சிறுகதை எனக்கு எழுதத் தெரியும் என்றே எனக்குத் தெரியாது என்று வெள்ளந்தியாகப் பேசும் கரிசல் படைப்பாளி மேலாண்மை பொன்னுசாமி அவர்கள்.  கரிசல் இலக்கியத்திற்கு கி.ரா முன்னத்தி ஏர் என்றால் இவரைப் போன்றவர்கள் அவரைப் பின்பற்றி வந்தவர்கள் எனலாம். வட்டார வழக்குகளின் வழி மண்ணின் மணமும் மக்களின் மனமும் மொழி வளமும் புலப்படுகிறது.. வெள்ளந்தியான மனசும், பாடுபடும் சிந்தனையும், சக மக்களின் மீதான பரிவும் இருந்தால் மட்டுமே அவன் எழுத்தாளானாக பரிணமிக்கமுடியும் என்பதை தனது எழுத்துகளின் மூலம் நிரூபணம் செய்துள்ளார்.

23 சிறுகதைத் தொகுப்புகள் (இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்), 6 புதினங்கள், 6 குறும் புதினங்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு என 36 படைப்பு களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளார். தான் எழுத வந்த சூழலைச் சொல்லும்போது இப்படி சொல் கிறார் என்னுடைய பதினொரு வயதில் தமது தந்தையை (செல்லச்சாமி)  இழந்த இழப்பின் காரணமாக அவருக்குள் இருந்த வலி. Òஅப்போது ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.

படிப்பை இடையில் நிறுத்த வேண்டிய சூழல். எல்லோருக்கும் அது சம்பவம் எனக்கோ அது வலி.Ó வயித்துப் பாட்டுக்காகவும் குடும்பச் சுமையைப் போக்கவும் அந்த வயதில் தான் நடத்தி வந்த சிறு பெட்டிக் கடையையும் பார்த்துக்கொண்டு படித்ததில் வகுப்பில் முதல் தர மாணவனாக இருந்துள்ளார். படிப்பை இடையில் நிறுத்தியதால் ஏற்பட்ட காயத்தை மாற்ற அதி தீவிரமாக புத்தகங்களை வாசித்துள்ளார். வாசிப்பு என்பது வெறி; நிரந்தர வாசிப்பு;  வயதை மீறிய வாசிப்பு, இறுதித் தேர்வு எழுதும் மாணவனைப் போன்றே வாசிப்பு எனத் தேடி தேடி புத்தகங்களை வாசிப்பதின் வழி தனது வலியை ஆற்றிக்கொண்டவர்.

வாசிப்பு ஒரு எழுத்தாளனுக்கு உணர்வைப் போன்றது மட்டுமல்ல. உயிரைப்போன்றது என்கிறார். முழுக்க முழுக்க புத்தகங்களால் கட்டமைக்கப்பட்டவர். புத்தகங்கள் உயிரை வளர்ப்பது, அனுபவங்களை வளர்ப்பது என்கிறார். நூலகங்களே கல்விச்சாலைகளாக்கின மேலாண்மையாரை. வாசிப்பு ஒரு கிராமத்து மனிதனை, கிராமமே உலகம் என வாழ்ந்த மனிதனை உலகமே வியக்கச் செய்தது என்றால் அதற்குக் காரணம் வாசிப்பு என்பதை உணர்த்தியுள்ளார்.

அன்னபாக்கியன், அன்னபாக்கியச் செல்வன், ஆமார் நாட்டான் என்ற புனைபெயர்களில் எழுதியவர். முதன்முதலில் மர்ம நாவல்களையும் பின்பு அகிலன், சாண்டில்யன், மு.வா., ஜெக சிற்பியன் போன்றோரின் வரலாற்று நாவல்களை வாசித்தவர். பின்பு பொது வுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சோவியத் இலக்கியங்களை வாசித்து பொதுவுடைமைச் சித்தாந்தங் களைத் தமது படைப்பாக்கங்களில் கொண்டுபோவதற்கு ஜெயகாந்தனின் Ôயுகசக்திÕ சிறுகதைத் தொகுப்பு உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

1970, 80 களில் அதிக வாக்கியங்கள், குழப்பமான வாக்கியங்கள் என எழுதியவர் 80களுக்குப் பிறகு எழுத்து நடையில் மாற்றம், எளிய சொல்லாடல்கள், அழகு, எளிமை எனத் தமது மொழிநடையை  சிறுகதையின் வளர்ச்சிக்காக மாற்றிகொண்டவர். செம்மலர், சிகரம், விழிப்பு போன்ற பொதுவுடைமைக் கருத்தாக்கம் கொண்ட இதழ்களுக்கு எழுதியவர் தினமணிகதிர், குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதினார். வெகுஜன பத்திரிகைகளில் எழுதுவதெல்லாம் இலக்கியம் அல்ல எனும் விமரிசனம் வரும்போது அவரே செல்கிறார். ”இலக்கியங்களே பிரச்சாரக் கருவிகள்தான்”. ”புராணக் கதைகளைப் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில்  இதிகாசங்களும், சைவ, வைண வத்தைக் கொண்டுசெல்லும் நோக்கில் பக்தி இலக்கியங்களும், சமண, பௌத்த மதக் கருத்துக்களைக் கொண்டு செல்லும் நோக்கில் காப்பியங்களும் இருந்தன. கரிசல் மக்களின் வாழ்வியல், சமூக நீதி, சமூகக் கருத்தாக்கம், கிராமத்து மாந்தர்கள், கறுத்த மனிதர்கள், உறங்கும் போதும் கூட வேர்வையுடன் கூடிய மனிதர்களின் விடியலை பரந்து விரிந்து கிடக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க எழுதினேன்.  இது நான், என் எழுதும் எழுத்தின் மீது வைத்திருக்கும் கருத்து நம்பிக்கையாகும்.

எனது மக்களின் பாடுகளைச் சொல்வதற்கு ஊடகம் தேவைப்பட்டது. அதற்குத் தேவைப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்கிறார். திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் தங்களது படைப்புகள் யாவையும் அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் பிரச்சாரக் கருவிகளாக இலக்கியத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். பிரச்சாரத் தொனி இருக்கலாம். பிரச்சார நெடி இருக்கக்கூடாது என்கிறார். நாசிகளை வருடும் வாசம் இருக்கலாம் மனத்தை முகம் சுளிக்கிற நெடியாக இருக்கக்கூடாது இதுவே எனது பிரச்சாரத்தின் நோக்கம் என்கிறார்.

பிழைப்புக்காக தஞ்சாவூர் சென்றார். தான் சந்தித்த விவசாயி, விவசாயம் செழிக்க உரம் வாங்க பணமில்லாமல் பரிசுச் சீட்டைக் கிழித்து கிழித்து இருந்த பணத்தையும் இழந்த மனநிலையை வைத்து கதை எழுதினார். அதுதான் 1972 இல் செம்மலர் இதழில் வெளிவந்த ‘பரிசு’ எனும் சிறுகதை. இதுவே இவர் எழுதிய முதல் சிறுகதையாகும். தமது எண்ணத்தை முதன் முதலில் அச்சாக்கத்தில் பார்த்தவுடன் அவர் கண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. அதுதான் அவருக்கு நம்மாலும் சிறுகதை எழுத முடியும் என்பதை உணர்த்தி யிருக்கிறது. அதற்குப் பிறகு தொடர்ந்து ஜனரஞ்சக பத்திரிகைகளில் எழுதி வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பரிசு, பாரத மாநில வங்கியின் இலக்கிய பரிசு, தமிழ்நாடு அரசின் இலக்கிய பரிசு, 1985 இல் ஜனரஞ்சனியில் இளைஞர் சிறுகதைப் போட்டியில் அன்னபாக்கியன் எனும் புனைபெயரில் எழுதிய ‘சுயரூபம்’ எனும் கதை முதல் பரிசு பெற்றது. கல்கி சிறுகதை போட்டி பரிசு, ஆனந்த விகடன் பவழ ஆண்டில் முத்திரை பரிசு இவையாவும் அவர் எழுத்துக்குக் கிடைத்த மரியாதையாகும்.

2007 இல் ‘மின்சாரப் பூ’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி பரிசு எனப் பல பரிசு களைப் பெற்றிருக்கிறார். கிராமத்து எழுத்தாளருக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் இந்த விருது கிடைத்தது. இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. விருதைத் தேர்வு செய்யும் குழுவிற்கு எனது நூல்கள் எதையும் நான் அனுப்பவில்லை, யார் அனுப்பியது என்பதும் எனக்குத் தெரியாது. எனத் தனக்குக் கிடைத்த விருது குறித்துத் தினமணி நிருபரிடம் கூறியுள்ளார். ‘இந்த உயரிய விருது நான் சிறிதும் எதிர்பாராதது. இப்போது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. இந்த விருதை கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய இலக்கிய வெளிப் பாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்Õ என்கிறார்.

கல்கியில் வெளிவந்த ‘ஆகாயச் சிறகுகள்’ கதையில் கம்யூனிஷ்ட் கட்சியைச் சேர்ந்தவராக மாரிச்சாமி எனும் கதாபாத்திரம். ஜனநாயக மாதர்  சங்கத் தலைவி பிரேமா எனக் கதாபாத்திரங்களைப் படைத்து தமது பொது வுடைமைச் சித்தாந்தங்களைப் பதிவுசெய்துள்ளார். ஊரைக் கூட்டி சாதி சனம் அழைத்து தாய்மாமன் சீர்செனத்தி யோடு தன் மகளுக்குத் தாவணி போட வேண்டும் எனும் தாயின் கனவு, தன்னுடைய கிழிந்த சேலையை இரண்டாகக் கிழித்து தாவணி போட்டு தீப்பெட்டி ஆலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயச் சூழல். குழந்தைத் தொழிலாளர் நிலையைப் போக்கவேண்டும் என்ற சூழலில் எழுதிய கதை. குடும்ப வறுமை ஒரு பக்கம், விவசாயம் வறண்டு போக, தீப்பெட்டி ஆலையும் பட்டாசு ஆலையுமே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் நிலைப்பாடு, சிவகாசிக்கும் மேலாண் மறை நாட்டிற்கும் காலை, இரவு என நேரம் பார்த்து தான் பேருந்துகள் இருக்கும் நிலையில் தூர ஊரான மதுரைக்குப் போய் திரும்பும் மக்கள், தங்கள் ஊரின் பேருந்து கணக்குப் பார்த்து வந்துவிடுவார்கள். பேருந்து எடுக்கும் ஓட்டுநர் மதுரை பேருந்து வரும் நேரம் என்றால் அதைப் பார்த்துவிட்டுத்தான் பேருந்தை இயக்குவார். அப்படிப்பட்ட ஓட்டுநரின் மனித நேயத்தையும் கிடைக்கும் போதெல்லாம் மேடைகளில் சொல்ல மறக்காத மாந்த நேயப் படைப்பாளி. அவரது கதைகளை வாசிக்கும் போது ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர்பெறுகிறது. 

அம்மா அய்யாவுக்கு வாங்கி வந்த தின்பண்டங் களை எடுத்துக் கொடுக்கும் போது தான் வாங்கி வந்த பழங்களையும் சேர்த்துக் கொடுக்கிறாள் பரமு. Òஅம்மா கேட்பாள் இந்த பழமெல்லாம் யாருக்குமா? எனும் போது மகள் சொல்வாள் ஏன்மா நாமெல்லாம் பழம் சாப்பிடக்கூடாதா”. இது பழங்களை வைத்து வர்க்கத்தை அறிந்துகொள்ளச் செய்கிறது. உயிரில் விழுந்து உணர்வில் கலந்த கதைதான் “மௌனக் கேள்வி” எனும் கதை.

Òதலைமுடியிலிருந்து வரிவரியாய் கசிந்து நெளிந்து வருகிற வியர்வைக் கோடுகள்” என உழைப்பாளியின் வியர்வையையும், சமுத்திரம் வத்துனாலும் சம்சாரி பிச்சை கேட்டு கையேந்தமாட்டான்.” என சம்சாரியின் சுயமரியாதையும், குருசாமி கதாபாத்திரத்தின் வழி வியாபார குணத்தையும் மனித குணத்தையும் வெளிப் படுத்துவது Òசீனிக்கொய்யா” கதை. ஆட்டு வியாபாரியின் மொழியைப் பதிவுசெய்வது ‘மனித மனசு’ எனும் கதை. “எளைச்சு எலும்பான மாடு கசாப்புக் கடைக்கு வருமா? என்று  நினைக்கிற மமதை வந்தால் சாதி, சாதி என்று அறுத்துக் கூறுகட்டி வித்துவிட நினைப்பு” நீயானு ஆளு, நானானும் ஆளு. எதுக்கு பட்சம், நீயானு பத்து மாசம், நானானு பத்து மாசம், நாமள்ளாம் சகாக்கள்னு” சொல்ற கேரளத்து மனிதர்களை வைத்து சமத்துவ பண்பாடு, சுயமரியாதை இவற்றை சமுத்திரம் வழியாகக் காட்டியுள்ளார். 

Òஉள்ளூர்ல வெலை போகாத வேர்வையை வித்துப் பிழைக்க அயலூர்களுல அலைந்து சீரழியுறதுதான் தலையெழுத்தான பிறகு. மேல்சாதி, கீழ்சாதி என்ன இருக்கு? எல்லாம் வேர்வை சாதிதான்.” Òமூத்தவுகளை Ôஅண்ணாச்சி’ம்பாக, இளையவுகளா இருந்தா ‘தம்பி’ம்பாக. நீ பேசாம என்னை அண்ணாச்சின்னே கூப்பிடுÓ Òஎல்லோரையும் சமத்துவமா அண்ணாச்சினு கூப்புடலாம். நா என்னெ மனுசனா மதிக்கலாம். மனுசனா என்னை மத்தவுக மதிக்கறதை நான் அனுபவிக்கனும்” சீனிப் பலகாரம் கிடைத்த ஏழைப்பிள்ளை மாதிரி ருசித்து, ருசித்து, ஒரு ரசனையுடன் சொன்னான். Òசம்முகம் (சண்முகம்) கதாபாத்திரத்தை வைத்து “சித்தாள் சாதி” (2012) எனும் கதையில் சமத்துவத்தைப் படைத்துள்ளார்.

” மின்சார மோட்டார் மூலம் நீர் பாய்ச்சினால் பயிருக்கு ஆபத்து எனக் கருதும் அப்பாவி பரமசிவம். குடும்பம், வெள்ளாமை இதைத் தவிர சிந்திக்கத் தெரியாத கிராமத்து மனுசனின் கதை தான் “உயிர்நிலம்”. வெள்ளாமை இல்லாமல் வறுமைக்குத் தள்ளப் பட்டு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் மானத்துக்குக் கட்டுப்பட்டு உயிரைப்போக்கிய விவசாயி களின் நிலைப்பாட்டைச் சித்திரிக்கிறது. முற்றுகை, அச்சமே நகரம், ஆகாயச் சிறகுகள் போன்ற புதினங் களைப் பெண்ணியத்தைச் சித்திரித்தாலும், குடும்ப அமைப்பு உடைபடாத பெண்ணியத்தையே இவர் ஆதரித்துள்ளார். பொருளாதாரத்தாலும் சமூகத்தாலும் நசுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை மீட்பது,,  தொழிலாளி - முதலாளி, ஆண்டான் -  அடிமையை மாற்றுவது,  நிலமற்றவர்களின் நிலை, விளிம்பு நிலை மாந்தர்கள், விவசாயிகளின் நிலை ஆகியவற்றைத் தமது எண்ணங்களோடு பிரதிபலிக்கச் செய்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பைத் தாண்டாதவரின் எழுத்துக்கள் எல்லாம் பட்டத்திற்குரியதாகி பல்கலைக் கழகங்களிலும் கல்லுரிகளிலும் படிக்கிறவர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. “சிபிகள்” சிறுகதைத் தொகுப்பு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும், Òபாட்டையா” சிறுகதை பன்னிரண்டாம் வகுப்பிற்குத் துணைப்பாட மாகவும் வைத்து படைப்பாளிக்குப் பெருமை சேர்த் துள்ளன. சப்போட்டா, நிலக்கடலை, கொய்யா வியாபாரிகளையும், சீமைக்கருவேலம், நாட்டுக் கருவேலம், வேப்பமரங்களும், அவர் பிறந்து வாழ்ந்த தனது கிராமமான மேலாண்மறைநாடு (விருதுநகர் மாவட்டம்) மக்கள் சார்ந்தும் அதைச் சுற்றியுள்ள ஆலங்குளம், திருவேங்கடம், திருவில்லிபுத்தூர், எட்டக்காப்பட்டி, குறிஞ்சாக்குளம், புதுப்பட்டி, என அனைத்து கிராமங்களையும் கதைக்குள் அடக்கியவர். அகத்தி, ஆமணக்கு, பருத்தி, மிளகாய், கம்பு, சீமைப்புல், சவுண்டல் கொழை, போன்றவற்றையும், அருவாள், துரட்டி, கோடாரி போன்ற கருவிகள், ஏர்க்கலப்பை, டிராக்டர், சோத்தாங்கைப் பக்கம் (வலப்பக்கம்) நொட்டாங்கைப் பக்கம் (இடப்பக்கம்) ‘கூனை’ (நீர்ப்பாசன விவசாயத்திற்குப் பயன்படும் கருவி) இவையெல்லாம் இனிவரும் சந்ததியினருக்கு அகராதி கொண்டும், காட்சிப் படுத்தியும் தான் விளக்கமுடியும். அனால் படைப்பாளி தான் குருதியில் கலந்த உணர்வாக மண்ணின் மணம் மாறாது மக்களின் மனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

மண்ணின் மணம் மறையவில்லை. மழை பொழியும் போதெல்லாம் மணம் வீசும். அதுபோல அவரின் படைப்புகளை வாசிக்கும் போதெல்லாம் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் நெஞ்சின் நினைவலைகள்.

Pin It