ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இருமுறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் ஸ்டாலின் குணசேகரன் இந்நூலை வெளியிட்டுள்ளார்.

stalin gunasekaran book on kalamமுதல் உரை “ஒவ்வொரு வீட்டிலும் நூலகம்” என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கற்பனை சக்தி கொண்ட சமுதாயத்தை மூத்த பத்திரிகையாளர்கள் எழுதத் தூண்ட வேண்டும். புதிதாக வருகின்ற புதிய சிந்தனையுடன் இருக்கின்ற சமுதாய விழிப்புணர்வுடைய இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். எழுத்தாளர்கள் நல்ல எண்ணங்களை உருவாக்கிப் பலப்பல லட்சியக் கனவுகளை எழுத்து மூலம் மக்களிடையே கொண்டு வரவேண்டும். இவர்களுடைய எழுத்துக்கள் இளம் தலைமுறையினருக்கு எதிர்காலச் சிந்தனையை உருவாக்குவதோடு அந்த இளம் மனங்களை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை அந்த உரையில் வலியுறுத்தியுள்ளார். அவரது வாழ்க்கையில் மூன்று நூல்கள் அவரை வழி நடத்தியதாகக் குறிப்பிட்டார். 1. வில்லியன் வாட்சன் எழுதிய “லைட் ப்ரம் மெனி லேம்ப்ஸ்” 2. திருக்குறள் 3. டெனிஸ் வைட்லி எழுதிய “எம்பயர்ஸ் ஆப் தி மைண்ட்.”

இம்மூன்று நூல்களும் அவரின் வாழ்க்கையின் பல முக்கியக் கட்டங்களில் வழிநடத்தியிருப்பதை அவர் விரிவாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். புத்தகம் எப்படி நம்மை அறிவார்ந்த சமுதாயத்திற்கு இட்டுச் செல்லும். அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன, அறிவின் இலக்கணம் என்ன என்பதையும் விரிவாகச் சொல்லியிருந்தார். இரண்டாம் உரை “புத்துலகை உருவாக்கும் புத்தகங்கள்Ó என்ற தலைப்பிலானது. அந்த உரையில் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை முன்னிலைப் படுத்திப் பேசியுள்ளார். அவர்கள் சர் ஹம்ப்ரி டேவி, மைக்கேல் பாரடே, தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் ஆவர்.

உலகின் வளர்ச்சியில் அபாரமான சாதனைகளுக்கு அச்சாரங்களாய் புத்தக வாசிப்பு இருக்கிறது. உலகத்திலேயே பெரிய சாதனையாளர்களை, பெரிய மனிதர்களைப் பற்றிப் படித்து வளர்ந்த மாணவர்களின் கற்கும் திறன் மென்மேலும் வளரும். அப்படிப்பட்டப் புத்தகங்களைப் படித்து அகத் தூண்டுதல் ஏற்பட்ட பல அனுபவங் களைப் பற்றி அவ்வுரை எடுத்துரைத் திருக்கிறது.

வாசிப்பு மூலமான சமுதாயத்தால் பண்பாடு நிறைந்த, தரமான கல்வி, சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற ஆவல் அவரின் உரைகளில் தெளி வாகிறது. மற்றும் புத்தக வாசிப்பு மனித மனங்களை விரிவுபடுத்துவதையும் விளக்கியுள்ளார்.

அப்துல் கலாம் உரைகள்

த.ஸ்டாலின் குணசேகரன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

ரூ.40.00

Pin It