அண்டனூர் சுரா சிறுகதைகள் - ஒரு பார்வை
படைப்பிலக்கியத்தில் சிறுகதையாக்கம் என்பதன் வகிபாகம், அன்று முதல் இன்று வரை மிகச் சிறப்பான துலக்கத்தைப் பெற்றுத் திகழ்ந்து வருகிறது. இன்றையப் படைப்புலகமும் வாசகர்பரப்பும் முறையே, நவீனப் பார்வையிலான சிறந்த சிறுகதைகளைப் படைப்பதற்கும், அவற்றைப் பரவசத்துடன் வாசித்து நடப்புச் சமூகப்போக்குகளை நன்கு உள்வாங்குவதற்குமே உத்வேகமான முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
இவ்வகையில், எழுத்தாளர் அண்டனூர் சுரா, கடந்த பல வருடங்களில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தமது 100 சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக ஒரே சமயத்தில் வெளியிட்டு தமிழ் எழுத்துலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார். இந்த அரிய பணியை புகழ்மிக்க NCBH நிறுவனம் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டு, அந்நிறுவனத்தின் வெற்றிகரமான தொடர் வெளியீட்டுப் பணிக்கு மேலும் ஒரு சிறப்பைச் சேர்த்துள்ளது.
அண்டனூர் சுரா தமது வேகமும் விவேகமும் நிறைந்த எழுத்தாற்றலுக்காக அரசின் வழியாகவும் மற்றும் பல்வேறு இலக்கிய, இதழியல் அமைப்புகள் வழியாகவும் பற்பல விருதுகள், பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்று, சமீபத்திய தமிழ் படைப்புலகப் பரப்பில் தனக்கென ஒரு சீரிய முத்திரையைப் பதித்து வருகிறார். ‘அண்டனூர் சுரா சிறுகதைகள் - 100’ என்பதின் முதல் தொகுதியை (50 கதைகள்) மட்டும் இக்கட்டுரையில் நமது பார்வைக்கு எடுத்துக் கொள்வோம்.
இந்த முதல் தொகுதியில் அடங்கியுள்ள ஐம்பது சிறுகதைகளில், நமது அன்றாடச் சமூக வாழ்வியல் உள்ளோட்டங்களையும், மனித மனங்களின் பற்பல தெறிப்புகளையும், அடிமட்டச் சமூகப் பரப்பு சந்தித்துவரும் ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள், தனிமனிதச் சருக்கல்கள் மற்றும் குடும்பங்களின் வறுமைப்பாடுகளையுமே உள்ளீடுகளாய் வைத்து கதைப்பின்னல் நடத்தியுள்ளார் எழுத்தாளர். இதைத்தான் தமது முன்னுரையில், ‘சிறுகதை' என்பது, மொழியின் பெயரால் செய்யப்படுகிற சமூக, கலை சார்ந்த வாழ்வியல் விமர்சனம். உணர்ச்சிகளை வடிகட்டி வாசிப்பினூடே உணர்வுகளைக் கடத்தும் மொழிவழி உயிர்ப் பாயச்சல்’ என்று அவர் கூறுகிறார்.
இக்கூற்று, கதாசிரியரிடம் நன்கு வசப்பட்டுப்போன அவரது ஆழமான சமூகப் பார்வையின் உட்பரிமாணங்களை வெளிக்காட்டுகிறது. இத்தகைய புரிதல் இருப்பதால்தான் எழுத்தாளர்களால் மனித வாழ்வின் கண்ணாடி போன்ற அரிய படைப்புகளைப் படைக்க முடிகிறது.
எல்லாக் கதைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகக் குறைந்த பட்சம் நூற்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களைப் பல்வேறு கோணங்களில் உலவவிட்டுள்ளார் படைப்பாளர். இந்தக் கதை மாந்தர்கள் மூலம் உக்கிரமான சமூகப் பிரச்சனைகளும், வாழ்வாதார இடிபாடுகளும், பல படிமங்களிலான மனித மனப்போக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு சில கதைகளை ஆய்வு செய்து பார்க்கலாம். ஒரு மிடற்றுப் பால் பிச்சைக்காக, ஒரு அபலைத்தாய் சமூக வீதியில் எத்தனை அவமானங்களை அப்பிக் கொண்டு திரிய வேண்டியுள்ளது? (கதை - 1). அடுத்து, ஒரு மேல்மட்ட மனிதர் பவனி வருவதற்காக எத்தனை ஏழை மக்களது குடிகள், கூடங்கள், கடைகள் மற்றும் பசுமை தரும் மரம் செடி கொடிகள் தவிடு பொடியாக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது (கதை - 2).
சமூக முச்சந்தியில் தமது ‘பூம் - பூம்’ மாட்டைக்காட்டிப் பிழைப்பு நடத்தும் பரிதாபத்திற்குரிய பெற்றோர், இருண்ட வானில் ஒரு பிரகாசமான வெள்ளி முளைத்ததைப் போன்ற தமது மகள் விமலாவின் படிப்புச் சான்றிதழைப் பெறுவதற்குப் படும் பாடுகளை என்னவென்று சொல்வது? (கதை - 5). எந்த அரசியல் பணமுதலையோ வெட்டிக் கடத்திய செம்மரக்கட்டைக் குற்றத்திற்காக, ஒரு ஏழை இளம்பெண் வாச்சாந்தியின் குடும்பத்தையே சிறைக் கொட்டடிக்குள் போட்டு, ‘லத்திகள்’ நடத்தும் விசாரணைக் கேவலத்தை எந்த நீதிவானிடம் முறையிடுவது? (கதை - 6).
மிகமிக அடிப்படையான வாழ்வாதாரம் தண்ணீர். இது இயற்கையின் மாபெரும் கொடை. ஆனால் இதை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தி, ஒரு டி.எம்.சி. தண்ணீருக்காக, ஒளிரும் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியானது காலம் காலமாய் கண்ணீர் வடிப்பதற்கு யார் பதில் சொல்வது? (கதை - 9). இந்த மனித சமூகம், சின்னஞ்சிறு பூஞ்சிட்டுக் குழந்தைகளின் வண்ணமையமானது. ஆனால், ஒரு சராசரி மனித வாழ்விற்குக் கூடத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ள முடியாமல் போய்விட்ட எதோ ஒரு குடும்பத்துப் பெற்றோரது தெரு ஓரத்துப் பையன் ஒருவன் கதையில் வருகிறான். அவன் அப்பகுதியிலேயே உள்ள வசதிமிக்க வீட்டுத் துர்க்கா பாப்பாவின் காகிதப் பட்டத்தை வைத்து அவளுடன் கூடி ஓடி விளையாடுவதையே ஒரு பெரிய ‘ஆசூசையா’கப் பார்த்துச் சீறிப் பாய்கிறார் அவளது தாய். உடனே அந்தச் சிறுமியை அவனிடமிருந்து பிரித்து வீட்டிற்குள் அடைத்து வைக்கும் ‘தாய்மார்களும்’ இக்காலச் சமூகத்தில் ‘எத்திசைச் செலினும்’ இருக்கத்தானே செய்கிறார்கள்? (கதை - 16).
இவ்வாறான கதை ஓட்டங்களுக்கும், அவற்றைத் தொற்றி நிற்கும் வினாக்களுக்கும் ஒரு விடிவு இல்லையே என்பதுதான் எழுத்தாளர் சுராவின் ஆதங்கம். இது மட்டுமல்ல. ‘மாண்புமிகு மதிப்பெண்’ பெறுவதற்காக புனிதா போன்ற பிள்ளைகளது சுயங்களை மழுங்கடித்து, அவர்களைத் தேர்விற்காக மனப்பாடம் செய்யும் எந்திரங்களாக மாற்றத் துடிக்கும் பெற்றோர்களைக் காட்சிப்படுத்துகிறாரே படைப்பாளி! (கதை - 20)
‘வணக்கம்’ என்று சொல்லும் ஒரு பெண் அலுவலகச் சிப்பந்திக்கு, ‘ம்’ என்று மட்டும் இறுமாப்புடன் பதில் கூறி, ஒரு சராசரி மனித நாகரீகத்தையே கேள்விக்குறியாக்கும் அலுவலர் ஒருவரையும் (கதை - 3), தம் மகளொத்த வயதுடைய ஒரு தற்காலிகப் பெண் ஊழியரிடம் பாலியல் அம்பு விட்டு, ‘தூயவன்’ பட்டியலில் தாம் ‘இடம் பெறாத பெருமைக்கு’ ஏங்கும் 50 வயது நிரம்பிய திருவாளர் சுதாகரையும் (கதை - 42), வாசகரின் பொதுக் கவனத்திற்கு சுரா போன்ற படைப்பாளிகள்தான் கொண்டு வரமுடிகிறது. இப்படியான மானுட உள்ளார்ந்திரங்களையும், கெடுமதிப்போக்குகளையும் விசாரணைக்கு உட்படுத்திக் கதைகளாகச் சித்தரித்துக் காட்டி, வாசகர்களது சமூகப் பிரக்ஞைகளைக் கூர்மைப்படுத்துவதுதான் படைப்பிலக்கியத்தின் தலையாய பணியாகும்.
மனித சமூகத்தின் மிக முக்கியமான அங்கங்கள் குடும்பங்கள்தான். அவற்றில் நேரிடும் அன்றாடப் பிரச்சனைகள், வாழ்வின் ஏழ்மைத் தாக்கங்கள் மற்றும் மனித நடத்தை விபத்துக்கள் அல்லது பிறழ்வுகள் ஆகியவற்றில் எழுத்தாளரது கூரிய சமூகப் பார்வை உட்புகுந்து களமாடுவது இக்கதைகளின் மூலம் நன்கு புலனாகிறது. ‘கடன் பட்டார் நெஞ்சம்’ (பக் - 60), இதன் நீட்சியான ‘தீயடி அரவம்’ (பக் - 319) 'வித்யாவிற்கு மூன்று அப்பாக்கள்’ (பக் - 90), ‘பருவத் துணிக்கை’ (பக் - 442), ‘கருக்குவாள்’ (பக் - 334), ‘அமிலப் பரிசோதனை’ (பக் - 300) போன்ற கதைகளில் வரும் கதை மாந்தர்களது வகிபாகத் தாக்கங்களின் (Impact of Role Play) வழி நின்று இதனை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
எழுத்தாளரது படைப்பாற்றலின் பார்வை வீச்சு, சமூகத்தின் பல பொது விவகாரங்களில் வீரியமாகப் பாய்ச்சப்படுகிறது என்பதைப் பல கதைகள் மூலம் அறிய முடிகிறது. 'வஞ்சிக்கப்படும் ஒரு விவசாயி' (பக் - 228), புரையோடிப் போன தீண்டாமைக் கொடுமைகள் (பக் - 283, 334, 347, 391), சமூக ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள்
(பக் - 102, 173, 182), நோய்களும் மருந்து விற்பனை மாயங்களும் (பக் - 142), நாட்டின் அரசியல் சித்து விளையாட்டுகள் (பக் - 341, 452) படிப்பறிவின்மை, (பக் - 191) இக்காலக் கல்விபடும் பாடுகள் (பக் - 218, 356), கழிப்பறைச் சீர்கேடுகள்,
(பக் - 430), உப்பங்கழி அல்லாடல்கள் (பக் - 480), மரங்களை அழித்தொழித்தல் (பக் - 364) ஆகிய இக்காலச் சமூகப் பிரச்சினைகளைப் படைப்பாளர் காட்சிப்படுத்தும்பொழுது வாசகர்களது பொதுப்பார்வை மிகவும் விசாலப்படுகிறது. நடப்புச் சமூகத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
எழுத்தாளர்கள் இத்தகைய சமூகத்தின் எதிர்மறை நடவடிக்கைகளைப் படைத்துக் காட்டுவதால் பொதுச் சமூகத்தில் ஏதேனும் பயன்கள் ஏற்படுகின்றனவா? ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் ஒருமுறை இவ்வாறான கேள்வி ஒன்றுக்குப் பதில் கூறியுள்ளார். “எழுத்தாளர்கள் வினாக்களைத்தான் தொடுக்க முடியும். விடை காண்பது சமூகம்தான்” என்பதுதான் அவரது பதில். இதே பதிலைத்தான் அண்டனூர் சுரா போன்ற படைப்பாளர்களும் இங்கு வழிமொழிவார்கள்.
ஆனால், இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘தீயடி, அரவம்’, ‘ஊர் முழ வேட்டி’, ‘சவப்பெட்டி’, ‘செண்டை’ ஆகிய கதைகளின் முடிவுகளில் எதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது போன்ற எதிர்பார்ப்பில் வாசகர்கள் இருக்கின்றார்கள். அப்படித்தான் கதைகளின் ஓட்டங்களும் இருக்கின்றன. ஆனால், எழுத்தாளர் இதன் முடிவுகளில் சற்று ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளார் என்றும் கருதலாம். ‘அவள் ஒரு பிஞ்சு’ என்ற கதையில் வரும் ஆஷிபாவின் பிஞ்சு மனத்தில் உதித்த ஒரு துணிச்சலான தீரம் இக்கதைகளிலும் வந்திருந்தால், சமூகத் தீமைகளுக்கான படிப்பினை சற்று வலுப்பட்டிருக்குமே! இத்துடன், சில கதைகளில் அடிமட்டச் சமூகப் பரப்பில் நடமாடித் திரிய விடப்பட்டிருக்கும் குடிகாரக் கதாபாத்திரங்களுக்குரிய குறைந்த பட்ச தண்டனைகளுக்கான முகாந்திரங்களைக் கூடப் படைப்பாளர் காட்டவில்லையே! இதேபோன்று ‘குரலி’ என்ற ‘குறுந்தொகை’ப் பாடலைத் தழுவிய கதையின் (13) முடிவில் தனது நிறைவேறாத காதலை நினைத்து அந்த இளம்பெண் அமிர்தா வருந்துகிறாள். அப்பொழுது, தெருவில், குறி சொல்லித் திரியும் ஒரு பெண், அந்தப் பெண்ணின் உள்ளங்கையைப் பிடித்துப் பார்த்து விட்டு ‘உனக்கு அடுத்த ஐந்து வருடத்திற்கு கிரகம் சரியில்லை’ என்று கூறி கதையை முடிக்கும் எழுத்தாளரது பார்வையின் மீது வாசகருக்குச் சற்று சலிப்புத் தட்டுகிறது.
அதேசமயம், இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு ஐந்து கதைகளை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘கருக்குவாள்’, ‘அழகான கருப்பி’, ‘செம்பரம்பாக்கம்’ ஆகிய மூன்று கதைகளில் ஒவ்வொன்றிலும் ஒரே கதாபாத்திரம்தான் கதை சொல்லியாகப் படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கதையோட்டத்தில் பிற கதை மாந்தர்களது பங்கெடுப்புகளும் மறைபொருளாக உட்செறிவாக்கப்பட்டுள்ளன. அதுவும் ‘கருக்குவாள்’ கதையில் பெயரே சொல்லாத ஒரு ஊர்ப் ‘பெரும்புள்ளி’, ‘நான்’ ‘எனது’ என்ற ஆணவச் சொல்லாடல்களால் தான் செய்துவிட்ட ஒரு வக்கிரமான சமூகக் கொடுமையை ஜெயிலுக்குள் இருந்துகொண்டே உரையாடலாக்குகிறார். அவரது பொய்மையான பேச்சே அவரது பாலியல் வன் கொலையை (அவர் வெறுக்கும் மாற்று இனத்துப் பெண்ணை) ஊர்ஜிதப் படுத்துவதுதான் படைப்பாளரது தேர்ந்த உக்தி.
அடுத்த கதையாகிய ‘அழகான கருப்பியில்’ பட்டாசு வெடிவிபத்தில் கருகிப்போன, வெறுத்து ஒதுக்கப்படும் கருப்பு நிறமுடைய மகள் கண்ணம்மாள், தனது குடிகாரத் தகப்பனிடம், உயிரோட்டமான பாசப்பிணைப்புடன், கண்ணீர் விட்டுக் கதறுவதான கதையின் முன்நடப்புக் காட்சிகள் வாசகரது மனத்தை நெருட வைக்கின்றன. இறுதிப் பத்திகளில் மட்டும் அந்தக் குடிகாரத் தந்தை தனது மகளின் கருகிய உடலைப் பார்த்துப் புலம்புவதான முடிவில்தான் ‘அடடா என்ன வாழ்க்கை இது’ என்று நாம் அங்கலாய்க்கின்றோம். இங்குதான் கதாசிரியரது கற்பனை உக்தி உச்சம் பெறுகிறது.
‘செம்பரம்பாக்கம்’ கதையிலும் பெயரிடப் படாத ஒரு குப்பத்துப் பெண்தான் தனது சென்னை குப்பத்துப் பாஷையில் வாசகர்களது கவனத்தை முழுதும் ஈர்க்கும் படியாகப் பேசிக்கொண்டே வருகிறார். ஒரு பேய்மழை வெள்ளத்தில் மிதக்கும் மெட்ராஸின் அவலத்தை நேரலையில் காட்சிப்படுத்துவதுபோல் கதையாடலை அமைத்துள்ளார் சுரா. தனது மகள், மகன் ஆகிய இருவரது ஒரு சில வார்த்தைகளைத் தவிர, தனது பொங்கிவரும் மனக்குமுறலை வாசகருக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். அந்தப் பரிதாபத்திற்குரிய பெண், அவரது பேச்சுவழக்கு வார்த்தைகள் மூலம், மழைக்கால சென்னையின் குப்பத்து அலங்கோலத்தை உயிர்ப்புடன் விவரித்துக் காட்டும் படைப்பாளரது எளிய மக்கள் மீதான பார்வை நன்கு பளிச்சிடுகிறது.
இவ்வாறு பெயரிடப் படாத ஒரே கதாபாத்திரத்தின் கதை சொல்லும் பாங்கு (Narrative Skill) வாசகருடன் உடன் பயணிப்பது போன்று அமைந்துள்ளது. மூன்றாவது கதையில், விபத்தில் கருகிப்போன மகள், தனது குடிகாரத் தந்தையிடம் அதற்கு முன்பு பேசியது போன்ற படைப்பாளரது உத்தி நம்மை மேலும் உணர்வு பூர்வமாக உள்வாங்குகிறது.
எழுத்தாளர் சுராவின் ஒருமாறுதலான (Innovative) படைப்புப் பார்வைக்கு ‘பூங்கோதைக்கும் கற்பு உண்டு’ மற்றும் ‘நின்னைச் சரணடைந்தேன்’ ஆகிய மற்ற இரு கதைகளையும் குறியீடாகக் கூறலாம். வாடகைத்தாய் போன்று, எந்திரப் பணிப் பெண்ணான பூங்கோதை என்ற ரோபோவைப் பற்றி, இரண்டு கடிதங்களின் மூலம் சிலாகித்துக் கதைப் பின்னல் நடத்துகிறார் கதாசிரியர். இந்த ‘எந்திரம் புகுந்த’ அழகிய பெண்ணையும் அந்த வீட்டு எஜமான் சீண்டலுக்குள்ளாக்குவதாக அந்தக் கதையில் வரும் கடிதம் கூறுகிறது! இதேபோன்று ‘நின்னைச் சரணடைந்தேன்’ கதையில், நமது பாரதிப் பெரும் புலவனையே கதாநாயகனாக்கி, அவரது கவிதை வரிகளையே 17 இடங்களில் உரையாடல்களாக்கிக் கதை சொல்லப்படுகிறது. ‘செல்லம்மா பாரதி’யைத்தான் நமக்குத் தெரியும். ஆனால், இங்கு ‘கண்ணம்மா’ என்ற பாரதியின் கற்பனைக் காதலியிடமும் பாரதிப் புலவனின் கவித்துவம் சரணடைவதான எழுத்தாளரது புதிய கோணத்திலமைந்த கதை நல்ல இலக்கிய ரசனையுடன் காட்சிப்படுத்தப்படுகிறது.
இத்துடன், ஒரு சிறந்த படைப்பாளிக்கான பரந்து விரிந்த பார்வையும், புரிதலும், பல்வேறு வாழ்க்கைப் பொருண்மைகளின் நுட்ப திட்பங்ககளும் எழுத்தாளர் சுராவிற்கு அத்துபடியாயிருப்பது நன்கு புலனாகிறது. அவரது நல்ல இலக்கிய ஈடுபாடு, உலக வரலாற்றுக் குறிப்புகள், மனித உடற்கூற்று விவரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிய சொல்லாடல்கள் நவீனப் புலனப் பயன்பாடு பற்றிய நுட்பங்கள் ஆகிய அனைத்து அறிவுப் பரவல்களிலும் தனது தேடலைப் புகுத்தியுள்ளார். திருக்குறள் வரிகள், பொருத்தமான இலக்கியச் சொற்கள், கவிதை வகைகள், கௌதம முனி, இந்திரன், வசிஷ்டர், புத்தர், லட்சுமனரேகை, டாவின்சியின் மோனலிசா, கனடா நாட்டின் வான் கூவர் ரயில் நிலையம் போன்ற பல்வேறு புலங்களின் இடையீட்டுக் குறிப்புகள் கதைகளின் உயிரோட்டங்களுக்கு நல்ல மெருகேற்றம் தருகின்றன.
தமது கதைகள் நன்கு துலக்கமடைய இன்னும் ஒரு உக்தியாக துல்லியமான பல உவமைகளையும் சொலவடைகளையும் படைப்பாளர் தொகுதி நெடுகிலும் நிறையப் பயன்படுத்தியுள்ளார். ‘தூக்கணாங் குருவிக் கூட்டை குரங்கு பிய்த்து விட்டதைப்போல’, (பக் - 48) ‘பாம்பு காட்டுக்குள் சீறிவருவதைப் போல்’, (பக் - 164) ‘கிளை ஒடிந்த மரம்போல’ (பக் - 486) ‘தீட்டிய உளுந்தைப்போல் பளிச் சென்று’ (பக் -484) ‘கிழிந்த சட்டையை இஸ்திரி செய்ததைப் போன்ற பேருந்து நிலையம்’ (பக் - 443) ‘அச்சில் கட்டிய மாட்டைப்போல்’ (பக் - 480) போன்ற உவமைகளை இதற்கு உதாரனப்படுத்தலாம். இதேபோன்று, ‘முதிய வயது நோயும் இளம் வயது அவமானமும் பொல்லாதது’ (பக் - 108) ‘அம்மா ஊட்டாத சோத்த ஊறுகாய் ஊட்டும்’ (பக் - 432) ‘ஆற்றங்கரை அரசமரம் வேரோடு சாயும்’ (பக் - 431) ‘மேட்டுக்குத் தண்ணீய மேக்காத்து பாய்ச்சும்’ (பக் - 482) ‘மூச்சை அடக்கி வாழ்ந்தால் மூன்று யுகம் வாழலாம்’ (பக் - 432) போன்ற சொலவடைகளையும் எடுத்துக்கட்டுகளாகக் கூறலாம்.
மற்றுமோர் ஆய்வுப் பார்வை என்னவென்றால், ‘எத்திசைச் செலினும்’ ‘எனினும்’. பருவத்துணிக்கை’, ‘மழைக்குப் பிறகான பொழுது’ மற்றும் ‘பசுங்கணிகம்’ ஆகியவை நல்ல கவித்துவத் தலைப்புகளாகும். அதே சமயம், ‘பிரளய காலத்தவன்’ ‘விடற்கு’ ‘செம்பத்தி’ போன்ற தலைப்புகள் வாசகரின் பொதுப் புத்திக்குச் சற்று மிரட்சியாகத் தெரிகின்றன. மேலும், கதைகளுக்கான ஓவியங்கள் அனைத்தும் கதைகளின் கருப்பொருள்களை நன்கு விசாலப்படுத்துகின்றன. ஆனால், எல்லாக் கதைகளிலும் ஒரே மாதிரியான பெண் முகங்களே தெரிகின்றன.
இந்த 100 சிறுகதைகள் மட்டுமல்லாது பல்வேறு சிறந்த எழுத்தாக்கங்களையும் படைத்துள்ளார் சுரா. எழுதிக் கொண்டும் இருக்கின்றார். தான் சிரமேற்கொண்டுள்ள ஆசிரியர் பணியுடன் தமது சீரிய எழுத்துப் பணியின் மூலம் காத்திரமான இலக்கியப் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இது இலக்கியப் பணி மட்டுமல்ல, சமூகப் பணியும் கூட. இவ்வகையில் குறிப்பாக சில முக்கியச் செய்திகளையும் (Messages) இக்கதைகள் மூலம் சமூகத்திற்குச் சொல்ல வருகிறார் எழுத்தாளர்.
எடுத்துக்காட்டாக, முடிந்த வரை எல்லோரும் ஒரு பொதுச் சேவையில் அல்லது ஊழியத்தில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும் (கதை - 25) தற்காலச் சமூகப் போக்குகள் எப்படி இருந்தாலும் ‘உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் காட்டி நமது மனிதத்தை நிலைநாட்டிட வேண்டும் (கதைகள் - 18, 28, 37) நமது கல்வியாளர்கள் முற்போக்குக் கல்விச் சிந்தனைகளை நமது இன்றைய மாணவ சமூகத்திற்கு உருவாக்க வேண்டும் (கதைகள் - 5, 20, 36, 38) இளைய சமுதாயத்திற்கு முதிர்ச்சியடையாப் பருவச் சிதைவுகள், இன்றைய இணைய வழித் தொடர்புகள், அறிவார்ந்த வாழ்க்கைப் பயணம் ஆகியவற்றிலான எச்சரிக்கை உணர்வுகள் மிக மிக அவசியம் (கதைகள் -14, 45). பிஞ்சுக் குழந்தைகள் நம் சமூக எதிர்காலத்தின் உயிர்நாடிகள் (கதை - 5, 7, 16, 24, 35, 38, 47). சமூக வேறுபாடுகளும் தீண்டாமை இழிசெயல்களும் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளங்கள் அல்ல (கதை - 8, 16, 33). காதல் என்பது நிரந்தரக் கண்ணீர் வாழ்விற்கானது அல்ல (கதை - 13, 23, 29, 40, 45). இவைகள் யாவும் ஒரு சில எடுத்துக்காட்டுகளே ஆகும்.
471 பக்கங்கள் கொண்ட இந்த முதல் தொகுதிக் கதைகள் அனைத்திலும் எழுத்தாளரது சரளமான தெளிந்த நடையும், உயிரோட்டமான ‘நறுக்’ ‘சுருக்’ என்ற உரையாடல்களும், ரத்தினச் சுருக்கமான சிறு சிறு பத்திகளிலான கதை சொல்லும் பாங்கும் (Presentation) வாசகரது மனப்பரப்பில் உவப்புடன் ஒன்றிப்போகின்றன. பல கதைகளில் அவர் கையாளும் பரவசமான நவீன உக்திகளும், சிந்தனைப் போக்குகளும், அவரது மிகப் பிரகாசமான எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுகின்றன. எழுத்தாளர் சுரா தமிழ்ப் படைப்புலகின் நெடிய வரலாற்றில், ஒரு காத்திரமான நிலையை விரைவில் எட்டி விடுவார்.
- சி.பாலையா, ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்.