நாம் எதையும் எளிதாகக் கடந்து செல்வதில் பெரும் சாதனையாளர்கள். சமீபத்தில் டாட்டா சமூகவியல் உயர்கல்விக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் (துணைவேந்தர்) எஸ்.பரசுராமன் என்ற சாதனைத் தமிழர் தன் 72வது அகவையில் மரணித்தார் என்ற செய்தி பலருக்கு தெரிந்திராத ஒன்று. தெரிந்தவர்களும், அதில் என்ன இருக்கிறது மரணம் இயற்கைதானே என கடந்துவிட்டனர். ஆனால் அவர் மறக்கக்கூடிய மனிதர் அல்ல, அவர் என்றும் நினைவு கூரத்தக்கவர், அவர் பின்பற்றப்பட வேண்டிய மனிதர். சமூகவியல் உயர்கல்வியில் ஒரு கல்வி நிலையத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தி உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தவர். அவரை தமிழகத்தில் அறிந்தவர்கள் மிகச்சிலரே. ஒரு சாரார் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் அவருடன் பல தளங்களில் பணி செய்தவர்கள். அவருடன் பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் பணி செய்தவர்கள் ஏராளம். தமிழகத்­திலிருந்து அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் மிகக் குறைவானவர்கள். அவருடன் இணைப்பில் இருந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். அவர் ஒரு வித்தியாசமான ஆசிரியர், ஆராய்ச்சியாளர், விரிவாக்கப் பணியாளர், இவை எல்லாவற்றையும் விட ஒரு சிறந்த அப்பழுக்கற்ற சமுதாயத்தின்மேல் எல்லை இல்லா நம்பிக்கையும், நேசமும் கொண்ட எளிய மனிதர்.

s parasuramanஇந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் சமூகம் சார்ந்து செயல்பட எப்படி தங்களை தயாரித்து வியாபித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு டாட்டா சமூகவியல் உயர்கல்விக் கழகத்தை முன்னுதாரணமாக நடத்திக் காட்டியவர் எஸ்.பரசுராமன். அந்த நிறுவனத்தை மற்ற உயர்கல்வி நிறுவனங்கள்போல் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சமூகத்துடன் இணைத்துக் கொண்டு சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி மாணவர்கள் புரிந்து உணர்ந்து செயல்படவும், சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொண்டுவரும் செயல்பாடுகளை மையப்படுத்தி செயல்பட்டது என்பது மற்ற பல்கலைக்கழகங்களுக்கு அதுஒரு முன்மாதிரி. அந்த நிறுவனம் சமூகத்துடன் மட்டும் இணைந்திருக்கவில்லை, அரசுடனும் இணைந்து பயணித்தது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பயணித்தது. இந்தத் தொடர்பினால்தான் அது தவிர்க்க இயலாத நிறுவனமாக மாறியது. அது ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம்தான், இருந்தபோதும் எல்லா தேசிய அளவில் நடத்தப்பட்ட தரப்பட்டியல் ஆய்வில் முதல்நிலை பெற்று விளங்கிய நிறுவனம் என்பது இவரின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் என்றே கூற வேண்டும்.

அந்த கல்விக் கழகத்தை விரிவுபடுத்த எண்ணி மிகப்பெரிய வியாபித்தலுக்கான செயல்பாட்டை முன்னெடுத்து செயல்பட்டு சூழலுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து சாதாரண கிராமப்புற மாணவர்களும் அங்கு சேர்ந்து படித்திடலாம் என்ற நிலைக்குக் கொண்டு வந்தவர். இன்று பல்கலைக்கழக மானியக்குழுவால் களத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்கு நேரடியாக ஆசிரியர்களை நியமனம் செய்து பாடத்திட்டங்களை தேவைக்கானதாக மாற்றிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை 10 ஆண்டுகளுக்கு முன் திறன்மிகுந்த ஆற்றல்மிக்க செயல்பாட்டாளர்களை களத்திலிருந்து தேடிப்பிடித்து அந்த நிறுவனத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார். பல நேரங்களில் உயர்கல்வி நிலையங்களில் தங்களால் பயணிக்க இயலாமல் வெளியேறிய சுதந்திரச் சிந்தனையாளர்களை தேடித்தேடி கண்டுபிடித்து தன்னுடன் இணைத்துக்கொண்டு செயல்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

பெரும்பாலான சமூக மேம்பாட்டு ஆய்வுகளை அரசுத் துறைகளுக்கு செய்து தந்து அரசின் கொள்கை வகுப்பதில் பெரும்பங்காற்றியது அனைவரும் அறிந்தது. ஒருமுறை மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டுத்துறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் உறுப்பினர் என்ற முறையில் ஒரு கேள்வியை முன் வைத்தேன். அதாவது இந்தத் துறை நம் நாட்டு இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியளிப்பதாக பல கோடி நிதி செலவிட்டுள்ளது. அந்த பயிற்சியால் வந்த விளைவு என்ன? இதை நாம் ஆய்வு செய்திருக்கிறோமா என்று கேட்டேன். அமைச்சர் சற்று உற்றுப்பார்த்துவிட்டு, துறைச் செயலரை அழைத்து பதில் கூறச் செய்தார். இதுவரை அப்படி எந்த ஆய்வும் நடக்கவில்லை என்றார். உடனே அமைச்சர், அப்படியொரு ஆய்வு நமக்குத் தேவைதான், அந்தப் பணியை டாட்டா உயர்கல்வி நிறுவனத்திற்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து அறிக்கை வாங்குங்கள் என்றார். இவ்வளவு பல்கலைக்கழகங்கள் டெல்லியில் இருக்கின்றன. இருந்தபோதும் மும்பாயில் இருக்கும் ஒரு நிறுவனம் அழைக்கப்படுகிறது என்றால், அந்த நிறுவனம் தவிர்க்க இயலாத நிறுவனமாக மாறியதால்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தனித்துவமாக இந்த நிறுவனம் உலகத்தின் பார்வையைப் பெற்றதற்கான காரணம் அந்த நிறுவனம் செய்த சமூகத்துடன் தொடர்புடைய ஆய்வுகள்தான். அவரைத் தெரியாத இந்தியாவில் பிரசித்தி பெற்ற தொண்டு நிறுவனங்கள் இருக்க முடியாது. அதேபோல் சமூகசேவைக்கான நிதியங்களும் அவரை தெரியாது இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, தனித்துவமாக செயல்படும் சமூக பொதுச்சிந்தனையாளர்கள் மற்றும் களச்செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் தெரிந்தவராக அனைவருடனும் தொடர்பில் இருந்தார்.

அவரின் ஆய்வுகள், கட்டுரைகள், புத்தகங்கள் யாரை நோக்கியது என்றால் விளிம்புநிலை மக்களை நோக்கியது. வாழ்வாதாரப் பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள், மற்றும் வறுமைக்குறைப்புச் செயல்பாடுகள் பற்றியதாகவே இருந்தன. அவர் தன் பணி ஓய்வுக்குமுன் மும்பாயிலிருந்து வெளிவரும் ஒரு ஆராய்ச்சி சஞ்சிகையான ‘எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி'யில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். இந்தியா ஏழைகளைக் காக்க முன்மாதிரியாகச் செயல்படும் நாடாக எப்படி உலகுக்கு வழிகாட்ட முடியும் என்று எழுதியிருந்தார். அதில் பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் கோடிட்டுக்காட்டி, அவைகளை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குடும்ப வருமானத்தை உயர்த்திடவும் எப்படி வழிவகை செய்ய முடியும் என்பதை விளக்கியிருந்தார். அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை அது. அதிகமாக விவாதிக்கப்பட்ட கட்டுரையும்கூட. எனவே தனக்கென ஒரு பார்வையை வைத்திருந்தார். பொதுவாக அரசு நிறுவனங்கள், அரசு நிதிபெறும் கல்வி நிறுவனங்கள் அரசை எதிர்த்து கருத்துக் கூறாது செயல்படும் கலாச்சாரச் சூழலில் உயர்கல்விச்சாலையின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தவர் பேரா.பரசுராமன் என்பது அவருடன் பணி செய்த அனைவருக்கும் தெரிந்ததே. அந்த உயர்கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வுகள் மூலம் அரசின் கொள்கைகளில் திட்டங்களில் உள்ள குறைகளை நிறைகளை சுட்டிக்காட்ட என்றும் தவறியதில்லை. ஆதலால்தான் வேறு எந்த பல்கலைக்கழகமும் ஈர்க்கமுடியாத ஊடகத்தின் பார்வையை தன்னகத்தே ஈர்த்து வைத்திருந்தது. அதே நேரத்தில் அரசுடன் கொள்கைகள் உருவாக்குவதற்கு பணி செய்திடவும் அவர் தவறியதில்லை.

‘பாரதப் பிரதமர் ஆய்வாளர்' என்ற திட்டத்தை மத்திய அரசு, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடத்தியபோது, அதை செயலாக்க பணியாற்றியது அந்த நிறுவனம்தான். அந்தத் திட்டத்தை பல்கலைக்கழகங்களுக்குள் நடத்துவது என்பது மிகப்பெரிய சவால். அதை அவர் அந்த கல்வி நிறுவனத்தின் மூலம் நடத்திக்காட்டினார். பொதுவாக படிப்புகள் என்பது வகுப்பறையில் நடக்கும் நிகழ்வாகும். இந்தத்திட்டம் களம் சார்ந்த வகுப்பறை விவாதம் என்று வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம். இதை பல்கலைக்கழகத்திற்குள் நடத்துவது மிகவும் கடினம். காரணம் அவைகள் விதிகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள். அந்த ஆய்வாளர்களுக்கு வகுப்பெடுக்க நான் அங்கு செல்வதுண்டு. அந்த வகுப்புக்களை காலை­யிலிருந்து இரவு 11 மணிவரை எடுத்திருக்கிறேன். மாணவர்கள் எப்படி விரும்புகின்றார்களோ, அதற்கு எல்லா வகையிலும் உதவிடும் ஒரு கல்விக்கழகத் தலைவராக இருந்து அந்த நிறுவனத்தை மாணவர் நட்புக்களமாக மாற்றினார். டாட்டா சமூகவியல் உயர்கல்விக் கழகம் ஒரு நேரத்தில் தன் சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் கூறுவார்கள். யாரும் எதிர்பார்க்காத அளவு நிறுவனம் வளர்ச்சி கண்டது. அதன் விரிவாக்கச் செயல்பாடுகள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்தன.

அந்த நிறுவனத்தை மும்பையிலிருந்து செயல்படும் நிறுவனமாக மட்டும் இல்லாமல் பல மாநிலங்களில் தன் தடத்தைப் பதித்து 500 மாணவர்களை உருவாக்கிய நிறுவனத்தை 6000 மாணவர்களை உருவாக்கும் சக்தி பெற்றதாக விரிவுபடுத்தியதை பலரும் வரவேற்றுப் பாராட்டினர். அதே நேரத்தில் தரம் குறைந்ததாக அதை விமர்சித்தவர்களும் உண்டு. அவர் காலத்தில் அங்குப் பணியாற்றிய ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மத்திய மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை, திட்டங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியபோது குறைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக அரசை விமர்சனம் செய்தனர் என்பது வரலாறு. இருந்தபோதிலும் ஒருபக்கம் அந்த நிறுவனம் அரசுடன் கைகோர்த்து அரசாங்கத்திற்கு உதவியாக பணி செய்யவும் தவறவில்லை. களப்பணியாற்றும் மிகப்பெரும் ஆளுமைகளை அழைத்து பட்டமளிப்பு உரையாற்றச் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திடுவார். பல நேரங்களில் அங்கு சென்று அந்த வளாகத்தில் இருந்தபோது அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும், மாணவர்களின் செயல்பாடுகளையும் பார்த்தபோது ஏதோ ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது.

அந்த கல்வி நிறுவன வளாகம் மாணவர்களை முன்னிலைப்படுத்தியதாகவே கருத்துச் சுதந்திரத்துடன் செயல்பட்டது. சாதாரணமாக ஒரு இளங்கலை படிக்கும் மாணவன், பேரா.பரசுராமனைப் பார்த்து ஹலோ பரசுராமன் என அழைத்து அவருடன் உரையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். பல ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தி நிறுவனம் சாராது சுதந்திரமாக அவரவருக்கு பிடித்தமான பிரச்சினைகளில் ஆய்வு செய்ய ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார். அதற்காக பல பயிற்சிகளை பல உலகப்பிரசித்தி பெற்ற பயிற்சியாளர்களை அழைத்து ஆய்வு மாணவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி கொடுப்பார். அப்படி நடந்த நிகழ்வுகளில் நான் அந்த வளாகத்தில் பங்கேற்ற அனுபவம் மறக்க இயலாது.

அதேபோல் உள்ளாட்சி தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு ஆய்வுகள் செய்ய வாய்ப்பு வந்தபோது அவர் என்னை தொடர்புகொண்டு அந்த ஆய்வுக்கு தாங்கள் ஆலோசகராக இருக்க வேண்டும் என பணித்தார். அந்த ஆய்வு அறிக்கை சமர்பித்து இந்திய அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்வரை என்னை அவர் அதில் பொறுப்பாக்கி வைத்திருந்தார். அதேபோல் இந்திய மகளிர் மேம்பாட்டு ஆணையம் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ஒரு பிரத்தியேகமான பயிற்சித்திட்டத்தை உருவாக்க அவர் அழைக்கப்பட்டபோது, அதற்கும் நான் ஆலோசகராக இருந்து அவருடன் செயல்பட்டது ஒரு புது அனுபவம். அதேபோல் அந்த நிறுவனத்தில் பதிப்பித்த காலாண்டு ஆராய்ச்சி ஆய்வேடு ஆலோசகர் குழுவில் நானும் ஒருவனாக இருந்தேன். கட்டுரைகளைத் தரமாக பதிப்பிக்க வேண்டும் என்பதில் அதுவும் அது களம்சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

ஒருமுறை நான் அங்கு அவர்களின் ஆராய்ச்சிப் பணிக்கு ஆலோசகராக சென்றிருந்தபோது அந்த நிறுவனத்திலிருந்து மாணவர்களைத் தங்களுடைய நிறுவனங்களுக்கு பணியாட்களை தேர்ந்தெடுக்க வந்த நிறுவனங்கள் நேர்முகத்தேர்வு செய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு இளங்கலை படித்த மாணவன் ஒரு நிறுவனத்திடம் தனக்கு ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்டு விவாதித்த சம்பவம் என்னை பிரமிக்கச் செய்தது. ஏனென்றால் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பிறகு பத்தாயிரத்திற்கும் இருபது ஆயிரத்திற்கும் பணிக்கு அலைபவர்களை பார்த்தபோது அங்கு எந்தத் தரத்தில் மாணவர்கள் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. அது மட்டுமல்ல அந்த நிறுவனத்திற்கென்ற ஒரு பார்வையை உருவாக்கி நிறுவனங்களின் அடிச்சுவட்டில் காலத்திற்கேற்ப மக்கள் பிரச்சினைகளை அணுக தனித்துவமிக்க பார்வையை மெருகூட்டிக் கொண்டே வந்தார். இதில் மிக முக்கியமாக கோட்பாடு போதிப்ப­திலிருந்து, களத்தில் நிகழும் நிகழ்வுகள் அதாவது நடைமுறையை மாணவர்கள் முதலில் புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில பெருங்கவனம் செலுத்தினார். கோட்பாட்டிலிருந்து களம் என்ப­திலிருந்து களத்திலிருந்து கோட்பாடு என்பதற்கு முக்கியத்துவம் தந்தது புதுமையாக இருந்தது. பல சமூகவியல் நிறுவனங்களுககு இந்தப்பார்வையை உருவாக்கிச் செயல்பட உதவினார் என்று கூறினால் அது மிகையாகாது.

சில சமயம் அவர் சிந்தனைக்கும் அவரின் நடத்தைக்கும் தொடர்பில்லாததுபோல் ஒரு புதிர் காணப்படும். எப்பொழுதும் ஏழ்மை, வறுமை, புறக்கணிப்பு, ஒதுக்கப்படுதல், ஒடுக்கப்படுதல் ஏழைகளின் வாழ்வாதாரம், வறுமை குறைப்பு என்று விளிம்புநிலை மக்களின் மேம்பாடு என்று சிந்தித்து செயல்படும் மனிதர் அவர். நெற்றியில் திருநீறு அணிந்து எங்களுடன் வெளியில் வருவார். ஒரு நண்பர் அவரைப்பற்றி கூறும்போது அவர் ஒரு இந்துப்பத்திரிக்கை என்று கூறினார். நான் சற்றுப் புரியாமல் பார்த்தவுடன் அவர் கூறினார் இந்துப் பத்திரிக்கை வினாயகர் சதுர்த்தியும் கொண்டாடும் அத்துடன் இடது சிந்தனையுடன் எழுதிடவும் செய்யும். அதைத்தான் குறிப்பிட்டேன் என்று கூறினார்.

அவருடைய பெயர் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவரைத் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தது. அதை செய்திப் பத்திரிக்கைகளும் செய்தியாக வெளியிட்டிருந்தது. அப்பொழுது அவரைக் கேட்டேன். நீங்கள் யாரையும் பார்க்கவில்லையா, யாரையும் பார்க்கவில்லை என்றால் பதவிகள் கிடைக்குமா எனக் கேட்டேன். அவர் தந்த ஒரே பதில், “அது ஒரு பணி மற்றும் பொறுப்பு என்று உணர்ந்து தந்தால் செயல்படுவேன். இதற்காக நான் யாரிடமும் போக வேண்டியது கிடையாது, அது மட்டுமல்ல நான் அறியப்படுவது என் பதவியால் அல்ல என் செயலால். எனவே அதை விட்டுவிடுங்கள்" என்றார். 2004லிருந்து டாட்டா சமூகவியல் உயர்கல்வி நிறுவனத்திற்காக தன் உடலைப்பற்றி கவலையற்று 2018வரை ஓடிக் கொண்டேயிருந்தார். அவருடன் பல இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். விமான நிலையங்களில் தூங்குவார், செல்லும் காரில் தூங்குவார், அமைச்சர்களைப் பார்க்கப் போகும்போது அங்கு உள்ள வரவேற்பு அறை நாற்காலியில் அமர்ந்து தூங்குவார். கூட்டங்களுக்கு வந்து அவர் பேசி முடித்தபிறகு மூலையில் எங்காவது உட்கார்ந்து தூங்குவார். உடல்நிலை சரியில்லாத போதும் தன் பணிக்காக பயணம் செய்வதை நிறுத்தவே இல்லை. பலர் கூறியபோதும் கேட்கவேயில்லை.

எங்கள் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்கு பலமுறை அழைக்கப்பட்டு சிலமுறை எங்கள் துறையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வுகளில் வந்து கலந்து கொண்டார். அந்த இரண்டு நிகழ்வுகளுமே பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தந்த நிதியில் நடந்த ஆய்வு அறிக்கைகளை பரிசீலனை செய்து அறிஞர்களின் ஒப்புதலை வாங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டவை. அந்த நிதி நிறுவனம் இவரையும், இவருடன் சேர்த்து இன்னும் இரண்டு சமூக விஞ்ஞானிகளை அழைக்க என்னிடம் வேண்டினர். அதன் விளைவாக காலையில் அந்த நிகழ்வுகளுக்கு வந்துவிட்டு மாலையே சென்று விட்டார். எப்பொழுது வந்தாலும் ஒரு சடங்குக்காக வராமல் கொடுக்கப்பட்ட பணியினை முறைமையுடன் நிறைவேற்றிவிட்டு சென்றுவிடுவார். துணைவேந்தர் அதுவும் டாட்டாவின் உயர்கல்விக் கழகத்தின் தலைவர் என்ற எந்த ஆரவாரமும் இன்றி சாதாரண மனிதராக நடந்துகொண்டு எந்த சிரமும் அழைத்தவர்களுக்குக் கொடுக்காமல் தன் பணியை நிறைவேற்றிவிட்டு சென்றுவிடும் நல்ல சமூகப் பணியாளர் என்றே கூற வேண்டும். எப்பொழுதும் எங்கு வந்தாலும் ஒரே ஒரு பை தன் முதுகில் சுமந்து வருவார். நிகழ்வை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கு குறிப்பாக நிதிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்வார். அப்படி மனிதர்களை இன்று பார்ப்பது மிகவும் அரிது.

ஆனால் அவரின் கடைசிக்காலம் என்பது அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. அது ஒரு சோகம்தான். ஆனால் இதில் ஒன்றும் புதுமை இல்லை. வெள்ளைப்புரட்சிக்கு வித்திட்ட வர்கிஸ் குரியனுக்கு குஜராத் மாநில ஆனந்தில் என்ன நடந்தது, அந்த வளாகத்தை விட்டு தூக்கி எறியப்பட்டார். அவர் வளர்த்தவர்களே அதைச் செய்தார்கள். ஆனால் தற்போது அவருக்கு 100 ஆண்டு விழாக்கொண்டாடினார்கள். காந்திகிராம ஊரகக் கல்வி நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த டாக்டர் ஜி.ராமச்சந்திரனை காந்திகிராமத்தை விட்டு வெளியேற்றினார்கள். இதையெல்லாம்விட மகாத்மா காந்தி கடைசி காலத்தில் எப்படி எவ்வளவு மன வேதனையுடன் வாழ்ந்தார் என்பதை நாராயண தேசாய் எழுதிய புத்தகங்களைப் படித்தால் நமக்கு விளங்கும். அதைத்தான் இவருக்கும் செய்தார்கள் என்பதுதான் சோக வரலாறு. ஆனால் புனேயில் உள்ள இன்னொரு கல்வி நிறுவனம் இவரின் திறன் அறிந்து அரவணைத்துக் கொண்டது. சமூகவியல் கல்விக் கழகத்தை சமூகம் சார்ந்து சிந்தித்து செயல்படும் நிறுவனமாக உருவாக்க இவரின் பணிகள் முன்னுதாரணப் பணிகள். அதற்காக அவர் போற்றப்படல் வேண்டும். தமிழகத்தில் அப்படி ஒரு கல்விக் கழகத்தை உருவாக்க வேண்டும் எனக் கனவு கண்டார். தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் கல்விச்சூழல் வியாபாரத் தளத்தில் இருந்ததால் அரசிடம் அவர் கெஞ்சவில்லை. அது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. ஒட்டு மொத்தத்தில் ஒரு சமூகவியல் ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக களப்பணியாளராக, நிறுவனம் உருவாக்குபவராக செயல்பட்டு சாதனை புரிந்த ஒரு தமிழர் என்றென்றும் பாராட்டுக்குரியவர், நினைக்கத்தக்கவர், போற்றப்பட வேண்டியவர். என்றென்றும் அவர் புகழ் வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கும்.

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It