ஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப் படுத்திவிட முடியாது. தனி ஒருவரோ, ஒரு கும்பலோ அல்லது தூக்குத் தண்டனை என்ற பெயரால் அரசோ ஒருவரின் உயிரைப் பறிப்பது மானுட உரிமைக்கு எதிரானது. நாகரிகச் சமூகத்தின் சனநாயக நெறி முறைக்கு முரணானது. எனவேதான் தன்னுடைய நூறாவது அகவையிலும் மரண தண்டனை ஒழிப்புக் காகப் பாடுபட்ட, உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், “நீதிமன்றம் விதித்தத் தண்ட னையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது” என்று ஒவ்வொருவரு டைய மனசாட்சியையும் உலுக்கும் வகையில் உரைத் தார்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள மரணதண்டனை அளிப்பதற்கான விதியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று மனித உரிமை இயக்கங்களும், சனநாயகக் காப்பு அமைப்பு களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் வலிமையான கருத்துப் பரப்பல்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். உலகில் 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. 39 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை என்பது இருக்கிறது. இந்த 39 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவிலும் மரண தண்டனையை ஒழிப்பதற் கான உந்து விசையாக 30.8.2015 அன்று, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் உள்ள அஜித் பிரகாஷ் ஷா (ஏ.பி. ஷா) தலைமையிலான குழு, நடுவண் அரசிடம் அளித்துள்ள அறிக்கை அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், “இந்தியாவில் மரண தண்டனை தேவையா? இல்லையா?” என்பது குறித்து ஆராய, சட்ட ஆணையம், ஏ.பி. ஷா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இதே சட்ட ஆணையம் 1962இல் அளித்த அறிக் கையில் மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்று கருத்துரைத்தது. “பச்சன்சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு” வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதி களைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அளித்த தீர்ப்பில், ‘அரிதினும் அரிதான’ (rarest of the rare) குற்ற வழக்குகளில் மட்டும் மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டது.

‘அரிதினும் அரிதான’ என்பதற்கு இன்றுவரை, திட்டவட்டமான - தெளிவான வரையறை வகுக்கப்படவில்லை. அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள படி, “நீதிபதி அளிக்கும் விளக்கத்தையும், அவருடைய மனப்போக்கையும்” சார்ந்ததாகவே மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. 30.8.15 அன்று சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், விசாரணை நீதிமன்றங்கள் விதித்த மரண தண்டனைகளில் 4.3 விழுக்காடு அளவிலான மரண தண்டனைகள் மட்டுமே உச்சநீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன; மற்றவைகளில் குற்றவாளிகள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ள னர்; அல்லது வாழ்நாள் தண்டனையாகவோ, அதற் கும் குறைவான தண்டனையாகவோ குறைக்கப்பட் டுள்ளது என்று விளக்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசிடம் சட்ட ஆணையம் 30.8.2015 அளித்த அறிக்கையில் உள்ள முதன்மையான பரிந் துரைகள் :

1. பயங்கரவாதம் தொடர்பான மற்றும் நாட்டுக்கு எதிரான போர் போன்ற குற்றச் செயல்கள் தவிர, மற்ற வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக் கக் கூடாது; 2. மரண தண்டனை, மற்றவர்களைக் கொடிய குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் என்பது ஒரு மாயை; 3. தண்டித்தல் என்பது பழிவாங்குதல் என்ற நிலைக்குத் தரந்தாழ்ந்துவிட இடந்தரக்கூடாது; 4. இந்தியக் குற்றவியல் சட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதால் பல தவறான தீர்ப்புகள் வழங்கப்படு கின்றன; 5. தண்டனை என்பது குற்றவாளி மனந் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பைத் தருவதாக இருக்க வேண்டும்; 6. மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது.

அரிதினும் அரிதான குற்றச் செயல் என்பதற் குத் திட்டவட்டமான வரையறை இல்லாமல் இருந்தது போலவே, பயங்கரவாதக் குற்றச் செயல் என்பதற்கும் உலக அளவில் திட்டவட்ட மான வரையறை இல்லை. 2002 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரக் கட்டடம் தகர்க்கப்பட்ட பின், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ், “அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப் பவர் என்று தனி ஒருவரையோ, ஒரு அமைப்பையோ, ஒரு நாட்டையோ அமெரிக்க அரசு சுட்டிக்காட்டினால், அவர் ஒரு பயங்கரவாதி” என்று அறிவித்தார். அதே போல, எந்தவொரு நாட்டின் அரசும், ஆளும் வர்க்க மும் யார் பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் உரிமையைப் பெற்றுள்ளனவா? இந்துத்துவப் பாசிசத் தலைமை, இந்தியாவில் இருக்கும் இசுலாமியர் அனை வரையுமே “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்துகிறது.

உச்சநீதிமன்றம்கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பதற்குப் பல தீர்ப்புகள் சான்றாக உள்ளன. சங் பரிவாரங்கள், “இந்தியா என்பது இந்துக்களின் தேசம்; எனவே இந்துக்களின் உணர்வுகளுக்கு - கலாச்சாரத் திற்கு மற்ற மதத்தவரும் மதிப்பளித்துப் போற்ற வேண் டும்” என்று கூறி, பெரும்பான்மைவாத பயங்கரவா தத்தைப் பரப்பி வருகின்றன. இதே மனப்போக்கில் தான், உச்சநீதிமன்றம், “இந்துத்துவா என்பது இந்தியர் அனைவரின் வாழ்க்கை நெறி” என்று வஞ்சகமான விளக்கமளித்தது. இந்தப் பெரும்பான்மைவாத அநீதிக்கு -பயங்கரவாதத்துக்கு உச்சநீதிமன்றம் ‘வெகுமக்களின் உணர்வு-விருப்பம்-மனசாட்சிக்கு மதிப்பளித்தல்’ (

the
conscience of the people)

) என்கிற முகமூடியை அணிவிக்கிறது.

பாக்கித்தானிலிருந்து கடல்வழியாகக் கள்ளத்தன மாக நுழைந்து, மும்பை நகரைத் தாக்கியவர்களில் உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கஷ்யாப்-2013 பிப்பிர வரியில், இறுதியாகத் தன் குடும்பத்தினரைச் சந்திப்பதற் கான உரிமையும் மறுக்கப்பட்டு இரகசியமாகத் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு-29.7.2015 அன்று நள்ளிரவில் நடந்த சனநாயகப் படுகொலை நாடகத்தின் இறுதிக் காட்சியில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிகார ஆணை யின்படி 30.7.2015 அன்று தூக்கிலிடப்பட்ட யாக்கூப் மேமன் ஆகியோரின் வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான காரணங்களுள் ஒன்றாக, “பொதுமக்களின் மனசாட்சி”யும் கூறப்பட்டது.

“வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே அச் சமூகத்தில் ஆளுமை செய்யும் கருத்துகளாக இருக்கின்றன” என்று காரல் மார்க்சு கூறியுள்ளார். இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் வர்க்கத்தின் அச்சாணி யாக இருந்துவரும் பார்ப்பனர்களே இன்றளவும் சமூகத்தில் கருத்துருவாக்கக் கர்த்தாக்களாக இருந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் உணர்வு-மனசாட்சி என்று ஆளும் வர்க்கத்தால் படம் பிடித்துக் காட்டப்படுவதெல்லாம் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு, மற்றும் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வைகளேயாகும்.

சுதந்தர இந்தியாவில் தூக்கிலிடப்பட் 10 பேரில் 9 பேர் கீழ்ச்சாதியினராகவோ, சிறுபான்மையினராகவோ உள்ளனர்.

2000 முதல் 2010 வரையிலான பத்து ஆண்டு களில் மட்டும் காவல்துறை அல்லது நீதித் துறையின் ‘காவல் விசாரணையில்’ 14,231 பேர் மாண்டனர். அதாவது ஒரு நாளைக்கு நான்கு விசாரணைக் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டு அரசால், கொல்லப்படுகின்றனர்.

பட்டியல் வகுப்பினராக, இவர்களில் கிட்டத்தட்ட-காவல்துறையால் எல்லோரும்  இசுலாமியர் களாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக, ஏழைகளாக இருப்பதால் இந்த உயிர்க் கொலைகளைப் பற்றியவற்றில் ஒரு சிலவே ஊடகங்களில் வெளிவருகின்றன. எனவே அரசும், அரசு நிருவாகமும் பயங்கரவாதிகளாக இருக் கும் நிலையில், பயங்கரவாதம் தொடர்பான குற்றங் களுக்கு மரண தண்டனை என்பது வெட்கக் கேடான தாகும். ஆகவே பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை என்பதை உடனடியாக நீக்குவது டன், மரண தண்டனைக்கான சட்டங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும்.

2000 முதல் 2015 வரையிலான காலத்தில், கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகளில் 95.7 விழுக்காடும், உச்ச நீதிமன்றத்தின் மரண தண்டனைத் தீர்ப்புகளில் 23.2 விழுக்காடும் பிழையானவை என்று உச்ச நீதிமன்றமே ஒத்துக்கொண்டுள்ளது (The Hindu, 1-9-15).

தண்டனையின் அளவு என்பது பெரும்பான்மை மக்களின் மனசாட்சி, பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றைப் பொருத்தே இருக்க வேண்டும் என்று உயர்நீதித்துறையே கூறுகின்ற அளவுக்கு இந்தியாவில் நீதித்துறையின் நடுவுநிலைமைத் தலைக்குப்புறக் கவிழ்ந்து கிடக்கிறது. இப்படிக் கூறுவதால் குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதன்று. அனைத்தையும் சீர்தூக்கிப் பார்ப்பதாக நீதி வழங்கல்முறை இருக்க வேண்டும்.

ஒரு பக்கச் சாய்வாக இருத்தல் கூடாது என்பதே நோக்கமாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்து-முசுலீம் தாக்குதல் கொலைகளில் இந்துத்துவச் சக்திகளுக்கும், பட்டியல் வகுப்பினர் மீதான தாக்குதல் களிலும்-படுகொலைகளிலும் ஆதிக்கச் சாதியினருக்கும் ஆதரவாகவே தீர்ப்புகள் அமைந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள பூதக்கண்ணாடியைக் கொண்டு தேடிப் பார்க்க வேண்டியதில்லை.

2015 சூலை 30 அன்று அவசர அவசரமாக யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்துச் சில செய்தி களைக் குறிப்பிட வேண்டியுள்ளது. 1993 மார்ச்சு மாதம் 12ஆம் நாள் மும்பை நகரில் பகல் பொழுதில் இரண்டு மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 11 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. மும்பை நகரமே அதிர்ச்சியில் உறைந்தது. 257 பேர் தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி மாண்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். துபாயிலிருந்த தாவூத் இப்ராகிமும் மும்பையில் இருந்த டைகர் மேமனும் சதித்திட்டம் தீட்டி இக்கொடிய தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

டைகர் மேமன் மும்பையில் பெரிய அளவில் கடத்தல் தொழில் செய்யும் தலைவனாக - நிழல் உலகத் ‘தாதா’ வாக  இருந்தார். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன். இவருடைய வங்கிக் கணக்கு மூலம் தொடர் குண்டு வெடிப்புக்கான பணப்பரிமாற்றம் நடைபெற்றது. எனவே யாகூப் மேமனும் இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டார்; அதனால் குண்டுவெடிப்பு நடந்த அன்று காலை டைகர் மேமன், யாகூப் மேனன் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பமும் துபாய்க்குச் சென்றுவிட்டனர். அதன்பின் பாக்கித்தானுக்குச் சென்றனர். தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும் ஏன் இத்தாக்குதலை நடத்தினர்?

1984இல் இந்திராகாந்தியின் படுகொலைக்குப்பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய சனதாக் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதன் விளைவாக இந்துத்துவ அரசியலை வெளிப்படையாகக் கொண்டு செல்வது என்று சங் பரிவாரங்கள் முடிவு செய்தன. “அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் இராமன் பிறந்தான்.

அங்கிருந்த இராமன் கோயிலைத் தரைமட்டமாக்கி விட்டு, பாபர் மசூதி கட்டினார். எனவே இப்போது பாபர் மசூதியை இடித்துவிட்டு இராமனுக்குக் கோயில் கட்டி, இந்துக்களின் மானத்தைக் காக்க வேண்டும்” என்று இந்தியா முழுவதும் வெறிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. 1992 திசம்பர் 6 அன்று பா.ச.க., ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் தலைவர்கள் முன்னிலையில் பாபர் மசூதி சங் பரி வாரத்தினரால் இடிக்கப்பட்டு, ‘இராம ஜென்ம பூமியில்’ ஒருகூடாரத்தில் இராமன் சிலை நாட்டப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து மும்பையில் முசுலீம்கள் கண்டனப் பேரணி நடத்தினர். எனவே சங்பரிவாரக் குண்டர்கள் 1992 திசம்பர் மற்றும் 1993 சனவரியில் முசுலீம்களைக் குறிவைத்துத் தாக்கினர். 300க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப் பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணமானவர்களில் இதுவரை ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை.

அதே போல் மும்பையில் முசுலீம்களைக் கொன்று குவித்த தற்குக் காரணமானவர்கள் மீது மராட்டிய அரசு நட வடிக்கை எடுக்கவில்லை. மும்பையில் முசுலீம்கள் தாக்கப்பட்ட போது கராச்சியிலும் துபாயிலும் என வாழ்ந்து கொண்டிருந்த - மும்பையில் பிறந்து வளர்ந்த தாவூத் இப்ராகிம், மும்பையில் தாதாவாக - கடத்தல் மன்னனாக இருந்த டைகர் மேமன் துணையுடன், இசுலாமியர் மீதான தாக்குதலுக்குப் பழிக்குப்பழி நடவடிக்கையாக, 1993 மார்ச்சு 12 அன்று தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினார். இத்தாக்குதலுக்கு பாக்கித்தான் அரசும், உளவுத் துறையும் அனைத்து உதவிகளையும் செய்தன.

எனவே முதன்மையான குற்றவாளிகள் பாக்கித் தான் உளவுத் துறையும் இப்ராகிம் தாவூதும், டைகர் மேமனும் ஆவர். இவர்கள் இருவரும் பாக்கித்தானில் இருக்கின்றனர். யாகூப் மேனன், தன் அண்ணன் டைகர் மேமனின் மற்றும் பாக்கித்தான் உளவுத் துறை யின் செயல்பாடுகளை வெறுத்து இந்தியாவுக்குத் திரும்பினார்.

தன் பெற்றோரையும், குடும்பத்தினரையும் இந்தியாவுக்குத் திரும்புமாறு செய்தார். யாகூப் மேனன் கைது செய்யப்பட்டார். தான் நேரடியாகக் குண்டுவெடிப்பில் ஈடுபடவில்லை என்பதால் தனக்குக் குறைந்த அளவிலான தண்டனை மட்டுமே கிடைக்கும் என்று மனமார நம்பினார். அந்த நம்பிக்கையில் புலனாய்வுத் துறையிடம் பாக்கித்தான் உளவுத் துறை யின் செயல்பாடுகள் குறித்த வலிமையான ஆதாரங் களை காவல்துறை அளித்தார்.

“நீ உன்னைக் காந்தி யாக நினைத்துக் கொண்டு இந்தியாவுக்குச் செல்ல நினைக்கிறாய்; ஆனால் அங்கு நீ கோட்சேவாகக் கருதப்பட்டுத் தூக்கிலிடப்படுவாய்” என்று தன் அண்ணன் டைகர் மேமன் விடுத்த எச்சரிக்கையைப் புறந்தள்ளி விட்டு, இந்தியாவுக்குத் திரும்பிய யாகூப் மேமனுக்கு - 21 ஆண்டுகள் சிறையில் கழித்தபின், இந்திய இந்துத் துவ அரசு அவருக்குத் தூக்குக் கயிற்றைப் பரிசாக அளித்தது.

யாகூப் மேமன் குற்றமற்றவர் என்பது அல்ல நமது வாதம். தண்டனைக்குரியவர்தான் - ஆனால் தூக்குத் தண்டனைக்குரியவர் அல்லர் என்று கருதுகிறோம். இந்தியாவில் 1947க்குப் பின் இசுலாமிய தீவிரவாதத்துக்கு வித்திட்ட-பாபர் மசூதியை தகர்ப்பதற்குத் தளபதியாக விளங்கிய எல்.கே. அத்வானிக்கு வாஜ்பாய் ஆட்சியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. பாபர் மசூதியை இடித்ததற்காக இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. மும்பையில் 1993 சனவரியில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்து விசாரித்த ஸ்ரீ கிருஷ்ணா குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என்று சுட்டிக்காட் டப்பட்டவர்கள் ஒருவரும் கைது கூடச் செய்யப் படவில்லை.

இந்துத்துவச் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டதாக இந்திய நிர்வாகத் துறையும், உயர்நீதித்துறையும் இருப்பதால் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்பதே சனநாயகச் சக்திகளின் மனக்குமுறலாகும்.

மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என்பதைப் போலவே, இசுலாமிய தீவிர வாதத்திற்கு ஊற்றுக்கண்ணாக உள்ள இந்துத்துவப் பாசிசப் போக்கையும் அடியோடு தகர்க்க வேண்டும். 2002இல் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பைக் காரண மாகக் காட்டி, குசராத்தில், மோடி ஆட்சியில் முசுலீம்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. “ஒவ் வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு” என் கிற நியூட்டனின் விதியை மேற்கோள்காட்டி, முதல மைச்சராக இருந்த நரேந்திர மோடி, முசுலீம்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தினார். இத்தாக்குதலை நடத்தியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

தனிப்பெரும்பான்மையுடன் தலைமை அமைச்சராக நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்தபின், நாள்தோறும் சங்பரிவாரங்கள் இந்துத்துவப் பாசிச நச்சுக்கருத்துகளை உமிழ்ந்து வருகின்றன. இந்தியாவில் இனியும் இந்து-முசுலீம் மோதல் என்கிற பெயரால் குருதி சிந்தாமல் தடுக்க முதலில் இந்துத்துவப் பாசிசத்தின் குரல் வளையை நெரிக்க வேண்டும்.

பாக்கித்தானியரான அஜ்மல் கஷ்யாப்பைத் தூக்கில் போட்டு விட்டதால், பாக்கித்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது நின்றுவிட்டதா? உண்மை என்னவெனில் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் மட்டும் நடந்த தாக்குதல் கள் இராஜஸ்தான் எல்லைக்குப் பரவியிருக்கின்றன. பாக்கித்தானும் இந்தியாவும் முறையே இஸ்லாத் தையும், இந்து மதத்தையும் அரசியலாக்குவது தான் இதற்குக் காரணம்.

தாக்குதல்களின் எண்ணிக் கையும் அதிகமாகிவிட்டன. மரணபயம் என்பது எந்த வொரு பயங்கரவாதிக்கும் இருப்பதில்லை என்பதால் மரண தண்டனை மூலம் பயங்கரவாதத்தை ஒழித்து விட நினைப்பது வெறும் பகற்கனவே! பயங்கரவாதி களாவதற்கான சூழல் உருவாகாமல் தடுக்க வேண்டியதே எல்லோரும் செய்ய வேண்டிய பணியாகும்.

ஏ.பி. ஷா தலைமையிலான சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, தூக்குத் தண்டனையை அடியோடு நீக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிட-குற்றவியல் சட்டம், குற்றத் தண்டனைச் சட்டங்களைத் திருத்திட காங்கிரசுக் கட்சிக்கும், பாரதிய சனதாக் கட்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் மூலம் நெருக்குதல் தருவோம்! மரண தண்டனை யை ஒழிக்கும் வரை ஓயாது போராடுவோம்!

Pin It