அந்தத் தீவில் டோடோ என்னும் பறவைகள் நிறைய இருந்தன. அது கோழியைவிட சற்றுப் பெரியது. எடை கூடியது அதற்குச் சிறகு உண்டு. ஆனால் பறக்க முடியாது. கால்கள் உண்டு. ஆனால் வேகமாக ஓட முடியாது. அந்தத் தீவில் அந்தப் பறவைகள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தன.

அந்தத் தீவுக்கு மனிதர்கள் வரும் வரை அந்தப் பறவையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவை சுதந்திரமாக உலாவிக் கொண்டிருந்தன. ஒருநாள் கப்பலில் மனிதர்கள் வந்தார்கள். அவ்வளவு தான். சில ஆண்டுகளில் அந்தப் பறவைகளின் இனிமே அழிந்து விட்டது.

என்றாலும் அந்தத் தீவுக்கு அந்தப் பறவையின் பெயரைச் சூட்டினர். ஒன்றைப் பூண்டோடு அழித்து விட்டு அதன் பெயரை மட்டும் கொண்டாடுவது மனிதனுக்கு இயல்பான குணம். அந்தத் தீவை டோடோ தீவு என்றனர். இந்த நாட்டின் சின்னம் கூட அந்தப் பறவை தான். டோடோ தீவை மொரீசியஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும்.

டச்சுக்காரர்

மொரீசியஸ் தீவுக்கு இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. டச்சுக்காரர்கள் 1598 செப்டம்பர் 17ஆம் நாளில் ஐந்து கப்பல்களில் இந்த தீவில் இறங்கினார்கள். இங்கு இயற்கைத் துறைமுகங்கள் அதிகம் உள்ளன. அதனால் அவர்கள் ஐந்து கப்பல்களிலும் கரை இறங்க வசதியாக இருந்தது.mauritius 366டச்சுக்காரர்கள் இங்கே கால் வைத்த போது அவர்களின் ஹாலந்து நாட்டில் மோரீஸ் (Prince Maurice of Nassau) என்னும் பெயருடைய இளவரசன் இருந்தான். அவன் பெயரை இந்தத் தீவுக்கு வைத்தனர். இதன் பிறகு யார் யாரெல்லாமோ இந்த தீவுக்கு வந்தனர். ஆனால் அந்த இளவரசனின் பெயர் நிலைத்து விட்டது.

இருபதுக்கு மேல் தீவுகள்

இந்தத் தீவைச் சுற்றி ரோட்ரிக்கல், அகலேகா, கராஜோஸ், கர்காடக என 20க்கு மேல் தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகளில் உள்ள குகைகளை முதலில் அடையாளம் கண்டவர்கள் அராபியக் கொள்ளைக் காரர்கள். தாம் கொள்ளையடித்த பொருட்களை மறைத்து வைப்பதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்தினர். அப்போதும் இங்கு மனிதன் குடியேறவில்லை.

சொர்க்கத்தின் மாதிரி

இந்த தீவுக்குச் சுற்றுலாப் பயணியாகச் சென்று வந்த தமிழகக் கவிஞன் ஒருவன் “ஒருமுறை தற்செயலாக வானுலகத்து இந்திரன் இந்தத் தீவுக்கு வந்தான். தீவைப் பார்த்து பிரமித்து இதன் மாதிரி ஒன்றை உருவாக்கினான். அதுதான் சொர்க்க உலகம்” என்று எழுதி இருக்கிறான் பச்சைக் காடுகளும் தூய்மையான கடற்கரையும் இந்தத் தீவின் சிறப்புகள்.

சிறிய நாடு

மூத்த குடிமகன் ஒருவர் டி.வி.எஸ். சேம்ப்பில் அலுப்பில்லாமல் இந்தத் தீவைச் சுற்றி வந்து விட முடியும். தீவின் ஒரு மூலையில் இருந்து இறுதி மூலைக்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்தில் கடந்துவிட முடியும். இத்தீவின் நீளம் 65 கிமீ அகலம் 45 கிமீ. மொத்த பரப்பு 2045 ச.கி.மீ. இந்தியாவிலிருந்து 4000 கிமீ மடகாஸ்கரில் இருந்து 900 கி.மீ தொலைவில் கடலின் நடுவே இத்தீவு காட்சியளிக்கிறது. இங்கே மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள காலங்களில் அதிகமாக குளிர் இருக்கும். டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மழைக்காலம்.

இந்திய வம்சாவளியினர்

1968 மார்ச் 12 ஆம் நாள் பிரிட்டனில் இருந்து விடுதலை பெற்ற இந்தத் தீவு 1990 மார்ச் 12ல் குடியரசு நாடாக ஆனது. ஐக்கிய நாட்டுக்கழகத்தின் உறுப்பினர் நாடுகளில் ஒன்று. 2020 மக்கள் கணக்கெடுப்பின்படி 1,26,8315 பேர் ஒரு வகையில் மக்கள் நெருக்கம் அதிகரித்து விட்டது (ச.கி.மீ.க்கு 631 பேர்).

இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையில் 68 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியினர் ஆவர். ஆப்பிரிக்க வம்சாவளி 24: சீனம் 3. பிற 2 விழுக்காடு என்ற உள்ளது.

இது இந்தியாவின் நேச நாடுகளில் ஒன்று. இந்த நாட்டிற்கு இந்தியா ஒரு போர்க் கப்பலை அன்பளிப்பாகக் கொடுத்தது என்பது பத்திரிகை செய்தி. இந்த நாட்டின் இப்போதைய குடியரசுத் தலைவர் அமினா குரிப்பாசி. முதலமைச்சர் நவின் சந்திரா ராம்.

குடியேறினவர்களின் தேசம்

மொரீசியஸ் பற்றி தமிழில் வந்த வாசுதேவ விஷ்ணுதயாலுவின் மொரீசியஸ் தீவில் தமிழர் சரித்திரம் (1960 சர்வோதய பிரசுரம் தஞ்சாவூர்) பேராசிரியர் சு ராஜாராமின் மொரீசியஸ் தமிழரும் தமிழும் (1983 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்), கனகரத்தினம் எழுதிய மொரிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (கட்டுரை 1980 உலகத் தமிழ்நாட்டு மலர் கோலாலம்பூர்) ஆகிய நூல்கள் இத்தீவைப் பற்றி நுட்பமாகக் கூறுகின்றன.

மொரிசியஸ் தீவு தொன்மையானது. மக்கள் தொன்மையானவர்கள். பண்பாடு தொன்மையானது. மொழியும் கலாச்சாரமும் பழமையானது என்னும் செய்திகளை யாரும் சொல்லவே இல்லை.

இந்த நாட்டு மக்களும் தங்கள் பெருமையைப் பேசுகின்றவர் அல்லர். இல்லாத பெருமையை எப்படிப் பேச முடியும்? இத்தீவு பற்றி எழுதியவர்கள் எல்லோரும் குடியேறியவர்களின் நாடு (settlers land) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நாட்டின் வரலாற்றைக் குடியேற்றத்திற்கு முற்பட்ட காலம், குடியேற்ற காலம், குடியேற்றத்தின் பிற்பட்ட காலம் என்று வகுத்துக் கொண்டு விளக்குகின்றனர்

இந்தத் தீவில் போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், இந்தியர், ஆப்பிரிக்கர் எனப் பலரும் குடியேறி இருக்கின்றனர்

கால்பதித்த ஆங்கிலேயர்

போர்ச்சுக்கீசியர் இத்தீவிற்கு 1505 இல் வந்த போது இங்கே பெரும் மழையும் புயலும் வந்ததால் இங்கிருந்து குடி பெயர்ந்து இருக்கின்றனர்.

டச்சுக்காரர்கள் 1598 செப்டம்பர் 17 இல் இந்தத் தீவிற்கு ஐந்து கப்பல்களில் வந்து இறங்கினர். தங்கள் குடியிருப்பை நிரந்தரம் ஆக்க வேண்டும் என்று பலன் தரும் மரங்களை நட்டனர்.

1601-ல் மீண்டும் டச்சுக்காரர்கள் சிலர் வந்தனர். 1638இல் தற்காலிகக் குடியிருப்புகளை ஏற்படுத்தி தங்கினர். 1658இல் தங்கள் நாட்டிற்குத் திரும்பி விட்டனர். 1664ல் மறுபடியும் சிலர் வந்தனர். இவர்களின் இந்தத் தீவின் தொடர்பு 1710-ல் முடிவுக்கு வந்துவிட்டது.

பிரெஞ்சுக்காரர்கள் 1715 இல் மொரீசியசுக்கு வந்தனர். இங்குக் குடியேறியதன் நோக்கமே தோட்டப் பயிர் செய்து பணம் சம்பாதிப்பது தான். இவர்கள் இங்கே 1819 வரை இருந்தனர். ஆங்கிலேயருடன் கொண்ட மாறுபாட்டால் இந்தத் தீவை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஆயிற்று.

ஆங்கிலேயர்கள் 1810 இல் இங்கே வந்தனர். இந்தத் தீவு மக்கள் விடுதலை பெறுவது வரை (1968) ஏறத்தாழ 150 வருஷங்கள் இத்தீவில் ஆட்சி செலுத்தினர்.

கறை படிந்த வரலாறு

ஏறத்தாழ 370ஆண்டுகள் ஐரோப்பியர்இந்தத் தீவில் இருந்தாலும் இங்கு பெருமளவில் குடியேறியவர்கள் இந்திய வம்சாவளியினரும் ஆப்பிரிக்க வம்சா வளியினரும் ஆவார். மொரிசியஸ் குடியேற்ற வரலாறு துக்கமானது. சில கறைகளுடன் இந்த வரலாறு எழுதப்பட்டுள்ளது.

ஐரோப்பியர்கள் புதிதாகக் கண்டுபிடித்த நாடுகளில் கால் வைத்ததுமே அந்த மண்ணில் இருந்து எதை சுரண்டிக் கொண்டு போகலாம் என்ற திட்டத்தை வகுத்துக் கொள்வார்கள் என்பது பொதுவிதி.

குடியேற்ற நாடுகளில் விவசாயம், வணிகம் போன்றவற்றுக்கு மக்களை அடிமைகளாக வாங்குவதும் ஐரோப்பியர்களுக்கு கைவந்த கலை. மொரீசியசும் அதற்கு விதிவிலக்கல்ல.

சொர்க்கத்தின் ஒரு பகுதி என்று அழைக்கப்படும் இந்தத் தீவு அடிமைகளின் கண்ணீரால் உருவாக்கப் பட்டது என்னும் வரிகளை வரலாற்றிலிருந்து நீக்க முடியாது.

அடிமைகள்

போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் இத்தீவிற்கு மடகாஸ்கரிலிருந்து அடிமை களைக் கொண்டு வந்தார்கள் 1640ல் மடகாஸ்கரில் இருந்து 100 அடிமைகள் வந்தனர். அதற்குப் பின்பும் வந்தனர். இவர்கள் கரும்பு, தேயிலை தோட்டத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சர்க்கரைக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த தேவையைப் பூர்த்தி செய்ய மொரீசியசில் கரும்பு பயிர் செய்ய அடிமைகள் தேவைப்பட்டனர். ஆனால் ஐரோப்பியர் அடிமைகளை நடத்திய முறை அவர்களின் வருமானத்தைப் பெருக்கத் தடையாய் இருந்தது.

தோட்ட முதலாளிகளின் கணக்கு தப்பியது. 1728ல் பாண்டிச்சேரியில் இருந்து சென்ற தமிழகக் கட்டிடக் கலைஞர்கள். தோட்டத் தொழில்நுட்ப வேலைக்காரர்கள் போன்றவர்களும் அடிமைகள் ஆகத்தான் சென்றிருக்கின்றனர்.

அடிமைகள் ஒழிப்பு

இங்கிலாந்து நாட்டில் 1813இல் அடிமை ஒழிப்புச் சட்டம் வந்தாலும் மொரீசியஸ் கவர்னரோ தோட்ட முதலாளிகளோ அதை வைக்கவில்லை. அந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் தோட்ட வருமானம் குறையும், மொரிசியஸின் வளர்ச்சி நின்றுவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். மொத்த தீவின் வளர்ச்சி அடிமை ஒழிப்புச் சட்டத்தால் பாதிக்கப்படும் என நினைத்தார்கள் என்றாலும் அடிமை முறைச் சட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது (1835).

இதன் பிறகு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் குடிகளை வரைவழைக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து இத்தீவுக்கு சென்ற கூலிகளே மொரீசியசை வளமான ஒரு நாடாக மாற்றினர். அதற்கு ஒரு மதிப்பைக் கொண்டு வந்தனர். அப்போது “குறைந்த கூலி நல்ல உழைப்பு தொழில்நுட்பம்” என்பது இந்தியர்களின் முத்திரை.

ஒப்பந்தக் கூலிகள்

1815இல் கல்கத்தா துறைமுகத்திலிருந்து 700 இந்தியர்கள் ஒப்பந்தக் கூலிகளாக மொரிசியஸ் வந்தனர். இவர்களில் பலர் ராணுவக் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். சிலர் நாடு கடத்தப்பட்ட தண்டனைக் கைதிகள். முக்கியமாக பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். ஆனால் ஆங்கில தோட்ட முதலாளிகளுக்கு நினைத்த லாபம் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

1829-1834 ஆகிய ஆண்டுகளில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஒப்பந்தக் கூலிகள் தனியார் ஏஜென்ட் வழி மொரீசியஸ் சென்றனர். ஒரு வகையில் 1834 முதல் 1923 வரை இந்திய ஒப்பந்தக் குடிகள் நிறையவே சென்று இருக்கின்றனர். இவர்களில் தக்காணம் பகுதி, கொங்கிணிப் பகுதி, தஞ்சையில் திருச்சி பகுதி உள்ளவர்கள் அதிகம். இவர்களில் சிலர் மட்டுமே தாயகம் திரும்பினர்

தமிழ்க் கூலிகள்

தமிழர்கள் 1770லேயே அடிமைகளாக மொரீசியசுக்குச் சென்றிருக்கின்றனர். அடிமை ஒழிப்பிற்கு பின்னர் ஒப்பந்தக் கூலிகளாக நிறைய பேர் சென்றனர். இது 1834 முதல் 1923 வரை நடந்த நிகழ்வுகள். இப்படியாக இவர்கள் தமிழகத்திலிருந்து குடிபெயர வேண்டிய சூழ்நிலை பற்றிய காரணங்களை மொரீசியஸ் தமிழரும் தமிழும் என்ற நூலில் பேராசிரியர் ராஜாராம் விரிவாகவே அடுக்கிக் கொண்டு போகிறார்.

தமிழ்ப் பகுதிகளில் 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஜாதிக் கொடுமை. இருபது பஞ்சங்கள் (1858-1900) ஏற்கனவே தமிழகத்திலே விவசாய நிலங்களில் அடிமைகளாக வாழ்ந்த மனநிலை இவை எல்லாம் ஒப்பந்த, கூலி அடிமையாக செல்வதற்கு தமிழர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இதனால் 1846-1923 ஆம் ஆண்டுகளில் அதிகம் தமிழர்களும் கொஞ்சம் தெலுங்கர்களும் மொரீசியசுக்குக் குடி பெயர்ந்திருக்கிறார்கள்.

ஒப்பந்தக் கூலிகளாக தமிழர்களை அனுப்புவதற்கு தனி முகவர்கள் இருந்தார்கள். இவர்கள் கூலிகளிடம் பேசிய ஆசை வார்த்தைகள் எல்லா ஜாதியினரையும் கவர்ந்திருக்கிறது. அப்போது அகமுடையார், நாவிதர், ஆசாரி, வன்னியர், பறையர் ஆகிய ஜாதியினர் அதிக அளவில் இருந்தனர். இவர்களுடன் 12 வேளாளர்களும் இருந்தனர். ஆக அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் சென்றவர்களில் 22 ஜாதியினர் இருந்தனர் என்கிறார் ராஜாராம்.

இந்த ஒப்பந்தக் கூலி தமிழர்கள் முதலில் சென்னை வேப்பேரியில் கொட்டடியில் ஒரு வாரம் தங்க வைக்கப்பட்டனர். வீட்டுக்குத் தெரியாமல் வருபவரைக் கண்டுபிடிக்க, குற்றம் செய்து தப்பிப்பதற்காக வந்தவர்கள் ஆகியோரை அடையாளம் காண ஒரு வார காலம் அவகாசம். இப்படி சென்றவர்களுக்குத் தனித்தனியாக எண்கள் கொடுக்கப் பட்டிருந்தன. 1874 இல் மட்டும் 413 தமிழ் ஒப்பந்தக் கூலிகள் சென்னையிலிருந்து சென்றனர்.

சிலர் வணிகர் ஆயினர்

இப்படிச் சென்ற ஒப்பந்தக் கூலிகள் கரும்புத் தோட்டங்களில் கட்டிடம் கட்டும் தொழில்நுட்ப கலைஞர்கள் கொஞ்சம் அதிகமாக சம்பாதித்தனர். பின் வணிகர் ஆயினர். சொத்துக்கள் வாங்கினர். சிலர் தமிழகத்தில் இருந்து தங்கள் உறவினர்களை வரவழைத்துக் கொண்டனர்.

பாண்டிச்சேரியிலிருந்து சென்ற விவசாயக் கூலிகள் தொழில்நுட்பம் காரணமாக கொஞ்சம் மரியாதையாக நடத்தப்பட்டனர். ஆரம்பகாலத்தில் இவர்கள் அடிமைகளாக நடத்தப்படவில்லை. இவர்களில் சிலர் வணிகர்களாக ஆகி பொருள் சம்பாதித்தனர். பின் பாண்டிச்சேரியில் வந்து குடியேறினர். இவர்களில் சிலர் ஆப்பிரிக்கா சென்றனர் (1860).

இந்தியாவிலிருந்து மொரீசியசுக்குச் சென்ற (1810) பெரும் அளவிலான சிப்பாய்களில் தமிழர்களும் உண்டு. இவர்கள் பிற்காலத்தில் வணிகர்களாகி செல்வந்தர்களாகினர்.

அண்ணாசாமி

தமிழகத்திலிருந்து சென்ற தொழில்நுட்பம் அறிந்த வெள்ளி வேல் அண்ணாசாமி என்பவர் பல மொழி அறிவும் நிர்வாகத் திறமையும் உடையவர். இவர் அடிமையாக சென்றாலும் படிப்படியாக உயர்ந்து பின்னர் நிறைய சம்பாதித்தார். தோட்ட முதலாளியாகவும் ஆயிருக்கிறார். ஆனால் இறுதியில் எல்லாம் இழந்து அனாதையாகச் செத்துப்போனார்.

இத்தீவில் தமிழரின் குடியேற்றம் அறவே நின்ற பின்பு இவர்கள் பலவீனப்பட ஆரம்பித்தனர். ஆனால் இதுவே அவர்களிடம் வைராக்கியத்தை உருவாக்கக் காரணம் ஆயிற்று.

பல மொழிகள்

மொரீசியஸ் தீவில் சில நூறு ஆண்டுகளில் பல மொழிகள் பேசிய மக்கள் குடியேறினர். ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் தவிர இந்தியர்களில் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராட்டி, போஜ் புரி மொழி பேசியவர்கள், மடகாஸ்கர், சைனாவில் இருந்து வந்தவர்கள் ஆகியோர் இங்கு நிலையாகத் தங்கிய பின்பு பலமொழி கலப்புடைய நாடாக இது விளங்கிற்று.

கிரியோல்

மொரீசியஸ் தீவில் இப்போது பேச்சு மொழியாக இருக்கும் கிரியோல் தீவுக்கே உரிய புதிய மொழி இன்று இது பொது மொழி ஆகிவிட்டது. கிரியோல் மொழியில் ஆப்பிரிக்க மொழிச் சொற்கள் அதிகம் உள்ளன. பிரெஞ்சு இலக்கண மரபை இது பின்பற்றியது. தமிழ்ச் சொற்களும் இதில் உண்டு.

அரசியல், நிர்வாகம் வழியாக ஆங்கிலமும் பிரஞ்சும் இருந்ததால் இம்மொழிகளை அறிந்தவர்கள் நிர்வாகத்தில் பணி செய்தனர். இன்று வட்டார மொழியாக அங்கீகாரம் பெற்றவை கிரியோல், இந்தி உருது, தமிழ், மாண்டரின், தெலுங்கு, போஜ் புரி ஆகியன.

தமிழ் படிப்பு

இந்தத் தீவின் மக்கள் தொகையில் 28 விழுக்காடு தமிழர்கள் என்பது அண்மைக்கால கணக்கு. இவர்களில் வீட்டில் தமிழ் பேசுகின்றவர்கள் 3650 பேர்கள்தாம். கிரியோல், ஆங்கிலம் பேசுவது சாதாரணம். இவர்களை தமிழ் என்னும் அடையாளத்தில் கொண்டு வருவது எது?

பதினெட்டாம் நூற்றாண்டு பாதியில் மொரீசியஸ் தீவில் குடியேறிய தமிழ் ஒப்பந்தக் கூலிகள் பகல் உழைப்பிற்குப் பின்னர் மாலையில் ஒன்றாகக் கூடியிருந்து தாங்கள் அறிந்த அம்மானைப் பாடல் களைப் பாடி பொழுதைப் போக்கினர். சிலர் கூத்து நடத்தினர். கூத்துப் பாடல்கள் பாடினர்.

நல்லதங்காள் அம்மானையில் வரும் நல்லதங்காள் பஞ்சம் பிழைக்க சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குக் குடியேறும்போது பாடிய சோகப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடினார்களாம். அவர்களுக்கு நல்லதங்காளின் வலி தெரியும். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாட்கள். மூன்றாம் தலைமுறையினர் கூத்தையும் பாடல்களையும் மெல்ல மறந்து விட்டனர்.

19ஆம் நூற்றாண்டில் மொரீசியசில் இருந்த பெருமளவு தமிழர்கள் தோட்டங்களில் வேலை செய்தனர். அவர்களுக்குத் தமிழ்க் கல்விக்கு வழி இல்லை. அவர்களின் தொடர்பு மொழி கிரியோல் ஆக மாறியது. நான்காம் தலைமுறையில் தமிழகத்திலிருந்து பெண்களும் வந்தனர். குழந்தைகள் பிறந்தன. அப்போது தமிழ்க் கல்வி தேவைப்பட்டது. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் பல முளைத்தன.

தமிழ் படிக்க ஆளுநர் ஏற்பாடு

மொரீசியஸ் தீவின் ஆளுநர் ஹிக்கின்சன் என்பவருக்குத் தமிழ் மொழியில் மரியாதை உண்டு. இவர் தோட்டத் தொழில் செய்த தமிழர்கள் தமிழ் கற்க ஏற்பாடு செய்தார். பொறுப்பு ரெவெரென்ட் ஹார்வி என்பவருக்கு, ஆனால் இவரது உள்நோக்கம் வேறாக இருந்தது. தமிழ் படிக்கப் போன மாணவர்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். எனவே தோட்டத்துத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ் படிக்க அனுப்ப மறுத்தனர்.

இதன் பிறகு ஆனந்தன் என்பவர் தனியார் பள்ளி ஒன்றை ஆரம்பித்து தமிழ் கற்பித்தார். தொடர்ந்து 15 அரசு பள்ளிகளும் 11 தனியார் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டன ஆனால் இந்தப் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதில் இடையூறுகள் வந்தன. இதனால் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் பயிற்சி

1920 அளவில் இந்து வாலிபர் சங்கத்தினர் தமிழ்க் கல்வியின் தேவை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். 1934 இல் சில பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆங்கிலம் பிரெஞ்சு மொழிக்குச் சமமான மரியாதை இந்திய மொழிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சீவுசாகர் இராம் கூலாம் என்பவர் பேசினார். 1958இல் பொதுத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றதும் இவரது ஆசை நிறைவேறியது.

ஐரோப்பிய மொழி ஆசிரியர்களுக்கு சமமான சம்பளம் தமிழ் ஆசிரியர்களுக்கும் கொடுக்கப் பட்டது. இதன்பிறகு தமிழ் மொழிக்கு மரியாதை வந்தது. 1961 இல் மொரிஷியஸ் தமிழ் ஆசிரியர் களுக்குத் தாய்த் தமிழகத்தில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று மொரீசியஸ் அரசு முடிவு செய்தது. அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் இதற்கு இசைவு தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழகத்தில் மொரீசியஸ் தமிழ் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றனர். 1970 வரை இது தொடர்ந்தது. இக்காலங்களில் மொரீசியசில் 75 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை 1970இல் 175 ஆனது 1983இல் 300 ஆனது.

மகாத்மா

மொரீசியஸ் இந்தியர்களின் உரிமைக்குப் போராடியவர்களில் மகாத்மாவிற்கும் பங்கு உண்டு என்பது பலரும் அறியாதது. மகாத்மா பாரிஸ்டர் மணிலால் மதன்லால் என்பவருக்கு எழுதிய கடிதங்களில் இச் செய்தி வருகிறது. மகாத்மாவின் தொகுப்பில் இதைக் காணமுடியும். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா இருந்தபோது (1901) தம்பு நாயுடு என்பவர் மொரீசியஸ் இந்திய மக்கள் படும் துன்பத்தை விரிவாகச் சொல்லி இருக்கிறார். காந்தியை அவரது பேச்சு பாதித்தது. அவர் மொரீசியஸ் இந்தியர்களை நேரில் சந்திக்க விருப்பப்பட்டார். அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மகாத்மா தன் குடும்பத்துடன் ஒருமுறை நௌசெரா என்ற கப்பலில் இந்தியாவுக்கு வந்த போது (1901) மொரீசியஸ் தீவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கப்பல் மொரீசியசில் 20 நாட்கள் நிற்கும் என்று கப்பல் தலைவன் சொன்னான். மகாத்மா அந்த சமயத்தைப் பயன் படுத்திக் கொண்டு மொரீசியஸ் இந்தியர்களைச் சந்தித்தார். (1901 நவம்பர் 13) தகேர் பாத் என்ற இடத்தில் இந்தியர்கள் மகாத்மாவுக்கு வரவேற்பு கொடுத்தனர். மகாத்மா இந்த சந்திப்பில் தீவில் வாழ்ந்த இந்தியர்களின் பிரச்சினைகளை விரிவாக கேட்டு அறிந்து கொண்டார்.

இதன் பிறகு மகாத்மா லண்டன் சென்ற போது அங்கே இருந்த மணி லால் மதன்லாலைச் சந்தித்தார். மொரீசியஸ் இந்தியர்களைப் பற்றிப் பேசினார். மணிலால் காந்தியிடம் மிகுந்த அன்புடையவர். எளிமையானவர். மகாத்மா அவரிடம் மொரீசியசுக்கு நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என்றார் அவர். 1909ல் மொரிசியஸ் சென்றார். அங்கு இந்தியர்களைக் கலந்து ஆலோசித்தார். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மணிலால் மொரீசியசில் இந்துஸ்தானி என்ற பத்திரிகையை நடத்தினார். அதில் இந்தியர்களின் பிரச்சனைகளை விரிவாக எழுதினார். தமிழர்களின் கல்வி பற்றியும் ஒரு தலையங்கத்தில் எழுதினார்.

அவர் இந்தியாவுடன் மொரிசியாவை இணைக்க வேண்டும் என்றார். அந்தத் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடம் உங்களின் அடையாளம் இந்தியா. அதன் பண்பாடு என்று விரிவாக விளக்கினார். தமிழர்கள் இந்த அறிவுரையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழர்களிடம் மொழி அடையாளம் குறைய ஆரம்பித்தாலும் இந்திய அடையாளம் தொடர்ந்து இருந்ததால் மொழி காப்பாற்றப்பட்டது.

எது அடையாளம்

மொரீசியஸ் தமிழர் குறித்து விரிவாக நூல் எழுதிய ராஜாராம் “இன்று மொரீசியசில் தமிழ் பண்பாட்டைப் பாதுகாப்பது கோவில்கள் தாம்” என்று சொல்லுகிறார் (பக் 6 18). கோவில்களில் சமய பேருரைகள் கிரியோல் மொழியில் நடந்தாலும் தேவார திருவாசகங்கள் அப்படியே பாடப்படுகின்றன.

இந்தத் தீவின் தமிழர்களுக்கு பிடித்த கடவுள்கள் முருகனும் அம்மனும். இந்த தெய்வங்களின் சடங்குகள் விழாக்கள் எல்லாமே இவர்களது அடையாளங்கள். ஒரு வகையில் மொழியைக் காப்பாற்றுவது இந்த அடையாளங்கள்தாம்.

தமிழ் இலக்கியம்

இலங்கையில் தமிழ் இலக்கியம், விமர்சனம் போன்றவற்றை கீழை நாடுகளுடன் ஒப்பிடக் கூடாது. மொரீசியசும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தத் தீவில் தமிழ் இலக்கியம் என்பது அறிவுரை கூறும் பக்திப் பாடல்களின் தொகுப்புதான்.

1930 -1950ஆம் ஆண்டுகளுக்கு இடையில் திண்ணைப் பள்ளி ஆசிரியர்கள் கவிதைகள் எழுதினார்கள். இதே காலத்தில் தமிழகத்துக்கு வந்து போன தமிழ் ஆசிரியர்களும் கவிதைகள் எழுதினார்கள். மொரீசியசின் முதல் கவிஞராக துளசிங்க நாவலர் என்பவரைச் சொல்லுகின்றனர்.

இவர் பலமொழிகள் அறிந்தவர். நாடக ஆசிரியர். இவரது பூர்வீகம் மதுரை. ஆங்கிலேயரின் படையில் ராணுவ வீரராக இருந்து இந்தத் தீவிற்கு வந்தவர். தையல் தொழில் செய்திருக்கிறார். மூன்று முறை மதுரைக்கு சென்று இருக்கிறார். அந்த செல்வாக்கு இவரிடம் உண்டு. இவர் எழுதிய தியானாபிமானமாலை கீதங்கள் என்னும் கவிதை தொகுப்பு ஆரம்பகாலத்தில் வந்தது.

இவரைத் தவிர பண்டிதர் பெருமாள், சுப்பராயன், சுப்பையா முதலியார், வடிவேலன் செல்வன், கவிநாயகம் பிள்ளை என சிலர் கவிதைகள் எழுதினர். ஸ்ரீ மீனாட்சி அம்மை பதிகம், முருகவேல் பாமாலை, கவிதையா தமிழ் கொலையா (கட்டுரை) போன்றவை அச்சில் வந்த நூல்கள். பெருமாள் சுப்பராயன் ஆங்கிலம் பிரெஞ்சு மொழி அறிவுடையவர். இவர் றாவெங்கார் என்ற பிரெஞ்சு நாவலை மொழி பெயர்த்திருக்கிறார். மொரீசியத்தில் இந்திய பண்பாட்டை தீவிரம் ஆக்கி மீட்டெடுத்ததில் இவருக்கு இடம் உண்டு.

1950க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலங்களில் தமிழ் மகா சங்கம், தமிழ் தர்ம சங்கம், கலை நிலையம். என பல சங்கங்கள் தோன்றியிருக்கின்றன. இவை ஆண்டு மலர்களை வெளியிட்டுள்ளன. இவற்றிலும் தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள் வந்துள்ளன.

1980 ஆகஸ்ட் மாதம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மகாநாடு இந்தத் தீவில் நடந்தது. அப்போது ஒரு மலர் வெளியிட்டனர். அதிலும் இந்தத் தீவில் உள்ள பலர் கவிதைகள் எழுதியுள்ளனர். 1985இல் தமிழர் கழகம் மொரீசியத்தில் குடியேற்ற நினைவாக ஒரு மகாநாடு நடத்தியது. மலர் வெளியிட்டது. இதிலும் நல்ல கட்டுரைகள் உள்ளன. பாலகிருஷ்ணதாண்டவராயன், தேவராஜன், கனக சபை என்பவர்களின் கட்டுரை குறிப்பிடத்தகுந்தவை.

1987 தமிழ் லீக் அமைப்பு சிலப்பதிகார காவியத்தை Anklet என்னும் தலைப்பில் நாடக மாக்கியது. ஆங்கிலத்தில் அமைந்த இந்த நாடகம் மொரீசியத்தின் தலைநகரில் பிளாசா தியேட்டரில் நடந்தது. 2500 பார்வையாளர்கள் வந்திருந்தனர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. இந்த நாடகத்தை ஆரம்பித்து வைத்துப் பேசினார்.

மொரீசியஸ் நாட்டார் பாடல்களில் சோகம் அதிகம். ஒப்பந்தக் கூலிகள் பகலிலே தோட்ட வேலை முடித்துவிட்டு மாலையில் நாட்டார் பாடல்களைப் பாடி வேதனையைத் தீர்த்துக் கொண்டார்கள். எல்லாம் தமிழகத்தில் அவர்கள் பாடியவை, கேட்டவை. அப்போது நல்ல தங்காள் கதை பரவலாக அறியப்பட்ட கதையாக இருந்தது. தமிழக நாட்டார் பாடல் தொனியில் மொரீசியஸ் தோட்டத் தொழிலில் துன்பத்தை இணைத்துப் பாடவும் செய்தார்கள்.

கிரியோல் மொழியில் உள்ள செகா பாடலில் தமிழின் தாக்கம் அதிகம் உள்ளது என்கிறார் ராஜா ராம். இப்பாடல்களில் தமிழ் செல்வாக்கு உள்ளது. செகா பாடல்களுக்குப் பின்னணியாக இசைக்கப்பட்ட மரோவான் என்ற இசைக்கருவி பறை ஓசையின் தாக்கத்தை உடையது.

கிரியோல் பாடலின் பின்னணி இசைக்கருவி ஆப்பிரிக்க மக்களின் கசாகாசா ஆகும். இது தமிழ்ச் சொல் என்கின்றனர். தமிழரின் தோல் இசைக் கருவியை வைத்து உருவாக்கப்பட்டது.

பிஜி தீவின் தமிழர்கள் தங்கள் மொழி அடையாளத்தை இழந்ததற்கு தங்களின் பண்பாட்டை இழந்தது தான் காரணம் என்று சமூக இயலாளர்கள் கூறுகின்றனர். மொரீசியஸ் தமிழர்கள் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர் என்றாலும் தங்களைத் தமிழர்களாக அடையாளம். காணுவது தங்களின் பண்பாட்டு அடையாளத்தைத் தொடர்ந்து பின்பற்றுவது தான் காரணம் என்று இவர்களின் வரலாற்றை எழுதிய ராசாராம் சொல்லுகிறார்.

- அ.கா.பெருமாள், ஓய்வு பெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்

Pin It