23. உழைப்பவர் அரசு தழைத்திட வேண்டும்
 
சந்தையில் புரளும் பணமுத லீடு
எந்திர கதியில் வினைஞரைச் சுரண்டும்
முடங்கிய மூல தனமோ வினைஞரை
இடறி வேலை யின்மையில் வீழ்த்தும்
சந்தை உற்பத்தி முறையை ஏற்றிடின்
முழுமுதல் பங்கை முதலே கொள்ளும்
உழுதூண் உழவரும் பழுதிலா வினைஞரும்
சிந்திச் சிதறும் மிச்சமே பெறுவர்
சந்தையின் இயக்கம் குதறிய பின்னும்
விந்தையில வினைஞர் வாழ்வைத் தொடர்வது
அனைத்து உயிரின் இயல்பைப் போலவே
மனிதன் என்பவன் மாற்றம் தருபவன்
வாழ்விற் கொவ்வா சந்தையை ஒழித்து
கீழ்மைத் தரத்து முதலிகள் நாண
உழைப்பவர் அரசை நிலையாய் நிறுத்தி
தழைக்கச் செய்வது வினைஞர் கடனே.
 
(சந்தையில் ஈடுபடுத்தப்படும் மூலதனம் எந்திர கதியில் தொழிலாளர்களைச் (வினைஞர் - தொழிலாளர்) சுரண்டும். முடங்கிய மூலதனமோ வேலையில்லாத் திண்டாட்டத்தைத் மேலும் தீவிரமாக்கி, தொழிலாளர் வாழ்வுடன் மோதி அவர்களை மேலும் வீழ்த்தும். சந்தை உற்பத்தி (அதாவது முதலாளித்துவப் பொருளாதார) முறையை ஏற்றுக் கொண்டால், (உற்பத்தியின்) முழுப் பலனையும் மூலதனமே ஈர்த்துக் கொண்டு  விடும். சிந்திச் சிதறும் மிச்ச சொச்சங்களை மட்டுமே உழுதுண்ணும் உழவர்களும் பழுதில்லாத தொழிலாளர்களும் பெறுவர். சந்தைப் பொருளாதாரத்தினால் இவ்வாறு குத்திக் குதறப்பட்ட பின்னும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வைத் தொடர்வதில் வியப்பு ஒன்றும் இல்லை; ஏனெனில் உயிர் வாழ்வது என்பது அனைத்து உயிரினங்களின் இயற்கையான விருப்பமாகும். (ஆனால்) மனிதன் என்பவன் மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தவன். (ஆகவே சமூக அமைப்பை இப்படியே தொடர விட வேண்டிய அவசியம் இல்லை.) வாழ்க்கைக்கு ஒவ்வாத சந்தைப் பொருளாதார முறையை ஒழித்துக் கட்டி விட்டு, உழைக்கும் மக்களின் அரசை நிறுவி, கீழ்மைத் தரமான முதலாளிகள் (முதலி- முதலிடுபவன் - அதாவது முதலாளி) வெட்கப்பட்டுப் போகும்படியாக, (சிறப்புடன் நடத்தி) அதைத் தழைக்கச் செய்வது தொழிலாளர்களின் கடமையாகும்.
 
- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It