மே 27, 2019 மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற இறுதி ஆண்டு மாணவியை, "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட்டு 10-12 பேர் கொண்ட இந்துத்வா தீவிரவாதிகள் தொந்தரவு செய்தனர்.

"இரவு 10 மணியளவில் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது, சாலையில் நிற்கும் அந்த இந்துத்வா குழு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எங்களைப் பார்த்து கத்தியபடி, கால்களைத் தூக்கி, எங்களை உதைத்து விடுவது போல காட்டினார்கள். நாங்கள் உடனடியாக எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடினோம்.

நான் ஒரு ஹிஜாப் அணிந்த முஸ்லீம், நான் எப்போதும் இதனை அணிகின்றேன்.

இதுவரை இதுபோல ஒரு துன்புறுத்தலை, அச்சுறுத்தலை என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. தெருவில் எங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை. இப்படித்தான் பயந்தபடி நாங்கள் வாழ வேண்டுமா?"

ஆம் மோடியின் நவீன இந்தியா அப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது.

இந்தியர்கள் தாக்கப்படுகின்றார்கள் என்று மோடியின் ஆலோசனைப்படி , மேகமூட்டமாய் இருக்கும் சமயத்தில் பாகிஸ்தான் சென்று தாக்கினார்கள் நமது வீரர்கள் என்று பெருமை கொள்ளும் மோடி,

இந்தியாவுக்குள்ளேயே தாக்கப்படும்- அச்சுறுத்தப்படும் இந்தியர்களைப் பாதுகாக்க, சங்பரிவாரங்கள் மீதும், இந்துத்வா தீவிரவாதிகள் மீதும், ஆர் எஸ் எஸ் அமைப்புகள் மீதும் மேக மூட்ட சமயத்தில், கடுமையான தாக்குதல் நடத்துவாரா?

எல்லாருக்குமான நம்பிக்கையாக இருக்கவேண்டும் என்கிற வெற்றுப் பேச்சு மட்டும் போதுமா? செயலில் இறங்குவாரா பிரதமர்? அல்லது "எல்லாருக்குமான நம்பிக்கை" என்கிற அவரது பேச்சு, சிறுபான்மையினரைத் தாக்குவதற்கான வேறு ஏதேனும் மாற்றுக் குறியீடா?

***

மே 28, 2019 உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் அஃப்ரோஸை அவனது தாயார் கடுமையான காய்ச்சல் காரணமாக அட்மிட் செய்ய வந்தபொழுது, மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும், லக்னோவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் பரிந்துரைத்திருக்கின்றார்கள்.

afroz death"கையில் உள்ள பணத்தை எல்லாம் தருகிறேன், என் மகனைக் காப்பாற்றுங்கள் என்று கதறினோம். ஆனால் அங்கு 3 ஆம்புலன்சுகள் இருந்தும் அவர்கள் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டார்கள். என்ன காரணமென்று தெரியவில்லை. நாங்கள் எங்களது மகனை சுமந்துகொண்டே செல்கின்ற வழியில், எனது மடியிலேயே அவன் இறந்துவிட்டான்" என்று அப்ரோஸின் தாயார் கதறியபடி கூறினார்.

வயிற்றில் பிறப்பு, தோளில் மரணம் - என்ன பாவம் செய்தார்கள் இந்தியாவில் முஸ்லிமாய் பிறந்ததைத் தவிர?

ஏழைத்தாயின் மகன் என்று சொல்லித் திரிகிற மோடிக்கு, இது நிச்சயமாய் தெரிந்திருக்கும், "ஏன் இந்த ஏழைத்தாயின் மகன் அஃப்ரோசுக்கு ஆம்புலன்ஸ்கள் மறுக்கப்பட்டன" என்று.

மருத்துவர்கள் அலட்சியமாய் கூறுகின்றார்கள் "அவர்கள் 8.10க்கு வந்தார்கள். நாங்கள் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லிவிட்டோம். அவர்கள் நாங்கள் எங்களது பையனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வோம் என்று ஏளனமாய் கூறிவிட்டுச் சென்றார்கள். ஆனால் பையன் இறந்து விட்டான். அவர்கள் திரும்பி வரவேயில்லை"

எவ்வளவு அலட்சியம்? அரசாங்கத்திற்கு சேவை செய்வதாய் சொல்லிக்கொண்டு மனித உயிரோடு எப்படி விளையாடி இருக்கின்றார்கள்?

வடநாட்டு மக்களை வளர்ச்சி என்று எப்படி ஏமாற்றியிருக்கின்றது இந்த பாஜக அரசு. ஒரு காய்ச்சலுக்குக் கூட சரியான சிகிச்சை அளிக்க முடியாத மருத்துவமனை எதற்காக? உயரமான சிலைகளுக்கும், மாடுகளுக்கும், மக்கள் பணத்தை செலவழித்துவிட்டு, மக்களின் உயிரோடும் அறிவின்மையோடும், போலியான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு.

அந்தக் குடும்பம் இஸ்லாமியக் குடும்பம் என்பதாலா? அவர்கள் இந்த மண்ணில் மற்ற மனிதர்களைப் போல வாழ முடியாதா?

இதே உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில்தான், இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த அஸ்பகுல்லா கான் என்கிற சுதந்திரப் போராட்ட வீரர் 1925 ஆகஸ்ட் 9ம் தேதி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயுதம் வாங்குவதற்காக, லக்னோவுக்கு அருகே சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரயிலை மறித்து, அதிலுள்ள பணத்தை எடுத்து, சுதந்திரப் போரட்டத்தின் செலவுகளுக்காக ஆயுதம் வாங்குவதற்காக சுதந்திரப் போரட்டத்திற்கு உண்டான விதையை இதே ஷாஜஹான்பூரில் இருந்துதான் துவங்கியிருக்கின்றார்.

முஸ்லிம் என்பதற்காக ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட இதே மண்ணில்தான், 1927 டிசம்பர் 19ம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த முஸ்லிம் அஸ்பகுல்லா கானைத் தூக்கிலிட்டுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் என்பதற்காக தூக்கிடப்படவில்லை. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவன் என்பதால் தூக்கிலிடப்பட்டிருக்கின்றான்.

இப்படி தேசத்திற்காகப் போராடி , செத்துப்போனவர்களின் மண்ணில் ஏன் இந்தப் பிரிவினைவாதம்? தூக்கிலிடப்படுவதற்கு முன் அஸ்பகுல்லா கான் நினைத்திருப்பான், அந்த உயிர் எல்லாருக்குமான விடுதலை வேட்கை என்று. இந்த தேசம் எல்லாருக்குமானதாயிருக்குமென்றுதான் அவன் செத்துப் போயிருப்பான்.

- ரசிகவ் ஞானியார்

Pin It