தொன்மை வாய்ந்த பழந்தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டு மொத்தம் 27 அதிகாரங்களை உடையது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கியங்களுக்கு எழுந்த கோட்பாட்டு நூலாகும். திணைக்கோட்பாடு, கைகோள் கோட்பாடு, செய்யுள் உறுப்புகளின் முக்கிய கூறுகள் ஆகியனவற்றை விளக்கும் கோட்பாட்டு நூலாக விளங்குகின்றது.

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளானது அறம், பொருள், இன்பம் குறித்து 1330 குறட்பாக்களில் விளக்குகின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் கைகோள் கோட்பாடு, திருக்குறள் இன்பத்துப் பாலில் வள்ளுவரால் சொல்லப்பட்டுள்ள கைகோள் கோட்பாட்டுடன் எவ்விதம் பொருந்துகின்றது என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கைகோள் கோட்பாடு

தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கியங் களுக்கு எழுந்த ஒரு கோட்பாட்டு நூலாகத் திகழ்கிறது. இலக்கியம் படைக்கப்பட்டுள்ள முறைமையை விதிகளோடு பொருத்தி திறனாய்வது தொல்காப்பியம். தொல்காப்பியப் பொருளதிகாரம் திணைக்கோட்பாடு, கைகோள் கோட்பாடு குறித்து தெளிவாகப் பேசுகிறது. அகவாழ்க்கையின் முக்கிய கூறுகளான களவு, கற்பு வாழ்க்கையின் அடிப்படைகளை விளக்குவதே கைகோள் கோட்பாடு ஆகும்.

திருக்குறளின் இன்பத்துப்பால், களவியல் கற்பியல் குறித்துப் பேசுகின்றது. தொல் காப்பியமும், திருக்குறளும் முன்வைக்கும் கைகோள் கோட்பாட்டைக் குறித்து ஆய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

தொல்காப்பியரின் கைகோள் கோட்பாடு

தொல்காப்பியர் செய்யுளியலில் செய்யுள் உறுப்புகளைக் கூறும் போது ‘திணையே கைகோள் கூற்றுவகை எனா’ (தொல்.செய்.1) எனக் கைகோள் என்ற சொல்லினைப் பயன்படுத்துகின்றார்.

திணை என்பது திணைக்கோட்பாட்டினையும், கைகோள் என்பது கைகோள் கோட்பாட்டினையும், கூற்று வகை என்பது கூற்றுக் கோட்பாட்டினையும் குறிப்பதாகும்.

இவற்றில் கைகோள் கோட்பாடு என்பது களவியல், கற்பியல் குறித்த கோட்பாட்டாக்க முறைமையினை விளக்குவதாகும். தொல்காப்பியரின் கைகோள் கோட்பாட்டினைப் பின்வரும் முறையில் சுருக்கமாகக் காணலாம்.

களவு

இன்பமும் பொருளும் அறனும் என்னும் பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஐந்திணைப் பாடல்களின்வழி, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் கொள்ளும் உறவு முறைக்கான அடித்தளமாக களவு அமைகின்றது. இக்களவு ஒழுக்கத்தில் தலைமக்களிடையே நிகழும் ஒழுகலாறுகளைத் தொல்காப்பியம் வழி பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

· ஊழ்வினை - ஊழ்வினையின் காரணமாக தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தல்.

· ஐயம் - தலைமகளைக் கண்ட தலைமகன் அவள் குறித்த ஐயங்களைத் தனக்குள் கேட்டுக் கொள்ளுதல் (அவள் பெண்தானா? இல்லை தெய்வமா? எனக் கண்டவுடன் எழும் மனக் குழப்பம்.)

·           ஐயத்தினைக் களையும் கருவி - ஐயத்தினை நீக்கும் கருவிகளாக பூக்களில் உள்ள தேனை அருந்துதல் பொருட்டு மொய்க்கும் வண்டு, சூடியிருந்த பூ வாடுதல், கண்ணிமைத்தல், அச்சம் ஆகியவை ஆகும்.

·           குறிப்புரை - ஒருவரின் விருப்பத்தினை ஒருவர் அவர்தம் குறிப்புகளின் மூலம் அறிதல்.

·           ஆணின் இயல்பு - ஆண் என்பவன் பெருமையும், வலிமையும் நிறைந்தவனாக இருத்தல் வேண்டும்.

·           பெண்ணின் இயல்பு - அச்சம், மடம், நாணம் ஆகிய முப்பண்புகளும் உடையவளாகத் தலைமகள் இருக்க வேண்டும்.

·           உணர்வுகள் - களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைமக்கள் உணர்வு நிலையைப் புலப் படுத்தல்.

·           தலைமகன் கூற்று - களவொழுக்கக் காலத்தில் தலைமகன் உரைக்கும் கூற்றுகள் எந்தெந்த சூழ்நிலைகளில் வரும் என்பது பற்றிய குறிப்புகள்.

·           தலைவி கூற்று - களவொழுக்கக் காலத்தில் தலைமகள் உரைக்கும் கூற்றுகள் எந்தெந்தச் சூழ்நிலைகளில் வரும் என்பது பற்றிய குறிப்புகள். மேலும் தலைமகள் தம் கூற்றினை வெளிப்படுத்தும் போது குறிப்பினாலும், சூழ்நிலையின் அடிப்படையிலும் வெளிப் படுத்தலாமே ஒழிய வெளிப்படையாகக் கூறக்கூடாது. அவ்வாறு தமது கருத்தினை வெளிப்படுத்தும் போதும் உயிரினும் சிறந்த நாணத்தை விடாது கற்பு நெறியில் நின்று கூற்றினை வெளிப்படுத்தல் வேண்டும்.

·           தோழி கூற்று - தலைமக்களின் களவு வாழ்க்கை கற்புடன் இணைந்து இல்லறமாக விளங்குவதற்கு தோழி முக்கியப் பாத்திர மாகும். தலைமக்கள் வாழ்வில் இணைவதற்குக் காரணமாக தோழியின் கூற்றுகள் அமையும்.

·           செவிலி கூற்று - உடன்போக்கில் சென்ற தலை மக்களை நினைத்துப் புலம்புவதாக செவிலியின் கூற்றுகள் அமையும்.

·           தலைவி குறியிடல் குறிப்பிடல் - தலைமக்கள் சந்திப்பதற்கான குறியிடத்தைத் தேர்ந் தெடுத்துக் கூறுவது தலைமகளாகும். பகற்குறி, இரவுக் குறிகளைத் தலைமகளே முடிவு செய்யவேண்டும்.

·           களவு வெளிப்படுதல் - அலர், அம்பல் ஆகியவற்றின் மூலம் களவு வெளிப்படும்.

·           திருமணம் - களவு வெளிப்பட்ட பின்னர் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ஆகிய இவை போன்ற நிகழ்வுகள் களவு வாழ்க்கையில் ஈடுபடுவோரின் வாழ்க்கையில் நிகழும் பொதுவான கூறுகள் ஆகும்.

திருவள்ளுவரின் களவியல்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய வற்றின் அடிப்படையில் அரிய கருத்துக்களை விளக்கும் நூலாகத் திகழ்கிறது. திருக்குறள் பதிவு செய்யும் களவுக்கால வாழ்க்கை முறையினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

·           தகையணங்குறுத்தல் (ஐயம்)

·           குறிப்பறிதல்

·           புணர்ச்சி மகிழ்தல்

·           நலம் புனைந்துரைத்தல்

·           காதற் சிறப்புரைத்தல்

·           நாணுத்துறவுரைத்தல் (மடல்)

·           அலர் அறிவுறுத்தல்

தலைவன் தலைவியைக் காணுதல் (காட்சி)

சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப

இழிந்துழி இழிபே சுட்டலான (தொல்.பொ.கள.3)

என இவ்வாறு தலைமகன் தலைமகளைக் காணும்

போது சிறந்தபொருள்களை உவமையாகக் கொண்டு ஐயப்பட வேண்டும் என்பது தொல்காப்பிய விதியாகும். திருவள்ளுவர் தலைவன் தலைவியைக் கொண்டு ஐயப் படுதலை தகையணங்குறுத்தல் என்னும் அதிகாரத்தில் பதிவு செய்கின்றார்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள்.1081)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம்மூன்றும் உடைத்து. (குறள்.1085)

இவள் தெய்வமகளா அல்லது மயில் போன்ற சாயலை உடையவளா? இவளைக் கண்டால் எனது மனம் மயங்குகிறது எனத் தலைவன் ஐயப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்புரை

தலைமக்கள் தம் விருப்பத்தினை குறிப்பின் மூலம் வெளிப்படுத்துவர் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும் (தொல்.பொ.கள.5)

குறிப்பானது தலைமக்களிடையே உறவை வளர்ப் பதற்கு முக்கியமான காரணியாகத் திகழ்கிறது. திருக் குறளில் குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் தலைவன் தலைவியின் விருப்பத்தினைக் குறிப்பாக அறிந்து கொள்ளும் முறைமையை விளக்குகிறார்.

யான் நோக்குங்காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும் (குறள்.1094)

தலைமகன் தலைமகளைப் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்ப்பாள். தலைமகன் நோக்காத போது மெல்ல நோக்கி சிரிப்பாள். இக்குறிப்பு அவளது விருப்பத்தினை மறைமுகமாக உணர்த்துவதாகும்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள (குறள்.1099)

அன்பு கொண்ட இருவர் முன்பின் அறியாதவர் போல பொதுவாகப் பார்த்துக் கொள்ளுதல் காதலர் தம் இயல்பாகும்.

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின்

வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல (குறள்.1100)

இவ்வாறு ஒருவர் குறிப்பு மற்றவருக்கு வெளிப் படுமாறு பார்த்துக் கொள்வதினாலே அனைத்துக் குறிப்பு களும் விளங்கிவிடுமாகையால் வாய்ச்சொற்களினால் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு குறிப்பு வெளிப்படுத்தல் என்பது காதலர்களிடையே மிக முக்கியமான கூறாகத் திகழ்கிறது.

தலைவன் தலைவியைப் புகழ்தல்

ஐம்புலன்களினால் உணரும் அனைத்து உணர்வு களும் தலைமகளிடம் இருப்பதாகத் தலைமகன் கூறுவதாகப் பின்வரும் குறள் கூறுகின்றது.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள (குறள்.1101)

என்று தலைவியைப் புகழ்கின்றான்.

களவொழுக்க உணர்வுகள்

களவொழுக்கத்தில் தலைமக்கள் பெறும் உணர்வு களைத் தொல்காப்பியம்,

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஇச்

சிறப்புடை மரபின் அவை களவு என மொழிப

(தொல்.பொ.கள.9)

என்று கூறுகின்றது. அதாவது குறையாத விருப்பத்தினை உடையவனாக இருத்தல், எப்போதும் நினைத்தல், உடல் மெலிவு காணல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுதல், அதிகமான காமவுணர்வின் காரணமாக, நாணத்தின் எல்லையைக் கடத்தல், பார்ப்பன எல்லாம் அவையே போலத் தோன்றுதல், மறதி, மயக்கம், உயிரை விட்டு விடும் எண்ணம் தோன்றுதல் ஆகிய உணர்வுகள் களவொழுக்கக் காலத்தில் நிகழும் என்கிறார்.

விருப்பம் அதிகரித்தல்

திருவள்ளுவர் தலைமகனின் விருப்ப உணர்வு அதிகமாக இருப்பதனை,

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு (குறள்.1110)

என்று குறிப்பிடுகின்றார். கற்கும் தோறும் கல்வியானது புதுமையானது போலத் தோன்றும். அது போலவே தலைமகளிடம் கொண்ட காமவுணர்வானது எப்போதும் புதியதாக இருப்பதாகக் கூறுகின்றார்.

நாணம் கடத்தல்

காமமானது ஒருவருக்கு தாம் கற்ற கல்வியையும் மறக்கச் செய்யும் அளவிற்கு மாற்றும் தன்மை உடையது. விரும்பிய பெண்ணை அடைவதற்குத் தடை வரும் போது தலைமகன் மடலேறும் வழக்கம் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்தது. அவ்வாறு அவன் மடலேறத் துணிவது நாணத்தைக் கடந்த செயலாகும்.

நாணொடு நல்லாண்மை பண்டுடையோர் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல் (குறள்.1113)

என தலைமகன் மடலேறத் துணிந்தமைக்கான காரணத்தைக் கூறுகின்றார்.

அலர் ‘அலரிற் தோன்றும் காமத்தின் சிறப்பே’ (தொல். பொ.கற்.22) என்னும் தொல்காப்பிய நூற்பாவை ஒட்டி வள்ளுவர்,

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படும் தோறும் இனிது (குறள்.1145)

அலரின் மூலம் தலைமக்களின் களவொழுக்கம் வெளிப்படுவது அவர்களுக்கு இனிமையாகவே தோன்றும்.

கற்பு

தொல்காப்பியம் கூறும் கற்பியல் செய்திகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

·           மணம் (கரணம்)

·           தலைமகன் கூற்று

·           தலைமகள் கூற்று

·           தோழி கூற்று

·           காமக்கிழத்தியர் கூற்று

·           வாயிலோர் கூற்று

·           செவிலி கூற்று

·           அறிவர் கூற்று

·           தலைமகன் ஊடல்

·           தலைமகள் ஊடல்

·           அலர்

·           கூத்தர் கூற்று

·           பிரிவு

·           பார்ப்பார் கூற்று

·           இல்லறம்

ஆகியன ஆகும். திருக்குறள் கற்பியல் தொடர்பான செய்திகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

·           பிரிவாற்றாமை

·           படர்மெலிந்திரங்கல்

·           கண்விதுப்பழிதல்

·           பசப்புறுபருவரல்

·           தனிபடர் மிகுதி

·           நினைந்தவர் புலம்பல்

·           பொழுதுகண்டு இரங்கல்

·           உறுப்புநலன் அழிதல்

·           நெஞ்சொடு கிளத்தல்

·           நிறையழிதல்

·           அவர் வயின்விதும்பல்

·           குறிப்பறிவுறுதல்

·           புணர்ச்சி விதும்பல்

·           நெஞ்சொடு புலத்தல்

·           புலவி

·           புலவி நுணுக்கம்

·           ஊடல் உவகை

கற்பு வாழ்க்கை

கற்பு வாழ்க்கையில் நிகழும் கூறுகளாக பிரிவாற்றா மையை தொல்காப்பியமும், திருக்குறளும் எடுத்தியம்பு கிறது. தலைமகன் கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் போது, கல்வி, காவல், பொருள், பரத்தை ஆகியவற்றின் நிமித்தமாக தலைமகளைப் பிரிவான் என்று தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது.

கல்விக்காகப் பிரிந்து செல்லும் தலைமகன் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பிரியக் கூடாது. பொருள் தேடிச் செல்லுதலும் ஓர் ஆண்டைத் தாண்டக் கூடாது. பரத்தையினை நாடிச் சென்ற தலைமகன் தலைமகளுக்குப் பூப்பு தோன்றிய பன்னிரண்டு நாட்களும் பிரிந்து செல்லக் கூடாது என்பதைத் தொல்காப்பியம்,

பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்

பரத்தையின் பிரிந்த காலையான (தொல்.பொ.கற்.46)

என்றும்,

வேண்டிய கல்வியாண்டு மூன்று இறவாது

(தொல்.பொ.கற்.47)

என்றும்,

வேந்துறு தொழிலே யாண்டினது அகமே

(தொல்.பொ.கற்.48)

ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும் (தொல்.பொ.கற்.49)

என்னும் நூற்பாக்களின் வழி விளக்குகின்றது. பிரிவிற்கான கால எல்லையைத் தொல்காப்பியம் கூறுகிறது. திருக்குறள் பிரிவாற்றாமையால் தலைவியின் மனவேதனையை விளக்குகின்றது.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை. (குறள்.1151)

என்னும் குறளில், தலைமகன் பிரிந்து செல்வேன் என்று கூறுவதைக் கேட்பதற்கு தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்னும் பொருளில் கூறுகின்றாள்.

பிரிவுத் துயரினால் தலைவியின் வருத்தத்தினை, படர் மெலிந்து இரங்குதல், கண்விதுப்பு அழிதல், பசப்புறு பருவரல், தனிபடர் மிகுதி, நினைந்தவர் புலம்பல், கனவுநிலை உரைத்தல், பொழுதுகண்டு இரங்கல், உறுப்பு நலன் அழிதல். நெஞ்சொடு கிளத்தல், நிறை அழிதல், அவர்வயின் விதும்பல், குறிப்பு அறிவுறுத்தல், புணர்ச்சி விதும்பல், நெஞ்சொடு புலத்தல் ஆகிய அதிகாரங்களின் வழி விளக்குகின்றார்.

ஊடல்

தலைமகன், தலைமகள் இருவரும் ஊடல்

கொள்ளும் நிலையை,

உணர்ப்புவரை இறப்பினும், செய்குறி பிழைப்பினும்

புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய (தொல்.பொ.கற்.15)

என்றும்,

அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி

அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும்

வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே

 (தொல்.பொ.கற்.18)

எனத் தொல்காப்பியம் விளக்குகின்றது. திருக்குறள் புலவி, புலவிநுணுக்கம், ஊடல், ஊடல் உவகை ஆகிய அதிகாரங்களின் வழி, ஊடலின் பயனையும், அது கூடலுக்கு உதவி செய்யும் முறைமையினையும் விளக்குகின்றது.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று (குறள்.1318)

தலைவன் தனக்கு வரும் தும்மலை அடக்கிக் கொள்ளும் போது பிற பெண்டிர் அவனை நினைத்தலை மறைக்கவே தும்மலை அடக்கினான் எனத் தலைவி ஊடல் கொள்வாள்.

உணலினும் உண்டது அறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது (குறள்.1326)

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் காணப் படும். (குறள்.1327)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின் (குறள்.1330)

என்னும் குறள்களின் வழி ஊடலினால் விளையக் கூடிய பயன்களைக் குறிப்பிடுகின்றது திருக்குறள்.

தொல்காப்பியமும் திருக்குறளும் களவு, கற்பு என்னும் கைகோள் கோட்பாட்டினை விளக்குகின்றன.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய வற்றிற்குரிய கோட்பாட்டினை விளக்குவதாக அமைகின்றது.

திருக்குறள் அறம், பொருள், இன்பத்திற்கான கோட்பாட்டினை உள்ளடக்கியதாக உள்ளது. இவ்விரண்டு நூலிற்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் அவை இன்னார்க்குரியன எனச் சுட்டாமல் பொதுவாக அனைத்து மக்களுக்கும் உரியதாக விளங்குகின்றன.

படைப்பாளர் தம்முடைய படைப்பில் அவரையறியாமலே அவர்தம் ஆளுமையைப் படைப்பில் பதிவு செய்வர். சான்றாக படைப்பாளர்தம் மொழி, மதம், இனம் பற்றிய கொள்கைகளைத் தமது படைப்புக்களில் பதிவு செய்வர். ஆனால் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகிய இருவரும் தமது ஆளுமையைப் பதிவு செய்யாமல் பொதுவான கருத்துக்களையே பதிவு செய்துள்ளனர். கைகோள் கோட்பாடு குறித்து இவ்விரு ஆசிரியரின் பார்வையானது ஒரே கோணத்தில் செய்கிறது.

அவை தலைமக்களின் உள்ளம் சார்ந்த கருத்துக்களை அவரவர்தம் கூற்றுக்களின் வழி வெளிப்படுத்துகின்றனர். இவ்விரு நூல்களின் வழி கைகோள் கோட்பாட்டின் அடிப்படையில் பண்டைத் தமிழ் மக்களின் களவு, கற்பு வாழ்க்கை முறையின் செல்நெறியினை அறிந்துகொள்ள முடியும். களவு வாழ்க்கையானது தலைமக்கள் ஒருவரைப் பார்த்தல், குறிப்பினை அறிதல், புகழ்தல் ஆகிய நிலை களிலேயே அமைகின்றது. கற்பு வாழ்க்கையானது இல்லறத்தினை அடிப்படையாகக் கொண்டது.

குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் வரும்போது தலைவன் பொருள் தேடிச் செல்ல வேண்டியவனாக இருக்கின்றான். அதனால் பிரிவு ஏற்படுகின்றது. பிரிவாற்றாமையால் தலைமகள் படும் துயரங்களும் கற்பு வாழ்க்கையின்கீழ் வருகின்றது.

மேலும் தலைமகனுக்குப் பிற பெண்டிரிடம் ஏற்படும் தொடர்புகளினால் தலைவி ஊடல் கொள் கிறாள். ஊடலைத் தணிவித்து, இல்லறத்தை நல்லற மாக அமைத்துச் செல்வது தலைமகனின் கடமையாகும்.

Pin It