ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை வெற்றியோடு நடத்துவது எப்படி என்ற கருத்தரங்கம் சென்னை இக்சா மையம் எழும்பூரில் ஏப்பிரல் 13 அன்று நடைபெற்றது இக்கருத்தரங்கை அறிவுச் சமூகம் தோழர் தமிழ் முதல்வன் ஒருங்கிணைத்திருந்தார். அதில் மக்கள் தமிழகம் கட்சி சார்பில் தோழர் புகழரசு கலந்து கொண்டு பேசியதன் சுருக்கம்...

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் அமைப்பில் நாங்கள் இயங்கிக் கொண்டு வருகிறோம். தமிழே கல்வி மொழி, தமிழ் மொழி படித்தோர்க்கே வேலை, தமிழ்நாட்டிற்கு கல்வி உரிமை என்னும் முதன்மை முழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம். இது முதன்மை முழக்கம் மட்டுமே இன்னும் பல்வேறு முழக்கங்கள் இருக்கின்றன.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் எத்தனை பேர் சேர்த்துள்ளோம் இதுவரை.. ? அது மட்டும் இல்லாமல் நான் ஒரு பட்டதாரி ஆசிரியர் என்ற அடிப்படையில் பல்வேறு மாணவர்களைப் பல்வேறு தளங்களில் பள்ளிகளில் இரவு பள்ளிகளில் மாணவர்களை எங்கெல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ அவ்விடத்தில் எல்லாம் மாணவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அந்த அடிப்படையில் ஆதிதிராவிடர் நலப் பள்ளியின் சூழலை நான் நன்கு அறிந்தவன்.

சான்றாகச் சொல்லப் போனால் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ் வீதி சிற்றூரில் அமைந்துள்ள ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி கடந்த ஓராண்டிற்கு முன் பழுதடைந்ததின் அடிப்படையில் அவை முழுவதுமாக இடிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக ஊரில் உள்ள நல்ல உள்ளம் படைத்த ஒருவர் தன்னுடைய வீட்டை இலவயமாக வழங்கினார். இன்று வரை அந்தப் பள்ளி கட்டி முடிக்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான கழிப்பிடம் வசதியும் செய்து தரப்படவில்லை.

மேலும் அப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் தேவை. பள்ளிக்கு என்றே அவ்விரண்டு ஆசிரியர்களும் இல்லாத ஒரு சூழல். இதனுடைய ஒரு சூழலாக மற்றொரு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் இருந்து மாறுதலாகத் தற்காலிகமாக ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இவ்வாசிரியரின் வருகையால் அவ்வா ஆசிரியர் ஏற்கனவே பணியில் புரிந்து இருந்த பணி புரிந்திருந்த பள்ளியில் அங்கு ஆசிரியர் குறைபாடு ஏற்பட்டது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத ஆதிதிராவிடர் நலப் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் சங்க ஊழியர்கள் எனப் பல்வேறு பேர் இருந்தனர். இதையொட்டி அப்பள்ளியில் பயின்று வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் மூன்று முறை தங்களின் குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்தனர். போராட்டத்தின் அடிப்படையில், ஆனால் இன்று வரை அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதேபோன்று அரக்கோணம் நகரத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. அதனுடைய கட்டமைப்புகள் இல்லாத ஒரு சூழல். இதை நான் எப்படி பார்க்கின்றேன் என்றால் ஆதிதிராவிடர் பள்ளி ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் அரசின் அறிவிப்பிற்கு ஆதி திராவிட நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எஸ்சி எஸ்டி கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ் அமைப்புகள் அனைத்தும் இவர்கள் ஆசிரியர் அமைப்புகளாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் நலன் சார்ந்தும் அரசு ஊழியர்களின் நலம் சார்ந்தும் போராட்டத்திற்கு முன் வருகிறார்கள். ஆனால் மாணவர்களின் உண்மையான சிக்கல்களை ஒட்டி இவர்கள் பேசுவதற்கு அணியமில்லை. இவர்களுடைய ஆசிரியர் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, ஆசிரியர் அமைப்பாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர் அமைப்பாக இருந்தாலும் சரி இவர்கள் மாணவர்கள் நலனின் அக்கறை செலவு செலுத்துவதற்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் இவ்வரசை எதிர்த்துக் கேட்பதற்கும் போராடுவதற்கும் முன்னிற்பது கிடையாது.

இதை எதிலிருந்து தொடங்கலாம் என்றால் மேலே குறிப்பிட்ட ஊழியர்களின் குழந்தைகளை எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில் சேர்த்திருக்கிறார்கள் குறிப்பாக இந்தப் பிரச்சனையை ஒட்டிப் பார்க்கும் பொழுது ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகளில் ஆதிதிராவிட நலத்துறையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் குழந்தைகளை எத்தனைப் பேர் அந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது ஒரு செய்தி.

மற்றொரு செய்தி, ஆதிதிராவிட நலத்துறை பள்ளியின் கீழ் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் என்பது காலத்தின் சூழலால் அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பெற்று தருவதற்காகத் தொடங்கப்பட்ட தருணம். அந்தக் காலக்கட்டம் சரியான ஒரு தருணம். அதனுடைய வளர்ச்சியும் அதனுடைய முயற்சியும் வெற்றியைத் தந்திருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் தற்பொழுது பள்ளிகள் என்பது எப்படி? இன்று பணத்திற்கான கல்வி முறை ஆக்கப்பட்டு இருக்கிறதோ அது போன்று நம்முடைய தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகள் தமிழக அரசின் அடிப்படையில் உதவி பெற்று பல்வேறு நலத்துறையின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகள், அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகள் எனப் பல்வேறு பள்ளி வகைப்பாடுகள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் அவர்களின் பணியில் ஏற்படக்கூடிய பணி மூப்புகள், பணி உயர்வுகள், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கும். ஆனால், பிள்ளைகளை அரசுப்பொதுப் பள்ளிகளில் சேர்ப்பதே சரி.. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் சேர்ந்து பேசி இப்பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையின் கீழ்க் கொண்டு வந்துவிட்டு, அவற்றில் என்னென்ன தேவை எனக் கோரிக்கைகளை முன் வைக்கலாம். அவை அனைத்தும் சட்டமாக்கப்பட வேண்டும் என்று கேட்கலாம் போராடலாம் அது நிறைவேறச் செய்யலாம் அதற்காக நாம் அனைவரும் சிந்திப்போம்.

Pin It