1953-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆன 91 வயது ஹர்மந்தர்சிங் உள்ளிட்ட ஓய்வு பெற்ற 65 மூத்த அதிகாரிகள் எழுதிய திறந்த மடல் இது.
நாங்கள் அனைவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள். அகில இந்திய மத்திய பணிகளில் பல்வேறு காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரு குழு என்ற முறையில் எங்களுக்கு எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறோம். ஆனால் சார்பின்மை, நடுநிலை, அரசியலமைப்பின் மீது மாறாப்பற்று ஆகியவற்றை எங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கவலையளிக்கும் செயல்களே எங்களை எழுதத் தூண்டியது.
இந்திய அரசியல் தளத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஏற்றுக் கொள்ள முடியாத தவறான நிகழ்வுகளைப் பற்றியதே இந்த திறந்த மடல். ஏன் இப்படி தவறாய் நடக்கிறது; குறிப்பாக இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்டு மதவெறுப்பு வளர்க்கப்படுவது அதிகரித்திருப்பதாய் தோன்றுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதவெறியைத் தூண்டும் வகையில் வெளிப்படையாக இடுகாட்டிற்கும், சுடுகாட்டிற்கும் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டு பேசப்பட்டது. வெவ்வேறு மதவிழாக்களுக்கு சமமாகத்தான் மின்சாரம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
மதச்சிறுபான்மையினரைக் குறி வைத்து இறைச்சிக்கூடங்கள் தடை செய்யப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது.
வீட்டில் மாட்டிறைச்சி இருந்தது என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு அக்லாக் கொல்லப்படுகிறார். ஒரு பெஹ்லூகான், இரண்டு பசுக்களை தன் ஊருக்கு கொண்டு சென்ற போது, தேவையான ஆவணங்களை தன்னிடம் வைத்திருந்தும், நடுத்தெருவில் அடித்தே கொல்லப்படுகிறார். ஜம்மு -காஷ்மீரில் நாடோடிகளாக கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லும்போது தாக்கப்படுகிறார்கள். சட்டம் பற்றிய கவலையின்றி ‘பசுக் காவலர்கள்’ செயல்படுகிறார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதியும் கொடூரம் நிகழ்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக தங்களைச் சட்டத்தின் பாதுகாவலர்களாக பாவிப்பவர்கள் தாங்களே காவலர்களாகவும், நீதிபதிகளாகவும், தண்டனையை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுகிறார்கள்.
சட்டத்தைத் தங்கள் கையிலெடுத்துக் கொண்டுள்ள ரோமியோ எதிர்ப்பு குழுக்களால் ஆண்-பெண் இணைந்து வெளியே சென்றால் - காதலனுடன் கைகோர்த்துச் சென்றால் பயமுறுத்தப்படுகிறார்கள். இந்து - முஸ்லிம் உறவுகள் அல்லது திருமணத்தை தடுக்கும் மிரட்டல்களே இவை.
சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் ஆகியவை பற்றி கேள்வி எழுப்பினாலே தங்களை சங்கடப்படுத்துவதாக கருதி அரசின் உதவியுடன் நிர்வாகங்கள் இத்தகைய தாக்குதலைத் தொடுக்கின்றன. ஜோத்பூரில் திட்டமிடப்பட்ட கல்வி குறித்த ஒரு துறை வல்லுநரின் நிகழ்ச்சி நிர்ப்பந்தத்தால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார். ஜோத்பூரில் நடந்தது போலவே வேறு பல இடங்களிலும் நடந்திருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கூட விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் இரத்த நாளம் போன்றவை. அவை நெறிக்கப்படுகின்றன. ஏற்க மறுப்பதும் மாற்றுக்கருத்தும் தேச விரோதமாகவும் தேசத்துரோகமாகவும் கருதப்படுகிறது.
பல புகழ் வாய்ந்த தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் சமூக இயக்கங்களும் சட்டத்தை மீறியதாக வழக்குகள் புனையப்படுகின்றன. ஆனால் நாங்கள் அறிந்தவரை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலையெடுத்தார்கள்; தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தார்கள் அல்லது அரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதற்காகவே வழக்கை எதிர்கொள்கிறார்கள்.
ஆதிக்க கருத்தியலோடு ஒத்துப்போக மறுக்கிறார்கள் என்பதற்காகவே செயல்பாட்டாளர்கள், பத்திரிகை யாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தேடித்தேடி அவமானப்படுத்தப்படுகிற, மிரட்டப்படுகிற, சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டலுக்கு உள்ளாகிற அருவருக்கத்தக்க போக்கை காணமுடிகிறது. இது கருத்துச்சுதந்திரத்தோடு பொருந்திப் போவதுதானா? அடாவடி தேசியவாதம் வளர்ந்து வருகிறது. தேசபக்தன் தேசவிரோதி என்பதாக எல்லாவித விமர்சனங்களையும் சுருக்கி விடுகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தோடு இல்லையென்றால் தேசவிரோதி என்கிறது.
பொது அதிகாரத்தில் உள்ளோர், பொதுநிறுவனங்கள், அரசியலமைப்பு நிறுவனங்கள் அனைவரிடமும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். கவலையளித்திடும் இந்த போக்குகளை கவனியுங்கள், அதை சரிப்படுத்துங்கள். நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்களின் நோக்கத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் ஆன்மாவை மீட்டெடுங்கள்; பாதுகாத்திடுங்கள்!
‘தி வயர்’ இணைய இதழ்