அஸ்கர் அலி எஞ்சினியரின் மறைவுச் செய்தி கேட்ட மாத்திரத்தில் ஒரு நெருங்கிய உறவினரை இழந்துவிட்டது போன்ற பதற்றம் ஏற்பட்டது. நேருக்கு நேர் சந்தித்ததில்லை. கை குலுக்கியதில்லை. உரையாடியதில்லை. பிறகேன் இந்தப் பதற்றம்.

மும்பையில் இறந்த அவருக்காகத் தென்கோடி மூலையில் வாழும் நான் ஏன் வருத்தப்படுகிறேன். கேள்வி எழும்பாமல் இல்லை.

என்னைப் பொறுத்தமட்டில் இதற்கு மூல காரணம் அஸ்கர் அலி எஞ்சினியரின் எழுத்துக்கள் தான். தமிழ்மொழிபெயர்ப்பின் மூலமாகவும் ஆங்கிலக் கட்டுரைகள் வழியாகவும் அஸ்கர் அலி எஞ்சினியர் எழுத்துக்கள் என்னை வந்தடைந்திருந்தன. எண்பது களில் வெளியான அஸ்கர் அலி எஞ்சினியரின் ஆங்கில நூலொன்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1993-இல் இசக்கியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஓரியண்ட் லாங்மேன் புத்தக நிறுவனத்தால் வெளி யிடப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்ததன் காரணமாகவே அஸ்கர் அலி எஞ்சினியர் எனது விருப்பத்துக்குரிய எழுத்தாளர் ஆனார்.

தமிழக முஸ்லிம் அறிவுத்துறையினர் அஸ்கர் அலி எஞ்சினியரின் இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (origin and Development of Islam) நூல் மீது போதிய கவனத்தைச் செலுத்தவில்லை. இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணமும், சமூகப் பரிமாணமும் இணைந்ததொரு வாசிப்பு பிரதியாக இந்த நூல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரபுலகச் சூழலில் துவங்கி இஸ்லாத்தின் தோற்றத்திற்கான சமூக பண்பாட்டுப் பொருளாதாரச் சூழலியல் விரிவாகப் பேசப்பட்டது.

நபித்துவத்தின் துவக்க காலங்களில் மக்காவின் பழங்குடிகள் யூத, கிறிஸ்தவ கலாச்சார சூழலில்நபிகளாரின் உயிர்ப்புத் தன்மை மிக்க தத்துவ, செயல்வழி சமூக உருவாக்கம் இதழில் தனித்தன்மையோடு வெளிப்பட்டிருந்தது. மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து சென்றபின் அங்குள்ள கலாச்சார சூழலில் இஸ்லாமிய உம்மத்தை அரசியல் ரீதியாக கட்டமைத்தவிதம், ஆட்சி அதிகாரம் செயல் பட்ட வரலாறும், போர்களினூடே உருவான சமாதான நடவடிக்கைகளும் விவாதப் பொருளாகி இருந்தது. முஸ்லிம்களது ஓரங்கட்டப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வருவ தாகவும் அமைந்திருந்தது.

நபிகளாரின் காலத்திற்குப் பிறகு ஆட்சி அதி காரம் கைப்பற்றிட நடைபெற்ற அணுகுமுறைகள், கலீபாக்கள் அபூபக்கர், உமர் உஸ்மான், அலி ஆகி யோரின் ஆட்சி முறையும், இஸ்லாமிய உம்மத்துக்கள் பிரதேசம், அரசியல், தேசிய இனம் சார்ந்து ஷியா பிரிவின் தோற்றம், பல்வேறு இஸ்லாமியப் பிரிவு களின் உருவாக்கம் என்பதான சூழல்களை மிகவும் காத்திரமாக விவாதிக்கிறது. அஸ்கர் அலி எஞ்சினியர் தனது விவாதக் கருத்துக்களுக்கு ஆதாரமாக இப்னு ஹிஸாம், அல்தப்ரி, ஷிப்லி நொமேனி, மவுலானா அபுல்கலாம் ஆசாத், இப்னு அல் நதீம், மாண்ட்கோ மரிவாட் என அறிஞர்களின் ஆய்வுகளை முன் வைக்கிறார்.

இஸ்லாம் நவீன காலத்தின் சவால்களை எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதை முன்னிறுத்தி சமூகம், சமநீதி, பன்மைப் பண்பாட்டுச் சமூகத்தில் சிறுபான்மையினரின் அடையாளம் என்பதான கருத்தாக்கங்களை இஸ்லாத்தின் பிரச்சினைகள்- மறுபார்வை என்ற நூலில் வெளிப்படுத்துகிறார்.

1988-இல் வெளிவந்த Rethinking issues in Islam நூல் அடையாளம் பதிப்பகத்தால் 2003-இல் வெளி யிடப்பட்டுள்ளது. இந்நூலைத் தமிழில் சு. கிருஷ்ண மூர்த்தி, சிங்கராயர் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.

1980 - 2000 காலத்திற்கிடையே வெளிவந்த நூல்கள் இந்தியச் சூழலில் வகுப்புவாதத்தின் அபாயங் களை விமர்சனபூர்வமாக தெளிவுபடுத்துவதாகவும் இருந்தன. (Communalism in India- Communalism and communal violence in India 1989. etc) இன்னொரு நிலையில் வெளிவந்துள்ள நூல்கள் இஸ்லாத்தின் தோற்றக்கால வரலாற்று எழுத்தியலையும், இஸ்லாமிய அரசு என்பதன் வெளிப்பாடுகளையும், ஷாபானு ஜீவனாம்ச பிரச்சினை, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் (Islamic State, The Shabanu controvercy) குறித்த விரிவாக்கங்களாகவும் வெளிப்பட்டிருந்தன. 

இரண்டாயிரத்துக்குப் பிறகு வெளிவந்த நூல்களில் சமகால உலகில் இஸ்லாமியம் எவ்வகை யான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பின்னை நவீன உலகில் இஸ்லாத்தின் நிலை உள்ளிட்டவை குறித்தும் பேசியது.

The allure of Sufism (september 2012) என்ற தனது கட்டுரையில் சூபிகளை இறைக்காதலர்கள் என்று வருணிக்கிறார். சூபிகளின் எழுத்து, செயல் அனைத்துமே இந்த இறைக்காதலையும் உலகளாவிய மனிதகுலத்தின் மீதான காதலையும் வெளிப்படுத்துவதாக மதிப்பிடு கிறார். வஹ்தத்துல் உஜுத் கோட்பாடு மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வாகக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்துவிடுவதாகவும் இதற்கு சூபிகள் முன்வைத்த அன்புவழி முக்கிய பங்காற்றுவதையும், இப்னு அறபி, மவ்லானா ரூமியின் வாயிலாகவும் முன்நிறுத்துகிறார்.

அஸ்கர் அலி எஞ்சினியர், தாவூதி போரா சமூகத்தின் மரபில் வளர்ந்தவர். முஸ்லிம் சமூகத்திற் குள்ளும், போரா சமூகத்தினுள்ளும் சீர்திருத்தச் செயல்பாடுகளை முன்வைத்தார். தாவூதி போரா மதகுரு சையதுனாவை இளம் பிராயத்தில் சஜ்தா செய்து வணங்க மறுத்ததால் தண்டனைக்கு ஆளா கினார். சையதினாவிற்கு செலுத்தவேண்டிய வரிப் பணத்தைக் கொடுக்க மறுத்தது, முஸ்லிம் பெண் சுன்னத்து நடவடிக்கைகளை எதிர்த்தது, முஸ்லிம் பெண்களுக்கான சமநீதிக் கோட்பாட்டை வலியுறுத்தியது அஸ்கர் அலி எஞ்சினியரை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியது. இதற்காக அவர் முஸ்லிம் போரா சமூகத்திலிருந்து விலக்கம் செய்யப்பட்டார். அஸ்கர் அலி எஞ்சினியருக்கு எதிரான வன்முறையை அவ்வப்போது சையதினா ஆதர வாளர்கள் நிகழ்த்தினர்.

சக எழுத்தாளர் ஸீனத் இது பற்றிக் குறிப்பிடும் போது அஸ்கர் அலி எஞ்சினியரின் பெற்றோர் இறந்தபோது அவர்களது உடல் மையவாடியில் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டது. இப்பிரச்சினைகளின் காரணமாக மூன்றுநாட்களாக உடல் அடக்கம் செய்யப்படாமலே இருந்தது. சமய அடிப்படையில் இத்தகைய பெருந்துன்புறுத்தலுக்கும் ஆளாகி உள்ளார்.

முற்போக்கு தாவூதி போரா இயக்கத்தின் தலைவராகப் பின்னர் செயல்பட்ட அஸ்கர் அலி எஞ்சினியர் வகுப்புவாதத்திற்கு எதிரான செயல் பாட்டை முன்வைத்தார். இந்து- முஸ்லிம் கல வரங்கள் சமூகச் சீர்குலைவை ஏற்படுத்தியபோது சமூக சமய ஒற்றுமைக்கான இயக்கத்தையும் ஆரம்பித்தார். 1993-இல் உருவான (Center for Study of society & Secularism) ஆய்வுநிறுவனத்தின் செயல் பாட்டைச் சொல்லலாம். சமூக அமைதியை லட்சிய மாகக் கொண்ட பயணமாகவே இது நிகழ்ந்தது. 

குஜ்ராத் தேர்தலில் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க தாவூத் போரா சமூகத்தின் தலைமைக் குரு சையதினா முகமது புர்கானுத்தீன் முடிவெடுத்தபோது அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்கர் அலி எஞ்சினியர் கண்டனம் தெரிவித்தார்.

நினைத்த நேரத்தில் வாய்மொழியாகக் கணவன் தன் மனைவியை தலாக் - விவாகரத்து செய்வதும், ஒரே நேரத்தில் மூன்றுமுறை முத்தலாக் சொல்லு வதையும் குரானில் சொல்லப்படாத நடைமுறைகளாகும். enavee- இதனை முஸ்லிம் குடும்பச் சட்டத்தில் நீக்க வேண்டும் என்றார். இஸ்லாத்தில் பலதாரமணம் சில தவிர்க்க இயலாக் குறிப்பிட்ட கலாச்சார சூழல்களில் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது என்றும் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் நோக்கத்தில் சக எழுத்தாளர் ஸீனத்தோடு இணைந்து பணி புரிந்துகொண்டிருந்தார். இறக்கும் தறுவாயிலும் அஸ்கர் அலி எஞ்சினி யரின் போராட்டம் தொடர்ந்திருக்கிறது.

Pin It