இந்திய மரபில் பிரதான இலக்கியங்கள் அதன் எழுத்திலக்கியப் படைப்புகளில் பிராந்திய மொழிகளில் பரிமாற்றங்கள் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றன. அவ்வேளையில் அந்த மாற்றத்தின் கொடுக்கல் வாங்கல்கள், தருமொழி, பெறுமொழி நிலையில் தமிழில்தான் வீரியமான செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மகாபாரதப் பிரதியைக் காணமுடியும். தமிழ்ச் சூழலில் மகாபாரதக் கதைகள் தமிழ் இலக்கிய, பண்பாட்டு வரலாற்றோடு கொண்டிருந்த ஊடாட்டங்களை கவனப்படுத்துவதாக உள்ளன. 'சங்க இலக்கியத்தில் பாரதக் கதைக் குறிப்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றிய பேரா. இரா.சீனிவாசன், சங்க இலக்கியச் சூழலில் பாரதக் கதை குறித்துப் பேசலாமா - என எல்லோருக்கும் எழும் கேள்விக்குப் பதிலாக அமைந்திருந்தது.

'திருமாவுண்ணி' பற்றிய சங்க இலக்கிய குறிப்பில் முலையைத் திருகி மதுரையை எரித்த கண்ணகி பற்றிய பழங்கதையைக் காண்பது இத்தகையதோர் ஆய்வுக்கு வழிவகை செய்கிறது‌ என்று கூறி, கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்களில் காணுகின்ற குறிப்புகள்மூலம் பாரதக் கதை சங்க காலத்திலேயே தமிழர் அறிந்திருந்தனர். அவற்றில் பொதிந்துள்ள பாரதக் கதைக் குறிப்புகள் வழியே சங்க இலக்கியத்தில் பாரதக்கதை எந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய இன்னும் ஆழமான புரிதலும் கிடைக்கிறது. சங்க காலத்திலேயே பாரதக் கதையைத் தமிழர் அறிந்திருந்தனர் என்ற கருத்திற்குத் தடையாக இருப்பது பாரதம் பற்றிய ஆய்வுகள் அதன் பரவலாக்கத்தைப் பல்லவர் காலத்தில் நிறுவி விட்டதுதான். இதனைக் கடந்து, காப்பியங்கள் பற்றிய ஆய்வுகளில் எவ்வாறு காப்பியம் தொன்மக் கதைகளாக இருந்து, பின்னர் காப்பிய வடிவம் பெற்றது என்று நோக்கும்போது நமக்கு இந்தத் தடை நீங்குகிறது. இந்த ஆய்வுப் பின்னணியில் கீழ்க்கண்ட சங்க இலக்கியப் பாடல்களை வாசிக்கும்போது நமக்கு அதனுள் பொதிந்துள்ள பாரதக் குறிப்புகளை அடையாளப்படுத்த முடியும். பாரதக் கூத்து பற்றிய களஆய்வில் கிடைக்கின்ற தரவுகள் இந்த வாசிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளன.

அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ

நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை

ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! (புறநானூறு 213-16)

இந்தப் பாடலில் வரும் பெருஞ்சோறு என்பதைப் பிண்டம் மேவிய பெருஞ்சோற்றுநிலை என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அதாவது பாரதப்போரில் இறந்த வீரர்களின் நினைவாக அளிக்கப்பட்ட பிண்டச்சோறு என்பது இதன் பொருள். இன்றும் திரெளபதி அம்மன் திருவிழாக்களில் தீமிதித் திருவிழா முடிந்ததும் கொடுக்கப்படும் உணவைப் பிண்டச் சோறு என்பார்கள். சில இடங்களில் இதனை 'வீரபந்தி' எனவும் கூறுவார்கள். இந்த நாட்டார் சடங்கின் பின்னணியில் இப்பாடலைப் பார்க்கும்போது 'ஐவரொடு' என்கிற சொல் பாண்டவரைக் குறிப்பதாக விளங்குகிறது.

பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கலித்தொகை ஆகியவற்றிலும் பாரதக்கதைக் குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றில் துரியோதனனையும் துச்சாதனனையும் கொல்வதாக வீமன் சபதம் செய்து அதை நிறைவேற்றியதும், பாண்டவர் அரக்கு மாளிகையிலிருந்து தப்பியதும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட ஆறு இடங்களிலும், பாரதக் கதைக் குறிப்புகள் உவமைகளாகவே கையாளப்பட்டுள்ளன. இதன்மூலம் பாரதக் கதை காப்பியம் அல்லது கூத்து வடிவம் பெறுவதற்கு முன்னமே அக்கதைக் கூறுகள் பரவலாக வழக்காறுகளாகப் பரவி இருந்ததை உணர முடியும். இந்தப் புரிதல் மேற்குறிப்பிட்ட பாடல்களின் கருத்தாழத்தை விளங்கிக் கொள்ள உதவுவதோடு, செவ்வியல் மரபு × நாட்டார் மரபு என்ற எதிர்வைக் கடந்து சிந்திக்கவும் உதவுகிறது. இக்கதைக் கூறுகளை யார், எதற்காகச் சூழல விட்டார்கள்? என்று சிந்திக்கும்போது, பாணர், விறலியர், பொருநர், கூத்தர், சூதர், மாகதர் போன்றோரின் செயல்பாடுகளே காரணம் என்று விளங்கும். மேலும், பாரதக் கதைக் களமான துவாரகை, மதுரா போன்ற வடநாட்டு இடங்களை மாற்றாமல், தமிழ்ச் சூழலில் கீழ்க்கண்ட புதுமைகளைச் செய்துள்ளதும் நம் கவனத்துக்கு வருகிறது. கண்ணன் பிறப்பு, துகிலுரியப்படும் தருணத்தில் கண்ணன் திரெளபதிக்கு ஆடை அளித்தது, அமாவாசையைப் புரட்டி வைத்து, துரியோதனனுக்கு சாதகமாக (ஞானியாக கருதப்பட்ட) சகாதேவன் போருக்கு நாள் குறித்ததை மாற்றி அமைத்தது, அரவான் களப்பலிக்கு முக்கியத்துவம் கொடுத்து கூத்தாண்டவர் வழிபாட்டு முறையாக அதனை மாற்றியமைத்தது - போன்ற கூறுகள் மூலம் தமிழ் பாரத மரபை உருவாக்கி வளர்த்து வந்ததையும் இங்கு அடையாளம் காணமுடியும்.

முனைவர் மு. ஏழுமலை அவர்களின் உரை 'பாரதக் கூத்துப் பனுவல்கள்' என்ற பொருளில் அமைந்திருந்தது. கூத்து மரபை இலக்கிய மரபின் அங்கமாகப் பார்க்க வேண்டும். இதைத்தான் பாணர் மரபு, கூத்தர் மரபாக இலக்கிய மரபில் காண்கிறோம். இலக்கிய, இலக்கணத்திற்கு அடிப்படையாகத் தொல்காப்பியம் இருப்பது போல், கூத்திற்குக் கூத்த நூல் முதலியவை உள்ளன. அதன்படி, கூத்தில் பாடல், வசனம், இசை, அடவு அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த மரபை வெகுசன மரபாக மாற்றியதில் பல்லவர் கால அரசு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மகாபாரதப் பாத்திரப் பெயர்கள், பாரதக் கிளைக் கதைகள், அதனை ஒட்டிய வழக்காறுகள் தமிழ்ச் சமூகத்தில் பரவலாகின.

கூத்துக் கலை திரெளபதி வழிபாட்டின் அங்கமானபோது கூத்துப்பனுவல் ஆசிரியர் என்கிற இலக்கிய மரபு அங்கீகரிக்காத படைப்பாளி மையமாகிறார். புலவர்களைப் போலவே இவர்கள் இலக்கிய, இலக்கண, இசை, நடனத் துறைகளில் தேர்ந்த அறிவும், பயிற்சியும் உடையவராக இருந்தனர். அல்லி கதை முதலான கதைப்பாடல்களின் அடிப்படையில் பாரதத்தில் இல்லாத பாத்திரங்களையும் சேர்த்துக் கூத்துப் பனுவல்களை உருவாக்கியுள்ளனர். கூத்துப் பனுவல்களில் பாடல்களோடு, விருத்தம், திபதை, கந்தர்த்தம், சீசபத்தியம், வசனம் ஆகியவற்றையும் ஆசிரியர்கள் எழுதினார்கள். இலக்கிய மரபு இவர்களைப் பெரிதாக அங்கீகரிக்காத நிலையில், மக்கள் மத்தியில் இவர்களைப் பற்றி சில கதைகள் பிரபலமாக இருந்தன. உதாரணமாக, கலவை குமாரசாமி தம்பிரான், தங்கவேல் ஆசிரியர், இராமச்சந்திரக் கவிராயர், கோணமடை ராமசாமி முதலானவர்கள் பற்றிப் பல கதைகள் வழங்கிவருகின்றன. கூத்துப் பனுவல் ஆசிரியர்கள் சுருள் என்றும் முடுகு என்றும் கூறப்படும் சந்த அமைப்பில் பாடல்களை எழுதி (prioritising rhythm) தமது திறமையை வெளிப்படுத்தினர். இந்தப் புலவர்கள் வட்டார மரபு பழக்கவழக்கங்கள், வழக்காறுகளைப் பயன்படுத்திப் பண்பாட்டில் கால்பதித்தவர்களாக இருக்கின்றனர்‌.

'தமிழில் பாரதக் கதைப்பாடல்' என்கிற தலைப்பில் உரையாற்றிய பேரா. ரா. அழகரசன், பாரதக் கதையையொட்டித் தமிழில் வில்லுப்பாட்டு, அம்மானை, கூத்து, உடுக்கடிப் பாட்டு போன்ற வடிவங்களில் தமிழ் நாட்டார் மரபில் புழக்கத்திலிருந்த கதைப்பாடல்களை முன்வைத்து கதைப்பாடல் என்கிற வடிவம், அதன் கருத்தியல், அதற்கென உள்ள தனித்ததொரு அழகியல் என்று அறியமுடிகிறது. மேற்கத்தியப் பாரம்பரியத்தில் இருந்த ballad (story song) என்ற சொல்லே 'கதைப்பாடல்' எனத் தமிழில் வழங்கப்பட்டதாக மு. அருணாசலம் கூறியதைக் குறிப்பிட்டு, கதைப்பாடல்களின் பொருண்மையை வைத்து உள்ளூர் வரலாற்றைக் காண முயல்கின்ற அதேவேளை, இந்தப் பாடல் வடிவம் உலகளவிலான ஒப்புமையைக் கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது. இதற்கு உதாரணமாக, அணை அல்லது பாலம் கட்ட பலியிடப்பட்ட பெண்களை மையப்படுத்தி ருமேனியா, அல்பேனியா, பால்கன் மற்றும் பல ஐரோப்பிய நாட்டார் வழக்காறுகளிலும், இந்தியாவில் சந்தால் இனத்தவரிமும், கர்நாடகத்திலும் நிலவும் கதைப்பாடலுக்கு இணையாகப் பேச்சியம்மன் கதைப்பாடலும், வழிபாடும் உள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், காப்பிய, வீரயுகப் பாடல் மரபிலிருந்து வேறுபட்டு, சாகசங்களைவிட கதைப் பாத்திரங்களின் அவலமான முடிவுகளையே முதன்மைப்படுத்துகிறது. அதன் மூலம் காப்பிய, நாடகச் சூழலில் தனிமனிதனை முன்வைத்துப் பேசப்பட்ட 'துன்பியலிலிருந்து' வித்தியாசப்பட்டதாக இருக்கிறது. இந்த வகையில் புதினங்களுக்கு முன்னமே சமகாலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, சமூக அக்கறை கொண்டவர்களின் உரிமைக் குரலையும், அவர்கள் சந்தித்த அவலத்தையும் பேசுகிறது.

வெவ்வேறு பண்பாடுகளில் கதைப்பாடல் இடைக்காலத்தில்தான், (15-16 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பின்) உருவாகியிருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது, பிரஞ்சுப்புரட்சி, தொழில்புரட்சிக்கு முன்னமே எழுந்த சனநாயகத்துக்கான குரலாக உள்ளது. ஒவ்வொரு பண்பாட்டிலும் ராபின் ஹூட்டுக்கு இணையான நாயகனும், பெண்களை அநியாயமாகப் பலியிடும் கதையும் கதைப்பாடல் வடிவில் பாடப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்திலேயே பாரதக் கதையில் அங்கீகரிக்கப்படாத கர்ணன், அபிமன்யு ஆகிய பாத்திரங்களையும், அருச்சுனனால் பாதிக்கப்பட்ட பெண்களாக அல்லி, பவளக்கொடி போன்ற பாத்திரங்களையும் முதன்மைப்படுத்துவதாகப் பாரதக் கதைப்பாடல்கள் இருக்கின்றன. இந்த மாற்றத்தைச் சிலப்பதிகாரக் கதை மாந்தர்களான கண்ணகி, மாதவி கதைப்பாடலில் காணமுடியும். பின்னாளில் இந்த இடைக்கால கதைப்பாடல் மரபே லட்சிய உலகில் சஞ்சரிக்கும் காவிய உலகிலிருந்து சமகாலச் சம்பவங்களை மையப்படுத்திய புதின உலகிற்கு நுழைவதற்கான பாதையாக அமைந்தன. இன்றைய புதினங்கள், அரங்கச் செயல்பாடுகள், கவிதைகளில் தொன்மங்களை மறுவாசிப்புச் செய்யும் போக்கும் கதைப்பாடல் மரபாலேயே சாத்தியமாகியுள்ளன. எம். டி. வாசுதேவ நாயரின் பீமன் பற்றிய இரண்டாமிடம் என்ற மலையாள நாவலும், கவிதா கேனின் கர்ணனின் மனைவி என்ற ஆங்கில நாவலும், பிரளயன், ந. முத்துசாமி மங்கை போன்றோரின் மரபை மீட்டெடுக்கும் நவீன அரங்கச் செயல்பாடுகளும், ஆங்கிலக் கவிஞர் ஸ்ரீலதா பாரதப் பெண் பாத்திரங்களை ஒட்டி எழுதியுள்ள கவிதைத் தொகுப்பும் இதற்கு உதாரணமாக உள்ளது.

காலந்தோறும் பாரத நூல்கள் என்ற என் உரையானது, காலந்தோறும் தமிழில் தொடர்ந்து தோன்றிவந்த பாரத நூல்கள் பற்றிய மதிப்பீடாக அமைந்திருந்தது. மகாபாரதத்திற்கு இந்திய எழுத்திலக்கிய மரபில் மற்ற மொழிகளுக்கு இல்லாத செல்வாக்கு தமிழுக்கு மட்டுமே உண்டு என்றும் தமிழில் மிகுதியான பிரதிகள் கிடைத்துள்ளன. சமஸ்கிருதத்தைக் கடந்து முதலில் தமிழில்தான் பாரதக் கதை நூலாக இயற்றப்பட்டதோடு, தென்னகத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியாசர் பெயரால் கிடைக்கும் மகாபாரதப் பிரதிகளில் தமிழ் வழக்குகள் இடம்பெற்றன என்ற பூனாவில் பண்டார்க்கர் ஓரியன்டல் நிறுவனம் நிகழ்த்திய ஒப்பாய்வு தெரிவிக்கிறது. தமிழிலும் இந்த மாற்றங்கள் பெருந்தேவனார் தொடங்கி வில்லிபுத்தூரார், நல்லாப்பிள்ளை ஆகியோரால் தொடர்ந்தது. மேலும், மகாபாரதம் தமிழகத்தில்தான் வழிபாடாகவும் நிகழ்த்து கலையாகவும் (சொற்பொழிவு, கூத்து, சடங்கு) இருக்கிறது. இந்தியாவில் வேறெங்கும் காணமுடியவில்லை.

ஐந்தாம் நூற்றாண்டில் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய நூல் (சில செய்யுட்கள் மட்டும்), சின்னமனூர்ச் செப்பேட்டில் குறிக்கப்படும் பாரத நூல், கல்வெட்டில் குறிக்கப்படும் பாரத நூல் ஆகியவை கிடைக்கவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாரத வெண்பா மூன்று பருவங்கள் மட்டுமே கிடைக்கின்றது. தமிழர்கள் அதிகம் கொண்டாடும் வில்லிபாரதமும் அதைப் பூர்த்தி செய்ய எழுந்த அரங்கநாதக் கவிராயர் பாரதமும், ஆதிபருவத்தந்தாதி பருவமும் இடைக்காலத்தில் எழுந்தவை. தமிழில் பாரதக் கதையை முழுமையாகப் பாடும் நோக்கில் இயற்றப்பட்டது நல்லாப்பிள்ளை பாரதம். மேலும், பாரதம் நாட்டார் கூறுகளை உள்வாங்கி பல கிளைக்கதைகளுடன் காணப்படுகின்றது.

பாரதியார் எதிர் காலனிய பின்னணியில் வைத்துப் படைத்த பாஞ்சாலி சபதம் தமிழ்க் காப்பிய மரபின் சிறப்புகளாலேயே தனிச்சிறப்பு பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சண்முகக் கவிராயர் இயற்றிய பாரத வசன காவியமும் பாரதக் கீர்த்தனையும் பிற்காலத்தில் எழுந்த செய்யுள் அல்லாத மாற்று வடிவங்களாக இருந்தன. இவற்றில் வசன காவியம் தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாகும். இருபதாம் நூற்றாண்டில் பரவலான வாசிப்பைக் கருத்தில் கொண்டு, ராஜாஜி, பிரபஞ்சன், நா. பார்த்தசாரதி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சிவகுமார் முதலானவர்கள் அவரவர் பார்வையில் பாரதத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப படைத்தனர். இந்தப் படைப்புகள் காலந்தோறும் தமிழ் மக்களிடம் பாரதக்கதை பெற்றிருந்த வரவேற்பைக் காட்டுகின்றன.

சங்க இலக்கியம், நாட்டார் வழக்காறுகள், நவீன இலக்கியம் என தமிழ் இலக்கியப் பண்பாட்டு வரலாற்றில் பாரதக் கதைகள் உண்டாக்கிய தாக்கம் என்பதாக அல்லாமல், அவற்றோடு தமிழ்ப் பண்பாடு கொண்டிருந்த ஊடாட்டத்தை மையப்படுத்துவதாக இந்நிகழ்வு அமைந்திருந்ததோடு, தமிழ்ச் சமூகத்தில் பாரதக்கதை பெற்றிருந்த வரவேற்பையும், தமிழ் மரபு பாரதக் கதையோடு நடத்திய உரையாடலையும் எடுத்துக்காட்டும் விதமாக இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

("மகாபாரதமும் தமிழ் இலக்கியங்களும்" என்ற தலைப்பில் தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரித் தமிழ்த்துறையும் சாகித்திய அகாதெமியும் இணைந்து 14.8.2025 அன்று நடத்திய ஓர் உரையரங்கின் கட்டுரை வடிவம்.)

- த. குணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி, சென்னை. 72.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.