துணைத் தளபதி மார்க்கோஸ், மெக்சிகோவில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சியாபாஸ் விவசாய இயக்கத்தின் துணைத் தளபதி. மெக்சிக அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த, ‘ஜபடிஸ்டாக்கள்' என்று தங்களை அழைத்துக் கொண்ட ஒரு பழங்குடி கெரில்லாப் படைக்கும் தலைமை தாங்கி, மெக்சிக ராணுவத்திற்கு எதிராக 1994 ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று போரைத் தொடங்கி, மெக்சிகோவின் தென்கிழக்கு மாநிலமாகிய சியாபாசின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதன் மூலம் மெக்சிக அரசியலின் போக்கையே மாற்றியவர். இவர் போர்ச்சூழலில் எழுதிய படைப்புகள் - கவித்துவம் நிறைந்த அரசியல் எழுத்துகள்,கதைகள், பழங்குடி மக்களின் தொல்கதை விவரணைகள், கடிதங்கள் என விரிகின்றன. கடந்த பத்தாண்டுகளில் மார்க்கோஸ் எழுதிய மிகச் சிறந்த படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய "எதிர்ப்பும் எழுத்தும்' என்ற நூலை "விடியல் பதிப்பகம்' 2005 சூலை மாதத்தில் வெளியிடுகிறது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.பாலச்சந்திரன். இந்நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா (ஓசியானியா: பாலினேஷியா, மய்க்ரோனேஷியா, மெலானேஷியா ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப் பரப்பு. ஆசியக் கண்டத்திற்குத் தென் கிழக்கில் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற தீவுகள் இதில் அடங்கும்), அய்ரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே! தென்கிழக்கு மெக்சிகோவின் மலைகளுக்கு உங்களை வரவேற்கிறோம். எங்களை நாங்கள் அறிமுகப்படுத்திக் கொள்கிறோம். நாங்கள்தான் ஜபடிஸ்டா தேசிய விடுதலைப் படை. பத்தாண்டுகளாக, போர்புரிவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டவாறு இந்த மலைகளில்தான் நாங்கள் வசித்தோம்.
இந்த மலைகளில்தான் நாங்கள் ஒரு படையைக் கட்டினோம். கீழே, நகரங்களிலும் பண்ணை நிலங்களிலும் எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை. எந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக் காட்டிலும் எங்களுடைய உயிர்கள் குறைவான மதிப்பை உடையவையாகவே இருந்தன. நாங்கள் கற்களைப் போல, சாலையோரத்துக் களைச்செடிகள்போல இருந்தோம். எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன. நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம். நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம். எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை. நாங்கள் உயிர் வாழவே இல்லை.
சர்வதேச அளவில் ‘புதிய தாராளவாதம்' என்ற பெயரால் அறியப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பொருட்படுத்தப்பட வேண்டியவர்களல்ல. நாங்கள் உற்பத்தி செய்யவில்லை, நாங்கள் வாங்கவில்லை, நாங்கள் விற்கவில்லை. மிகப் பெரும் மூலதனத்தின் கணக்கு வழக்குகளில் நாங்கள் வெறும் பூஜ்ஜியங்கள். பிறகு எங்களை நாங்களே கண்டறிவதற்காகவும், கற்களையும் களைச் செடிகளையும்போல் மறக்கப்படுவதன் வேதனையிலிருந்து விடுபடுவதற்காகவும் நாங்கள் மலைகளுக்குச் சென்றோம்.
இங்கே, தென்கிழக்கு மெக்சிகோவின் மலைகளில், இறந்துபோன எமது மக்கள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள். மலைகளில் இன்னும் உயிர் வாழ்கின்ற இறந்துபோன எமது மக்கள், நிறைய விசயங்களை அறிந்திருக்கிறார்கள். தங்களுடைய மரணத்தைப் பற்றி அவர்கள் எங்களிடம் பேசுகிறார்கள், அவர்கள் பேசுவதை நாங்கள் கேட்கிறோம். சவப்பெட்டிகள் பேசுகின்றன, வேறொரு கதையை அவை எங்களுக்குச் சொல்கின்றன. அந்தக் கதை நேற்றிலிருந்து வந்தது, எதிர்காலம் வரையில் விரிகிறது. மலைகள் எங்களிடம் பேசின, நாங்கள் சாதாரணமானவர்கள், எளியவர்கள். அதிகாரம் சொல்வதைப் போன்றே நாங்கள் எளிய மக்கள்.
ஒவ்வொரு பகலிலும் அடுத்து வரும் இரவிலும், தனது கொடூரமான வெற்றிகளைத் திரும்பத் திரும்ப நிகழ்த்த வேண்டுமென்று அதிகாரம் விரும்புகிறது. எங்களிடம் துயரங்களையும் சாவையும் பரப்புகின்ற போலி மனிதனாகிய கஸ்மூஜுல் எங்கள் நிலங்களை ஆள்கிறான், ராட்சதப் போர்க் கருவிகளை அவன் வைத்திருக்கிறான். முட்டாள்களாகவும், ஞாபக மறதியுடையவர்களாகவும் எமது மக்களை மாற்றுகின்ற பொய்யர்களை, எத்தர்களின் அரசாங்கம் எங்களிடம் அனுப்புகிறது. எனவேதான் நாங்கள் போராளிகளானோம். எனவேதான், நாங்கள் போராளிகளாக இருக்கிறோம். எமது மக்கள் சாவதை, எமது மக்கள் ஏமாற்றப்படுவதை இனியும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மறக்கப்படுவதை இனியும் நாங்கள் விரும்பவில்லை.
எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால், நாங்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டுமென்று எங்களிடம் சொன்னது மலை. எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால், எங்கள் முகங்களை மறைத்துக் கொள்ள வேண்டுமென்று எங்களிடம் சொன்னது மலை. எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால், எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று எங்களிடம் சொன்னது மலை. எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால், எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று எங்களிடம் சொன்னது மலை.
மலைகளில், இறந்தவர்கள் வாழ்கிறார்கள்: இறந்துபோன எமது மக்கள்! அவர்களுடன் வோட்டானும் இகாலும் (வோட்டான் : மாயன் மக்களின் காவல் தெய்வம். இகால்: மாயன் மக்களால் வழிபடப்படும் இறப்பின் கடவுள். இரவு முழுவதும் அலைந்து திரிகின்ற இந்தக் கடவுள், மனித மாமிசத்தைத் தின்பதற்காக, மனிதர்களைத் தாக்குவதாக அம்மக்கள் நம்புகின்றனர்) வாழ்கிறார்கள். ஒளியும் இருளும் வாழ்கின்றன. ஈரமானவையும் ஈரமற்றவையும் வாழ்கின்றன. நிலமும் காற்றும் வாழ்கின்றன. மழையும் நெருப்பும் வாழ்கின்றன.
உண்மையான மனிதர்களுக்கு உண்மையான தலைவனுக்கு மலையே வீடு. நாங்கள் யாராக இருக்கிறோம் என்பதை, உண்மையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கிறோம் என்பதை, இங்கேதான் நாங்கள் அறிந்து கொண்டோம். இங்கேதான் நாங்கள் நினைவு கூர்ந்தோம்.
எங்கள் கைகள் எங்கள் குரலால் வலுவடைய, எங்கள் முகம் புதிதாய்ப் பிறக்க, எங்கள் பெயர் மீண்டும் சூட்டப்பட, ‘பலம் நா'விலுள்ள நான்கு முனைகளின் மய்யமாக எமது கடந்த காலம் இருக்க, மனித குலத்தை வரையறுக்கும் நட்சத்திரம் பிறந்தது; அய்ந்து பகுதிகள் சேர்ந்து உலகமாக உருவாயின என்பதை அது நினைவுபடுத்துகிறது. மழைத்தேவன் சாகோப் குதிரையில் சவாரி செய்து, மழையைப் பொழியும் பருவத்தில் மீண்டும் ஒருமுறை நாங்கள் இறங்கி வந்தோம். எமது மக்களுடன் பேசுவதற்கு அறுவடையை முன்னறிவிக்கும் புயலை நிகழ்த்துவதற்கு.
‘தொடங்கும்' ஆண்டில் நாங்கள் போரைத் தொடங்கினோம். இந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினோம் - எங்களை உங்கள் உள்ளத்தில் கொண்டு வந்து சேர்த்த பாதை இது. இன்று உங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்ற பாதை இது. நாங்கள்தான் ‘ஜபடிஸ்டா தேசிய விடுதலைப் படை'. செவிமடுக்கப்படுவதற்காக யுதமேந்துகின்ற ஒரு குரல் நாங்கள். பார்க்கப்படுவதற்காக தன்னை மறைத்துக் கொள்கின்ற ஒரு முகம் நாங்கள். பெயர் சொல்லி அழைக்கப்படுவதற்காகத் தன்னை மறைத்துக் கொள்கின்ற ஒரு பெயர் நாங்கள். செவிமடுக்கப்படுவதற்காக பார்க்கப்படுவதற்காக பெயர் சொல்லி அழைக்கப்படுவதற்காக மனிதகுலத்தையும் உலகத்தையும் அழைக்கின்ற சிவப்பு நட்சத்திரம் நாங்கள். கடந்த காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய எதிர்காலம் நாங்கள்.
எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால், எங்கள் யுதமேந்திய குரலுக்குப் பின்னால் பெயர் சொல்லி அழைக்க முடியாத எங்கள் பெயருக்குப் பின்னால் - நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால் நாங்கள் உண்மையில் நீங்களேதான். அதே சாதாரணமான, எளிய ஆண்களாகவும் பெண்களாகவுமே நாங்கள் இருக்கிறோம். எல்லா இனங்களிலும் எல்லா நிறங்களைக் கொண்ட மக்களிலும் எல்லா மொழிகளைப் பேசுகின்ற மக்களிலும் எல்லா இடங்களிலும் வாழ்கின்ற மக்களிலும் எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் எங்களைப் போன்றே மறக்கப்பட்ட ஆண்கள் பெண்களும்.
எங்களைப் போன்றே விலக்கி வைக்கப்பட்டவர்களே, எங்களைப் போன்றே சகித்துக் கொள்ளப்படாதவர்களே, எங்களைப் போன்றே ஒடுக்கப்பட்டவர்களே நாங்கள் உண்மையில் நீங்களேதான். எங்களுக்குப் பின்னால், நீங்களே உண்மையில் நாங்கள். எங்கள் முகமூடிகளுக்குப் பின்னால் இருப்பது, விலக்கி வைக்கப்பட்ட அனைத்துப் பெண்களின் முகம். மறக்கப்பட்ட அனைத்துப் பழங்குடி மக்களின் முகம் அடக்கப்பட்ட அனைத்து ஓரினப் புணர்ச்சியாளர்களின் முகம். வெறுக்கப்பட்ட அனைத்து இளைஞர்களின் முகம். அடித்து நொறுக்கப்பட்ட புலம் பெயர்ந்தோர் அனைவரின் முகம். தங்கள் சொற்களுக்காகவும், சிந்தனைகளுக்காகவும் சிறைப்படுத்தப்பட்ட அனைவரின் முகம். இழிவுபடுத்தப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களின் முகம். புறக்கணிப்புக்குள்ளாகி இறந்துபோன அனைவரின் முகம் - சாதாரணமான, எளிய ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரின் முகம் - இவர்களால் பொருட்படுத்தப்படுவதில்லை, இவர்கள் பார்க்கப்படுவதில்லை. இவர்கள் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. இவர்களுக்கு எதிர்காலமே இல்லை.
சகோதர, சகோதரிகளே! உங்களையும் எங்களையும் நீங்கள் தேடிக் கண்டறிய வேண்டும் என்பதற்காகவே உங்களை இந்தக் கூட்டத்திற்கு நாங்கள் அழைத்திருக்கிறோம். நீங்கள் அனைவரும் எங்களுடைய இதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள், நாங்கள் தனிச் சிறப்பானவர்களல்ல என்பதை உங்களால் காண முடியும்.
சாதாரணமான எளிய ஆண்களும், பெண்களுமே நாங்கள் என்பதை உங்களால் காண முடியும். உடைந்து சிதற விரும்புகின்ற கலகக் கண்ணாடியே நாங்கள் என்பதை உங்களால் காண முடியும். நாங்கள் யாராக இருக்க வேண்டுமோ, அவர்களாகவே இருக்கிறோம் என்பதை உங்களால் காண முடியும். எனவே, நாங்கள் அவர்களாக இருப்பதை நிறுத்திவிட்டு நீங்களாக மாறமுடியும். ஏனெனில், நீங்கள் உண்மையில் நாங்களே. நாங்கள் ஜபடிஸ்டாக்கள். நாம் பேசுவதை நாம் அனைவருமே கேட்க வேண்டும். நமக்கு நாமே பேசிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே உங்களை நாங்கள் அழைத் திருக்கிறோம். நாமாக இருக்கும் அனைவரையும் காண வேண்டும் என்பதற்காகவே, உங்களை நாங்கள் அழைத்திருக்கிறோம்.
சகோதர, சகோதரிகளே! இந்த மலைகளில் பேசும் சவப்பெட்டிகள் எங்களிடம் பேசின. எங்கள் துயரங்களையும் எங்கள் கலகங்களையும் நினைவுபடுத்துகின்ற பழங்காலக் கதைகளை எங்களுக்குக் கூறின. நாங்கள் உயிர் வாழும் வரைக்கும் எங்கள் கனவுகளுக்கு முடிவில்லை. எங்கள் பதாகைகளை ஒருபோதும் நாங்கள் விட்டுவிட மாட்டோம். எங்கள் மரணம் என்றென்றும் வாழும். எங்களிடம் பேசும் மலைகள் இவ்வாறுதான் கூறுகின்றன. சான் சாண்டா குரூசில் ஒளிரும் நட்சத்திரம் இவ்வாறுதான் கூறுகிறது.
‘குரூசாப்'கள் அதாவது கலகக்காரர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள். தங்கள் பாதையில் தொடர்ந்து செல்வார்கள். மனித குலத்தின் அனைத்துப் பிரிவினரோடும் சிவப்பு நிறங்கொண்ட மக்கள் முன்னேறுவார்கள். உலகம் விடுதலையடைய உதவப் போகின்ற ‘சாச்சாக் மாக்' என்னும் சிவப்பு நட்சத்திரம் என்றென்றும் வந்து கொண்டேயிருக்கும். மலையாக இருக்கும் நட்சத்திரம் இவ்வாறுதான் கூறுகிறது. அய்ந்து கண்டங்களில் வாழும் அனைவரும் ஒரே மக்களே. அனைத்து மக்களின் நட்சத்திரமாக விளங்குவது இந்த மக்களே. மனித குலமாகவும் உலக மக்களாகவும் விளங்குவது இந்த மக்களே.
தங்கள் போராட்டங்களின் மூலம் மனிதத்தன்மையை அடையப்போகின்ற உலகங்களுக்கு உதவுவதற்காக வரப்போகின்றவர்கள் இந்த மக்களே. அப்போது உண்மையான ஆணும் பெண்ணும் துயரமில்லாமல் வாழ்வார்கள். கல்லாகிப் போன இதயங்கள் நெகிழ்ந்து மென்மையாகும். மலையாக இருக்கும் நட்சத்திரம் இவ்வாறுதான் கூறுகிறது. உலகம் முழுவதிலும் அனைத்து மக்களின் மத்தியிலும் அனைத்து நாடுகளிலும் அய்ந்து மனிதர்களாக மாறப்போகின்ற மனிதனுக்கு உதவுவதற்காக வருகின்ற மக்களே, நீங்கள் அனைவரும்தான் சிவப்பு நட்சத்திரம். நீங்கள் அனைவரும்தான் ‘சாச்சாக் மாக்'. நீங்கள் அனைவரும்தான் சிவப்பு நட்சத்திரம். எங்களில் பிரதிபலிக்கப்படுபவர்கள் நீங்கள். நாம் நாங்களாக இருக்கும் நீங்கள் சேர்ந்து நடந்தால்தான் சரியான பாதையில் நம்மால் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.
சகோதர, சகோதரிகளே! எமது மூதாதையர் நட்சத்திரமாக விளங்கும் ஒரு சிலுவையை நிறுத்தியிருக்கிறார்கள். உயிர்தரும் நீர் அங்குதான் பிறக்கிறது. மலைகளில் வாழ்க்கையின் தொடக்கத்தை ஒரு நட்சத்திரம் குறிக்கிறது. மலைகளிலிருந்து இறங்கும் அருவிகள் இவ்வாறுதான் பிறக்கின்றன. பேசும் நட்சத்திரத்தின் எமது சான் சான்டா குரூசின் குரலை அவை சுமந்து வருகின்றன.
மலையின் குரல் பேசிவிட்டது. அய்ந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டால்தான் உண்மையான ஆண்கள் மற்றும் பெண்களால் சுதந்திரமாக வாழ முடியும் என்று அது கூறியிருக்கிறது. அய்ந்து மக்களும் நட்சத்திரத்தில் ஒன்றுபடும்போதுதான், உலகமாக விளங்கும் மனித குலத்தின் அய்ந்து பகுதிகளும் ஒருவரையொருவர் கண்டறியும்போதுதான், அய்ந்து மக்களும் தங்களுடைய இடத்தையும் மற்றவர்களுடைய இடங்களையும் கண்டறியும்போதுதான் - அவர்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று அது கூறியிருக்கிறது.
இன்று, உயிர் வாழ்க்கைக்கு ஆதரவாகவும், மரணத்திற்கு எதிராகவும் அய்ந்து கண்டங்களிலும் நடைபெறும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் இங்கே, தென்கிழக்கு மெக்சிகோவின் மலைகளில் ஒன்றாகச் சேர்ந்து போராடுகின்றன.
உலகம் முழுவதையும் சேர்ந்த சகோதர, சகோதரிகளே! தென் கிழக்கு மெக்சிகோவின் மலைகளுக்கு உங்களை வரவேற்கிறோம். நாம் வித்தியாசமானவர்களாக இருக்கின்ற காரணத்தாலேயே ஒத்த தன்மையுள்ளவர்களாகவும் இருக்கின்ற இடமாகிய உலகின் இந்த மூலைக்கு உங்களை வரவேற்கிறோம்.
வாழ்க்கையைத் தேடுவதற்காகவும் சாவுக்கு எதிராகப் போராடுவதற்காகவும் உங்களை வரவேற்கிறோம். மனிதகுல எதிர்காலத்தின் சார்பாகவும் புதிய தாராளவாதத்திற்கு எதிராகவும் நடைபெறும் கண்டங்களுக்கிடையிலான இந்த முதல் மாநாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.
தென்கிழக்கு மெக்சிகோவின் மலைகளிலிருந்து, பழங்குடி மக்களின் ரகசியப் புரட்சிக் கமிட்டி, ஜபடிஸ்டா தேசிய விடுதலைப் படையின் உயர் தலைமை, பூமிக்கிரகம்.