அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இசுரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு போர்வெறியர்களின் காரணமாக, உலகம் இன்று பெருந்துன்பத்தில் அலை மோதுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஓமனில் நடந்த பேச்சு வார்த்தையில் ஏறக்குறைய ஒரு தீர்வு எட்டப்பட்ட நிலையில், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், அதனால் அமெரிக்கா மற்றும் இசுரேல் நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும், பொய்யான குற்றச்சாட்டைக் கூறி ஈரான் மீது இவ்விரு நாட்டு அதிபர்களும் கொடூரமான போரைத் தொடங்கினர். ஆனால். இசுரேலிலும், அமெரிக்காவிலும்கூட இன்று இப்போருக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இப்போருக்கு அமெரிக்கக் காங்கிரசின் அனுமதியே பெறப்படவில்லை என்பது கருதத்தக்கது: மேற்காண் இரு நாடுகள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நீதியற்ற இப்போரை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி அணி அணியாக ஆர்ப்பரித்துப் போராடி வருகின்றனர்.
உலக மக்களின் ஆவேச எதிர்ப்பைக் கண்டு அஞ்சி நடுநடுங்கிய இசுரேலின் மரண வணிகன் நெதன்யாகு , உலக மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் போரை நடத்துவதாகப் பசப்புகிறான். மேலும் ஈரானை எதிர்த்துப் போராட மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கெஞ்சுகிறான். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களும், மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதோடு போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பின்னணியில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் அணுகுமுறை எவ்வாறு உள்ளது என்பதை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. பிரித்தானிய வல்லரசிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது பஞ்சசீலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. * அனைத்து நாடுகளும் சமாதான FH வாழ்வு வாழ வேண்டும். > வலிமை குறைந்த நாடுகளை வலிமைமிக்க நாடுகள் துன்புறுத்தக் கூடாது. > மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக்கூடாது > தேவை உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரவேண்டும். > அனைத்து நாடுகளின் எல்லைப் பாதுகாப்புக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். எனும் ஐந்து கொள்கைகளை நேரு (இந்தியா) நாசர் (எகிப்து) டிட்டோ (யுகோஸ்லாவியா) சுகர்னோ (இந்தோனேசியா) நிக்ருமா (கானா) ஆகிய முன்னோடிகள் இந்த பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கி அணிசேரா நாடுகள் (Non-Aligned Movement - NAM) என்ற வரிசையில் பல்வேறு நாடுகளை இணைத்தனர். இதனால் ஓரளவு தேவையற்ற போர்கள் தவிர்க்கப்பட்டு, நாடுகளின் தற்சார்புத்தன்மை பேணப்பட்டது: ஆனால் மோடி அரசு பதவியேற்ற, 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட அணிசேராக் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது. பொதுவாக ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத்தான் அந்த நாட்டின் வெளியறவுக் கொள்கையும் அமைந்திருக்கும். கார்ப்பரேட் - காவி பாசிச பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சி சர்வதேச அளவில் இயல்பாகவே வல்லரசுகளுக்கும், பிற்போக்கான கொள்கைகளுக்கும் ஆதரவளிக்கும் நிலைபாட்டைத்தான் எடுத்து வருகிறது: ஒவ்வொரு சர்வதேசச் சிக்கல்களின் பொழுதும் டிரம்ப்பின் கொத்தடிமையாக இந்தியா மாறி வருவதை அவதானிக்க முடியும்.
மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்திய அமெரிக்கப் பாதுகாப்புக் கட்டமைப்பு எனும் போர்வையில் இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை உறுதிப் படுத்தும் நான்கு ஒப்பந்தங்கள் இறுதிப் படுத்தப்பட்டன.
பாலஸ்தீனப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு முழு ஆதரவை வழங்கி வந்துள்ளது. ஆனால், அண்மையில் காஸாவின் மீது இசுரேல் கொடூரமான தாக்குதல் நடத்திக் குழந்தைகள், முதியோர், பெண்கள், நோயாளிகள் உள்ளிட்ட 75 ஆயிரம் பேரைப் படுகொலை செய்த இஸ்ரேலைக் கண்டிக்க முன்வராத மோடி அரசு, ஹமாஸ் அமைப்பின் மீது மட்டும் கடும் கண்டனத்தை தெரிவித்தது. கடந்த (2025) பிப்ரவரி 25/26 ஆகிய நாட்களில் இந்தியப் பிரதமர் மோடி இசுரேலுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றிய பொழுது காஸாவின் அவலநிலை குறித்தோ, பாலஸ்தீனியர்கள் படும் எண்ணற்ற இன்னல்கள் குறித்தோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக, என்றென்றைக்கும் இஸ்ரேலுடன் அனைத்துத் தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே பேசினார். அதுமட்டுமல்ல “இந்தியா, என் தாய்நாடு. இஸ்ரேல், தந்த நாடு.” என்று கூறி கைதட்டல் வாங்கிக் கொண்டு இந்தியா திரும்பினார். மோடியின் பயணத்திற்குப் பிறகு இஸ்ரேல் கடும் தாக்குதலை ஈரான் மீது தொடுத்தது. அதனால் இந்தியாவுக்குச் சர்வதேச அளவில் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது. மேலும் மோடி அரசின் இந்தப் பயணத்தை இஸ்ரேல் தனது அங்கீகாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல், ஈரான் குறித்த பிரச்சனையிலும், அமெரிக்கா - இசுரேல் கூட்டுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்து எவ்விதக் கண்டனமும் தெரிவிக்காமல், தனது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் எல்லை ஆகியவற்றைப் பாதுகாக்கப் போராடிவரும் ஈரான், போர் நிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என மோடி அருளுரை வழங்கினார். ஆனால் போருக்குக் காரணமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குறித்து எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர் தொடங்கிய காலகட்டத்தில் ஈரானிய அதிபர் காமெனி அமெரிக்கத் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட பொழுது உலகமே வருத்தம் தெரிவித்தது. ஆனால் ஒரு நாட்டின் உச்சபட்சத் தலைவர் கொல்லப் பட்டதற்கு வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்காமல் மோடி அரசு கனத்த மெளனம் சாதித்தது.
ஈரான் நாட்டின் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலால் 175 பள்ளிச் சிறுமிகள் கொல்லப்பட்ட கொடிய நிகழ்வுக்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை.
இரசியாவிடமிருந்து சலுகை விலையில் இந்தியா எண்ணெய் வாங்கி வருவதை "நிறுத்து" என அமெரிக்கா, கட்டளை இட்டதும், மோடி அதை அடிபணிந்து ஏற்றுக்கொண்டார். மீண்டும் சர்வதேச அளவில் எண்ணெய் பெறுவதில் சிக்கல் வந்தவுடன் "30 நாளைக்கு மட்டும் இரசியாவில் எண்ணெய் வாங்கிக் கொள்" என அமெரிக்க முதலாளி டிரம்ப் உத்தரவிட்டதும் அப்படியே அதை வேதவாக்காக ஏற்றுக் கொண்டு செயல்பட்டார் மோடி.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியக் கடற்படையின் கப்பல் அணிவகுப்பு ஆய்வு நிகழ்வில் நட்பு முறையில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்கா திடீரெனத் தாக்கி மூழ்கடித்தது. இதில் அநியாயமாக 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு விருந்தினராக வந்தவர்கள், மனித நேயமற்ற முறையில் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து ஈரான் நாட்டிற்கும், பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து மோடி அரசு அதிகாரப்பூர்வமாக ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை.
அதே போல், அமெரிக்கா, வெனிசூலா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது துணைவியாரையும் சட்டவிரோதமாகக் கைது செய்து அமெரிக்கச் சிறையில் அடைத்த பொழுதும், இந்தியா அதைக் கண்டிக்கவில்லை.
பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளான பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இரசியா, சீனா போன்றவை காசா/ பாலஸ்தீனம் / வெனிசுலா / ஈரான் போன்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் உறுதியான நிலைபாட்டை எடுத்துள்ளன. மேலும் அமெரிக்காவுக்கு எதிரான தங்களது கண்டனத்தை உரத்துப் பதிவு செய்துள்ளன.
சர்வதேசப் பிரச்சனைகளில் இந்தியா, அமெரிக்கச் சார்பு நிலையை எடுத்து விட்டதால், இந்தியாவின் முக்கியத்துவம் தற்பொழுது குறைந்துவிட்டது. இதனால், ஈரான் மீதான அமெரிக்காவின் போரில் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா அழைக்கப்படவில்லை. ஆசியக் கண்டத்தில் இந்தியாவை ஓரங்கட்டிவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதுவும் இந்திய அயலுறவு கொள்கையில் ஒரு பெரும் பின்னடைவாகும்.
எனவே உலக அளவில் கடும் தாக்கத்தை உருவாக்கியுள்ள அமெரிக்க - இசுரேலியப் போர்க் கூட்டணியை எதிர்த்து இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். நாடுகளின் இறையாண்மையை மதிக்கவும், அநீதியான போர்களை எதிர்க்கவும் முன்வர வேண்டும் என இந்திய அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். மதம், கட்சி, பொருளாதார மேலாதிக்கம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, சமத்துவமான புதிய அயலுறவுக் கொள்கை இந்தியாவில் அமைய அனைவரும் பாடாற்ற வேண்டும்.
- புதுமலர் ஆசிரியர் குழு