தமிழ்நாடு அரசாங்கம் கடந்த ஐம்பத்திரண்டு வாரங்களாக “வள்ளலார்-200” என்ற பெயரில் முப்பெரு விழாக்களைத் தமிழ்நாடெங்கும் நடத்தி முடித்திருக்கிறது. இதன் உடனடிப் பயன் தமிழ்நாடெங்கும் வள்ளலார் அறியப்பட்டிருக்கிறார் என்பதாகும். சமூக வலைதளங்களில் குறிப்பாக “யூ-டியூப்களில்” கருத் தரங்குகள், சொற்பொழிவுகள் என இதுவரை இல்லாத அளவிற்கு வள்ளலாரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

“அரசியல் வேறு; இலக்கியம் வேறு” என்று என்ன தான் கூறிக் கொண்டாலும், அரசியலைச் சுற்றித்தான் இலக்கியங்கள் சுழலும் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக் காட்டுதான் வள்ளலார் பற்றிய தற்போதைய தேடல் என்று கூறலாம்.

இவ்வாறு, வள்ளலாரை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை தமிழ்நாடு அரசையே சாரும். மேலும், வள்ளலாரைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கும் ‘அரசின் வள்ளலார் 200’ வழிவகுத்திருக்கிறது. வள்ளலாரை அப்படியே பின்பற்றும் சன் மார்க்க அன்பர்கள் மட்டுமல்ல, சன்மார்க்கஞ் சாராத தமிழ் உணர்வாளர்கள்கூட வள்ள லாரைப் பற்றிய கருத்துகளைப் பொதுவெளியில் விவாதிக்கும் ஆரோக்கியமான போக்கு முகிழ்த்திருக்கின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

Vallalarஇவ்விடத்தில், வள்ளலாரை மேலும் மேலும் அறிந்து தெளிவடைவதற்கு அடிப்படையாக அவருடைய காலச்சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்மொழி குறித்த அப்போதைய பார்வை எவ்வாறிருந்தது?

இலக்கணக் கொத்து நூலாசிரியரான ஈசான தேசிகர் ஒரு பாடல் எழுதியுள்ளார் :

“பல்கால் பழகினுந் தெரியா வுளவேல்

தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்

மூன்றினும் முழங்கும்; ஆண்டினும் இலையேல்

வடமொழி வெளிபெற வழங்கும் என்க.”

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது தொல் காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய நூல்களுக்குப் பெருமை சேர்ப்பதுபோல இப்பாடல் படிப்ப வர்க்குத் தோற்றமளிக்கும். ஆனால், இப்பாடலில் முக்கியமான கருத்து ஒன்று வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. ‘இந்நூல்களில்’ இல்லையென்றால் “வடமொழி வெளிபெற” வழங்கும். அவரே, வடமொழி, தமிழ் மொழி எனுமிரு மொழியிலும் இலக்கணம் ஒன்றே என்று நம்மை ‘எண்ணிக் கொள்’ என்றும் ஆணையிடுகிறார்.

இன்றைக்கு ஓரளவிற்கு விவரம் தெரிந்தவர்களுக்குக்கூட, தமிழ்மொழியும் வடமொழியும் வேறு வேறானவை என்ற அடிப்படை உண்மை தெரியும்.

கலைமகளின் வலக்கண் சமற்கிருதம், இடக்கண் தமிழ் என்று கூறுபவர்களைப் பார்த்து, மனோன்மணீயம் சுந்தரனார், கலைமகள் உத்தமமான கிழக்கு திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாளெனின், எது வலக்கண், எது இடக்கண் என்று வினவி இடது வலம் தெரியாதவர்கள் இவர்கள் என்று ஏளனம் செய்கிறார்.

“பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் கற்பனையே!”

இலக்கணமில்லாக் கற்பனை என்று சுந்தரனார் இடித்துரைத்த பின்னரும் பாரதியார் பாடுவதைப் பாருங்கள்!

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் -என்னை

ஆரிய மைந்தன் அகத்தியனென்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே -நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.”

இலக்கணமே இல்லாத மொழிபேசும் நாட்டவன் இங்கு வந்து இலக்கணம் செய்து கொடுத்தானாம்! என்ன ஒரு பம்மாத்து!

வரலாற்றுத் திரிபுகள் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் வசதிக்கேற்றவாறு திரித்து பல நூறு ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.

திருமூலர் சமயத்தின் பேரால் நடக்கும் போர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பும் சிவமும் ஒன்றே எனக் கூறினார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார். மக்களிடையே செல்வாக்குப் பெற்றார். உடனே அவரைச் சொந்தங் கொண்டாட ஒரு கூட்டம் கிளம்பியது. தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திப் பாடநூல்களில் கூட ஒரு கதையைப் பரப்பி விட்டார்கள்.

“கயிலையில் நந்தியம்பெருமானிடம் ஞான நூல் களைப் பயின்று திருமூலர் தென்னாட்டிற்கு வந்தார். ஆநிரை மேய்க்கும் மூலன் இறந்து கிடக்கும் காட்சி யையும், பசுக்கூட்டம் கதறியழும் காட்சியையும் காணப்பொறாமல், மூலன் உடம்பில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அவ்வுடலிலேயே தங்கி 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்களை எழுதினார்.”

நம்பிக்கை சார்ந்த செயல்களைக் கேள்விக்கு உட்படுத்துதல் கூடாது என்பது மரபு. ஆனால் “இறைவன் தன்னைப் படைத்ததே தமிழில் தன்னைப் பாட வேண்டும் என்பதற்காக என்று சொன்ன திருமூலர், அதைச் சொல்வதற்கு வடநாட்டிலிருந்து கிளம்பி இங்கு வந்தார் என்பது எவ்வளவு பெரிய புரட்டு!” தமிழ் நாட்டிலிருந்து ஒருத்தர் திருமந்திரம் நூலை எழுதினார் என்பதைக்கூட இவர்களால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

“எதிர்ப்பது, எதிர்க்க முடியாவிட்டால் அந்தக் கருத்தைத் தனதாக்கி வளைத்துக் கொள்வது” என்பது பார்ப்பன நரித்தந்திரம். இதனைத்தான் உள்வாங்கிச் செரித்துக் கொள்வது என்று கூறுவர். இது காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சுவாமிநாத தேசிகர், சிவஞான சுவாமிகள், கச்சியப்ப முனிவர் போன்றோரைச் சமயத்தின் பேரால் பயன் படுத்திச் சஙக இலக்கியங்களையும், சமண, பௌத்த இலக்கியங்களையும் படிக்கக்கூடாது என்று ஒரு “தடையாணையை” இங்கு பெற்றிருந்தார்கள். குறிப்பாகச் சைவர்கள் இவற்றை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்பது சட்டமாக இருந்தது. சேலம் இராமசாமி முதலியார் இல்லையெனில் சங்க இலக்கியங்கள் இருந்தன என்பதே உ.வே.சா. அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்கும்!

“தீக்குறளைச் சென்றோதோம்” என்பதனை திருக்குறள் என்று புரிந்து கொண்டு திருக்குறளைப் படிக்க வேண்டாம் என்று கூறிய சமயத் தலைவர் களும் உண்டு. அவர்களே அதனை மறுத்துவிட்ட அறிக்கைகளும் உண்டு. திருக்குறள் உலக மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உலகோர் அனைவரும் அதன் பெருமையைப் பாராட்டிப் பேசிய பின்னர், திருக்குறள் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் என்றும் சிறந்த இலக்கி யங்களை வேதம் என்று கூறுவது மரபு என்றும் அந்த வகையில் திருக்குறள் தமிழ்வேதம் என்று பாராட்டப் படுகிறது என்றும் சொல்லத் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் மனுஸ்மிருதியையும் திருக்குறளோடு இணைத்து “உள்வாங்கிச் செரிப்பதற்கு” நாள்தோறும் முயற்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன.

அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் “வள்ளலார் சனாதனத்தின் உச்சம்” என்ற கூற்று. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கூற்று.

இன்றுகூட உச்சி வேளைக்கும் பின்னர்தான் தமிழில் பேசுவேன்; அதற்கு முன்னர் யாராக இருந்தாலும் தமிழில் பேசமாட்டேன்; ஏன் எனில் தமிழ் நீச பாஷை என்னும் சங்கராச்சாரியர்களும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினால் எழுந்து நிற்கமாட்டேன் என்று “தியானத்தில்” இருப்பவர்களுக்கும் இடையில்தான் வள்ளலார் தமிழை “இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழி” என்றும், தமிழ் ஒன்றே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியை அளிக்கவல்லது என்று இறைக்கருணையினையே தமிழால்தான் பெறமுடியும் என்றும் கூறினார். தமிழுக்கு ஐந்து நிலை அலகிட்டு உரையெழுதினார். எளிய தமிழ்நடையில் பாடல்கள் எழுதினார். இறைவன் கல்லார்க்கும் கற்றவர்க்கும் பொதுவானவன் என்று கூறினார். திருக்குறளை ஊர்தோறும் பரப்பினார்.

“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெருமறைப்பையும், போதுபோக்கையும் உண்டாக்கும் ஆரிய முதலிய பாஷைகளில்” தன் மனதைச் செலுத்தவொட்டாமல் பயிலுதற்கும் அறிதற்கும் துதித்தற்கும் இலேசுடைய தமிழ்மொழியினிடத்தே மனம் பற்றச் செய்வித்த இறைவனுக்குத் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் பிறப்பித்தமை குறித்து மகிழ்கிறார். இப்படிப்பட்டவரை வேறு கதைகள் புனைந்து உள்ளே இழுக்க வாய்ப் பில்லை. அதனால் சனாதனத்தோடு அவரை ஒரு கூட்டம் இணைத்துப் பார்க்க முயல்கிறது.

“உடையால் தமிழ்மரபு”, “மக்களோடு கலந்து வாழ்தல்”. “மக்களின் துயரங்கண்டு பதைத்தல்”, “பசியினால் இளைப்பவரைக் கண்டு வருந்தும் கருணை”. “ஆரவாரம் என்பது மருந்துக்கும் இல்லாத அடக்கம்” இவ்வளவு அரிய குணங்களைக் கொண்ட கருணை வள்ளலை இன்றைய “ஜகத்குருக்களோடு” ஒப்பிட்டுப் பாருங்கள்!

தாழ்ந்த சாதியினர் என்று உழைக்கும் மக்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துத் தெருவில் அவர்கள் நடக்கக்கூடாது; ஒருவேளை அவர்கள் நடந்தாலும் அவர்கள் காலடித்தடம் தெரியக்கூடாது; அப்படித் தெரியாதிருக்க ஒரு புதர்ச் செடியை தங்களுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டே நடக்க வேண்டும். ‘தாழ்த்தப்பட்டவன்’ பொதுவெளியில் நடக்கும் போது கழுத்தில் ஒரு பானையைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்பக்கூடாது. துப்ப நேர்ந்தால் வெளியில் துப்பக்கூடாது. கழுத்தில் கட்டியுள்ள பானை யில்தான் துப்பிக்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட சமுதாயச் சூழலில்தான் வள்ளலார் பூணூல் இல்லாமல் வந்த ஆடூர் சபாபதி சிவாச்சாரி யாரையும், அமாவாசை என்னும் தாழ்த்தப்பட்டவரையும் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்தினார்.

“தானே உருவாக்கிய நான்கு வருணங்களைத் தான் நினைத்தால்கூட மாற்ற முடியாது” என்று ஸ்ரீகிருஷ்ணர் வாய் மூலம் சொல்ல வைத்தவர்களுக்கு எதிரே நின்று, “வருணாசிரமெனும் மயக்கமுஞ் சாய்ந்தது” என்கிறார் வள்ளலார்.

“நால் வருணம் ஆசிரமம் ஆசாரமுதலாநவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே”

என்று வெகுண்டு கூறுகிறார்.

தான் முதலில் சைவ சமயத்தின்பால் மிகுந்த பற்று கொண்டிருந்ததாகவும், அதனை விட்டுவிட்ட தாகவும் கூறும் வள்ளலாரின் கூற்று பொருள் பொதிந்த கூற்று.

சைவமும்,வைணவமும்மக்களைஎப்படிநடத்தியது?

“அறுத்தலே தருமங் கண்டாய்

அரங்க மா நகருளானே”

என்று சமணர்களின் தலையை அறுப்பதே ‘தருமம்’ என்று தருமநீதியை விளக்குகிறார் ஒருத்தர். மணிவண் ணர்க்கு அன்புடையவர் என்றால்,

“குலம்தாங்கு சாதிகள் நான்கினினும் கீழிழிந்த

சண்டாள சண்டாளர்களையும்”

ஏற்றுக்கொள்வதாக மற்றொருவர் கூறுகிறார். சாதி இழிவைத் துடைத்தெறிவதற்குப் பதிலாக அவர்களை ஏற்றுக்கொள்ள நிபந்தனைகள் விதிக்கிறார்கள்!

“ஆவுரித்துண்ணும் புலையரே யாயினும்” என்கிறார் வேறொருவர்.

“பிண்டத்திரளையும்

பேய்க்கிட்ட நீர்ச்சோறும்

உண்டற்கு வேண்டி

ஓடித்திரியாதே” என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வள்ளலார் கூறுகிறார் :

“வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத் தைக் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்” என்று உயிர்களுக்கிரங்கும் வள்ளலாரின் நெறி பொதுமையை அடிப்படையாகக் கொண்டது.

எமது தெய்வம் எமது தெய்வம் என்று கலகக் குரல் எழுப்பிச் சமூக அமைதியைக் கெடுக்கும் இவர் களிடையே வள்ளலார் சமயச் சார்பின்மையை எப்படி

வெளிப்படுத்துகிறார் என்று இப்பாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

“பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்தர் ஆதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவம் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரம்மம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பேன்இவை சித்து விளையாட்டே!” (6:5801)

நாயகன்-நாயகி பாவனையில் எல்லாக் கடவுளர் களையும் இணைக்கும் வள்ளலாரின் நேர்த்தி இன்றைய காலச்சூழலுக்கு மிகவும் தேவையானது. சமய நல்லிணக்கத்தையும் சாதி ஒழிப்பையும் வலியுறுத்தி வந்த பெரியார் அதனால்தான் வினவினார்: “இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்தவிதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டா னாவது போற்றக் கண்டுள்ளாயா?” சாமி. சிதம்பரனார் தெரிந்தெடுத்த நூறு வள்ளலார் பாடல்களைப் பெரியார் குடியரசு இதழில் வெளியிட்டது புதிய செய்தியன்று. பாவேந்தர் மிக எளிய வினாவொன்றையும் விடுத்தார்:

“சொற்கோவில் நற்போற்றித்

திருஅகவல் செந்தமிழில் இருக்கும்போது

கற்கோயில் உள்புறத்தே

கால்பதித்ததெவ்வாறு!”

‘சுயமரியாதை’ என்பதனைக் கொள்கையாய்க் கொண்ட தமிழர்கள் வள்ளலாரின்பால் மிகுந்த ஈர்ப்பு டையவர்களாக இருந்திருக்கின்றார்கள்; இன்னும் இருக்கிறார்கள்.

அதேபோல, சைவத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. சுயமரியாதை இயக்கத்தின் வேர்களை வள்ளலாரின் சன்மார்க்க இயக்கத்தினின்று தேடியுள்ளார். சைவப் பெரியாரான மறைமலையடிகள் வள்ளலாரின் பக்கத்தில் நின்றவர். தனித்தமிழ்இயக்கம் உருவாகவே வள்ளலார்தான் காரணம் எனக் கூறியவர்.

தமிழறிஞர் செய்குதம்பிப் பாவலர் வள்ளலாரின் மரணமில்லாப் பெருவாழ்விற்கு அளித்த விளக்கம் காலத்தை வென்று நிற்கக் கூடியது.

மேற்காண் தகவல்களினடிப்படையில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுளது.

இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணைந் துள்ளனர். அப்புள்ளி ‘தமிழர்கள்’ என்று அனைவரை யும் இணைக்கிறது. தமிழ்மக்கள் அனைவரும் சாதி,

மதங் கடந்து தமிழர்களாய் ஒருங்கிணைய வேண்டும் என்று சொல்கிறது. கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதை இக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாய் அமையும்.

“சாதி பேதங்களை

சமய விரோதங்களை

சமூகக் கேடுகளைச் சாடும்

அருட்பா வரிகளில் எல்லாம்

ஆடி அசைகிறது

பெரியாரின் தாடி!

ஆம் -அருட்பா செய்கிறது

புரட்சிக்கு அறிமுகம்.

கருணை இல்லா ஆட்சி

கடுகி ஒழிக என்று

பாடும்போது, கைகட்டி நிற்கும்

வள்ளலார் கைகள் கலகக்!

கொடியை உயர்த்துகின்றன.

தமிழனுக்கு இரண்டு கண்கள்

ஒன்று சைவம் வடலூரார்

மற்றொன்று அசைவம் ஈரோட்டார்

இருகண்களும் உள்ள தமிழனுக்கு

இதயம் வள்ளுவம்!”

- பேராசிரியர் இர.நடராசன்

Pin It