தமிழிலக்கியத்தில் கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் நட்பு ஓர் இலக்கிய சாட்சி என்றால், உலக இலக்கியத்தில் பிரான்ஸ் காஃப்கா மற்றும் மேக்ஸ் ப்ரோட் –இருவருக்குமான நட்பு என்பது உலகிற்கே எடுத்துக்காட்டான ஒன்று. ஒரு சிறந்த நட்பு என்ன செய்யும், என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையின் இறுதியில் அறிந்து கொள்ள முடியும்.

ஐரோப்பிய இலக்கிய வரலாற்றில், பிரான்ஸ் காஃப்கா என்ற பெயர் தனிமையும் துயரமும் நிறைந்த ஓர் உலகத்தை நினைவூட்டுகிறது. மனித மனத்தின் இருண்மைகளை அவரைப் போல படைப்புகளாக எழுதியவர் எவரும் இல்லை. இலக்கியம் என்பது மனித மனத்தை உற்சாகமாகவும் அழகியல் நுண்ணுணர்வு மிக்கதாகவும் மாற்ற வேண்டும் என்ற கருத்தாக்கம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதறடிக்கப்பட்டது. ஐரோப்பாவில் வல்லாதிக்கப் பேரரசுகளின் உருவாக்கமும், அதனால் ஏற்பட்ட முதல் உலகப் போரும் எளிய மனிதர்களின் வாழ்வைச் சிதைத்தன. அமைதியான எதார்த்த வாழ்க்கை குரூரமான ஒன்றாக மாறியது. வன்முறை, நோய், அச்சம் ஆகியவை மனிதர்களைச் சூழ்ந்தன.franz kafka and max brodஆனால் அக்கால இலக்கியப் படைப்புகள் இதற்குத் தலைகீழாக, அழகியல் ரசனைகளையும் அன்பு, கருணை போன்றவற்றையுமே உலகம் எனக் காட்டும் போலித்தனமான நாடகியங்களால் நிரம்பியிருந்தன.

இந்தச் சூழலில், மனிதர்களைப் பீடித்த நெருக்கடியையும் இருண்ட உலகையும் வெளிப்படுத்தும் புதிய எழுத்து நடை ஐரோப்பாவில் உருவாகத் தொடங்கியது. சிதைந்த வாழ்க்கையின் இருண்மையை வெளிக்கொணர்வதே உண்மையான படைப்பு என்ற அடிப்படையில் புதிய இலக்கிய வடிவம் உருவானது. பின்னர் அது இருத்தலியம் (Existentialism) என அழைக்கப்பட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என விரிவடைந்து உலகம் முழுவதும் பரவியது. இந்த இலக்கிய மரபின் ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் காஃப்கா.

காஃப்கா 1883 ஜூலை 3ஆம் தேதி பிரேக் (Prague) நகரில் பிறந்தார்.

அப்போது அந்த நகரம் ஆஸ்ட்ரோ - ஹங்கேரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.

அவர் ஒரு நடுத்தர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்தார். வீட்டில் ஜெர்மன் மொழி பேசப்பட்டது. ஆனால் சுற்றிலும் செக் மொழி மற்றும் யூதக் கலாசாரம் கலந்து இருந்ததால், சிறு வயதிலிருந்தே “நான் யாருக்குச் சொந்தமானவன்?” என்ற அந்நிய உணர்வு அவருள் உருவாகியது.

காஃப்காவின் தந்தை ஹெர்மண் காஃப்கா (Hermann Kafka) ஒரு வியாபாரி. மிகக் கடுமையான, அதிகார மனப்பான்மை கொண்ட மனிதர். ஏழ்மையிலிருந்து உழைத்து முன்னேறியதால், வாழ்க்கையை வெற்றியும் கட்டுப்பாடும் மூலமாக மட்டுமே பார்த்தார்.

அவருக்கு, காஃப்காவின் மென்மையான குணம் பிடிக்காது. காஃப்கா தனது தந்தையைப் பற்றி பின்னர் “Letter to His Father” என்ற நீண்ட கடிதம் எழுதினார். அதில், தந்தையின் கோபம், அவமதிப்பு, மன அழுத்தம், தன்னம்பிக்கையின்மை ஆகியவையெல்லாம் எப்படி தன்னை உடைத்தன என்பதை அவர் விவரிக்கிறார்.

காஃப்காவின் பல கதைகளில் வரும் பயமூட்டும் அதிகாரம், மனிதனை நசுக்கும் அமைப்பு, எப்போதும் குற்றவாளி போல உணரும் மனநிலை ஆகியவை எல்லாம் அவரது தந்தையுடன் இருந்த உறவின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகின்றன.

காஃப்காவுக்கு மொத்தம் ஐந்து உடன்பிறப்புகள் இருந்தனர்.ஜியோர்க் காஃப்கா, ஹெய்ன்ரிச் காஃப்கா ஆகிய இரு தம்பிகளும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.

இந்த மரணங்கள் குடும்பத்தில் ஒரு துக்க நிழலை ஏற்படுத்தின. அவருக்கு மூன்று சகோதரிகள் எல்லி (Gabriele Kafka), வல்லி (Valerie Kafka), ஒட்டிலி (Ottilie Kafka). இவர்களில் ஒட்டிலியுடன் காஃப்காவுக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது.

அவர்தான் காஃப்காவை உண்மையாகப் புரிந்துகொண்ட ஒரே குடும்ப உறுப்பினர் என சொல்லப்படுகிறது.

அவரது தாய் ஜூலி காஃப்கா (Julie Kafka) கல்வியறிவு கொண்ட அமைதியான பெண்.

காஃப்காவுக்கு அன்பாக இருந்தாலும், காஃப்கா பெரும்பாலும் தந்தையின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்தார்.

அவர் வீட்டிலும் கடையிலும் வேலை பார்த்ததால், காஃப்காவுடன் ஆழமான நெருக்கம் உருவாகவில்லை. இதனால் காஃப்கா சிறு வயதிலிருந்தே தனிமையாக உணர்ந்தார்.

இதன் விளைவாகத்தான், அவரது கதைகள் அனைத்தும் தனிமனித இருப்புக்கு எதிராகச் செயல்படும் அதிகார அமைப்புகளையும், மனிதன் சிக்கிக்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத கட்டமைப்புகளையும் பற்றியவையாக இருந்தன. நம்மைத் தெரியாமல் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தின் நுண்மையான வலைப்பின்னலை அவர் போல உருவகப்படுத்தி எழுதியவர் அரிது.

பள்ளிக் காலத்திலேயே காஃப்காவுக்கு வாசிப்பில் தீவிர ஆர்வம் உருவானது. ஜெர்மன் இலக்கியம், தத்துவம், நாடகம் போன்றவற்றை ஆர்வமாகப் படித்தார். நண்பர்கள் இருந்தாலும், அவர் பெரும்பாலும் தனியாகவே இருப்பதை விரும்பினார். கூட்டங்களில் கலந்துகொண்டாலும், அதிகம் பேசாமல் கவனித்துக் கொண்டிருப்பார்.

இளம் வயதில் அவரை மிகவும் பாதித்த விஷயம்: 'அந்நிய உணர்வு'.

அவர் வாழ்ந்த பிரேக் நகரில் செக் மக்கள், ஜெர்மன் மொழி பேசுவோர், யூதர்கள் எனப் பல அடையாளங்கள் கலந்திருந்தன.

இதனால் 'நான் யாருடைய உலகில் இருக்கிறேன்?' என்ற குழப்பம் அவருள் உருவானது. இந்த உணர்வே பின்னர் அவரது படைப்புகளின் மையமாக மாறியது.

இளம் வயதிலேயே காஃப்கா எழுதத் தொடங்கினார்.

ஆனால் அவர் தன் எழுத்துகளில் எப்போதும் திருப்தியடைவதில்லை; பலவற்றைக் கிழித்தெறிவார். தன் படைப்புகளை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது.

ஆனால் அன்றைய இலக்கிய உலகம் எதார்த்தமான கதைச் சொல்லிகளையே கொண்டாடிக் கொண்டிருந்தது. தன் படைப்புகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற அச்சம் காஃப்காவுக்கு இருந்தது. அக்காலத்தில் காபி ஹவுஸ்கள் இலக்கிய உலகின் கூடாரங்களாக இருந்தன. பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்த பல காபி ஹவுஸ்கள் இன்று கலாசார வரலாற்றின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. காபி ஹவுஸ்கள் என்பது வெறும் காபி குடிக்கும் இடங்களல்ல — எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள், அரசியல் விவாதக்காரர்கள் கூடும் இடங்களாக இருந்தன. காஃப்காவும் அந்தச் சூழலை விரும்பியவர்.

அவர் மிகவும் அமைதியான, உள்ளார்ந்த மனிதர் என்பதால் பெரும் கூட்டங்களில் கலந்துகொள்வதைவிட அமைதியாக அமர்ந்து கவனிப்பதையே விரும்பியதாக அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் அடிக்கடி சென்ற இடங்களில் ஒன்று, கஃபே லோரே (Café Louvre) என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற கஃபே.

அங்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் பெரும்பாலும் அமைதியாக அமர்ந்து கேட்பவராகவே இருந்தார்.

அவரது நெருங்கிய பெண் நண்பர்கள் இருவர் ஃபெலிஸ் பாயர் (Felice Bauer) மற்றும் மிலெனா ஜெஸென்ஸ்கா (Milena Jesenská).

இருவருமே வேறு வேறு காலங்களில் அவருடன் நெருக்கமாகப் பழகினர். இருவரின் மீதும் அவர் தீவிரமான காதல் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் என்ற உறவுக்குள் சிக்கிக்கொள்வதை அவர் விரும்பவில்லை.

திருமணம் அவரது எழுத்தை அழித்து விடுமோ என்ற அச்சம் அவரை தொடர்ந்து துரத்தியது. ஒருபுறம், அவர் தீவிரமாகக் காதலித்தார்; மறுபுறம் அந்த உறவிலிருந்து விலகி ஓடிக் கொண்டிருந்தார்.

ஃபெலிஸ் உடன் இரண்டு முறை நிச்சயதார்த்தம் நடந்தும் இரண்டும் முறிந்தன. காஃப்கா அவருக்கு கடைசி வரை ஒரு மர்மமான மனிதராகவே இருந்தார். ஃபெலிஸுக்குப் பிறகு காஃப்காவின் வாழ்க்கையில் வந்தவர் மிலெனா ஜெஸென்ஸ்கா. அவர் ஒரு செக் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். காஃப்காவின் படைப்புகளைச் செக் மொழிக்கு மொழிபெயர்த்தவர்.

அந்த இலக்கிய உறவு விரைவில் ஆழமான உணர்ச்சி உறவாக மாறியது. மிலெனாவிடம் காஃப்கா மிகவும் திறந்த மனதுடன் எழுதினார். அவரது பயம், உடல்நிலை, தனிமை, காதல் பற்றிய குழப்பங்கள் அனைத்தையும் அவர் மிலேனாவுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர்களுடைய கடிதங்கள் பின்னர் Letters to Milena என்ற பெயரில் வெளியாயின. உலக இலக்கியத்தின் மிக ஆழமான காதல் கடிதங்களில் இதுவும் ஒன்று என கருதப்படுகிறது.

மிலேனா காஃப்காவை வெறும் எழுத்தாளராக மட்டும் பார்க்கவில்லை; அவரது உடைந்த மனதையும் புரிந்துகொள்ள முயன்றார். ஆனால் இந்த உறவுக்கும் ஓர் எல்லை இருந்தது. மிலெனா ஏற்கெனவே திருமணமானவர். மேலும் காஃப்காவின் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டிருந்தது.

அவர்களுடைய காதல் தீவிரமான உணர்ச்சி அனுபவமாக இருந்தது; ஆனால் வாழ்வாக மாறவில்லை. காஃப்கா காதலை விரும்பினார். ஆனால் காதல் கொடுக்கும் பொறுப்பு, உடல் நெருக்கம், குடும்ப வாழ்க்கை ஆகியவை அவரைப் பதறச் செய்தன.

ஃபெலிஸ் அவருக்கு “வாழ்க்கை”யை நினைவூட்டினார்.

மிலெனா அவருக்கு “ஆன்மா”வை நினைவூட்டினார்.

இருவரையும் முழுமையாக அடைய முடியாமல் போனது போலவே, காஃப்கா தனது வாழ்க்கையையும் முழுமையாக அடைய முடியாமல் போனார்.

இதன் விளைவாக, அவரிடமிருந்து ஆகச்சிறந்த படைப்புகள் உருவாகத் தொடங்கின. அவர் எழுதிய The Castle, The Trial போன்ற நாவல்கள் மட்டுமல்லாமல் பல நுண்கதைகளையும் சிறுகதைகளையும் எழுதினார். அவற்றில் The Judgment மற்றும் The Metamorphosis போன்றவை இன்று உலக இலக்கியத்தின் சிகரங்கள் எனக் கருதப்படுகின்றன. ஆனால் காஃப்கா தனது வாழ்நாளில் இவை புத்தகமாக வெளியாகுவதையே விரும்பவில்லை. அவரது நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான மேக்ஸ் ப்ரோட் தான் காஃப்காவை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். 1924ஆம் ஆண்டு காசநோயால் காஃப்கா மரணமடைந்தார். மரணத்திற்கு முன் அவர் ப்ரோடுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்: “என் மரணத்திற்குப் பிறகு, என் அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் எரித்துவிடு.”ஆனால் ப்ரோடு அந்த வேண்டுகோளைப் புறக்கணித்தார். காஃப்காவின் படைப்புகளில் ஒரு பேராற்றலை அவர் உணர்ந்தார்.மேக்ஸ் ப்ரோட் மட்டும் இதைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று மனித மனத்தின் மகத்தான ஆவணங்கள் இலக்கிய உலகுக்குக் கிடைக்காமல் போயிருக்கும். காஃப்கா, ப்ரோடு ஆகிய இருவரும் பிரேக் நகரில் உள்ள ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தபோது சந்தித்தார்கள்.

1902 ஆம் ஆண்டு ஓர் இலக்கிய சொற்பொழிவில் ப்ரோடு முதன்முதலாக காஃப்காவை சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே காஃப்காவின் அறிவையும் சிந்தனையின் ஆழத்தையும் அவர் கவனித்தார். காஃப்கா மிகவும் அமைதியானவர்; கூட்டங்களில் அதிகம் பேசமாட்டார். ப்ரோட் மிகவும் வெளிப்படையான, உற்சாகமான மனிதர். இருவரும் குணாதிசயத்தில் நேர்மாறானவர்கள்: இந்த வேறுபாடே அவர்களின் நட்பை வலுப்படுத்தியது.

காஃப்காவின் அபாரமான ஆற்றலை ப்ரோட் ஆழமாக உணர்ந்தார். அதனால்தான் காஃப்கா சொன்னபடி அவரது படைப்புகளை எரித்துவிடாமல், அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்துத் தொகுத்து வெளியிட்டார். அப்போது அவரது நண்பர்களில் பலர் “இந்த நூல்கள் விற்பனையாகாது. நட்டமடைவாய்.” என்று எச்சரித்தனர். ஆனால் ப்ரோட் "நான் உணர்ந்த மேதமையை உலகமும் ஒருநாள் உணரும்.” என்ற நம்பிக்கையுடன் வெளியிட்டார். அதன்பிறகு வெளியான The Trial, The Castle, Amerika ஆகிய நூல்கள் உலக இலக்கியத்தின் திசையை மாற்றின.

இந்தப் புத்தகங்கள் வெளிவந்தபோது இலக்கிய உலகம் அதிர்ந்தது. காஃப்காவின் பாணி — உலகின் அபத்தத்தை சித்தரிக்கும் குரல், மனக்குழப்பத்திலிருந்து எழும் நுட்பமான நையாண்டி, கனவுபோன்ற சூழல் — அனைத்தும் வாசகர்களாலும் விமர்சகர்களாலும் வரவேற்கப்பட்டன. ஆல்பர்ட் கேமஸ் (Albert Camus), ஜீன் பால் சாத்ரே (Jean-Paul Sartre) உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் காஃப்காவின் படைப்புகளில் அபத்தத்தின் தத்துவத்தைக் கண்டனர்.

"காஃப்கா இல்லாமல் நவீன மனிதனைப் பற்றிய இலக்கியம் உருவாக முடியாது” என்று பலர் கூறினர். அப்படி பார்க்கையில், மேக்ஸ் ப்ரோட் தனது நண்பனின் இறுதி விருப்பத்தை மீறியிருந்தாலும், மனிதகுலம் முழுவதையும் செழிக்கச் செய்தார். காஃப்கா சொன்னது போல: “எழுத்து என்பது உறங்கிக் கொண்டிருக்கும் நகரில் தீயைப் பற்ற வைப்பது.”அப்படி தீயைப் பற்ற வைத்தது மேக்ஸ் ப்ரோட்தான். இன்று காஃப்கா உயிருடன் இல்லை. ஆனால் அவரது எழுத்துக்கள் இன்னும் — ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளே ஒளிந்திருக்கும் அச்சம், நம்பிக்கை, மற்றும் புரியாத உலகத்தின் வலி பற்றி உயிரோடு பேசிக் கொண்டிருக்கின்றன.

- அஜயன் பாலா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.