விநாயகன் சிலை ஊர்வலங்கள் மதம் சார்ந்தவை அல்ல; மதத்தின் அரசியலுக்காகவே நடத்தப்படுகின்றன. எனவே இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து ‘பெரியார் கைத்தடி’யை குறியீடாக்கி எதிர் ஊர்வலங்களை நடத்தி வந்தது. இந்த ஆண்டு எதிர்வினையாக புத்தர் சிலை ஊர்வலத்தை சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நடத்தினார்கள். இந்துத்துவ மதவாத அரசியலுக்கு மாற்றாக மக்கள் சமத்துவத்தை மார்க்கமாக்கி பரப்பிய புத்தர் எதிர்வினையாக முன்னிறுத்தப்பட்டார். இது குறித்து பல விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. விவாதங்கள் தொடங்கும்போதுதான் பார்வையும் தெளிவாகும்; அந்த வகையில் விவாதங்களை வரவேற்கவே வேண்டும்.

இந்து மதத்திலிருந்து வெளியேறி அம்பேத்கர் - புத்த மார்க்கம் தழுவியபோது, எடுத்த உறுதிமொழிகளில் ஒன்று - ‘இராமன், விநாயகன்’ உருவங்களை வணங்க மாட்டோம் என்பதாகும்.

பெரியார் 1953ஆம் ஆண்டு விநாயகன் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் புத்தர் பிறந்த நாளாகக் கொண்டாடப் படும் மே 27ஆம் தேதி. “என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்காக உடைக்கிறேன்; என்னை சூத்திரன் - வேசி மகன் என்று கற்பிப்பிப்பதற்காக உடைக்கிறேன் என்பதாக சொல்லிக் கொண்டே உடைக்க வேண்டும்” என்று பெரியார் அறிவுறுத்தினார்.

“புத்தர் நிறுவியது ஒரு மதம் அல்ல; தனக்கோ தான் நிறுவிய மார்க்கத்திற்கோ தெய்வீகம் இருப்பதாக அவர் கூறவும் இல்லை என்று அம்பேத்கர் - ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தனக்கு தெய்வீகத் தோற்றுவாய் உண்டு எனக் கூறிக் கொள்ளா விட்டாலும் மோசே (Moses) தனது போதனைகளுக்கு தெய்வீக சக்தி உண்டு என்றார். ஏசு தனக்கே தெய்வீகம் உண்டு என்றார்; தான் கர்த்தரின் ஒரே குமாரர் என்றார். கிருஷ்ணன் தானே கடவுள், தனது உரையே கீதை என்றார். புத்தர் தனக்கோ, தனது அறவுரைகளுக்கோ இத்தகைய தெய்வீகம் எதையும் இருப்பதாகக் கூறிக் கொள்ளவில்லை. தனது அறவுரைகள் குறையே இல்லாதவை என்றும் அவர் உரிமை கோரவில்லை. தனக்கு ஏற்பட்ட புரிதல் வரை, விடுதலைக்கான உண்மையான வழி இதுவே என்றுதான் கூறினார்”

- என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.

இதே கருத்தையே பெரியாரும் கூறினார்.

“கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்று புத்தர் எதைச் சொல்லி இருந்த போதிலும் அவர் கூறிய ஓர் உண்மைய மட்டும் யாருமே மறுக்க முடியாது. அதாவது எதையும் உன் சொந்த புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்” என்று அவர் சொல்லிய இந்த உண்மையை மட்டும் யாரும் மறுக்க முடியாது. இன்றுவரை புத்தரைத் தவிர வேறு யாருமே அவனவன் சொந்த புத்தியின்படி நட என்று சொல்லவே இல்லை” - என்றார் பெரியார். (‘விடுதலை’ 3.6.1956)

கடவுளை மறுக்கும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இப்போது ‘புத்தர் கடவுளை’ ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று சங் பரிவாரங்கள் கேட்கின்றன. புத்தரை போராட்ட அடையாளமாக்குவதா என்று வேறு சில முகாமிலிந்து எதிர்வினைகள் வருகின்றன. இந்தக் கேள்விகளுக்கு அம்பேத்கரும், பெரியாரும் தந்திருக்கிற விளக்கங்களே சரியான பதில்.

பார்ப்பனிய ஊடுறுவலால் புத்தரின் சிந்தனைகள் சிதைக்கப்பட்டதை வரலாறு கூறுகிறது. மியான்மரில் புத்தரைப் பின்பற்றுவதாகக் கூறும் சர்வாதிகார ஆட்சி, இஸ்லாமியர்கள் வெறுப்பைக் கக்குவதும், இலங்கை புத்த பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவதும் புத்த மார்க்கத்தின் நெறிக்கு நேர் எதிரானவை; வர்ணாஸ்ரமத்துக்கு எதிராக மக்கள் சமத்துவத்தைப் பேசுவதே உண்மையான ‘புத்த தம்மம்’ என்பதை பேராசிரியர் லட்சுமிநரசு போன்ற ஆய்வாளர்களும் அம்பேத்கரும் பெரியாரும் வெளிச்சமாக்கியுள்ளனர். அதுவே நாம் மதிக்கும் - பவுத்தம்!

Pin It