20 ஆம் நூற்றாண்டு இந்திய வானில் தமிழ்த் திசையிலிருந்து ஒளிர்ந்த ஒரு தாரகை காலம் எனும் முடிவற்ற கருங்குழியில் சென்று அடங்கியது. அதன் ஒளியில் பச்சையம் கண்ட பயிர்களும் அவை உருவாக்கிய விதைகளும் இந்த மண்ணில் விழுந்து முளைப்பது பல யுகங்களுக்குத் தொடரும். பசித்த வயிறுகளுக்கு பால் வார்ப்பதும் தொடரும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் அவரது முன்னோடியும் நண்பருமான நார்மன் போர்லாக் பெற்றது போல உலக அமைதிக்கான நோபல் பரிசிற்கு தகுதி படைத்த ஆளுமை. அதுவல்லாது அவர் பெற்ற பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் குறைவில்லை. எண்பதிற்கும் மேலான சர்வதேசப் பலகலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் அளித்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் அறிவியல் அக்கடெமிகள் அவரை மதிப்புரு உறுப்பினராக ஆக்கி பெருமைப் படுத்தியுள்ளன. ஆனால் அவர் அவற்றை பெரிதுபடுத்தாத பெரிதிலும் பெரிது நோக்கும் பேராளுமையாகவே வாழ்ந்து மறைந்தார்.

ms swaminathan 328அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வியட்னாம் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் அவர்களை ஆதரித்து நின்ற காரணத்தால் பி.எல் 480 திட்டத்தில் அனுப்பப்பட்டு வந்த (காசிற்குதான்; இலவசமாக அல்ல!) உணவு தானியக் கப்பல்களை லிண்டான் ஜான்சன் அரசு நிறுத்தியதுதான் ‘பசுமைப் புரட்சி’ தொடங்கப்பட்டதன் உடனடி காரணம் என்பது இன்று பலருக்கு நினைவில் இல்லை. உண்ணும் உணவிற்காகப் பி.எல்.480யையும் அமெரிக்காவையும் அல்லது வேறெந்த வெளிநாட்டையும் கெஞ்சி நிற்கத் தேவையற்ற வலுவையும் வளத்தையும் இந்திய ஒன்றியத்திற்கு ஏற்படுத்தியதில் அவரது வகிபாகம் தலையாயது.

 கீழத்தஞ்சையில் ராஜராஜ சோழன் காலத்தில் கிடைத்த நெல் மகசூலை இன்றைய அளவுகளில் மாற்றிச் சொன்னால் ஒரு ஏக்கருக்கு சுமார் 10 மூட்டைதான். ராஜாஜி காலம் வரை ஒரு ஏக்கருக்கு 10 மூட்டைதான். ஆனால் இன்று ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல்கூட நடக்கின்றது. அவர் தாதியாய் இருந்து பிறப்பித்த பசுமைப் புரட்சி இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது; அல்லது இந்திய வனவளத்தில் இன்னும் நாற்பது சதவீதம் பசித்த மானுடத்திற்கு சோறிடும் வயலாக மாறியிருக்கும். இந்தியாவின் இயற்கைச் சூழலை இன்றிருக்கும் இந்நிலையிலாவது காப்பாற்றியதில் அவரது வகிபாகம் அதிகம் புரிந்து கொள்ளப் படாதது; எனவே அதிகம் பேசப்படாதது. ஏசு கிருஸ்துவை சிலுவையில் ஏற்றவும், மகாத்மா காந்தியை சதி செய்து கொல்லவும், லெனினை துப்பாக்கியால் துளைக்கவும் ஆட்களிருக்கும் உலகில் எம்.எஸ்.சுவாமிநாதன் மீது சேற்றை வாரி இறைக்க ஆளற்ற பஞ்சம் இருந்தால்தான் வியப்படைய வேண்டும்.

ஓராண்டுகாலம் டெல்லியை தம் இரும்புப் பிடியில் வைத்திருந்த விவசாயப் போராட்டக்காரர்களுக்கும் நாடெங்கும் உள்ள விவசாயிகளுக்கும் இன்று முதன்மையான கோரிக்கை; 'எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி’ பரிந்துரை அடிப்படையில் விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியாகும் விலை கொடு என்பதுதான். உண்மையிலேயே உழுது பயிரிடும் இந்திய விவசாயிகளின் உணவுப் பொதிகளில் மட்டுமல்ல; அவர்களது உணர்வுப் பொதிகளிலும் அவரது பெயர் எழுதப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த ஒரு நீண்ட நேர்காணலில் அவரது வாய்மொழிக் கூற்றுகள் சிலவற்றைப் பாருங்கள் :

* .... நான் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரில் B.Sc - விலங்கியல் படித்து முடித்தேன். எனது தந்தையின் வழியில் மருத்துவராக அடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். ஆனால் 1942 ஆம் ஆண்டில் மஹாத்மா காந்தி ஆரம்பித்த ‘வெள்ளையேன வெளியேறு’ இயக்கமும் 1942-43 இல் ஏற்பட்ட வங்காளத்தின் பெரும் பஞ்சமும் எனது பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. வங்காளத்தின் பெரும் பஞ்சத்தில் பல லட்சம் மக்கள் உணவின்றி இறந்தனர். விரைவில் இந்தியா சுதந்திரம் பெற்றுவிடும் என்பது தெரிந்தது. சுதந்திர இந்தியாவில் நான் நாட்டிற்கு பயனுள்ள முறையில் என்ன செய்ய முடியும் என யோசித்தேன். நான் மட்டுமல்ல; என் வயதினர் பலரும் அப்போது இயல்பாகவே அந்த கால கட்டத்தின் லட்சியவாதத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருந்தோம்.

நான் நாட்டின் உணவுப் பிரச்சினைக்கு ஏதேனும் இயன்றதைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். எனவே மருத்துவக் கல்லூரிக்கு கிடைத்திருந்த நுழைவு அனுமதியைப் புறமொதுக்கி வேளாண்மைக் கல்லூரியில் சேர முடிவு செய்தேன். அதன்படி கோவை வேளாண்மைக் கல்லூரியில் B.Sc - வேளாண்மை அறிவியல் படித்தேன். பின்னர் தில்லியில் இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தில் (Indian Agricultural Research Institute) ஓராண்டு மாணவனாக இருந்தேன். அப்போது தேர்வு எழுதி இந்தியக் காவல் துறைப் பணிக்கும் (IPS) தேர்வு செய்யப்பட்டேன். அதில் சேர்வதா இல்லையா என இருமன நிலையில் இருந்தேதான். நல்லவேலையாக ஹாலந்தில் படிக்க நிதிநல்கை கிடைத்தது. அப்படி மேற்படிப்பிற்காக முதலில் ஹாலந்திற்கும் பின்னர் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கும் சென்றேன்.

1950 ஆம் ஆண்டில் பிஹெச்டி முடித்தபின் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் ஓராண்டு பணியாற்றினேன். பின்னர் அங்கு நிரந்தரமான பேராசிரியர் பணி கிடைத்த சமயத்தில் இந்தியாவிற்கு வந்து பணியாற்ற வேண்டும் எனும் ஆவலில் அதனை மறுதலித்து இந்தியாவிற்கு வந்தேன். அன்றைக்கே எனது நோக்கம் உணவு தானியங்களில் புதிய வகைகளை உருவாக்குவது என்பதாக இருந்தது. விவசாயிகள் ஒவ்வொரு விதைப்பின்போதும் விதைகளை வாங்க வேண்டும் என்ற நிலையில்லாது அவர்களது விதைகளை அவர்களது மகசூலிலேயே பெற வேண்டும் என்றும் விரும்பினேன்.

இந்தியா திரும்பிய நான் 1954 ஆம் ஆண்டு முதலில் கட்டாக்கில் CRRI எனப்படும் மத்திய அரிசி ஆய்வுக் கழகத்தில் (Central Rice Research Institute) ஒரு தற்காலிகப் பணியில் இருந்தேன். பின்னர் IARI இல் உதவி செல் மரபணு நிபுணர் (Assistant Cytogeneticist) எனும் பொறுப்பில் அமர்ந்தேன். பின் 18 ஆண்டுகள் IARI இல்தான் பணியாற்றினேன். கட்டாக்கில் நான் சென்று சேரும்போதே இண்டிகா-ஜாப்பானிகா ஒட்டுப்பயிர் உருவாக்க (Indica - Japanica Hybridisation) வகை அரிசி ஆராய்ச்சி துவங்கியிருந்தது. அந்தத் திட்டத்தில்தான் நான் முதலில் பணியாற்றினேன். அந்தத் திட்டத்தின் மூலம்தான் ADT 27 எனப்படும் ஆடுதுறை 27 வகை வெளிவந்தது. அதன்பின் நான் டெல்லியில் இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்தேன். அங்கு புதிய கோதுமை வகை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். கோதுமையிலும் எனது நோக்கம் அரிசியில் இருந்தது போலத்தான் இருந்தது...

நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஆசிரியர் குழு அந்த மகத்தான மனிதருக்கு தன் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் அஞ்சலிகளையும் உரித்தாக்குகின்றது.

- ஆசிரியர் குழு

Pin It