Eelam childஉலகெங்கிலும் மேற்குலக நாடுகளிடமும், இந்திய பார்ப்பன வல்லாதிக்க அரசிடமும் உயிர்ப் பிச்சை கேட்கும் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கி இருக்கிறார்கள். இந்த அவல நிலை ஆதி அண்டமாய் அரசாண்ட தமிழினத்திற்கு எங்கே இருந்து வந்தது?

இந்திய தேசியம் என்கிற ஒரு போலி அமைப்புக்குள் நாம் சிக்கியபோதே நமது தேசிய இன அடையாளம் எல்லாம் தொலைந்து போய் பார்ப்பன வல்லாதிக்கத்தின் பொறியில் சிக்கிய எலிகளைப் போல, அடிமைகளாய் உயிர்ப் பிச்சை கேட்கும் அவலத்திற்குரிய இனமாக மாறிப் போனோம். இந்தியா என்கிற அமைப்பு தேசிய இன அடையாளம் கொண்டதோ, தனக்கென ஒரு மொழி சார்ந்த புவியியல் நிலைப்பாடு கொண்டதோ இல்லை. வழமை போலவே காலனி ஆதிக்கத்தின் ஆளுமைச் சிக்கலை எதிர் கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் கையாளப்பட்ட ஆங்கில அமைப்பின் எச்சமாகவே இந்தியாவும் இருந்தது, இலங்கையும் இருந்தது.

தமிழினத்திற்கு எதிராக ஒரு கொடுமையான இனப்படுகொலை கொலை நடக்கும் போது, அதனை தட்டிக் கேட்பதற்குத் துப்பில்லாத, திராணி இல்லாத அடையாளம் இழந்து போன ஒரு தேசிய இனமாக நாம் மாறிப் போனதன் காரணம் என்ன? காரணம் மிக மிக எளிதானது. அது தான் இந்திய தேசியம் என்று வடிவம் பெற்று இன்று பார்ப்பன வல்லாதிக்கமாய் இன ஒழிப்பிற்கு பொருளாதார, மண்டலக் காரணிகளை துணைக்கு அழைக்கும் கேவலமான ஒரு தேசிய அடையாளம்.

என்ன ஒரு கொடுமையான சூழலில் நாம் இருக்கிறோம். எம் தங்கையர் முகாம்களில் அடைக்கப்பட்டு சிங்கள வெறியர்களின் வல்லுறவுக்கு இலக்காகிறார்கள்; எம் தம்பியர் பிறப்புறுப்புகள் அறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்; எம் குழந்தைகள் தலை அறுக்கப்பட்டு, அனாதைப் பிணங்களாய் வீதிகளில் எரிந்து கொண்டிருக்கிறார்கள்; எம் முதியோரும், ஏதுமறியாத எம் வீட்டுக் கன்றுகளும் ஏதிலியாய் இடம் பெயர்ந்து, புலம் பெயர்ந்து சிரட்டைகளைத் தூக்கிக் கொண்டு சோற்றுக்கு அலைகிறார்கள்; உயிர் காக்க நாம் எடுத்த ஆயதங்களை கீழே போடச் சொல்லி, நமது வரிப்பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய இறையாண்மை உல்லாசிகள் ஊளை இடுகிறார்கள்.

இலங்கையில் நடக்கும் ஒரு இன ஒழிப்புப் போர் யாரால் நடத்தப்படுகிறது. சின்னஞ்சிறு குழந்தைக்கும் இன்று அதற்கான விடை தெரியும். தெற்காசிய பார்ப்பன இந்திய தேசியம் என்கிற வல்லாதிக்க அரசின் உதவி இன்றி ஒரு போதும் இலங்கை அரசின் எந்த ஒரு தலைவனும் இது போன்ற உக்கிரமான போரை தமிழ் மக்களின் மீது கட்டவிழ்க்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைக் கூடச் சுரண்டி உண்டு கொழுத்த பார்ப்பன இந்திய தேசியம் இப்போது பன்னாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டிக் கொழுக்கவும், வல்லரசாக மாறி சொகுசு வாழ்க்கை வாழவும் தன்னைத் தயார் செய்யும் ஒரு போர் தான் இந்த இனப் படுகொலை.

தப்பித் தவறி தமிழினமாய்ப் போனதால், இத்தனை நாள் எத்தனையோ இழப்புகளைத் தாங்கி தங்கள் விடுதலை உணர்வை அணையாமல் கரையேற்றி இருக்கிறது. உலகின் மூத்த குடியாய், வீரமும் விடுதலையும் குருதியில் கலந்த இனமாய் இருப்பதால் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம். நமது இடத்தில் வேறு எந்த இனமும் இருந்திருந்தால் பூண்டோடு அழிக்கப்பட்டு பூச்செடி நட்டிருப்பார்கள். நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன்னாள் விழித்துக் கொள்ள வேண்டும் நண்பர்களே, இனி இந்திய தேசியம் என்னும் மண்குதிரையை நம்பிக் கொண்டு கரையேறி விட நாம் நினைப்பதைப் போல ஒரு வடிகட்டிய முட்டாள் தனம் இருக்கவே முடியாது.

மேற்குலகின் கால்களில் இன்று வீழ்ந்து கிடக்கிறோம். யாரோ முகம் தெரியாத ஒபாமா இடம் அடைக்கலம் கேட்டு இறைஞ்சுகிறோம். எம் விடுதலையை வென்று கொடுங்கள் என்று சங்காரம் முழக்கும் இடத்தில், "ஐயா, எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், ஐயா எங்கள் பெண்களை வாழ விடுங்கள்" என்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருக்கிறோம். ஐயகோ, எம் தமிழினமே, "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று ஈரம் சொட்டிய எங்கள் இனம் இன்று அடிமைகளாய் உலகெங்கும், "அவருக்கு மடல் எழுதுங்கள், இவருக்கு தொலை பேசுங்கள்" என்று விழுந்து புரள வைத்து யார் நண்பர்களே??

நமக்கென்று ஒரு நாடிருந்தால், தட்டிக் கேட்டிருப்போமே. நமக்கென்று ஒரு வீடிருந்தால் தாலாட்டி எம் குழந்தைகளை உறங்க வைத்திருப்போமே. நமக்கென்று மானம் இருந்தால் எம் தங்கையரை சீராட்டி காத்திருப்போமே!!!

இழந்தோமே, தன்மானம்!!!!!, சிதம்பரங்களும், முகர்ஜிகளும் குளிரூட்டப்பட்ட அறைகளில் நம் வரிப் பணங்களை ஏப்பம் விட்டுக் கொண்டு ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வார்கள். சிதம்பரத்தின் மருமகளும், முகர்ஜியின் பேத்தியும் வன்னிக் காடுகளில் சோற்றுக்கு அலைந்திருந்தால் ஆயுதங்களை அள்ளி வழங்குவார்களா? அங்கே இருப்பது எங்கள் தங்கைகள் இல்லையா? அதனால் சிங்களக் காடைகளுக்கு எம் தங்கையரைக் இரையாக மாற்ற இந்திய தேசியத்தின் பெயரில் அதிகாரப் பூர்வமாக ஆயதங்களைப் புலிகள் கீழே போடவேண்டும். நாம் அதனைக் கேட்டுக் கொண்டு "அண்ணன் சிதம்பரம்" வாழ்க என்று முழக்கம் இட்டுக் கொண்டு களைந்து செல்ல வேண்டும். கூட்டம் முடிந்தவுடன், நமது உழைப்பைச் சுரண்டிய கொள்ளைப் பணங்களில் கொஞ்சம் கிழித்துப் பிச்சை போடுவார்கள். மானம் இழந்து நாமும் அதனை மடியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இனி பொறுத்தது போதும். தனித் தேசிய இனமாக கோலோச்சிக் கொண்டிருந்த நாம், இந்திய பார்ப்பனீய வல்லாதிக்க ஆளுமைகளிடம் நிறமிழந்த அடிமைகளாய் மாறிப் போனோம். அந்தப் போலி தேசியத்தைத் தூக்கிப் பிடிக்கும் இன்றைய அரசியல் வாதிகள் எல்லாம் இந்திய தேசியம் என்னும் மிகப் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் கருப்புப் பணத்தின் சுவையை ருசித்தவர்கள். கலைஞர் என்கிற தமிழின அடையாளம் தன்னைத் தொலைத்து இந்திய தேசியத்திற்குள் முழுகத் துவங்கியதன் முகாந்திரம் கூட ஒரு வகையில் பார்ப்பன வல்லாதிக்கம் வழங்கிய உலகப் பணக்கார வரிசை இடம் தான். நமக்கான அரசியலை, நமக்கான வரலாற்றை தமிழன் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஈழத் தமிழர்களின் வாயிலாக நம் கதவைத் தட்டி இருக்கிறது.

நடப்பவை நடக்கட்டும். நாளும் கொலைகள் நடத்தி முடிக்க தமிழகக் காவல் துறை கூட இலங்கை சென்று இன அழிப்பில் ஈடுபடும். கலைஞர் ஐயா கொடியசைத்து காங்கிரஸ் அரசின் இனப் படுகொலை முன்னெடுப்பில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வார். தேர்தல் குடிதொங்கி ஐயாக்களும், வீர முழக்கமிட்டு பார்ப்பன வணக்கம் செலுத்தும் கறுப்புத் துண்டு அரசியல்வாதிகளும் தங்கள் காவடி தூக்கும் அரசியலில் தலைமுறைக்கும் கொள்ளை அடித்துக் கொள்வார்கள். இனி அவர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இழப்பு எப்போதும் எனக்கும் உங்களுக்கும் தான்.

Eelam ladyஇளைஞர்களே, இன உணர்வாளர்களே, தமிழை தங்கள் உயிராய் மதித்து வாழும் தமிழ் நெஞ்சங்களே! உலகெங்கும் பறை சாற்றுங்கள். இனி நாங்கள் இந்தியர்கள் இல்லை. உரக்கக் கூவுங்கள்! இனி நாங்கள் ஒரு போதும் இந்தியர்கள் இல்லை!!

தமிழ்த் தேசியத்தின் தேவைகளில் மிக முக்கியமான தேவை தன்மானம். சட்டமன்றங்களில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிரொலிக்கின்ற வல்லமை இன்மை அல்லது மறுதலிக்கிற பார்ப்பன வல்லாதிக்க மனப்போக்கு தமிழர்களின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். தொடர்ந்து ஆயுதங்களை அனுப்புகிற துணிவு தமிழர்களின் உணர்வுகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணி.

பாராளுமன்றங்களில் அளிக்கப்படும் அறிக்கைகள் தமிழ் நெஞ்சங்களில் பற்ற வைக்கப்படும் நெருப்பு. மேற்குலகின் கால்களில் விழுந்து மன்றாடும் ஒரு கேவலமான நிலையை நமக்கு வழங்கிய இந்திய தேசியத்தை உடைப்போம். தமிழருக்கான தனித் தமிழ் தேசியத்தை அடுத்த தலைமுறைக்கு அடை காத்துக் கொடுப்போம். உலகின் எல்லா தேசிய இனங்களையும் போலவே நாமும் நம்மை அடையாளம் செய்து கொள்ள முயல்வது ஒரு போதும் குற்றமென்று கருதாமல், அதுதான் இயல்பு என்று அந்த இயல்பு நிலையை நோக்கி விரைந்து செல்ல வேண்டிய ஒரு அழுத்தத்தில் இருக்கிறோம்.

சாதீய அடையாளங்களைக் களைய, மதங்களைத் கட்டி ஆளும் மடமைகள் கொழுத்திய ஒரு பேரினமாக எழுச்சி கொள்ளவும் இன்று தமிழ்த் தேசியம் தேவையாக இருக்கிறது. பார்ப்பன வல்லாதிக்கம் உடைக்கவும், நமக்கான கலை கலாசார, ஊடக வெளிகளைக் கட்டமைக்கவும் இந்த இன எழுச்சி பயன் தரட்டும். முத்துக் குமாரின் மரணமும், முருக தாசனின் மரணமும் கட்டி அமைத்த அந்த காலப் பெருவெளியில் உலகப் பேரினமாம் தமிழினம் தனக்கான வீட்டை உருவாக்கும்.

கொஞ்சிப் பேசும் என் தமிழ் மழலையர் தலை சிதறலைத் தவிர்க்கவும், தத்தை மொழி பேசும் எம் தங்கையர் வாழ்வில் வசந்தம் மலரவும், மானமுள்ள மரணத்தை எம் முதியோர் எதிர் கொள்ளவும், இனி நமக்கான தேசியம் தவிர வேறு விடைகளே இல்லை.

இன உணர்வாளர்களே, தமிழினத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டிருக்கும் எங்கள் அன்புக்குரிய அண்ணன் திருமாவே, ஐயா.பழ.நெடுமாறன் அவர்களே, அண்ணன் தியாகு அவர்களே, ஐயா புதுக்கோட்டை பாவாணன் அவர்களே... இன்னும் பல ஆண்டுகளாய் தமிழ் தேசியக் கட்டமைப்பை உறுதியாக்கும் வல்லமை பொருந்திய எங்கள் இனமானத் தலைவர்களே! ஒன்று கூடுங்கள். இன எழுச்சியை ஆயுதமாய்க் கொண்டு நமக்கான தேசியத்தைக் கட்டமைக்க உறுதியாய் அணி திரள்வோம். இன்றைய இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை இழந்த ஆயிரக்கணக்கான தகவல் தொழில் நுட்ப அறிஞர்களும், வருங்கால வழக்குரைஞர்களும், மாணவர்களும் இன்னும் பொது மக்களும் சரியான தலைமைகளை அடையாளம் காணத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள், ஒன்றிணைந்து சமைப்போம், புதிய தேசத்தை,

இந்தியதேசியத்தை உடைப்போம்,

தனித்தமிழ் தேசியத்தைக் கட்டமைப்போம். 

-
அறிவழகன் கைவல்யம்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It