பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு

நந்தன் :

தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே.

சம்பூகன் :

பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் - இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார் கூறுகிறார்கள். ராமன் - ‘பிராமண’ தர்மத்தைக் காப்பாற்ற, தவமிருந்த சம்பூகன் தலையை வெட்டினான். இது வால்மீகி இராமாயணத்தில் உள்ள செய்தி. தமிழில் கம்ப இராமாயணத்தில் கம்பன் இதை எழுதாமல் மறைத்து விட்டான்.

கர்ணன் :

மகாபாரதத்தில் வரும் கர்ணன் - கொடை வள்ளல். அரச குலத்தில் பிறந்து தேரோட்டி குலத்தில் வளர்ந்தவன். தான் ‘சூத்திரர்’ என்பது தெரிந்தால், பார்ப்பனர் பரசுராமன், தனக்கு போர் தொடர்பான சாத்திரங்களைக் கற்றுத் தர மாட்டார் என்பதால், உயர்குலத்தவன் என்று பொய் கூறி, கல்வி கற்கிறான். ஒரு நாள் பரசுராமன் கர்ணன்  மடியில் படுத்து உறங்கினார். கர்ணனை மாட்டிவிட சூழ்ச்சி செய்த இந்திரன், வண்டாக மாற்று உருவம் கொண்டு கர்ணனின் தொடையைத் துளைக்கிறான். தொடையிலிருந்து குருதி கொட்டுகிறது. கர்ணன், தனது குருவின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்று, அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான். ஆனால், குருதி ஈரம், பரசுராமன் தூக்கத்தை கலைக்கிறது. விழித்து எழுந்த பரசுராமன், கர்ணனின் குரு பக்தியை நெஞ்சுரத்தைப் பாராட்டவில்லை. “நீ பிராமணன் அல்லன்; அதனால்தான் வண்டு துளைத்த பெருந் துன்பத்தைத் தாங்கியிருக்கிறாய். எனவே என்னிடம் பிராமணன் என்று பொய் சொல்லி நீ கற்ற போர்க்கலைகளை, அதைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் நீ மறந்து விடவேண்டும் என்று சபிக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த ‘சாபமே’ கர்ணனின் கடைசிக் கால சாவுக்கும் காரணமாகிறது. இது புராணம்தான். ஆனால், இதன் வழியாக பார்ப்பன வெறியும், அவர்களின் ‘சூத்திர’ வெறுப்பும் அம்பலமாகிறது.

ஏகலைவன் :

வேட்டுவ குலத்தைச் சார்ந்த (தாழ்ந்த சாதி - பழங்குடி) ஏகலைவன் - பார்ப்பனரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுத் தரக் கேட்டான். ‘நீ கீழ் சாதி கற்றுத் தர முடியாது’ என்று துரோணன் மறுக்கிறான். ஏகலைவன் துரோணன் போல ஒரு உருவத்தைச் செய்து, அதையே குருவாகக் கருதி, வில் வித்தையைக் கற்கிறான். ஒரு நாள், அந்த துரோணன் உருவத்தின்மீது நாய் சிறுநீர் கழித்தது. நெடுந் தொலைவிலிருந்து அதைப் பார்த்த ஏகலைவன், சீற்றமடைந்து மிக நுட்பமாக, குறி பார்த்து அம்பு வீசி, நாயைக் கொல்கிறான். இவ்வளவு திறமையாக அம்பு வீசிய ஏகலைவனைப் பாராட்டவில்லை துரோணன். என்னுடைய உருவத்தை வைத்துத் தானே, வில் வித்தையை கற்றுக் கொண்டாய். எனவே குருதட்சணையாக, கட்டை விரலை வெட்டி கொடு என்கிறான். ஏகலைவன் சிறிதும் தயக்கமின்றி கட்டை விரலை வெட்டித் தருகிறான். கட்டை விரலையே வெட்டிவிட்டால், வில்லை எய்த முடியாது.

- மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளும் அன்றைய பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எந்தக் கல்வியும் கற்கக் கூடாது என்று தடை விதித்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

நவ நந்தர்கள் :

1) நந்தர்கள் சமண மதத்தினர் - வைதீகத்துக்கு எதிரிகள் - ஒரிசா தக்காணம் பகுதி வரை ஆட்சி செய்தனர். தலைநகர் பாடலிபுத்திரம்  - இவர்கள் ஆட்சியின் புகழ், செல்வாக்குப் பற்றி சீன யாத்திரிகர் யுவான் சுவாங் மற்றும் பல நூல்கள் பேசுகின்றன. நந்தர்களின் செல்வச் செழிப்பு பற்றி அகநானூற்றிலும் பாடல் வருகிறது.

2)நந்தர்கள் - தாழ்ந்த குலத்தினர் - புராணங்கள் நந்தர்களை இழிகுலத்தினர், நாத்திகர்கள், கொடுங்கோலர்கள் என்று வசைபாடுகின்றன.

3) ஆட்சியின் முக்கிய பதவிகளில் - அமைச்சர் பதவிகளில் பார்ப்பனர்களைப் புறக்கணித்து, சமண அறிஞர்களையே நியமித்ததே, பார்ப்பனர் எதிர்ப்புக்குக் காரணம்.

4)“நந்தர்களின் கொடுங்கோன்மையிலிருந்து புனித சா°திர நூல்களையும், ஆயுதங்கள் பற்றிய சா°திரங்களையும், அவர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாட்டினையும், எவன் முன் வந்து காப்பாற்றினானோ அவனால், (சாணக்கியன் எனும் கவுடல்யனால்) ‘அர்த்தசா°திரம்’ எனும் இந்த நூல் எழுதப்பட்டது” என்று சாணக்கியன் (பார்ப்பான்) கூறியுள்ளான்.

சந்திரகுப்தன் சதி :

1) நந்தன் வம்சத்தின் கடைசி மன்னனான தனநந்தனின் படைத் தலைவன் சந்திரகுப்தன். இவன் நந்தர்களை ஒழித்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க விரும்பினான். பார்ப்பனர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர்.

2)  சதி முறியடிக்கப்பட்டது. சந்திரகுப்தன் நாடு கடத்தப்பட்டான்.

3) நந்தர்களின் அரண்மனையில் விருந்து ஒன்றில் முறை தவறி நடந்து கொண்ட சாணக்கியன் எனும் வைதீகப் பார்ப்பான், அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டான். அவமானத்தால் கோப மடைந்த சாணக்கியன், காடு நோக்கி ஓடினான்.

4) கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்து பியா° நதிக்கரையில் தங்கியிருந்த காலம் அது. காட்டுக்குள் இருந்த சந்திரகுப்தன், அலெக்சாண்டரை சந்தித்து, நந்தர்கள் ஆட்சி செய்த மகத நாட்டின் மீது படை எடுக்குமாறு வலியுறுத்தினான். அடிக்கடி அலெக்சாண்டரை வற்புறுத்தினான்.

5) அலெக்சாண்டருக்கு இதில் உடன்பாடு இல்லை. தொடர்ந்து நச்சரித்து வந்ததும், நந்தர்களை ‘இழிகுலத்தினர்’ என்று கூறியதும், அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், சந்திர குப்தனைப் பிடித்துக் கொன்றுவிடும்படி, தனது அலுவலர்களுக்கு அலெக்சாண்டர் ஆணை யிட்டார்.

6)தலை தப்பினால் போதும் என்று சந்திரகுப்தன், அலெக்சாண்டர் படை முகாமிலிருந்து வெளியேறி, விந்திய மலைக்காடுகளில் அலைந்துக் கொண்டிருந்த சாணக்கியனோடு சேர்ந்து கொண்டான்.

7)சாணக்கியன் காட்டில் கிடைத்த ஒரு புதையலைக் கொண்டு பெரும் பணம் பெற்றான். அவன் சந்திரகுப்தனுக்கு பெரும் படையை திரட்டித் தந்தான். திருடர்கள், கொள்ளைக் கூட்டத்தினர், கூலிக் கும்பல், அப்படையில் இடம் பெற்றனர்.

8) போர் நடத்தி, நந்த வம்சத்தின் கடைசி மன்னன் தனநந்தனை வென்று, சந்திரகுப்தன் ஆட்சிக்கு வந்தான். இவனது வம்சம் மவுரிய வம்சம். இவனது அமைச்சரவையில் பார்ப்பன சாணக்கியன் இடம் பிடித்தான். பார்ப்பன கொடுங்கோல் ஆட்சி நடத்தினான்.

9) மக்கள் எதிர்ப்புக்கு உள்ளான சந்திரகுப்தன், இறுதிவரை அச்சத்துடனே வாழ்ந்தான். சாணக்கியன் - சந்திரகுப்தனைப் பயன்படுத்தி, பார்ப்பன மதத்தைப் பரப்பத் திட்டமிட்டான். முதலில், சாணக்கியனுக்குப் பணிந்து போன சந்திரகுப்தன், இறுதி காலத்தில் மனம் திருந்தி, சமணத்தில் ஈடுபாடு கொண்டான். சமண மதம், பார்ப்பன எதிர்ப்பு மதமாகும். பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி, பிறகு திருந்திய சந்திர குப்தன், உள்ளம் உடைந்து, பட்டினி விரதம் இருந்து உயிர் நீத்தான்.

அசோகன்

1) பார்ப்பன சாணக்கியன் துணையோடு ஆட்சியைக் கைப்பற்றிய மவுரியர்கள், பார்ப்பனர்களுக்கு பயன்படுவார்கள் என்ற பார்ப்பனர் பேராசை பொய்த்துப் போனது.

2) மகதம் (இன்றைய பீகார், உ.பி. பகுதிகள்) பார்ப்பனியத்துக்கு எதிராகவே இருந்து வந்தது. மவுரியப் பேரரசு, மகதத்தைத் தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தது. அசோகன், சந்திர குப்தனின் பேரன் 38 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். புத்தர் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பினான்.

3) பார்ப்பன தர்மங்களைப் புறக்கணித்து அனைவரும் சமம் என்று அறிவித்தான் அசோகன். பார்ப்பன யாகங்கள், உயிர்ப் பலிகள், குதிரை யாகங்களைத் தடை செய்தான்.

4) நாடு முழுதும் கல்வெட்டுகளை நிறுவி, ஆணைகளைப் பிறப்பித்தான். பார்ப்பனர்கள் கொதித்தனர்.

5) பார்ப்பனர்கள் நாடு முழுதும் - அரசுக்கு எதிராக சதி செய்தனர்; அரண்மனையிலும் ஊடுருவினர்.

6) அசோகனின் 29 ஆம் ஆண்டு ஆட்சியில் பட்டத்து ராணி “அசந்தி மித்திரா” மரணமடைந்தாள். அதன் பிறகு ‘திஷ்ய ரஷிதா’ என்பாளை பட்டத்து ராணியாக்கினார். இவருக்கு பவுத்தத்தின் மீது ஈடுபாடு இல்லை. அரசன் புத்தரின் நினைவாக - அவர் அறிவு பெற்றதாகக் கூறப்படும் அரச மரத்தின் (போதி மரம்) மீது பற்றுக் கொண்டு வளர்த்தான். இந்த பட்டத்து ராணி, ‘விஷ முள்’ கொண்டு மரத்தைக் குத்தி காய்ந்துப் போகச் செய்து விட்டாள். ஆறாத் துயர் கொண்ட அசோகன், மரம் முழுமையாக பட்டுப் போகாமல், ஒரு பகுதியையாவது காப்பாற்றினான் என்று இலங்கையின் ‘மகா வம்சம்’ என்ற புராண நூல் கூறுகிறது.

7) அசோகன் தனது இறுதிக் காலத்தில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் பவுத்த மடத்திற்கும் பவுத்தர்களுக்கும் வழங்கலானான்.

அசோகனுக்குப் பிறகு....

8) மவுரிய ஆட்சியின் கடைசி மன்னன் ‘பிரகத்ரன்’ கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடியது.

9) மவுரிய மன்னருக்கு எதிராக பார்ப்பனர்கள் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். மகத நாட்டின் படைத் தலைவனாக இருந்த ‘புஷ்யமித்திர சுங்கன்’ எனும் பார்ப்பனருடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டனர்.

10) மன்னன் பிரகத்ரன் - படைவீரர்களைப் பார்வை யிட்டு வரும்போது, புஷ்யமித்திரன் பட்டப் பகலில் தந்திரமாக மன்னனை கத்தியால் குத்தி கொலை செய்து, மகதத்தின் ஆட்சியைக் கைப்பற்றினான். பவுத்த நெறி சீர்குலைந்தது.

புஷ்யமித்திர சுங்கன்

1) இவன் பார்ப்பான். சுங்கர் குலம்; இவனது பரம்பரை 112 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. பவுத்த மடாலயங்கள் கல்வெட்டுகள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன.

2) பாடலிபுத்திரத்தில் (இன்றைய பீகார் பகுதி) மிகச் சிறப்பான ‘குக்குடாரமா’ எனும் பவுத்த மடாலயத்தை அழித்திட புஷ்யமித்திரனே சென்றான். அப்போது உள்ளே இருந்து சிங்கம் உறுமியது போன்ற சத்தம் கேட்டு, பயந்து ஓடி வந்து தனது படையினரைக் கொண்டு மடாலயத்தை தீயிட்டு கொளுத்தச் செய்தான். மீண்டும் அசுவமேதயாகம் (குதிரைகளை எரிக்கும் யாகம்) கொண்டு வந்தான்.

3) சாகலா என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, ‘ரமண’ என்ற புத்தத் துறவியின் தலையினைக் கொண்டு வந்தால் நூறு ‘தினார்கள்’ பரிசு என்று அறிவித்தான்.

4) அடுத்து வந்த குப்தர்களின் பார்ப்பன ஆட்சிக்கு முன்னோடியாக, அதற்குப் பாதை அமைத்துத் தருவதாக சுங்கர்களின் ஆட்சி விளங்கியது என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் சத்தியநாத அய்யர்.

பவுத்தர்களைப் படுகொலை செய்த பார்ப்பனர்கள்

5) புஷ்யமித்திரன், அசோக மன்னன் நிறுவிய 84000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான்.

6) பவுத்த பிக்குகளும், பவுத்தத்தைத் தழுவிய மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

7)காஷ்மீரத்தை ஆண்ட ஜாலுக்க  என்ற காஷ்மீர் மன்னன், பவுத்த மடாலயத்திலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, மடாலயத்தை இடித்துத் தள்ளினான். (தகவல் ஆய்வாளர்: கல்கணன்)

தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

(தொடரும்)

Pin It