tribes 455நிலைகுடிச் சமுதாயங்களின் பண்பாட்டுப் புற வெளிப் பரப்பில் இரவலர் நிலையில் மேற்படி நிலைகுடிச் சமுதாய மக்களைப் புரவலராகக் கொண்டு, தமது இருத்தல், வாழ்வியல் தேவை, மற்றும் வளமைக்கென இடம் விட்டு இடம் பெயர்ந்திடும் வாழ்வியல் பாங்கை, மேற்கொண்டு வாழும் மக்கள் குழுவினரே அலைகுடி மக்கள்'. பொதுவாக, நாடோடிகள், நாடோடி மக்கள் என அறியப்படும் இம்மக்கள் நிலைகுடியின் பண்பாட்டுத் தளத்திலிருந்து அதிகார வர்க்கத்தினரால் சமூகத்தின் விளிம்பு நிலைக்கே தள்ளப்படுவதால், விளிம்புநிலை மக்கள்' என்று சமூக அறிவியலாளரால் அடையாளப் படுத்தப்படுகின்றனர். தங்களை நாடோடிகள், நாடோடி மக்கள் என்று அழைப்பதை இழிவழக்காகவே இம்மக்கள் கருதுவதாலும் பழங்குடிகள், மூன்றாம் பாலினர் உள்ளிட்ட பல் வேறு மக்கள் குழுக்களும் பொதுவாக விளிம்புநிலை மக்கள் என அழைக்கப்படுவதாலும் ‘அலைகுடி மக்கள்’ என்னும் சொல்லாட்சியே இம்மக்களைக் குறிப்பிடப் பொருத்தமானதாக அமையும்.

அலைகுடி மக்களின் இரு வகை நிலைகள்

தம்மைத் தாமே இடப்பெயர்விற்கு உட்படுத்திக்கொள்ளும் அலைகுடி மக்களின் அலைநிலையின் அளவைப் பொறுத்து, முழுதளாவிய அலைகுடிச் சமுதாயங்கள், பகுதி நிலை அலைகுடிச் சமுதாயங்கள் என இவர்தம் சமுதாய நிலைகள் இரு வகைமைகளாக இனங் காணப்படுகின்றன. இருப்பினும், இன்றைய நிலையில் பெரும்பான்மையான அலைகுடிச் சமுதாயங்கள் பகுதி நிலை அலைகுடிச் சமுதாயங்களாகவே செயல்படுகின்றன.

அலைகுடி மக்கள் வகைப்படுத்தம்

தமது இருத்தல், வாழ்வியல் தேவை, வளமை என்பனவற்றிற்காக நிலைகுடிச் சமுதாயங்களைச் சார்ந்துள்ள இரவலர்-புரவலர் தொடர்புறவின் அடிப்படையில், கீழ்க் காணும் மூன்று வகைமையினராக அலைகுடி மக்கள் வகைப்படுத்தம் செய்யப்படுகின்றனர் :

  1. சாதிச் சார்புடைய புரவலர் ஆதரவு பெறும் அலைகுடிச் சமுதாயத்தினர்.
  2. சமயச் சார்புடைய புரவலர் ஆதரவு பெறும் அலைகுடிச் சமுதாயத்தினர்,
  3. வரைமுறையற்ற புரவலர் ஆதரவு பெறும் அலைகுடிச் சமுதாயத்தினர்.

சாதிச் சார்புடைய புரவலர் ஆதரவு பெறும் அலைகுடிச் சமுதாயத்தினர்க்குத் தக்க எடுத்துக்காட்டாக, வன்னியர் சாதியினரைச் சார்ந்து வாழும் சாதிப் பிள்ளைகள் எனும் அலைகுடி மக்களைக் குறிப்பிடலாம். வன்னிய சாதியினர்க்கு உரிய வீரக் கொடி உள்ளிட்ட வழிபடு பொருள்களுடன் வன்னிய சாதியைச் சார்ந்தோரின் அனைத்து வீடுகளுக்கும் நேரிடையாகச் சென்று அவ்வீட்டினர் வழங்கும் அரிசி, பணம் உள்ளிட்டவற்றைப் பெறுவதன் வழியே இச்சாதிப் பிள்ளைகள் தமது வாழ்வியல் தேவையை நிறைவு செய்து கொள்கின்றனர். சைவ சமயத்தவர் வீடுகளுக்கு எல்லாம் நேரிடையாகப் போய் நாழி மணி அடித்து அரிசி உள்ளிட்ட தானிய தவசங்கள், பணம் பெற்று வாழும் நாழி மணிக்காரர் என்கிற கண்ட்டா ஜங்கம் என்பாரும் வைணவ சமயத்தார் வீடுகளுக்குப் பெருமாள் அனுமன் உள்ளிட்ட கடவுளர் வேடமிட்டு, அவர்கள் தரும் தானியங்கள், பணம் ஆகியவற்றைப் பெற்றுத் தமக்கான வாழ்வியல் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் பகல் வேஷக்காரர் என்னும் ஜங்கம பண்டாரம் என்பாரும் சமயச் சார்புடைய புரவலர் ஆதரவு பெறும் அலைகுடிச் சமுதாயத்தினர்க்குத் தக்க எடுத்துக்காட்டுகள் ஆகும். சாதி, சமய வேறுபாடின்றிப் பொதுச் சமூகத்தைச் சார்ந்த அனைவரிடமிருந்தும் தானியம், பணம், காசு உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தமது வாழ்வியல் தேவையை நிறைவு செய்யும் அலைகுடி மக்களுக்குச் சாட்டையடிக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், கழைக் கூத்தாடிகள்', பொம்மலாட்டக்காரர்' உள்ளிட்டோரைச் சான்றுகளாகச் சொல்லலாம்.

அலைகுடி மக்கள் மீது நிலவும் அழுத்தங்கள்

புரவலரைச் சார்ந்து விளிம்புநிலை மக்களாக இரவலர் வாழ்க்கையை மேற்கொள்ளும் அலைகுடி மக்கள் மீது சமூகப் பண்பாட்டு அழுத்தங்கள்', சமூகப் பொருளியல் அழுத்தங்கள், சமூக அரசியல் அழுத்தங்கள் எனப் பல்வேறுபட்ட அழுத்தங்கள் குரலற்ற இம்மக்களின் குரல்வளையைத் தொடர்ந்து அழுத்தி வருகின்றன. ஆங்கிலக் காலனியாதிக்க அரசு அலைகுடி மக்களைக் குற்றப் பழங்குடிச் சட்டம் என்பதன் வாயிலாகப் பொதுச் சமூகத்தின் முன்னால் பரம்பரைக் குற்றவாளிகள் என்று நிலை நிறுத்தியது. இந்தியா விடுதலை அடைந்த போது மேற்படிச் சட்டத்தை நீக்கியதுடன், குற்றப் பழங்குடிகள் என்றிருந்த இழி பெயரை மாற்றிச் சீர்மரபுப் பழங்குடிகள்' என்கிற மாற்றுச் சொல்லையும் இம்மக்களுக்கு இட்டது. இருப்பினும், குற்றச் செயலில் வழக்கமாக ஈடுபடுவோர் எனக் கூடுதலான பெயரையும் இவர்களுக்கு அளித்து, அதன் வழியே சந்தேகத்தின் பேரிலான வழக்கு என்கிற பெயரில் முதலில் அலைகுடி மக்களைக் கைது செய்து, அதைத் தொடர்ந்து முடிக்கப்படாத மற்றும் முடிக்கவியலாத திருட்டு, கொள்ளை உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை இம்மக்கள் மேல் பொய்யாகச் சுமத்தி வருகிறது. இதனால், அலைகுடி மக்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுதல், காவல் நிலைய விசாரணை எனும் பெயரில் காவல் நிலைய மரணங்களாகவே முடிவடைதல் என அலைகுடிகள் மீதான வன்கொடுமைப் பட்டியல் நீள்கிறது. கடந்த காலக் கடலூர் மாவட்ட ராஜாக்கண்ணு (குறவர்) மரணம், அண்மைக்காலப் புதுக்கோட்டை மாவட்ட மணிக் குறவர்) மரணம் என்பன மேற்கூறியவற்றிற்கு இரு அழியாச் சான்றுகள் ஆகும்.

அலைகுடி மக்கள் இடையே நிலவிடும் அடையாளச் சிக்கல்கள்

'சென்னை மாநிலம்' என்று அமைந்திருந்த மிகப் பெரிய ஆட்சிப் பரப்பானது மொழிவழி மாநிலங்களாக - ஆந்திரம், கேரளம், கருநாடகம், தமிழ்நாடு எனப் - பிரிந்துற்ற பிறகு, அலைகுடி மக்கள் மொழிச் சிறுபான்மையினராகத் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தோ - ஆரியக் கிளைமொழி பேசுநராக (நரிக்குறவரது வாக்ரி போலி, குடுகுடுப்பைக்காரரது கணிக்கர் கோஷ்டி', இலம்பாடிகளின் சுவாகிலி, பொம்மலாட்டக்காரரது மராத்திக் கிளைமொழி) அறியப்பட்டாலும் வந்தேறிகளாகவே மாநிலப் பெரும்பான்மையினரான உள்ளூர் நிலை குடி மக்களால் கருதப்படுகின்றனர். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரும்பாலான அலைகுடி மக்கள் தமக்கு முறையான இனக்குழு அடையாள அறிந்தேற்பு இன்மையால், இட ஒதுக்கீட்டிற்கான முன்னுரிமைப் பட்டியல்களில் தங்களுக்கான இடம் இன்னது என்று அறியாத நிலையில், அடையாச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, அலைகுடி மக்களுடைய இனக்குழுப்பெயர்மையில் நிலவிடும் வேறுபட்ட புற அழை பெயர் மற்றும் அக அழை பெயரின் பன்மியத் தன்மையால், போலி / பொய் பட்டியல் பழங்குடி உரிமை கோரல்கள், பெருமளவில் நிலவுகின்றன. சான்றாக, அடியன் என்கிற பட்டியல் பழங்குடிக்கான உரிமை கோரலை ஆதியன் என்னும் பெயரில் பூம் பூம் மாட்டுக்காரரும் காட்டுநாயகன்' பட்டியல் பழங்குடி உரிமை கோரலை ஒரு புறம் குடுகுடுப்பைக்காரரும் மற்றொரு புறம் வேட்டைக்காரர் என்னும் கொறவர் உள் பிரிவினரும்; இருளர் பட்டியல் பழங்குடி உரிமை கோரலை பாம்பாட்டி என்னும் பெயரில் பாமு குர்ரு என்னும் கொறவர் உள் பிரிவினரும்; கோளகர்' என்கிற பட்டியல் பழங்குடிக்கான உரிமை கோரலைச் சோழகர் எனும் பெயரில் சாட்டையடிக்காரரும்; மலைப் பண்டாரம்' என்னும் பட்டியல் பழங்குடிக்கான உரிமை கோரலை வீணை ஜோஸியக்காரரும்; 'மன்னான்' பட்டியல் பழங்குடிக்கான உரிமை கோரலை மன்னன் என்கிற பெயரில் மன்ன தாசரியும் பெற்று வருவதைக் குறிப்பிடலாம்.

அலைகுடி மக்கள் இடையே நிலவும் சிக்கல்களும் பரிந்துரைக்கும் தீர்வுகளும்

அலைகுடி மக்களுடைய சமுதாய நிலை குறித்து முழுதளாவிய, முறையான இனக்குழுவரைவியல் மதிப்பீட்டாய்வினைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு, உரிய இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அலைகுடி மக்கள் வகைமைகளை இனங்கண்டறிந்து, அவற்றிற்கு உரிய முன்னுரிமைப் பட்டியல்கள் எவை, எவை என்று முறையாக அறிந்தேற்புச் செய்யப்பட வேண்டும். இதற்கு முன்னதாக, அலைகுடி மக்களின் சமுதாய நிலை ஒப்புதல் அளிப்பது தொடர்பாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலுவைப் பரிந்துரை அறிக்கைகள் மீது உடனடியாக உரிய மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சீர் மரபினர் பட்டியலில் உள்ள கொறவர் உள் பிரிவுகள் அனைத்தும் முதலில் நீக்கம் செய்யப்பட்டுப், பின்னர் பழங்குடிப் பட்டியலில் இடம்பெறும் மலைக்குறவன் என்பதன் கீழே ஓர் உள் வகைமையாக இணைக்கப்பட வேண்டும்; இதுபோலவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் தற்போது உள்ள எருகுலா என்பது பட்டியல் பழங்குடியாக முடிவு செய்யப்பட்டு, மலைக்குறவன் கீழாக மற்றொரு உள் வகைமையாக இணைக்கப்பட வேண்டும்.

நிறைவுரை

நாட்டுப்புற பண்பாடு மற்றும் வெகுமக்கள் பண்பாட்டின் பன்மியத் தன்மைக்கும் உயிர்ப்புத் தன்மைக்கும் அலைகுடிச் சமுதாயங்கள் அளப்பரிய பங்கு , பணிகளை ஆற்றியுள்ள போதிலும் நம் நாட்டின் ஒட்டு மொத்தப் பண்பாட்டுத் தொகுப்பிற்குள் இவற்றிற்கான இடம் இதுவரை அறிக்கப்படவே இல்லை.

நமது நாட்டின் பண்பாட்டு வரைபடத்தில் இத்தகைய வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும் என்கிற சமூகவியலாளர் எஸ்.சி. துபே - அவர்களுடைய கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தக்க தருணமும் இதுவே.

- முனைவர் சி.மகேசுவரன்

Pin It