சமீபத்தில் (ஜுன் 21, 22, 23 தேதிகளில்) ஜார்க்கண்ட் மாநில ராஞ்சி மாநகரில் ஒரு அகில இந்திய மாநாடு நடந்தது. புதிய உள்ளாட்சி அரசாங்கம், பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம், (பெசா) வன உரிமைச் சட்டம் அனைத்தும் எப்படி இந்திய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை விவாதித்து, அவைகளை மேலும் வலுப்படுத்தி எப்படி எடுத்துச் சென்று இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆதிக் குடிமக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியும் சமூக நீதியும் வழங்குவது பற்றி புதிய அணுகுமுறைகளை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அரசாங்கமோ அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனமோ செய்யவில்லை. இதனை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், ஆதிவாசிகளுடன் இணைந்து பணி செய்யும் பல நிறுவனங்களின் பங்கேற்போடு இந்த முன்னெடுப்பைச் செய்திருந்தனர். இந்த மாநாட்டிற்கான நிதி உதவி அனைத்தையும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை செய்தது.

இந்த மாநாட்டிற்கு ஆதிவாசிகள் வாழ்வு முறை, அவர்களின் தற்போதைய நிலை பற்றி ஆய்வு செய்த பெரும் ஆராய்ச்சியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதேபோல் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் 11 மாநிலங்களிலிருந்து அழைக்கப்பட்டிருந்தனர். மத்திய மாநில அரசாங்கத் துறைகளில் குறிப்பாக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறை, ஆதிவாசிகள் மேம்பாட்டுத் துறைகளில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு ஓய்வு பெற்ற அதிகாரிகள்  அழைக்கப்பட்டிருந்தனர். பஞ்சாயத்துக்கள் பற்றி ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக கிராமப்புற மேம்பாட்டுக்காக ஆய்வு செய்யும் ஒரு சில நிறுவனங்களும் அழைக்கப்பட்டு மிகப்பெரும் விவாதம் முன்னெடுக்கப்பட்டது. கேரளத்திலிருந்து முன்னாள் அமைச்சர், முன்னாள் தலைமைச் செயலர் என பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த மாநாட்டில் கலந்துரையாடலில் பங்கு பெற்று கருத்துரையாற்ற என்னையும் அழைத்திருந்தனர். இந்த மாநாட்டின் சிறப்பே யாரையும் பத்து நிமிடத்துக்கு மேல் உரையாற்ற விடாமல் கருத்தின் மேல் விவாதம் செய்தது வித்தியாசமானது. அதேபோல் வந்திருந்த ஆய்வாளர்களை உரையாற்றக் கூறாமல் அவர்களை, ஆய்வுக்கான கேள்விகளைக் கொடுத்து, அந்தக் கேள்விகளுக்கு பதில் கூற வைத்தது.tribel women 700இதில் மிக முக்கியமானது இந்த நாட்டில் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தலித்துக்களுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்த தொடர்ந்து போராடும் நிறுவனங்களையும், அந்த மக்களின் தலைவர்களையும் அழைத்து ஆழமாக பிரச்சினைகளை விவாதித்து, அவைகளுக்கான தீர்வுகளை பட்டியலிட்டதுதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், புறந்தள்ளப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்த மேம்பாட்டைக் கொண்டுவர இந்திய அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்கள் என்பது பல. ஆனால் சுதந்திர நாட்டில் பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாடு என்று ஒட்டு மொத்தமாக கூக்குரலிடும் பெருங்கூட்டம் இந்தச் சட்டங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக நடைமுறைப்படுத்த கூக்குரல் எழுப்பவில்லையே என்ற விவாதத்தை முன்னெடுத்தனர் அந்த மாநாட்டில். இந்திய நாட்டில் இந்தியாவின் வளர்ச்சி, இந்திய மேம்பாடு என்று விவாதிப்பது மக்களை ஏமாற்றுவது, இந்தியாவில் யாருக்கான வளர்ச்சி, யாருக்கான மேம்பாடு என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற விவாதத்தை முன்னெடுத்தனர். வளர்ந்த இந்தியாவில், ஒளிர்கின்ற இந்தியாவில், வல்லரசாகும் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஆதிவாசிகளையும், தலித்துக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அவர்களை வேட்டையாடுவது ஏன் என்ற கேள்வியை அந்த மக்களுக்காக அவர்களுடன் பணி செய்யும் நிறுவனங்களும் ஆய்வாளர்களும் வைத்தனர்.

இந்த நாட்டில் அடிப்படையில் இரண்டு வகையான சட்டங்கள் இருக்கின்றன, ஒரு வகை மக்கள் நலம் பேணும் மேம்பாட்டுக்கான சட்டங்கள், இரண்டாம் வகை அதிகாரங்களை பகிர்ந்து மக்களை அதிகாரப்படுத்தும் ஆளுகைக்கான சட்டங்கள். இந்த இரண்டாம் வகைச் சட்டங்கள் அடிப்படையானவைகள், அரசியல் சாசனத்துடன் தொடர்புடையவைகள். இந்த இரண்டு வகையான சட்டங்களையும் ஒன்றுபோல் பார்க்கக்கூடாது. உதாரணமாக வருமானவரிச் சட்டம் என்பது மக்களின் நலன் சார்ந்தது. ஆனால் பஞ்சாயத்து அரசாங்கச் சட்டமோ, பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டமோ, வனஉரிமைச் சட்டமோ அதிகாரங்களை பரவலாக்கி மக்களை அதிகாரப்படுத்த வந்த ஆளுகைக்கான சட்டங்கள். இந்த அதிகாரப் பரவலுக்கான சட்டங்களை, சாதாரண மேம்பாட்டுக்கான சட்டங்களாக நாம் புரிந்து கொண்டு செயல்பட்டதுதான் இன்றுவரை நாம் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க இயலாது அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துக் கொண்டும், அமைச்சர்களிடம் மண்டியிட்டு உதவி கோரிக்கொண்டும் இருக்கின்றோம் என்பதனை வல்லுனர்கள் மிகத் தெளிவாக விளக்கினர். இன்று ஆதிவாசிகள் கேட்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுயமாக அவர்கள் கருத்தியலிலும் கலாச்சாரத்திலும் நிலைநிறுத்தி சுய நிர்ணய உரிமையுடன் வாழும் சுதந்திரமான வாழ்க்கையைத்தான் என்பதை ஆதிவாசிகளுடன் பணி செய்யும் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்தனர்.

நாட்டின் மேம்பாட்டிற்கு பொருளாதார மேம்பாடு அவசியம் எனக்கூறி இந்த அதிகாரப்பரவலுக்கான சட்டங்களை அதாவது பஞ்சாயத்துச் சட்டங்களை புறந்தள்ளுவது, பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் வைத்திருப்பது, வன உரிமைச் சட்டத்தை மீறுவது என்பது எவ்வளவு பெரிய உரிமை மீறல் என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை என்ற கருத்தை வலுவாக முன்னெடுத்து விவாதித்தனர் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை ஆய்வு செய்த ஆய்வறிஞர்கள். முதலில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தது, அடுத்து ஆதிவாசிகளுக்கான உள்ளாட்சியை அமைக்க பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் வந்தது, மூன்றாவதாக வன உரிமைச் சட்டம் வந்தது. இந்த மூன்று சட்டங்களும் அடித்தட்டில் புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை, நலிந்த பிரிவினரை அதிகாரப்படுத்தும் ஆளுகைக்கான சட்டங்கள். இந்தச் சட்டங்கள் வந்து 30, 25, 15 ஆண்டுகள் முறையே ஆகிவிட்டன. இந்தச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகள் நடைபெறுகிறதேயன்றி வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை மீண்டும் மீண்டும் ஆய்வாளர்களும், ஆதிவாசி மக்கள் பிரதிநிதிகளும் எடுத்து வைத்தனர்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைவிட, பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் ஆழமானது, பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டத்தைவிட வன உரிமைச் சட்டம் மிகவும் வலுவானது. இவ்வளவு வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பதில் மாநில அரசாங்கங்கள் வலுவிழக்கச் செய்வது ஏன்? அதை மத்திய அரசு பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்த வண்ணம் இருந்தது இந்த மாநாட்டில். அரசியல் சாசனத்தில் கவர்னருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு முக்கிய அதிகாரம் ஆதிவாசிகளை பாதுகாப்பதற்கு மாநில அரசைத் தாண்டி முடிவெடுக்கும் வாய்ப்பு. இந்த 75 ஆண்டுகளில் ஒரு மாநில ஆளுநர்கூட அந்த ஷரத்தைப் பயன்படுத்தவில்லை என்று தங்கள்  வேதனையை வெளிப்படுத்தினர் ஆதிவாசி மக்களின் பிரதிநிதிகள். தற்போது இருக்கும் அதிவாசிகளுக்கான பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் என்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைவிட வலுவானது. இதையும் நிறைவேற்றும் பணியில் அதிக அதிகாரங்களை மாநில ஆளுநருக்குத்தான் தந்துள்ளனர். இருந்தும் ஏன் செயல்படவில்லை என்பதுதான் கேள்வியாக வைக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை எந்த ஆளுநரும் அதை எடுத்து ஏன் செயல்படவில்லை என்ற காரணங்களை ஆய்வு செய்து பட்டியலிட்டனர் ஆராய்ச்சியாளர்கள். இதைவிடக் கொடியது, வனங்களில் தாதுப்பொருள் எடுக்க முயலும் பன்னாட்டுக் கம்பெனிகள் மிக எளிதாக மேம்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சட்டங்களை வைத்து ஆளுகைக்கான சட்டங்களை தவிடு பொடியாக்கி, ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் வேலைகளில் இறங்கி வெற்றி கண்டு வருகின்றனர். அதற்கு நீதித்துறையும் கண்மூடி தீர்ப்பளிக்கின்றது. நீதித்துறைக்கு இந்த சட்டங்களின் வித்தியாசம் தெரியாமலா இருக்கின்றது என்ற வினாவையும் முன் வைத்தனர் அந்த மாநாட்டில்.

மத்திய அரசாங்கம் கொண்டு வந்த அவ்வளவு முற்போக்கான சட்டங்களையும் நடைமுறைப்படுத்த மாநிலங்கள் சட்டங்கள் கொண்டு வந்தன. அந்தச் சட்டங்களை ஆய்வு செய்து பார்த்தால், அது பஞ்சாயத்துச் சட்டமாக இருக்கட்டும், பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டமாக இருக்கட்டும், அனைத்தும் மத்திய சட்டங்களின் சாரத்தை கொண்டு வராது சடங்குச் சட்டங்களாக கொண்டு வந்திருப்பதை ஏனோ நம் பொது விவாதத்திற்கு கொண்டு வராமல் கடந்து செல்கின்றோம் என்ற கேள்வியையும் அந்த ஆய்வாளர்களும், ஆதிவாசி மக்களின் பிரதிநிதிகளும் முன் வைத்தனர். மத்திய அரசு தான் கொண்டு வந்த சட்டங்களை மாநில அரசுகள் நீர்த்துப்போகச் செய்யும்போது மத்திய அரசு வாய்மூடி மௌனியாக இருக்கின்றதே ஏன் என்ற கேள்வியையும் முன் வைத்தனர். மத்திய அரசு தான் ஐ.நா மன்றத்திற்கு கொடுத்த வாக்குறுதிக்காக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்ததா அல்லது தன் நாட்டு மக்களின் நலன் காக்க கொண்டு வந்ததா என்ற ஐயப்பாட்டையும் அந்த மக்கள் பிரதிநிதிகள் எழுப்பத் தவறவில்லை.

ஒரு காலத்தில் இந்த உரிமைகளுக்கு எதிராக கருத்தைக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் கூட 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஆதிவாசிகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டது.

அடுத்த ஒரு பெரு விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இந்த உரிமைகளை வெள்ளையர்கள் காலத்திலிருந்து 2014க்கு முன் இருந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முற்போக்கான சட்டங்களை, ஆதிவாசிகளையும் தலித்துக்களையும் பாதுகாக்க நிறைவேற்றுவதற்கு யார் யாரெல்லாம் தடைக்கற்களாக இருக்கின்றார்கள்  என்றும் விவாதிக்கப்பட்டது. அதற்கு அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கூறிய கருத்து பெரும் சந்தை முதலாளிகள் என்பதே. சந்தை முதலாளிகள் அரசுக்கு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக ஏன் செயல்படவில்லை என்ற கேள்வி வைக்கப்பட்டது. இன்று சந்தை முதலாளிகள் அரசிற்கு பின்புறமாக வந்து அரசு அதிகாரிகளை சரி செய்து கொள்கிறார்கள், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்து விடுகின்றார்கள். எனவே ஒட்டுமொத்த ஆளுகை அமைப்புக்களும் அரசியலும் சந்தையின் பிடிக்குள் வந்துவிட்டன என்பதையும் படம்பிடித்துக் காண்பித்தனர்.

சந்தை முதலாளிகள் தாங்கள் சட்டத்தை பின்பற்றுபவர்களாக காட்டிக்கொள்ள மேம்பாட்டுக்கான சட்டங்களை கையிலெடுத்து நாங்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான அரசின் அனுமதி பெற்று தொழில் செய்கின்றோம், அதற்கு இந்தச் சட்டங்கள் இடையூறாக இருக்கின்றன என்று நீதிமன்றங்களில் முறையிடுகின்றார்கள். அப்போது அதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கும் அரசு அதிகாரிகள் வலுவான வாதங்களை வைப்பதற்கு ஏதுவாக அதிகாரப்பரவல் சட்டங்களை விளக்கிடாமல், ஏதோ அதுவும் ஒரு மேம்பாட்டுச் சட்டம் போல் விளக்கமளித்து இந்த அதிகாரப்பரவல் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்புக்கள் வந்திட பணி செய்வதுதான் சோகத்தின் சோகம். எனவே அரசியல்வாதிகளுக்கு மட்டும் சந்தை முதலாளிகள் தாராளமாக நிதி தரவில்லை. அதில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் பயன் அடைகின்றனர். அந்த வகையில்தான் பல அடிப்படைச் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்புக்கள் சமீபகாலத்தில் வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகளை எதிர்க்க அரசும் முன்வரவில்லை, அவைகளை எதிர்த்து அரசியல் கட்சிகளும் போராட முன்வரவில்லை. மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்குப் போராட வேண்டிய கட்சிகள் மக்களுக்காகப் போராடாமல் போராடும் மக்களுக்கு ஆதரவு மட்டும் தெரி­வித்து தேர்தல் அரசியலில் மூழ்கியிருப்பதுதான் இந்திய மக்களாட்சியின் பெரும் சோகம் என்பதனை விளக்கினார்கள் பொதுக் கருத்தாளர்கள்.

இதில் ஒரு வினோதம், கேரளத்திலிருந்து வந்த அமைச்சர், அதிகாரிகளிடம் பல கேள்விகளை முன் வைத்தனர். கேரளாவிலும்கூட ஆதிவாசிகள் சிறப்பாக வாழ இயலவில்லை. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு மிகத் தெளிவாக கேரளாவின் முன்னாள் அமைச்சரும் தலைமைச் செயலரும் பதிலளித்தனர். “கேரளத்திலும் ஆதிவாசிகள் நிலைமை மோசம் என்பதை நாங்கள் நிராகரிக்கவில்லை, அவர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று உண்மையை ஒப்புக் கொண்டனர். அதே நேரத்தில் இப்படிப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் வந்தபோது எங்கள் அரசு சந்தை முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படவில்லை. மாறாக பஞ்சாயத்துக்கும், மக்களுக்கும்தான் ஆதரவாக செயல்பட்டது என்பதை பிளாட்சிமபி கொக்ககோலா கம்பெனி வழக்கை உதாரணம் காட்டி அனைவரின் பாராட்டுதலைப் பெற்றனர்.

அடுத்த விவாதம் எங்கே சென்றது ஊடகங்கள்? என்பதுதான். எங்கே சென்றார்கள் பொதுக் கருத்தாளர்கள்? ஏன் இந்தப் பிரச்சினைகள் பொது விவாதப் பொருளாக்கப்படவில்லை என்ற விவாதம் வைக்கப்பட்டது. ஊடகங்கள் இன்று சந்தையின் பிடிக்குள் வந்துவிட்டன. ஊடகத்திற்கான தர்மங்கள், அறம் குறிக்கோள்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு விட்டன. இன்று அது ஒரு தொழிற்சாலை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். செய்திகள், கருத்துக்கள், தயாரிப்பு இடமாக மாறிவிட்டன. சந்தைப் பொருளுக்கு விளம்பரங்கள் தருவதுபோல் செயல்பட ஆரம்பித்து உண்மை என்பது புதை குழியில் கிடக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இன்று இந்த ஊடகங்களைத் தாண்டி சமூக ஊடகங்கள் ஒரு பெரும் ஆதரவாக இருந்தது, அதுவும் இன்று சந்தைப்படுத்தப்பட்டு அங்கும் செய்தி, கருத்து, புள்ளி விபரங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்தும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழல் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்ததை விட இன்று மக்கள் நலனுக்கு எதிராக சந்தை நலனுக்குச் செயல்பட சுயநலன் ஒன்றே குறிக்கோளாகச் செயல்படும் நடுத்தர வர்க்கச் செயல்பாடு விவாதப் பொருளாகியது இந்த மாநாட்டில்.

அடுத்த நிலையில் இந்திய உயர்கல்வி நிலையங்கள் எங்கே எப்படி இயங்குகின்றன என்ற கேள்வி வைக்கப்பட்டபோது, அதற்கும் பதில் வந்தது. கல்வி இன்று இந்தியச் சமூகத்தைச் சிதைக்கும் நிலையில் இருக்கின்றது. காரணம் கல்வி நிலையங்களில் கல்வியாளர்கள் இல்லை, மாறாக சந்தைக்கு ஆள் உற்பத்தி செய்யும் உற்பத்திக் கூடமாக மாறியுள்ளது என்பது படம்பிடித்துக் காட்டப்பட்டது.

கடைசியாக இதற்கு தீர்வுதான் என்ன என்று பார்க்கும்போது, மீண்டும் மக்களிடம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை மக்களாட்சியில். இந்தச் சட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களை போராட்டங்களுக்குத் தயாராக்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. வளர்ந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மக்களைத் தயார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதைத்தான் நாட்டின் விடுதலைக்கு நம் தலைவர்கள் செய்தனர். எனவே இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராட அதே வழியைத்தான் நாம் இன்று கடைப்பிடிக்க வேண்டும் என்ற விவாதம் முன் வைக்கப்பட்டது. தேர்தல் என்ற ஒன்று இருக்கின்ற காரணத்தால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற  கடமைப்பட்டிருக்கின்றன.

இதை நினைவில் கொண்டு மக்கள் தங்களுக்கான ஒரு தேர்தல் அறிக்கையினை தயார் செய்து அரசியல் கட்சிகளை அதில் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்த கட்டாயப்படுத்த வேண்டும். மக்கள் சார்ந்து சிந்தித்து கருத்துக் கூறும் பொதுக்கருத்தாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு கட்சிகளைக் கடந்து கருத்துக்கூறும் நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல் உயர்கல்வி நிறுவனங்களில் மக்கள் மேல் கரிசனம் கொண்டு செயல்படும் ஆய்வாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, இது போன்ற சிக்கலான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளை தயார் செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.ஆய்வு அறிக்கைகளை முடிந்தவரை ஊடகத்திற்குள் விவாதப் பொருளாக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள்தான் எதிர்காலத் திட்டமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் மொழியப்பட்டு மாநாடு நிறைவடைந்தது.

- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It