காந்தி அடிகளின் திரேகநிலையும் மனப்பான்மை நிலையும் அசைவுற்றுப் போய்விட்டது என்பது அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயலா மூலமாகவும் அவர் அடிக்கடி வெளிப்படுத்தும் அபிப்ராயம் மூலமாகவும் நன்கு வெளியாகிறது. அவருக்கு மன உறுதியுள்ள காலத்தில் காயலாவே ஏற்படுவதில்லை. ஏற்பட்டாலும் இயற்கை முறைகளிலேயே சவுக்கியப்படுத்திக் கொள்வார். இப்பொழுதோ அவருக்கு கொய்னாவும் இஞ்சக்ஷனும் தேவையாய்ப் போய்விட்டது. ஆதலால் இயற்கை சிகிச்சையில் உள்ள உறுதி ஆட்டம் கொடுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். 

அதுபோலவே ராஜீய விஷயத்தில் இருந்த உறுதிகளும் ஆட்டம் கொடுத்து விட்டதாகவே கருத வேண்டியதாய் விட்டது. மகாத்மா ஜெயிலில் இருந்து வந்தவுடன் இருந்த மனநிலையும், ஸ்ரீமான்கள் தாஸ், நேரு இவர்கள் கேட்டுக்கொண்ட பின் ஏற்பட்ட மனநிலையும், கல்கத்தா ஒப்பந்த மனநிலையும், பாட்னா ஒப்பந்த மனநிலையும், தான் ஓய்வு எடுத்துக் கொண்ட மனநிலையும், தனக்கு நம்பிக்கையில்லாத திட்டத்திற்கு தான் தன்னால் கூடிய உதவி செய்வதாகச் சொல்லும் மனநிலையும் பார்த்தால் தயவு தாக்ஷண்ணியம், கருணை என்பதுகள் நமது மகாத்மாவை ஆவாகனப்படுத்திக்கொண்டு பாத்திரா பாத்திரமறியாமலே மகாத்மாவை ஆட்டி வைக்கின்றன. 

இவ்வளவும் போதாமல் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் விஷயத்திலோ இவைகள் தலைகால் கூட தெரியாமல் ஆட்டி வைக்கின்றது.

ஸ்ரீமான் தாஸ், நேரு இவர்கள் விஷயத்திலேயே அவர்கள் சொல்லு வதுபோலெல்லாம் மகாத்மா ஆடினாரென்றால் ஸ்ரீமான் ஆச்சாரியார் விஷயத்தில் கேட்கவும் வேண்டுமா? ஆச்சாரியார் நினைப்பது போலெல்லாம் ஆடினால்தானே சரியாகவிருக்கும். ஆதலால் அதற்கு ஏற்றாற்போலவே இப்பொழுது மகாத்மா ஆடிவருகிறார்.

ஸ்ரீமான் ஆச்சாரியார் :-

மகாத்மாவே! நான் பிரிட்டீஷ் கோர்ட்டுக்குப் போய் எனது வக்கீல் சாமார்த்தியத்தால் ஆர்க்கியுமெண்ட் செய்து ஒரு கேசு ஜெயித்து வந்தேன். ஆனால், ஜனங்கள் சந்தேகப்படுகிறார்கள். தயவு செய்து இதற்கு ஆசி கூறுங்கள்.

மகாத்மா:-

ஆ ! ஆ ! ரொம்பவும் சரி. அதுதானே ஒத்துழையாமையின் அடிப்படை. யாரோ என்னமோ சொல்லட்டும். நீங்கள் பயப்படாதீர்கள்.

ஸ்ரீமான் ஆச்சாரியார்:-

மகாத்மாவே! மதுவிலக்கு என்கிற கொள்கையை வைத்து சுயராஜ்யக் கட்சியின் பேரால் எனது பிராமண வகுப்பாருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும். தயவு  செய்து இதையும் ஆதரித்து ஆசி கூறுங்கள்.

மகாத்மா :-

ஆ ! ஆ! ஆnக்ஷபணை என்ன, நீங்கள் செய்தது ரொம்பவும் சரி. சுயராஜ்யக் கட்சியார் பரம உத்தமர்கள். அவர்கள் மதுவிலக்கை ஏற்றுக்கொண்டது தேசத்திற்கே பெரிய லாபம். அவர்களே ஜெயிக்க வேண்டும். நீங்களும் அவர்களுக்கு வேலை செய்வதுதான் மோக்ஷம்.

என்று இம்மாதிரி அடிக்கடி உதவி வருவதைப் பார்க்கும் போது மகாத்மாவின் மன உறுதியின் நிலை நமது புத்திக்கு புலப்படாதிருப்பதோடு கவலைப்பட வேண்டியதாகவேயிருக்கிறது. ஒரு சமயம் மகாத்மா இவ்வாட்டமான மன உறுதிகளின் பலனால் பின்னால் எல்லாம் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று நம்பிக்கை கொண்டு இருக்கலாம். உதைத்த கால் புழுப்பதற்கு முன் அடிவயிற்றில் சீ கட்டும் போலிருக்கிறதே அதற்கு என்ன செய்வது என்கிற கவலையும், மறுபடியும் நமது நாட்டை நடத்த வேண்டிய நிலை நமது மகாத்மாவுக்கு வருமானால் இப்பொழுது மகாத்மாவை ஆட்டமுறச் செய்தவர்களே அந்தக் காலத்திலும் வந்து குறுக்கிட்டு இந்த மாறுதல்களை யெல்லாம் எடுத்துக்காட்டி மறுபடியும் உபத்திரவம் செய்ய வந்து விடுவார்களே என்கிற பயமும்தான் இவற்றைப் பற்றி கவலைப்பட வைக்கிறதே அல்லாமல் மற்றபடி மகாத்மாவினிடம் எவ்விதச் சந்தேகமோ, கற்பனையோ யாருக்கும் கொஞ்சமும் இருக்காது என்றே உறுதி கூறுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.02.1926

Pin It