vallalarசிதம்பரம் இராமலிங்கம் என்னும் வள்ளலார், (1823 - 1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த அரிய மனிதர்களில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் முதல் தமிழ்ச் சமூகத்தில் உருவான பல்வேறு சமூக இயக்கங்கள், வள்ளலாரை எந்தெந்தப் பரிமாணங்களில் உள்வாங்கிக் கொண்டன? என்ற உரையாடல் நிகழ்த்துவது அவசியம். வள்ளலார் குறித்தப் பதிவுகள் சார்ந்து அவரை எதிர்கொண்ட முறைமைகளைப் பின்கண்டவாறு தொகுக்கலாம்.

- வைதீக மரபை ஏற்றுக்கொண்டு, வேதாந்தக் கருத்துக்களையும் சித்தாந்தக் கருத்துக்களையும் இணைத்துப் பேசிய சைவ சமய மரபு தமிழ்ச் சூழலில் செயல்பட்டது. அந்த மரபில் நல்லூர் ஆறுமுக நாவலர் (1822 - 1875) முதன்மையானவர். இவரும் இவரது குழுவினரும் வள்ளலாரை எவ்விதம் எதிர்கொண்டனர் என்ற வரலாறு விரிவானது. இவ்வரலாறு குறித்தும் உரையாடும் அவசியமுண்டு.

- சைவ மரபை, ஒருவகையான மனிதநேய மரபாகப் பேசியவர்களும் உண்டு. பதி - பசு - பாசம் என்னும் சித்தாந்த அடிப்படையே மனித வாழ்வின் அடிப்படையாகும். அந்த வகையில் சைவம் மனிதகுலம் தழைக்க வந்த தத்துவம் எனும் உரையாடலை நிகழ்த்தியவர்களுள் திரு.வி.க. எனும் திருவாரூர் வி. கலியாணசுந்தர முதலியாருக்கு (1883-1953) முதன்மையான இடமுண்டு. இவர் மரபில் வந்தவர்கள் வள்ளலாரை அணுகிய முறைகள் குறித்தும் பேச வேண்டும்.

- மீமெய்மையில் (Metaphysics) அல்லது அப்பாலைத் தத்துவம் எனும் கோட்பாடு சார்ந்து தமிழ்ச் சூழலில் செயல்பட்டவர்கள் உண்டு. இருபதாம் நூற்றாண்டில் இக்கோட்பாடு சார்ந்து மிகுதியாக பேசியவராக தெ.பொ.மீ. (1901 - 1980) எனும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைக் கூறமுடியும். இவர் மரபில் வந்தவர்கள் வள்ளலாரை அணுகிய முறை குறித்தும் பேசவேண்டும்.

- தமிழகத்தில் உருவான ஈ.வெ.ராமசாமி (1879 - 1973) எனும் பெரியார் மற்றும் ம.பொ. சிவஞானம் (1906- 1995) ஆகிய பல தலைவர்கள் சமூகச் சீர்திருத்தம் குறித்து, அவரவர் கண்ணோட்டத்தில் பேசியவர்கள். இவ்வகையான மனிதர்களின் கண்ணோட்டத்தில் வள்ளலார் எவ்வாறு பேசப்பட்டுள்ளார் என்ற புரிதல் அவசியம்.

- இயங்கியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச்சமூகமும் அதன் புறச்சூழலும் எவ்வாறெல்லாம் செயல்பட்டது என்ற உரையாடலுக்குள் வள்ளலாரின் வகிபாகம் எதுவென்று பேசியவர்களும் உண்டு.

- மேற்குறித்த கண்ணோட்டம் எதுவுமின்றி சைவ சமயக் குறவர்களில் ஒருவராக அவரை வழிபட்டவர்கள் வழிபடுபவர்களும் உண்டு.

வள்ளலாரின் ஆளுமை என்பது மேற்குறித்தப் பல்வேறு புலமைக் கூறுகளுக்குள் உரையாடும் தன்மை பெற்றிருக்கிறது என்பதை மறுக்கவியலாது. எனவே வள்ளலார் மேற்குறித்தப் பார்வைகளில் அணுகுவதற்கானத் தன்மைகளை அவரது ஆக்கங்களுக்குள் நாம் இனம் காண முடிகிறது. இவ்வகையான பன்முகத் தன்மையுடன் வள்ளலார் குறித்துச் செய்யப்பட்டப் பதிவுகளை இந்நூல் தொகுத்தளிக்கிறது. வள்ளலாரின் பன்முக ஆளுமை குறித்து அறிவதற்கான வாய்ப்பை இத்தொகுப்பு நமக்குத் தருகிறது.

...

வள்ளலாரின் ஆக்கங்களைக் கால ஒழுங்கில் பதிப்பிக்கும் மரபு இன்னும் உருவாகவில்லை. பக்தி மரபில் இவ்வகையான கால ஒழுங்கு கவனத்தில் கொள்வதில்லை. இயங்கியல் சார்ந்த தர்க்க மரபோடு, ஓர் ஆளுமையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு கால ஒழுங்கில், ஒவ்வொரு ஆளுமையின் ஆக்கங்களை பதிப்பித்துத் தருவது அவசியம்.

இதுவரை பக்தி மரபில் உள்ளவர்களே இவ்வகையான ஆக்கங்களை பதிப்பித்துள்ளனர். எனவே, வள்ளலாரின் ஆக்கங்களைக் கால ஒழுங்கில் வாசிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை (1890 - 1960) அவர்களின் பன்னிரண்டு புத்தகங்கள் மூலம், வள்ளலார் ஆக்கங்களை ஒரு வகையில் கால ஒழுங்கில் ஆக்கிக் கொண்டு வாசிக்கும் வாய்ப்பிருக்கின்றது.

...

“இவையெல்லாம் இங்ஙனமாகத் தற்காலத்திலே கருங்குழி இராமலிங்கப்பிள்ளையென்பவர் தாம் சிவாநுபூதி பெற்றவரென்று உலகத்தார் நம்பித் தம்மை வழிபடும் பொருட்டுச் சில பாடல்களைப் பாடி, அவைகளுக்குத் திருவருட்பாவென்றும், தமக்குத் திருவருட்பிரகாச வள்ளலாரென்றும் தாமே பெயரிட்டுக் கொண்டும் தம்முடைய மாணாக்கருள் ஒருவராலே தமக்குத் திருவருட்பா வரலாறென ஒரு புராணஞ் செய்வித்து இறுதியாகச் சேர்த்துக் கொண்டும், அச்சிற் பதிப்பித்து விக்கிரயஞ் செய்விக்கின்றனர்.

அது கண்ட அறிவிலிகள் சிலர் அவ்விராமலிங்கப் பிள்ளையைச் சமயா சாரியர்களோடு சமத்துவ முடையரென்றும், அவர் பாடலைத் தேவார திருவாசகங்களோடு சமத்துவமுடையதென்றும் பாராட்டிக் கொண்டும் பூசித்துக் கொண்டும் அநுட்டானம், பூசை, சிவதரிசனம் முதலியன செய்யுங் காலங்களில் ஓதிக்கொண்டும் வருகிறார்கள்.

சிலபோது சென்னைப் பட்டினத்துள்ள சிலவாலயங்களில் உற்சவத்திலே தேவார முதலிய அருட்பாக்களை நிறுத்திவிட்டு இராமலிங்கப்பிள்ளை பாடலையே ஓதுவிக்கின்றார்கள்” (போலியருட்பா மறுப்பு. இராமலிங்கப் பிள்ளை படிற்றொழுக்கம். மேற்படி அங்தப் பாட்டு தூத்துக்குடி இரா. ம. நயினார் செட்டியார் அவர்களால் சென்னைப் பிரசிடென்சி அச்சியந்திரச் சாலையில் பதிப்பிக்கப்பட்டு, சென்னைச் சைவ சித்தாந்தத்தாரால் வெளியிடப்பட்டன. (1904. ப. 14-15)

மேலே குறித்துள்ள பகுதி ஆறுமுக நாவலரின் (1823 - 1875) சீடர்கள் வள்ளலாரை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சைவ சித்தாந்த மரபைப் பேசிய ஒரு பிரிவினர், சைவ மரபை தமது தொடக்க காலத்தில் பேசியவரும் இறுதிக் காலங்களில் அத்தகைய மரபுகள் குறித்து வேறுபட்ட கருத்துடையவராகவும் அறியப்படுகிற வள்ளலாரை, வைதீக மரபினைச் சார்ந்து விமர்சனம் செய்கின்றனர்.

வள்ளலார் பிறந்த கருணீகர் குலம், ஆறுமுக நாவலர் பிறந்த வெள்ளாளர் குலத்தைவிட தாழ்ந்தது என்றும் அவரை வணங்குவதற்குரியவராகக் கருத முடியாது என்றும் கொச்சையான மொழிகளில் வள்ளலாரை, ஆறுமுக நாவலர் கருத்துச் சார்பினர் பதிவு செய்கிறார்கள். வள்ளலார் - ஆறுமுக நாவலர் குறித்த இவ்வகையான உரையாடல் தமிழ்ச் சூழலின் சாதிய மனநிலையின் வெளிப்பாடு.

இவ்வகையான தன்மைகள் ஈழத்துச் சூழலில் ஏற்படுத்திய செல்வாக்கு அளவுக்கு தமிழ்நாட்டில் இல்லை என்று கூறமுடியும். எனவே வைதீக சைவ சித்தாந்தம் வள்ளலாரைச் சைவ மரபுக்கு எதிரானவராகவே கட்டமைத்த வரலாற்றைக் காண்கிறோம். வள்ளலார் 1865 முன் மரபார்ந்த வைதீக சமய மரபைக் கொண்டாடிய மனிதரே ஆவார்.

...

சைவ சித்தாந்த மரபு என்பது அன்பு பாராட்டுதலை முதன்மையாகக் கொண்டது. ‘அன்பே சிவம்’, என்பது அடிப்படையான நிலைப்பாடு. ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்பது வள்ளலார் வாக்கு. ‘ஜீவகாருண்ய ஒழுக்கம், என்பதை வள்ளலார் அவரது தொடக்க காலத்­திலிருந்து விதந்து பேசியிருப்பதைக் காண்கிறோம்.

‘மநுமுறை கண்ட வாசகம்’ எனும் அவரது நூல் கருணை, அன்பு ஆகிய பண்புகளின் வெளிப்பாடாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. திரு.வி.க. போன்ற அறிஞர்கள் வள்ளலாரின் இத்தன்மைகளைப் பெரிதும் கொண்டாடினார்கள்.

வள்ளலாரின் இறுதிக் காலத்தில் பேசிய சமய மறுப்பு, சாதி மறுப்பு, வேதமறுப்பு, சித்தாந்த மறுப்பு, ஆகம மறுப்பு ஆகிய பலவற்றையும் வள்ளலாரின் மேற்குறித்த பண்புகளின் அடிப்படையில் உருப்பெற்றதாகவும் பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது. (வள்ளலார் குறித்த திரு.வி.க. நூல்கள், கட்டுரைகள் பார்க்க)

இத்தன்மையை எப்படிப் புரிந்து கொள்வது என்ற உரையாடல் அவசியமாகும்.

கி.பி. 1865 முன்பான வள்ளலார் ஆக்கங்களில் பேசப்படும் அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவை சிவனை முதன்மைப்படுத்தி பேசியவை ஆகும். கடவுள் வழிபாட்டின் ஒரு பகுதியாகவே அதனை வள்ளலார் பதிவு செய்கிறார். ஆனால் கி.பி. 1865க்குப் பிற்பட்ட காலங்களில் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத மனிதராகவே அவர் கூறும் கருத்துகளின் வழி அறியலாம்.

இந்தப் பின்புலத்தில் வைதீக கருத்து நிலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றைப் புறந்தள்ளி அவரே சமரச சுத்த சன்மார்க்கத்தை உருவாக்குகிறார். இந்தக் காலப் பின்னணியையும் அவரது தொடக்க காலப் பின்னணியையும் ஒரே கண்ணோட்டத்தில் திரு.வி.க. போன்றவர்கள், ஒரே படித்தான கருத்துநிலையில் மதிப்பீடு செய்கிறார்கள்.

இது வள்ளலாரை புரிந்துகொண்டதில் ஏற்பட்ட முரண். சமய, சாத்திர மரபுகளை ஏற்றுக்கொண்ட வள்ளலார்; அவற்றை மறுத்த வள்ளலார் என்ற இருபரிமாணங்களில் அவரைப் புரிந்துகொள்ளவேண்டும். திரு.வி.க போன்றவர்களிடம் அவ்வகையான பார்வை இல்லை.

...

வள்ளலார் ஒளி வழிபாடு பற்றிப் பேசினார். ஏழு திரைகள் தாண்டி எரியும் பத்தின் ஒளியை வழிபடும் முறையை உருவாக்கினார். ‘அருட்பெருஞ்ஜோதி’ ‘தனிப்பெருங்கருணை’ என்பது அவரது வழிபாடு சார்ந்த முழக்கங்கள் ஆகும். உலக வாழ்வின் நிலையாமை குறித்தும் மிக விரிவாகவே பதிவு செய்தார். ‘உயிர்கள் சாவதில்லை; அவை மாற்றம் அடைகின்றன என்றும் பேசினார்.

வள்ளலாரின் இவ்வகையான கருத்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு அப்பாலைத் தத்துவ ஈடுபாடு இருப்பதாக மதிப்பீடு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம். (இந்நூலில் மூன்று கட்டுரைகள் அவ்வகையில் உள்ளன) இவ்வகையான மதிப்பீடு செய்தவர்களில் தெ.பொ.மீ. அவர்களுக்கு முதன்மையான இடமுண்டு.

அவர் தமது இறுதிக் காலங்களில் இவ்வகையான கருத்தாக்கங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். வள்ளலார் கண்டறிந்த மரணமிலா வாழ்க்கை என்பதை அப்பாலைத் தத்துவ மரபாக தெ.பொ.மீ. பேசுகிறார். “இந்தப் பரிதாப உலகம் மேலோட்டமாகவே இந்த அரும்பெரும் வாழ்க்கைக்கு கவனம் செலுத்தியிருக்கிறது.

இந்த உலகத்தின் புறம்பான வாழ்க்கைக்கும் அதன் மாயைக்கும் கவனம் செலுத்தி மாயையை அனுபவிக்கிறது. இராமலிங்கரின் வார்த்தைகள் இந்த மாயையான வாழ்க்கையைத் தான் வாழச் சொல்லுகிறது எனச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். மேலும் அவர் சொன்ன மரணமில்லா வாழ்க்கை என்ற தத்துவத்தை தவறாக வியாக்கியானம் செய்யவும் ஆரம்பித்தனர்” (இந்நூல். ப. 26-27).

தெ.பொ.மீ. அவர்களின் இப்பதிவு, வள்ளலாரை அப்பாலைத் தத்துவ உரையாடலில் பதிவு செய்வதாகக் கருதஇயலும். வள்ளலாரின் இறுதிக் காலத்தில் அவரது இறப்பு தொடர்பான பல்வேறு தொன்மங்கள் முன்மொழியப்படுகின்றன. இவற்றை யெல்லாம் இவ்வகையான அப்பாலைத் தத்துவ மரபில் அறிஞர்கள் பொருள் விளக்கம் அளிப்பதைக் காண்கிறோம்.

...

1920களின் இறுதியில் வள்ளலார் பாடல்களின் தொகுப்பு ஒன்றை பெரியார் ஈ.வெ.ரா குடியரசுப் பதிப்பகம் மூலம் கொண்டு வந்தார். ம.பொ.சிவஞானம் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (1963) என்ற நூலைப் பிற்காலங்களில் எழுதினார். தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தக் கருத்து மரபு உருவாக்கம் என்பதற்குத் தொடர்ச்சியான வரலாறு உண்டு. திருக்குறள் போன்ற நீதி நூல்களில் விரிவான சீர்திருத்தக் கருத்துக்களைக் காண முடியும்.

திருமூலர் (10 ஆம் நூற்றாண்டு), பிற்காலக் கபிலர் எழுதிய கபிலர் அகவல் (14ஆம் நூற்றாண்டு) பல்வேறு சித்தர் பாடல்கள், (16ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு முடிய) தாயுமானவர் (18ஆம் நூற்றாண்டு) ஆகிய பலரும் சமூகச் சீர்திருத்தம் தொடர்பான கருத்துக்களை விரிவாகவே பதிவு செய்துள்ளனர்.

காலனிய காலத்தில் உருவான குடியரசு மரபு சார்ந்து பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக பெண்ணடிமைக்கு எதிரான குரல் வலுவாகவே அமைந்தது. வள்ளலார், காலனிய மரபுக்கு முந்தைய சீர்திருத்த மரபினராக தமிழ்ச் சமூகம் புரிந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ வேண்டும்' என்று பேசியவராக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இப்பண்பு வள்ளலாரின் தொடக்க கால ஆக்கங்களில் சிறிது சிறிதாக உருப்பெற்று, பின்னர் விரிவாகவே சீர்திருத்தத்தன்மைகள் குறித்துப் பேசியுள்ளார்.

அவரின் தொடக்க காலப் பதிவுகளில் கருணை, அன்பு ஆகிய பண்புகள் சார்ந்து சமூக சீர்திருத்தங்களை முன்வைக்கிறார். சமூகக் கேடுகள் மீது அவருக்கு கோபம் முதன்மையாக அமையவில்லை. சமூகம் குறித்த அக்கறையுடைய மனிதாபிமானியாகவே அக்கருத்துக்கள் பதிவாகின்றன.

ஆனால், பிற்காலங்களில் இச்சமூகக் கேடுகள் ஒழிய நிறுவனங்களை உருவாக்குகிறார். ‘ஒழிக’ ‘கெடுக’ எனும் கோபம் மிக்க சொல்லாட்சிகளைப் பயன்படுத்துகிறார். சமயம், சாத்திரம், ஆகமம் ஆகிய அனைத்தும் பொய்யானவை என்று கூறுகிறார். ஆக, வள்ளலார் சமூகக் கேடுகளைக் கண்டு, அவற்றைக் குறித்த விமர்சனங்களை முன்வைத்தது ஒரு நிலை.

ஆனால் பிற்காலங்களில் சமூகக் கேடுகளை எல்லாம் அழித்தொழிக்க, சமூக இயக்க உருவாக்கம் வேண்டும் என்ற மனநிலையுடையவராக வெளிப்படுகிறார். எனவே அவரை வெறுமனே ஒரு சீர்திருத்தவாதியாக மட்டும் காணமுடியாது.

சமூகக் கொடுமைகளுக்கு எதிரான குரல் கொடுத்த மனிதராகவும் பார்க்கலாம். இப்பார்வை சார்ந்து வள்ளலார் ஆக்கங்களை மதிப்பீடு செய்து வெளிப்படுத்தும் கடமை நம்முன் உள்ளது. அந்த வகையில், இத்தொகுப்பு நூல் நல்ல திறவு கோலாக அமைகிறது.

...

அண்மைக் காலங்களில் வள்ளலார் குறித்த இயங்கியல் பார்வை சார்ந்த பதிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பேரா. ராஜ்கௌதமன் அவ்வகையான பதிவுகளில் முதன்மையான பங்களிப்பு செய்து வருகிறார். அவரது “கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக” எனும் நூல், வள்ளலார் குறித்தப் புதிய பார்வையைத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளது. பேரா. தொ.பரமசிவன் அவர்களும் வள்ளலார் குறித்த புதிய பார்வைகளை முன்வைத்து எழுதி வருகிறார். இவர்களது கண்ணோட்டத்தின் தொடர்ச்சியாகவே எனது பதிவுகளும் அமைவதாகக் கருதுகிறேன்.

வள்ளலார் குறித்த இவ்வகைப் பதிவுகள், ஒரு மனிதர் வாழ்ந்த சமூகம், அச்சமூகத்தோடு எதிர்கொண்ட ஊடாட்டங்கள், சமூகம் அவரை எப்படி உள்வாங்கியது ஆகிய பல்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்வகையான அணுகுமுறையே தனிமனிதர்களைப் புரிந்து கொள்ள உதவும். அவரது வாழ்க்கை, அவரது ஆக்கங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கும். இக்கூறுகள் வளமாகத் தமிழ்ச் சூழலில் உருப்பெற்று வருவதாகவே கருதுகிறேன்.

வள்ளலார் தொடர்பான பல்வேறு தரவுகளும் அச்சாக்கம் பெற்று வருகின்றன. இவ்வகையில் திருவாளர் ப. சரவணன் தொகுத்துள்ள “அருட்பா - மருட்பா: கண்டனத் திரட்டு” (2010) சிறந்த ஆவணம். வள்ளலாரின் ஆக்கங்களுக்கு அறிவியல் பூர்வமான பதிப்பை உருவாக்கிய ஆ.பாலகிருஷ்ணப் பிள்ளையின் பன்னிரண்டு புத்தகங்களும் இப்போது மறுஅச்சாக்கம் பெற்று வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்டோர் அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெறும் வழிபாட்டு மரபினர் தொகுத்தப் பிரதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்களின் பதிப்பு. அப்பதிப்பு வழி வள்ளலாரை கால ஒழுங்கில் புரிந்துகொள்ளலாம். பிறர் தொகுப்புக்களில் தன்முனைப்பு மேலோங்கி, கால வரலாறு மறைந்து போகிறது. ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளைப் பதிப்புக்களில் புறவயத்தன்மை சிறப்பாக அமைந்துள்ளது. எனவே வள்ளலாரை இயங்கியல் மரபின் புரிந்துகொள்ளும் தேவை முதன்மையானது.

...

வள்ளலாரை வழிபடும் கடவுளாக உள்வாங்கும் பார்வை தமிழகத்தில் உருப்பெற்றுள்ளது. அவரது பாடல்களில் உள்ள இசை அநுபவம் பலரையும் அவர் மீதான ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. அவரைச் சைவராகவே கருதும் மரபினர் இங்கு மிகுதி. அவரை, ஒரு வகையில் மாறுபட்ட சைவ மரபினராகக் கருதுவோரும் உள்ளனர்.

சமய சாத்திர மரபுகளைப் புறந்தள்ளி ‘சன்மார்க்கம்’ கண்ட அவரை, சமயச் சிமிழுக்குள், அடைக்கும் மனநிலை என்பது எளிய மனிதர்களின் சிக்கல் இல்லாத புரிதல். ஆனால் ஆய்வு செய்யும் இளம் ஆய்வாளர்கள் சிலர் இவ்வகையான புரிதலில் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் தீயூழ் இவர்களும் சநானதன வைதீகச் சேற்றுக்குள் மூழ்குபவர்களே. இவர்களின் கைகளை, பிடித்திழுத்து சேற்றிலிருந்து விடுவிக்க இத்தொகுப்பு நூல் உதவும் என்று கருதுகிறேன்.

...

வள்ளலார் குறித்தப் பன்முக வாசிப்பாக, அமையும் இந்நூலில் திரு.வி.க., தெ.பொ.மீ. (ஆங்கிலக் கட்டுரை மொழியாக்கம்), மு. அருணாச்சலம் (ஆங்கிலக் கட்டுரை மொழியாக்கம்), கா. அப்பாத்துரையார் (ஆங்கிலக் கட்டுரை மொழியாக்கம்), ம.பொ.சி; சிற்பி பாலசுப்பிரமணியம், ராஜ் கௌதமன், தொ. பரமசிவன், வீ. அரசு ஆகிய ஒன்பது பேரின் வள்ளலார் குறித்த மதிப்பீடு சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றைத் தேடி எடுத்து மொழியாக்கம் செய்து கொண்டுவரும் வி. தேவேந்திரனின் உழைப்பைத் தமிழ்ச்சமூகம் கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. வள்ளலாரின் பன்முக ஆளுமை குறித்த அரிய நூலாக இதனை நான் கருதுகிறேன். இளம் ஆய்வாளர்கள் இத்தொகுப்பை வாசித்து வள்ளலாரைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்தொகுப்பைப் பதிப்பித்துள்ள வி.தேவேந்திரன் வள்ளலார் ஆக்கங்கள் அச்சு வடிவம் பெற்ற பதிப்பு வரலாற்றை இந்நூலில் பதிவு செய்துள்ளார். வெகுசன அச்சுப் பண்பாட்டு மரபில் அப்பதிவைச் செய்திருக்கிறார். வெறுமனே பட்டியலாக அது அமையவில்லை. இந்நூலின் பின்னிணைப்புகள், வள்ளலார் தொடர்பான உரையாடலில் பல்வேறு புதிய திறப்புகளை முன்வைப்பதாக அமைந்துள்ளன. அவற்றைக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம்.

1882 - 1888 இடைப்பட்ட காலங்களில் ‘தத்துவ விவேசினி’ எனும் இதழ் சென்னை இலௌகிகச் சங்கத்தின் மூலம் வெளிவந்தது. ‘சுயாக்கியானிகள் சங்கம்’ எனும் பெயரில் இவ்வமைப்பு 1878 - 1882 காலங்களில் செயல்பட்டது. ‘தத்துவ விசாரிணி’ எனும் இதழை அக்காலங்களில் நடத்தினர். நமது தீயூழ் அவ்விதழ் கிடைக்கவில்லை. ஆனால் ‘தத்துவ விவேசினி’ இதழ்கள் ஏறக்குறைய தெண்ணூறு விழுக்காடு கிடைத்து, அவற்றை ‘சென்னை இலௌகிக சங்கம்’ (2012) எனும் பெயரில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளேன்.

அவற்றில் பதிவாகியுள்ள ஏழு பதிவுகளை இப்பதிப்பில் சேர்த்துள்ளார் தேவேந்திரன். இவை வள்ளலார் மறைந்து எட்டு ஆண்டுகள் கழிந்தபின் பதிவானவை. வள்ளலார் குறித்து, சமகாலத்திற்கு கொஞ்சம் பிற்பட்டவை. இத்தன்மை வள்ளலார் குறித்த ஆய்வுக்கு முதன்மையான தரவாக அமைகிறது. அப்பதிவுகளைக் கொண்டு விரிவான ஆய்வுகளைச் செய்ய இயலும். விரைவில் அவ்வகையான ஆய்வுகள் வெளிவர உள்ளன. இத்தொகுதியின் மிக முக்கியமான பெறுமானமாக இப்பின்னிணைப்பைக் கருதுகிறேன். தமிழ்ச் சமூகம் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை முதன்முதலாக வள்ளலார் எழுதிய திருமுகங்கள், பிறர் அவருக்கு எழுதிய திருமுகங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்தார். அதில் காணும் செய்திகள் வள்ளலாரைப் புதிய கோணங்களில் புரிந்து கொள்ள வழி காண்பவை. அவற்றில் சில இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. வள்ளலாரின் இறுதி காலங்கள் குறித்தப் புரிதலுக்கான அரிய ஆவணங்கள் இவை. அவரது இயக்கச் செயல்பாடுகள் குறித்தப் பதிவுகளை இதில் நாம் காணமுடியும்.

வள்ளலாரின் தலைமாணாக்கரும் அவரோடு வாழ்ந்தவருமான தொழுவூர் வேலாயுத முதலியார், தியாசபிகல் சொசைட்டிக்கு அளித்த வாக்குமூலம் மொழியாக்கம் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவும் அரிய ஆவணம்.

வள்ளலார் மறைவு குறித்த தென்னாற்காடு மாவட்ட கெஜட் பதிவின் மொழியாக்கம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் மறைவு குறித்து மறைமலையடிகள் செய்த பதிவும் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் பதிப்பித்த நூல்களின் முகப்பட்டை, அவரது ஆக்கங்களின் முதற்பதிப்பு முகப்பட்டை, ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளையின் பதிப்புகளின் முகப்பட்டைகள், வள்ளலாரின் உருவப்படங்கள், (தொடக்க காலத்தில் வெளிவந்தவை) ஆகிய அனைத்தையும் வி.தேவேந்திரன் ஆவணப் படுத்தியுள்ளார். இவை வள்ளலாரின் பன்முகப் புரிதலுக்கு அடிப்படையாக அமைபவை.

- வீ.அரசு

Pin It