நமது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது கேரள மாநிலத்தின் வளர்ச்சி முன்மாதிரித் திட்டமாகும், (Kerala Model of Development). பல சமூக வளர்ச்சிக் குறியீடுகளான கல்வி, உடல் நலம், சுகாதாரம், நீண்ட ஆயுள், மிகவும் குறைந்தளவு குழந்தை இறப்புகள், மட்டுமல்லாமல் உருவாக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே இதற்கு முக்கிய காரணம்.
இத்தகைய வளர்ச்சிக் குறியீடுகள் (Growth indicators) பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளதாக பல ஆராய்ச்சி ஏடுகள், பொருளாதார அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்கு செயல்படுத்தப்படும் பல நலத்திட்டங்கள் மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் வளங்களை சென்று சேர்க்கிறது அல்லது பகிர்ந்து வழங்கப்படுகிறது.
இதனால் தான் கேரள மாநிலம் பிற மாநிலங்களைக் காட்டிலும் சமூகத் துறைகளில் வளர்ந்து காணப்படுகிறது. தன்னிடம் உள்ள குறைந்தளவு நிதி ஆதாரங்களைக் கொண்டு தனது குடிமக்களுக்கு நல்ல கல்வி, நல்ல உடல் நலன் போன்றவற்றை சாதித்துக் காட்டியுள்ளது என்றால் மிகையாகாது.
தற்போது உலகத்தையும், நமது நாட்டையும் அச்சுறுத்தி உள்ள கொரோனா நோய்ப் பரவலையும் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தி தற்போது மீண்டும் உலகையும், நமது நாட்டையும் தன்னுடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. நமது நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தாக்குதலை தனது மண்ணில் ஜனவரி 20இல் அறிவிப்பு செய்தது கேரளா மாநிலம்.
உடனடியாக நிலைமையின் நிலவரத்தை உணர்ந்து சுமார் 30 ஆயிரம் மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வளர்ச்சித்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டதன் விளைவாக இன்று கொரோனா பரவல் தடுக்கப்பட்டுவிட்டது.
தற்போதைய நடைமுறை சூழலில் கொரோனா பரவல் காரணமாக நமது நாட்டிலும், உலகின் பல முக்கிய நாடுகளிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள காரணத்தால் மிகப் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகள், மந்த நிலை சூழல், உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்படும் என்று பல பொருளாதார ஆய்வுகள், வணிக அமைப்புகள் தெரிவித்த நிலையில் நமது நாட்டில் மற்றும் அனைத்து மாநிலங்களும் மிகப் பெரிய அளவிலான வீழ்ச்சி ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனை சந்தித்து நமது நாட்டு மக்களின் உணவு, உறைவிடம் மற்றும் வேலை வாய்ப்புகள், தொழில்கள், முதலீடுகளை பாதுகாக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கேரள மாநிலம் காட்டும் புதிய பொருளாதாரப் பாதை
கடந்த சில ஆண்டுகளாக பணம் மாற்று பிரச்சினை (Demonetization), புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகள் (Goods and Service Tax) போன்றவை காரணமாக நமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய அளவிலான சரிவுகள் மற்றும் வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் நாடுகளிடையே ஏற்பட்ட, பிரக்சிட் பிரச்சினைகள், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக தகராறுகள் காரணமாக நமது இந்தியப் பொருளாதாரமும் கடும் சவால்களை சந்தித்து வந்தது.
இத்தகைய நடைமுறை சூழலில் தான் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக மிகப் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகள் நமது நாட்டிலும், மேலை நாடுகளிலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை சூழலில் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின் மேற்கொண்ட பல பொருளாதார நடவடிக்கைகள் உருவாக்கிய தொழில் மற்றும் முதலீடுகளுக்கு உதவும் புதிய கட்டமைப்புகள் போன்றவை இன்று நமது தேசத்தில் பல மாநிலங்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.
தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிகள் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகள் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட குறைந்தே காணப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு வாக்களிக்கப்பட்ட வருவாய் மற்றும் இழப்பீடுகள் பெறுவது தாமதமாகி வருகிறது. தற்போதைய கொரோனா தொற்று காலகட்டத்தில் நமது நாட்டில் பெருவாரியான மாநிலங்கள் மத்திய அரசு தங்களுக்குத் தர வேண்டிய நிர்ணயம் செய்யப்பட்ட தொகைகளைத் தரும்படி வலியுறுத்தி வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெருவாரியான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தைகளிலும் தொழில் வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ள நிலையில் நிச்சயம் நமது வரி வருவாய் வெகுவாகக் குறையும்.
மறுபுறம் நமது மத்திய மற்றும் மாநில செலவினங்கள் (Expenditure) நிச்சயம் பெருகும் சூழலில் மிகப் பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நிலை, நமது நாட்டில் உள்ள பல மாநிலங்களிலும் ஏற்படும் சூழல் நிலவுகிறது. நமது நாட்டில் மக்கள் மிகப் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளை சந்தித்து வரும் சூழலில் புதிய வரி விதிப்புகளையும் மேற்கொள்ள முடியாத நடைமுறை சூழல் நிலவுகிறது.
இத்தகைய சூழலில் கேரள மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதிப் பற்றாக்குறை சூழலில் பல புதிய தொழில் மற்றும் வணிக கட்டமைப்புகளை உருவாக்கி, மேற்கொண்டு வந்த பல பொருளாதார முயற்சிகள் காரணமாக தங்கள் மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு தேவைப்படும் நிதிகள், புதிய தொழில் முயற்சிக்கு தேவைப்படும் முதலீடுகளைத் திரட்டி தனது குறுகிய காலத் தேவைகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் முயற்சிகளையும் மேற்கொண்டு முந்தைய பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் வரும் காலங்களில் ஏற்படப் போகும் பொருளாதார மந்தநிலை சூழலை சமாளிக்க, வழி வகை செய்துள்ளது.
கேரள மாநில அரசின் புதிய ஆக்கப்பூர்வமான வளர்ச்சி நிறுவனங்கள்
தற்போது கேரள மாநிலம் சந்திக்கும் நிதிப் பற்றாக்குறை சூழலையும் சந்தித்து தனது நீண்ட நாள் தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், கேரளா கட்டமைப்பு முதலீடு நிதி மன்றம் (Kerala infrastructure investment board) கடந்த 1999 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு கேரள மாநில கட்டமைப்பு வசதிகளை பெருக்கும் நோக்கிலும், கேரள மாநிலத்திற்குத் தேவைப்படும் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி திரட்டி செயல்படுத்தும் அமைப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி இவ்வமைப்பு வாயிலாகத் திரட்டப்பட்டு கல்வி, போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் போன்ற மக்கள் நலன் மற்றும் தொழில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது நமது நாட்டில் முதலாவதாக இவ்வமைப்பு வாயிலாக சர்வதேச சந்தைகளில் நிதிப் பத்திரங்கள் வெளியீடு செய்யப்பட்டு மாநில வளர்ச்சிக்குத் தேவைப்படும் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இது லண்டனில் உள்ள சர்வதேச பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் சிறப்பையும் பெற்றுள்ளது. இவ்வாறு கேரள மாநில அரசால் தனது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் தேவைப்படும் முதலீடுகள் (Investments) மற்றும் மூலதனத்தை (Capital) எளிதாகத் திரட்ட முடியும்.
கடந்த டிசம்பர் 20, 2019 முதல் “Kerala Nirmithi” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டு கேரள மக்களிடம் கட்டமைப்பு வசதிகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், வல்லுனர்களைக் கொண்டு விளக்கங்கள் போன்றவை கேரள மாநில மக்களிடம் இடதுசாரி அரசு மேற்கொண்டு, அவற்றில் மாநில மக்கள் பங்கு பெறும் நோக்கில் பல போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
கேரள வங்கி - புதிய துவக்கம்
தற்போது மாநில இடதுசாரி அரசின் நீண்ட நாள் கனவுத் திட்டமான ‘கேரள வங்கி’ மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்று கேரளாவில் துவங்கப்பட்டுள்ளது. இப்புதிய வங்கி கேரளா மாநிலத்தில் செயல்படும் மாவட்ட அளவிலான கூட்டுறவு வங்கிகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் கேரள மாநிலத்தின் மிகப் பெரிய வங்கியாக இது உருமாறும்.
தற்போது கேரள கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும் இணைவதால் இது மிகவும் பெரியதாகவும், சிறப்பாகவும் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் தொழில் மந்த நிலை காரணமாக முதலீடுகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் மற்றும் குறைந்தளவு வட்டிகளே வழங்கப்படும் சூழல் நிலவுகிறது.
இதனால் மாநில அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ள புதிய கேரள வங்கி, அவர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகளவு வட்டி வழங்குவதால் பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (Non Resident Indians) மற்றும் மலையாளிகள் இதில் முதலீடு செய்வதால் வங்கி வளர்ச்சி அதிகம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் வாயிலாகவும் கேரள மாநிலத்தின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு எளிதாக நிதி திரட்ட முடியும். தமது மாநில மக்களுக்கு புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
கேரள - வானொலி
கேரள மாநில அரசின் தகவல் தொடர்பு மற்றும் பொது மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் Radio Kerala (வானொலி கேரளா) என்ற புதிய இணையதள வானொலி துவங்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு 24 மணி நேரமும் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
இவ் வானொலி வாயிலாக கேரள மாநில அரசு உலகம் முழுவதும் உள்ள தனது மாநில மக்களிடம் நல்ல தொடர்பில் உள்ளது. மாநில அரசின் பல நலத் திட்டங்களில், வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கேரளாவின் கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யப்பட்டு உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களை இணைத்து வருகிறது. கேரள அரசின் பல முதலீட்டு திட்டங்களுக்கும் வளர்ச்சித் துறைகளுக்கும் தேவைப்படும் முதலீடுகள் திரட்டவும் பெரிதும் துணை செய்கிறது.
கேரளா பரிசுச் சீட்டுத் திட்டம்
இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் முதன் முதலாக அனைத்து தனியார் பரிசு சீட்டுகளும் தடை செய்யப்பட்டு, கேரள மாநில பரிசுச் சீட்டு அறிமுகம் (Kerala state lottery) செய்யப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனை ஒரு அரசுத் துறையாக உருவாக்கி மாநில அரசின் செலவினங்களுக்குத் தேவைப்படும் நிதி திரட்டுவது, பல பொருளாதார விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது மாநில அரசு பரிசுச் சீட்டு வாயிலாக திரட்டப்படும் வரிகள் வாயிலாக காருண்யா (karunya) என்ற நலத் திட்ட பயன்பாட்டிற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும் நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 27 ஆயிரம் பேரின் சிகிச்சை செலவுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல புதிய தொழில் கட்டமைப்புகள் மற்றும் நிதி திரட்டும் முயற்சிகள் வாயிலாக, தனது மாநிலத்தின் குறுகிய கால நிதித் தேவைகள், நீண்ட கால கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை சூழலை சந்தித்து தனது மாநில மக்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன், புதிய தொழில்கள் துவங்கவும், புதிய வேலை வாய்ப்புகளை நகர் மற்றும் கிராமப்புறங்களில் உருவாக்கி வெற்றியும் பெற்றுள்ளது.
தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை சூழல் ஏற்படும் நிலையில் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு தற்போதைய கேரளா முன்மாதிரி தொழில் வளர்ச்சி முறைகளைப் பின்பற்றுவதன் வாயிலாக நமது நாட்டின் தொழில் நிறுவனங்கள் மூடப்படுவது தடுக்கப்படுவதுடன், தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் இழப்புகள் ஏற்படாமல் நமது நாட்டின் ஏழை எளிய மற்றும் நடுத்தர உழைப்பாளி மக்களை பொருளாதார வீழ்ச்சியின் பிடியில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
- முனைவர் தி.ராஜ் பிரவின்