தேசம், தேசியம் எனும் கருத்துநிலைகள் மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் தொழில்மயமாக்கலின் உடன்விளைவாகத் தோன்றியவை. இவை, காலனிய மயமாக்கலோடும் நவீனமயமாக்கலோடும் தொடர்புகொண்டவை. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் தேசிய உருவாக்கம் என்பது நவீன காலகட்டத்தைச் சார்ந்தவை என்றாலும் அவற்றின் உருவாக்க முறையில் வேறுபாடுகள் பல உள்ளன. இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி முதலான ஆதிக்க வல்லரசுகளைப் பொறுத்தளவில் தேசியம் என்பது தத்தம் நாட்டு மன்னர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் ஆட்சியை முடித்து மக்களாட்சியை நிலைநிறுத்தியதன் அடிப்படையில் உருவானது. இந்நாடுகளில் தேசியப் பெருமிதம் என்பது தேசிய உணர்வின் அடிப்படையாக இருந்தது. ஆனால், இந்தியா, இலங்கை, பர்மா முதலான ஆசிய நாடுகள் அமெரிக்கா மற்றும் சூடான், ஷெனகல் முதலான பிரெஞ்சு காலனியாதிக்க ஆப்பிரிக்க நாடுகளில் தேசியம் என்பது காலனியாதிக்க எதிர்ப்பையும் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா முதலான பிரிட்டிஷ் குடியேற்ற காலனிய நாடுகளின் தேசிய உணர்வு என்பது பல்பண்பாட்டுத் தன்மையுடன் கூடிய புதிய உணர்வுநிலையாக முகிழ்த்தது. இந்நாடுகள் தமக்கான புதிய தேசிய வரலாற்றை நிகழ்விலிருந்தே கட்டமைத்தன. ஆனால், முன்னர்க் குறிப்பிட்ட ஐரோப்பிய வல்லரசு மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க காலனியாதிக்க நாடுகள் தமக்கான தேசிய அடையாளங்களைப் பழைய வரலாற்றிலிருந்து மீட்டெடுத்தன.

தமிழ்த் தேசியம் : தோற்றமும் புவியியல் எல்லையும்

தேசியம், ஜனநாயகம் என்பது நவீனகால அரசியல் செயல்பாடாக அமைந்திருந்தாலும் கிரேக்கம், சீனம் போன்ற புராதன தேசிய இனங்களின் தேசியத் தொடக்கம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறிக்கப்பட்டுவிட்டது. மொழியை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியத்தின் புவியியல் எல்லை வரையறுப்பு தொல்காப்பியம் முதலே தொடங்கி விட்டது.

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகம்"

எனும் தொல்காப்பியப் பாயிர வரிகள் தமிழ்நாட்டை மொழிவழக்கு அடிப்படையில் தனித்து விளங்கிய ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தியது. தமிழில் 'உலகம்' என்ற சொல் நில எல்லையை வரையறுக்கும் பொதுச்சொல்லாகக் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியர் நிலத்தைக் 'காடுறை' உலகம், 'மைவரை' உலகம் என்று இயற்கையின் அடிப்படையில் பாகுபாடு செய்கின்றார். தொல்காப்பியப் பனுவலுக்குள் 'தமிழ்' என்ற சொல் பலவிடத்துக் (தமிழென் கிளவி) கையாளப்பட்டுள்ளது. வடக்கில் வேங்கடம், தெற்கில் குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல் என்ற தமிழ்நாட்டின் அரசியல் எல்லை வரையறுப்பு சங்ககாலத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது.

"தென்குமரி வடபெருங்கடல்

குண குட கடலாவெல்லை

குன்று மலை காடு நாடு

ஒன்றுபட்டு வழிமொழியக்

கொடிது கடிந்து கோல் திருத்தி" (குறுங்கோழியூர் கிழார், புறம் - 17)

எனவே,

சங்க இலக்கியத்தில் தமிழகம் என்ற சொல் தனி நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லாக (புறம்.168) ஆளப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் ‘நாடு’ என்ற சொல் 'தமிழ்கூறு நல்லுலகின்’ உட்பிரிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழ் உலகம் ஒட்டுமொத்த புவிப்பரப்பின் ஒரு பகுதி என்ற உணர்வுநிலையும் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. 'வையகம்' என்ற பெயரில் இப்புவிப்பரப்பு அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. சங்க காலத்திலேயே கிரேக்கம், இலத்தீன், சீனம் ஆகிய நாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு தமிழர்களுக்கு இருந்திருப்பதால் ஒட்டுமொத்த புவியியல் குறித்த நனவுநிலை இருந்திருக்கிறது. மேலும் பண்டைய இந்தியாவின் ஏனைய பகுதிகள் குறிப்பாக இன்றைய வடஇந்தியப் பகுதிகள் குறித்த ஓர்மையும் பழந்தமிழர்களுக்கு இருந்திருப்பதைச் சங்க இலக்கியங்களில் வரும் நந்தன், மோரியர் (மௌரியர்) முதலான வடபுல வேந்தர்கள், கங்கை, பாடலி முதலான வடபுல நிலப்பரப்புகள் குறித்த பதிவுகளும் உணர்த்துகின்றன. தமிழ்மொழி ஏனைய மொழிகளைப் போல் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் வழங்காமல் பல வட்டாரங்களிலும், பல தேசங்களிலும் வழங்கி வந்திருப்பதைப் பின்வரும் நன்னூல் நூற்பாவழி அறிய முடிகிறது.

"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப” (நன்.சொல்.273)

இதற்கு உரை எழுதிய மயிலைநாதர் (14.ஆம்.நூற்றாண்டு) தமிழ் நிலப்பரப்பில் தென்பாண்டி, குட்ட, குட, கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவா வடதலை, சீதம், மலை, புனல் ஆகிய 12 வட்டாரங்களில் திசைச்சொற்களாகத் தமிழ் வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார்.

இவ்வட்டாரங்களுள் சில இன்றைய வடகேரள, ஆந்திர மாநிலப்பகுதியைச் சேர்ந்தவை. மேலும் மயிலைநாதர் இப்புவியில் தமிழ்நாடு, சீனம், சிங்களம், சோணகம் (அரபு), சாவகம் (இந்தோனேசியா), துளு, கன்னடம், கொல்லம், தெலுங்கு, கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம் (மலேசியா), கவுடம், கோசலம் ஆகிய 18 தேசங்களில் தமிழ் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். திசைச்சொற்கள் மேற்குறிப்பிட்ட 12 வட்டாரங்களில் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் தமிழ் ஒற்றைப்பண்பாடு கொண்டதாக அல்லாமல் பல துணைப்பண்பாடுகள் (Sub cultures) கொண்டதாக விளங்கியிருப்பதை அறிய முடிகிறது. அத்துடன் தமிழ் 18 தேசங்களில் வழங்கப்பட்டது எனும் பதிவின் மூலம் தமிழ்நாடும் தமிழ்மொழியும் பிற உலக வட்டாரங்களின் ஓர்மையில் பதிவாகியிருந்ததை அறிய முடிகிறது. இதற்குக் கிரேக்க ரோமானிய சீனச் சான்றுகளும் உள்ளன. இவையெல்லாம் 'இந்தியா' என்கிற அரசியல் ரீதியான ஒரு பெருந்தேசம் உருவாவதற்குமுன் 2000 ஆண்டுகளாகத் தமிழ்மொழி இன, பண்பாட்டு அரசியல் அடிப்படையில் தனித்த அடையாளங்களுடன் விளங்கியிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றன.

தமிழ்த் தேசிய அடையாளங்களின் உருவாக்கமும் மாற்றமும்

தமிழ் என்பதன் அடையாளம் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றது. சங்ககாலத்தில் மொழி என்பதன் அடிப்படையிலேயே இதன் அடையாளம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் என்பதற்கு, சமயம் முதலான பிற பண்பாட்டு அடையாளங்கள் ஏற்றப்படவில்லை. ஆயின், நிலப்பரப்பு, குடிகள், ஆறு, வேந்தர் ஆகியோர் 'தமிழ்' எனும் அடையாளத்தோடு இணைத்துப் பேசப்பட்டுள்ளனர். தமிழ்த்தேசம் 'வடவேங்கடம் தென்குமரி’ என்கிற எல்லைப்பரப்புக்குட்பட்டதாக இருந்தாலும், ஒரு பொது ஆட்சியாளரின் கீழ் இல்லாமல் பல நிலத்தலைவர்கள், சீறூர் மன்னர்கள், வேந்தர்கள் ஆளக்கூடிய பகுதியாக இருந்திருக்கின்றது. ஆயினும் இப்பகுதி, 'தமிழகம்' (புறம்.168), 'தமிழ்நாடு' (பரி.ம.9) ஆகிய பொது அடையாளத்தோடும் இங்கு வாழ்வோர் ‘தமிழ்க்குடிகள்' (பரி.ம.8) என்ற அடையாளத்தோடும் சுட்டப்பட்டுள்ளனர்.

நிலம், தொழில், பண்பாட்டு நடவடிக்கைகளில் வேறுபட்ட தன்மைகளைக்கொண்ட தமிழ்கூறு நல்லுலகை ஒரே சமூகப் பண்பாட்டு அரசியல் நிலப்பரப்பாக ஒருங்கிணைக்கும் முயற்சி சிலப்பதிகாரக் காலத்தில் நிகழ்ந்துள்ளது. வடதிசை வேந்தர்களுக்கு எதிராகத் தென்தமிழ்நாட்டின் வில், கயல், புலி ஆகிய அரச அடையாளங்கள் ஒன்றிணைத்து நிறுத்தப்படுகின்றன. தென்தமிழ் X வடஆரியம் என்கின்ற பிரதேச அடிப்படையிலான ‘பண்பாட்டு அடையாள முரண்' சிலம்பில் முதலில் உருவாக்கப்படுகின்றது. இவ்வகையான எழுச்சியும் ஒருங்கிணைப்பும் விரிந்த வணிக நடவடிக்கைகளுக்கு அனுகூலமாக இருந்திருக்கலாம். பல்லவர் காலத்தில் அவைதீக சமயங்களுக்கு எதிராக, பக்தி எனும் உணர்வின் அடிப்படையில் தமிழர்களைச் சைவர்களாகவும் வைணவர்களாகவும் ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்றது. இக்கட்டத்தில் தமிழ் சமய அடையாளங்களைப் பெற்றது.

வேறுவகையில் சொல்வதானால், வைதீக சமயங்கள் தம்மைத் தமிழ்வழி அடையாளப்படுத்திக் கொண்டன. தமது கடவுளரைத் தமிழ்க் கடவுளராகவும் காட்ட முயற்சித்தன. சிவன் தென்னவனாகவும், தென்பாண்டி நாட்டானாகவும் அடையாளப் படுத்தப்பட்டான். ஞானசம்பந்தர், தன்னைத் 'தமிழ் ஞானசம்பந்தனா'கவும் 'தமிழ்க்கிழமை ஞானசம்பந்தனா’ கவும் நற்றமிழ் ஞானசம்பந்தனா'கவும் அடையாளப்படுத்திக் கொண்டார். அதேபோது, நான்மறையான், வேதியன், அருமறை ஞானசம்பந்தன் என்கின்ற வைதீக அடையாளத்தையும் அவர் கைவிடத் தயாராக இல்லை. எனவே பக்திக் காலகட்டத்தில் சமய அரசியலுக்குத் தமிழ்மொழி சார்ந்த அடையாளம் பயன்படுத்தப்பட்டது. தெலுங்குமொழி பேசும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அருணகிரிநாதர் மீண்டும் இதே தமிழ் அடையாளத்தைக் கையிலெடுத்தார். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்காலத்தில் தமிழிலக்கியத்தில் இந்தியப் பெருந் தேசியத்திற்கான அடையாள உருவாக்கமும் தமிழ்த்தேசியம் என்கிற துணைத் தேசியத்திற்கான அடையாள உருவாக்கமும் நிகழ்ந்தன. பாரதியாரில் தொடங்கி, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் வரை இவ்வகையான உருவாக்கம் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. எனவே, தமிழர்களின் தேசம், தேசியம் குறித்த கருத்தாக்கம் நவீன காலத்தின் கருத்தியலாக அல்லாமல் பண்டையத் தோற்றமூலமும் தொடர்ச்சியும் கொண்டதாக விளங்குகிறது.

தேசிய இலக்கியம்: உருவாக்கமும் சிக்கல்களும்

நவீன காலத்தில் உருவான தேசங்களின் தேசிய அடையாளங்கள் பழங்கால வரலாற்றிலிருந்தும் நிகழ்கால சமூகப்பண்பாட்டு வாழ்விலிருந்தும் உருவாக்கப்பட்டன. கனடா போன்ற சில நவீன தேசங்களின் அடையாள உருவாக்கம் முற்றுப்பெறாமல் இன்னும் தொடர் உருவாக்க நிலையில் இருக்கிறது. நவீன தேசங்களின் எழுச்சியில் தேசிய இலக்கியம் எனும் கருத்தாக்கமும் உருவாக்கம் பெற்றது. குறிப்பாக ஒப்பிலக்கியத்தில் தேசிய இலக்கியம், உலக இலக்கியம், பொதுமை இலக்கியம் என்பன தனித்தனியானதாக வரையறுத்துக் காட்டப்பட்டன. பிரெஞ்சு நாட்டு ஒப்பிலக்கிய அறிஞர்கள், தத்தமது தேசிய இலக்கியங்களின் தனிப்பண்புகளை ஆராய்வதே ஒப்பிலக்கியத்தின் நோக்கமாக வரையறுத்தனர். பிரெஞ்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பானிஷ், இத்தாலி முதலிய நாடுகளின் தேசிய இலக்கியங்களை ஐரோப்பியப் பொதுவெளிக்குள் ஒருங்கிணைப்பதே ஒப்பிலக்கியத்தின் செயல்பாடாக இருந்தது. தேசிய இலக்கியத்தின் இருப்பைச் சுயநிர்ணயம் செய்வதாக இது அமைந்தது. தேசியப் பண்பு உருவாக்கத்தில் தேசிய இலக்கியம் அடிப்படைக் கூறாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட நாட்டின் குடிமக்களால் உற்பத்தி செய்யப்படும் இலக்கியப் பனுவல்கள் அந்த நாட்டின் தேசிய இலக்கியமாக அடையாளப்படுத்தப்பட்டன. தேசிய இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டினுடைய தேசியப் பண்பின் வெளிப்பாடாக மட்டுமின்றி அந்த நாட்டின் பெருமைக்கும் சட்டப்பூர்வமான உரிமைக்கும் ஆவணமாக விளங்குகிறது. சுருங்கக்கூறின் தேசிய இலக்கியம் என்பது ஒரு தேசத்தின் சொந்த வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுகளிலிருந்து உயிரோட்டமாய் முகிழ்த்தெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியப் புனைவியல் இலக்கியத்தின் மையவிசையாக தேசியம் விளங்கியிருப்பதை ரெனிவெல்லக் எடுத்துக்காட்டியுள்ளார்.

தேசிய இலக்கியம் என்பதை வரையறுப்பதில் புவியியல் அளவுகோல் சார்ந்தும் அடையாளங்கள் சார்ந்தும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. தேசிய இலக்கியம் என்பதை வரையறுப்பதில் நாடு, மொழி, இனம் ஆகிய மூன்றும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தளவில் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தேசிய இனம் என்கிற தேசிய வரையறுப்பு பிரான்ஸ், ஜெர்மன் முதலான நாடுகளுக்குப் பொருந்தி வரும். ஆனால், இந்தியா போன்ற பல தேசிய இனங்கள் வாழுகின்ற நாட்டில் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தேசியம் என்ற வரையறுப்பு பொருந்தாது. இந்தியப் பெருந்தேசியத்தின் உருவாக்கத்தின்போதே தேசியஇனங்கள் சார்ந்து தமிழ், தெலுங்கு, வங்கம், மராத்தி என்கின்ற பல துணைத்தேசியங்கள் உருவாயின. இத்துணைத்தேசியங்கள் தமக்கான வரலாற்றைக் கட்டமைக்கின்றபோது, பழைய சமூகப் பண்பாட்டு இலக்கிய அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்தன. தேசிய இலக்கியத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் வழங்குகின்ற தமிழிலக்கியமானது, இந்தியத் தேசிய இலக்கியம், தமிழ்த் தேசிய இலக்கியம் என்கிற இருமை அடையாளம் கொண்டதாக அமைந்துள்ளது. அது ஏனைய இந்திய இலக்கியச் சமூகங்களோடு இடையீட்டு உறவும் ஊடாட்டமும் கொண்டுள்ளது.

ஒரு மொழி பல தேசிய இலக்கியங்கள்

ஆங்கில மொழிவழி எழுதப்படும் தேசிய இலக்கியம் என்பது ஒன்றல்ல. ஆங்கில மொழியில் பல தேசிய இனங்களைச் சார்ந்தோர் இலக்கியங்களைப் படைக்கின்றனர். எனவே, ஆங்கில மொழியில் அமெரிக்கத் தேசிய இலக்கியம், ஆஸ்திரேலிய தேசிய இலக்கியம், கனடாத் தேசிய இலக்கியம் எனப் பல நாடுகளைச் சார்ந்த தேசிய இலக்கியங்கள் பிறப்பெடுக்கின்றன. அதேபோது ஐரோப்பாவிற்கு வெளியே வாழுகின்ற இந்தியர், ஆப்பிரிக்கர், மேற்கு இந்தியர் எனப் பல பின்னைக் காலனிய நாடுகளின் தேசிய இனங்களைச் சார்ந்த படைப்பாளிகளும் ஆங்கில மொழியில் எழுதுகின்றனர். எனவே, ஆங்கில மொழியில் எழுதப்படுகின்ற இலக்கியம் என்பது சர்வதேசியத்தன்மை கொண்டதாகவும் பல்பண்பாட்டுப் பின்னணி கொண்டதாகவும் அமைந்துள்ளது. எனவே, ஆங்கிலத்திலுள்ள இலக்கியம் தற்போது வெவ்வேறு நிலங்களிலிருந்து உருவாகும் கலப்பினத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்படுகின்ற இவ்விலக்கியங்களுக்கிடையில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல்களும் தாக்கங்களும் நிகழ்கின்றன.

ஆங்கிலத்தைப் போன்றே தமிழ் மொழியிலும் பல தேசிய இலக்கியங்கள் உருவாகின்றன. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தத்தமது நாட்டு அடையாளங்களோடு நிலவியற் பண்பாட்டுக் கூறுகளுடன் தனித்துவமான தமிழ்த்தேசிய இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர். ஆங்கிலத்தில் எழுதப்படுகின்ற தேசிய இலக்கியங்களுக்கும் தமிழில் எழுதப்படுகின்ற தேசிய இலக்கியங்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆங்கில மொழியைப் பொறுத்தவரையில் பல நாடுகளில் வாழுகின்ற பல தேசிய இனங்களைச் சார்ந்தோர் தமது தேசிய இலக்கியங்களை உருவாக்குகின்றனர். ஆனால், தமிழைப் பொறுத்தளவில் பல நாடுகளிலிருந்து படைக்கப்பட்டாலும் அவ்விலக்கியப் பனுவல்களை உருவாக்குகின்றவர்கள் தமிழ் என்கிற ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இன்று தமிழ்த்தேசியத்தின் புவியியல் எல்லை வரையறுப்பு என்பது நாடுகளைக் கடந்ததாக இருக்கிறது. தமிழ் இலக்கியம் என்கிற பெரும் மரத்தின் கிளைகளாகத் தாய்த்தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம், பர்மியத் தமிழ் இலக்கியம் என்பன விளங்குகின்றன. ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இலக்கியத்தின் துணைப்பண்பாட்டுத் தேசிய இலக்கியங்களாக இக்கிளைகள் அமைந்துள்ளன. ஆயினும், இம்மரத்துக்கான வேர்களும் நீர்களும் பல மண்ணில் பரவியிருக்கின்றன.

தமிழில் தோன்றும் பெருந்தேசியமும் துணைத்தேசியமும்

தேசிய இலக்கியங்கள் அந்தந்த நாட்டின் பெருந்தேசிய அடையாளத்தையும் தமிழ் என்கிற தனித்த துணைத்தேசிய அடையாளத்தையும் பெற்று விளங்குகின்றன. தமிழின் பொதுப்பண்பாட்டு மரபுகளும் அந்தந்த நாடு சார்ந்த தனித்த வட்டார சமூகப்பண்பாட்டு மரபுகளும் இத்துணைத்தேசிய இலக்கியங்களில் ஊடாடி நிற்கின்றன. இந்தியாவில் வழங்கும் தமிழ்த்தேசிய இலக்கியம் இந்திய இலக்கியத்தின் பொதுக்கூறுகளையும் தமிழ் இலக்கியத்தின் தனித்த கூறுகளையும் பெற்று விளங்குகின்றன. வேறுவகையில் சொல்வதானால், இந்தியப் பெருந்தேசியத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ்த்துணைத்தேசியத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் இந்திய தமிழ்த்தேசிய இலக்கியம் பெற்று விளங்குகின்றது. இந்தியத் தமிழ்த் தேசிய இலக்கியம், வங்காள இலக்கியம், ஹிந்தி இலக்கியம், மலையாள இலக்கியம், தெலுங்கு இலக்கியம் முதலான இந்தியத் துணைத்தேசிய இலக்கியங்களோடு ஒட்டும் உறவும் கொண்டுள்ளன.

தாகூரும் வங்க எழுத்தாளர்களும் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குப் பெரும் உந்துதலைத் தந்துள்ளார்கள். மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர், மு.வரதராசனாரின் நாவல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். திருமந்திரம் கேரள சமூகப் புரட்சியாளர் நாராயணகுருவிடமும் தெலுங்கு, கன்னட வீரசைவ இலக்கியப் படைப்பாளிகளிடமும் தாக்கம் செலுத்தியுள்ளது. தமிழ்ப்பக்தி இலக்கியங்கள் தென்னக எல்லைகளைக் கடந்து வங்காளத்தின் சைதன்யர் வரை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. கபீர், கோரக்நாத் முதலான வடஇந்திய ஞானியர்கள் தமிழ்ச்சித்தர்களிடம் ஊடுருவியுள்ளனர். இதேபோன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மிய தமிழ்த்தேசிய இலக்கியங்களில் அந்தந்த நாட்டு பெருந்தேசியப் பண்பாட்டு மரபுகளின் ஊடாட்டத்தை அவதானிக்கலாம். தமிழ்மொழியில் எழுதப்படும் மேற்குறிப்பிட்ட நாடுகளின் தமிழ்த்தேசிய இலக்கியங்களுக்கு மூலமாக ஊற்றுக்கண்ணாக - எல்லாருக்குமான பொது இலக்கிய இருப்பாக சங்கஇலக்கியம் தொடங்கி காலனிய ஆட்சிக்காலத்திற்கு முந்தைய சிற்றிலக்கியக் காலம் வரை உள்ள தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் அடையாளங்களும் தனித்துவப் பாரம்பரியமும்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்கம் சங்கப்புலவன் மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து தொடங்குவதாக ஈழத்து அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நன்னூல் காலம்வரை ஈழம் தமிழ் வழங்கும் ஒரு தனிப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. திசைச்சொல்லைப் போன்று ஈழத்து இலக்கியம் திசை இலக்கியமாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். ஈழத்துப் படைப்பாளிகள் தமிழ் நிலத்திலிருந்து செயல்பட்டதைப் போல் தமிழ்ப் படைப்பாளிகள் ஈழத்து நிலப்பரப்புக்குச் சென்று வந்துள்ளமையை தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. திருக்கோணேச்சுரமும், திருநாகேச்சுரமும் பாடல்பெற்ற சிவத்தலங்களாக விளங்குகின்றன. பிற்காலச் சோழர்கள் இரண்டு நூற்றாண்டுகளாக ஈழத்தை ஆண்டாலும் அக்காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் பற்றி எவ்விதமான குறிப்புகளும் இல்லை. ஈழத்து இலக்கியத்தின் தனிப்பாரம்பரியத்தை முதலில் அடையாளப்படுத்துவதாக திருக்கோணேஸ்வர கல்வெட்டுப் பாடல்கள் அமைந்துள்ளன. பேராசிரியர் சிவத்தம்பி ஆரிய சக்கரவர்த்திகள் காலம்தான் (கி.பி.14ஆம் நூற்றாண்டு) ஈழத்தில் தனித்துவமான ஓர் இலக்கியப் பாரம்பரியம் தோன்றுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட காலம் என்று குறிப்பிடுகின்றார். ஆரிய சக்கரவர்த்தியான மூன்றாம் பராக்கிரம பாகுவின் அரசவையில் தேனுவரைப் பெருமாள் போஜராஜர் அரங்கேற்றிய (கி.பி.1310) சரசோதிட மாலை எனும் நூலே ஈழத்து இலக்கியத்தின் முதல் தமிழ் நூலாகக் கருதப்படுகின்றது (2010:ப.16). தாய்த்தமிழகப் புலவர்களும் ஈழத்துப் புலவர்களும் இந்தியப் பொதுமரபின் முதன்மை அடையாளமாகக் கருதப்படுகின்ற சமஸ்கிருத இலக்கியத்தோடு ஒட்டும் உறவும் வைத்திருந்தனர்.

கம்பர் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததைப்போல் ஈழத்து அரசப்புலவர் அரசகேசரி (கி.பி.14ஆம்.நூற்றாண்டு) காளிதாசரின் இரகு வம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.இடைக்காலத்தில் ஈழத்து நாட்டார் காப்பிய மரபில் தோன்றி 'கண்ணகி வழக்குரை' தமிழகத்தின் மையப் பண்பாட்டுப் பகுதிக்கும் ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டிற்குமான ஒட்டையும் உறவையும் துலக்கம் செய்கிறது. ஆரிய சக்கரவர்த்திகளுக்குப் பிந்தைய போர்த்துகீசிய டச்சுக்காரர்களின் காலனிய ஆட்சிக்காலத்தில் ஈழம் இந்திய நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் ஈழம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.

காலனிய அனுபவத்தை எதிர்கொண்டதில் இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு இல்லை. காலனிய ஆட்சியின் விளைவான ஆங்கிலக் கல்விமுறை, நவீனமயமாக்கம், தொழில்மயமாக்கம், அச்சு ஊடகத்தின் வருகை, மேற்கத்திய இலக்கிய அறிமுகம் என்பனவற்றிற்கான எதிர்வினைகள் ஈழத்திலும் தமிழகத்திலும் ஒன்றுபோலவே இருந்தன. போர்ச்சுகீசிய, டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் எழுந்த இலக்கியங்கள் தமிழ்ச் சிற்றிலக்கிய மரபை உள்வாங்குவதாகவும் அதன் தொடர்ச்சியாகவும் அமைந்தது. குறவஞ்சி, அம்மானை போன்ற இலக்கியங்கள் கிறித்தவ சமயப் பண்பாட்டை வெளிப்படுத்த உதவின. இக்காலத்தில், கிறித்தவத்திற்கு எதிர்நிலையாக சைவ சமயம் சார்ந்த சில தலபுராணங்களும் எழுந்துள்ளன. இதற்குப் பிந்தைய 19ஆம் நூற்றாண்டு அனுபவங்கள் முன்பு குறிப்பிட்டதைப்போலவே ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் ஒன்றுபோலத்தான் இருந்தன. ஈழத்துத் தமிழிலக்கிய தனிப்பாரம்பரியத்தைத் துலக்குவதாக ஜோதிடம், மருத்துவம் சார்ந்த பாரம்பரிய அறிவு நூல்கள் எழுந்துள்ளன. இது தாய்த்தமிழக தேசியஇலக்கியத்தில் இல்லாத ஒரு தனிக்கூறாகும். இத்தகைய மருத்துவம், சோதிடம் சார்ந்த நூல்கள் தமிழகத்தில் இலக்கியப்பரப்பிற்கு வெளியேதான் இருந்துள்ளன. ஆங்கிலேய காலனிய ஆட்சி எதிர்ப்பும் நாவல் முதலான நவீன இலக்கியங்களின் தோற்ற வரலாறும் ஈழத்திலும் தமிழகத்திலும் பொதுமைப்பண்புடையனவாகவே அமைந்துள்ளன.

இந்திய இலங்கை விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் இந்தியப்பெருந்தேசியத்தின்வழி பாரதமாதாவைத் துதித்தது போல் ஈழத்தமிழ்க் கவிஞர்கள் ஈழப் பெருந்தேசியத்தின்வழி இலங்காதேவியைத் துதித்தனர். நவீன ஈழத்துக்கவிதை, நாவல், சிறுகதை இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சிப் போக்குகளும் நவீனத்தமிழ்க் கவிதை, நாவல், சிறுகதை இலக்கியங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிப்போக்குகளோடு இணைந்தும் இயைந்தும் செல்கிறது. பிரமிள் என்கிற ஈழத்துப் படைப்பாளி தமிழ்ப் புதுக்கவிதையின் முதன்மைப் படைப்பாளியாகவே அடையாளம் காணப்படுகின்றார். இதேபோன்று பெருந்தேசியம், திராவிடம், மார்க்சியம், தமிழ்த்தேசியம் என்கிற கருத்துநிலைகள் ஈழத்து இலக்கியத்திலும் இந்தியத்தமிழ் இலக்கியத்திலும் தொடர்ச்சியாக ஊடாடி வந்திருப்பதை ஒரு பொதுவான அம்சமாகக் குறிப்பிடலாம். திறனாய்வைப் பொறுத்தளவில் கைலாசபதி, சிவத்தம்பி, சு.வித்யானந்தன், ஆ.வேலுப்பிள்ளை, எம்.ஏ.நுஃமான் ஆகியோரது ஆக்கங்கள் ஈழத்துத் திறனாய்வு ஆக்கங்கள் என்பதாக அடையாளப்படுத்தப்படாமல் தமிழ்த்திறனாய்வின் ஒரு அங்கமாகவே விளங்குகின்றன. ஈழத்துப்பெண்ணியக் கவிதை தமிழ்ப்பெண்ணியக் கவிஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறது. இவ்வாறு நவீன ஈழத்துத் தமிழ் இலக்கியமும் இந்தியத் தமிழ் இலக்கியமும் கொள்வினைகளும் கொடுப்பினைகளும் கொண்டவையாக பரஸ்பர, ஊடாட்டங்கள் கொண்டவையாக விளங்குகின்றன.

ஈழத்துத் தமிழ்த் தேசியத்தின் துணைப் பண்பாட்டுக் கூறுகள்

இந்தியத் தமிழ் இலக்கியத்தில் கொங்கு வட்டாரம், நாஞ்சில் வட்டாரம், சென்னை வட்டாரம், கரிசல் வட்டாரம் என்பதைப் போன்ற தனித்த வட்டாரப் பண்பாடுகள் தமிழ்ப்பொதுமையிலிருந்து விலகிய சில தனித்த மொழி, சமூகப்பண்பாட்டுக் கூறுகள் கொண்டவையாக தனித்த வட்டார இலக்கியங்களின் உருவாக்கத்தைக் காண முடிகிறது. இவ்வட்டார இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறைத் தமிழின் துணைப்பண்பாட்டுக் கூறுகளாகக் கருதலாம். இதேபோன்று ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆறுவகையான வட்டார அல்லது பிரதேச வேறுபாட்டுத்தன்மை இருக்கின்றன.

1.            மட்டக்களப்பு

2.            திருகோணமலை

3.            வன்னி

4.            மன்னார்

5.            யாழ்ப்பாணம்

6.            மலையகம்

7.            மேற்குக் கரையோரம் (பிரதானமாகப் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரை)

8.            தென்பகுதி (பாணந்துறை முதல் திக்கெல்லை வரை)

எனும் எட்டு வகையான வட்டாரப்பண்பாட்டை ஈழத்துதேசியத்தின் துணைப்பண்பாடாக பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார் (2010: ப.5).

தமிழகத்தில் உள்ள வட்டார அடிப்படையிலான துணைப் பண்பாடுகளுக்கிடையில் தேசியஇனங்கள் சார்ந்த வேறுபாடுகள் இல்லை. ஆனால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில்

1.            வடகிழக்கு தமிழ்ப்பகுதியைச் சார்ந்த பூர்வீகத் தமிழர்

2.            இந்திய வம்சாவளியைச் சார்ந்த மலையகத் தமிழர்

3.            இஸ்லாமியராக அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்பேசும் முஸ்லிம்கள்

ஆகிய மூன்று வகையான தமிழ்த் தேசிய இனங்களின் வெளிப்பாட்டைப் பார்க்கமுடிகிறது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தின் ஒரு துணைப்பண்பாடாக அமைகிறது. அத்துணைப்பண்பாடு பல உட்துணைப்பண்பாடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்திய தேசிய பரப்பிற்குட்பட்ட தாய்த்தமிழ் இலக்கியம் மையமான இலக்கியமாகவும் ஏனையத் தமிழ்த் தேசிய இலக்கியங்கள் (ஈழம், சிங்கப்பூர், மலேசியா)அயலகத் தமிழ் இலக்கியமாக வரையறுக்கும் போக்கு நிகழ்கிறது. ஆயின் இது சார்பியலானது. இந்தியத் தமிழர்களுக்கு ஈழத்து இலக்கியம் அயலக இலக்கியமாக இருப்பதைப் போன்றே ஈழத்துத் தமிழர்களுக்கு இந்தியத் தமிழ் இலக்கியம் அயலக இலக்கியம்தான்.

நாடுகடந்த தேசியமும் புவிசார் அரசியலும்

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இலங்கையில் நிகழ்ந்த பேரினவாத அரசியல் செயல்பாட்டால் ஈழத்தமிழர்கள் பலர் இங்கிலாந்து, பிரான்சு, கனடா, ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். 1990களுக்குப் பிறகு, உலகெங்கும் உருவான பின்னை நவீனத்துவக் காலகட்டத்தில் செயற்கைக்கோள் வழியாக உருவான இணையதளமும் இணையதளவெளியும் சுழிய வெளியும் (Cyber space) தோற்றநிலையான எதார்த்தமும் (Virtual Reality) இலக்கியப் படைப்பாக்கத்திலும் இலக்கிய வாசிப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. வெளிக்குள் பயணமாகும்பொழுது, அதன் தேசிய எல்லைகள் தகர்ந்தன. வடவேங்கடம் தென்குமரி என்கிற இலக்கிய மையமும் தகர்ந்தது. உலகிலுள்ள எல்லா நாட்டுத் தமிழர்களும் எல்லைகளைக் கடந்து ஒரே இலக்கியப் பொதுவெளியில் செயல்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டது. இணையதள இதழ்களின் உருவாக்கமும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வும் இச்செயல்பாட்டை மேலும் துரிதப்படுத்தியது.

ஒரு தேசத்தின் அடையாளம் மொழி, நிலம் ஆகிய இரண்டின்வழி கட்டமைக்கப்படும். தேசிய இலக்கியத்தின் அடையாளமும் இத்தகையதே. ஆனால், மேற்காட்டிய பின்னைநவீனத்துவச் சூழல்கள் தேசம், தேசிய இலக்கியம் என்பதை நிரந்தர நிலம் சார்ந்து வரையறுக்கமுடியாத சூழலை உருவாக்கின. தமிழ்த்தேசிய இலக்கியத்தின் அடையாளமாகத் தமிழ்மொழி மட்டுமே அமைந்தது. இதனால், தமிழ்த்தேசியம், நாடுகளைக்கடந்த தேசியமாக மாறியது. ஈழத்தமிழர்கள் நாடுகடந்த தேசிய அரசியலை புவிசார் அரசியலை - முன்னெடுப்பதும் இத்தகைய பின்புலத்தில்தான். தேசியம் என்பது நாடுகளைக் கடப்பது, தமிழ்த்தேசியத்தின் பிரச்சினை மட்டுமன்று. உலக நாடுகள் பலவற்றின் தேசிய அடையாளங்களும் நாடுகளைக் கடப்பது பொது நியதியாகிவிட்டது. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உருவாக்கத்தில் - காலனியாதிக்கத்தில் - உருவான தேசிய வரைபடங்கள் இப்போது விவாதத்திற்குட்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தேசிய நிலப்பரப்புக்குள் பல தேசிய இனங்கள் குடியேறுவதும் குடியிறக்கமாவதும் அகதிகளாக அடைக்கலமாவதும் பின்னைக்காலனிய சூழலில் எதார்த்தமான நிகழ்வு.

தேசிய இலக்கியம் உலக இலக்கியமாதல்

19,20ஆம் நூற்றாண்டுகளில் உருவான தேசியஇலக்கியங்களில் தேசப்பற்றும் தேசியம் சார்ந்த போராட்ட ஆவேசமும் தேசிய மனோபாவத்தின் முற்போக்கான வளர்ச்சியும் தேசத்தின் பழைய வரலாறும் நிலவியற் பெருமையும் விதந்து பேசப்பட்டன.

இந்தியத் தமிழ்தேசிய இலக்கியங்கள் இன்றைய சூழலில் ஒருபுறம் பெண்ணியம், தலித்தியம் போன்ற கூறுபடுத்தப்பட்ட நுண்ணரசியலையும் மற்றொரு புறம் உலகமயமாக்கத்தின் சர்வதேசியப் பிரச்சினைகளான சுற்றுச்சூழல் சிதைவு, குழும முதலாளித்துவத்தின் ஆதிக்கம் ஆகியன குறித்துப் பேசுபவையாக இருக்கின்றன. நிலப்பரப்பு சார்ந்த தேசிய அடையாளம் என்பது, இலக்கியச் சொல்லாடல்களுக்குள் வராத அரசியல் சார்ந்த சொல்லாடல்களாகவே மாறிவிட்டது. 'கோதே'யும் Ôகாரல் மார்க்ஸ்' குறிப்பிட்ட உலக இலக்கியம் குறித்த விழிப்புணர்வு கவனம் பெறுகின்றது. மொழிபெயர்ப்புகள் ஓர் இலக்கியத்திற்குள் பன்மை இலக்கிய அமைப்புகளை உருவாக்குவதாக ‘இவான் சோகர்' குறிப்பிடுவார். மொழிபெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கியத்திற்குள் மலையாள இலக்கியம், கஷ்மீரி இலக்கியம், சீன இலக்கியம், பிரெஞ்சு இலக்கியம், ஆங்கில இலக்கியம் எனப் பல தேசிய இலக்கியங்கள் வந்து சேர்கின்றன. இதன் வாயிலாகத் தமிழிலக்கியப் பரப்புக்குள் இலக்கியங்கள் ஒன்று கலக்கின்றன. உலக எழுத்தாளர்களின் வேறுபட்ட அனுபவங்கள் தமிழ் வாசக மனங்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால், இன்றைய தமிழ்த்தேசிய இலக்கியம் இத்தகைய வேறுபட்ட உலக அனுபவங்களைத் தமிழ்ப் படைப்பாளிகளின் மனங்கள் வாயிலாகவே கிடைக்கச் செய்கின்றது. தமிழ்ப்படைப்பாளிகளின் அனுபவ மண்டலங்களுக்குள் வேறுபட்ட உலக அனுபவங்கள் ஊடுருவுகின்றன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றது. தமிழின் மரபான ஐந்து திணைகளைக் (நிலம்) கடந்து, ஆறாந்திணையாக இவ்விலக்கியம் உருவெடுக்கின்றது. இருபது நூற்றாண்டுத் தமிழிலக்கியங்களுக்குள் வந்துசேராத ஐரோப்பிய, அராபிய அயல்திணைகள் எலும்பைத் துளைக்கும் ஊசிக்குளிரும் அனுபவ வந்துசேர்கின்றன.

வெண்பனி படர்ந்த நிலப்பரப்புகளும் நள்ளிரவுச்சூரியனும்-ஓக், பைன், அஸ்க், கிரான் மரங்களும்- மக்பாய் பறவையும்-வேசிகள் நடமாடும் பாரிஸ் நகரத்தெருக்களும்- ஜெர்மன் நாட்டு நிறவெறியர்கள் ஆயுதங்களுடன் அலையும் அல்ஜீரியக் கறுப்பர்களும் ‘லக்சம்பரக்’ வீதிகளும் தமிழ்க் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் மிதந்து திரிகின்றனர். தமிழிலக்கியத்தின் முகம் தேச எல்லைகளைக்கடந்து, உலக இலக்கியமாக மலர்ந்துள்ளது.

துணைநூற்பட்டியல்

1.            ஆனந்தகுமார்.பா, “தமிழ்த் தேசிய இலக்கியங்கள் - வரையறைகளும் அடையாளங்களும்”, காக்கைச் சிறகினிலே, மாத இதழ், மார்ச்சு 2018.

2. ஆனந்தகுமார்.பா, “பாரதியார் கவிதைகளில் தேசியம் - ஒரு பின்னைக் காலனிய வாசிப்பு”, பாரதி என்றென்றும், பொன்னீலன் (ப.ஆ.,), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2008.

3.            கைலாசபதி.க, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், மக்கள் வெளியீடு, சென்னை, 1986.

4.            சிவத்தம்பி.கா, ஈழத்தில் தமிழ் இலக்கியம், குமரன் புத்தக இல்லம், திளிஜிளிஜி, 2010.

5. Carole Gerson, The Changing Contours of a National Literature, National council of Teachers of English, December 1988, Vol.50, No.8.

6. Christopher Clausen, “National Literatures in English" : Toward a New Paradigm, New literary History, Winter, 1994, vol.25, No. 1

(இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 30.05.2023 அன்று நடைபெற்ற 7ஆவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பட்ட மாநாட்டு மையவுரை).

- பா.ஆனந்தகுமார், பேராசிரியர், தமிழ்த் துறை, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்தி கிராமம், திண்டுக்கல்.

Pin It