையில் வழங்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

கல்வி நிதியளிப்பு நிறுவனத்திடம் (HEFA) பல்கலைக்கழகங்கள் கடன் பெற வேண்டுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு தடைகள்

கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு சிக்கல்கள் ஏற்கனவே உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான ஒன்றியப் பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

நிர்வாக சவால்கள்

EWS இட ஒதுக்கீடு பெறுவதற்கு தேவையான வருமானச் சான்றிதழ்கள் பெற பயனாளிகள் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து போராட வேண்டியுள்ளது.

இறுதியாக:

2019 நாடாளுமன்ற தேர்தலில் உயர்சாதி வாக்குகளை பெறுவதற்காக 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த நோக்கத்தை பாஜக அடைந்துவிட்டது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சிக்கு லாபம். அரசியலமைப்பு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் EWS இட ஒதுக்கிடு ஏற்றுக் கொள்ளத் தக்கதாகத் தெரியவில்லை அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறது. அதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், EWS இட ஒதுக்கீட்டின் பயனாளிகளை அடையாளம் காணும் நிபந்தனைகள் மோசடியானவை. 8 லட்சம் வருமான கொண்டவர்களும் EWS இட ஒதுக்கீட்டை பெறலாம் என்பதால், உயர்சாதி ஏழைகளுக்கும் பயனளிக்காது. 

EWS இட ஒதுக்கீடு SC, ST, OBC மக்களின் இடங்களை குறுக்கி விட்டது. புள்ளிவிவரங்களின் படி, உயர்சாதியினர் ஏற்கனவே தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட கூடுதல் இடங்களை பிடித்திருப்பதால் EWS இட ஒதுக்கீடு நியாயமானதாகத் தெரியவில்லை

இந்திய அரசியல் வர்க்கம் தங்களது குறுகிய கால தேர்தல் ஆதாயங்களுக்காக இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை தொடர்ந்து சிதைக்கும் போக்கை முறியடிக்க வேண்டிய நேரம் இது.

வறுமையை ஒழிக்க இட ஒதுக்கீடு சரியான கொள்கை அல்ல. அதற்குப் பதிலாக பொருத்தமான வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் அரசியல் போக்கை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எச்சரித்தார். கல்வியிலும், அரசுப்பணியிலும், நிர்வாகத்திலும் சாதிய அடிப்படையில் உருவான ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான ஒரு கருவியாக இட ஒதுக்கீடு இருக்க வேண்டும், என்பதுதான் அரசியலைமைப்பை உருவாக்கிய நமது முன்னோர்களின் நோக்கம். அந்த நோக்கத்தை சிதைக்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

தேவிகா மல்ஹோத்ரா சர்மா

நன்றி: Ideas for India இணையதளம் (2019, செப்டம்பர் 11 வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சேகர் கோவிந்தசாமி

Pin It