காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாச்சிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண் திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூடநம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லை யென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

periyar 433“தென்னாட்டுக் காந்தி” எனக் காங்கிரஸ் கூலிகளால் கொண்டாடப் படும் திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப்பற்றி நாம் ஒன்றும் அதிகமாகக்கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாச்சிரம தரும வாதியாகிய “கடவுள் பக்தர்” ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பையையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத் துணி யையும் சுமந்து கொண்டு போவதைப் போல, திரு. ராஜகோபாலாச்சாரியாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரசாரத்துடன் கூடவே கடவுள் பிரசாரமும், புராணப் பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம் மாதிரியே பிரசாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு :-

“நாளது டிசம்பர் மாதம் 28-தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றைய தினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். அன்று மாலை சாதி, மத, கட்சி பேதங்கள் எல்லாவற்றையும் மறந்து, தமிழ் நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத் தில் கூடவேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டிடங்கள் எல்லாவற்றிலும் தேசீயக்கொடி பறக்க விடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்”. (இந்தியா)

என்பது அவ்வறிக்கையாகும்.

இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, “திரு. காந்தியவர்கள் பிரயாணஞ்செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ்செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங் களைச் செய்து விட்டார். இதற்காக “ஆண்டவன்” என்பவனுக்கு நன்றியும், பிரார்த்தனையும் செய்வது ஒன்று. தேசீயக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்யவேண்டும்” என்பதாகும்.

உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக் காரணம் ஆட்டுப்பாலும் பேரீச்சம்பழங் களும், நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக் கெனத் தனியாகப் பாதுகாப்புக்கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.

இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப் பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக் காரணம் ரயில், கப்பல், மோட்டார் முதலியவைகளேயாகும்.

ஆகவே திரு. காந்தி அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்தவேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார் போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார் ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப் பால் சப்ளை செய்த ஆடு களுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக் கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும். இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங் கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசீயக்கொடி பறக்க விடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுக வைக் கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

தேசீயக் கொடி பறக்க விடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கியிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். சொந்த வீடுகளில் தேசீயக் கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்றுமைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக் கூடும் என்பது நிச்சயம்.

அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசீயக்கொடி பறக்கவிடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திருவிழாவாகவும், கொண்டாடப்பட வேண்டு மென்பதும் திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திரு விழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக் காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாமலிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.12.1931)

Pin It