ராஜபக்சேயின் தமிழின ஒழிப்புப் போர் திமிருடன் தொடருகிறது! எத்தனை இடர்வரினும் விடுதலைப் போராட்டம் தொடரும்! உணர்வெழுச்சியுடன் கிளர்ந்து எழுவீர்! உலகத் தமிழர்களுக்கு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அறைகூவல்!!
ராஜபக்சேயின் தமிழின ஒழிப்புப் போர் துணிவுடனும், திமிருடனும் தொடங்கிவிட்டது. உலகில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. எமக்காக எந்த ஒரு நாடும் குரல் கொடுக்கவில்லை. உலகமே கண்களை மூடிக் கொண்டு விட்டது. ஆனாலும் தடைகளைத் தகர்த்து விடுதலைப் போரைத் தொடருவோம். உலகம் முழுதும் வாழும் தமிழர்களே, உணர்வெழுச்சியுடன் கிளர்ந்து எழுங்கள் என்று, தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், தமது மாவீரர் நாள் உரையில் அறைகூவல் விடுத்துள்ளார்.
நவம்பர் 27 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு கிளிநொச்சியில் அவர் ஆற்றிய உரை - உலகம் முழுதும் பரப்பப்பட்டது; உரையின் விவரம்:
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச் சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண் முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.
மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான்.
அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான்.
சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்தி லிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்.
ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது. சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்று திரண்டு நிற்கின்றனர்.
ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத் தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்துநிற்கின்றனர். எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்துநிற்கின்றனர். போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டு நிற்கின்றனர்.
முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீரவிடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும்படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம். நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்துநிற்கிறோம்.
நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம். இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எனது அன்பார்ந்த மக்களே!
நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன. அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன.
மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது; அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது.
ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.
பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது.
சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது.
அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித; திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.
அந்நியத் தலையீடுகள்
எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப் பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடி நிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது.
போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்;த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலக நாடுகள் எமது பிரச்சினையில் எதிர் மறையான தலையீடுகளைச் செய்வது தான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.
இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல. அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது.
தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது. அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ் விற்காகவோ செய்யப்பட்டதன்று. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள்மீது கட்டிவிட முயற்சித்தது.
ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்திவிட இந்தியா தீவிரமாக முயற்சித்தது. தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டுநிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.
சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அதுபற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன.
எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று, தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம். இந்தியா இணங்கமறுத்தது. இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.
அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.
புலம் பெயர்ந்த தமிழர்கள்
இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.
எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணை போகின்றன.
எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற் சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.
இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்பு வைத்திருக்கின்றன சமாதானப் பேச்சுக்களிற் பங்கு கொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழி செய்திருக்கின்றன.
அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளி விட்டிருக்கிறன. இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து வருகிறது.
இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது. தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது.
முழுஉலகமும் முண்டுகொடுத்துநிற்க, போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது. போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது. அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மவுனித்துப் பேசமறுத்தன.
மயானமான வரலாற்று மண்
"சமாதானத்திற்கான போர்" என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை" என்றும் "தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்" என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.
மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்து விட்டது. ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது.
சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது. தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது. வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.
மொத்தத்தில், சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர் தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது. எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர் பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது.
சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது. இதன் உச்சமாக, தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன.
அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி, பொருளாதாரத் தடைகளை விதித்து, போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து, தமிழரைக் கொன்றுகுவித்து, இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடிமகிழ்கிறது.
தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது. கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கிவிட்டதாகவும் சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது. பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டு விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது. புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.
எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது குறைத்தே மதிப்பீடுசெய்கிறது. பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம்.
எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த் திட்டங்களை வகுக்கிறோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்.
புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.
உச்சந்தலையில் ஆப்பு
வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய ஷஷஎல்லாளன்|| நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது. இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது. அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.
ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது, தமிழனை அழிக்க நினைப் போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.
இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கிவிடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப் போவதில்லை.
தொடர்ந்தும் கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது. எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.
தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசை திருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது.
இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன். வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது.
தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.
தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற் கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத் திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.
இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.
சிங்களப் படைகளின் “அக்கினிக்கீல” என்ற பாரிய படைநடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம்காட்டியது. எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது.
உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.
மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப் பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்திவருகிறது. ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்;த்திவருகிறது.
அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கிவருகிறது. கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்துவருகிறது. தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது. செய்தியாளர்களோ தொண்டுநிறுவனங்களோ செயற்படமுடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்துவருகிறது.
உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை. இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன.
இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத் தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.
சமாதானம் பேசியே சாகடிக்கப்பட்ட தமிழ்ச் செல்வன்
இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம் மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்து போயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப் புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது.
அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக் கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது. எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டு தோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச் செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது. உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழவைத்திருக்கிறது.
சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன. சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும்
இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன? சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா? இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன.
எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.
எனது அன்பார்ந்த மக்களே!
நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம். நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம்.
நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடி வருகிறோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டி யெழுப்புவதற்காகவே நாம் போராடிவருகிறோம்.
எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது. மாறாக, எம்மண்மீதும் மக்கள்மீதும் பெரும் இனஅழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது.
அறுபது ஆண்டுக்காலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல்கொடுக்கவில்லை. ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.
பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்து கிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத் தெறிந்து போராடுவோம். எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர்வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து, அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
குண்டு வீழ்ந்த போதும் தடைபடாத ஒலிபரப்பு
நவம்.27 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிரபாகரன் மாவீரர் நாள் உரையைத் தொடங்குவதற்கு முன் 4.30 மணிக்கு, அவரது உரையை ஒலிபரப்பும் ‘புலிகளின் குரல்’ வானொலி மீது சிங்கள விமானப் படை குண்டுகளை போட்டு - வானொலி நிலையத்தையே தரைமட்டமாக்கியது. பிரபாகரன் உரை கேட்க வெளியே பெரும் திரளாக மக்கள் திரண்டிருந்தபோது குண்டு வீச்சில் சிக்கி, 4 பெண் செய்தி அறிவிப்பாளர்கள் உட்பட 9 பேர் பலியானார்கள்.
இதன் மூலம் பிரபாகரனின் உரை ஒலிபரப்பைத் தடுக்கலாம் என்று சிங்கள அரசு கருதியது. ஆனாலும் மாவீரர் நாள் உரை திட்டமிட்டபடி வேறு பகுதியிலிருந்து அதே 5.45 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது. இதுவரை புலிகளின் குரல் வானொலி - பல்வேறு பகுதிகளில் செயல்பட்டபோது சுமார் 15 முறை தாக்குதலுக்கு உட்பட்டது. ஆனாலும் தொடங்கப்பட்ட 17 ஆண்டு காலத்திலிருந்து ஒருநாள்கூட ஒலிபரப்பு தடைபட்டதில்லை என்று, செய்திகள் கூறுகின்றன.