அண்மைக் காலத் தமிழ்க் கல்விப்புலச் சூழலில் திறனாய்வுக் கோட்பாடுகள் சார்ந்த வாசிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கல்விப் புலத்தில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கின்ற வாசிப்புத் தேக்கம் அவர்களது சிந்தனையை, ஆய்வு மனப்பான்மையை நிர்மூலமாக்கியிருக்கிறது. மரபிலக்கியங்கள் (தொல்காப்பியம் தொடங்கிச் சிற்றிலக்கியக் காலம் வரை) மீது எந்தவிதமான கேள்வியையும் விமர்சனங்களையும் முன்வைக்கக் கூடாது என்று ஒருவிதமான புனிதத் தன்மையையும் கற்பிதத்தையும் வைத்திருக்கிறவர்களிடையே திறனாய்வு, கோட்பாடுகள் சார்ந்து எப்படி உரையாடுவது? சமகால இலக்கியங்களை அறிந்து கொள்ள முயற்சிக்காத ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்களின் நிலை? மேலைக் கோட்பாடுகளின் வழி தமிழிலக்கிய இலக்கணங்களை மறுவாசிப்பு செய்வது பொருத்தமானதா? மரபையும் நவீனத்தையும் எப்படி இணைத்துப் பார்க்க முடியும்? நவீன இலக்கியங்கள் தமிழின் மரபையும் பண்பாட்டையும் சீர் குலைத்து, நுகர்வுக் கலாச்சாரத்தை முன்வைக்கிறதா? கோட்பாட்டுப் பார்வை என்ற புரிதலில் அனைத்தையும் எதிர் கேள்விக்குட்படுத்துவது, புனிதக் கற்பிதங்களை உடைத்தெறிய முற்படுவது, அதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவது போன்ற நடவடிக்கைகளை நடைமுறையில் எப்படிச் சாத்தியப்படுத்துவது?
இப்படியாகத் தொடரும் எண்ணற்ற கேள்விகள் கல்விப்புலங்களுக்குள் ஊடாடி வருகிறது. இதற்கு மாற்று என்ன? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பா.இரவிக்குமார் அவர்களின் நெறியாளுகையில் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தும் ஆய்வு மாணவர் இரா.வீரமணி அவர்கள் “வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு” (தமிழில் நவீனத் திறனாய்வுக் கோட்பாட்டு வாசிப்பு) என்ற நூலை சமீபத்தில் டிஸ்கவரி புத்தக நிலையத்தின் மூலமாக வெளியிட்டிருக்கிறார். இந்நூலிற்கு, தமிழ்ச் சூழலில் ஆகச் சிறந்த திறனாய்வுப் பங்களிப்புகளை நிகழ்த்திய பேரா.க.பஞ்சாங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார். அதேபோல், நவீன இலக்கிய வாசிப்பில் ஆழங்கால்பட்ட பேரா. பா.இரவிக்குமார், ‘தமிழ் அறிவுலகின் தற்கால அடையாளம்’ எனும் தலைப்பில் நூலாசிரியரின் ஆய்வு நெறியாளராக இருந்தாலும் சமன்செய்யும் துலாக்கோல்போல நின்று நூலின் நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டி நேர்த்தியானதொரு அணிந்துரையை வழங்கியிருக்கிறார். அந்தவகையில், ஆக்கப்பூர்வமான கோட்பாட்டு வாசிப்பினை முன்வைக்கும் இந்த நூல் மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடித்தரும் நோக்கில் அமைந்துள்ளதை முதற்கண் சொல்லியாக வேண்டும்.
தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி வரலாற்று நூல்கள் தோன்றிய அளவிற்குத் திறனாய்வு வரலாறு சார்ந்து நூல்கள் பெரிதும் வெளிவரவில்லை. இருபதாம் நூற்றாண்டின் செம்பாதியில் விமர்சனம், திறனாய்வு போன்ற சொற்கள் புழக்கத்திற்கு வந்திருந்தாலும், வெகுகாலத்திற்குப் பிறகுதான் அதன் செயல்வடிவங்களான படைப்பை விமர்சித்தல், திறனாய்வு செய்தல் ஆகிய செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக நிகழ்ந்திருக்கின்றன என்ற கருத்தைத் ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாற்று நூல்கள்: தேடல்களும் புரிதல்களும்’ என்ற தமது முதற் கட்டுரையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
இதனைத் தொடர்ந்து, முனைவர் க.பஞ்சாங்கத்தின் ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு’ (1990), முனைவர் க. பூரணச்சந்திரனின் ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு’ (2007), முனைவர் ம. மதியழகனின் ‘தமிழாய்வு – திறனாய்வு வரலாறு’ (2009) ஆகிய மூன்று நூல்களை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதன் உள்ளடக்கச் செய்திகள் குறித்து விரிவான ஓர் உரையாடல் கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று திறனாய்வு வரலாற்று நூல்களுமே கல்விப்புலம் சார்ந்தவர்களால் எழுதப்பட்டுள்ளது என்பதை முன்வைக்கிறார். தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு இக்கால நவீன இலக்கியத்திலிருந்து தொடங்குகிறது என்பதை மூவருமே குறிப்பிடுகின்றனர் என்ற செய்தியைத் திறனாய்வு வரலாற்று நூல்களின் வரவும் காலப்பின்புலமும் என்ற பகுதியில் விவரிக்கிறார். திறனாய்வு வரலாற்று நூல்களை எழுதுவதில் உள்ள சிக்கல்கள், தரவு சேகரிப்பில் போதாமை, சிற்றிதழ் வட்டாரத்தின் முக்கியத்துவம், நூலாசிரியர்கள் பயன்படுத்திய ஆய்வு முறைமையியல், திறனாய்வு வரலாற்று விவரிப்புமுறைமையில் மூவரிடையே உள்ள வேறுபாடு, க.பஞ்சாங்கம், ம.மதியழகன் ஆகிய இருவரும் க.பூரணச்சந்திரனின் நூல் பற்றிக் குறிப்பிடாமை, உள்ளடக்கப் பொருண்மையில் வளர்ச்சி, திறனாய்வு வரலாற்று ஆவணப்பதிவுகள், திறனாய்வு வரலாற்று நூல்களின் எதிர்காலத் தேவைகள் குறித்து இக்கட்டுரை காத்திரமாகப் பேசுகிறது.
சமகால இலக்கியங்களை மேலைக்கோட்பாட்டு ரீதிய திறனாய்வு அணுகுமுறைகளைத் தொடர்புபடுத்தி வாசிப்பதை அண்மைக்காலச் செயல்பாடாகப் பார்க்கிறோம். தொடர்ந்து வாசிக்கின்ற நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள ஆசிரியர்களால் மாணவர்களுக்கு திறனாய்வுப் பார்வை அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. இன்றைய வாழ்வு நவீன இலக்கியங்களில் புனைவாக்கம் செய்யப்படுகிறது. நவீன இலக்கிய வடிவங்கள் ஆங்கில ஆட்சியில் வழங்கப்பட்ட கல்வியின் தாக்கத்தாலும் மேற்குலக நாடுகளின் இலக்கியப் போக்கை உள்வாங்கி எழுந்தவை. ஆங்கிலேயக் காலனியாதிக்கம் நீக்கமாகியிருப்பினும் மக்கள் வாழ்வியலையும் மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் அச்சிந்தனை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்ற நூலாசிரியரின் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது. இதனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களுக்கும் திறனாய்வுச் செல்நெறிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதைத் தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுச் செல்நெறிகளும் பண்பாட்டு மாற்றப் பின்புலங்களும் என்ற கட்டுரையில் விவரிக்கிறார்.
தமிழில் இதுவரை நடைபெற்ற திறனாய்வுகளுள் மார்க்சியத் திறனாய்வு அணுகுமுறைகளே அதிகம் என்று திறனாய்வு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்பு இருந்த திறனாய்வு முறைகள் ஒரு படைப்பின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் மட்டுமே அணுகியிருப்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டி மார்க்சியத் திறனாய்வின் நிலைபேற்றையும் அதன் பின்னடைவு பற்றியும் கட்டுரையில் விவாதிக்கிறார். மார்க்சியத்திற்குப் பிறகு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்பட்டபோது, பின்னமைப்பியல், பின்காலனித்துவத் தாக்கத்தால் தலித்தியம், பெண்ணியம், சூழலியப் பெண்ணியம், திருநர், திருநங்கை சார்ந்த இலக்கியத்தைத் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகும்முறை மேலெழுந்த சூழலை நூலாசிரியர் தகுந்த தரவுகளுடன் விளக்கியிருப்பது இந்தக் கட்டுரையின் பலமாகக் கருதுகிறேன்.
இந்திய வரலாற்றில் தத்துவப் பின்புலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பௌத்தமும் உலகளாவியத் தத்துவப் பின்புலத்தில் கோலோச்சிய, கோலோச்சி வருகின்ற மார்க்சியமும் எவ்வாறு பொருள்முதல்வாதச் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்பட்டன என்பதை விவாதிக்கும் நோக்கில் ‘பௌத்த – மார்க்சியப் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் : சில ஒப்பீடுகள்’ என்ற கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தத்துவத்தை எவ்வாறு பொருள் விளங்கிக் கொள்வது, கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றிய விளக்கம், பொருள்முதல்வாதம் வேறுபடும் தன்மை, வேத மறுப்பை முன்னிறுத்தி எழுந்த பௌத்தம், புத்தர் காலத்தில் நிலவிய வர்க்கச் சமுதாயம், பொது உடைமை, தனிமனித அதிகார நீக்கம், பரிபூரண எளிமை ஆகிய இலக்குகள் வழி கட்டமைக்கப்பட்டப் பௌத்தத்தின் ‘சங்கம்’ என்ற நிறுவன உருவாக்கம் பற்றி விவரிக்கும் அதேவேளையில், மார்க்சியச் சித்தாந்த முன்னோடிகளான லுட்விக் பாயர்பாக், வில்லியம்ஹெகல் ஆகிய பொருள்முதல்வாதச் சிந்தனைவாதிகளின் கருத்துகள், மார்க்சியப் பொருள்முதல்வாதச் சிந்தனைக் கட்டமைப்பு, பௌத்தமும் மார்க்சியமும் ஒத்திருக்கும் புள்ளிகள், வேறுபடும் புள்ளிகள் குறித்தும் பொருள்முதல்வாதச் சிந்தனையின் சமகாலத் தேவை குறித்தும் வாசகர்களிடையே பெரும் விவாத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை.
பண்டைத் தமிழ்ச் சமூகம் இனக்குழுவிலிருந்து (தாய்வழிச் சமூகம்) விடுபட்டு முடியாட்சி நோக்கி வளர்ச்சி பெற்று உடைமைச் சமூகமாக (தந்தைவழிச் சமூகம்) மாறியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் வழி அறிகிறோம். உடைமைச் சமூகத்திற்கு எதிராக வைக்கப்பெற்ற முற்போக்குச் சிந்தனையாக நிலையாமையைப் பார்க்க முடிகிறது. இதனை அடியொற்றி அமைந்த தொடக்க கால அற இலக்கியங்களில் வலியுறுத்தப்பட்ட ‘நிலையாமை’ குறித்த சிந்தனை சைவ, வைணவப் பேரியக்கங்கள் தமிழ் மண்ணில் வலுப்பெற்றப் பின் பல நூற்றாண்டுகள் கடந்து மீண்டும் வலியுறுத்தப்படும் போக்கினைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, சைவ மரபிலிருந்து கிளம்பிய தமிழ்ச் சித்தர் மரபு இதனைக் கைக்கொண்டது என்கிறார் நூலாசிரியர். மேலும் சித்தர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் சமூக அமைப்பில் இருந்த பொருளாதாரப் படிநிலைகள், சாதியப் பாகுபாடுகள், ஆண் – பெண் பேதங்கள் இருந்தன என்பதைக் கட்டுரையின்வழி நிறுவமுயல்கிறார். இதற்கு, சித்தர்கள் வெளிப்படையாகப் பாடித் தமது எதிர்ப்பை நிலைநாட்டிய சூழல் இருந்தமை சான்றுகளுடன் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கருத்தியலின் பின்னணியில் பட்டினத்தாரின் அருட் புலம்பல் (117 பாடல்கள்), நெஞ்சொடு புலம்பல் (37 பாடல்கள்) ஆகிய இரு புலம்பல் பாடல் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையாமை குறித்து சமூகவியல் திறனாய்வு நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது. பட்டினத்தாரின் இருப்பு சமூகநிலை, புலம்பல் பாடல்களில் வெளிப்படும் தத்துவச் சார்பு, நிலையாமை, சமூகச் சமநிலை நோக்கிய விழைவு, அற நூல்களில் சொல்லப்படும் நிலையாமை கருத்தியலிலிருந்து பட்டினத்தார் வேறுபடும் இடத்தையும் அவரது தனித்தன்மையையும் சுட்டிக்காட்டி அவரது பாடல்கள் பன்முகக் கோணங்களில் ஆய்தற்குரியவை என்பதை முன்வைத்து நூலாசிரியர் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 1986-இல் நெல்லை வானொலிக்காக எழுதி ஒலிபரப்பப்பட்ட ‘முரண்பாடுகள்’, 1997-இல் சிறார்களுக்காக எழுதிய ‘ராஜா வீட்டுக் கல்யாணத்துக்குப் பூசணிக்காய்’ ஆகிய இரண்டு நாடகங்களில் இழையோடும் பின்காலனித்துவக் கூறுகள் குறித்து மற்றொரு கட்டுரை நூலாசிரியரால் ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. மங்கம்மாவின் மூத்த மகளான பி.ஏ. இலக்கியம் படித்த புஷ்பா முரண்பாடுகள் நாடகத்தின் தலைமைக் கதாபாத்திரம். தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை, கிராமப் பொருளாதாரப் பின்னடைவு, வறுமை, வரதட்சணைக் கொடுமை, இயந்திரப் பெருக்கம், நலத்திட்டம் என்ற பெயரில் நிலவும் போலித்தனம், பெருமுதலாளித்துவ நுழைவிற்கு அரசின் ஆதரவு, கிராமத்துப் பெண்களின் நிலை, கிராமத்து வாழ்வில் முன்னேற்றமின்மை, ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து விடுபடும் பெண்கள், காலனியாதிக்கத்தின் நுண்ணரசியல், முன்னேற்றம் என்பதன் அரசியல் புரிதல் போன்றவை நாடகப் பிரதியின் உள்ளடக்கத்திலிருந்து கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. ராஜா வீட்டுக் கல்யாணத்துக்குப் பூசணிக்காய் என்ற நாடகமும் விவசாயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதை அறிகிறோம். அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் போக்கும் அதிகாரத்திற்கெதிராகக் குரலெழுப்பும் போக்கும் இந்நாடகத்தில் வெளிப்பட்டிருப்பதை நூலாசிரியர் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கி.ரா. நாடகத்திற்குள் வெளிப்படும் சமூக, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பின்காலனித்துவக் கூறுகளைக் கடந்து, ஒடுக்கப்படுவோர் சார்புநிலைப்பட்ட கதைப்போக்கைக் கைக்கொள்வதும் இக்கட்டுரையின் மூலம் புலனாகிறது என்ற நூலாசிரியரின் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
‘தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங்காலைக் கிழத்திக் கில்லை’ என்ற தொல்காப்பிய நூற்பாவை மறுவாசிப்பாக எடுத்துக் கொண்டு ‘தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் கிழத்திக்கு உண்டு’ என்ற மீள்பார்வையில் அ. வெண்ணிலாவின் ‘இந்திர நீலம்’ சிறுகதைத் தொகுப்பில் இந்திர நீலம் (ஆண்டாள்), சிலம்பின் ரகசியம் (கண்ணகி), அட்சயப்பாத்திரத்தின் பசி (மணிமேகலை), என்புதோல் உயிர் (காரைக்காலம்மையார்) ஆகிய கதைகளின் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டாள், கண்ணகி, மணிமேகலை, காரைக்காலம்மையார் போன்ற இலக்கியப் பரப்பில் பேசப்படும் பெண்களையும் தர்மத்தின் ஆகுதி (திரௌபதி), கண்ணனிடமிருந்து வெளியேறாத கோபியர்கள் (பிருந்தாவனத்தில் வாழும் பெண்கள்) ஆகிய கதைகளின் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள திரௌபதி, பிருந்தாவனக் கோபியர்கள் போன்ற புராணம் வழி அறியப்படும் பெண்களையும் நித்ய சுமங்கலி (நக்கன்) என்ற கதையின் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள தேவரடியார் வழிவந்த பெண்ணையும் விலக்கப்பட்ட கனி கதையின் பின்புலத்தில் இடம்பெறும் இயேசுவிடம் உரையாடும் தாசியையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள எட்டு கதைகளைப் பெண்மொழி நோக்கில் ஆராய்ந்து இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். எழுத்தில் கிளர்ந்தெழும் பெண்மொழி, மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்தும் பெண்மொழி, காதல் x காமம் என்கிற எதிர்நிலைகள், கணவன் x மனைவி: எதிரெதிர் அவாவும் உறவு நிலை எனும் தலைப்புகளில் விரிவாக விவாதித்து சமூகப் போக்கில் ஆணாதிக்க மனநிலைக்கு எதிராக, கலகக் குரலாகப் பெரும் உடைப்பை ஏற்படுத்துமளவிற்கு வலிமை வாய்ந்ததாக அ.வெண்ணிலாவின் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன என்று சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழ்ச் சூழலில் புலம்பெயர்வு இலக்கியங்கள் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிச் சமகாலம் வரையிலும் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் நிகழும் புலப்பெயர்வு விருப்பத்தின் பேரில் நிகழ்வதென்பதும் அரசியல் நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, போர் காரணங்களால் வெளியேற்றப்படும் புலப்பெயர்வு கட்டாயத்தின் பேரில் நிகழ்வதென்பதும் வெளிப்படை. இப்பொருண்மை சார்ந்து புலம்பெயர் இலக்கியங்கள் ஆக்கம் பெறுவது காலத்தின் தேவையாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு புலம்பெயர் இலக்கியங்கள் அடைந்திருக்கின்ற உச்சம், அதன் எதிர்காலப் போக்கு, புலம்பெயர் இலக்கியத்தின் முக்கியத்துவம் போன்றவை குறித்து நூலாசிரியர் ‘தமிழ்ச் சூழலில் புலம்பெயர் இலக்கியத் திறனாய்வின் தேவையும் வரவும்’ என்ற கட்டுரையில் விவாதிக்கிறார். புலம்பெயர்வு – புகலிடப்பெயர்வு குறித்தப் பொருள் விளக்கம், தமிழில் புலம்பெயர் இலக்கியம் தோன்றுவதற்கான காலப் பின்னணி, தமிழ்ப் புலம்பெயர் இலக்கியப் படைப்பாளர்களும் படைப்புகளும், புலம்பெயர் கவிதை, சிறுகதை, நாவலாக்க முயற்சிகள், படைப்பாளர்கள், தமிழில் புலம்பெயர் இலக்கியம் குறித்த உரையாடல்கள், தமிழில் புலம்பெயர்வு இலக்கியத் திறனாய்வு – தோற்றப் பின்புலம், புலம்பெயர் இலக்கியத் திறனாய்வு செய்தனவும் செய்ய வேண்டியனவும் குறித்துக் காத்திரமாக நூலாசிரியர் கட்டுரையில் விவாதித்திருப்பது கவனத்திற்குரியதாகும்.
இன்றைய நவீனத் தமிழ் வாழ்வியல் பண்டைத் திணை மரபின் தொடர்ச்சிதான் என்கிற பார்வை பொருத்தமானதா? உலகளவில் பேசு பொருளாக இருக்கும் சூழலியல் திறனாய்வின் வகிபாகம் தற்காலத் தமிழ்ச் சூழலில் என்ன? என்ற கேள்விகளோடு ‘தமிழில் திணைக் கோட்பாடும் சூழலியல் திறனாய்வும் : மரபும் நவீனமும் நிகழ்த்தும் வாழ்வியல் ஊடாட்டங்கள்’ கட்டுரையை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். திணைக்கோட்பாடு – சில சூழலியப் புரிதல்கள், நிலத்தைப் பெயரிடுதலின் நுண்ணரசியல், திணைக்கால, தற்கால உணவு முறை, பண்டைத் திணைச் சமூகம் இயற்கையைத் தன்னிலையிலிருந்து விலக்கியதா?, தமிழும் சூழலியல் திறனாய்வும், சூழலியப் பெண்ணியம், பண்பாட்டுச் சூழலியல், நாட்டுப்புறவியல் நோக்கில் திணைக்கோட்பாடும் சூழலியலும், சூழலியல் பார்வையில் மீள்வாசிப்புக்குள்ளாகும் ஆளுமைகளும் கருத்தாக்கங்களும் எனும் பொருண்மையில் விவாதிக்கின்ற இக்கட்டுரை நம்முன்னே பல கேள்விகளையும் ஆய்வின் தேவைகளையும் விட்டுச் செல்கின்றன.
நிறைவாக, இந்நூலின் பொருண்மைகளில் காணலாகும் தனித்தன்மைகள் குறித்துச் சுருக்கமாக இங்கு உணர்ந்துகொள்ளலாம். தமிழில் திறனாய்வு வரலாற்றை விவரிக்கும் மூன்று நூல்களை அறிமுகம் செய்து, அதன் உள்ளடக்கங்கள் குறித்த காத்திரமான விவாதங்கள், பண்பாட்டு மாற்றப் பின்புலங்களுக்கு ஏற்பப் புதிய திறனாய்வு முறைகள் உருவான விதம், மார்க்சியம், சமூகவியல், பின்காலனித்துவம், பெண்ணியம், புலம்பெயரியம், சூழலியம் ஆகிய திறனாய்வு முறைமைகளைக் கோட்பாட்டுப் பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள எட்டு நீள் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆய்விற்கு எடுத்துக் கொண்ட பொருண்மை குறித்த அறிமுகம், கருதுகோள், வினாக்கள், திறனாய்வு அணுகுமுறை, ஒப்பீடு, பொருண்மையை ஒட்டிய பிற அறிஞர்களின் கருத்துகள், சான்றாதாரங்கள், தமது கருத்தை நிலைநாட்டல், எதிர்காலத்தேவை, மதிப்பீடு என அனைத்துக் கட்டுரைகளும் நேர்த்தியான ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன. தமிழில் வெளிவந்துள்ள ஆகச் சிறந்த திறனாய்வு, ஆய்வு நூல்கள், இதழ்கள், ஆய்வேடுகள், அகராதிகள் சான்றாதாரங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்களிடையே இந்நூல் பரவலாகப் போய்ச் சேரவேண்டும். ஓர் ஆய்வாளர் கட்டுரை எழுதுவதற்கு எவ்வளவு நூல்களை வாசிக்க வேண்டும், அதை எவ்வாறு ஒரு கோர்வையாக ஆய்வுப் பின்புலத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்குச் சான்றாக இந்நூலைக் குறிப்பிடலாம். ஒட்டுமொத்தத்தில், தமிழ்ச் சமூகம் வரவேற்கத் தகுந்த ஒரு தேர்ந்த கோட்பாட்டாய்வு நூலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு
இரா. வீரமணி / டிஸ்கவரி வெளியீடு / விலை : ரூ. 200/-
- முனைவர் பி. பாலசுப்பிரமணியன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை – 600 030