singaravelar writerதென்னிந்திய கம்யூனிஸ்டுகளின் முதல் தலைமுறைத் தலைவர்களில் மூத்த தலைவராக விளங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். தமிழக அரசியல் வரலாற்றில், இந்திய அரசியல் வரலாற்றில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய ஆளுமை. இவர் காலத்திலிருந்து இருநூறு நூற்றாண்டைக் கடக்கிற சூழலில், அவர் நம்மிடையே விட்டுச் சென்ற சிந்தனைகளும், செயல்பாடுகளும் எண்ணி மாளாதவை, ஏற்றம் மிகுந்தவை, இன்றைக்கும் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியவை.

உண்மையில் சிங்காரவேலரின் சிந்தனைகள் இந்தியாவிற்கு வற்றாத ஆறுகளைப் போல் அள்ளித் தரும் கருத்துவளமும், பொருள் வளமும் உடையன. தமிழகத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகியவற்றின் அறிவுக் களஞ்சியமாகத் திகழும் அவருடைய சிந்தனைகளை நாம் கொண்டாட வேண்டிய தேவை இன்னும் இருக்கிறது. தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராகவும், யாவற்றுக்கும் முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.

தாம் கையிலெடுக்காதத் துறைகளே இல்லையெனும் அளவிற்கு, நாட்டு விடுதலை, தொழிலாளர் நலன், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, வர்க்கப் போராட்டம் என எவ்வகையிலும் குறைவின்றி தமிழ் மக்களை இணைத்துப் போராட்டக்களம் கண்டவர். பலமொழிகள் கற்றிருந்தபோதும் தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர். பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக, எமனாக நின்றவர். அப்பேர்ப்பட்ட தலைவரை தமிழனை தமிழ்நாடு கொண்டாடாமல் விட்டது ஏன் என்ற கேள்வியை முன்வைக்க முயல்கிறது இக்கட்டுரை.

"வறட்டு நாத்திகர் எனப் பெரியாரை விமர்சனம் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்திற்கு முந்தி விஞ்ஞான நாத்திகம் பேசியவர் சிங்காரவேலர். அவர் குறித்த பதிவுகள் அரிதாகவே காணப்படுகிறது. திட்டமிட்டு அவர் இருட்டடிப்பு செய்யப்பட்டாரா அல்லது அவர் மீனவர் குலத்தைச் சார்ந்தவர் என்பதால் மிகக் கவனமாக மறக்கடிக்கப்பட்டாரா என்பதைத் தந்தை பெரியார், சி.எஸ். சுப்ரமணியம், குத்தூசி குருசாமி, அறிஞர் அண்ணா, வே. ஆனைமுத்து, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கட்டுரைகள் வழியாக சிங்காரவேலரின் சிந்தனை செல்நெறியை உணரமுடிகிறது.'' மேற்கூறிய வினாவிற்கு வலுசேர்க்கும் விதமாகப் பூபாளம் புத்தகப்பண்ணை பின் அட்டைக் குறிப்பு உள்ளது. ஆக பள்ளிப்பாடப் புத்தகங்களிலும், கல்லூரிப்பாடப் புத்தகங்களிலும் படிக்க வேண்டி நெறியாளுமையாகத் திகழும் இவர் இன்னும்கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறாதது ஏன் என்ற வினாவையும் முன் வைக்கிறது இக்கட்டுரை.

பொதுவாக இந்திய அரசியல் வரலாற்றில் காங்கிரசு இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு ஆவணக் காப்பகங்கள் உண்டு. இடதுசாரி இயக்கத் தலைவர்கள் தங்கள் வாழ்க்கை பதிவு செய்வது மேட்டிமைத்தனமானது என்று கருதியதால் சரியான ஆவணக் காப்பகங்கள் இல்லை. அப்படித்தான் சிங்காரவேலர் வாழ்க்கை. செயல்திறன் பற்றிய பதிவும், காலனிய ஆட்சிக்காலத்தில் அவரால் வைக்கப்பட்ட அரசியல் சித்தாத்தங்கள் இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது. ஆகவே இந்தச் சூழலில் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டிய தேவையும் நமக்கு இருக்கிறது.

சிந்தனைச் சிற்பியின் வாழ்க்கைச் சுருக்கம்:

அன்று சென்னையை அழகுபடுத்தியவை மீனவக் கிராமங்கள். அத்தகைய மீனவ கிராமத்தில் ஒன்றுதான் மயிலாப்பூரிலுள்ள நடுக்குப்பம். அவ்வூரில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வெங்கடாசலம், வள்ளியம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 18.02.1860 ஆண்டு பிறந்தார். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப சிங்காரவேலரின் முன்னோர்கள் கடல்கடந்து வாணிபம் செய்து வந்தனர். பர்மிய தேக்குமரம், கட்டுமரம் போன்றவற்றை இறக்குமதி செய்து வாழ்ந்தவர்கள், அக்காலத்தே தென்னிந்திய இரயில்வேயிலும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர் என்பதும் சிறப்பு.

மேலும் அக்குடும்பத்தினர் அறக்கட்டளையை உருவாக்கி, வறுமையுற்ற ஏழை எளிய மக்களுக்கும், மீனவர்களுக்கும் தொண்டு செய்து மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர். திருப்போரூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவண்ணாமலை போன்ற கோயிலிடங்களில் சத்திரங்கள் கட்டினர். விழா காலங்களில் தொலைதூரத்திலிருந்து வருவோர்க்கு தங்கும் வசதி செய்து கொடுக்கும் விதமாக அச்சத்திரங்கள் அமையப் பெற்றிருந்தனவாம்.

செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர் தம் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக் கிறித்துவக் கல்லூரியிலும் கல்லூரிக் கல்வியை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும் பின்னர் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்று பி.எல் பட்டத்தையும் பெற்றார். 1907 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பல வழக்குகளைச் சிறப்புடன் நடத்தி புகழ்பெற்ற வழக்கறிஞரானார்.

இவரே பல வழக்குகளைத் தாமே சமாதானம் செய்து வைத்துவிடுவார். 1889 இல் அங்கம்மையைப் பல எதிர்ப்புகளுக்கிடையே காதல் திருமணம் செய்து கொண்டார். இணையரின் 30 ஆண்டுகால இணைபிரியா வாழ்வில் அங்கம்மையின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. எனினும் சிங்காரவேலர் அதற்குப் பிறகு பொது வாழ்வில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். மக்களுக்குப் பணி செய்வதே தன் வாழ்நாள் கடமையென 87 வயதுவரை வாழ்ந்தார்.

அவர் தனக்கு வேண்டிய புத்தகங்களை ஆக்ஸ்வேட் பிரஸ், மாக்மில்லன், ஹிக்கின்பாதாம், பிரிட்டீஷ், அமெரிக்க புகழ்பெற்ற புத்தகக் கம்பெனிகள் ஆகியவற்றிலிருந்து புத்தகங்களைக் கடல் வழியாகத் தருவித்துப் படித்து வந்தவர். தன் வாழ்நாளின் இறுதிவரை புத்தகப் பைத்தியமாகவே இருந்தார் என்பது அவரோடு அணுக்கமாக இருந்த தமிழகத் தலைவர்களின் கூற்றாக உள்ளது. இலண்டன், நியூயார்க்கைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர்கள் தங்களது விண்டர் ஆட்டம் புத்தகப் பட்டியலைச் சிங்கார வேலருக்கு அனுப்பிவைப்பர். அதிலிருந்து தனக்கு வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்து கொள்வார். அன்று பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட பொதுவுடைமைச் சித்தாந்த நூல்களைக் கப்பல்கள் மூலம் புதுவை வழியாக வரவழைக்கப்பட்டன என்பது உண்மை.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான சேக்ஸ்பியர், ஹீம், மில்டன், ப்ராய்டு, ரசல், ஜஸ் போன்றோர் படைப்புகள். மேலும் ஹெர்பர்ட் ஸ்பென்சன், காம்பேர், தாந்தே, கான்ட் ஹெகல், லியோ டால்ஸ்டாய், ஹெல்லர், ஏல்லீஸ் போன்ற தத்துவவாதிகளின் நூல்களையும், தத்யதாபோவஸ்கி நாவல்கள், புஷ்கின் கவிதைகள், செக்காய் நாடகங்கள், அமெரிக்க ஆசிரியர்களான மார்க்டிபைக், வால்ட் விட்மன், அப்டான் சிஸ்பர் ஆகியோரின் புத்தகங்கள் யாவற்றையும் தம் நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார். இவர் தாய்மொழியான தமிழுடன் தெலுங்கை எழுதப் படிக்கவும் கற்றிருந்தார். மேலை நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், ரஷியன், ஃபிராஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றதனால்தான் உலக அளவில் உள்ள எழுத்துக்களை, படைப்புகளை வாசித்துக் கொண்டே இருக்க முடிந்தது.

தென்னிந்தியாவிலே தனிநபர் நூலகங்களில் மிகப் பெரிய நூலகம் சிங்காரவேலர் வீட்டு நூலகமாகும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்திருந்தார். அந்நூலகத்திற்கு "மார்க்சிஸ்டு லெனினிஸ்டு ' என்று பெயர். இவற்றில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பொதுவுடைமை சார்ந்த நூல்களாகும். சிங்காரவேலர் சேகரித்த நூல்களில் ஒரு பகுதி ரஷியாவிலுள்ள பெரிய நூலகமான லெனின் நூலகத்தில் "சிங்காரவேலர் நூலகம்'' என்ற பிரிவில் இன்றும் உள்ளது.

அவருடைய நூலகம் தலைவர் பலரின் சிந்தனை மாறுதலுக்கு உந்து கோலாயிற்று. பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அறியப்பட்ட எம்.என். ராய், இ.எம்.எஸ். நம்பூரிபாட் போன்றோர் அந்நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா, ப. ஜீவானந்தம், மகாகவி பாரதி, குத்தூசி குருசாமி, எ.எஸ்.கே. அய்யங்கார், புதுச்சேரி வ. சுப்பையா, எம்.பி.எஸ் வேலாயுதம், எஸ்.வி. காட்டே போன்றோரும் அடங்குவர்.

குறிப்பாக பேரறிஞர் அண்ணா, ப. ஜீவானந்தம் போன்றவர்கள் அந்நூலகத்தின் மேன்மையை அறிந்து கொண்டு, அந்நூலகத்தில் பல மணிநேரங்கள் படிப்பதிலே செலவிட்டனர் எனப் பதிவு செய்துள்ளனர். மாமேதை தள்ளாத வயதிலும் விழிகள் சோர்ந்திருந்த போதும் படிப்பதிலேயே பலமணி நேரங்களைச் செலவழித்துள்ளார். அவரிடம் கருத்துக் கேட்க முக்கியமான முற்போக்கு இதழ்களை அந்த ப் புத்தக விற்பனையாளரிடமிருந்து நேரடியாக வாங்குவார்.

வாங்கிய உடனே மணிக்கணக்கில் அமர்ந்து படித்து விடுவார். அந்நூல்களை விரும்பி பேரார்வத்துடன் படிக்கும் எவர்க்கும் நூல்களையெடுத்து தம் நூலகத்திலே இருந்து அங்கேயே படிக்கத் தருவார். அவரது நூலகத்திலிருந்து எவரும் புத்தகங்களை எடுத்துச் செல்ல ஒருபோதும் விரும்பியதில்லை. கருத்தில் நேர்மையற்றவர்களை கருதியவர்களிடத்தில் சில வார்த்தைகளே பேசுவார். ஆனால், பேசும் பொருளில் அக்கறையுள்ளவர்களிடத்து மணிக்கணக்கில் உரையாடுவார். அவருடைய நூலகத்தில் முற்போக்கு இதழ்கள் மட்டுமல்ல, பண்டைய தமிழ் இலக்கியத்தின் எல்லாச் சிறந்த நூல்களும் அவரிடமிருந்தன. நூலகமே அவருடைய வாழ்வு, நூல்களே அவரின் சுவாசமாக இருந்ததில் எவ்வித வியப்பும் இல்லை.

இளமைக் காலந்தொட்டே சமூகத்தின்பால் மாறாத பற்று கொண்டு, நல்ல பல செயல்களைச் செய்து வந்தார். அக்காலத்தில் ப்ளேக் நோய் என்ற நோய் பரவி, மக்கள் அனைவரிடத்தும் பீதி கிளம்பியிருக்கும்போது, தாமே துணிந்து முன்னின்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்கச் செய்தார்.

இவர் தொடக்ககாலத்தில் அயோத்திதாசப் பண்டிதரோடு இணைந்து பௌத்த மதத்தை மக்களிடையே பரப்பினார். பின்னாளில் அவரோடு கருத்து முரண்பட்டு தம் வீட்டில் "மகாபோதி சங்கம்' என்ற பௌத்த சங்கத்தை உருவாக்கினார். 1899 ஆம் ஆண்டு புத்தரின் நினைவாண்டைத் தம் வீட்டிலே பௌத்தர்களோடு இணைந்து சிற ப்பாகக் கொண்டாடினார். திங்கள்தோறும் பௌத்த கொள்கைகளை விளக்கியும், மூடநம்பிக்கைக்கும் சாதி வேற்றுமைக்கும் எதிராக நல்ல பல கருத்துகளை வரும் மக்களிடையே பரப்பி வந்தார். திரு. வி.க. அவர்கள் பௌத்தமதக் கூட்டத்தில் கலகம் செய்யச் சென்றபோது, சிங்காரவேலர் டார்வின் கோட்பாட்டைச் சிறந்த முறையில் விளக்கவே,"இன்றிலிருந்து நான் சிங்காரவேலருக்கு மாணவரானேன்'' என்பதிலிருந்து அவரின் சமூக அக்கறை, கருத்துப் புலப்பாடு நன்கு அறியமுடியும்.

சிந்தனைச் சிற்பி கண்ட அறிவியக்கம்

சிற்பி சிங்காரவேலர் தமிழ்நாட்டில் தனியொரு மனிதராக கம்யூனிசக் கொள்கையை ஏற்று வழிநடத்திய முன்னோடி. அதோடு அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கி, அவற்றை தமிழுலகுக்கு முதன்முதலாக வெளிப்படுத்திச் சென்றவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன் எனப் பலமொழிகளை அறிந்து, அதன் காரணமாக உலகிலுள்ள நூல்களையெல்லாம் தேடித் தேடிக் கண்டடைந்தவர். அதனால் அவர் இதழ்களில் எழுதிய கட்டுரைகள் யாவும் ஆழ அறிந்த "அறிவியல் களஞ்சியமாகத் திகழ்ந்தது'.

திரும்பும் பக்கமெலாம் நூல்களின் வரிசை. அவர் வீடே நூலகம். அவர் சுவாசிப்பே வாசிப்பாயிருந்தது. அறிவியல், அரசியல் உளவியல், சமூகவியல், மானுடவியல், தத்துவவியல் போன்ற எண்ணற்ற துறைகளுடைய நூல்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்துப் படிக்கும் திறன் அவருக்கிருந்தது. தடை செய்யப்பட்ட கம்யூனிச நூல்களை இரகசியமாக கப்பலில் தருவித்து, பின்னர் புதுச்சேரியிலிருந்து மீன்கடையிலும் பூக்கடையிலும் புகைவண்டியில் ஏற்றப்பட்டு அவருக்கு வந்தடையுமாம்.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலை செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப ஐரோப்பா, லண்டன், பிரான்சு போன்ற வெளிநாட்டிலிருந்து நூல்களைத் தருவித்து, திரட்டிப் பெரும்பொருட் செலவில் தம் வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களை தம் வீட்டு நூலகத்தில் சேகரித்த பெருமை சிங்காரவேலருக்கு உண்டு.

சிங்காரவேலர் பலமொழிகளை அறிந்திருந்ததால், அம்மொழிகளிலே வெளிவரும் விஞ்ஞானத் தத்துவ நூல்களை வாங்கிப் படிப்பதிலும், அதை அவ்வப்போது குடியரசு, புரட்சி, புது உலகம், புதுவை முரசு போன்ற பல முற்போக்குச் சிந்தனையுடைய ஏடுகளில், நல்ல எளிய பதங்களில், சாமானிய வாசகரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எழுதினார்.

அதேசமயம் மலேசியா, சிங்கப்பூர், ரங்கூன் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் வாசகர்கள் இவர் கட்டுரையைப் படித்துவிட்டு, தம் ஐயங்களை அஞ்சல் மூலம் கேள்விகளை எழுதி அனுப்புவார்களாம். அக்கேள்விக்குரிய செய்திகளையும் குறிப்புகளையும் ஆதாரப்பூர்வமாக எழுதி, நூல்களில் மேற்கோள் காட்டி, அப்பக்கத்தின் எண்ணையும் சுட்டி விளங்கக் கூறுவார். வெளிநாட்டிலிருந்து அவருக்கு நன்றியும் வாழ்த்துகளும் வருமாம்.

அவர் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அறிவியல், தத்துவம் சார்ந்த கட்டுரைகளே அதிகம். பேய், பிசாசு பற்றிய தெளிவும் உலகம் தோன்றி விதமும் கடவுள் மறுக்கும் விதமும் சுவாரசியமானவை. ஐந்து கண்ணன், பூச்சாண்டி போன்ற நடைமுறை விசயங்களோடு பொருந்தி, தாம் எடுத்துக் கொண்ட தலைப்பை விளக்குவது அருமை. இவரின் இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரின் சிந்தனைகள்' என்று மூன்று தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளது. கம்யூனிச அறிக்கை, விஞ்ஞானம், பொருளாதாரம் குறித்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து புதுமையும், புரட்சியும் செய்த கட்டுரையாளர்.

தமிழ் தத்துவ மரபில் சிங்காரவேலர்:

இந்தியச் சிந்தனை மரபில் தமிழ்த் தத்துவமரபு வழிவழிப்பட்டது. ஆதிமரபு தொடங்கி நவீன குருமார்கள் வரை தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்பதைவிட தமிழர்களிடையே நிலவிய தத்துவமரபு என்று சொல்லலாம். ஆதிமரபு, வேதமரபு, சாங்கியம், வைகோடிகம், நியாயம், உலகாய்தம், சமணம், ஆசிவகம், புத்தம், சைவம், வைணவம்.

மேலும் வேதமரபில் அத்வைதம், துவைதம், விசிஷடாத்வைதம் எனவும், சித்தர் தத்துவமரபு இசுலாமிய தத்துவமரபு, கிறித்துவ தத்துவமரபு, பெரியாரிய தத்துவமரபு எனும் வரிசையில் சிங்காரவேலரின் தத்துவ மரபு வருகின்றது. அனுபவங்களைக் கொண்டு மகத்தான சிந்தனைகளைக் கட்டுவிப்பதே தத்துவத்தின் இலக்கணம் ஆகும் என்பர்.

தத்துவமானது சடங்குமயமான மதமும் அல்ல, விதிகள் மயமான விஞ்ஞானமும் அல்ல. அது இரண்டுக்கும் இடைப்பட்டது. இதுவரை விடை காணப்படாத மனித வாழ்வின் விடுகதைகளை அவிழ்த்தால் அது விஞ்ஞனம். அவிழ்க்கப்படாது தத்துவமாக நிற்கும் என்பது பேரா. அருணனின் தத்துவ விளக்கம். விடைகாணாதிருந்த மனிதவாழ்வின் விடுகதைகளை தம் அறிவியல் கட்டுரைகள் மூலம் கட்டுடைத்தவர் சிங்காரவேலர்.

இந்தியச் சிந்தனை மரபில் தத்துவஞானம் என்பது ஆன்மீக அறிவுசார்ந்த ஒரு சொல்லாடலாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்த வார்த்தைக்கு நேர் எதிரான அதாவது பகுத்தறிவு சார்ந்த ஒரு சொல்லாடலாகப் பயன்படுத்தியதில் தனித்தன்மை பொருந்தியவராய் இருந்திருக்கிறார்.

இருவேறு மரபுகள்:

உலகளவில் காணப்படும் தத்துவமரபு இருவகைமைக்குள் அடக்கிவிடலாம். கருத்து முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதும் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இருமாறுபட்ட தத்துவமரபுகள் இவ்வுலகத்தில் ஊடாடிக் கொண்டிருக்கின்றன. இவ்வுலகம் உண்மை என்று வாதிடுபவர்கள் உண்மைவாதிகள் (Realists) என்றும், இவ்வுலகம் பொய் என்று வாதிடுபவர்கள் மாயாவாதிகள் (Ideologist) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

"இவர்கள் தம் புலன்களுக்குத் தோன்றும் உலகம் உண்மையல்ல வென்றும், புலன்கள் உலகை உள்ளபடி அறிவிக்க முடியாது என்றும் வாதிடும் மாயாவாதிகள் பார்க்கும் உலகம் மாயை என்பது மருளே ஒழிய உண்மையல்ல'' என்கிறார் சிங்காரவேலர். இதற்கு உதாரணமாக "வேதாந்த மருள்' எனும் தலைப்பில் விரிவாக ஒரு கட்டுரையை எழுதி, அதற்கு ஏற்ற ஒரு சிறுகதையை (குறும்புக்கார சீடன்) எடுத்துக் கூறியுள்ளார். "இந்த வேதாந்த மருளால் இல்லாத கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டு பேய்களென்றும், பிசாசுகளென்றும் செத்தவர்களுடைய ஆன்மாக்களென்றும் வானுலகமென்றும் அகால மரணம், நோய் முதலிய சங்கடங்களுக்குத் தகுந்த பரிகாரங்களைத் தேடி, சுகசீவிகளாக மக்கள் வாழமுடியாமல் போயிற்று என வேதனைப்படுகிறார்.

பிரபஞ்சம் முழுமையும் ஜடமாகவே தோன்றுகிறது. எல்லாப் பொருட்களும் ஜடத்தின் பரிணாமம். உயிர் என்பதெல்லாம் சிற்சில ஜடப் பொருட்களின் நடத்தையே தவிர வேறொன்றுமில்லை. இத்தத்துவம்தான் நமக்கு எளிதில் விளங்கக்கூடிய, எளிதில் பின்பற்றக் கூடிய தத்துவம் என்கிறார். ஆனாலும் மிகப்பழமை வாய்ந்த தத்துவ மரபைக் கையியெடுத்தவராகக் காணப்படுகிறார். சிங்காரவேலர் பழமையான தத்துவமரபில் ஒன்று பௌத்தம்.

இப்பௌத்தமரபு பொதுவுடைமைச் சித்தாந்தத்தை உள்ளடக்கியதாகவும் இயற்கையைப் பேசும் தத்துவங்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. புத்த சமயத்தில் ஆன்மா என்பது கிடையாது. ஆனால் மறுபிறப்பை வலியுறுத்துகிறது. இது ஒரு இடைச்செருகல், ஆதிபுத்தசமயம், பொருள் முதல்வாதத்தோடு நெருங்கிவருவதாக இருக்கிறது. உண்மையில் கடவுளின் இருப்பைத் தகர்த்தெறிந்தவர் புத்தர்பிரான், பகுத்தறிவு சமயத்தை நிறுவனமாக்கியவர் இயேசுபிரான்.

நபிகள் நாயகம் அன்பு சமயத்தை நிறுவ முயன்றார். காலப்போக்கில் வேறுமரபிலுள்ள மறுபிறப்புக் கொள்கையை இவையெல்லாம் ஏற்றுக் கொண்டு விட்டன. "பளிச்சென்று சொல்லப்போனால் புத்த மதத்திற்குள்ளும் வேறுமரபு ஊடுருவியது. புகுந்து அதன் மூலத்தை உறிஞ்சி விட்டது. அதுவே மகாயானம்'' என்றார் பேரா. அருணன், புத்தமதத்தின் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் புத்தர்கள் ஆன்மா இல்லாத மறுபிறப்பைக் கற்பிக்கின்றார்கள். புத்தருக்குள்ளே முரண்பட்ட கன்ம சித்தாந்தத்திற்கும் கிறித்துவர்களுடைய பாவ, புண்ணிய சித்தாந்தத்திற்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. இந்த யோசனை இந்துக்களுடைய மறுபிறப்பு கற்பனைக்கு ஆதாரமாக உள்ளது'' எனச் சிங்காரவேலர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

முடிவுரை:

மாமேதை அன்றைய காலக்கட்டத்தில் ஆர்ப்பாட்ட கட்சி அரசியலை முன்னெடுக்கவில்லை. எந்தக் கட்சியிலும் தலைமை பொறுப்பு ஏற்கவில்லை. தானே உருவாக்கித் தோற்றுவித்த "லேபர் கிசான் கட்சி' தீவிரமான கட்சியாக உருவகிக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் தடைசெய்யப்பட்டது. அக்கட்சி கம்யூனிசத்தையும் காந்தியத்தையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளிலே காணாமல் போயிற்று. கட்சிக்கு வேண்டிய ஊட்டச்சத்து மிக்க, கவர்ச்சி மிக்க செயல்முறைத் திட்டங்களை வகுக்கா ததாலும் எந்தவொரு நிபந்தனைக்கு உட்பட்ட இயங்காமல் போனதாலும் இருக்கலாம்.

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமாக நம் கண்முன் நிற்பது யாவற்றிலும் மேலோங்கி நிற்பது சாதியம்தான். சாதியம் புரையோடிக் கிடக்கும் இச்சமூகத்தில் புதிய அறிவார்த்தமான ஆழங்கால்பட்ட தத்துவங்களை, இவருக்கும் முன்னர் யாரும் முன்மொழியாதபோதும், தனித்து அடையாளத்தோடு புதிய கொள்கைகளை வழிமுறைகளை அறிவியக்கமாக்கித் தமிழுலகுக்குத் தந்தவர் தனிப்பெருந் தலைவர் சிங்காரவேலர், மீனவராய் பிறந்ததனால் முன்னால் நிற்க வேண்டியவர் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழகத்தின் முன்னோடியை தலைநிமிரச் செய்வதன் மூலம் இத்தமிழ்ச் சமூகம் தலைநிமிரும் என்பதில் ஐயமில்லை.

மாமேதை சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள், நூல்கள், கடிதங்கள், இதழ்கள் மாமேதை தாம் நடத்திய தமிழ், ஆங்கில இதழ்களிலும் பிற இதழ்களிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். பொதுவுடைமை, சுயமரியாதை இயக்க இதழ்களில் பெரும்பான்மையான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் அறிவியல், உளவியல், தத்துவியல் சார்ந்த கட்டுரைகள் ஏராளம். வாசிப்போர் பிரித்தறிந்து புரிந்து கொள்ளும் வகையில் அவரின் கட்டுரைகள் வகைத் தொகைப்படுத்தப்பட்டுள்ளன.

அறிவியல் சார்ந்த கட்டுரைகள்:

1.பிரபஞ்சமும் நாமும் 2. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் 3. உலகம் சுழன்று கொண்டெ போகிறது. 4. பிரபஞ்ச தற்காலப் பிரச்சனைகள் 5. விஞ்ஞானக் குறிப்புகள் 6. மூடநம்பிக்கைகளின் கொடுமை 7. கடவுளும் பிரபஞ்சமும் 8. பகுத்தறிவு என்றால் என்? இன்னும் பிற தலைப்புகளில்.

வெளிநாட்டு வாசகர்களின் கேள்வியைத் தெளிவிக்கும் கட்டுரைகள்

1. பிசாசு பிடித்த வீடு 2. உலகவிடுதலைக்கு வழி கடவுள் என்ற வார்த்தை ஒழிய வேண்டும். 3. ஆத்திக நாத்திக வாதம் 4. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும் 5. கல்மழை உண்டாகும் விதம் 6. கல்யாணம் என்றால் என்ன? 7. மதம் போய்விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது. 8. மூப்பு அதாவது கிழத்தனம் 6. வேசித்தனமும் போக்கும் மார்க்கமும், இன்னும் பிறவும்.

சாதி பற்றிய தலைப்பில் எழுதிய கட்டுரைகள்:

1. சாதியை ஒழிக்க வேண்டும். 2. சாதி மதம் ஒழிவதற்கு இனிவரும் சந்ததியர் கற்பிக்கவேண்டியதன் அவசியம் 3. சாதி ஒழிப்பிற்கும் கலப்புத் திருமணம் ஒரு மார்க்கம் 4. சாதிசாதமும் வகுப்புவாதமும் 5. சாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா? ஹிந்துஸ்தான் லேபர் கிஸான் கெசட் (ஆங்கிலம் மாதமிருமுறை ஏடு)

 • இந்திய தேசிய காங்கிரசு கயா (1922) மாநாட்டில் தொழிலாளர் பற்றிய தீர்மானத்தை ஆதரித்து அவர் ஆற்றிய உரை.
 • ஹிந்துஸ்தான் தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களுக்கென ஓர் அரசியல் கட்சியை அமைத்துக் கொள்வதற்கான கட்சித் திட்ட அறிக்கை.
 • 1924 இல் லெனின் மறைவு குறித்து எழுதிய கட்டுரை.
 • 1925 இல் சென்னை மாநகராட்சிக கூட்டத்தில் தமிழில் ஆற்றிய உரை.
 • 1925 இல் கான்பூர் பொதுவுடைமை மாநாட்டில் தலைமையேற்று ஆற்றிய உரை.
 • இலண்டன் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் “The great Speeches of Madam India” எனச் சிங்காரவேலரின் நாத்திகப் பேச்சை கட்டுரையாக வெளியிட்டது.

குடியரசு பத்திரிக்கை (சுயமரியாதை இயக்க ஏடு)

 • சமதர்ம அறிக்கை 8 சுயமரியாதை முதல் மாநாட்டு அறிக்கை
 • மதம் போய் விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்.

புதுவை அரசு (சுயமரியாதை இயக்க ஏடு)

 • சுயமரியாதை இயக்கமும் இசுலாமும் (09.02.1932)
 • கடவுள் என்ற மதமும் அதன் பயனும் (4.4.1932)

புரட்சி (சுயமரியாதை இயக்க ஏடு)

 • ஈரோட்டு திட்டம் "முதல்' கல்யாணம் என்றால் என்ன?
 • 14 கட்டுரைகள் (24.12.1933 1934 வரை)

பகுத்தறிவு (சுயமரியாதை இயக்க ஏடு)

 • சமதர்மக் குறிப்புகள் கல்யாணம் என்றால் என்ன? போன்ற ஒன்பது கட்டுரைகள் (15.08.1934 09.12.1934 வரை)

புதுஉலகம் (சிங்காரவேலரின் ஏடு)

 • 193-1936 வரை, ஒரு வருடமே நடந்த இவ்வேட்டில், தத்துவமும் வாழ்வும் முதல் உலக நடப்புகள் வரை. ஏறக்குறைய எண்பத்திரண்டு கட்டுரைகள்.

சிங்காரவேலரின் புத்தகங்கள், துண்டு வெளியீடுகள்

 • சுயராஜ்ஜியம் யாருக்கு? (பாகம் 1, 2, 3)
 • சுயராஜ்ஜியம் யாருக்கு? (மூன்று பாகமும் தொகுத்த நூல்)
 • தொழிலாளர் துயரமும் உலக நெருக்கடியும்.
 • கடவுளும் பிரபஞ்சமும்
 • விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்.
 • மனித உற்பவம்
 • தத்துவமும் வாழ்வும்
 • வாழ்வு உயர வழி
 • விஞ்ஞானமும் வாழ்வும்.

மாமேதை பற்றி இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்

1975: தோழர்கள் கே .முருகேசன், சி.எஸ் .சுப்ரமணியம் "தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு ம. சிங்காரவேலு'

2009: தோழர் ம. சிங்காரவேலர், 150ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர். "சிந்தனைச்சிற்பி ம. சிங்காரவேலரின் சமூகச் சிந்தனையும் பன்முக ஆளுமையும்' சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் அறக்கட்டளை.

1985: சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், "சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் வீரவாழ்க்கை'

2006: "சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்) வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' சென்னை.

2008: சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரரைப் பயில்வோம்' சு. பொ. அகத்தியலிங்கம்.

2006: சிங்காரவேலரும் பகுத்தறிவும் - நெ.து. சுந்தர வடிவேலு.

2008: நினைக்கப்படவேண்டிய வர்க்கப் போராளி சிங்காரவேலர் - தொகுப்பு முத்தையா வெள்ளையன்

2010: மயிலையும் ஈரோடும் - அசோகா சுப்ரமணியன்

2014: சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை பா.வீரமணி

2018: அயோத்திதாசரும் சிங்காரவேலரும் - நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்  வெளிவராத விவாதங்கள், ஸ்டாலின் ராஜாங்கம்.

2008: சமதருமப் புரட்சியாளர் சிந்தனை முத்துகள் - அசோகா சுப்பிரமணியன்

2008 : தொழிலாளர் வழிகாட்டி சிங்காரவேலர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சமுக சேவை இயக்கம்.

2002 : இந்தியத் தொழிலாளர்களின் தந்தை மாமேதை ம. சிங்காரவேலர், பொ. வசந்தகுமாரன்

2008: சிங்காரவேலர், புலவர் பா .வீரமணி, திராவிட ப் பல்கலைக்கழகம், ஆந்திரா.

2009: சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும் பா.வீரமணி

2011: சிங்காரவேலரின் தத்துவப் பார்வை பா. வீரமணி

- முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி

Pin It