கொல்லிமலை தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத் தொடராகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத் தொடர்ச்சி 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி ஆகும். இம்மலையை வேட்டக்காரன் மலை என்று கூறுவர்.

மலையாளி பழங்குடிகள் தமிழகத்தில் சேலம், வேலூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் சேர்வராயன் மலை, கொல்லிமலை, சவ்வாது மலை, ஏலகிரி மலை பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர். தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் வாழும் பழங்குடியினர் மலையாளி ஆவர். கொல்லிமலையில் வாழும் மலையாளி பழங்குடிகள் தங்கள் வாழும் மலைப்பகுதிகளை பல்வேறு நாடுகளாக பிரித்துள்ளனர். அவை மொத்தம் 14 நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பல ஊர்கள் சேர்ந்த பகுதி நாடு என்றழைக்கப்படுகிறது. அவை வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னலூர் நாடு, குண்டூர் நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பலாப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு என்று அழைக்கின்றனர். இந்நாட்டிற்கெல்லாம் தலைமை நாடாக ‘குண்டூர் நாடு’ விளங்குகிறது.

ஊர் அமைப்புமுறை

இயற்கை எழிலோடும் மலைகள் சுற்றிய குடியிருப்பு பகுதிகளை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 50இல் இருந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததை காணமுடிந்தது. மலையாளிகளின் வீடுகள் ஆரம்பத்தில் மண்ணால் ஆன குடிசை வீடுகளை பயன்படுத்தியுள்ளனர். வீட்டின் மேல்கூரைக்கு ‘சீக்காம் புல்’ என்ற புல் வகையை கொண்டு பயன்படுத்தியுள்ளனர். களப்பணியில் விசாரித்தபோது ஆடி மற்றும் தை மாதங்களில் இப்புல் வகைகள் வளரும் தன்மை கொண்டது என்கின்றனர். குறைந்தது 30 லிருந்து 40 வருடம் வரை வீட்டின் மேல்கூரை தாங்கும் தன்மை உடையதாக இருக்கும் என்கின்றனர். தற்பொழுது புல்லிற்கு மாற்றாக தகரம் போட்ட சீட் வகைகளையும் கூரைக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிலர் மாடி வீடுகளும் கட்டிக் கொள்கின்றனர். வீட்டு வாசல்கள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.kollimalai tribesகாட்டெரிப்பு வேளாண்மை - உணவுமுறை

மலையாளிகள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்வதால் இவர்களின் உணவுமுறையானது சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்களின் உணவுமுறையை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து சமவெளிப் பகுதியில் குடிபெயர்ந்ததால் உணவுமுறையில் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. மலைப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து சமமாக்கி அப்பகுதியில் தினை, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை பயிரிட்டு உண்டும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தானியங்களை சேமிக்கும் கலனுக்கு ‘தொம்பை’ என்கின்றனர். தற்போது பணப்பயிரான மிளகு, மரவள்ளிக்கிழங்கி, அன்னாசிப்பழம், வாழை, பலா, நெல் போன்றவற்றை பயிரிடுகின்றனர்.

காஞ்சிபுரத்திலிருந்து இம்மலையில் வந்தேறிய இச்சமூகமானது ஆரம்பகாலங்களில் மலையில் உள்ள காடுகளை அழித்து சமவெளியாக்கி காட்டை நாடாக்கி பயிரிடத் தொடங்கினர். அப்படி தொடங்கியபோது காட்டெரிப்பு வேளாண்மை முறையை பின்பற்றியுள்ளனர்.

மொழி

இவர்கள் சமவெளிப் பகுதியான காஞ்சிபுரத்­திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்பதால் தமிழ் மொழியையே பேசுகின்றனர்.

குடும்பமுறை மற்றும் குலங்கள்

மலையாளி பழங்குடிகள் பெரும்பாலும் விவசாயம் செய்து வாழ்ந்ததால் கூட்டுக் குடும்ப முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது நவீனமயமான சூழலில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், திருமணம், போக்குவரத்து மற்றும் இதர காரணங்களால் இடம்பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால் தற்போது தனிக்குடும்பமாக வாழ்கின்றனர்.

மலையாளிகள் தங்கள் பெயருக்குப் முன்னால் குலப்பெயரையும் பெயருக்குப் பின்னால் சாதியின் பட்டபெயரான கவுண்டன் பெயரையும் இணைத்து கொள்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கென்று தனித்தனியான குலங்களும் குலதெய்வங்கள் இருந்ததையும் அறியமுடிந்தது. ஒரு குலத்தைச் சேர்ந்த அனைவரும் அண்ணன், தம்பிகளாக கருதப்படுவர். மற்றவர்கள் மாமன், மச்சான் உறவுகளாக கருதப்படுவார்கள். (எ.கா) ஒருவர் பிரம்பை குலத்தைச் சேர்ந்தவர் என்றால் கீழ்க்காணும் உறவுமுறைகளில் பங்காளி மற்றும் மாமன் மச்சான் உறவுமுறை பிரிக்கப்படுகின்றனர்.     pangali kulam

வாழ்வியல் வட்டச் சடங்குகள்

பெண் பூப்பெய்தல்

பெண்கள் பூப்பெய்தியவுடன் தீட்டாகக் கருதப்பட்டு 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை தனியாக வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாக தாய்மாமனால் ஒரு குடிசை கட்டப்பட்டு தனியே அமர வைக்கப்படுகின்றாள். இதில் முதல் சீதனம் தாய்மாமனுடையதாக இருக்கவேண்டும். தாய்மாமனால்தான் இப்பெண்ணுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாள்கள் முடிந்தபிறகு பூப்படைந்த பெண்ணே அந்த குடிசையோலையை நெருப்பிட்டு வைத்து கொளுத்திவிட்டு நெருப்பை தாண்டி, குளித்து விட்டுதான் வீட்டுக்குள் திரும்பவேண்டும் என்பது ஐதீகம். அதேபோல் ஒவ்வொரு மாதமும் தீட்டான பெண்கள் வீட்டிலிருந்து விலகி இருக்கவேண்டும். அந்தநாள் முழுவதும் அவள் காட்டு வேலை அதாவது விவசாயத்திற்கு செல்வதோ, வீட்டுக்குள் செல்வதோ மற்ற புழங்கு பொருட்களை தொடுவதற்கு அனுமதியில்லை. அந்த குறிப்பிட்ட நாட்களில் ஆண்களே வீட்டுவேலை, விவசாய வேலை முழுவதையும் பார்த்துக் கொள்கின்றனர்.

நிச்சயதார்த்தம் (பரிசம் போடுதல்)

மலையாளி பழங்குடிகளின் நிச்சயதார்த்தம் (பரிசம் போடுதல்) நிகழ்வு என்பது பெண்களின் வீடுகளில்தான் நிகழும். பழங்குடிகளைப் பொருத்தவரை பெண் என்பவள் வீட்டின் முதலீடு போல சுருக்கமாக கூறினால் அவள் தாய் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு செல்லும்போது தாய் வீட்டின் உழைப்பு குறைவதோடு இல்லாமல் அந்த வீட்டின் வேலைப்பளு அதிகமாக மாறும். இதற்கு மாறாக பெண் என்பவள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும்போது கணவன் வீட்டில் உழைப்பதற்கு கூடுதலாக ஒருநபர் இணைகின்றார். பெண் வீட்டின் இந்த இழப்பீட்டை தவிர்ப்பதற்காகத்தான் ஆண் வீட்டார் பெண் வீட்டிற்கு பரிசப்பணம் என்கின்ற பெயரில் பெண் வீட்டிற்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து இழப்பை ஈடுசெய்கின்றனர். பணம் பரிவர்த்தனையில்லாத காலங்களில் பெண்களின் உழைப்பிற்கு ஈடாக தானியங்களை கொடுத்துள்ளனர். பணப்புழக்கம் வந்த காலங்களில் ஆண் வீட்டார் 16 ரூபாய் பெண்வீட்டாருக்கு தருவர். அதாவது பெண்ணின் திருமணமானது தாய்மாமன் ஒப்புதலோடுதான் நடைபெறும். ஆண் வீட்டார் பெண்ணின் தாய்மாமனுக்கு தரும் பணம் ‘முறைசீர்’ என்றும் பெண்ணின் தாய்க்கு தருகின்ற பணம் ‘பால் கொடை’ என்றும் அழைக்கின்றனர்.

திருமணம்

திருமணம் பெரும்பாலும் ஆண் வீட்டில்தான் நிகழும். போக்குவரத்தில்லாத காலங்களில் திருமணமானது ஒருவாரம் வரை நடைபெறுமாம். தற்போது இரண்டு நாட்களில் திருமணம் நடந்து முடிகிறது. இம்மக்கள் மலையில் குடியேறிய காலக்கட்டத்தில் கருப்பு மணி தான் பெண் கழுத்தில் கட்டப்பட்டது (களப்பணி ஆய்வில் கிடைத்த தகவல்). பிற்காலத்தில் தான் தாலி என்கின்ற நடைமுறை தோன்றி பிறகுதான் மஞ்சள் கயிறும் அதோடு தங்கத் தாலான நாமம் போட்ட ‘ராமதாலி’ என்கின்ற தாலியை கட்டுகின்றனர். தற்போது திருமணம் நடைபெறும் இடமாக அரப்பளீஸ்வரர் கோயில், மற்றும் திருமண மண்டபங்களில் நடக்கிறது. திருமணத்தை முன்னின்று நடத்துபவரும் தாலியை எடுத்து தருகின்றவர் ‘ஊர்கவுண்டர்’ என்கின்ற பெயரால் அழைக்கின்றனர். ஊர் கவுண்டர் இல்லாமல் எந்த ஊரிலும் திருமண நிகழ்வு நடைபெறாது. திருமணம் முடிந்த மறுநாள் பன்றிக் கறியும், கள்ளுடன் கூடிய விருந்தும் கட்டாயம் நடைபெறும். (மலையாளி பழங்குடிகளின் வாழ்வில் பன்றிக்கறியும், கள்ளும் பிரிக்கமுடியாத கலாச்சாரச் கூறுகளாக உள்ளதை பார்க்கமுடிந்தது). இம்மக்களிடையே ‘விதவை மறுமணம்’ அனுமதிக்கப்படுகிறது.

குழந்தை பிறப்பும் - காதுகுத்தல் நிகழ்வும்

பொதுவாக பெண்களின் தலைப்பிரசவம் தாய் வீட்டில்தான் நிகழும். மருத்துவ வசதியில்லா காலங்களில் ஊரில் உள்ள வயதான பெண்களே பிரசவம் பார்ப்பது வழக்கம். பிறந்த குழந்தையும், தாயையும் தீட்டாகக் கருதி வீட்டிற்கு வெளியே குடிசை போட்டு அமர்த்துவர். பிறந்த குழந்தை ஒருமாத காலம் வரை தீட்டாக கருதப்படுவர். பின் இருவரையும் குளிப்பாட்டி தீட்டு கழித்து வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். பிறந்த குழந்தைக்கு தங்கள் குலத்தின் பெயரோ அல்லது குலதெய்வத்தின் பெயரோ குழந்தைக்கு பெயராக சூட்டுகின்றனர். குழந்தைகளுக்கு காதுகுத்தல் நிகழ்வு குலதெய்வ கோயில்களில்தான் நடக்கும். தாய்மாமன் மடியில் குழந்தைகளை உட்கார வைத்து மொட்டை அடித்து காது குத்துகின்றனர்.

குடும்பத் தலைமை - பெண் சொத்துரிமை

மலையாளி பழங்குடிகளிடம் உள்ள நிலம் மற்றும் இதர சொத்துகளில் பெண்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. குடும்பத் தலைமை முழுமையும் ஆண்களே நிர்வகிக்ன்றனர். குடும்பத்தில் ஆண் தலைமை இல்லாத நிலையில் மட்டுமே பெண்கள் தலைமை வகிக்கின்றனர். குடும்பத்தில் ஆண் வாரிசு­யில்லாத பட்சத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படுகிறது. அதேபோல் ஊர் தலைமை பொறுப்புகளும் ஊரின் இதர பொறுப்புகளும் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது.

தெய்வம் - திருவிழாக்கள் - நடனம் - இசை

ஒவ்வொரு குடும்பத்திற்கு என்று தனித்தனியே குலதெய்வம் கோயில் உள்ளது. பெரும்பாலும் சிறுதெய்வ வழிபாட்டுமுறை உள்ளது. இச்சிறுதெய்வங்கள் பெரும்பான்மை பெண் தெய்வங்களாகவே வழிபடுகின்றனர். இவர்களின் கோயில்கள் சிறுகற்களாலும், மரத்தாலான ‘உருவமற்ற வழிபாடு’வுடன்தான் காணப்படுகிறது. கோயில் தெய்வங்களை வழிபாடு செய்ய அவரவர் குலங்களுக்குள்ளே ஒரு பூசாரியை நியமித்துக் கொள்கின்றனர். அனைவரின் பொது தெய்வமாக பெருமாளை வழிபடுகின்றனர். இத்தெய்வத்திற்கு உயிர்பலி வழங்கப்பட மாட்டாது. சிலர் சைவக் கடவுளையும் வழிபடுவதாக தெரிவித்தனர். இவற்றைத் தவிர சில சிறுதெய்வங்களின் பெயர்கள் (எ.கா.) மாரியம்மன், கொங்கலாயி அம்மன், பெண்ணுகுத்தம்மன், நாச்சியம்மன், எட்டுகைசாமி, மாசி பெரியண்ணாசாமி போன்ற தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் மதம் மாறி கிருத்துவ மலையாளிகளாக மாறியுள்ளனர்.

மலையாளிகள் விவசாயத்தோடு நெருங்கிய தொடர்புடன் இருப்பதாலும் தைமாதம் அறுவடைக் காலமாக இருப்பதால் பொங்கல் திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர். இவ்விழாவின்போது மலையாளி ஆண்கள் சேர்வையாட்டம் நடனமாடுகின்றனர். பெண்களை இதில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.

வாய்மொழி வழக்காறு - தொன்மம்

புனித நகரமான காஞ்சிபுரத்திலிருந்து தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி மேலோங்கிய போது பத்துத் தலைமுறைகளுக்கு முன் மலைப்பகுதியில் குடியேறியவர்கள். காஞ்சியினை விட்டுப் புறப்பட்ட இவர்கள் முன்னோர்கள் மூன்று உடன்பிறந்தவர்களைத் தங்களுடன் அழைத்து வந்தனர் என்று ஒரு கதை வழங்குகிறது. அம்மூவருள் மூத்தவன் சேர்வராயன் மலையிலும், இரண்டாமவன் கொல்லிமலையிலும், இளையவன் பச்சை மலையிலும் தங்கினர். சேர்வராயன் மலையினைச் சேர்ந்த மலையாளிகள் ‘பெரிய மலையாளி’ எனவும் இரண்டாமவன் ‘கொல்லி மலையிலும்’, இளையவன் ‘பச்சை மலையிலும்’ தங்கினர். சேர்வராயன் மலை­யினைச் சேர்ந்த மலையாளிகள் பெரிய மலையாளிகள் எனவும், கொல்லி மலையைச் சேர்ந்தவர்கள் சின்ன மலையாளிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். மலையாளிகளின் தெய்வமான ‘கரிராமன்’ காஞ்சியில் இருக்கப் பிடிக்காதவனாகப் புதியதொரு இடத்திற்குக் குடிபெயர்ந்தான். அவனைப் பின்தொடர்ந்து வந்த பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் ஆகிய மூவரும் காஞ்சியிலிருந்து தங்கள் குடும்பத்தோடு புறப்பட்டுச் சேலம் மாவட்டத்திற்கு வந்து வேறு வேறுபாதைகளில் பிரிந்து சென்றனர். பெரியண்ணன் சேர்வராயன் மலைக்கும், நடுவண்ணன் பச்சை மலைக்கும், அஞ்சூர் மலைகளுக்கும், சின்னண்ணன் மஞ்சவாடிக்கும் சென்று சேர்ந்தனர் என மற்றொரு கதை வழக்குக் கூறுகிறது.

பஞ்சாயத்து முறை

பல சிற்றூர்கள் சேர்ந்தது ஒரு நாடு ஆகும். ஒவ்வொரு ஐந்து ஊர்களும் சேர்ந்து ‘ஊர்க் கவுண்டன்;’ என்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். இந்த கவுண்டர்களை இருவகையாக பிரித்து பெரியகவுண்டன், சின்னகவுண்டன் என்றும் அழைக்கின்றனர். இவர்களை தவிர ஒவ்வொரு நாடுகளிலும், ஊர்களிலும் நடக்கும் பிரச்சனைகளை கண்காணிக்கவும் சரிசெய்யவும் ஊர் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பட்டக்காரன், நாட்டார், காரியக்காரன், கங்காணி, மூப்பன் போன்றவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் வேலைகள் அந்தந்த நாடுகளில் நடக்கும் நற்செயல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாகும். இப்பதவிகள் அனைத்தும் அவரவர் குலங்கள் தோன்றியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். ஊர்சார்ந்த பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்திலும் இறுதித் தீர்ப்பை இப்பஞ்சாயத்து மட்டுமே முடிவு செய்யும். ஆரம்ப காலங்களில் பஞ்சாயத்தால் வழங்கும் தண்டனைக்கு குற்றம் செய்தவர் பஞ்சாயத்துக்கு தானியம் தர வேண்டும் என்று தீர்ப்பு இருந்தது. காலமாற்றத்தில் பஞ்சாயத்தால் குற்றம் செய்தவர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் அபராதமாக பணமாக கட்ட வேண்டும் என்று மாற்றப்பட்டது. மாறாக பணம் கொடுக்க வசதியில்லாத நபராக இருந்தால் ஊர்மக்களை கூட்டி பன்றிக் கறியுடன் கூடிய விருந்தை அளிக்க வேண்டும்.

இதர சமூகமும் உறவுமுறையும்

இவர்கள் மற்ற சாதியச் சமூகத்தாரை யாரையும் பெரிதாக தன் சமூகத்தினுள் நுழைய அனுமதிப்பதில்லை. நவீனமயமான சூழலில் தற்போது தளர்வடைந்துள்ளது. மலையாளி தற்போது கொங்கு வேளாளர்களிடம் பெண் கொடுக்கின்றனர். ஆய்வு களத்தில் கேட்டறிந்தவை, இடஒதுக்கீட்டின் காரணமாக தற்போது மலையாளி பழங்குடி பெண்கள் பலரும் படித்து வேலைக்கு செல்கின்றனர். இதனால் சிலர் சாதி மாறி கலப்புத் திருமணமும் செய்து கொள்கின்றனர். இவர்கள் தன் சமூகத்தைவிட தாழ்ந்த சாதியாக கருதும் சாதியிடம் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.

இறப்பு நிகழ்வு

மலையாளிகள் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். யார் இறந்தாலும் தலையை தெற்கு பக்கமாகவும் கால் வடக்கு பக்கமாகவும் வைத்து புதைக்கின்றனர். குழந்தைகள் இறந்தால் வீட்டு பகுதியின் ஒரு மூலையில் புதைக்கின்றனர். வீட்டில் இருந்து பிணத்தை தூக்கிக் கொண்டு போகும்போது முகம் வீட்டைப் பார்த்த மாதிரி எடுத்துச் செல்கின்றனர்.

முனைவர் தீ.ஹோமமாலினி

Pin It