1832 இல் ஆங்கில அரசு இந்தியக் கல்வி முறையை ஆராய ஒரு குழுவை நியமித்தது. அதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிய காரணத்தால் இறுதி முடிவெடுப்பதற்காக லிபரல் கட்சியின் தலைவராக இருந்த லார்டு மெக்காலே இந்தியா வந்து கல்விப் பொறுப்பை ஏற்க அனுமதி அளிக்கப்பட்டது.

அவர் இந்தியாவிற்கு வந்த பிறகு ஆங்கிலம் வழி பயிற்றுவிப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். இத்தோடு மட்டுமல்லாது, இந்தியக் கல்விமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் திட்டமிட்டார். உடலால் இந்தியராக இருந்தாலும் உள்ளத்தால் ஆங்கிலேயராக இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு அவரது கல்வித் திட்டம் அமைந்தது. உயர் வகுப்பினருக்கு ஆங்கிலக் கல்வி எனும் கொள்கை அறிவிக்கப்பட்டது. முதலில் உயர்ந்தோருக்கும் பின்னர் ஏனையோருக்கும் கல்வி அளித்தல் எனும் பாகுபாடு இவரால் போற்றப்பட்டது.

ஆங்கில ஆதரவுக் கொள்கை

மெக்காலே ஆங்கிலமொழி மூலம் ஐரோப்பிய அறிவியலைப் பரப்பும் எண்ணமுடையவராகவும், இந்தியர்களை ஆங்கிலேயத் தன்மை வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்ற கருத்தில் அதிக அழுத்தமுடையவராகவும் இருந்தார் என்பதைப் பின்வரும் அவர்தம் கருத்தால் அறிகிறோம்.

“நமக்கு முன்னுள்ள கேள்வி, உலகம் தழுவியதும் நாம் முழு மனதோடு ஒப்புக்கொண்டதுமான ஒரு மொழியின் மூலம் கற்பிக்கப் போகின்றோமா, இல்லையா? என்பதுதான், நமது மொழியில் உள்ள நூல்களுக்கு ஈடாக, எந்த ஒரு துறையிலும் எவ்விதமான நூல்களும் இல்லாத ஒரு நாட்டில், ஆங்கில வழிக்கல்வியைத் தவிர வேறு வழி என்ன உள்ளது? ஐரோப்பிய அறிவுத்துறைகளைக் கற்பிக்கின்றோம் என்றால், உலகப் பொதுமையான அறிவுத் துறையைக் கற்பிக்கிறோம் என்பது பொருளாகும். இதைப் புறக்கணித்துவிட்டு நம்மை எதிர்க்க முன்வருவோர், தீமைக்குத் துணை போனவர்கள் ஆவர். ஐரோப்பிய அறிவியல், தத்துவம், மருத்துவம், கால்நடை மருத்துவம், கலையியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே பொதுநிதியைப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் இந்தியக் கல்வி முறைகளுக்கு நாம் செலவிடுவோமேயானால் அது பயனற்றதாகும். இந்திய வரலாறு என்பது என்ன? 30 அடி உயரமுள்ள அரசன், 30 ஆயிரம் ஆண்டுகள் அரசாண்டார் என்று சொல்வது தானே! இதே போல இந்தியப் புவியியலிலும் உள்ள கடல்கள் பாற்கடல், வெள்ளை கடல் பற்றியது தானே! இதைப் படிக்கும் சிறுமிகளிடம் கூட இக்கருத்துக்கள் நகைப்பை வரவழைக்குமே!”

ஐரோப்பிய அறிவுத்துறைகளே உலகின் உன்னதமான அறிவுப் பெட்டகங்கள் என்ற கருத்துடையவராகிய மெக்காலே இந்திய அறிவுத்துறைகளை எள்ளி நகையாடியுள்ளதை அறிகிறோம். மெக்காலே ஆங்கிலத் தன்மை, ஆங்கிலேய அறிவு படைத்த இந்தியர்களை ஆங்கிலவழிக் கல்வி மூலம் உருவாக்க நினைத்தார் என்பது வெளிப்படை.

மெக்காலே ஆணை

ஆங்கிலக் கல்விக்கு ஆதரவான மெக்காலேயின் கல்விக் கொள்கையை அன்றைய இந்திய கவர்னர் ஜெனரலான பெண்டிங் பிரபு ஏற்றுக்கொண்டு, மெக்காலே திட்டத்திற்குரிய ஆணையை, 7. 03. 1835 இல் வெளியிட்டார். இத்திட்டத்தின் ஆணை நேரடியாக வங்காள மாகாணத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் சென்னை மாகாணத்திலும் எதிரொலித்தது. (S. K. Mukarji 1951:121) பெண்டிங் பிரபுவின் ஆணையைத் தொடர்ந்து வட்டாரமொழிகள் வழியாகக் கற்பிப்பதற்கான செலவுத் தொகை ஆங்கிலவழிக் கல்விக்கே ஒதுக்கப்பட்டது. ஆங்கிலமே பள்ளிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது.

Lord Macaulayமெக்காலேயின் கல்வித் திட்டம், கீழ் வரும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

1) அரசாங்க நிருவாகத்திற்குத் தேவைப்படும் ஊழியர்களைத் தயாரிப்பது.

2) உயர்நிலைப் பள்ளிகளில் முதல் படிவம் தொடங்கி ஆறாம் படிவம் வரை பூகோளம், வரலாறு, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களெல்லாம் ஆங்கில மொழியைக் கருவியாகக் கொண்டு போதிப்பதற்காக மாணவர்கட்கு தொடக்கப் பள்ளி­யிலேயே அம்மொழியில் போதிய பயிற்சி அளிக்க வேண்டுமென்பது.

இதற்கெல்லாம் மேலாக இந்திய மக்களின் சுதந்திர உணர்ச்சியைச் சொந்தப் பண்பாட்டைக் கொல்லும் நஞ்சாகவும் ஆங்கில மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் தலைதூக்கியது.

இன்னும் சற்று விளக்கமாக லார்டு மெக்காலேயையும், அவர் திட்டத்தையும் அறிந்து கொள்வது இங்குப் பொருத்தமுடையதாக அமையும்.

இவர் கண்டுபிடித்த கல்விக் கொள்கை ஓர் ஐரோப்பிய நாகரிகக் கல்வி முறை. அவர் இந்திய நாகரிகத்தை மதியாதவர். இந்திய மக்கள் எதனைத் தங்கள் பூர்வ நாகரிகம் என்று கொண்டிருக்கிறார்களோ, அதனைக் கேவலமாக வருணித்து புத்தகம் எழுதியவர். இந்திய நாகரிகத்தை அழித்தொழித்து நவீன முறையில் கல்வி கற்பவர்களை ஐரோப்பிய நாகரிகத்துக்கு அடிமைப்படுத்தும் நோக்குடனேயே அவர் தனது கல்வித் திட்டத்தை வகுத்தார். அந்த நோக்கத்தை அவர் வெளிப்படையாகவும் சொன்னார்.

உலகில் உள்ள சுதந்திர நாடு ஒவ்வொன்றிலும் கட்டாய இலவச தொடக்கக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு இக்கால கட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கட்டாய இலவச ஆரம்பக் கல்வி மறுக்கப்பட்டு ஒரு சிலருக்கே கல்வி என்ற அடிப்படையில் நவீன கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

பிரிட்டன் உள்ளிட்ட சுதந்திர நாடுகளிலெல்லாம் தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு நவீன கல்வித் திட்டம் வந்திருக்க, அடிமை இந்தியாவில் அன்னிய மொழியான ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கி அத்திட்டம் திணிக்கப்பட்டது. இதன்படி மூன்றாம் வகுப்பு தொடங்கி ஆங்கிலம், கட்டாயப்பாடம். ஆனால் தாய்மொழி கற்க வேண்டும் என்று கட்டாயமில்லை, விரும்புவோர் கற்கலாம்.

இத்திட்டத்தை மற்றொரு வகையில் சொன்னால் சுதந்திர நாடுகளிலே பழைய முறையை அழிக்காமல் அதன் மறுமலர்ச்சியாகப் புதிய கல்வி முறை செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில், மற்றைய காலனிய நாடுகளைப் போலவே மக்கள் மீது கல்வி முறை அடியோடு புறக்கணிக்கப்பட்டு, புதியமுறை மக்கள் மீது திணிக்கப்பட்டது. அதாவது அடிமைப்பட்ட சாதிக்கு ஆளுஞ்சாதியினர் இக்கொடுமையைச் செய்தனர்.

இந்தியா ஏழ்மை மிகுந்த கிராமங்களை மிகுதியாகக் கொண்ட விவசாய நாடு. இந்த நாட்டிலே பெருஞ்செலவு செய்து சுமார் பதினைந்தாண்டு காலம் வரை தொழிலோடு தொடர்பற்ற கல்வி கற்கும் ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தார் மெக்காலே. இதனால் நவீன கல்வி முறை சுகஜீவிகளின் தனிவுடைமையானது.

மெக்காலே திட்டம் : ஆங்கில அரசு ஏற்பு

1813 சாசனச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிதி பத்தாண்டுகள் வரை பயன்படுத்தப்படவில்லை. இதற்கான மிக முக்கிய காரணம் கல்வியை எந்த மொழியில் வழங்குவது என்ற சிக்கலே ஆகும். கீழைமொழி ஆதரவாளர்கள் சமஸ்கிருதத்தையும், மேலைமொழி ஆதரவாளர்கள் ஆங்கிலத்தையும் ஆதரித்ததால் இத்திட்டம் செயற்பாட்டுக்கு வரவில்லை. இக்காலத்தில் வாரன் ஹேஸ்டிங் (1813-1835) தலைமை ஆளுநராக இருந்து வந்தார். வாரன் ஹேஸ்டிங் இத்திட்டத்தைப் பற்றி அறிக்கை தரும் பொறுப்பை 1834 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா வந்த மெக்காலேவிடம் (Lord Macaulay) ஒப்படைத்தார்.

மெக்காலே இந்தியக் கல்விமுறையைப் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தியாவில் கல்வியை ஆங்கில வழியாகக் கொடுப்பதா, கீழைமொழிகள் வழியாகக் கொடுப்பதா என்ற விவாதம் தொடர்ந்தது. இந்தியர்களுக்குக் கீழை மொழிகளில் கல்வியளிப்பதைவிட ஆங்கிலத்தில் கல்வியளிப்பதே சிறந்தது என மெக்காலே கருதினார்.

மெக்காலே திட்டம் ஆங்கில அரசுக்கு உதவியாக அமையும் என்று பெண்டிங் பிரபு ஏற்றுக் கொண்டார். 1835ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் நாள் இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்த கல்வி நிறுவனங்களுக்கான உதவிகள் முழுவதும் நிறுத்தப்பட்டன. அது மட்டுமல்லாது அரசு நிதியினைக் கொண்டு இந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களின் வெளியீட்டுக்குத் தடையும் விதிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதியிலும் ஆங்கிலமே ஆட்சி மொழியாகியது. தமிழகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் வேரூன்றித் தழைத்துப் பரவத் தொடங்கியது. 1836 இல் சென்னை மத்தியப் பள்ளி நீங்கலாக பிற பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டன. மேலாளுநராகவிருந்த (Governor General) பெண்டிங்கின் சீர்திருத்தம் மூலம் குறிப்பிட்ட ஆங்கிலப் பள்ளிகள் பெரு நகரங்களில் தொடங்கப்பட்டன. 1840இல் சென்னைக் கிருத்துவக் கல்லூரியும், 1841இல் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் பச்சையப்பன் கல்லூரியும் இன்றைய மாநிலக் கல்லூரி இருக்குமிடத்தில் ஒரு மாநிலப் பள்ளியும் தொடங்கப்பட்டன. இதுவே மாநிலக் கல்லூரியாக மாறி 1857இல் சென்னைப் பல்கலைக்கழகமாக மலர்ந்தது. 1835இல் சென்னையில் தொடங்கப்பட்ட மருத்துவப் பள்ளி, மருத்துவக் கல்லூரியாக வளர்ந்தது.

பெண்டிங் பிரபுவுக்குப் பின்னர் ஆக்லெண்ட் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். அவர் வங்காளக் கல்வி முறையினை ஆராய சர் வில்லியம் ஆதம் என்பவரை நியமித்தார். ஆதம் வட்டார மொழிகளின் வளர்ச்சிக்கும் வட்டார மொழிகளைப் பயிற்றுமொழிகளாக ஆக்குவதற்கும் உரிய கருத்துக்களைத் தன் அறிக்கையில் வெளி­யிட்டிருந்தார். ஆனால், சர் வில்லியம் ஆதம்மின் பரிந்துரைகள் ஆங்கில அரசால் ஏற்கப்படவில்லை.

ஹார்டிஞ்ச் பிரபுவின் ஆணை

கவர்னர் ஹார்டிஞ்ச் பிரபு 1844இல் ஆணை ஒன்றை வெளியிட்டார். அந்த ஆணை, ஆங்கில அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்களே அரசுப் பணிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

“உயர் நியமனம் பெறும்போது அவர்களின் கல்வித் தகுதி, கல்வி கற்ற நிறுவனம் ஆகியவை ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டும். அந்தக் கல்வி நிறுவனம், கல்விக்குழுவினரின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்” (எஸ். சந்தானம், 1976:55).

இந்த ஆணை மரபுசார்ந்த சுதேசிக் கல்வி நிறுவனங்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியதாக்கியது. இந்த ஆணை ஆங்கிலக் கல்வி முறையினை இந்தியர்கள் மீது திணிக்கக் காரணமாக அமைந்தது.

உட்ஸ் சுற்றறிக்கை

மெக்காலேயின் ஆங்கில ஆதரவுக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசின் கல்விக்கொள்கை கிழக்கிந்திய வணிகக்குழும விதிகளின்படி இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1854 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் கருதுதலுக்கும், புதுப்பித்தலுக்கும் அனுப்பப்பட்டது. அதற்காக 1853ஆம் ஆண்டில் சார்லஸ் உட்ஸ் என்பவர் தலைமையில் ஆங்கில அரசு கல்விக்குழு ஒன்றினை அமைத்தது. இக்குழு இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் இருந்த தொடக்கக் கல்வி முதல் அன்றைய காலகட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்லூரிக் கல்வி வரை அனைத்தையும் ஆராய்ந்தது. இந்தியக் கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பல பரிந்துரைகள் சார்லஸ் உட்ஸ் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றன. அப்பரிந்துரைகளின் சில பகுதிகள் வருமாறு:

“வட்டார மொழிகளுக்குப் பதிலாக ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய விருப்பமோ நோக்கமோ அல்ல. மக்களால் புரிந்துகொள்ளக் கூடிய அளவில் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்து நாங்கள் எப்பொழுதும் விவேகத்துடனே இருந்திருக்கிறோம். கல்வியில் பொதுவான முறை எதிலும் தேவை அல்லது கோரிக்கை இருப்பின் ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆயினும் அந்த மாவட்டத்தில் வட்டார மொழியைக் கற்பது குறித்த ஒரு நோக்கத்துடனே செயல்பட வேண்டும்.

பொதுக்கல்வியை (ஆங்கிலம் மூலமாக) கற்கக் கூடிய அளவு ஆங்கில அறிவு பெற்றவர்களுக்குப் பயிற்றுமொழியாக அது தொடர வேண்டிய அதே சமயத்தில் ஆங்கிலமே அறியாமல் இருக்கின்ற பல மக்களுக்கு வட்டார மொழிகளின் மூலமாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆதலால், நாங்கள் ஆங்கிலத்தையும் மற்ற இந்திய வட்டார மொழிகளையும் ஒரே மாதிரியான ஐரோப்பிய அறிவைப் பரப்பும் சாதனங்களாகவே கருதுகிறோம்” (G.O. No. 112, Home (Education), Dated 01.02.1918).

உட்ஸ் அறிக்கை - வட்டார மொழி பயிற்று மொழிக்கு ஆதரவு

இவ்வறிக்கையின் முக்கியச் செய்தி, மெக்காலே கல்வித் திட்டத்தினால் அமைந்த ஆங்கில வழிக் கல்வி விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை மட்டுமே மிகச் சிறந்த கல்விமான்களாக உருவாக்க முடிகிறது. பரந்துபட்ட மக்களையும் இக்கல்வி சென்றடைய இந்திய மொழிகள் அனைத்திலும் இக்கல்வியைத் தர வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இவ்வறிக்கை வட்டார மொழி பயிற்று மொழிக்கான திருப்புமுனை.

இது தவிர கல்வி மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பது போன்ற பல முக்கியமான கருத்துக்களையும் இத்திட்டம் பரிந்துரை செய்துள்ளது. இதுவே பின்னாளில் இந்தியாவின் ஆங்கிலக் கல்விப் பட்டயம் அல்லது ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் என்று கூறப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின் ஒரு திருப்புமுனையான சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இங்கிலாந்து அரசு ஆட்சிப் பொறுப்பை 1857ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. இதற்குப்பின் வந்த மேயோ பிரபு (Lord Mayo) கல்விப் பொறுப்பினை முழுமையாக மாகாண அரசுகளிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தார். இது தாய்மொழி வழிக் கல்விக்கு உதவியது.

மெக்காலேயின் அறிக்கை ஆங்கில வழிக் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை 1835 வாக்கில் ஏற்படுத்தியது. எனினும், வட்டார மொழிகளைப் புறக்கணித்தல் கூடாது என்பதைக் கருதிய உட்ஸ் போன்றோர் 1854 வாக்கில் தாய்மொழிப் படிப்பை ஊக்குவித்தனர். மேனிலைக் கல்வியில் ஆங்கிலமும், கீழ்நிலையில் வட்டார மொழிகளும் இடம் பெற்றன.

இதே ஆண்டில், சார்லஸ் உட்ஸ் குழுவின் பரிந்துரைகளின்படி சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.

இந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் பிரபு, சார்லஸ் உட்ஸ் கல்விக் குழுவின் அறிக்கையோடு எல்லென்பெரோ என்பவரது தலைமையில் அமைந்த கல்விக் குழுவின் அறிக்கையினையும் ஏற்று 1859இல் தொடக்கக் கல்விக்கான முழுப் பொறுப்பினை முழுமையாக மாகாண அரசுகளிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தார். பின்னர் 1867இல் இலக்கிய, அறிவியல் துறைகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் குறித்து ஆராய இந்தியர்களின் வேண்டுகோள் விண்ணப்பத்தை சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை எடுக்கவும் இங்கிலாந்து அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி சென்னையில் மதராஸ் புக் அண்டு வெர்னாகுலர் லிட்ரேச்சர் சொசைட்டியை நிறுவியதால் குறைந்த விலையில் பள்ளிப் பாட நூல்களும், அறிவியல், இலக்கிய நூல்களும் வெளிவரலாயின.

இந்நிலையில் கிருத்துவர்கள் கல்வியை அணுகினர். முஸ்லீம்கள் விலகியிருந்தனர். ஆங்கிலேயர் எதிர்பார்த்த முற்போக்குச் சமுதாய முன்னேற்றம் வெற்றியைக் காணாது தோற்றது.

மெக்காலே தம் கல்வித் திட்டத்தை அறி­வித்தபோது இருந்த ஆங்கிலவழிக் கல்விக்கான ஆதரவுப்போக்கு, உட்ஸ் அறிக்கை வெளிவந்த 1853இல் ஆங்கில அரசிடம் இல்லை. வட்டார மொழிகளின் வழியாகவே கல்வியைப் பரவலாக்க முடியும் என்ற கருத்தை ஆங்கில அரசு உணர்ந்து கொண்டது. மெக்காலே ஐரோப்பிய அறிவைப் பரப்புவதற்கான சாதனம் ஆங்கிலமே என அறிவித்தார். எனினும் உட்ஸ் போன்றோர் வட்டார மொழிகளையும் அறிவு பரப்புவதற்கான சாதனங்களாகக் கருதிய ஆரோக்கியமான போக்கே, ஐரோப்பியக் கல்வி முறை இந்தியாவில் வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது.

உட்ஸ் இந்தியாவின் கல்விநிலை வளர்ச்சி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியக் கல்விமுறை தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி என வகைப்படுத்த வேண்டும், பல்கலைக்கழகங்கள் நிறுவ வேண்டும், புதிய நடுத்தரப் பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் ஏற்படுத்தப்படவேண்டும், தனியார்துறைப் பள்ளிகளுக்கு மானியங்கள் வழங்க வேண்டும், ஒவ்வொரு கல்விக்கும் காலஅளவு நிர்ணயிக்க வேண்டும், எல்லாருக்கும் கல்வி அளிக்க முயற்சி செய்ய வேண்டும், எல்லாக் கல்விமுறையும், அரசாங்கப் பணியில் வேலை செய்ய உதவியாக அமைய வேண்டும் என்ற கருத்துக்கள் பரிந்துரைக்கப்பட்டன (எஸ். சந்தானம் 1976:60). ஆங்கிலேயர்கள் தங்களின் மொழி பரவுவதைவிட தங்களின் அறிவு வளங்களைப் பரப்பவே விரும்பியுள்ளனர் எனலாம்.

புதிய புத்தக நிறுவனங்கள்

1857ஆம் ஆண்டு இந்தியாவில் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கிந்திய வணிகக் குழுமத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பை இங்கிலாந்து அரசி ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் கலை, இலக்கியம், அறிவியல் மேம்பாட்டிற்குப் பாடுபடப் போவதாகத் தாம் பதவி ஏற்கும்போது வாக்களித்தார். இதனைச் சுட்டிக்காட்டி இந்தியன் அசோசியேசன் என்னும் இயக்கம் 1867ஆம் ஆண்டு முந்தைய 10 ஆண்டுகளில் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய வேண்டுகோள் விடுத்தது.

இந்தியன் அசோசியேசன் அமைப்பின் விண்ணப்பத்தை இங்கிலாந்து அரசு சென்னை மாகாணத்திற்கு அனுப்பி அறிக்கையளிக்கக் கட்டளை­யிட்டது. இந்த விண்ணப்பத்தில் கண்டுள்ள பொருண்மைகளின் மீது மேல்நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்து, (G.O.No.275. Education, Dated 31.07.1868) இந்த ஆணையின் விளைவாகச் சென்னை மாகாண அரசு அறிவியல், கலை இலக்கியத் துறையில் மாகாண மொழியில் நூல்களை வெளி­யிடுவோருக்குப் பரிசளிப்பதாக அறிவித்தது. கல்வித் துறையின் அன்றைய இயக்குநராகப் பணியாற்றிய கிருஷ்ணமாச்சாரியின் முயற்சியால் சென்னை பாடநூல் மற்றும் வட்டார மொழி இலக்கிய சங்கம் (Madras School Books & Vernacular Literature Society) தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் சென்னை மாகாணப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மலிவு விலையில் பள்ளிப் பாடநூல்கள், இலக்கிய நூல்கள், வட்டார மொழிகளில் அறிவியல் நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டது.

1857இல் சிப்பாய்க் கலகம் (முதல் இந்திய விடுதலைப் போர்) வரை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி என்பது கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாகவே இருந்தது. 1857 இல் கலகம் அடக்கப்பட்ட பிறகு, இங்கிலாந்து மகாராணி இந்திய அரசாட்சியைத் தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார். இவ்வாறு தனது ஆட்சிக்குக் கீழ் இந்தியப் பகுதிகளை ஆளத் தொடங்கும் முன் மகாராணி ஓர் அறிவிக்கை வெளி­யிட்டார். இதில் இத்தேசத்தவரின் இலக்கியம், கலை வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என வாக்குறுதி நல்கி­யிருந்தார்.

கிருஷ்ணமாச்சாரி - தமிழில் நூல்கள் வெளியிடுவதைத் தலைமேல் மேற்கொண்டார்

மெக்காலேவின் கல்விக் கோட்பாடுகளின் தொடர்ச்சியாக வட்டார மொழியில் கல்விப் பணிகள் அரசு ஆதரவின்றித் தவித்தன. இதனால், வட்டார மொழிகளில் நவீன அறிவியல், இலக்கியக் கருத்துக்கள் வெளிவருவது எளிதாக இருக்கவில்லை. மகாராணியின் அறிவிப்பை இலக்கியம், கலைகளை வளர்க்க வாக்குறுதி அறிந்திருந்ததைச் சுட்டிக்காட்டி வடமேற்குப் பகுதியினைச் சார்ந்த பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேசன் இந்திய அரசாங்கத்திடமும், லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்திடமும் முறையிட்டுக் கடிதம் எழுதியது. 49 கடிதங்கள் அனைத்து மாகாணக் கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டு, பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அறிக்கைகள் கேட்கப்பட்டன. 50ஆவது அரசுக் கடிதம் அன்றைய சென்னை மாகாணத்தின் கல்வித்துறை இயக்குநர் திரு. ஈ.பி.போவல் என்பவரிடம் வந்தடைந்தது. இவ்வறிக்கையின் அடிப்படையில் போவல் என்பார் 1820இல் நிறுவப்பட்டு எப்போது கிடப்பில் கிடக்கும் சென்னை பள்ளிப்பாட நூல் சங்கத்தைப் புனரமைப்பது என்றும், இந்தச் சங்கத்தின் மூலம் மாகாணத்தின் வட்டார மொழிகளில் இலக்கியங்களை வெளியிடலாம் எனவும் ஆலோசனை வழங்கினார். இச்சங்கத்திற்கு அறிக்கப்படும் நிதியுதவியினை இருமடங்காக்கவும் 1868இல் பரிந்துரைத்தார். இச்சமயத்தில் கல்வித்துறையில் பணியாற்றிய வி.கிருஷ்ணமாச்சாரியர் என்பார் சென்னை பள்ளிப்பாட நூல் சங்கத்திற்குப் புத்துயிர்ப்பு அளிப்பதில் ஆர்வம் காட்டியது மட்டுமின்றிப் புதிதாக வடிவமைக்கப்பட்ட சென்னை பள்ளிப்பாட நூல், வட்டார மொழி இலக்கிய சங்கத்திற்குச் செயலாளராகப் பணிபுரிய ஒப்புதல் தெரிவித்தார். இத்தகைய கூடுதல் பணிகளுக்கு அதிக ஊதியம் எதுவும் வேண்டாம் எனக் கூறித் தன்னார்வத்துடன் செயல்படவும் வி. கிருஷ்ணமாச்சாரி முன்வந்தார்.

கல்வி பரவலாவதற்குச் சங்கம் வாதிடுவது போல வட்டார மொழிக் கல்வியே சிறந்தது எனவும், மேலை இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்து வட்டார மொழிகளில் வெளியிடுவது இத்தேச மக்களின் அறிவு வளர வழி செய்யும் என்றும், வட்டார மொழி இலக்கியச் சங்கம் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது எனவும் தனது 1868 ஆகஸ்ட் 11 ஆம் தேதியிட்ட கடிதத்தில் போவல் என்பார் குறிப்பிடுகிறார். இரயில் நீராவி இயந்திரத்தினை வடிவமைத்த ஜார்ஜ் ஸ்டிவென்ஸன் என்பார் குறித்துத் தமிழிலும், நீராவி, நீராவி இயந்திரம் குறித்துத் தமிழ், தெலுங்கிலும் நூல்களை 1868இல் வட்டார மொழி இலக்கியச்சங்கம் வெளியிட்டுள்ளது குறித்தும் இந்தச் சங்கத்தின் மூலம் அறிய முடிகிறது. 1868ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சங்கத்தின் செயலாளராக இருந்த கிருஷ்ணமாச்சாரி வட்டார மொழி இலக்கிய சங்கம் மேலும் திறன்பட இயங்க தனது ஆலோசனைகளைக் கல்வி இயக்குநருக்கு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தார். இதில் இதுவரையிலும் மத நூல்களும் செய்யுள் இலக்கிய நூல்களும் மனிதர்களின் குணநலன்களை வளர்ப்பதிலும் சிற்சில தகவல்களை அளிப்பதுமான பொதுக் கல்விக்கு முகாந்திரமாக அமைந்திருந்தன. மதநூல்கள் தற்போதுள்ள சட்டத்தின்படி கல்விக் கூடங்களிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளன. இவைத் தற்காலத்திற்குப் பொருந்தாத தகவல்களைக் கொண்டுள்ளது. இன்றைய காலத்தின் சூழ்நிலையில் தேவைக்கு இயைந்த உணர்வுகளையும் கொண்டுள்ளதாக இல்லை. ஐரோப்பாவின் அறிவியல், இலக்கியத்தினைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் தலைமுறையைச் சரியான திசைவழியில் திருப்பி விட வேண்டும் எனக் கூறுகிறார்.

ஊதியம் பெறாத கிருஷ்ணமாச்சாரியின் உயரிய தொண்டு

முதலாவதாக வட்டார மொழிகளில் பயனுள்ள, ஆரோக்கியமான, மகிழ்வூட்டக்கூடிய இலக்கியங்களைப் பதிப்பிப்பது அவசியம். பள்ளி மாணாக்கர்களுக்குப் பயன்படும் நூல்கள் மட்டுமல்ல, முக்கியமாகப் பள்ளிக்கு வெளியே உள்ள வாசகர்களுக்குப் பயன்படும் நூல்களையும் வெளியிட வேண்டும் எனவும் வி. கிருஷ்ணமாச்சாரி ஆலோசனை வழங்கினார்.

அந்நிய மொழி நூல்களை மட்டுமே மொழி பெயர்த்து வெளியிடுவதன் மூலம் அடிப்படை அஸ்திவாரத்தை நாட்டமுடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இந்திய மக்களுக்குப் புரியும் படியாகவும், இவர்கள் ஏற்கும்படியாகவும் பொருத்தமாக மாற்றி அமைக்கப்பட்ட நூல்களை வெளியிடுவதே சாலச் சிறந்தது எனவும் வாதிட்டார். சுதேசிகள் மத்தியிலிருந்து உருவான சிந்தனையாளர்களால் மட்டுமே மக்களை எளிதாகச் சென்றடையும் எனவும், இந்தியர்கள் எழுதிய நூல்கள், மேலை நூல்களின் மொழிபெயர்ப்பை விட அதிக நன்மை பயக்கும் எனவும் கூறினார்.

கல்வி பரவலாக்கம், வட்டார மொழியில் கல்வி ஆகிய கொள்கைகளை அமல்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் வட்டார மொழிகளில் அறிவியல் இலக்கியங்களின் தேவை தானாகவே அதிகரிக்கும் எனவும் அதுவரை ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு நிதியுதவி இருமடங்காக்கப்பட வேண்டும் எனவும் மேற்கூறிய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்தார்.

உடல் இயங்கியல் (Physiology), உடற்கூறியல் (Anatomy), மனதை ஒழுங்குபடுத்துதல், நற்குணங்களை வளர்த்தல், நாம் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர் முதலிய வெகு சாதாரண இயற்கைப் பொருட்கள் குறித்து வட்டார மொழிகளில் எளிமையான வெளியீடுகள் வெளியாக, மக்கள் ஆவலோடு உள்ளனர் எனக் கருதி மேற்கூறிய துறைகள் குறித்தும், தந்தியில்லாக் கம்பி, துறைமுகம், அச்சு இயந்திரம், புகைப்படம், நீராவி இயந்திரம், சேமிப்பு வங்கி, பருத்தி, தாள் உற்பத்தி முதலியவை குறித்தும் செய்திகள் அடங்கியுள்ள நூல்கள் வெளியிட வேண்டும் எனவும் பட்டியலிட்டிருந்தார். 1869 பிப்ரவரியில் அளித்த ஓர் அறிக்கையிலிருந்து, வட்டார மொழி இலக்கியச் சங்கம் சுமார் 30க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது புலனாகிறது.

கிருஷ்ணமாச்சாரியின் தலைமையில் வட்டார மொழி இலக்கியச் சங்கம் சீரமைக்கப்பட்டது. இதன் இயக்குநர் குழுவில் பல இந்தியர்களை கிருஷ்ணமாச்சாரி நியமித்தார். ஐரோப்பியர்களே இந்தக் குழுவில் இல்லாதது கண்டு, தமிழ் தெரியாவிட்டாலும் ஆலோசனைக்கு உதவுவார்கள் என ஓரிரு ஐரோப்பியர்களை வலிந்து இயக்குநர் நியமிக்கும் அளவிற்கு கிருஷ்ணமாச்சாரியின் இந்திய மயமாக்கல் அமைந்திருந்தது.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It