'கச்சத்தீவு’ - தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு - தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி:

 

சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன.

 

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

 

சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாதசுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவை பற்றி இலங்கை தினகரன் ஏட்டில் 1.5.1975 அன்ற விரிவான கட்டுரை வெளி வந்தது.

 

தாயுமானவர், இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டச்சுக்காரர்களைச் சேதுபதிக்கு ஆதரவாகப் படை நடத்திச் சென்று, கச்சத்தீவுக்கு அப்பால் விரட்டியடித்துக் கச்சத்தீவைச் சேதுபதிக்கு உரித்தாக்கினார் என்பர்.

 

1803 முதல் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது. 1795 ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்து மறைந்தபின் சேதுபதி அரச கட்டிலில் எவரும் ஆட்சி புரியவில்லை. இருப்பினும் முத்துத் திருவாயி நாச்சியார் மகளும் 1795 இல் மரணம் அடைந்த முத்துராமலிங்க சேதுபதியின் தமக்கையுமாகிய இராணி மங்களேசுவரி நாச்சியாரை, இந்தியாவில் நிர்வாகம் நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 இல் பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகத்தில் இருததார்.

 

ஜமீன்தாரிணிக்கு “இஸ்திமிரார் சன்னது” என்ற ஜமீன் உரிமைப் பட்டயம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டயத்தில் சேதுபதி ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கிந்தியக் கம்பெனியார் 1822 ஆம் ஆண்டு சேதுபதி ஜமீன்தாரிடமிருந்து கச்சத் தீவைக் குத்தகைக்குப் பெற்றனர். அப்போது நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் நிர்வாகம் நடைபெற்றாலும் தீவுகள் ஜமீன் வசமே இருந்தன.

 

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் பெரிய அளவில் பெருகியதாலும், கம்பெனி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டதாலும், இந்திய ஆட்சியைக் கம்பெனியார் வசமிருந்து இங்கிலாந்து அரசு மேற் கொண்டது. 1.9.1858 இல் கம்பெனிக் கொடியை இறக்கி யூனியன் ஜாக்கொடியை ஏற்றி இந்திய நாட்டைக் கம்பெனி யார் இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர். விக்டோரியா மகாராணியார்  தன் பிரகடனத்தில் இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவைக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பின்னாளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி.பியரீஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நான் 1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் உதவி வரைவாளராக இருந்தேன். இலங்கை வடக்கு மாவட்ட எல்லைகள் பற்றிப் பரிசீலனை செய்தேன். பழைய ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகளைப் பார்வை யிட்டேன். விக்டோரியா மகாராணியாரின் பிரகடனத்தில் கச்சத் தீவு சேதுபதி மன்னர்கட்கு உரியதாகக் கண்டிருந்தது. அவ்வாறே கச்சத்தீவை நீக்கி வடக்கு மாவட்டப் படம் வரைந்தேன்”.

 

என்பது இலங்கை அமைச்சரவை அரசுச் செயலாளர் கூறிய சொற்களாகும். இவை கூறப்பட்டது 8.5.1966 அன்று ஆகும். இச் செய்தி இலங்கை “டெய்லி மிர்ரர்” நாளிதழிலும், இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளிவந்தது.

 

ஜமீன் நில உரிமைச் சட்டப்படி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் கரையோரக் கிராமங்களுடன் இணைக்கப்பட்டன. பெருவாரியான காலங்களில் கச்சத் தீவு, இராமேசுவரத் துடனும், சில சமயம் தனுஷ்கோடியுடனும் இணைக்கப்பட்டது.

 

இராமேசுவரம் நகரியத்தின் ஒரு பகுதியாகவும், இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியாகவும் கச்சத் தீவு இருந்தது. ஒரு சமயம் இராமேசுவரம் நகரியக் குழுவினர் கச்சத் தீவில் காடு வளர்க்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். பின் இத்திட்டம் கைவிடப்பட்டது.

 

23.06.1880 ஆம் வருடம் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கடற்கரைக் கிராமங்களையும், கச்சத் தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால் தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம், மதுரை மாவட்டச் சிறப்பு ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக் கரை சாயபு மாப்பிள்ளை மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும், இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய் குத்தகைக்கு எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 2.7.1880 அன்று பதிவு செய்யப்பட்டது. சேதுபதி ஜமீன்தாரிட மிருந்து குத்தகைக்குப் பெற்ற கிராமங்களையும், தீவுகளை யுமே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு குத்தகைக்கு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இடங்கள், “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது” என்று தெளிவாகப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 

4.12.1885 அன்று சேதுபதியவர்களின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராமராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குத்தகைக்கு எடுத்தார்.

 

முத்துராமலிங்க சேதுபதி 1767 ஆம் ஆண்டு முத்துக் குளிக்கும் சில கடற்கரைக் கிராமங்களையும், தீவுகளையும் பெற்றிருந்தபோது, மன்னாரிலிருந்து பாம்பனுக்கு டச்சுக் காரர்களை வர அனுமதியளித்தார். டச்சுக் கப்பல் வரும் இடங்களில் ஒன்றாகக் கச்சத் தீவு குறிக்கப்பட்டிருந்தது. டச்சுக்காரர் அனுமதியைப் பெற்றிருந்தாலும், ஜமீனைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் கச்சத் தீவுக்குச் செல்லலாம். டச்சுக்காரர்கள் தடுக்கக் கூடாது என்ற விதி ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் சேதுபதி ஜமீன்தாரின் கச்சத் தீவு பரம்பரை உரிமை நிலைநாட்டப்பட்டது.

 

இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஆட்சிச் செயலர் 20.4.1950 இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கச்சத்தீவு பற்றியும், 1929-1945 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண அரசின் மீன்பிடித் துறை, அதனைக் குத்தகைக்கு எடுத்து அனுபவித்தது பற்றியும், மீன் பிடிப்பவர்கட்கும், சங்குகள் சேகரிப்பவர்கட்கும் அவைகளைக் குத்தகைக்கு விடப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார்.

 

இலங்கை நெல்லிமலைத் தோட்டத்திலுள்ள சோலை மலை ஆசாரி என்பவர் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் ஜமீன்தாரர் பாஸ்கர சேதுபதியவர்களும், சுவாமி விவேகானந்தரும் ஒருங்கு வீற்றிருக்கும் அரிய காட்சியைக் கண்ட சுந்தரப் புலவர் என்பவர் சில பாடல்கள் பாடியதாகவும், அதைக் கேட்டு மகிழ்ந்த பாஸ்கர சேதுபதியவர்கள் கச்சத் தீவின் ஒரு பகுதியை அனுபவிக்கச் சுந்தரப் புலவருக்கு உரிமை கொடுத்ததாகவும் சோலைமலை ஆசாரி எழுதி யுள்ளார். விவேகானந்தர் பாஸ்கர சேதுபதியவர்களுடன் இருந்த நாள் 27.1.1897 ஆகும்.

 

சென்னை மாகாணத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் எஸ். சுப்பராயன் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேறச் செய்தார். அதன்பின் சென்னை மாகாண அரசின் ஆவணங்களில் “இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், இராமேசுவரம் கிராமப்புல எண்.1250, 285 ஏக்கர் 20 சென்ட் கச்சத்தீவு அரசுப் புறம்போக்கு” என்ற குறிக்கப்பட்டது.

 

1921 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற குழுக் கூட்டம் ஒன்றிய சென்னை மாகாண ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.லீச் என்பவர் கச்சத் தீவு பற்றிய சேதுபதி மன்னர்களின் உரிமை ஆவணங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.

 

“கச்சத் தீவின் உரிமை பற்றி இப்போது பேசவில்லை. எல்லை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஆவணப்படி இந்திய அரசோ அல்லது சென்னை மாகாண அரசோ கச்சத்தீவிற்கு உரிமை கொண்டாடுவதை இந்த ஒப்பந்தம் தடுக்காது” என்று இலங்கைக் குழுவின் தலைவர் கூறினார். இது ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் எஸ்.ஏ.விசுவ நாதன், 11.11.1958 இல் வெளியிட்ட இராமேசுவர நிலப் பதிவேடு எண்.68 இல் கச்சத் தீவு இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

1.7.1913 இல் சென்னை மாகாண அரசுச் செயலர், சேதுபதி மன்னரிடமிருந்து சில தீவுகளைப் பதினைந்து ஆண்டுகட்குக் குத்தகைக்கு எடுத்தார். சேதுபதியரசர்க்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் ஐம்பதாயிரம். அதில் “ஜமீன்தாரிக்குச் சொந்தமான இராமேசுவரத்தின் வட கிழக்கில் உள்ள கச்சத்தீவு” என்று குறிக்கப்பட்டுள்ளது.

 

1957 ஆம் வருடம் வெளியிடப்பட்டு, 1.1.1966 இல் திருந்திய இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆவணப் பதிவு நூலில் 107 ஆம் பக்கம் தனுஷ்கோடிக்குச் சேர்ந்த குடியில்லாத சிறு கிராமமாக (ழயஅடநவ) கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.

 

1913 முதல் 1928 வரை சென்னை மாகாண அரசின் மீன்வளத் துறை குத்தகைக்கு விட்ட இடங்களில் கச்சத் தீவும் ஒன்று. சேதுபதியரசரிடமிருந்து சென்னை மாகாண அரசு அதிகாரிகள் கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்று மீனவர் கட்குக் குத்தகைக்கு விட்டதுடன், சேதுபதியரசர்களின் அதிகாரிகளும் நேரடியாகக் குத்தகைக்கு விட்டுள்ளனர். அனைத்திலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.

 

தொண்டி, நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் பலர் அவ்வாறு குத்தகைக்குப் பெற்றுள்ளனர்.  19.2.1923 இல் இராமநாதபுரம் திவான் ஆர். சுப்பைய நாயுடு, அரசர் ஆர். ராஜேஸ்வர சேதுபதிக்கு ஜமீன் கடல் எல்லைப் பற்றி எழுதிய கடிதத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதைப் பரிசீலித்து சேதுபதியவர்கள் 27.2.1922 இல் கையொப்ப மிட்டுள்ளார்கள்.

 

கச்சத்தீவு பற்றிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்திலும் கச்சத்தீவு சேதுபதி அரசர்க்கு உரியதென்றும், இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்றும் தவறாமல் குறிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தமிழக மண்.

 

இந்திய அளவைத் துறையினர் 1874 ஆம் ஆண்டுஇந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர் அவர்களும், அவர் உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு அவர்களும் இந்தியாவின் நில அளவைத் துறைக்காகச் சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொள்ளும்போது கச்சத் தீவையும் அளந்தனர். கச்சத்தீவுக்குக் கச்சத் தீவு தெற்கு, கச்சத் தீவு வடக்கு என்று பெயரிட்டனர்.

 

கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் என்று அளந்து கூறினர். கச்சத்தீவுக்கு சர்வே எண்.1250 என்றும் குறித்தனர். அதை ஒரு கல்லிலும் பொறித்துக் கச்சத்தீவில் நட்டனர்.  அந்தோணியார் கோயில் முன்பும் அக்கல் நடப்பட்டது. அக்கல் இன்னும் உள்ளது.

 

இந்திய நில அளவைத் துறையினர் 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் கச்சத்தீவு வந்தனர். அவர்கள் வரைந்த வரைபடங்களின் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டு வெளியீடுகளில் வெளியிட்ட அதில் கச்சத் தீவையும் குறித்தனர். இராமேசுவரத்தின் ஒரு பகுதி கச்சத் தீவு என்றும் குறிப்பிட்டனர்.

 

1874 முதல் 1956 வரை நில அளவை ஆவணங்களில் கச்சத்தீவு இந்தியப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது.

 

கச்சத்தீவு சேதுபதியின் சீமை; தமிழகப் பகுதி; இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்றும் இவ்வளவு ஆவணங்கள் இருந்தும், கச்சத் தீவுக்குரிய ஆதாரங்களை ஆவணக் காப்பகங்கள் (இந்தியா, தமிழ்நாடு) பம்பாய் ஆகிய இடங்களில் தேடியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார்.

 

பிரதமர் இந்திரா அம்மையாரோ கச்சத் தீவு ஆவணங்கள் அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட வில்லை. வேறு அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப் பட்டது என்று கூறுகிறார்.

 

இந்திய வழக்கு மன்றமும் கச்சத் தீவும்

 

கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர் கச்சத் தீவிற்குச் சில பொருட்களைக் கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர். பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை செய்த நீதிபதிகள், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அங்கு  சென்று வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.

 

ஒரு முறை கச்சத் தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத் தீவுப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) நிரேன்டே “அன்றும் சரி, இன்றும் சரி, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார்.

 

மற்றொரு தீர்ப்பில் இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலைமன்னாருக்கு 5 கிலோ மீட்டர் மேற்கு வரை தன் அதிகாரத்தைச் செலுத்தியுள்ளார். பாம்பன் வந்த அரபுப் பயணிகளைக் குள்ளக்காரன் பெட்டியிலேயே இறக்கிவிட்ட இலங்கைப் படகோட்டிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கைப் படகோட்டிகட்கு அபராதம் விதித்து மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அரசு அதிகாரிகளின் அலட்சியம் 

 

அ)    1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ தெரியவில்லை. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர்.

 

ஆ)    பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும் தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு விடுபட்டுள்ளது. இது தவறான செயல் ஆகும்.

 

இ)    சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள் 29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப் புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நாள் 6.2.1982 குறிப்பாணையின்படி உத்தரவிட்டார்.

 

இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூனிலிருக்கும் இந்திய வரைபட அலுவலகத் திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது.

 

இந்திய அரசின் இமாலயத் தவறு 

 

சேதுபதி சீமை என்று இவ்வளவு ஆவணங்கள் இருக்க, இலங்கை அரசு கச்சத் தீவுக்கு ஏன் உரிமை கொண்டாடியது? அது இந்திய அரசின் மெத்தனத்தினால்தான்.

 

1955, 1956 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசு கச்சத் தீவில் போர்ப் பயிற்சி செய்தது. பயிற்சியைக் கண்டிக்காத மத்திய அரசு “தூதர்கள் பேசும்வரை பயிற்சியை ஒத்திப் போடுக” என்றது.

 

தொடர்ந்து பலமுறை கச்சத் தீவு தன்னுடையது என்று இலங்கை அரசு கூறியது. இந்திய அரசு ஒரு போதும் வன்மையாகக் கண்டிக்கவில்லை.

 

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.

 

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது.

பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க வக்கற்ற இந்திய அரசு - மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது. வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர்.

 

இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.

 

“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” - என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.

 

இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.