தலை மயிர் வளர்ப்பதில் (அல்லது வெட்டுவதில்) பல வகைகள் இருப்பது! போலவும், நெற்றியில் சித்திரம் வரைவதில் பல வகைகள் இருப்பது போலவும், உடைகளிலும் பல வகைகள் இருக்கின்றன.
இம்மாதிரி உடைதான் உடத்திவர வேண்டும் என்று நீதி இலாகா சிப்பந்திகளுக்குச் சென்னை ஹைகோர்ட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. துணி கிராக்கியான இந்தக் காலத்தில் பணப் பஞ்சத்தில் சிக்கியிருக்கின்ற ஏழை குமாஸ்தாக்களும் இதர சிப்பந்திகளும் இஷ்டமான ஏதோ ஒரு உடையில் வந்தால் என்ன? ஷர்ட் அணியக் கூடாது; கோட் அணிய வேண்டும்; திறந்த கோட்டாயிருந்தால் கழுத்தில் சுருக்கு (“டை”) போட்டுக் கொள்ள வேண்டும்.
தலைமயிர் கிராப்பாயிருந்தால் குல்லாய் வேண்டியதில்லை. உச்சுக் குடுமியாகவோ, முழுக் குடுமியாகவோ, அடுப்புக்கட்டிக் குடுமியாகவோ, சிவலிங்கம் தலையாகவோ இருந்தால் தலையில் (அவரவர் தலையில்) குல்லாப் போட வேண்டும்!
இதென்ன விபரீதமாயிருக்கிறது, பார்த்தீர்களா? நீதி இலாகா குமாஸ்தாக்களுக்கு மட்டும் இந்தத் தண்டனை எதற்காக?
மந்திரிகளிலேயே சிலர் வெட்டியான் வேஷம் போட்ட மாதிரி வருகிறார்களே! இவர்களுக்கெதிரில் ஏழை உத்யோகஸ்தர்கள் மட்டும் சூட்டும் கோட்டும் போட்டுவர வேண்டியதாயிருக்கிறதே! இல்லாவிட்டால் மந்திரிகள் முகம் பெண்டாட்டியைச் சாகக் கொடுத்தவன் முகம் மாதிரி மாறிவிடுகிறதே, இது ஏன்? உடைகளில் பல ரகம் என்று பீடிகை போட்டேனல்லவா?
வரதாச்சாரி உடை! டம்பாச்சாரி உடை! ரமண ரிஷி உடை! கவர்னர்-ஜெனரல் உடை! தேச பக்தர் உடை! சினிமா ஸ்டார் உடை! பள்ளி ஆசிரியர் உடை! பழைய தமிழ்ப் பண்டிதர் உடை!
இப்படியாகப் பல வகைகள் உண்டு! ஒருவர் உடை மற்றொருவருக்குப் பிடிப்பதே யில்லை! ஒரே தினுசு உடையை அணிகின்றவர்களிலும் வேற்றுமை!
“ஏய்! பட்டிக்காட்டான்! முதுகிலே துணியைப் போடுடா! முதுகு வேர்வை பின்பக்கம் ஒட்டினால் ஒரே நாற்றமாய் நாறும்,” என்கிறார், பஸ் கண்டக்டரும், ட்ராம் கண்டக்டரும், பிரயாணியைப் பார்த்து.
ஆனால் ஒரு புரோகிதர் அதே மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் மூச்சுப் பேச்சுக் கிடையாது! பயபக்தியாக அவர் அருகில் சென்று, “சாமி! டிக்கட் வாங்கிட்டீங்களா?” என்கிறார்!
“சாமியின்” முதுகு வேர்வையானது இந்தக் கண்டக்டருக்கு ஜவ்வாது வாசனை யடிக்கும் போலிருக்கு!
ஒரு மந்திரி கதர் ஜிப்பா போட்டுக்கொண்டு, மடிப்புக் கலையாத இரண்டு முழத்துண்டை நான்காக மடித்து, சாமி தூக்குகிறவன் மாதிரி (அல்லது சமையற்காரர் மாதிரி) தோளில் போட்டுக்கொண்டு ஹைகோர்ட்டுக்குள் நுழையலாம்!
ஆனால் 50-ம் 60-ம் சம்பளம் வாங்குகின்ற குமாஸ்தாக்கள் மட்டும் இப்படி உடுக்க வேண்டும்; அப்படி நடக்க வேண்டும்!
உடையில் கூட ஏழைக்கு ஒரு விதி! பணக்காரருக்கு ஒரு விதி! விதி மட்டுமா? ஊரார் தராசும் அப்படித் தானே நிறுக்கிறத?
காலஞ்சென்ற வடபாதி மங்கலம் சோமசுந்தர முதலியார் ஒரு மெல்லிய ஜிப்பாவும் ஆறணா சிட்டைத் துண்டுந்தான் அணிவது வழக்கம்!
“பார், அவரை! சாட்சாத் லட்சுமி புத்திரன்! எட்டாயிரம் ஏக்கருக்கு மேல் நிலமுள்ளவர்! பல லட்சக்கணக்கில் ரொக்கமள்ளவர்! எவ்வளவு ஏழ்மையான உடை உடுத்துகிறார், பார்! இடுப்பில் ஒரே ஒரு 4 முழ மல் வேட்டி! அரைக் காசுக்கில்லாததுகளெல்லாம் ஜரிகை அங்கவஸ்திரம் போட்டுகிட்டு டம்பாச்சாரி மாதிரித் திரியுதுகளே!” என்று கூறுவதை நானே பல தடவை கேட்டிருக்கிறேன், திருவாரூரில் பள்ளிப் பிள்ளையாயிருந்த காலத்தில். ஆனால் அதை நினைத்துக் கொண்டு என்னைப் போன்ற ஆசாமிகள் அதே உடையைப் போட்டுக் கொண்டால், என்ன சொல்கிறார்கள்?
“இதோ! ஒரு அன்னக்காவடி! நல்ல துணிகூட இல்லாமல் திரிஞ்சுகிட்டிருக்குது!” என்றுதான் சொல்கிறார்கள்!
சரி! சரி! நடக்கட்டும்! இந்த அக்கிரமத்துக்கெல்லாம் ஏதாவது ஒரு முடிவு காலம் வராமலா போய்விடும்?
- குத்தூசி குருசாமி (28-4-50)
நன்றி: வாலாசா வல்லவன்