நிறங்கள் மனிதப் பண்பாட்டில் எப்போதும் இன்றியமையாப் பங்காற்றி வருகின்றன. அவை ஆழமான பொருள்களை வெளிப்படுத்தி, வலுவான உணர்வுகளைத் தூண்டும் ஆற்றல் வாய்ந்த குறியீடுகளாகச் செயல்படுகின்றன. நிறங்களின் குறியீடுகளைப் புரிந்து கொள்வது மனிதர்களின் வெளிப்பாட்டு மற்றும் தொடர்பியலின் செறிவான பின்னல்களை ஆழமாக அறிய உதவுகிறது. இந்நிறக் குறியீடுகள் அம்பையின் சிறுகதைகளிலும் காணப்பெறுகின்றன.

“தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அதுவரை கேட்டிராத ஒரு புதிய குரலாக, எழுபதுகளில் வெடித்தெழுந்தது அம்பையின் குரல். இன்று வரை அக்குரல் அழுத்தமாகவும் பிசிறுகள் நீங்கியும் மேலும் பக்குவப்பட்டும் சமரசமின்றிச், சந்தேகத்துக்கிடமில்லாத உறுதியுடன் ஓங்கி ஒலித்து வருகிறது”1 என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார்.

அம்பை தன்னுடைய சிறுகதைகளில் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களைப் பதிவு செய்கிறார். ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக் குரலாக இலக்கியம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற அம்பை, இந்நிறக் குறியீடுகளைப் பயன்படுத்தித் தன்னுடைய சிறுகதைகளான ‘மஞ்சள் மீன்’, ‘ஒரு கறுப்பு சிலந்தியுடன் ஓர் இரவு’, ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ ஆகிய கதைகளில் இடம்பெறும் கதைமாந்தர்களின் பண்புகளைக் கதையின் வழி நிறங்களை எவ்வாறு விளக்குகிறார் என்பதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிறங்களின் குறியீடு

குறியீடு என்பது பொருள், உருவம், சொல் அல்லது சின்னம் போன்றவற்றின் நேரடிப் பொருளை மட்டுமன்றி அதன் உட்பொருளையும் குறிக்கப் பயன்படுகிறது.

“சொல்லின் அர்த்தத்தை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாகக் குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அர்த்தத்தை வாசகரின் மனதில் விழியச் செய்யும் முயற்சியை குறியீட்டியல் (symbolism)”2

என்று குறிப்பிடுவர். மொழியின் வழி பேசாமல் பொருளைக் காட்டி அவை விளைவிக்கும் தொனியில் வாசகனே அர்த்தத்தை அறிந்து கொள்ளும் வகையில் குறியீடுகள் பயன்படுகின்றன. அக்குறியீட்டின் ஓர் உட்பிரிவாக நிறக் குறியீடு இடம் பெற்றுள்ளது. நிறங்களின் பல்வேறு பரிமாணங்களையும் அவற்றின் குறியீட்டுத் தன்மைகளையும் ஆராய்வதன் வழி, நிறங்கள் உணர்வுகளைப் பல்வேறு சூழலில் வடிவமைக்கும் என்பதை அறியலாம். நிறங்களின் குறியீடுகள் பல நுற்றாண்டுகளாக மனிதப் பண்பாடு மற்றும் உணர்வுப் புரிதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கலை, இலக்கியம், மானுடவியல், உளவியல் ஆகியவற்றில் நிறக்குறியீடு என்பது பல்வேறு பண்பாட்டுச் சூழலிலும் கதை சொல்லுதலிலும் பயன்படுத்தப்பெறுகின்றது.

“வண்ணம் என்ற சொல் முதல் வகையில் பொருள் தரும் போது அது நிறத்தினை மட்டும் தனியாகச் சுட்டுகின்றது. ஆனால் இரண்டாம் வகையோ, அச்சொல்லைப் பயன்படுத்தும் மக்களுக்கு - இனத்திற்கு - இடத்திற்கு - பண்பாட்டிற்குத் தகுந்தாற்போல், குறியீடு என்னும் நிலையில் விளங்கி பல்வேறு வகையான பொருளைத் தருவதை நாம் காணலாம் – காட்டலாம். ஒவ்வொரு வண்ணமும் பல்வேறு வகையில் குறியீடாக அமைகின்றது என்பதை நாம் காணலாம்”3.

நிறங்களின் குறியீடுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் வேறுபட்டதாக இருக்கின்றன. அத்தொடர்புகளை ஆராய்வதன் வாயிலாக மனித நடத்தை மற்றும் பண்பாட்டுப் பல்வகைமை எவ்வாறு வாசகரின் அனுபவங்களை வடிவமைக்கின்றன என்பதன் ஆழமான புரிதலை வெளிப்படுத்துகின்றன.

நிறக் குறியீடுகளின் உளவியல் பார்வைகள்

உளவியல் அடிப்படையில், நிறங்கள் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் மற்றும் நமது உணர்வுகளை வடிவமைக்கும் ஆற்றல் பெற்றவை. பண்பாட்டுச் சூழல்களும் நமது நிறங்களின் புரிதலையும் விளக்கவுரையையும் வடிவமைக்கின்றன. வெவ்வேறு சமூகங்களும் பாரம்பரியங்களும் நிறங்களுக்குத் தங்கள் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிய குறியீட்டு அர்த்தங்களை அளிக்கின்றன. நிற உளவியல் என்பது நிறக் குறியீடுகளின் முக்கியக் கோட்பாடு ஆகும்.

“நிறம் தன்னளவில் ஒரு குறியீட்டு வடிவமாக மட்டுமே இருந்து பொருளை உருவாக்க முடியாது. மொழிக்குறியீடுகளுக்கு உச்சரிப்பு உறுப்பு ஒரு முக்கிய ஊடகமாகத் தேவைப்படுவது போலவே, நிறக் குறியீடுகளுக்கும் ஓர் ஊடகம் தேவை”4.

ஆகவே நிறங்கள் மற்றவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது குறியீடுகளாக மாறுகின்றன. உளவியல் துறையில் நிறங்களின் குறியீட்டுத் தன்மையைப் பற்றிய ஆய்வு, பல்வேறு நிறங்கள் தூண்டும் உளவியல் மற்றும் உணர்ச்சிப் பிரதிபலிப்புகளை ஆராய்கிறது. சிவப்பு நிறத்திலிருந்து அமைதியான நீல நிறம் வரை, நிறங்கள் நமது மனநிலை, நடத்தை, அறிவாற்றல், செயல்முறைகள் போன்றவற்றைப் பாதிக்கக் கூடியவை.

இலக்கியத்தில், நிறக் குறியீடுகள் எழுத்தாளர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான முக்கியக் கருவிகளாகச் செயல்படுகின்றன. நிறக் குறியீடுகள் அதிகப் பயன்பாட்டுக் குறியீடுகள் (high-frequency symbols), குறை பயன்பாட்டுக் குறியீடுகள் (low-frequency symbols) என இரு வகைப்படும். சிகப்பு, நீலம், வெள்ளை,கருப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் அதிகப் பயன்பாட்டு நிறக் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஊதா, சாம்பல், பச்சை, பழுப்பு போன்ற நிறங்கள் குறைந்த பயன்பாட்டு நிறக் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, அதிகப் பயன்பாட்டு நிறச் சின்னங்கள் செழுமையானதும் பன்முகத் தன்மை கொண்ட உவமையான (metaphorical) அர்த்தங்களையும் வழங்குகின்றன. ஆனால் குறைந்த பயன்பாட்டு நிறச் சின்னங்கள் தொடர்பில் குறியீட்டு அர்த்தங்கள் எளிமையானவையாக உள்ளன.

வண்ணங்களில் வெளிப்படும் எண்ணங்கள்

இலக்கியங்களில் மஞ்சள் இரட்டைத் தன்மையுடைய நிறமாகக் காணப்பெறுகிறது. மஞ்சம் நிறம் பெரும்பாலும் உயிர்ப்பு - அழிவு, மகிழ்ச்சி - துன்பம், நம்பிக்கை - துரோகம் ஆகியவற்றின் இடையிலான பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது. மாற்ற நிலைகளைச் சித்திரிக்க எழுத்தாளர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துவர். ‘மஞ்சள் மீன்’ என்ற சிறுகதையில் அனு என்ற கதைமாந்தர், உயிர்வாழப் போராடும் மஞ்சள் மீனைத் தன் இறந்து போன மகளுடன் ஒப்பிடுகிறாள். கடற்கரைக்குச் செல்லும் அனு, மீனவர்களின் வலைகளிலிருந்து கீழே எறியப்பட்ட ஒரு மஞ்சள் மீனைப் பார்க்கிறாள். அது உயிர் பிழைக்கப் போராடுவதைக் கண்டு, குழந்தை பருவத்திலேயே உயிர் வாழப் போராடி இறந்த தன் மகள் ஜலஜாவை நினைத்து,

“குவிந்துகுவிந்து திறந்து நீருக்குத் தவித்த வாய். ஜலஜாவின் வாய் மாதிரி”5

என்று ஒப்பிட்டு பார்க்கிறாள். அதனால் மீனை மீண்டும் கடலில் எறிந்து உயிர் பிழைக்க உதவ வேண்டும் என்று அனு நினைக்கிறாள். பிறகு, ஒரு சிறுவன் வாயிலாக மீனைக் கடலில் எறிகிறாள். அந்த மீன் கடலில் நீந்தி இயல்பு நிலைக்கு வருவதை உணர்ந்ததும், தனது மகளின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மனம் தேறி மகிழ்ச்சி அடைகிறாள். பொதுவாக, மீன்கள் பல நிறங்களில் காணப்படும். இக்கதையில் துன்பத்திலிருந்த அனு மகிழ்ச்சியடைந்ததை வெளிக்காட்ட இரட்டைத் தன்மையுடைய மஞ்சள் நிறத்தை அம்பை குறியீடாகப் பயன்படுத்துகிறார்.

கருப்பு நிறம் பெரும்பாலும் இருள், அச்சம், துக்கம், நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கிறது. ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ என்னும் தலைப்பு வழியாக கருப்பு நிறத்தைப் பயன்படுத்திக் கருஞ்சிலந்தியின் இன்றியமையாப் பங்கை இக்கதையில் அம்பை வெளிப்படுத்துகிறார். சிலந்தியானது நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற பல நிறங்களில் காணப்படும். ஆனால் அம்பை இங்குக் கருஞ்சிலந்தியை தலைவியின் அடக்கப்பட்ட ஆசைகள், வாழ்க்கைப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் அச்சங்களை விளக்குவதற்காகப் பயன்படுத்தி இருக்கிறார். உடலியல் ரீதியாகக் கருப்பு நிறம் ஒடுக்கு முறையுடன் தொடர்புடையது. இக்கதையில் ஆணாதிக்கச் சமூகத்தில் போராடும் கதைத்தலைவியின் அனுபவங்கள் கருஞ்சிலந்தியுடன் உருவகப்படுத்தப்பெறுகின்றன. கருப்பு நிறம் வலிமை, நிகழ்ச்சி மற்றும் விடுதலை ஆகியவற்றின் நேர்மறையான தொடர்புகளையும் கொண்டுள்ளது. கதைத்தலைவியின் பயணம் சமூக எதிர்ப்புகளின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவதிலும், அவளுடைய உண்மையான ஆசைகளைத் தழுவுவதிலும் அடங்கும். கருஞ்சிலந்தியை எதிர்கொண்டு அதனுடன் ஓர் அடையாளப் போரில் ஈடுபடும்போது அவள் அடக்குமுறை சக்திகளை மீறி தன் சொந்த அடையாளத்தைத் தழுவுவதில் அதிகாரம் பெறுகிறாள். மேலும் அம்பை இங்கு இரவு நேரத்தைப் பயன்படுத்துவதற்கான காரணம் இரவு என்பது இருள் மற்றும் தனிமையைக் குறிக்கிறது. அதைப் பயன்படுத்திக் கதைத்தலைவியுடைய வாழ்க்கைத் தனிமையைக் குறிப்பிடுகிறார்.

               வெள்ளை நிறம் தூய்மை, மென்மை, அமைதி போன்றவற்றைக் குறிக்கிறது. இக்கதையில் கருஞ்சிலந்தியானது வெள்ளை நிறப் பளிங்குச் சுவரின் மேல் இருக்கும்.

“கன்னங்கரேலென்ற ராட்சத சிலந்தி. குளியலறையின் வெள்ளைப் பளிங்குச் சுவரின் மேல் ஒட்ட வைத்தாற்போல் அசையாமல் இருந்தது”6.

முன் கூறப்பட்டது போல் கருஞ்சிலந்தியானது தலைவியின் வாழ்க்கைப் போராட்டங்களைக் குறிக்கிறது. இங்கு வெள்ளைப் பளிங்குச் சுவரின் மேல் கருஞ்சிலந்தி இருப்பதை மென்மையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டிய தலைவியின் வாழ்க்கையில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் நிறைந்திருக்கின்றன என்பதனை அம்பை குறிப்பிடுகிறார்.

மேலும் இக்கதையில் பச்சை நிறம் இயற்கை, நம்பிக்கை, விடுதலை ஆகியவற்றைக் குறிக்கின்றது. கதையின் முடிவில் காணாமல் போயிருக்கும் கருஞ்சிலந்தியைத் தலைவி தேடுவாள். அதனால் கருஞ்சிலந்தி இருந்த இடத்தில் கன்னத்தைப் பதித்துச் சன்னல் வெளியே பச்சைக் கோலத்தைப் பார்த்தபடி நிற்பதாக கதை அமைகிறது.

“கறுப்புச் சிலந்தி இருந்த இடத்தில் கன்னத்தைப் பதித்த படி சன்னல் வெளியை பச்சைக் கோலம் பூணத் தொடங்கிய "தருக்களைப் பார்த்தபடி நின்றாள்”7.

கதைத்தலைவியின் வாழ்க்கைச் சிக்கல்கள் நீங்கி புதிய நம்பிக்கையும் விடுதலையும் பிறந்திருக்கின்றன என்பதை அம்பை பச்சை நிறத்தைப் பயன்படுத்தி விளக்குகிறார்.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்னும் கதையில் வண்ணங்களின் குறியீடானது ஆழமான பொருளை வெளிப்படுத்தவும் வாசகரின் புரிதலை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியக் கருவியாக இருக்கின்றது. இக்கதையின் தலைப்பில் இருக்கும் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் கதைமாந்தர்களுடைய உணர்ச்சிகளின் சக்தி வாய்ந்த பிரதிபலிப்புகளாகச் செயல்படுகின்றன.

சிவப்பு நிறமானது கோபம், வலி, தீவிரக் காதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இக்கதையில் தம்பதியராக இருக்கும் வசந்தனும் மைத்திலியும் பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் இருந்து வந்த நிலையில் மருத்துவனையிலிருந்து ஆதரவற்ற ஒரு குழந்தையை வசந்தன் எடுத்து வருகிறான். அக்குழந்தைக்குத் தேன்மொழி எனப் பெயர் சூட்டி இருவரும் வளர்க்கின்றனர். நாளடைவில் தேன்மொழிக்கு செவித்திறன் இல்லை என்று அறிந்த வசந்தனும் மைத்திலியும் மிகுந்த மன வலியை அடைகின்றனர். மருத்துவர்களின் அறிவுரைப்படி செவிக்கருவி பொருத்தினாலும் அவள் சைகை மொழிலேயே பேச விரும்புவது வசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. தனக்குப் பிடித்த சைகை மொழியில் பேசவிடாமல் காக்ளியர் சிகிச்சைக்கு வசந்தன் வற்புறுத்துவது தேன்மொழிக்குக் கோபத்தைத் ஏற்படுத்துகிறது. இங்கு கதையில் சிவப்பு நிறத்தின் ஆதிக்கம் உயர்ந்த உணர்ச்சி நிலைகளையும் அவர்களின் உறவுச் சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது. மேலும் உணர்வுகளின் ஆழம், அவர்களின் முடிவுகள் மற்றும் ஆசைகளின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

பச்சை நிறம் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. கதை மாந்தர்களின் ஆறுதல் அல்லது புதிய தொடக்கங்களைத் தேடும்போது கதை சொல்லலில் பச்சை நிறம் வெளிப்படுவது உணர்ச்சி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை நோக்கி அவர்களின் பயணத்தைக் குறிக்கிறது. சிகிச்சைக்குத் தேன்மொழி மறுப்புத் தெரிவித்த போது மனமுடைந்த வசந்தன்,

“எதையும் தாங்க முடியவில்லை. தாங்க அவசியமில்லை. நான் சுதந்திரமானவன்”8

என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான். வசந்தனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என மைத்திலியும் தேன்மொழியும் தேடிச் செல்கின்றனர். அவன் தனோல்டியில் இருப்பது தெரிய வந்து அங்குச் சென்று விசாரித்த போது அவன் ஊமையாக வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. பின்னர் வசந்தனைப் பார்க்காமல் அவனுக்குப் பிடித்தவாறு சுதந்திரமாகவே அவனுடைய வாழ்நாளைக் கடக்கட்டும் என அவர்கள் இருவரும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். இந்தச் சமூகத்தைப் பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளாமல் தேன்மொழி தனக்குப் பிடித்த சைகை மொழியிலேயே பேச விருப்பம் தெரிவிப்பதில் அவளுடைய தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை அம்பை வெளிக்காட்டுகிறார். இக்கதையில் நிறக் குறியீ்ட்டை அம்பை மறைபொருளாகப் பயன்படுத்தியுள்ளார். சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவையில், சிவப்பு நிறம் என்பது தேன்மொழி செவித்திறன் குறைபாட்டால் பேச முடியாமல் தவிக்கும் தவிப்பையும் பச்சை நிறமானது அந்தக் குறைபாட்டை அவள் எதிர்கொண்டு சுதந்திரமான வாழ்க்கை வாழும் சுகத்தையும் வெளிப்படுத்துகிறது.

முடிவுரை

இலக்கியத்தில் நிறக் குறியீடுகள் எழுத்தாளர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான முக்கியக் கருவியாகச் செயல்படுகின்றன. இங்கு எழுத்தாளர் அம்பை தன்னுடைய ‘மஞ்சள் மீன்’ என்ற கதையில் அனு, துன்பத்திலிருந்து மீண்டு மகிழ்ச்சியடைந்ததை வெளிப்படுத்த இரட்டைத் தன்மையுடைய மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துகிறார். ‘ஒரு கறுப்பு சிலந்தியுடன் ஓர் இரவு’ என்ற கதையில் ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணாகக் கதாநாயகியின் வாழ்க்கை அனுபவங்களைக் கருஞ்சிலந்தியுடன் உருவகப்படுத்தி அவள் சமூக எதிர்ப்புகளின் கட்டுப்பாடுகளில் இருந்து எவ்வாறு விடுபடுகிறாள் என்பதை நிறக் குறியீட்டின் வழி விளக்குகிறார். ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’யில் செவித்திறன் குறைபாட்டுடன் இருக்கும் தேன்மொழி தனக்குப் பிடித்த சைகை மொழியினால் சமூகத்தைத் தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணாக இக்கதைமாந்தரைப் படைத்துள்ளார். இக்கதையில் வண்ணங்களின் குறியீடு நேரடியாக இல்லாமல் கதைமாந்தர்களின் வலி, கோபம் மற்றும் உணர்ச்சிகளின் வழி அம்பை எடுத்துரைக்கிறார். சமூகத்தில் நிறங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உணர்ச்சிகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு நிறமும் அதன் சொந்த அடையாளத்தையும் பொருளையும் கொண்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகப் பயன்பாட்டுக் குறியீடுகள் மற்றும் குறைந்த பயன்பாட்டு குறியீடுகளில், அம்பை பெரும்பாலும் தன்னுடைய சிறுகதையில் அதிகப் பயன்பாட்டுக் குறியீடுகளின் நிறங்களையே பயன்படுத்தியுள்ளார் என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது.

அடிக்குறிப்புகள்

1.     ச.தமிழ்ச் செல்வன், தமிழ்ச் சிறுகதையின் தடங்கள், ப.743

2.     பாலா, புதுக்கவிதை ஒரு பார்வை, ப.111

3.     ச.வே. சுப்பிரமணியன், ந.கடிகாசலம், இலக்கியத்தில் நிறம், ப.10

4.     Hui Chen, What can semeiology say about meaning of color, P.23-24

5.     அம்பை, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, ப.136

6.     அம்பை, ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு, ப.47

7.     மேலது, ப.53

8.     அம்பை, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை, ப.43

துணைநூற்பட்டியல்

1.     அம்பை, ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு, காலச்சுவடு பதிப்பகம்.

2.     அம்பை, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2022.

3.     அம்பை, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காலச்சுவடு பதிப்பகம்.

4.     சுப்பிரமணியன், ச.வே., கடிகாசலம்,ந., இலக்கியத்தில் நிறம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

5.     தமிழ்ச் செல்வன்.ச, தமிழ்ச் சிறுகதையின் தடங்கள், பாரதி புத்தகாலயம்.

6.     பாலா, புதுக்கவிதை ஒரு பார்வை, அகரம்.

7.     Chen,hui., What can semeiology say about meaning of color, Studies in Dialectics of Nature.

8.     Reham Karim, Wahid bin Ahsan, Colors of the World Color Symbolism, User Study & Experience Research Hub, Bangladesh.

ஜெ.கிருத்திகா, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி, தாம்பரம் – 600 059

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.