திணைக்கோட்பாடு எனும் கருத்தாக்கம் தொல்காப்பியம் தொடங்கித் தமிழ் மரபு நெடுகிலும் இலக்கிய வாசிப்பு, ஆக்க நெறியாகப் புலங்கிவருவதைப் பார்க்க முடிகிறது. இக்கோட்பாட்டுச் சிந்தனைக்கு அடிப்படைக் கருவிகளாக (Tool) அமைவன முதல், கரு, உரி எனும் முப்பொருட்களே ஆகும். நிகழ்வொன்று நடப்பதற்கான இடம், காலம், உலகியல் பொருட்கள், நிகழ்வின் மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான வடிவமாகத் திணையியல் சிந்தனை அமைகின்றது. இக்கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்துத் தமிழ் இலக்கியங்கள் வாசிக்கப்பட்டும் இயற்றப்பட்டும் வந்தன என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் திணை இலக்கியங்களாகவே கருதப்படுகின்றன. அவற்றினுள்ளும் தொல்காப்பியச் சிந்தனையை மீறிய படைப்புகளும் உத்திமுறைகளும் உள்ளன என்பதை அம்மன்கிளி முருகதாஸ், மாதையன் உள்ளிட்டோர் ஆராய்ந்து உரைத்துள்ளனர். எவ்வாறாயினும் சங்க இலக்கியங்களின் பொதுப்போக்காகத் திணையியல் சிந்தனை கால்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது.

இத்திணையியல் சிந்தனை, கோட்பாடாக வடிவெடுத்ததன்வழித் தமிழில் பிற்கால இலக்கியங்களையும், பிறமொழி இலக்கியங்களையும் அதன்மூலம் விளக்கமுடியும் என்பதைத் தமிழவன், அய்யப்பப் பணிக்கர், ஜவகர், ஜமாலன், சண்முகம் உள்ளிட்டோர் செய்து காட்டினர். முப்பொருள் வினைநிகழ்வோடு அகம், புறம் எனும் சிந்தனையையும் இவர்களின் ஆய்வுகள் மையமிட்டன. தமிழண்ணல் ஆய்வுகளும் மரபார்ந்த பார்வையில் நவீனத்தை வலியுறுத்தின என்பதையும் இவ்விடம் சுட்டுதல் பொருத்தமுடைத்து. இவை நவீன ஆய்வுகள் எனும் தளத்தில் அமைய, உரையாசிரியர்கள், இலக்கணிகள் வசமும் திணைக் குறித்தான கருத்தாக்கம் விரிவடைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. இந்நிகழ்வு வரலாற்றுக் காலந்தோறும் எவ்விதம் வாசிக்கப்பெற்றும் விளக்கப்பெற்றும் வந்துள்ளது என்பதை ஜவகரின் ‘திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்’ எனும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே, திணைவிரிவாக்கச் சிந்தனை குறித்து அதிகம் விளக்காமல் கட்டுரைக்குள் நுழையலாம். இந்நிலையில், சமஸ்கிருதத் தொகை நூலான சுபாசித ரத்னகோசாவிலுள்ள ‘இலையுதிர்காலப் பாடல்களைத்’ (Autumn) (விரிவாக்கப்பட்ட) திணைக்கோட்பாட்டுப் பின்னணியில் இக்கட்டுரை விளக்க முயல்கிறது.

இலையுதிர்காலப் பாடல்கள்

சுபாசித ரத்னகோசாவில் இலையுதிர் காலத்திற்குரியதாக 22 பாடல்கள் உள்ளன. இவற்றுள் மனோவினோதா 6 பாடல்களையும் (268-74) சுபாங்கா இரண்டு பாடல்களையும் பாஷா, விசாகதத்தா, அபிநந்தா, ஸ்ரீ கமலாயுதா, சதானந்தா, மதுஷீலா, திம்போகா, யோகேஸ்வரா, வாகுரா ஆகியோர் தலா ஒரு பாடலும் எழுதியுள்ளனர். மேலும், பெயர் தெரியாத புலவர்கள் பாடியதாக ஏழு பாடல்களும் உள்ளன. “இலையுதிர் காலம் கரும்பு விளைந்து அறுவடை செய்வதற்கான பருவகாலத்தையும் (282, 291), நெல்லுக்குத் தொடக்க காலமாக இருத்தலையும் (285, 287, 291), அறுவடைக்கான பருவம் நெருங்கி வரும் வேளையில் காட்டு விலங்குகளை விரட்டிப் பயிர்களைப் பாதுகாக்க வேளாண்குடி மக்கள் வயல் இடைவெளிகளில் உயர்ந்த பரண்களைக் கட்டியிருத்தலையும் (285), கிராமங்களில் புல்வெளி பசுமையாகச் செழித்திருத்தலும் அதில் கால்நடைகள் மேய்தலையும் (279), நீரோடைகள் வற்றிச் சுருங்கி அதன் இருப்பிடத்திற்கே திரும்பி விடுதலையும் (268, 288, 289), வெள்ளம் வடிந்ததன் அடையாளமாகக் கரைகளில் அதன் தடம் தெரிவதையும் (283, 290), தண்ணீர் வற்றும்போது நீரோடைகளில் ஆங்காங்கே மணல் திட்டுகள் உயர்ந்து எழுந்திருத்தலையும் (268, 278, 289), அம்மணல் திட்டில் வெண்மையான மார்புப்பகுதியும் கருத்த வால்சிறகுகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான வாலாட்டிக் குருவிகள் (Wagtails (Khanjarita) அடைந்திருத்தலையும்; ஓடைத் தண்ணீரில் நீரல்லிகள் மீண்டும் பூத்திருக்க அவற்றின் அரும்புகளில் காட்டுக் கோழிகளுக்கான சுவைத்துகள்கள் பரவியிருப்பதையும் (284)” இப்பாடல்கள் உணர்த்துவதாக இங்கல்ஸ் (1965:136) குறிப்பிடுகிறார். இந்தச் செய்திகளே இலையுதிர்க்காலப் பாடல்களின் மையமாக அமைகின்றன. இப்பாடல்களில் இயற்கையை மட்டும் மையப்படுத்தாமல் அதன் ஊடுபாவாக அக உணர்வு இருப்பதையும் உணரவியலும். இவ்வுணர்நிலையைத் தமிழ்த் திணைக்கோட்பாடு வழங்குகிறது. இப்பாடல்களில் காதல் ஊடுபாவாக இருப்பது இங்கல்ஸ் குறிப்பிடாதது.

திணைக்கோட்பாடும் இலையுதிர் காலமும்

ஒவ்வொரு திணைக்குமான பொழுதுகளை வரையறுக்கும் தொல்காப்பியம், மலையும் அதுசார்ந்த வெளியுமான நிலத்திற்கு உரிய பொழுதுகளாக, ‘… குறிஞ்சி கூதிர் யாமம்; பனியெதிர்ப் பருவமும் உரித்தென மொழிப’ என்று குறிப்பிட்டுள்ளது. கூதிர் காலம் என்பது இன்றைய நிலையில் ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களாகும். சமஸ்கிருத இலையுதிர்காலப் பாடல்களும் இந்தக் காலத்தை மையமாகக் கொண்டே அமைகின்றன. திணைக்கு உரிய பொருளைத் தொல்காப்பியம் குறிப்பிட்டிருந்தாலும் இன்ன திணைக்கு இதுதான் உரி என்பதைக் குறிப்பிடவில்லை. அதைச் சங்கப் பாடல்களின்வழியும் பிற்கால இலக்கண நூல்கள், உரைகளின்வழியும் அதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில், குறிஞ்சித் திணைக்கான உரிப்பொருளைக் குறிப்பிடும் நச்சினார்க்கினியர் அதற்கான விளக்கத்தைப் பின்வருமாறு அளிக்கிறார்.

“இருள்தூங்கித் துளிர்மிகுதலின் சேறல் அரிதாகலானும் பானாட் கங்குலின் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலின் காமக்குறிப்புக் கழியப் பொருதலானும் காவல்மிகுதி நோக்காதுவரும் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம் பெருகுதலின் இந்நிலத்துக்குக் கூதிர்க்காலம் சிறந்தது எனப்படும்” (துரைசாமிப்பிள்ளை. எ.மே.1957:499)

இக்குறிப்பின்வழிக் குறிஞ்சி எனும் திணைக்கு மனித அகவய உணர்வுகளில் / செயல்பாடுகளில் ஒன்றான புணர்தல் என்பது இதன் உரியாக அமைவதைக் காணமுடிகிறது. திணைவிரிவாக்கச் சிந்தனைப் பின்புலத்தில் சமஸ்கிருதக் கவிதைகளை அணுகுமிடத்து அவற்றிற்குத் தமிழ்த் தன்மையிலான வாசிப்பை அளிக்க முடியும்.

கூதிர்காலமும் முன்பனிக்காலமும் குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகளாகவும் யாமம் / நள்ளிரவு என்பது சிறுபொழுதாகவும் மலையும் அதுசார்ந்த வெளியை நிலமாகவும் கொண்டு அமையும் குறிஞ்சித் திணைப் பின்புலத்திலும் தளர்வுகளுடன்கூடிய திணையியல் சிந்தனையிலும் சமஸ்கிருதக் கவிதைகளை இவ்விடம் விளக்குவது பொருத்தமுடையதாக அமையும்.

குறிஞ்சியும் புணர்தல் நிமித்தமும்

புணர்தலும் அதன் நிமித்தமும் குறிஞ்சிக்கு உரிப்பொருளென முன்னர் குறிப்பிடப்பட்டது. அதை; ‘பல்பூம் பகத்தழை நுடங்கு மல்குற் றிருமணி புரையு மேனி மடவோள் யார்மகள் கொல்லிவ டந்தை வாழியர்’ (நற்.8), ‘காந்த ளூதிய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பின் முரலும் வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே’ (நற்.17) இப்பாடல்கள்வழி அறியலாம். இதே தன்மையிலமையும் சமஸ்கிருதப் பாடல்களை ஈண்டு பொருத்திக் காட்டுவது இன்றியமையாததாகும்.

“இரவின் முடிவு மகிழ்ச்சிகரமானது

மலர்கள் பூத்து நிறைந்த மரங்களுடன்

வெண்மையாய் இரவில் பூத்துமலரும்

வளர்ந்த இதழ் அல்லிவட்ட மல்லிகளும்

இப்போது நிலத்தருகே கரைந்தமிழ்கின்றன

தென்றலில் சிலிர்த்தாடும் இதழ்விரிந்த நீரல்லிகள்

மண்ணெல்லாம் வாசம் வீசும் வசத்தில்

மகிழ் நெடுங்கூரலகு உள்ளான் குருகு

உடன் ஒரு பண்ணுடன் திடீர்ப்பாடலில்” (271)

இந்தப் பாடலின் அடிக்கருத்தாக மகிழ்வு என்பதை அடையாளப்படுத்தவியலும். இந்த மகிழ்வு குறிஞ்சியுடன் தொடர்புடையது. மலர்கள் பூத்து மலர்தல் என்பது வளமையின் குறியீடு. அதன்வழித் தென்றலில் நீரல்லிகளின் இதழ்விரி வாசத்தில் பண்ணோடு இணைந்து குருகு ஆடுதல் என்பது புணர்ச்சிக் குறிப்பின் வெளிப்பாடகக் கொள்ள வாய்ப்புள்ளது.

இப்பாடலில் சிறுபொழுதாக இரவும் கருப்பொருள் செயல்பாடுகளாக மலர்தல், வாசம் வீசுதல், தென்றல் தவழ்தல் உள்ளிட்ட சூழல்கள் புணர்ச்சிக்குரிய அமைப்பை வலியுறுத்தும் வண்ணம் அமைகின்றன. இவ்விடத்தில் குருகு என்பதைத் தலைவன், தலைவிக்குப் பதிலியாகப் பொருத்திக் காண்பது கவிதை வாசிப்புக்கு ஏதுவாக அமையும். அன்றியும் மனித நீக்கம் செய்து இயற்கைச் செயல்பாடெனக் கொள்வதிலும் சிக்கல் எழாதெனலாம். திணைவிரிவாக்கத்தை வலியுறுத்தும் அய்யப்பப் பணிக்கர் ‘படைப்புருவாக்க மனநிலை (Mental Landscape) குறித்தும் விவரிக்கிறார்.’ அதை மேலும் விரிவாக்கும் நிலையில், “... இவ்வாய்வு படைப்பாக்கத்தின் அடிப்படைக் கூறுகளையும், படைப்புருவாக்க மன அமைப்புக் கூறுகளையும் உள்ளடக்கி முழுமைபெற்ற நிலையில் திணைக்கோட்பாட்டை வடிவமைக்கிறது. ஏனெனில் முதல், கருப் பொருட்கள் மட்டுமே படைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதில்லை. படைப்பின் இயல்புத்தன்மை, படைப்பின் வடிவம், படைப்பாக்க உத்திகள், படைப்புருவாக்க மன அமைப்பு, கவித்துவம் மிக்க கூறுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்தே கவிதையை, செய்யுளை, படைப்பை உருவாக்குகின்றன. அந்த அடிப்படையில் நிலம், காலம், சமூகச் சூழலோடு படைப்பாக்கக் கூறுகளும் படைப்பாளியின் மன அமைப்பும் இணைந்தே உரிப்பொருளாக்கம், படைப்பின் அடிக்கருத்து, படைப்பு தோற்றம் கொள்கிறது”(2017:61-2) எனும் ஜவகரின் கருத்தின்வழி இக்கவிதையை அதன் அர்த்தத் தளங்களை உள்வாங்கிக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. எனவே, இக்கவிதையின் படைப்புருவாக்க மனநிலை புணர்ச்சிக் குறிப்பினைப் புலப்படுத்துகிறது எனலாம். அதற்கு விரிவாக்கப்பட்ட திணையியல் பார்வை அடிப்படைகளை உருவாக்கித் தருகிறது. இப்பார்வையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கவிதைகளை விளக்கலாம்.

“மகரந்தம் அறி தேனீக்கள்

நீரல்லிகளின் மாயவட்டத்தில் காதல் வசீகரம்

ரீங்காரவாய் முணுமுணுக்கும் பூசாரிகளாய்

அடுத்து, கர்வக்காதலரை வென்ற வெற்றியில்

தேன் குடிக்க அங்கு

அவர்கள் மந்திர ஒலி அதீதக்கிளர்ச்சி அமளியாய்” (272)

இக்கவிதையின் பொருட்தளம் குறியீட்டு நிலையில் இயங்குகிறது. தேனீயைத் தலைவனுக்கும் மலர் என்பது தலைவிக்கும் குறியீடாகின்றன. மகரந்தச் சேர்க்கைக்கான வெளியாக இக்கவிதையின் பொருட்தளம் விரிகிறது. எனவே புணர்ச்சிச் செயல்பாடு இக்கவிதையின் உரிப்பொருளாவதை அடையாளப் படுத்தவியலும். இந்நிலையில் இதையும் குறிஞ்சித் திணையில் வைத்து வாசிக்கலாம். இதேபோல;

“… தன் இணையருகில், ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கும் பெடையின் கொண்டாட்டக் கண்ணீரில் நீந்தும் கண்கள்” (274), எங்கும் சந்த இனிமைபரவ ரீங்கரிக்கும் வண்டுகள் (275), “பனிபடர்ந்த மலைகளைப் போல வெளிரித் திரண்டிருக்கும் முகில் முலைகள். வெளிநாட்டிலிருக்கும் ஒரு கணவனின் மனைவிபோல் இலையுதிர் காலம்” (277), “… காட்டுவாத்துகள் கேவிக்கரையுமவை எழுப்பும் ஒலியொரு மந்தகார இனிமை” (284) ஆகியன உரிப்பொருள் தளத்திலும் புணர்ச்சிக் குறிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் அமையும் கவிதைகளாக உள்ளன. இதுவன்றி, “வேளாண்குடிகள் அமைத்த பரண்கள்; விளைச்சலைத் தின்னவரும் காட்டுப்பன்றிகளை விரட்ட”(285), “இலையுதிர் காலம் உவந்தளிக்கும் விளைநெல் புனம் காக்கும் பெண்ணுக்கு”(287) ஆகியன தினைப்புனம் காத்தல் எனும் செயல்பாட்டின்வழிக் குறிஞ்சித் திணையோடு பொருத்தமுடையதாகிறது.

“முருகிமுற்றி உலர்கிறது சேறு

ஏழையொருவன் உல்லாசிக்க

ஒரு தொடுப்புப்பெண் போல”                            (276)

எனும் இக்கவிதை ‘செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே’ எனும் குறுந்தொகை 41 -ஆவது பாடலை நினைவுபடுத்துவதாக அமைகிறது. உவமைநிலையில் ஒத்துள்ள இப்பாடல் உரிப்பொருள் நிலையில் வேறுபட்டுள்ளது. இதேபோல், “… கார்வண்ணன் நிற வான் …” (283) எனும் உவமை தமிழோடு நெருங்கிய நிலையில் காணப்படுகிறது. “நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு ... நீர் செல நிமிர்ந்த மாஅல் போல” (முல்லை.1-3) இதுபோன்று பலவிடங்களிலும் ஒப்புமையைக் காணமுடியும். இந்நிலையில் இலையுதிர்காலப் பாடல்கள் எனும் இப்பகுப்பில் ஆறு கவிதைகள் உரிப்பொருள் தளத்தில் (புணர்தலும் அதன் நிமித்தமும்) இணைந்த நிலையில் காணப்படுகின்றன. பின்வரும் பகுதிகளில் உரிப்பொருள் நிலையில் பிறழ்ந்து முதல்பொருள், கருப்பொருள் நிகழ்வின்வழிக் குறிஞ்சியாவதை விளக்கலாம்.

உரிப்பொருள் விரிவாக்கப் பின்னணியில் இலையுதிர்காலப் பாடல்கள்

‘தேருங்காலை திணைக்குரிப் பொருளே’ எனும் சிந்தனையின்வழி ஏற்கனவே தொல்காப்பியம் வரையறுத்திருக்கிற உரிப்பொருட்களைக் கடந்து இலக்கியத்திற்கு உரிய பொருளைப் படைப்பாளர், வாசகர் தெரிவுசெய்ய இயலும் என்ற கருத்திற்கு வரலாம். அதாவது பிற்கால, பிறமொழி இலக்கியங்களின் பாடுபொருள் தொல்காப்பியம் வரையறையில் அடங்கவில்லை எனில் அதனைச் சற்று விரிவாக்கித் திணையுள் அடக்கலாம் என்பது திணைவிரிவாக்கச் சிந்தனையின் அடிப்படையாகும். பின்வரும் பாடல்களுக்கான உரிப்பொருளை அதன் இயங்குதளத்திலிருந்து விளக்குவது அவசியமாகிறது.

“நெடுநேரம் பருந்து விழிகூர் கீழ் நோக்கில்,

இருபுறமும் தலையைத் திருப்புகிறது

சிறகின் வலிமையால் மெல்ல வளைந்து

வட்டங்கள் வரைகிறது வானில்,

பிறகு வேகமாக, சாய்வாக, திறன் வாய்ந்த வகையில்

இரைமேல் வீழ்ந்து எதிர்பாரா வகையில்

ஒளிரும் அலகாலும் கால் நகத்தாலும் தாக்குகிறது.” (273)

இந்தப் பாடலின் உரிப்பொருள் என்பதைத் தொல்காப்பியம்வழி விளக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்நிலையிலேயே திணைவிரிவாக்கத்தின் தேவையை அறிய முடிகிறது. இந்தப் பாடலின் உரிப்பொருளை, ‘இரைமேல் வீழ்ந்து எதிர்பாரா வகையில் ஒளிரும் அலகாலும் கால் நகத்தாலும் தாக்குகிறது’ எனும் வரிகளே புலப்படுத்துகின்றன. அதாவது, வேட்டை அல்லது இரையைத் தாக்கி அழித்தல் எனும் செயல்பாடே உரிய பொருளாய் அமைகிறது. இதற்கான முதல், கருப்பொருட்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதால் திணையை வரையறுப்பதிலும் சிக்கல் உள்ளது. இருப்பினும் இப்பாடல் இலையுதிர்காலம் எனும் பகுப்பில் உள்ளமையால் குறிஞ்சித் திணையில் அமைந்த வேட்டையை உரியாகக் கொண்ட பாடல் இதுவென அடையாளப்படுத்த முடியும்.

“இரண்டு விடயங்களுக்காய் அரசவை

 வந்த பிராமணர்கள் பெருங்கவலையில்:

செல்வந்தனிடமிருந்து ஈமச்சடங்குச்

சங்கதிகளைப் பெறுவது எவ்வாறு?

சேற்றுப்பாதையில் தங்கள் கூடாரம்

திரும்புவது எப்படி?”     (292)

இப்பாடல் தமிழில் இல்லாத ஒன்றாகும். குறிப்பிட்ட சமூகத்தாரின் வாழ்வியலைப் பேசுவதாக அமையும் இதில் இயற்கையும் இணைக்கப்படுகிறது. அதாவது, மழைபெய்த பின் உண்டாகும் சேற்றில் செல்ல கவலைகொள்ளல் என்பதே ஈண்டு முக்கியமாகப்படுகிறது. இக்கவிதை மாந்தராக எச்சமூகத்தவரைக் குறிப்பிட்டாலும் அதன் பாடுபொருண்மை நோக்கம் பருவத்தை மையமிட்டமைந்ததே என்பது புலனாகும். சான்றாக; முருகிமுற்றி உலர்கிறது சேறு (276), திறந்து கிடக்கும் சேற்றுத் துளைகள் புலிகளின் தடித்த கால் சுவடுகளுடன் (281), சேறு அப்பிய கிளைகள் குளியலுக்குப் பின் தேய்த்த வாசனைக் கழிம்பென (283), அரசவாத்துகளின் அலைவுத்தடங்களோடு சேறு (289) ஆகியவற்றைச் சொல்லலாம். இப்பாடல்களின் நோக்கம் பருவமாற்றத்தின் இயற்கை நிகழ்வுகளைச் சுட்டுவதே ஆகும்.

இயற்கையின் அழகைப் புகழ்ந்துபாடும் கருத்தாக்கம் சமஸ்கிருதக் கவிதைகளில் மேலோங்கியுள்ளதைப் பார்க்கமுடிகிறது. ‘நிலம் எனும் இயற்கை வெளி, திணை எனும் கருத்தாக்கத்தின்வழிப் பண்பாட்டு வெளியாக உருவெடுக்கிறது’(2018:267-74) என்கிறார் இ.முத்தையா. மேலும், ‘மனிதர்கள், கட்டற்ற இயற்கை வெளியைப் பெயர்சூட்டித் தன் நினைவடுக்குகளில் வைத்துக்கொண்டதன் மூலம் நிலத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டனர்’(மேலது.395-99) என்கிறார் பஞ்சாங்கம். இக்கருத்துகளின்வழித் திணை உருவாக்கப் பின்புலத்தை அறிந்துகொள்ள இயலும். இந்நிலையிலேயே சங்கப் பாடல்களும் தொல்காப்பியச் சிந்தனைகளும் அமைந்துள்ளன. அதாவது, மனித உணர்வுகளை மையமிட்டமையும் உரிப்பொருட்களைப் பாடுதல் என்பதாகவே சங்கக் கவிதைகள் அமைகின்றன. அதன்வழி இயற்கையும் மனிதனும் வேறல்ல எனும் நிலைக்கு மாற்றமடைந்து மனித உணர்வுகளை இயற்கையோடு ஏற்றிக்கூறும் தன்மையில் அமைகிறது. முன்னர் சுட்டிய படைப்புருவாக்க மனநிலை என்பதை மனித உணர்வுகளுக்குள் அடக்கி அர்த்தப்படுத்துதல் என்னும் ஜவகரின் கருத்தை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இந்நிலையில் இயற்கை நிகழ்வுகளைத் தன் போக்கிலேயே பதிவுசெய்து மனிதத் தன்னிலைகளை நீக்கம் செய்த பிரதிகளாக இருக்கும் சமஸ்கிருதக் கவிதைகளை அர்த்தப்படுத்த தமிழின் விரிவாக்கப்பட்ட திணையியல் சிந்தனை வாய்ப்பளிக்கிறது.

“மெதுமெதுவாய் அமைதியில் வளர்கிறது வானம்

சொர்க்கத்தின் குறுக்கில் ஓடும் ஆற்றைப்போல.

மணற்கரையாக வெள்ளை மேகங்கள்

ஒழுங்குசிதறிப் பறக்கும் மென்கேவல் நாரைகள்

நீரல்லி நட்சத்திரங்களோடு இரவில்

நிறைந் தோடும் ஆறுகள்”      (278)

இப்பாடலின் முதற்பொருள் யாமம் எனும் சிறுபொழுது. உரிப்பொருளாக இயற்கையின் அழகைப் புகழ்தல் அல்லது போற்றல் என்பது அமைகிறது. அன்றி மனிதவயப்படுத்தலுக்கான இடம் இப்பாடலில் இல்லை. எனவே, இப்பாடல் முதற்பொருள் அடிப்படையில் குறிஞ்சித் திணையாகவும் உரிப்பொருள் அடிப்படையில் இயற்கையைப் போற்றுதல் என்பதாகவும் அமைகிறது. தமிழில் இயற்கையைப் போற்றுவது என்பது உரிப்பொருளாக அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த விரிவைத் திணைக்கோட்பாடு அளிக்கிறது. இதே பண்பிலான பாடல்களின் உரிப்பொருளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும். “ஆறுகளில் இப்போது வாலாட்டிக் குருவிகளிடும் நீர்க்கோடுகளின் அணிவரிசை” (268), “புன்னகை தவழக் களமளிக்கும் இரவு முழுமதியைச் சொர்க்கத்தின் முற்றத்தில் ஆக்குகிறது” (269), “ஆற்றின் நீர்ச்சுழல் சுழியலைகள் அழகுப் பெண்ணின் அணிமணிகொள் கணுக்கால் கொலுசுகளாய்”(270), “… அல்லிக்குவளை … குளத்து நீரில் கிளர்த்திப் பரவிவீசும் இனிய நறுமணம்” (280), “திறந்துகிடக்கும் சேற்றுத் துளைகள் புலியின் தடித்த கால் சுவடுகளுடன், கண்ணாடியெனக் கறுத்து இதமாய் ஓடும் நீர்” (281), “ஆற்றங்கரையில் நல்ல சேற்றுமண் மந்தைமேய்ப்பனைக் கதிரவன் காயாது குளிரூட்டலில்” (282), “கார்வண்ணன் நிற வான் கீழ் காட்டுவாத்துகள் கடல் சிப்பிபோல் என்ன ஓர் அழகு” (283), “சிறுமிகள் துள்ளல் கொண்டாட்டம் காற்றில் பறக்கும் பருத்திப்பஞ்சுகளை அலங்காரப் பொம்மைக் கூட்டம் ஆக்கமுடிந்ததில்”(286), “நகைத்தோடும் நீரில் சிறுமீன்கூட்டம் மீன்கொத்தி அலகருகே ஆபத்தெனும் பயத்தில்”(288), “அரசவாத்துகளின் அலைவுத் தடங்களோடு சேறு”(289), “கிளைகளில் செத்துத் தொங்கும் பாசிகள் அருமைபெருமை பறைசாற்றும் அண்மையில் வடிந்த வெள்ளத்தை”(290), “நாட்கள் இனிக்கின்றன நன்கு முற்றிய கரும்பால்”(291) ஆகிய பாடல்களில் இயற்கையழகைப் போற்றிப்பாடுதல் எனும் உரிப்பொருளையே அடையாளப்படுத்த முடிகிறது.

இப்பாடல்களின் பொதுப்போக்காகப் பெரும்பொழுதை அடையாளப்படுத்தும் வேளையில் சிறுபொழுதும் யாமமாகவே வருவதைக் காணமுடிகிறது. இந்த இடத்தில் தான் ஸிக்பிரடு லீன்ஹார்டின், ‘முக்தகப் (தனிப்பாடல்) பாடல்கள் தமிழ் அகமரபை அடிப்படையாகக் கொண்டவையே. குறிப்பாகத் திணையமைப்பில் விவரிக்கப்படும் உரிப்பொருள் பண்பு சமஸ்கிருத முக்தகப் பாடல்களிலும் காணப்படுகிறது. பெயர் சுட்டா மரபும் தமிழ் அகமரபிற்கே உரியது. இவை சமஸ்கிருத மரபில் இல்லாததாகும். எனவே, தொல்காப்பியமே முக்தகப் பாடல்களைக் கற்க ஏதுவான தரவுத்தளம்’ (2022:19-30) எனும் கருத்தை நினைவுகொள்ள வேண்டியதன் அவசியம் புலப்படுகிறது. இலையுதிர்காலத்தில் பாடப்படும் பாடல்களின் சிறுபொழுதாக வேறெந்த பொழுதுகளும் அமையாமல் ‘யாமமே’ அமைவது தமிழ்க் குறிஞ்சித் திணைக்கு மிகநெருங்கிய நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. ஆனாலும், நிலம் என்பது திணையியல் சிந்தனையில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிஞ்சித் திணைக்கான நிலமாகத் தொல்காப்பியம் மைவரை உலகமாகிய மலையும் அது சார்ந்த பகுதியுயையும் குறிப்பிடுகிறது. சமஸ்கிருதக் கவிதைகளில் மலைநிலத்திற்கான குறிப்புகள் இல்லை. காரணம், பாலாவின் அரசாட்சியில் (Pala Empire) நிலவிய நிலமானிய சமூக அமைப்பில் இவற்றின் பெரும்பாலான பாடல்கள் தோற்றம் பெற்றுள்ளதால் மலை எனும் நிலம் ஒழிந்து நாடு எனும் வெளியைப் பெற்றுள்ளன.

தமிழ், சமஸ்கிருத இலக்கியங்கள் இயற்கையை அணுகும் பண்பு என்பது இருவேறு நிலையினது எனும் வாசு.அரங்கநாதன், ‘உள்ளுறை உவமமாக இயற்கையை விவரிக்கும் பாங்கு தமிழைப்போல் சமஸ்கிருதத்தில் அமையப்பெறவில்லை என்றும் உவமைகளின்வழி மெய்ப்பாடுகளை அறியமுடியும் என்றும் ஆந்தையின் அலறல் என்பது அச்சம் எனும் மெய்ப்பாட்டை உணர்த்துவதாய் அமைகிறது என்றும் சொல்கிறார். மேலும், அதுகுறித்து கருத்துரைக்கும் அவர் சமஸ்கிருதத்தில் உவமைவழி மெய்யபாட்டை அறியமுடியாது என்றும் தமிழில் மெய்ப்பாட்டியலை அடுத்து உவமையியல் அமைந்திருப்பது இதை விளக்கவே’ (2023:413-28) என்றும் கருத்துரைக்கிறார். இயற்கையை மையமாகக் கொண்டிருக்கும் இப்பாடல்கள் சிலவற்றில் தமிழின் தன்மையைக் காணமுடிகிறது. அதேநேரத்தில் அரங்கநாதன் குறிப்பிடுவதுபோல சமஸ்கிருதப் பாடல்கள் தனித்தும் உள்ளன. எனவே, இவை இரண்டும் வேறுபட்ட இலக்கிய மரபுகளாக இருப்பினும் இவற்றிற்கிடையில் ஒத்துள்ளதும் தனித்ததுமான பண்புக் கூறுகளை அடையாளப்படுத்த இயலும். அதற்குத் தமிழின் விரிவாக்கப்பட்ட திணைக்கோட்பாடு உதவுகிறது.

முடிவுரை

திணையியல் சிந்தனை முப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. குறிஞ்சி எனும் திணை கூதிர், முன்பனி ஆகிய பெரும்பொழுதுகளையும் யாமம் எனும் சிறுபொழுதையும் அடிப்படையாகக் கொண்டது. இக்காலப் பின்னணியில் அமையும் சமஸ்கிருதப் பாடல்கள் சிறுபொழுது எனும் தளத்திலும் மனித உணர்வுகள் (புணர்தலும் அதன் நிமித்தமும்) எனும் தளத்திலும் ஒத்துக் காணப்படுகின்றன. உரிப்பொருள் எனும் தளத்தில் வேட்டையாடல், இயற்கையைப் போற்றிப் பாடல் எனும் இருநிலையில் விரிவாக்கம் கொள்கின்றன. அவ்வாறு விரிவாக்கம் கொள்ளும் பாடல்களின் முதல் பொருளான காலம் (பெரு, சிறு பொழுதுகள்) குறிஞ்சித் திணையோடு ஒத்த நிலையிலேயே உள்ளன. நிலம் எனும் நிலையில் மாறுபட்டு அமைகின்றன. இவற்றை விரிவாக்கப்பட்ட திணைக்கோட்பாட்டு வாசிப்பு சாத்தியப்படுத்துகிறது. இலக்கிய வாசிப்பு முறையாக / விளக்க முறையாக ஒரு பனுவல் வாசிப்பு மாதிரியை இக்கட்டுரையின்வழி அடையாளப்படுத்தலாம். அன்றி ஜார்ஜ் எல்.ஹார்ட், ஸிக்பிரடு லீன்ஹார்டு, ப.மருதநாயகம் உள்ளிட்டோரின் ஆய்வுகள் அடிப்படையில் சமூகப் பின்னணியோடு இலக்கியவியலை இணைப்பது அடுத்த நிலையாகக்கொள்ள முடியும்.

துணைநின்றவை

Ingalls H.H. Daniel., (Edit. & Trans.). (1965). An Anthology of Sanskrit Court Poetry – Vidyakara’s Subhasitaratnakosa. Cambridge: Harvard University Press.

இராசாராம். சு., பெருமாள். அ.கா., (ப.ஆ)., (2023). தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவுகள். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்

இராமர். சு., (தொ.ஆ.), (2018). திணைக்கோட்பாடும் தமிழாய்வுச் சூழல்களும். மதுரை: பிறழ் வெளியீடு.

கணேசையர்., (ப.ஆ.), (1948). தொல்காப்பியம் பொருளதிகாரம் முன் ஐந்தியல்களும் நச்சினார்க்கினியமும். சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்.

கமலக்கண்ணன். பு., (தொ. & மொ.ஆ.). (2022). அகப்பொருளும் சமஸ்கிருத முக்தகப் பாடல்களும் - லீன்ஹார்டு ஸிக்பிரிட். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

துரைசாமிப்பிள்ளை, சு, ஔவை., (உ.ஆ), (1957). ஐங்குறுநூறு மூலமும் விளக்க உரையும் 2 -ஆவது தொகுதி. அண்ணாமலைநகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

பாலாஜி, க., (உ.ஆ.), (2024), நற்றிணை உரைவேறுபாடு (2 தொகுதிகள்). சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

மனோகரன். ந., (மொ.பெ.)., (2013). இந்திய இலக்கியக் கோட்பாடுகள் சூழலும் பொறுத்தமும் - அய்யப்ப பணிக்கர். சென்னை: மாற்று வெளியீடு.

ஜவகர். க., (இ.ப.2017). திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும். சென்னை: காவ்யா வெளியீடு.

- கா.விக்னேஷ், முனைவர்பட்ட ஆய்வாளர், சிறப்புநிலைத் தமிழ்த்துறை, ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.