பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சமயத்தில் பல சீர்திருத்தங்கள் தோன்றின. இக்காலக் கட்டத்தில் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் தோன்றியது. சமயத் துறையில் மட்டுமின்றிச் சமூக வாழ்விலும் மாறுதல்களும் சீர்திருத்தங்களும் வள்ளலாரால் உருவாக்கப்பட்டன. இந்திய சமயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, நவீன காலத்திற்கு ஏற்ப சமத்துவமின்மை முதலியவற்றால் சமயக் களத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. இந்தியாவில் கிருத்துவ சமயம், சமயக்கல்வி, மருத்துவம் போன்ற நற்பணிகளை மேற்கொண்டு அனைத்துச் சாதியினரும் சமம் என்ற நிலைப்பாட்டில் பணி நடைபெற்றது. மேனாட்டுச் சமயங்களின் நவீனத் தத்துவத்திற்கேற்ப இந்திய சமயங்களிலும் ஞானிகள் தோன்றி புத்தாக்கம் செய்தனர். இக்காலக் கட்டம் தான் வள்ளலாரின் காலமாகும்.

வள்ளலார், இந்து சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தோய்வுற்றிருந்த காலத்தில் தோன்றினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிகள் மூலம் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். மூடப்பழக்கங்களை எதிர்த்துக் குரல் எழுப்பினார். இதுவரை உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் தமக்கு ஒப்பும் உயர்வும் அற்றவராகத் திகழ்ந்தார். சீர்திருத்த வானில் வள்ளலார் ஒரு “சூரியன்” என்கிறார் ஊரன் அடிகள். வள்ளலார், ஆன்மீகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல மிகச் சிறந்த சீர்திருத்தவாதி, சைவ சமயத்தில் பல சீர்திருத்தங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோன்றின. இவை “சீர்திருத்தச் சைவம்” என்று சொல்லப்பட்டது. மறைமலையடிகளும், திரு.வி.க. போன்றோரும் தங்களை ”சீர்திருத்தச் சைவர்” எனச் சொல்லிக் கொண்டனர். ஆனால் சீர்திருத்தச் சைவம் தோன்றக் காரணமானவரே வள்ளலார். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் தோன்றவில்லையாயின் சீர்திருத்தச் சைவம் தோன்றுவதெங்கே? சமயத்துறையில் மட்டுமின்றிச் சமூக வாழ்விலும் பெரும் மாறுதல்களும் சீர்திருத்தங்களும் வள்ளலாரால் ஏற்பட்டன என்று ஊரன் அடிகள் கூறியுள்ளார். (புரட்சித் துறவி-வள்ளலார் பக்.37-38)

Vallalarபத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் தமது எளிய, சொல்லாட்சிகளாலும், உளவியல் எதார்த்தச் சித்திரிப்புகளாலும், நவீனத்துவத்தை இலக்கியத்தில் தொடங்கி வைத்தவர் என்று கூறலாம் என்கிறார் ராஜ்கௌதமன். (கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக ப. 475)

இறுதியாக வள்ளலார் சன்மார்க்கம் எதிர்காலத்தில் உலகிலே ஓங்கி வளரும் என்றார்,

"மார்க்கம் எல்லாம் ஒன்றாகும் மாநிலத்தீர்! வாய்மையிது;

தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம் விட்டு

சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின்! சத்தியம் நீர்

நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள்

இதைவிட உறுதியாக வேறு சொற்கள் அமைத்து பாட முடியாது. எதிர்காலத்தில் உலகில் சன்மார்க்கம் ஒன்று தான் ஓங்கும் என்ற கருத்தை மிகுந்த நம்பிக்கையுடன் பறை சாற்றினார் வள்ளலார் (சாமி சிதம்பரனார், வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி, ப.200).

திருமுறைகள்

ஆரம்பத்தில் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்து அச்சிட வேண்டும் என்று கோரிக்கை வள்ளலாரிடம் வைத்தபோது அதற்கு முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் போன்ற அன்பர்கள் பலமுறை வற்புறுத்தி வள்ளலாரை சம்மதிக்கச் செய்தனர். தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு அவற்றைத் திருமுறைகளாக வகுத்து வெளியிட்டனர்.

வள்ளலார் பாடிய பாடல்களின் தொகை இதுவரை யாவராலும் சரியாகக் கணக்கிடப் பெறவில்லை. பொன்னேரி சுந்தரம்பிள்ளை தமது பதிப்பில் 6955 எனக் காட்டுகிறார். ஆ.பாலகிருஷ்ணபிள்ளை 5970 எனக் குறிப்பிடுகிறார் ச.மு.கந்தசாமிப் பிள்ளை பதிப்பு 5725 எனக்காட்டுகிறார். இவ்வாறு பதிப்புக்குப் பதிப்பு பாடல்களின் தொகை வேறுபடுகிறது. இப்பாடல்களின் தொகுப்பே ”திருவருட்பா” ஆகும்.

வள்ளலாரின் பாடல் தொகுப்புக்குத் ”திருவருட்பா” என்று பெயரிட்டவரும், அவற்றைத் தொகுத்தவரும், ஆறு திருமுறைகளாக வகுத்தவரும் அதை முன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவரும் வள்ளலாரின் மாணவராகிய ”தொழுவூர் வேலாயுத முதலியாரேயாவார்.”

ஆறு திருமுறைகள்

உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார், பாடல்களை வகைப்படுத்தி ஆறு திருமுறைகளாக வகுத்தார். (126 பதிகங்களும், 172 தனிப்பாடல்களும் அவர் வகுத்திருந்த ஆறாம் திருமுறையில் அப்போது இருந்தன.)

திருவடிப் புகழ்ச்சி (128 அடி விருத்தப்பா) விண்ணப்பக் கலிவெண்பா (417 கண்ணிகள்) நெஞ்சறிவுறுத்தல் (703 கண்ணிகள்) சிவநேச வெண்பா (104 வெண்பாக்கள்) மகாதேவ மாலை (100 எண்சீர் விருத்தம்) திருவருள் முறையீடு (232 கட்டளைக் கலித்துறை) வடிவுடை மாணிக்க மாலை (101 கட்டளை கலித்துறை) இங்கீத மாலை (167 அறுசீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) ஆகிய எட்டும் முதல் திருமுறையாக வகுக்கப் பெற்றன.

வள்ளலார் சென்னையிலிருந்தபோது, திருவொற்றியூர் குறித்தும் தில்லையைக் குறித்தும் பாடிய பதிகங்களும், திருமுல்லைவரியில், திருவலிதாயம் புள்ளிருக்கு வேளுர் (வைதீஸ்வரன் கோவில்) திரு ஆரூர், திரு அண்ணாமலைப் பதிகங்களும் பொதுப்பதிகங்களும் கீர்த்தனைகளும் இரண்டாம் திருமுறையாக வகுக்கப்பெற்றன.

திருவொற்றியூரைக் குறித்துப் பாடப்பெற்ற அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான அகத்துறைப் பதிகங்கள் பத்தொன்பது மட்டும் மூன்றாம் திருமுறையாக வகுக்கப்பட்டன.

வள்ளலார் கருங்குழிக்கு வந்த பின் சிதம்பர வழிபாட்டுக் காலத்தில் சிதம்பரத்தைக் குறித்துப் பாடப்பெற்ற எட்டு மாலைகள் ஆளுடைய நால்வர் அருள்மாலைகள் நான்கு அகப் பன்னிரண்டு நூற்பகுதிகளைக் கொண்ட 238 பாடல்கள் அடங்கியன நான்காம் திருமுறையாக வகுக்கப்பெற்றன.

திருத்தணிகைப் பாடல்கள் ஐந்தாம் திருமுறையாக வகுக்கப்பெற்றன. ”முருகன் பாசுரங்கள்” என்னும் வேறு பெயரும் இத்திருமுறைக்கு உண்டு. 604 பாடல்களைக் கொண்ட 56 பதிகங்கள் இத்திருமுறையில் உள்ளன.

திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் வெளியான 13 ஆண்டுகள் கழித்து 1880-இல் வள்ளலாரின் மறைவுக்கு பின் ஐந்தாம் திருமுறை வெளிவந்தது. (திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய ஒரே நூல் 1867-இல் தொழுவூர் வேலாயுத முதலியாரால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது.) முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே வள்ளலாரின் நேரடி மேற்பார்வையில் உருவானது குறிப்பிடத்தக்கது.

முதல் நான்கு திருமுறைகளையும் அடுத்து ஐந்தாம் திருமுறையையும் பதிப்பித்து வெளியிட்ட தொழுவூர் வேலாயுதம், ஆறாம் திருமுறையைப் பகுத்து வைத்திருந்தாரேயன்றி, வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் வள்ளலாரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் சமயம் கடந்த புரட்சிகரமான சமூகச் சீர்திருத்த பாடல்கள். ஆறாவது திருமுறையை அச்சிடக் கூடாதென்று வள்ளலார் கண்டிப்பாக ஆணையிட்டுவிட்டார். ஆறாந் திருமுறையில் தாம் தெரிவித்துள்ள கருத்துக்கள் சுத்த சன்மார்க்கிகள் மட்டும் தெரிந்து பின்பற்றவேண்டியவையாகையால் பொது மக்கள் மத்தியிலே அவற்றை நடமாட விட வேண்டா என்று வள்ளலார் தெரிவித்ததாகச் சொல்லப்படுகின்றது.

ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டது.

ஐந்தாம் திருமுறையை வேலாயுத முதலியார் 1880-இல் வெளியிட்டார். அதன் பின்னர் 1885-ஆம் ஆண்டில் சென்னை சமரச சன்மார்க்க சங்க அன்பர்களால் திருவருட்பா ”ஆறாம் திருமுறை” வெளியானது. தொழுவூராரின் காலம் 1832-1889 திரு அருட்பா ஆறாம் திருமுறை வெளியானது, 1885-இல். எனவே தொழுவூரான் மறைவுக்கு முன்னே ஆறாம் திருமுறை வெளியானது என்பதும் சைவப் பற்றே அவரை ஆறாம் திருமுறையை வெளியிடாது தடுத்தது என்பதும் வெளிப்படை.

வள்ளலாரின் புரட்சி கருத்துக்கள்

முதல் ஐந்து திருமுறைகளில் எவ்வளவு பாடல் உள்ளனவோ அவைகளை விட அதிகமாக பாடல்கள் ஆறாம் திருமுறையில் மட்டும் அடங்கியுள்ளன. ஆறாம் திருமுறையில் தான் முற்போக்கான புரட்சி கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் உள்ளன.

முதல் ஐந்து திருமுறைகளில் பக்திப் பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றன. குறிப்பாக திருவொற்றியூர், திருத்தணிகை, கந்த கோட்டம் ஆகிய தலங்களிலுள்ள தெய்வங்களின் மீது பாடியுள்ள பாடல்களையே காணலாம். வள்ளலாருக்கு முன்தோன்றிய ஞானியர் எவரிடமும் காணாத புரட்சிகரமான சமயச் சீர்திருத்தக் கருத்துக்களை ஆறாந்திருமுறைகளில் மட்டுமே காணமுடியும்.

சாதி, சமய, இன வேற்றுமைகளைச் சாடிய பல பாடல்களை சித்தர்கள், இயற்றி உள்ளனர். ராமானுஜர் இறைவன் முன் அனைவரும் பொது என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தினார். உயர்வு தாழ்வு கருதாது வாழ்ந்து காட்டினார். சித்தர்களுக்கும் இராமானுஜருக்கும் பின் ”பொதுவுடைமை” பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே. சமூக சமயக் கொள்கைகளில் புரட்சி செய்த முதல் பொதுவுடமைவாதியாக வள்ளலாரை கூறலாம்.

மேலும், ஆறாம் திருமுறையில், அரும் பொருள்கள் பல அடங்கியிருக்கின்றன. மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மதவெறி, அரசியல் கொடுமை, ஏழைகளைத் துன்புறுத்தும் வஞ்சகர்கள் வாழ்வு, இவைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கும் பாடல்கள் நிரம்பியிருக்கின்றன.

மரபான செய்யுள் இலக்கியத்திற்குப் புதிய ஒரு வரவாக இந்த ஆறாம் திருமுறை பாடல்களைச் சொல்லலாம் என்கிறார் ராஜ்கௌதமன் (கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக. ப.463).

சமூகக் கொடுமைகளைச் சாடியதுடன், சமயத் தத்துவங்களுக்கு இதுவரை இல்லா புது விளக்கங்களைக் கொடுத்தவர் வள்ளலார்.

வள்ளலாரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் சமயத்தைக் கடந்து சமரசத்தைக் காட்டும் பாடல்கள் என்பதால் மட்டுமே புறக்கணிக்கப்பட்டுள்ளன. (இரா.வெங்கடேசன் கட்டுரை, சி.ராமலிங்கம் பாடல்கள் வள்ளலார் தொகுப்பான வரலாறு, வெளியீடு, உங்கள் நூலகம், மாத இதழ் ஜூலை 11, 2011)

சன்மார்க்கக் கொடி ஏற்றினார் வள்ளலார்

1869-இல் வள்ளலாரின் புரட்சிக் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்தன. 22.10.1873-ஆம் ஆண்டில் சித்தி வளாகத்தில் மஞ்சள், வெள்ளை ஆகிய இருநிறங்கள் கொண்ட சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்தார் வள்ளலார். அது முதல் சமயம், சாதி, தத்துவங்கள் ஆகிய எல்லாவற்றையும் தூக்கியெறிந்தார். சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்து வள்ளலார், பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இது போல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லக்ஷியம் வைக்கவேண்டாம் (அவற்றில் தெய்வத்தைப் பற்றி) குழுஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்கவேண்டாம். ஏனெனில் அவைகளிலும், அச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லாது ஒப்பற்ற வாழ்வாகிய இயற்கையுண்மை எனும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்கொள்ளுகிறதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானேயிருக்கிறேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்குத் தெரியும். அந்த லக்ஷியம் எப்படி போய்விட்டது! பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாக்ஷி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருந்த பாடலையும், மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”

சைவ சமயத்தில் அளவிலாத பற்று கொண்டிருந்த வள்ளலார் அப்பற்றினை அறவழி துறந்து இயற்கை உண்மை என்ற நிலையை எட்டியிருப்பதை அவருடைய பேச்சு எடுத்துக் காட்டுகிறது. கடந்த காலத்தில் தனக்கு சொற்ப அறிவே இருந்தது. அதனால் உண்மையை உணராமல் போனேன் எனக் கூறிய துணிவு அவருக்கு மட்டுமே இருந்தது. அதனால்தான் தான் கண்ட மாபெரும் உண்மையான சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் வழியைப் பின்பற்றுமாறு மக்களுக்கு வேண்டிகோள் விடுத்தார். (பழ.நெடுமாறன் வள்ளலார் மூட்டிய புரட்சி பக்.117-118)

வள்ளலார் எழுதிய வசன நடை இன்று இராமலிங்க பக்தர்களில் சிலர் இதை ஒப்புக்கொள்வதில்லை. இது வள்ளலாரால் எழுதப்பட்டது இல்லை, பிற்காலத்தில் மத வெறுப்புக் கொண்டவர்களால் எழுதப்பட்டு வள்ளலார் பெயரால் வெளியிடப்பட்டது என்று கூறுகின்றனர். இவ்வெழுத்தில் உள்ள கருத்துக்கள் வள்ளலார்க்கு உண்டா? இல்லையா? என்பதைத் தான் கவனிக்கவேண்டும், அவருடைய பாடல்களையும் ஆறாம் திருமுறையில் அவர் கூறியிருக்கும் புரட்சிக் கருத்துக்களையும் காணும்போது இக்கருத்து வள்ளலார்க்கு உண்டு என்று தான் எண்ணத் தோன்றும் வள்ளலார் உள்ளம், எண்ணம் உயர்வானவை என்பதில் ஐயமில்லை. கொடுமை செய்வதற்கு வெறியூட்டும் மதச் சேற்றில் மூழ்கவேண்டாம் என்பதே அவர் கூறும் அறிவுரை (முனைவர் அமிர்தலிங்கம், வள்ளலாரின் ஆளுமை உருவாக்கம், பக்.277-285 மற்றும் பழ.நெடுமாறன் மேலே கூறியது. ப.118)

வள்ளலார் அருளிய சன்மார்க்க நெறிகள்

வள்ளலார் அருளிய சன்மார்க்க நெறிகளை சுருக்கமாகக் கீழே காணலாம்.

1.            கடவுள் ஒருவரே - ஆறாம் திருமுறை, 2118.

2.            சிறுதெய்வ வழிபாடு கூடாது. (ஆறாம் திருமுறை-912)

3.            தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுதல் கூடாது (ஆறாம் திருமுறை -206)

4.            புலால் மறுத்தல் (ஆறாம் திருமுறை. 894)

5.            சாதிசமய வேறுபாடு கூடாது. (ஆறாம் திருமுறை.2300)

6.            எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணுதல் -ஆறாம் திருமுறை 2030 & 82031)

7.            வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்கமாட்டா - ஆறாம் திருமுறை 2249 மற்றும் 2250

8.            சமாதி வற்புறுத்தல் -ஆறாம் திருமுறை. 2343, 2344, 2346

வள்ளலாரின் கொள்கை பிணத்தைப் புதைப்பது இதனை வற்புறுத்திக் கூறுகின்றார். பிணத்தை சுடுவது கொலையாகும்.

நிறைவாக, வள்ளலார் வெறும் ஆன்மீகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல, மிகச் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும்கூட ”கரையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக.” அவதரித்த அவர் தம் சீர்திருத்தக் கருத்துக்கள் அவர் சிறுவனாய் இருக்கும் போதே தொடங்கிவிட்டது எனலாம். மாணவப் பருவத்திலே மாறுபட்ட சிந்தனையை கொண்டவர் வள்ளலார். வளர வளர அவரது சீர்திருத்த எண்ணங்களும் வளரத் தொடங்கின. அவை சமய சீர்திருத்தங்களாகவும் சமுதாயச் சீர்திருத்தங்களாகவும் அமைந்தன. தமிழகத்தில் புதியதொரு மாற்றத்தையும் தோற்றுவித்தன. சைவ சமயம் சமூகத்தில் மூடப்பழக்கங்களால் தோய்வுற்றிருந்த காலத்தில் தோன்றிய வள்ளலார் தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலம் அவற்றை மிக கடுமையாகச் சாடினார்.

வள்ளலாரின் சாதி, மதங்கள் கடந்த பாடல்களே ஆறாம் திருமுறையில் அடங்குவனவாகும். சாதி மதச் சமயச் சடங்குகளில் வேதாகமங்களான சாத்திரங்களில் வள்ளலார் ஒருமைப்பாடு காண விருப்பமில்லை என்பதையும் இவையெல்லாம் பொய்யாம் சழக்காம் என வெறுத்தார். சாதி சமயப் பிணக்கொழித்துச் சமரச சன்மார்க்க நெறியினை வற்புறுத்தும் ஆறாம் திருமுறையினையே நமக்குரிய ஆதார நூலாகக் கொள்ளலாம்.

தேர்வு நூற்பட்டியல்

1.           ஊரன் அடிகள், ”புரட்சித் துறவி, வள்ளலார்” சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், கடலூர் - 2014

2.           ம.பொ.சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பூம்புகார் பதிப்பகம், 2008, சென்னை 108

3.           ப.சரவணன், நவீன நோக்கில் வள்ளலார் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு, 357, டிசம்பர் 2010.

4.           ‘ராஜ்கௌதமன், கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக, தமிழினி வெளியீடு, 2012,

5.           பழ.நெடுமாறன், வள்ளலார் மூட்டிய புரட்சி, ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், ஜூலை 2018.

6.           திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய ”திரு அருட்பா”, உரைநடைப்பகுதி வெளியீடு.

7.           திரு.அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம் வடலூர், பத்தாம் பதிப்பு, 2016.

8.           டாக்டர் ச.மெய்யப்பன், வள்ளலார் வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை-108, 2010

9.           சாமி சிதம்பரனார், வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி, 2003.

10.        சாமி, சிதம்பரனார், வடலூரார் வாய்மொழி, சித்தக்கடல், மி-6, லாயிட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14, 2007.

11.        பா.சு.ரமணன், அருட்பிரகாச வள்ளலார், விகடன் பிரசுரம், அக்டோபர், 2010.

12.        திரு அருட்பிரகாச வள்ளலார் வரலாறு வெளியீடு தெய்வநிலையம், வடலூர், ஏழாம் பதிப்பு, பிப்.2015.

13.        க.வெள்ளைவாரணனார், திருவருட்பாச்சிந்தனை, பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, மார்ச், 2009.

14.        இரா. வெங்கடேசன், கட்டுரை, சி.இராமலிங்கம் பாடல்கள் வள்ளலார் தொகுப்பான வரலாறு, உங்கள் நூலகம் மாத இதழ் நாள் ஜூலை 2011.

- டாக்டர் மு.நீலகண்டன்

Pin It