sangakalamமக்களின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் இலக்கியங்களில் உத்திகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன, காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. அதனைக் குறித்துச் சில நம்பிக்கைகளும் பழமொழிகளும் வழக்கில் உள்ளன. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது பழமொழி. காக்கைக்கு உணவளித்து விட்டு பிறகு உண்ணும் பழக்கமும் ஒரு சில சமூகத்தாரிடம் காணப்படும் சமயப் பழக்கமாகும்.

நமது மூதாதையினரே காக்கை வடிவத்தில் வந்து அவ்வுணவை அருந்தி விட்டுச் செல்வதாக நம்பி மக்கள் நிறைவு கொள்கின்றனர். காக்கை நம் வீட்டு முற்றத்தில் வந்து கரைந்தால் விருந்தாளி யாரோ வரவிருப்பதை முன்கூட்டியே அறிவிப்பதாக நம்புகின்றனர். இது மூடநம்பிக்கையாகவே இருந்துவிட்டுப் போனாலும் மிகப் பழங்காலமாகவே இருந்து வருகிறது. இலக்கியங்களில் உத்தியாக இடம் பெற்றுள்ளது. பிற மொழி இலக்கியங்களிலும் இவ்வுத்தி காணப்படுகிறது.

காக்கைப்பாடினியார் என்று ஒரு சங்ககாலப் புலவர் காக்கையைப் பாடியதனால் காக்கைப்பாடினி ஆனார்; காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற நம்பிக்கையில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். பாடல் முல்லைத் திணைக்குரியது. தோழி கூறுவதாக அமைந்துள்ளது. தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன் வினை (பணி) முடித்துத் திரும்பி வந்தான்.

அவன் தலைவியைப் பிரிந்துசென்ற காலத்தில் அவளைத் தோழி நன்றாகக் கவனித்துக் கொண்டாள். ‘தலைவியை நன்கு ஆற்றுவித்திருந்தாய்’ என்று அவன் தோழியைப் புகழ்ந்துரைத்தான். அதற்குத் தோழி பதில் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. பாடல் பொருள் பின்வருமாறு: ‘வலிமையான தேரையுடைய நள்ளி என்னும் வள்ளலது காட்டில் இடையர்கள் வாழ்ந்தனர். அவர்தம் பசுக்கள் நெய்யை உண்டாக்கின.

அந்த நெய்யோடு வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோற்றை ஏழு கலங்களில் இட்டு அவற்றைக் காக்கைக்கு அளித்தேன். அது எதற்காகவென்றால் என் தலைவியின் பெரிய தோள்களை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டாகும். விருந்தினர் வருமாறு கரைதலைச் செய்த காக்கைக்குரிய பலிச்சோறானது மிகவும் சிறிய அளவினதே ஆகும்.

திண்டேர் நள்ளி கானத்து அண்டர்

பல்லா பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி

பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே              (குறுந். 210)

தலைவனுடைய வருகைக்குக் காக்கையின் கரைதல் நன்னிமித்தமாகும். அதனைச் செய்த காக்கைக்குத் தோழி சேரிடுகிறாள். தலைவியும் மகிழ்ந்து அமைதி கொள்கிறாள். பலிச் சோறானது சிறிய அளவினதே என்று கூறும் தோழியின் தன்னடக்கம் பொதிந்த பாடலாக விளங்குகிறது.

ஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது. பாடல் தாய் கூற்றாக அமைந்துள்ளது. அவள் காகத்திடம் அதனை விளித்து வேண்டுகோள் விடுப்பதாகப் பாடல் செல்கிறது. “மாசில்லாத கரிய தூவியை உடைய காகமே! நீ அன்பு கொண்ட மரபினையுடைய உன் சுற்றத்தோடு உண்ணும் வழக்கத்தினை உடையாய்! நீங்கள் வயிறார உண்பதற்குப் பச்சை ஊன் கறிகளைக் கொண்டு சமைத்த அரிசிச் சோற்றைப் பொன் தட்டில் தருவேன். (நீ எனக்கோர் உதவி செய்ய வேண்டும்) என் மகளின் காதலன் வீரம் செறிந்த ஆண்மகன். அவன் அழகிய மகளை அழைத்துக் கொண்டு என்னிடம் (விரைவில்) வருவான் என்று கரைவாயாக” என்று தாய் வேண்டுகிறாள்.

மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை

அன்புடை மரபினின் கிளையோ டாரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெஞ்சின விறல்வேற் காளை யோடு

அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே

(ஐங். 391)

உடன் போகிய தலைமகள் மீளற் பொருட்டு தாய் காகத்திற்குப் பராய்க்கடன் ஈத்தது’ என்று துறை விளக்கம் அமைந்துள்ளது.

காக்கை குறித்தான இந்த நம்பிக்கை ஓர் அபபிரம்சா பிராகிருதப் பாடலிலும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் பாடல் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. அதனைப் பார்ப்போம்.

“காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள் (ஏனெனில் காகம் கரைதல் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் அவள் அதை நம்பவில்லை). அவ்வாறு காகத்தைத் துரத்திக் கொண்டேயிருக்கையில் தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன.

திடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்றாள். தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறுகின்றன”.1 இது அபபிரம்சா பாடல். காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுவதாகக் கருதி தலைவி காகத்தை விரட்டுகிறாள்.

தமிழ்ப் பாடல்களில் பறவைகளுக்கு (காகத்திற்கு) உணவளிக்கும் பண்பு வெளிப்படுகிறது. ‘வெண்ணெல் வெஞ்சோறு’ என்ற தொடரில் மனிதருக்கு சூடாக உணவு பரிமாறும் விருந்தோம்பல் பறவையிடத்திலும் காட்டுவதைக் காணமுடிகிறது.

மாசில்லாத கரிய தூவியை உடைய காகம் என்றும், அவை உறவுகளோடு உண்ணும் உயர்ந்த பண்புடையவை என்றும் அழகாக வர்ணிக்கப்படுகின்றது. கலம் என்ற பெயர் பொலம் புனைகலம் (பொன்னாலாகிய வட்டில்) என்றும், காளை என்ற பெயர் ‘வெஞ்சின விறல் வேல் காளை’ என்றும் ஓதி என்ற பெயர் ‘அஞ்சில் ஓதி’ என்றும் சிறப்பான அடைமொழிகளைப் பெற்று வந்துள்ளன.

இலங்கு வளை நெகிழ்தல்

மேற்கண்ட அபபிரம்ச பிராகிருத பாடலில் ‘வளையல் நெகிழ்தல்’ குறித்தும் வந்துள்ளது. நமது அகப்பாடல்களில் பல இடங்களில் வளைநெகிழ்தல் குறித்து வந்துள்ளது. அதுகுறித்தும் தொடர்ச்சியாகக் காண்போம். பழந்தமிழ் மகளிர் வளையல் அணிந்தனர். இதுகுறித்த ஆதாரங்கள் பல பாடல்களில் வருகின்றன. ஒரு பாடலில் தலைவன் தலைவியின் அழகைக் குறிப்பிடும்போது இளமையுடையவள்; ஒளி பொருந்திய பற்களை உடையவள்; வளையல் அணிந்த கையை உடையவள் என்று வர்ணிக்கிறான்.

இளையள் முளைவாள் எயிற்றள்

வளையுடைக் கையள் எம்அணங்கியோளே        (குறுந். 119)

வளையலின் பயன்பாடு அதிகமாக இருந்ததனால் உடைந்த வளையலைப் பிறை நிலாவுக்கு உவமையாகவே கூறியுள்ளார் ஒரு புலவர் (குறுந். 307). தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது.

‘சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட கைவளை உடல் மெலிவினால் நெகிழ்கிறது. நாள்தோறும் இமை பொருந்துதல் இல்லாமையால் உறக்கமின்றி கலங்குகிறேன்’ (குறுந். 11) என்று தலைமகள் சொல்கிறாள். இன்னொரு பாடலில் தலைவனால் ‘என் கைகளிலுள்ள வளைகள் கழல மேனியில் பசலை பரக்கப் பெற்றேன்’ (குறுந். 371) என்று புலம்புகிறாள்.

‘காமநோய் வளர்பிறையைப் போல மேலும் மேலும் வளர்ந்து பெருகித் தோளில் அணிந்த வளையலை நெகிழச் செய்து துன்பத்தைத் தருகிறது’ (குறுந். 289) என்று இரங்குகிறாள். இது மற்றொரு பாடல்: ‘என் வளைகள் நெகிழ்ந்தன; தோள்கள் மெலிந்தன; என் நாணமும் முன்பே கழிந்தது இனி விடுவதற்கு ஒன்றுமில்லை’ (குறுந். 239) என்று கூறித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறாள். இவையாவும் குறுந்தொகையில் வரும் செய்திகள்.

ஐங்குறுநூற்றில் ‘வளைப்பத்து’ என்ற பகுதியில் வளை அணிகலன் குறித்து செய்திகள் இடம்பெற்றுள்ளன. ‘கடல் சங்கினை அறுத்துச் செய்த வளையலை முன்னங்கையில் அணிந்திருப்பவள்’ (ஐங். 191) என்று தலைவன் கூறுகிறான். ‘அணிந்து கொள் என்று நீ தந்த வளையல்கள் நல்லவைதானா (கழன்று போகும்படி நீ பிரியாமல் இருப்பாயா’ - என்பது பொருள்) என்று தோழி வினவுகிறாள் (ஐங். 193). ‘சங்கில் அறுத்த ஒளி வீசும் வளையலை உடையவள் தலைவி’ (ஐங். 196) என்று மற்றுமோர் இடத்தில் தோழி விவரிக்கிறாள்.

‘வளையல்களைக் கழலச் செய்தவன் தலைவன்’ (ஐங்.199) என்று இன்னொரு பாடலில் வருகிறது. சங்கப் பாடல்கள் அனைத்திலும் தேடினால் வளையல்கள் குறித்த விவரங்கள் ஏராளம் கிடைக்கும்.

ஒரு ஐங்குறுநூறு பாடல் மட்டும் மேலே எடுத்துக்காட்டிய அபபிரம்சா பாடலைச் சற்று ஒத்துக் காணமுடிகிறது. ‘மரக்கலங்களைச் செலுத்தும் துறையையுடைய தலைவன் பிரிந்திருக்கிறான் என்று கழன்றோடிய என் வளையல், வந்திருக்கிறான் என அறிந்து வீங்கும் என் தோளில் செறிந்து கிடக்கின்றன’ என்று தலைவி கூற்றாக வந்துள்ளது.

ஓடுகலம் உகைக்கும் 

துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன

வீங்கின மாதோ தோழி-என் வளையே            (ஐங். 192)

மெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே (கைகள் பருத்ததால்) வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் (Hyperbole) என்ற இலக்கிய உத்தியில் அமைந்துள்ளன.

இன்னொரு அபபிரம்சா பாடல் வளை நெகிழ்தல் குறித்து அருமையான கற்பனையுடன் அமைந்துள்ளது.

“வளையல்கள் தரையில் நெகிழ்ந்துவிடும் என்ற அச்சத்தினால் தலைவி கைகளை மேலே உயர்த்தியவாறே நடக்கிறாள். (அவ்வாறு செய்வது) தலைவனைப் பிரிந்து வாழும் பிரிவு என்கிற பெரிய குளத்தின் ஆழத்தைப் பிறருக்கு உணர்த்துவது போல (அக்காட்சி) இருக்கிறதாம்.2 நீர்நிலைகளில் நீந்தத் தெரியாதவர்கள் மூழ்கிவிட்டால் கைகளை உயர்த்தியவாறு தன்னைக் காப்பாற்றுமாறு சைகை செய்வரல்லவா? அத்தகைய ஒரு காட்சியைப் புலவர் நயத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

செறிவளை (குறுந். 190), இறைவளை (குறுந், 289), இலங்குவளை (குறுந். 50), கோடு ஈர் இலங்கு வளை (குறுந். 11,31) ஆய்வளை, எல்வளை என்றெல்லாம் சிறந்த அடைமொழிகளுடன் வளையல் என்ற சொல் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அபபிரம்சா பாடல்கள் வேறு வகையில் சிறப்பானதாக காணப்படுகின்றன.

- ஆ.கார்த்திகேயன்

Pin It