மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பு பற்றிய வரலாறு மிகப் பழமையானது. இயற்கையின் படைப்பாகிய மனிதன் பன்னெடுங் காலமாக அதனோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளான். இயற்கையின் பிற படைப்புகளாகிய விலங்குகளையும், மரம், செடி, கொடிகளாகிய தாவரங்களையும், மலை, காடு, வயல், கடல் முதலிய நிலப் பிரிவுகளையும் சூரியன், சந்திரன், விண்மீன் முதலிய உயிரற்ற கோள்களையும் தன்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதவைகளாகவே கருதியுள்ளான். பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் இவற்றைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளன.
தன்னுணர்ச்சிப் பாடல்களான சங்கப் பாடல்கள், இயற்கையை வெறும் இயற்கையாக மட்டும் பார்க்காமல் அவற்றை அக மற்றும் புறமாந்தர் தம் உணர்ச்சி வெளியீட்டுக் களங்களாக அமைத்துக் கொண்டுள்ளன. இயற்கை உயிரினங்களும், பொருட்களும், இலக்கியத்தில் பல்வேறு வகையான கருத்து மற்றும் காட்சிப் புலப்பாட்டிற்கான அடித்தளங்களாக – குறியீட்டுப் படிமங்களாக அமைந்துள்ளன. இவற்றில் ‘யானை’ சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் எவ்வாறெல்லாம் குறியீட்டுப் படிமமாக்கப்பட்டுள்ளது என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.
குறியீட்டுப் படிமம்
‘படிமம்’ என்பது ஒரு சொல்லோ, தொடரோ, பொருளோ, நிகழ்வோ, காட்சியோ ஏதேனும் ஒன்றின் வழியாக மனதில் ஏற்படுத்தும் பதிவாகும். படிமத்தை ‘உரு’ என்ற சொல்லாலும் குறிப்பிடுவர். படிமம் இரண்டு வகைப்படும். அவை (1). காட்சிப்படிமம் அல்லது காட்சியுரு (2) கருத்துப் படிமம் அல்லது கருத்துரு என்பனவாகும்.
ஒரு படைப்பாளி ஒரு காட்சியினைக் கவிதைப் பிம்பமாக்கித் தரும்பொழுது அது காட்சிப் படிமமாகிறது. எடுத்துக்காட்டாக “தூங்குகை ஓங்கு நடைய ” என்ற சங்க இலக்கியத் தொடர், யானையின் உருவத்தையும் அதன் நடையையும் அழகாகச் சொற் சித்திரமாக்கித் தந்துள்ளது. இவ்வாறு ஒரு காட்சியை மட்டும்; கருத்து உள்ளீடு அற்ற மனப்பதிவாக்கித் தருவதையே காட்சிப்படிமம் அல்லது காட்சியுரு என்கிறோம். நடப்புக்காட்சி அல்லது நிகழ்வொன்றின் மூலம் ஒரு கருத்தினை உள்ளீடாகப் படிமமாக்குவது கருத்துப் படிமம் அல்லது கருத்துரு எனப்படுகிறது. உதாரணமாக பாரி மகளிராகிய அங்கவை சங்கவை இருவரும் பாடும் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’; என்று தொடங்கும் புறநானூற்றுப்பாடல் (பா. எண். 112) அவலச்சுவையினை - இழப்பினைக் கருத்துப் பிம்பமாக்கித் தருகின்றது. பாரி மகளிரின் அவல உணர்வின் - வெறுமை உணர்வின் ஆழத்தைக் கபிலரின் பாரி பறம்பு மலை வளம் சுட்டும் பாடல்கள் உணர்த்துகின்றன. கபிலர் பாடல்களைப் படித்துவிட்டு, பாரி மகளிரின் பாடலைப் படிக்கும் பொழுது, எவ்வளவு மதிப்பை – வளத்தை இழந்துவிட்டு இவர்கள் பாடியிருக்கிறார்கள் எனும்போது அவலம் இங்கு கருத்துப்படிமமாகிறது.
1.
காட்சிப் படிமம் என்பது ஒருவகை மேம்போக்கான தாக்கத்தால் ஏற்படுவது. அது அழகியல் உணர்வோடு நின்று விடும். கருத்துப்படிமம் என்பது காட்சிப் படிமத்திலிருந்து ஒரு வளர்ந்த நிலையைக் குறிக்கும். இஃது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. ‘குறியீடு’ என்பது காட்சியும் கருத்தும் இணைந்த படிமம் நிரந்தரமாக அடையாளப்படுத்தப்படுவதைக் குறிக்கும். எனவே, குறியீடுகள் எல்லாம் படிமமாகவே இருக்கும். ஆனால், படிமங்கள் எல்லாம் குறியீடுகளாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த அடிப்படையில் ‘யானை’ எவ்வாறு சங்க இலக்கியத்தில் குறியீட்டுப் படிமமாக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயலாம்.
சங்க இலக்கியத்தில் யானை
நிலப்பரப்பில் மனிதர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் காணும் விலங்குகளில் மிகப் பெரியது யானையே. சங்க இலக்கியத்தில், யானை பற்றிய செய்திகள், ஏறத்தாழ எழு நூற்றுக்கும்; (700) மேற்பட்ட இடங்களில் சுட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் யானை, அரியது, பெரியது, வலிமையானது (ஆற்றல்), மதிப்புடையது (செல்வ வளமுடையது) என்பன போன்ற குறியீட்டுப் படிமங்களாகவே சுட்டப்பட்டுள்ளன. இவற்றை (1) யானைப்படை, (2) யானைப்போர், (3) களிறெறிந்து பெயர்தல் அல்லது கடக்களிறடக்கல் (4) யானை வாகனம், (5) யானைப்பரிசில் (6) யானை வலிமையின் - வளமையின் அளவுகோல் களிறு தரு புணர்ச்சி போன்ற பொருண்மைகள் வழி பழந்தமிழ் இலக்கியப்புனைவுகளில் காணலாம். சங்கப்பாடல்களில் நிலைப்படுத்தப்பட்ட இப்படிமம், பிற்கால இலக்கியங்களிலும், இன்றைய நடப்பு நிகழ்வுகள் வரை குறியீடாக்கப்பட்டு வருகின்றன.
யானைப்படை
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் படைபலத்தைப் பொறுத்தது. யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை எனும் நாற்படைகளுள் முதன்மை பெறுவதும் வலிமையானதும் யானைப்படையே. யானைப்படையின் பெருக்கமே பண்டைக் காலத்தில் ஒரு மன்னனின் வலிமைப் பெருக்கமாகக் கருதப்பட்டது. ஏது பயனும் இலாதவைகளைப் பட்டியலிடும் அறப்பளீச்சுர சதகம் என்னும் சிற்றிலக்கிய நூல் “குஞ்சரம் இல்லாத சேனை”யையும் சுட்டியுள்ளது. அதாவது யானை இல்லாத படை பயனற்றது என்றும் அடிப்படையில் பெரிய வெற்றி எதனையும் பெற்றுவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இனியவை நாற்பது ‘யானையுடைய படைகாண்டல் முன் இனிதே’ (பாடல் 4) என்று கூறுவதிலிருந்தும் யானைப்படையின் சிறப்பை அறியலாம்.
பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனின் படைச் சிறப்பைக் கூறும் கபிலர்,
“சேண்பரல் முரம்பின் நீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவிற்பல்
யானை காண்பல் அவன் தானை யானே” ( பதிற்;77)
2.
என்று யானைப்படையின் பெருக்கத்தைத் தனித்துக் குறிப்பிடுகின்றனர். சேரனின் பிற (குதிரை, தேர், காலாட்படை) படைப் பெருக்கத்தையும் சேர்த்துச் சுட்டிக்காட்டும் கபிலர், யானைப்படையை மட்டும் தனித்துச் சொல்வதோடு, அவற்றின் எண்ணிக்கையையும் அறிய முடியவில்லை என்கின்றார். இதன்மூலம், பகைவர்கள் சேரனோடு போரிட்டால் தோற்றுப் போவார்கள் என்பதும், யானைப்படை மிக வலிமையானது என்பதும் கருத்துப் படிமமாக்கப்பட்டுள்ளது.
யானைப்போர்
இருநாட்டுப் படைகளுக்கிடையே போர் நடக்கும்பொழுது அதனைக் காண்பதே அரிது. அதுவும் யானைப்போர் காண்பது அதனினும் அரிது. காரணம், யானைப் போரினைக் காண்பது ஆபத்து நிறைந்தது. அச்சம் தரக்கூடியது. அதனால் தான் திருவள்ளுவர், தன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்பவனுக்கு, “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” (குறள்:758) என்று உவமைப்படுத்துகின்றார். எனவே, யானைப்போர் செய்வது அருஞ்செயலாகக் கருதப்பட்டுள்ளது. இவ்வருமையின் காரணமாக யானைப் போரானது “களிறுடைப் பெருஞ்சமம்” – (பதிற் -76) என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
யானைப்போர் காண்டற்கரியது என்ற செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளது.
களிறெறிந்து பெயர்தல் அல்லது கடக்களிறடக்கல்:-
போரில் பகை நாட்டுப் படைகளை எதிர்கொள்வது வெல்வது பெருஞ்சிறப்பாகக் கருதப்பட்டது. ஓர் ஆண்மகன் தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை, மூன்றையும் எதிர்கொள்வதை விட யானைப்படையை எதிர்கொள்வதே பெருமைக்குரியதாக இருந்துள்ளது. பொன்முடியார் எனும் சங்கப்புலவர் ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ (புறம்:312) என்று தொடங்கும் பாடலில்,
“ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
என்று குறிப்பிடுவதிலிருந்து உணரலாம்.
சிலப்பதிகாரத்தில் கோவலனின் உயர்ந்த பண்புகளையும், மறமாண்பையும் உணர்த்த வந்த இளங்கோவடிகள்,
“பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” (சிலம்பு. அடைக். 15:52-53)
என்று அவன் வீரத்தினைக் காட்ட கடக்களிறு அடக்குதலைக் காட்டுகின்றார். இதன் மூலம், யானையை வெல்லுதல் அல்லது அடக்குதல் எத்தகைய சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது என்பதனையும் யானை பற்றிய குறியீடு மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
யானையைப் போர்க்களத்தில் வெல்லுதலை, ‘களிறெறிந்து எதிர்த்தோர்பாடு’, ‘களிற்றுடனிலை’ என்ற இரு தும்பைத் துறைகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
யானை வாகனம்
எல்லாத் தமிழ்த் தெய்வங்களுக்கும் வாகனம் ஒன்றுண்டு. தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்குரிய வாகனமாக “ஐராவதம்” (வெள்ளை யானை) இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது. யானை விலங்குகளில் பெரியது, வலிமையானது. இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன்; தன்னிகரில்லாதவன் என்பதை அடையாளப்படுத்துவதற்காகவே யானையை அவனுக்குரிய வாகனமாக்கியுள்ளனர். இதனால் இந்திரனின் வலிமையும், வளமையும், பெருமையும் வெளிப்படுமாறு படிமமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்கள் உலா செல்லும் பொழுதும் யானையை வாகனமாகப் பயன்படுத்தியுள்ளனர். இன்றைய நிலையில் தெய்வங்கள் உலா செல்வதும் கோயில் விழாக்களில் அணி வகுத்து நிறுத்துவதும் யானை வாகனமே.
யானைப் பரிசில்
சங்க காலத்தில் மன்னர்கள், புலவர்களைப் பெரிதும் பேணிக் காத்து வந்துள்ளனர். புலவர்களும் தம்மைப் புரக்கும் வேந்தர்களைப் பாடி மகிழ்வித்ததோடு அல்லாமல் அவர்கள் தவறு செய்யும்பொழுது தட்டிக்கேட்கும் தகைமை உடையவர்களாகவும் இருந்துள்ளனர். மன்னன் தன்னைப் பாடி மகிழ்விக்கும் புலவர்களுக்குப் பொன்னும், பொருளும் கொடுத்து பரிசில் வழங்குவான். அவன் வழங்கும் பரிசில்களில் மிகப் பெரியது “யானைப் பரிசில்” ஆகும்.
வறுமையோடு வரும் புலவர்க்கு யானைப்பரிசிலா? என்ற கேள்வி தற்காலத்தில் எழுப்பப்படுகிறது. ஆனால் “யானைப் பரிசில்” என்பது வெறும் யானையை மட்டும் தருவதன்று. யானையோடு ஏவலாட்களும், பல ஊர்களும் பராமரிப்பிற்கான செலவும் தரப்படும். புலவர்களுக்கும், பாணர்களுக்கும், கூத்தர்களுக்கும், போர்வீரர்களுக்கும் களிற்று யானைகள் (ஆண் யானை) பரிசிலாக வழங்கப்பட்டுள்ளன. பாடினி, விறலியர் போன்றோர்க்குப் பிடியானை (பெண்யானை) வழங்கப்பட்டதாக பதிற்றுப்பத்து (43), புறநானூறு(177), அகநானூறு(311), மதுரைக் காஞ்சி (749 – 752) போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
யானை - வலிமையின் - வளமையின் அளவு கோல்
சங்கத் தமிழர் யானையை வலிமையின் - வளமையின் அடையாளமாகக் கருதியுள்ளனர். “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு” (குறள் -500) என்று திருவள்ளுவரும் வலிமையான களிறு சேற்று நிலத்தில் புதைந்தால் வலிமையற்ற நரி கூட வென்றுவிடும் என்று கூறுகின்றார். யானையை வெல்வதே உண்மையான வீரமாகக் கருதப்பட்ட காலமாகையால் இதில், யானை, வலிமையின் அளவு கோலாக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான பரணி இலக்கியத்திற்கு இலக்கணம் கூறவந்த இலக்கண விளக்கப்பாட்டியல்,
“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி”
என்கிறது.போர்க்களத்தில் ஆயிரம் ஆனைகளை வெல்லும் வீரனைச் சிறப்பித்துப் பாடுவதே பரணி இலக்கியம். இது யானை - வலிமையின் வளமையின் அடையாளமாகக் கருதப்பட்டதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
களிறுதரு புணர்ச்சி
புற இலக்கியங்களில் மட்டுமின்றி அக இலக்கியஙகளிலும் யானைக்கு முக்கியத்துவம் உண்டு. பாலதாணையால் ஒத்த தலைவனும் தலைவியும் இணையும் இயற்கைப் புணர்ச்சிகளுள் “களிறுதரு புணர்ச்சி” சிறந்த ஒன்றாகக் கருதப்பட்டுள்ளது. ஆரிய அரசன் யாழ்ப் பிரகதத்தனுக்குத் தமிழ் (காதல்) அறிவிக்கப் பாடிய குறிஞ்சிப்பாட்டு, களிறு தரு புணர்ச்சியாக மலர்ந்து அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்தது. யானையைத் தனியொருவனாக விரட்டி, தலைவி மற்றும் தோழியின் நட்பைப் பெற்றதாகப் பாடப்பட்டுள்ளது அப்பாட்டு.
கபிலர் குறிஞ்சிப்பாட்டில்,
“அருவிடர் அமைந்த களிறு தருபுணர்ச்சி"
என்று அவரே குறிப்பிடுகின்றார். யானையின் வலிமை அடையாளம் தலைவனின் வீரத்திற்கும் காதலுக்கும் பெருமை சேர்க்கிறது. இதற்கும் மேலாக தலைவனையே யானையாக உள்ளுறைப் பொருளில்,
“நெற்கொள் நெடுவெதிர்க்கு அனந்த யானை
முத்துஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப”
என்று குறிஞ்சிப்பாட்டில் தோழி குறிப்பிடுவது யானை அகமரபிலும் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.
மேற்கண்டவற்றின் மூலம் “யானை” என்பது ஒரு விலங்கு என்ற நிலைக்கும் மேலாக அது
அரியது - பெரியது
வலிமையானது - ஆற்றல் வாய்ந்தது.
மதிப்புடையது - வளமுடையது
என்பனவற்றின் அடையாளமாக – குறியீடாக எல்லா நிலைகளிலும் மனப்பதிவாக்கப்பட்டுள்ளது.
யானை, மனிதன் காணும் விலங்குகளில் பெரியதாகவும், அரியதாகவும் உள்ளதால் அதன் பிரமிப்பு, அவனுடைய கலைகளிலும் இலக்கியங்களிலும், ஏன் சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும் கூட மனப்பதிவாக இயல்பாக வெளிப்படுகின்றது. இன்றைய தொலைக்காட்சி விளம்பரத்தில் ‘பெவிக்கால் பிணைப்பை’ யானையால் கூட பிரிக்க முடியாது என்று வரும் விளம்பரக்காட்சி, ‘யானை’ பற்றிய குறியீடு மக்களின் மனப்பதிவில் காலந்தோறும் சுழன்று கொண்டே வருவதை வெளிப்படுத்துகின்றது.
மக்களின் இத்தகைய மன வெளிப்பாடுகள், பண்பாட்டு வடிவங்களாக - அடையாளங்களாக - குறியீடுகளாக நிலைநிறுத்தப்படுகின்றன. அவ்வாறு நிலை நிறுத்தப்பட்ட விலங்கினங்களில் “யானை” தமிழர் பண்பாட்டோடும், நாகரிகத்தோடும் பின்னிப் பிணைந்து பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
துணை நூற்கள்
1. சங்க இலக்கியங்கள்
2. சிலப்பதிகாரம்
3. திருக்குறள்
4. கலிங்கத்துப்பரணி
5. தொல்காப்பியம்
6. புறப்பொருள் வெண்பாமாலை
- ச.பொ.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.