காவிரிநதியின் வரலாறு:

காவிரி நதி, கர்நாடக மாநிலத்தில், கூர்க் மாவட்டத்தில், பாகமண்டல் என்ற பகுதியில் உற்பத்தியாகிறது. இந்தப் பாகமண்டல், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து, 4,400 அடி உயரத்தில் உள்ளதாகும். இதன்கண், 31 ஆயிரம் சதுரமைல் பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த இடத்தில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென் மேற்குப் பருவமழையால், 100 அங்குலம் முதல் 250 அங்குலம் வரையில் மழைநீர் கிடைக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையால், 50 அங்குலம் மழை கிடைக்கிறது.

காவிரிநதியின் பயணதூரம்:

காவிரிநதியின் மொத்த நீளம் 802 கிலோ மீட்டராகும். இதில், காவிரி நதி கர்நாடக மாநிலத்தில் 381 கிலோ மீட்டர் தூரமும், தமிழ்நாட்டில் 421 கிலோ மீட்டர் தூரமும் ஓடுகிறது. காவிரிநதி, மைசூர், கொள்ளேகால், மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், பூம்புகார் (காவிரிப் பூம்பட்டினம்) வழியாக, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

காவிரிநதியின் உபநிதிகள்:

கர்நாடக மாநிலத்தில் உள்ளவை:

1. ஹேமாவதி; 2. ஹேகஸ்கி; 3. அரக்காவதி; 4. லட்சுமணதீர்த்தம் ஆகியன.

தமிழ்நாட்டில் உள்ளவை:

1. பவானி; 2. நொய்யல்; 3. அமராவதி ஆகியன.

காவிரிநதியின் குறுக்கே உள்ள அணைகள்:

1. கிருஷ்ணராஜசாகர்; 2. கபினி அணை; 3. ஹேமாவதி; 4. ஹேரங்கி; 5. மேட்டூர் அணை; 6. மேலணை; 7. கல்லணை; 8. கீழணை ஆகியன காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளாகும். இந்த அணைகளில், 1. கிருஷ்ணராஜ சாகர், 2. கபினி அணை; 3. ஹேமாவதி; 4. ஹேரங்கி ஆகிய அணைகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன.

1. மேட்டூர் அணை; 2. மேலணை; 3. கல்லணை; 4. கீழணை ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.

அணைகளின் கொள்ளளவு:

1.     கிருஷ்ணராஜ சாகர், 45 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

2.     கபினி அணை, 19 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

3.     ஹேமாவதி அணை, 34 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

4.     ஹேரங்கி அணை, 6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

5.     மேட்டூர் அணை, 93.50 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

மேட்டூர் அணை வரலாறு:

1924-ஆம் ஆண்டு, அப்போதைய மைசூர் அரசாங்கத்திற்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணையின் கட்டுமானப் பணி 1925-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி, 1934-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21-ஆம் தேதி முடிவுற்றது. அப்போதைய நிலையில் இந்த அணையைக் கட்டுவதற்கு ஏற்பட்ட செலவு ரூ 4 கோடியே 80 இலட்சமாகும். மேட்டூர் அணையை அப்போதைய சென்னை மாகாணத்தின் ஆளுநர், ஜார்ஜ் பிரிட்டரிக் ஸ்டான்லி திறந்து வைத்தார். அவருடைய நினைவாக, மேட்டூர் அணை, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றழைக்கப்படுகிறது.

சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. முன்பு இந்த அணையினால், தமிழ்நாட்டில் 20 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. அதாவது, திருச்சி மாவட்டத்தில் 2.74 இலட்சம் ஏக்கரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12.05 இலட்சம் ஏக்கரும், சேலம் மாவட்டத்தில் 4.66 ஏக்கரும் புதுக்கோட்டை, தென்னார்க்காடு மாவட்டத்தில் 2.70 இலட்சம் ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் மொத்த சாகுபடியே 16 இலட்சம் ஏக்கரில்தான் செய்யப்படுகின்றன. அதில் குறுவை 4 இலட்சம் ஏக்கரிலும், சம்பா 12 இலட்சம் ஏக்கரிலும் செய்யப்படுகின்றன.

Pin It