நமது நாடு விடுதலை பெற்று 75 வது ஆண்டை நாம் கொண்டாடி வரும் சூழலில், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி வாயிலாக உணவு மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு பிரச்சினைகளில் நாம் பின்தங்கியே உள்ளோம். குறிப்பாக நமது தேசத்தின் கோடிக்கணக்கான பெண்கள், குழந்தைகளைப் பாதிக்கும் இப்பிரச்சினைகளுக்கு நம்மால் உரிய காலத்தில் தீர்வுகள் தர முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
இதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பிரிவினர் மற்றும் மத்திய தர பிரிவினர் அதிகப்படியாகப் பாதிக்கப்படும் நடைமுறை சூழலே நமது நாட்டில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண்மை, கால்நடை, மருத்துவம் மற்றும் பொது வழங்கல் துறைகள் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் உண்மையில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படவில்லை என்பதே நடைமுறை உண்மை.இத்தகைய சூழலில் தற்போது நமது தேசத்திலும், உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பருவ மாற்று பிரச்சனைகள் (Climate Change Issues) மற்றும் வேளாண் சந்தைகளில் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான வேளாண் விளை பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களும் நமது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய பல கோடி நுகர்வோரின் வாழ்வுரிமைகளைக் கடுமையாக பாதிக்கச் செய்து வருகிறது.
இத்தகைய நடைமுறைச் சூழலில் தினந்தோறும் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் குறிப்பாக வளர் இளம் பெண்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலம், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது இன்றைய முக்கிய தேவையாகும். இத்தகைய கோடிக்கணக்கான நமது தேசத்துப் பெண்களை, குழந்தைகளை அவர்களின் நிகழ் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர் வேளாண் கள ஆராய்ச்சிகள் வாயிலாகப் பல புதிய வேளாண் செயல் திட்டங்களைப் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வயல்கள், தோட்டங்களில் அவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கியும், பருவ மாற்று பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகளுக்கு உரிய மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்கியும் வருகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'புதிய வேளாண் கள ஆராய்ச்சிகள் மற்றும் விரிவாக்க முயற்சிகள்':
கடந்த பல ஆண்டுகள் தொடர் வேளாண் ஆராய்ச்சிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தைச் சேர்ந்த பேராசிரியர் முது முனைவர். இராம. கதிரேசன் தலைமையிலான வல்லுநர் குழு தமிழகத்தின் திட்ட கமிஷன் அடையாளப்படுத்திய மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றில், அண்ணாமலை பல்கலைக்கழக ஒருகிங்கிணைத்த பண்ணைய விவசாய முறைகளை ஆயிரக்கணக்கான தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளின் வயல்களில் அவர்களின் குடும்ப பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியது. விவசாயிகளின் வயல் 5 சென்ட் என்ற அளவில் பிரிக்கப்பட்டு, அவற்றின் ஓரத்தில் அதிக தண்ணீரை சேகரிக்க ஒரு அகழி தோண்டப்படும். பின்னர் அந்த வயலில் கோழிக் கூண்டுகள் அமைக்கப்பட்டு அவற்றில் கறிக்கோழிகள் வளர்க்கப்படும். நெல் வயலில் நீர் தேக்கப்படும் சூழலில் அவற்றில் கட்லா, கெண்டை போன்ற மீன் ரகங்கள் விடப்படும். இவ்வாறு நெல் வயலில் ஒரே பருவத்தில் நெல், மீன், கோழி போன்றவை சாகுபடி செய்யப்படும். நெல்லின் பருவ காலமான 90 முதல் 105 நாட்களுக்குள் மூன்று முறை கறிக் கோழிகள் வளர்க்கப்பட்டு, அவை விற்பனை செய்யப்படும். மறுபுறம் நெல் வயலில் விடப்பட்ட மீன்கள் சுமார் அரை கிலோ அளவிற்கு வளர்ந்தவுடன் அறுவடை செய்யப்படும்.
இவ்வாறு நெல், மீன், கோழி வளர்க்கும் விவசாயிகள் ஒரே பருவ காலத்தில், நெல், மீன், கோழி சாகுபடி வாயிலாக தங்கள் வயலில் மும்மடங்கு வருமானம் பெறலாம். இவ்வாறு நெல் வயலில் நாம் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும்போது செயற்கை உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியது கிடையாது. நெல் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள கோழிகளின் எச்சங்கள் நல்ல இயற்கை உரமாகவும் மீன்கள் நெல் வயல்களில் உலாவுவதால் அவைகளைத் தின்றும் காற்றோட்டத்தை நெல் வயல்களில் ஏற்படுத்தி இயற்கை முறையிலான நெல் உற்பத்திக்கு பெரிதும் துணை புரிகிறது.
இவ்வாறு மிகவும் குறைந்த செலவில், இயற்கை முறையில் விவசாயிகளுக்கு நெல், மீன், கோழி போன்றவை அவர்களின் வயல்களில் தங்களின் குடும்ப தேவைகளைச் சந்திக்கவும் மற்றும் வேளாண் சந்தைகளில் தங்களின் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்து அதிகளவு லாபம் பெறவும் பெரிதும் உதவுகிறது. மேலும் விவசாயிகள் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வயல்களில் வளர்க்கப்படும் கோழி, மீன்களை தங்களின் குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்தும் போது, அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை குறிப்பாக பெண்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகளின் நிறைவு செய்து மிகவும் எளிதான மற்றும் இயற்கையான முறைகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகளுக்குத் தம்மால் உரிய தீர்வுகளைக் காண முடிகிறது.
தற்போது புதியதாக அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘விவசாயிக்களுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல்' மையம் வாயிலாக பின்னலூரில் உள்ள வீர நாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் இணைந்து பருவ மாற்று பிரச்சனைகளான பெரு வெள்ளம், மழை போன்றவற்றைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட மற்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்கொண்டு வளரும் தன்மை கொண்ட வேளாண் ‘நாட்டு பாசுமதி' ரகத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய முறைகளைப் பின்பற்றி தற்போதைய பருவ மாற்று பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காணவும், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கவும் நமது தேசத்தை பாதித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணவும் சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பண்ணை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்ற அனைத்துப் பிரிவு கிராம மக்களை இணைத்து வேளாண் கள ஆய்வு மற்றும் விரிவாக்கப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர். முது முனைவர். இராம. கதிரேசன் அவர்கள் பின்னலூரில் அமைக்கப்பட்ட திரு.நம்மழ்வார் நினைவு நாட்டு பாசுமதி செயல்முறை விளக்க பண்ணையைத் திறந்துவைத்து, விவசாயிகளுடன் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் புலம் கொண்டுள்ள கூட்டு ஆராய்ச்சி மற்றும் கள விரிவாக்கப் பணிகள் வாயிலாக நமது நாடு சந்தித்து வரும் பருவ மாற்று பிரச்சினைகள், கோடிக்கணக்கான பெண்கள், குழந்தைகளைப் பாதிக்கச் செய்யும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனைகளுக்கு உரிய புதிய தீர்வுகளைக் காண ஒரு புதிய பசுமைப் புரட்சி வாயிலாக நாம் உருவாக்குவது நமது மாநிலத்தை மற்றும் தேசத்தை வேளாண் சார்ந்த வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய புதிய பசுமைப் புரட்சி இயக்கத்தில் நாம் ஒன்று இணைந்து செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்!
- முனைவர்.தி.ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம்