புத்தகங்கள், மானுட வாழ்க்கையில் தனிமனித இருப்புக் குறித்த புரிதலையும் சமூக மதிப்பீடுகளையும் உருவாக்குகின்றன. சமூக வரலாற்றில் தகவல் பரிமாற்றத்தில் புத்தகங்களின் இடம் காத்திரமானது. வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிற வல்லமையுடைய கட்டுரை நூல்கள், காலந்தோறும் சமூக மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அறிவொளிக் காலச் சிந்தனைப் போக்கில் சிந்தனையாளர்களின் நூல்கள் முக்கியப் பங்கு வகித்தன. கலிலீயோ, ரூசோ, சார்லஸ் டார்வின், காரல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்டு போன்றோர் எழுதிய கருத்தியல் சார்ந்த கட்டுரை நூல்கள் ஐரோப்பிய நாடுகளின் சமூக, அரசியல், அறிவியல் போக்குகளை மாற்றியமைத்தன.

கடந்த நானூறு ஆண்டு காலச் சமூக வரலாற்றில் உலகை மாற்றியமைத்த புத்தகங்களின் எண்ணிக்கை கணிசமானது. அவை, ஏதோ ஒருவகையில் இன்றளவும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. அந்தப் போக்கின் தொடர்ச்சியாக அரசியல், பொருளியல், அறிவியல் நூல்கள், பத்திரிகைகள் இன்றைய சமூகத்தைத் தகவமைக்கின்றன. தமிழிலக்கியப் படைப்புகள், சங்க இலக்கியம் முதலாக நவீன இலக்கியப் படைப்புகள் என இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பின்புலத்தில் விரிந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புடைய தமிழக நிலப்பரப்பில் வைதிக சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தபோது பெரும்பான்மையான விளிம்புநிலையினருக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது; பிறப்பு அடிப்படையிலான தீண்டாமையும் பால்ரீதியில் பெண்ணை ஒடுக்குதலும் நிலவின. ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சியின்போது தமிழகத்தில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் கேள்விக்குள்ளாயின. கி.பி. 1835 இல் இந்தியர்களும் அச்சகம் வைத்துக் கொள்ளலாம் என்ற ஆங்கிலேய அரசின் உத்திரவு காரணமாக அச்சு ஊடகம் பரவலானபோது தமிழில் வெளியான புத்தகங்களும் பத்திரிகைகளும் கருத்துரீதியில் தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவின; புதிய போக்குகளை அறிமுகப்படுத்தின.

somale 266தமிழகத்தில் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு வெளியான தமிழ்ப் புத்தகங்கள், ஓரளவு கல்வியறிவு பெற்ற தமிழர்களின் வாழ்க்கையையும் சிந்தனையையும் மாற்றின. ம.சிங்கார வேலர், தந்தை பெரியார், திரு.வி.க., மயிலை சீனி வேங்கடசாமி, வெ. சாமிநாத சர்மா, உ.வே.சாமிநாத ஐயர், சாமி.சிதம்பரனார் போன்ற காத்திரமான சிந்தனையாளர்களின் கட்டுரை நூல்கள், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழர் வாழ்க்கையில் அழுத்தமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் சோமலெ எழுதியுள்ள உரைநடை நூல்கள் தனித்து விளங்குகின்றன. தமிழில் சோமலெ போன்ற படைப்பாளுமைகள், இரண்டாயிரமாண்டுகள் வரலாற்றுப் பழமையான தமிழ் இலக்கியம் பண்பாட்டின் தொடர்ச்சியாக விளங்குகின்றனர். சமகாலத் தமிழர் வாழ்க்கை குறித்த ஆழமான புரிதலைத் தன்னுடைய எழுத்துகள் மூலம் உருவாக்கிய எழுத்தாளர்களில் சோமலெயின் இடம் காத்திரமானது.

தமிழிலக்கிய மரபில் சங்க காலம் தொடங்கி, காலந்தோறும் தொடர்ந்திடும் தொகுப்பு முயற்சிகளில் சோமலெயும் ஈடுபட்டு, பல்வேறு தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார். பயண நூல்கள் வரிசை, உலக நாடுகள் வரிசை, ஆப்பிரிக்க நாடுகள் வரிசை, நமது தமிழ்நாடு வரிசை, வாழ்க்கை வரலாறு, மானுடவியல், நாட்டுப்புறவியல், இதழியல், மொழி ஆராய்ச்சி, அரசியல், கோவில் குடமுழுக்கு மலர்கள் எனச் சோமலெ எழுதியுள்ள பல்துறை சார்ந்த நூல்கள் கவனத்திற்குரியன. சோமலெ தகவல்களைத் திரட்டி, தொகுத்து வகுத்து எழுதியுள்ள புத்தகங்கள் ஒருவகையில் தகவல் சுரங்கங்கள். அறிவு சார்ந்த தளத்தில் சமூகத் தேவையின்பொருட்டு வரலாறு தேர்ந்தெடுத்து உருவாக்குகிற மாபெரும் ஆளுமைகள், தனித்துவமானவர்கள். அதேவேளையில் வரலாற்றில் பாத்திரமாக உருவாகி, கருத்தியல்ரீதியில் ஆதிக்கம் செலுத்துகிற ஆளுமைகள், ஒருகட்டத்தில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக மாறுகின்றனர். வரலாற்றுத் தேவையினால் கட்டமைக்கப்படும் நாயகர்கள், சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் சூழலில், தனிமனிதனாகச் செய்கிற சாதனைகள், காலங்கடந்த சிறப்பினை முன்னிறுத்துகின்றன. தமிழர் வாழ்க்கை, தமிழ் மொழியை முன்னிறுத்திச் சோமலெ எழுதியுள்ள புத்தகங்கள் ஒப்பீடு அற்றவை. சோமலெயின் பன்முகப் பார்வை, அவரை வரலாற்றை உருவாக்குகிறவராக மாற்றியமைத்தபோது, தமிழக வரலாறு, சூழலின் தேவை காரணமாகச் சோமலெ என்ற தனிமனிதரை உருவாக்கி, முன்னிலைப்படுத்தியது.

இன்று இணையவெளியில் கூகுள் தேடுபொறியின் மூலம் எளிதில் தகவல்களைத் திரட்டிட வாய்ப்புள்ளது. ஆனால், சோமலெ புத்தகங்களுக்கான தகவல்களைத் திரட்டிட நூலகங்கள்மூலம் கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் தான் கண்டறிந்த சம்பவங்களையும் தகவல்களையும் தொகுத்துப் புத்தகமாக்கி, தமிழ்ச் சமூகத்திற்கு வழங்குகிற பெரும் பணியைச் செய்துள்ளார். நமது தமிழ் நாடு வரிசை என்ற தலைப்பில் சேலம், கோவை, குமரி, மதுரை, தஞ்சை, நெல்லை, முகவை, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கை போன்ற நூல்களின் ஆக்கத்தில் அவர் செலுத்தியுள்ள கடின உழைப்பு பிரமிப்பைத் தருகிறது. பத்திரிகைகள், புத்தகங்கள், கள ஆய்வுகள் மூலம் சேகரித்த தகவல்களை முன்வைத்துச் சோமலெ காத்திரமான புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழரின் கருத்தியல் சார்ந்த வாழ்க்கையைப் புத்தகங்கள் மூலம் அறிவார்ந்த சமூகமாக மாற்றிட விழைந்ததின் வெளிப்பாடுதான் சோமலெ எழுதியுள்ள நூல்கள். ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒருவகையில் தமிழ்ச் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் சோமலெ தொடர்ந்து இயங்கியுள்ளார்.

சோமலெயின் சமூகம்/ சூழல் குறித்த அக்கறையும் ஈடுபாடும் புத்தக உருவாக்கத்தில் விரிவாகப் பதிவாகியுள்ளன. அவருடைய நூல்களில் செட்டி நாடும் செந்தமிழும் தனித்துவமானது. செட்டி நாடும் செந்தமிழும் நூல் பிரமாண்டமான தகவல் களஞ்சியம். செட்டி நாடும் செந்தமிழும் புத்தகம், சோமலெயின் நுண்மாண் நுழைபுலம் சார்ந்த அறிவுத்திறனின் வெளிப்பாடு. சோமலெ 1954 ஆம் ஆண்டில் செட்டி நாடும் தமிழும் என்ற புத்தகத்தை எழுதினார். மறு பிரசுரம் 1960 இல் வெளியானது. அந்த நூல் கூடுதல் தகவல்களுடன் திருத்தப்பட்டுச் செம்மையாக்கப்பட்டு விரிவான பிரதியாக செட்டி நாடும் செந்தமிழும் என்ற பெயரில் 1984 ஆம் ஆண்டு பிரசுரமானது. அந்த நூல், நாற்பது இயல்களுடனும் இருபத்து நான்கு பிற்சேர்க்கைகளுடன் விரிந்துள்ளது. மறு பிரசுரம் 1999 இல் வெளியானது. 1954 ஆம் ஆண்டு எழுதிப் பிரசுரித்த செட்டி நாடும் செந்தமிழும் நூலை முடிந்துவிட்டது என்று கருதாமல், அந்த நூல் தொடர்பான கூடுதல் தகவல்களைத் தொகுத்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் விரிவான புத்தகமாக எழுதியுள்ள செயல், அவருடைய சமூக அக்கறையின் வெளிப்பாடு. ஏற்கனவே எழுதிய புத்தகத்தை அண்மைக்காலத்தியதாக மாற்றிட விடுபட்ட தகவல்கள், புதிய தகவல்களையும் சேர்த்து, விரிவான பதிப்பாக வெளியிட்டிருப்பது, சோமலெயின் அறிவியல் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டு.

செட்டி நாடும் செந்தமிழும் புத்தகத்தில் சோமலெ குறிப்பிடுகிற செட்டி நாடு என்ற நாடு இன்று இருக்கிறதா? யோசிக்க வேண்டியுள்ளது. ’செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற தொல்காப்பியரின் கூற்றும் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் வகுத்த இளம்பூரணர் குறிப்பிட்டுள்ள ‘வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு’ என்ற நில வரையறையும், கவனத்திற்குரியன. தமிழ் மொழி பேசுகிற தமிழர் வாழ்கிற நிலவெளியை நாடு என்று பாகுபடுத்தி, அடையாளப்படுத்தப்படுவது காலந்தோறும் நடைபெற்றுள்ளது. சேர நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்ற வரையறை அரசியல் பின்புலமுடையது. எனினும், குறிப்பிட்ட வட்டாரம், ஊர்களை மையமிட்டு நாடு என்று குறிப்பிடுவது இன்றளவும் வழக்கினில் உள்ளது. நாஞ்சில் நாடு, பாண்டி நாடு, வண்டல் நாடு, கொங்கு நாடு, நடு நாடு, கரிசல் நாடு போன்ற நாடுகள் பரந்துபட்ட நிலப்பரப்பில் வாழ்கிற மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், நம்பிக்கை சார்ந்து குறிப்பிடப்படுகின்றன. அந்த வரையறைக்குள் சோமலெ குறிப்பிடுகிற செட்டி நாடு என்ற நிலப் பிரிவு அடங்கும். ”பாண்டித் தமிழும் பாரி வண்மையும் சூழ்ந்த செட்டி நாடு தமிழகத்தில் ஒரு சிறு பகுதி; எனினும் இங்கு வாழும் மக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தொண்டு மிகப் பெரியது. அதை ஓரளவு தெரிவிப்பதே இந்த நூலின் நோக்கம்”(ப.2) என்று நூலின் முதல் இயலில் சோமலெ செட்டி நாடும் செந்தமிழும் நூல் எழுதப்பட்டதற்கான காரணத்தை எழுதியுள்ளார்.

செட்டி நாடு என்ற வட்டாரத்தை முன்வைத்துத் தமிழர் வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களைத் தொகுத்திருப்பதன் மூலம் சோமலெ புதிய பேச்சுக்களை உருவாக்கிட முயன்றுள்ளார். நாட்டுக்கோட்டைச் செட்டியார் அல்லது நகரத்தார் என்று குறிப்பிடப்படுகிற சமூகத்தில் பிறந்த சோமலெ, செவி வழியாகக் கேள்விப்பட்ட அவருடைய முன்னோர்களின் புலம்பெயர்வுக் கதைகள் தொடங்கி, இன்றைய வாழ்க்கைமுறை வரையிலும் விவரித்துள்ள தகவல்கள், இனவரைவியல் தன்மையுடையன. வாய்மொழி மரபில் சொல்லப்படுகிற செட்டி நாடு என்ற சொல்லாடலுக்குப் பின்னர் பொதிந்திருக்கிற பரந்துபட்ட நிலப்பரப்புடன் தொடர்புடைய மனிதர்கள் பற்றிக் கலைக்களஞ்சியமாக நூல் எழுதியுள்ள சோமலெக்குப் பருண்மையான நோக்கம் இருக்கிறது. சோமலெ வெறுமனே சொந்த சாதியின் பெருமையைப் பதிவு செய்வதற்காகச் செட்டி நாடும் செந்தமிழும் நூலை எழுதிடவில்லை. அவர், தமிழ் நாட்டின் பிற வட்டாரங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து, தமிழ் மொழி, தமிழிலக்கிய வளர்ச்சியில் செட்டி நாட்டினரின் பங்கு அளவற்றது என்ற புரிதல் காரணமாகத்தான் நூலை எழுதியுள்ளார். செட்டி நாட்டில் இருக்கிற 96 ஊர்களைப் பூர்விகமாகக்கொண்ட நகரத்தார்களின் தமிழ் மொழி சார்ந்த செயல்களுக்கு முன்னுரிமை தருகிறவேளையில், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட நாட்டார் எனப்படும் பிற சாதியினருக்கும் நூலில் இடம் தந்துள்ளார்.

செட்டி நாடு என்ற வரையறையின் பின்னர் பரவியிருக்கிற நிலம் கவனத்திற்குரியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினம் நகரில் வணிகர்களாகச் சிறந்து விளங்கிய நகரத்தார்கள் கடல்கோள், ஆழிப்பேரலை காரணமாக இடம் பெயர்ந்து, வெக்கையும் வறட்சியும் நிலவுகிற இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளில் குடியேறினர். அந்த நிலவெளியில் ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வாழ்ந்தனர். கணியன் பூங்குன்றன், ஒக்கூர் மாசாத்தியார், கபிலர் போன்ற சங்க காலப் புலவர்கள் வாழ்ந்த ஊர்களில் குடியேறிய நகரத்தார்கள், உள்நாட்டு வணிகத்துடன் அயல்நாட்டு வணிகத்திலும் ஈடுபட்டு, அளவற்ற பொருள் தேடி, பிரமாண்டமான வீடுகளைக் கட்டினர். செட்டி நாடு எனப்படும் வட்டாரத்தில் குடியேறிய நகரத்தார், நாட்டார் எனப்படும் பிற சாதியினருடன் ஒத்திசைந்து வாழ்கின்றனர்.

தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுக்கு நகரத்தாரின் பங்களிப்பு அல்லது கொடை கணிசமானது. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே மலேசியா, இந்தோனேஷியா, பர்மா, இலங்கை எனப் பயணித்துத் தொழில் தொடங்கிய நகரத்தார், தமிழுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றனர். சைவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிற நகரத்தார்கள் வைதிக சநாதனம், வருணாசிரமத்திற்கு எதிர்ப்பை மெல்லிய தொனியில் தெரிவிக்கின்றனர். சைவமும் தமிழும் இரு கண்கள் என்று கருதுகிற நகரத்தாரின் அரசியல் கவனத்திற்குரியது. அதில் சமஸ்கிருதம் எதிர்ப்பு, வருணாசிரமம் எதிர்ப்பு, புராண எதிர்ப்பு போன்றவை உள்ளடங்கியுள்ளன. நகரத்தார், வைதிக சநாதனத்துடன் சமரசம் செய்துகொண்டாலும் தங்களுடைய சைவ சமய அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். தமிழ்க் கடவுள் முருகன் என்று போற்றுகிற நகரத்தார், வைதிக நெறிக்கு மாற்றாக முருகனை முன்வைத்துள்ளனர். தமிழ் நாட்டில் பழநி முருகனைப் போற்றி வழிபடுகிற நகரத்தார், மலேஷியாவில் பத்து மலை முருகன் கோவில், பினாங்கில் தண்ணீர் மலை முருகன் கோவில் என்று நிறுவியுள்ளதில் அரசியல் பொதிந்துள்ளது.

செட்டி நாட்டில் பொருளாதாரரீதியில் வளமுடன் வாழ்கிற நகரத்தார்களுடன் அங்கே வாழ்கிற பிற சமூகத்தினர் பற்றிய தகவல்களும் செட்டி நாடும் செந்தமிழும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலில் செட்டி நாட்டு வரலாறும் செந்தமிழ் வரலாறும் என்ற அளவில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வரலாற்று நோக்கில் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் பற்றிய விவரணைகளுடன் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் செட்டி நாடு பற்றிய தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. செட்டி நாடு என்று குறிப்பிடப்படுகிற நிலவெளியின் வரலாற்று நிகழ்வுகளை விவரிப்பதன்மூலம் செட்டி நாடு பற்றிய வரலாற்றுப் பிம்பத்தைச் சோமலெ உருவாக்கிட முயன்றுள்ளார். செட்டி நாட்டினரான அண்ணாமலை அரசர், கருமுத்து தியாகராசன், வை.சு. சண்முகனார், பண்டிதமணி, பாடுவார் முத்தப்பர், கண்ணதாசன் போன்றோரின் தமிழ்ப் பணிகள் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. செட்டி நாடு ஆதரித்த புலவர்கள், செட்டி நாட்டுப் புலவர்கள், மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் என்று தமிழிலக்கியம் சார்ந்த விவரிப்புகள் கவனத்திற்குரியன. தமிழ் மொழியின் வளர்ச்சியில் தொடர்ந்து பாடுபட்ட செட்டி நாட்டைச் சார்ந்த பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றி விரிவான தகவல்கள் நூலின் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளன. அன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் செட்டி நாட்டினரின் பங்கு கணிசமானது என்ற பெருமித உணர்வுடன் சோமலெ நூலில் பதிவாக்கியுள்ளார்.

இலட்சியவாதிகள் மூவர் என்ற இயலில் சோமலெ குறிப்பிடுகின்ற முருகப்பா, இராய.சொ., கம்பன் அடிப்பொடி ஆகிய மூன்று ஆளுமைகளின் பணிகள் முக்கியமானவை. செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடியைச் சார்ந்த மூவரும் நகரத்தார் பெரும்பாலானோருடைய இயல்பினின்று விலகி, புதுத்தடம் கண்டவர்கள்; முன்னோர் ஈட்டிய பொருளை, பொதுப்பணிக்குச் செலவிட்டவர்கள்; சமுதாயத்திலிருந்து களைகளைப் பிடுங்கி எறியத் தொடங்கி, பின்னர் அரசியலிலும் ஆன்மிகத்திலும் ஆர்வம் காட்டியவர்கள்.

சொ. முருகப்பா (1893-1956) சமுதாய சீர்திருத்தத் தந்தை, தென்னாட்டு இராஜாராம் மோகன்ராய் என்று புகழ்பெற்றவர். இந்து மதாபிமான சங்கம் கண்டவர். பாரதியாரோடு நெருங்கிப் பழகியவர். குமரன் இதழை நடத்தியவர். கம்பனில் மூழ்கியவர். தமிழ் இதழ்கள் நடத்தியும், தமிழ் இசை இயக்கத்தின் தளபதியாக இருந்தும், கம்பராமாயணத்தின் சில பகுதிகளுக்கு உரை எழுதியும் இவர் ஆற்றியுள்ள தமிழ்த்தொண்டு பெரியது. இளைஞர் பலர்க்குத் தமிழார்வம் ஊட்டியதும், தமிழறிஞர் பலரின் தொடர்பைச் செட்டிநாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததும் இவருடைய சிறந்த பணிகள்.

'ராய சொ'- (1898-1974) காந்தியடிகளைத் தம் விருந்தினராகப் பெறும் பேறு பெற்றவர். செட்டிநாட்டில் சிறைசென்ற ‘முதல் தேசபக்தர்'. காந்தி பிள்ளைத்தமிழ் பாடியவர். ஊழியன் இதழைப் பெரும் சிறப்போடு வீறுநடையில் வெளியிட்ட தமிழ்க்கடல். சிறந்த தமிழறிஞர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்த நினைவற்றலால் பல இலக்கியங்களுடன் ஒப்புநோக்கி மேடைகளில் முழங்கிய பேச்சாளர். சிற்றிலக்கியம் முதல் பேரிலக்கியம்வரை பதிப்பித்தவர். எந்த நூலில் எத்தொடர் வந்தாலும் அத்தொடர்க்கு இயைபான தொடர் வேறு எந்த நூலில் வந்திருப்பின் அதனை வெளிப்படுத்தும் ஆற்றலும், பொருத்தமான சொற்களை வேறுபாடு தோன்றாதவாறு புகுத்தி விளக்கங்கள் கொடுக்கும் திறமை மிக்கவர். சொக்கலிங்கனார் காங்கிரஸ் தொண்டாற்றிச் சிறை புகுந்தவர்; காரைக்குடி நகரசபைத் தலைவராயிருந்தவர்.

கம்பன் அடிப்பொடி கணேசன்(1908-1982) கம்பனிலும் காந்தியடிகளிடமும் தம்மைப் பறி கொடுத்தவர். இளமையில் பர்மாவில் தொழில் செய்தார். தாயகம் திரும்பியதும், தாய்த் திருநாட்டின் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டார். சொ. முருகப்பா - ராயசொ ஆகியோருடன் சேர்ந்து பொதுப் பணிகளில் பங்கேற்றார். எந்தச் செயலிலும் முன் நின்றார். அவர் பெற்ற கல்வியெல்லாம் கம்பனிடத்தில் கற்றவையே. கம்பனிடம் அவர் இலக்கியத்தைச் சுவைத்ததோடு நின்றுவிடவில்லை; அரசியல் படித்தார்; பொருளியல் பயின்றார்; கலையியல் தெளிந்தார்; அறிவியலை உணர்ந்தார்; அருளியலை அறிந்தார். கம்பனிடத்தில் ஏற்பட்ட அளவுகடந்த காதலால், கம்பன் கழகம் கண்டார்.

தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பிப்பதில் பதிப்புத்துறை முன்னோடிகள் மூவர் என்று விளங்கிய சக்தி கோவிந்தன், சின்ன அண்ணாமலை, முல்லை முத்தையா ஆகிய மூன்று பதிப்பாளர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் சாதனைகளையும் சோமலெ விரிவாகப் பதிவாக்கியுள்ளர். அந்தத் தகவல்கள் இன்றைய தலைமுறையினர் அறியாததவை.

தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பித்த வை. கோவிந்தன் தம் வாழ்நாளையெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காகச் செலவிட்டார், அவருடைய மூச்சிலும் பேச்சிலும் தமிழ் மணம் கமழ்ந்திருந்தது. அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் எவ்விதமான வேறுபாடும் இருந்ததில்லை. வை.கோ., சக்தி காரியாலயத்தின் மூலம் ஏழை படும்பாடு என்ற நூலில் தொடங்கி, ஏறத்தாழ 250 நூல்கள் வெளியிட்டார். அவர், பெங்குவின், பெலிக்கன் வெளியீடுகளைப் பின்பற்றிச் சிறந்த அமைப்பு, எடுப்பான தோற்றம், கண்ணைக் கவரும் கட்டுக்கோப்பு ஆகியவற்றுடன் புதிய கருத்துக்களை வழங்கினார். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ரஷ்யாவைப் பற்றியும் அரசியல் பிரச்சினைகளைக் குறித்தும் துணிந்து பல நூல்களை வெளியிட்டார். வை.கோ. நிறையப் படித்தார். அவர், தமிழர் ஒவ்வொருவர் இல்லத்திலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற முயன்றார். தமிழிலுள்ள எல்லா நூல்களும் கேட்ட அளவில் உடனே கிடைக்கக்கூடிய புத்தகக்கடை இருக்கவேண்டும் என்று வை. கோ. கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்கவே சக்தி காரியாலயத்தை வெளியீட்டு நிறுவனமாக மட்டுமன்றி விற்பனைக் கடையாகவும் ஆக்கினார். வை.கோ இலட்சிய வேகத்தால் உந்தப்பட்டு கைப்பொருள் இழந்தாலும், தமிழர்களுக்கு மலிவு விலையில் தன் வெளியீடுகள் மூலம் தமிழ்ப்பணி செய்தார். மலிவுப்பதிப்பு வரிசையை பிரபலமடையச் செய்த பெருமை அவர் ஒருவரையே சேரும். அவர், துணிச்சலாக 'பாரதியார் கவிதைகள்' முழுவதையும் 500 பக்கங்களில் அச்சிட்டு, ஒன்றரை ரூபாய் விலைக்குக் கொடுத்தார்; 550 பக்கங்கள் கொண்ட திருக்குறள் பரிமேலழகர் உரையை ரூபாய் ஒன்றரை விலைக்கு வழங்கினார்.

சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை பதிப்பகம் எழுத்தாளர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் நிழல் கொடுத்தது. அண்ணல் காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்தபோது "ஹரிஜன்" பத்திரிகையைத் தமிழில் வெளியிட காந்தியடிகளே நேரில் இசைவும் வழங்கி தொடங்கியும் வைத்து வாழ்த்தினார். தமிழகத்தின் வட எல்லை, தென் எல்லை ஆகியவற்றை மீட்க நடந்த போராட்டங்களிலும் சின்ன அண்ணாமலை தீவிரமாகப் பங்கேற்றார். நூலுக்கு அட்டை போடுவது, நூலுக்குள் படங்கள் அமைப்பது, கவர்ச்சியாக வெளியிடுவது, சுவடி கட்டுதலில் (பைண்டிங்கு) தனிக்கவனம் செலுத்துவது ஆகியவற்றில் சின்ன அண்ணாமலை நிகரற்று விளங்கினார். நூலாசிரியருக்கு ‘ராயல்டி' கொடுக்கும் வழக்கத்தைத் தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் பரப்பியவர் சின்ன அண்ணாமலை.

somale bookமுல்லை முத்தையாவின் இயற்பெயர் முத்தையா. முல்லை முத்தையா என்பது பாரதிதாசன் வைத்த பெயர். அவர், 1942-இல் ‘சக்தி' ஆசிரியர் குழுவில் ஒருவராகச் சேர்ந்து தமிழ் இலக்கிய உலகில் புகுந்தார். முல்லை, நகரசபை இதழ்களை நடத்தினார். 'தினமணி' ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் 1943இல் நிர்வாகத்தினருடன் வேறுபாடு காரணமாக விலக நேர்ந்ததை விவரித்து அவரை எழுதச்செய்து ‘எனது ராஜினாமா' என்ற பெயரில் முல்லை முத்தையா வெளியிட்டார். சோவியத் ருஷ்யாவைப் பற்றி தமிழ்நாட்டில் அதிகமாகத் தெரியாத 1943இல் 'தினமணி' துணை ஆசிரியர் ஏ.ஜி. வெங்கடாச்சாரியைக் கொண்டு எழுதச்செய்து ‘சோவியத் யூனியன்' என்ற நூலைப் பிரசுரித்தார். பாவேந்தர் நூல்களை அழகுற 1944இல் வெளியிட்டார். ‘புரட்சிக்கவிஞர்’ என்ற தலைப்பில், பாவேந்தரைப்பற்றி பலரிடம் கட்டுரை, கவிதை, கருத்துரை கேட்டுப் பெற்று 1946இல் தொகுத்து வெளியிட்டார். அதுதான் பாவேந்தரைப் பற்றிய முதல் தொகுப்பு நூல். பாரதிதாசனுடன் கருத்து மாறுபாடு உள்ளவர்களும் அதில் எழுதியிருந்தனர். அறிஞர் அண்ணாவின் 'தமிழின் மறுமலர்ச்சி' என்ற கட்டுரையோடு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், இராஜாஜி,

சர். சி.பி.இராம சாமி ஐயர், பாரதிதாசன் ஆகியோருடைய கருத்துக்களைத் தொகுத்து 1946இல் ‘எது இசை?’ என்று பெயரில் வெளியிட்டார். பாவேந்தர் நூல்களை 1944இல் முல்லைப் பதிப்பகம் வெளியிட்டது. 1946இல் மேற்படி நூல்களின் விற்பனை உரிமை பாரி நிலையத்துக்கு அளிக்கப்பட்டது. பாரி நிலையத்தின் தொடக்கம் அதுவே. இவர்தான் ‘விற்பனை உரிமை' என்ற சொல்லையும், முறையையும் தமிழ்ப் பதிப்புலகில் முதன்முதலாக ஏற்படுத்தியவர்.

புத்தகப் பதிப்பாளர்கள் வை.கோவிந்தன், சின்ன அண்ணாமலை, முல்லை முத்தையா ஆகியோர் வகுத்த வழியில் இன்றைக்கு நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தமிழில் ஆக்கமுடன் செயல்படுகின்றன. நகரத்தார்கள் இன்றளவும் புத்தகப் பதிப்புத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபடுவதற்குக் காரணம் பதிப்புத் துறை முன்னோடிகள் மூவர்தான் என்ற அரிய தகவலைச் சோமலெ முன்வைத்துள்ளார்.

தமிழ்ப் புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றுடன் தமிழ் ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைத்த நூலகர் மூவர் என்று சோமலெ எழுதியுள்ள இயல் முக்கியமானது. முறையூர் அரு.சொ. சொக்கலிங்கம் செட்டியார், பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார், கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியார் ஆகியோர் சொந்தமாகச் சேர்த்திட்ட புத்தகங்கள் அடங்கிய தனியார் நூலகங்கள், தமிழ்ப் புத்தக வரலாற்றில் தனித்துவமானவை; ஒப்பீடு அற்றவை. ஒப்பீட்டளவில் பெரும்பான்மையான தமிழர்கள் கல்வியறிவு அற்றிருந்த காலகட்டத்தில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை நன்கறிந்த செட்டி நாட்டைச் சார்ந்தவர்களின் நூலகப் பணி, மகத்தானது.

அச்சில் வெளியான பழம்பெரும் நூல்களையும் பத்திரிகைகளையும் தேடிப்பிடித்துத் தமது சொந்த முயற்சியால் மாபெரும் நூலகத்தை உருவாக்கினார் ரோஜா முத்தையா. அவர், தமிழ் மொழியின் வளத்தை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச் செல்கிற மாபெரும் பணியைச் செய்தார். கடந்த 150 ஆண்டுகளில் அச்சடிக்கப்பட்டு வெளியான திருமணப் பத்திரிகைகள், நாடக நோட்டீஸ்கள், திரைப்பட விளம்பரங்கள், மருந்துக் கம்பெனி விளம்பரங்கள், கார் விளம்பரங்கள், வணிக ஒப்பந்த பத்திரங்கள், காசோலைகள், ஸ்டாம்பு பேப்பர்கள், உண்டியல்கள் போன்றவை அவருடைய தொகுப்பில் காத்திரமானவை. அவை, தமிழர் வாழ்க்கை வரலாறு குறித்த முக்கியமான வரலாற்றுப் பதிவுகள்.

இன்று சென்னை மாநகரில் செயல்படும் ரோஜா முத்தையா நூலகம் கடந்த இருநூறு ஆண்டுகளில் பிரசுரமான தமிழ் அச்சு ஊடக ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ளது. இத்தகைய அரிய செயலைச் செய்திட்ட செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் தமிழ் ஆவண வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தமிழ்ப் புத்தகங்களை வாழ்நாள் முழுவதும் தேடியலைந்த சோமலெவுக்குப் புத்தகங்களின் மதிப்பும் அருமையும் நன்கு தெரியும். எனவேதான் அவர் நூலகர் மூவர் என்று நூலகங்களை உருவாக்கிக் காத்த பெருமக்களைப் போற்றியுள்ளார்.

பயண இலக்கியம், பற்றிய தகவல்கள் சோமலெயின் பன்முக ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகள். பயணக் கட்டுரைகள், தமிழ் நாடு என்ற நிலப்பகுதிக்குள் வாழ்கிற தமிழர்களிடம் அனைத்துலகப் பார்வையை ஏற்படுத்துகின்றன. தமிழில் பயண இலக்கிய வளர்ச்சியில் செட்டி நாட்டினரின் பங்கு பெரிது. தொழில், வணிகம் காரணமாக அயல் நாடுகளுக்குப் பயணித்த செட்டி நாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தங்களுடைய பயண அனுபவங்களை எழுதியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நெற்குப்பை என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த சோமலெ, அவர் பயணித்த நாடுகளில் எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அந்தவகையில் பயண இலக்கியத்தின்மீது ஆர்வம் மிக்க சோமலெ, செட்டி நாட்டினரை முன்வைத்துப் பயண இலக்கியம் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளார்.

19ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்ப் பத்திரிகைகளில் பயணக் கட்டுரைகள் வெளியாகிருக்கின்றன. அவற்றையெல்லாம் உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியார் தொகுத்து நூலாக்கியுள்ளார். அவை, பெரும்பாலும் கோவில்களுக்குச் சென்ற யாத்திரை அனுபவங்கள். அவற்றை எழுதியவர்கள் பொது அறிவோ, மொழிப் புலமையோ பெற்றிருந்தனர் என்று சொல்ல இயலாது. பயணக் கட்டுரை என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய முதலாவது படைப்பைத் தமிழுக்குத் தந்தவர் முறையூர் அரு. சொக்கலிங்கம் ஆவார். இவர் எழுதிய முதலாவது பயணக் கட்டுரை ‘மலேயாவும் அதன் மக்களும்' 1935-இல் இரங்கூனிலிருந்து ஏ.கே. செட்டியாரை ஆசிரியராகக்கொண்டு வெளியிடப்பட்ட ‘தனவணிகன்’ இதழில் வெளியாயிற்று.

பயண அனுபவங்களை நூலாக எழுதி, பயண இலக்கியம் என்ற புதிய துறைக்கு முன்னோடி ஏ.கே. செட்டியார். இவருக்கும் முன்னரே பலர், பல நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏ.கே.க்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.

ஏ.கே. செட்டியார் தமிழன் என்ற கண்ணோட்டத்துடன் பல நாடுகளையும் பார்த்தார். ஏ.கே. நகைச்சுவை நிறைந்த குறிப்புகளுடனும் தெளிவாகவும் சுருக்கமாகவும் படிப்பவர் மனத்தில் பதியுமாறு எழுதினார். எளியநடையாலும் சொற்சிக்கனத்தாலும் ஏ.கே.யின் பயணக் கட்டுரைகள் தனிச்சிறப்புப் பெற்றன. அந்த வழியில் சோமலெ எழுதியுள்ள பத்து பயண நூல்கள், செட்டி நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றன.

நாட்டுப்புறவியல் என்ற துறை பல்கலைக்கழகங்களில் நிறுவப்படுவதற்கு முன்னரே தமிழில் நாட்டார் பாடல்கள் சேகரிக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்பட்டன. கிராமத்து மண்ணுடன் தொடர்புடைய நாட்டுப்புறப் பாடல்களில் பெண்களால் பாடப்படும் தாலாட்டும் ஒப்பாரியும் தனித்துவமானவை. சோமலெயின் இலக்கியத் தேடல் நாட்டார் பாடல்களிலும், பண்பாட்டு ஆய்வுகளிலும் தொடர்ந்தது. உலக நாடுகளில் சுற்றினாலும் சோமலெயின் மனம் தமிழ் மண்ணுடன் தொடர்புடையது என்பதற்குச் சான்றாக அவர் சேகரித்த தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்கள் விளங்குகின்றன. செட்டிநாட்டில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் வழக்கம் 1930-இல் ஏற்பட்டது என்ற சோமலெயின் பதிவு முக்கியமானது. செட்டி நாட்டுப் பெண்கள் தொடக்கக் கல்விகூட கற்றிடாதபோதும் கேள்வி அறிவாலும், உலகியல் அனுபவத்தாலும் பரம்பரைப் புலமையாலும், இலக்கிய நயத்துடன் சொற்றொடர்களை அமைத்துத் தாலாட்டும் ஒப்பாரியும் பாடினர். மழலைச் செல்வங்கள் கண்ணயரப் பாடுகின்ற தாலாட்டுகள் தனித்துவமானவை. ஊர் பேர் தெரியாத செட்டிநாட்டு மூதாட்டியார் பாடிய தாலாட்டுக்கள், பல தலைமுறைகளாக வாய்மொழியாகப் பரவிப் பாடப்பட்டு வருகின்றன. தாலாட்டுகளில் பலதரப்பட்ட கருத்துக்களைக் காணலாம். தாலாட்டுப் பாடல்களில் மக்கட் செல்வத்தைப் பெறுவதற்குத் துடிக்கும் தாய் நோற்ற நோன்பு இடம் பெறும்; பெற்ற மக்களைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் அருமை காட்சி தரும்; சேய், தன் தாய்க்குத் தரும் தன்னேரில்லா இன்பம் இனிது விளங்கும்.

பரட்டைப் புளிய மரம்

பந்தடிக்கும் நந்தவனம்

நந்தவனம் கண் திறந்து

நாலுவகைப்பூ எடுத்து

பூ எடுத்துப் பூஜை பண்ணும்

புண்ணியவார் பேரேனோ (பேத்தியோ)

மலரெடுத்துப் பூஜை பண்ணும்

மகராஜா பேரேனோ (பேத்தியோ)

அரும்பெடுத்துப் பூஜை பண்ணும்

அர்ச்சுனவார் பேரேனோ (பேத்தியோ)

வருத்தத்தை ஒப்பாரியாக வெளியிடும் கலையில் கைதேர்ந்தவர்கள் செட்டி நாட்டுப் பெண்கள். ஒப்பாரிப் பாடல்களை ஆற அமர இயற்றிட முடியாது. அவை உணர்ச்சிப் பெருக்கால் திடீரென்று வெளிவருபவை. ஒருவர் இறந்த வீட்டில், இறந்தவரின் உறவினர் பலர் தத்தம் வருத்தத்தை ஒப்பாரியாகப் பாடுவர். எனவே ஒருவருடைய ஒப்பாரி மற்றொருவரின் ஒப்பாரியிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். அதைவிடச் சிறப்பாகவும் இருக்கவேண்டும். ஒருமுறை கேட்ட பாடலை, நினைவில் வைத்திருக்கும் பேராற்றல் செட்டி நாட்டுப் பெண்களுக்கு உண்டு. ஒப்பாரிப் பாடல்களிலே பாடுபவர்க்கும் இறந்தவர்க்கும் நிலவிய நெருங்கிய தொடர்பு தெரியும்; மனத்தை உருக்கும் அனுபவங்கள் நிறைந்திருக்கும்; இறந்தவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடையிடையே செருகப்பட்டிருக்கும். இந்த ஒப்பாரிகள், குறிப்பிட்ட சிலருடைய இன்பதுன்பங்களின் தொகுப்பாகத் தோன்றிக் காற்றோடு கலந்து விடுகின்றபோதிலும், கால எல்லையைத் தாண்டி இலக்கியச் சிறப்பும் பெற்றிருக்கின்றன. பெண்ணின் சோகத்தையும் வலியையும் பதிவாக்கியுள்ள ஒப்பாரிப் பாடல்கள் காற்றில் மிதக்கின்றன. கணவனை இழந்த பெண், ஒப்பாரி மூலம் செய்துள்ள சமூக விமர்சனம் கூர்மையானது.

மலையாள வைத்தியனை மடிவசமாயக் கூட்டி வந்தோம்

மலையாள வைத்தியனும் மருந்தறிய மாட்டலையே

சீமை வைத்தியனைச் சீக்கிரமாய்க் கூட்டிவந்தோம்

சீமை வைத்தியனும் சீக்கறிய மாட்டலையே!

தாலிக்கு அரும்பெடுத்த தட்டானும் கண் குருடோ ?

சேலைக்கு நூலெடுத்த சேணியனும் கண்குருடோ?

பஞ்சாங்கம் பார்க்கவந்த பார்ப்பானும் கண்குருடோ?

எழுதினவன்தான் குருடோ? எழுத்தாணி கூரிலையோ?

செட்டி நாட்டுப் பெண்களின் தாலாட்டும் ஒப்பாரியும் பற்றிய சோமலெயின் பதிவுகள், தமிழக நாட்டார் வழக்காற்றுத் துறையில் முன்னோடிகளாக விளங்குகின்றன.

சோமலெ தமிழ் இசை, சிற்பக் கலை போன்ற நுண்கலைகளுக்கும் செட்டி நாட்டுக்கும் இடையிலான தொடர்புகளைப் பதிவாக்கியுள்ளார். பர்மா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளிலும் தமிழ் வளர்ச்சியுடன் தொடர்புடைய செட்டி நாட்டினர் பற்றிய அரிய தகவல்களையும் சோமலெ தந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி என்ற கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு வ. பழ.சா. பழநியப்பச் செட்டியார், வ.பழ. சா.அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் நிறுவிய சன்மார்க்க சபை பற்றி சோமலெ விரிவான தகவல்களைத் தந்துள்ளார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் தொடங்கி வைத்த சன்மார்க்க சபை, பண்டித மணியினால் சிறப்புடன் நடத்தப்பட்டது. செட்டி நாட்டில் பரவலாக உள்ள தமிழ் அறிவுப் பெருக்கத்திற்குச் சன்மார்க்க சபைதான் முதன்மைக் காரணமாகும். சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்குக என்ற குறிக்கோளுடன் செயல்படுகிற சன்மார்க்க சபை பற்றியும் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி பற்றியும் சோமலெ விரிவாகப் பதிவாக்கியுள்ளார்.

செட்டி நாட்டுத் தமிழ் என்ற இயலில் சோமலெ விவரித்துள்ள தகவல்கள் இனவரைவியல் நோக்கில் முக்கியமானவை. சோமலெ செட்டி நாடு பற்றிய அரிய தகவல்களைத் தொகுத்து, அவற்றை வரலாற்று அடிப்படையிலும் சமகால வழக்குடன் பொருத்தி ஆராய்ந்துள்ளார். அவருடைய சங்க இலக்கியம் முதலாகப் பண்டைய இலக்கியப் புலமை, நூலில் ஆங்காங்கே காணப்படுகின்றன. செட்டி நாட்டுத் தமிழ் என்ற இயலில் அவர் விவரித்துள்ள தகவல்கள் இனவரைவியல் நோக்கில் முக்கியமானவை.

 சிலப்பதிகாரம் காப்பியத்திற்கும் செட்டி நாட்டில் வாழ்கிற நாட்டுகோட்டை நகரத்தாருக்கும் இடையில் நிலவுகிற தொடர்புகள் பற்றிச் சோமலெ நுட்பமாக விவரித்துள்ளார். கோவலனும் கண்ணகியும் சோழ நாட்டிலிருந்து மதுரைக்குக் கொடும்பை என்னும் கொடும்பாளூர் வழியாகச் சென்றதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. கண்ணகி, கண்ணம்மை, கண்ணாத்தாள் கண்ணாத்தாள் என்ற பெயர்கள் செட்டி நாட்டில் இன்றளவும் வழக்கிலுள்ளன. பெண்கள் தமக்குள் வாய்ச் சண்டையிடும்போது, 'கண்ணாத்தாள் தான் உன்னைக் கேட்க வேண்டும், கூறுவர்; கண்ணகிதான் அவர்களுடைய குல தெய்வமாகிய கண்ணாத்தாள். சதுக்க பூதங்கள் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. நாட்டரசன் கோட்டையில் 'பூதக்குடித்தெரு' இருப்பதும், கண்ணாத்தாள் கோயில் இருப்பதும் குறிப்பிடத்தக்கன.

நகரத்தார் குலப் பெண்கள் காலில் கொலுசு, தண்டை, சிலம்பு என்ற அணிகள் அணிந்துகொள்வதில்லை. கோவலன் வழியில் வந்தவர்கள் என்று கருதுவதற்கேற்றவாறு, சிலம்பின் தீவினையால் கோவலன் மாண்டான்; அதனால் காலில் சிலம்பு முதலிய அணிகள் அணிதலாகாது என்ற எண்ணித்தான் அணியாது விட்டனர் என்ற கருத்தைச் சோமலெ முன்வைத்துள்ளார்.

வேறு வைத்தல். சிலப்பதிகாரத்தில் ‘மனையறம் படுத்த காதை' என்ற ஒரு காதை இருக்கிறது. இது, மணமானபின் மணமக்களைத் தனிக்குடித்தனமாக வேறு வைப்பதைக் குறிப்பது. இன்றும் இவ்வழக்கம் நகரத்தார் சமூகத்தில் நிலவிவருகிறது. இவர்களுடைய குடும்பங்களில் தந்தையும் மகனும் ஒரு மாளிகையிலேயே வாழ்ந்தாலும், தனித்தனியே குடும்பம் நடத்துவதையும், தனியாக உணவாக்கிக் கொள்வதையும், தனித்தனியே விருந்தினரை உபசரிப்பதையும், வரவு செலவு கணக்குகளைத் தனித்தனியே வைத்துக்கொள்வதையும் இன்றைக்கும் காண முடியும்.

திரவியம் தேடத் திரைகடலோடுவதைக் 'கொண்டு விக்கப் போவது' என்று செட்டிநாட்டில் கூறுவர். கொள்ளுதல் = வாங்குதல். எனவே கொண்டு விக்கப் போவது என்பது வாங்குதல்-விற்றல் இரண்டையும் குறிப்பிடும். பூம்புகாரில் வாழ்ந்த வணிகர்கள் பழங்காலத்தில் தமிழகத்திலிருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு போய்க் கடல்கடந்த நாடுகளில் அவற்றை விற்று வந்ததைப் பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியப் படைப்புகள் மூலம் அறியலாம்.

‘பந்தல்' என்னும் சொல், செட்டிநாட்டில் பிணப் பந்தலைக் குறிக்கும்; மணப் பந்தலை அன்று. மங்கலச் சொற்களாக, ‘கொட்டகை', ‘காவணம்’ என்பவையே வழங்குகின்றன.

கும்மாயம். "பயிற்றுத் தன்மை கெடாது கும்மாய மியற்றி” என்று மணிமேகலையில் ஓர் உணவு வகை குறிக்கப் பெற்றிருக்கிறது. புழுக்கிய பச்சைப் பயிற்றொடு சர்க்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி என்று இதற்கு உ.வே. சாமிநாத ஐயர் விளக்கம் எழுதியுள்ளார். இந்த உணவு இன்றும் செட்டி நாட்டில் ஆக்கப்படுகிறது. பாசிப் பயிறு, பச்சரிசி இரண்டையும் கலந்து கும்மாயம் செய்வர்.

பண்டைய இலக்கியப் பிரதிகளில் கையாளப்பட்டுள்ள பழந்தமிழ்ச் சொற்கள் இன்றளவும் செட்டி நாட்டு வட்டாரத்தில் வழக்கிலுள்ளன என்று சோமலெ தந்துள்ள குறிப்புகள், அவருடைய சொல்லாராய்ச்சிக்குச் சான்றாகும்.

செட்டி நாடும் செந்தமிழும் நூலின் பிற்சேர்க்கையாகச் சோமலெ தொகுத்துத் தந்துள்ள 213 பக்கங்கள் சமூக ஆவணமாக விரிந்துள்ளன. நூலின் இறுதியில் 29 பக்க அளவில் தரப்பட்டுள்ள பெயர்க் குறிப்பு அட்டவணை, செட்டி நாட்டினருக்கும் தமிழுக்குமான தொடர்பைப் புலப்படுத்துகிறது. செட்டி நாட்டு ஊர்கள், பெயர்கள், கோவில்கள், கல்வெட்டுகள், விலாசங்கள், தமிழ்ச் சொற்கள், நகரத்தார் வரலாறு. இசை பிடிமானம், பட்டப் பெயர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வட்டகைப் பிரிவு, சம்பளச் சீட்டு, உண்டியல் போன்ற தலைப்புகளில் சோமலெ திரட்டியுள்ள தகவல்கள், செட்டி நாடு என்ற வரையறைக்கு அப்பால் தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவுகள். அவை, எதிர்காலத்தில் தமிழர் வரலாற்றை எழுதுகிறவர்களுக்கு மூலமாக விளங்கும்.

சோமலெ, செட்டி நாட்டில் வாழ்கிறவர்கள் பெரிதும் வணிகர்கள் என்ற பொதுப் புத்திக்கு மாறாகத் தமிழ் வளர்ச்சியுடன் கலை, இசை, கல்வி, தொழில், சமூக வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு செயல்படுகிறவர்கள் என்பதைச் சான்றுகளுடன் செட்டி நாடும் செந்தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார். செட்டி நாட்டையும் செந்தமிழையும் முன்வைத்துத் தனியொரு மனிதராகச் சோமலெ 687 பக்கங்களில் எழுதியுள்ள கலைக்களஞ்சியம் போன்ற தொகுப்பு நூல், சமகாலத் தமிழர் வரலாற்றில் முக்கியமான பதிவு.

மூல நூல் சோமலெ. செட்டி நாடும் செந்தமிழும்: கணியன் பூங்குன்றன் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரை. சென்னை: வானதி பதிப்பகம், 1999.

(சாகித்திய அகாதெமியும் சாத்தூர், ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியும் இணைந்து 25-11-21 அன்று நடத்திய சோமலே நூற்றாண்டு உரையரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம்)

- ந.முருகேச பாண்டியன்

Pin It