சாமான்ய மக்களின் வாழ்வியலை சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் தன் வாழ்நாளெல்லாம் ஓயாது கலைப்படைப்பாக்கம் செய்துகொண்டிருந்த சிற்பி தட்சிணாமூர்த்தி அவர்கள் தன் 74வது வயதில் தன் கலைப்பரிமாணத்தை முடிவுறுத்திக்கொண்டார்.
தொடக்ககாலத்திலிருந்து சிற்பி தனபால், ஓவியர் ஆதிமூலம் போன்ற கலைஆளுமைகளுடன் நெருக்கமாகச் சேர்ந்தியங்கிய சிற்பி தட்சிணாமூர்த்தி அவர்கள் சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று பின்னாளில் அங்கேயே பணியில் சேர்ந்து சுடுமண் சிற்பத்துறைத் தலைவராகப் பணிமுடித்து ஓய்வு பெற்றவர். 2000 ஆம் ஆண்டு வாக்கில் சந்ரு மாஸ்டரைச் சந்திக்கச் செல் கையில் இவர் கிரானைட்களில் சிற்பம் வடித்துக்கொண் டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்.
பார்க்கிற போதெல்லாம் வெள்ளை நிற ஜிப்பாவில் எளிமையாகத் தோன்றும் அவர் சந்ரு மாஸ்டரைப்போல யாருடனும் அதிகமாக உரையாடிப் பார்த்ததில்லை. மாறாக அவரது விரல்கள் கற்களோடும் கற்சிற்பங்களோடும் சதாவும் உரையாடிக்கொண்டிருப்பதைக் காணநேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் கல்லூரியில் தினசரி ஏதேனுமொரு சிற்பத்தை அவர் வடிவமைத்து முடித்துவிடுவார் என்று கேள்விப்பட்டதுண்டு.
தொடக்க காலத்தில் நாட்டார் கலைமரபின் வடிவங்களையும் எளிய மனிதர்களின் உடல்மொழி களையும் நவீனத்துவக் கலைப்படைப்புகளாக உருவாக்கம் செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டபோது நவீன பாணி ஓவியங்கள் மட்டுமே வரைந்துவந்தவர் 70கள் காலகட்டத்தில்தான் களிமண் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போது கைகளால் சிற்பங்களை வடிவமைத்தவர், பின்னாட்களில் இயந்திரங்களின் உதவியால் ஏராளமான களிமண் மற்றும் கிரானைட் சிற்பங்களை வடிவித்தவர். தன் வாழ்நாள் வரையிலும் தன் படைப் புருவாக்கத்தை தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். அவரது மாணவர்களில் ஒருவரான க.நடராஜன் அவரைப் பற்றிய சித்திரத்தை,
“வேகம், லாவகம், சோராதிருத்தல், ஊக்கப் படுத்துதல், மாணவர்களின் மீதான பரிவு, கொஞ்சம் கருணை, எளிமை, சாமானியருக்கான தோற்றம், பகிர்ந்து கொள்ளுதல், இயங்கிக் கொண்டே இருத்தல், இவைதான் தட்சிணா மூர்த்தி" என்று பதிவு செய்கிறார். (தமிழ் இந்து 25-9-2016)
இவரது பெரும்பாலான ஓவியங்களும் சிற்பங்களும் எளியவகையிலான பெண்களை மையப்படுத்துவதாகவே அமையப்பெற்றுள்ளது. ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாணி கலைவடிவங்களை ஆழமாக உள்வாங்கியதன் பின்னணியிலேயே தென்னிந்திய கலைவடிவங்களை அதனுடன் ஒத்திசைவு செய்யும் கலை வெளிப்பாட்டுத் தன்மையே இவரது படைப்பாக்கத்தின் தனித்த சிறப்புகளில் ஒன்று.
ஓவியர் பிக்காஸோவைத் தன் மகத்தான முன்னோடியாக தகவமைத்துக்கொண்ட இவரது ஓவியங்களும் சிற்பங்களும் பெரிதும் முப்பரிமாண வகைப்பாட்டில் அமையப்பெற்றவை. இவரது படைப்புகளின் தனித்த சிறப்புக்கு இவர் கைக்கொண்ட கியூபிசக் கோட்பாடுப் பின்புலமும் காரணமாக அமைந்தது என பலராலும் இனங்காணப்படுகிறது.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமையும் இவரது கலைப்படைப்புகள் லண்டன், சுவிட்சர்லாந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் இடம்பெற்றமையும் இவரது படைப்பாளுமையைச் சான்று பகர்கின்றன.
இவரது மாணவர்களில் ஒருவரான ஓவியர் மருது தன் நினைவுகளாகக் குறிப்பிடும் நிகழ்வுகளிலிருந்து தட்சிணாமூர்த்தியின் ஆளுமைமிக்கக் கலைச் செயல் பாட்டின் செழுமையை உணர்ந்துகொள்ளமுடியும்.
“கல்லூரியில் படிக்கிற காலத்திலிருந்து இன்று வரை அவருடைய கடின உழைப்பும், சோர்வே இல்லாத தன்மையும் கொண்ட வாழ்வுமுறை அவரை அறிந்தவர் அனைவரும் அறிந்தது. அவருடைய இயங்குநிலையின் முன்பு பம்பரமும் தோற்கும். நானும் உத்வேகத்துடன் இருக்க அருகில் இருக்கும் அவரையே எப்போதும் மனதில் கொள்வேன்.
கடின உழைப்பிலேயே உயர்ந்தவர். எளிமையாகவும் அன்று கண்டது போல் இன்றும் எங்களின் அன்பிற்கு இனியவர். ஒருமுறை நீலாங்கரையிலிருந்து நண்பர் சாரங்கனோடு அடையாறில் இருக்கிற என்னைப் பார்க்க வந்திருந்த ஓவியர் ஆதிமூலம் அங்கிருந்து கிளம்பிச் சென்று “தச்சிணாவைப் பார்க்க வேண்டும் என்று” கூறியதுடன் நகைச்சுவையாக தன் நண்பர் தட்சிணாவைப் பற்றி “நான் இங்கு சிறிது தாமதித்தால் தட்சிணா இங்கே வந்து விடுவார்” என்று கூறியது இன்றும் நெகிழ்வை ஏற்படுத்துகிறது. (தடாகம்.காம்)
மேன்மையும் உன்னதங்களும் நிரம்பிய கலையுரு வாக்கங்களால் நவீனத்தமிழ்க்கலையை செம்மைச் சிறப்பு செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான சிற்பி தட்சிணாமூர்த்தி அவர்களின் கலைஆளுமை நம் காலப் பெருமிதங்களில் ஒன்று. அவரது படைப்பாக்கங்களை மேலும் மேலும் கொண்டாடும் விதமாக அவரது நினைவைப் போற்றுவதே அவருக்கு தமிழ்ச்சமூகம் செலுத்தும் மதிப்பாய்ந்த அஞ்சலியாக அமையும்.