tribe workingதமிழகத்தில் மொத்தம் 36 வகையான பழங்குடிகள் உள்ளனர். இவர்களுள் மிகப் பழமையான குடிகளுள் ஒருவர் இருளர். ஆதிப்பொதுவுடைமை சமூகத்தில் காடுகளில் வேட்டையாடி உணவு சேகரித்த இம்மக்கள் கால மாற்றத்தால் இன்று சமவெளி பகுதிகளில் அலைந்து திரியும் நாடோடி சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வனப்பகுதிகளில் சுதந்திரமாக திரிந்த மனித சமூகம் சமவெளியில் அத்தகைய சுதந்திரத்தை இழந்து நிற்கின்றனர்.

இருளர்கள் நீலகிரி, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மற்றும் கர்நாடக மாநிலத்தில் சில பகுதிகள், கேரள மாநிலத்தில் பாலக்காடு சார்ந்த பகுதிகள் போன்ற இடங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல இவர்கள் வாழும் இடத்தின் அடிப்படையிலும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக நீலகிரி இருளர், செங்கல்பட்டு இருளர், தென்னாற்காடு இருளர் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இருளர் பழங்குடியினர் சமவெளிப் பகுதிகளில் செங்கல் சூளை, அரிசி ஆலை, மரம் வெட்டுதல், கரிசூளை, கோழிப்பண்ணை என பல்வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். பலர் வேலைக்கு செல்வதற்கு முன்பே இத்தொழில் செய்யும் முதலாளிகளிடம் முன்பணம் வாங்கிக் கொண்டு கொத்தடிமையாக சிக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு பல தொழிலில் ஈடுபட்டாலும் முன்பணம் வாங்காமலும் எந்த முதலீடு செய்யாமலும் சிறிய வருமானத்தை உருவாக்கும் தொழில்தான் தங்கத்துகள்களை சுத்திகரிக்கும் வேலை. பாலின வேறுபாடுயின்றி இத்தொழிலை செய்து வருகின்றனர். இருளர் மக்கள் வசிக்கின்ற பகுதியான திருவண்ணாமலை, ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கத்துகள்கள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இருளர் மக்களைப் பற்றி களஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவர்களைப் பற்றி திரு. சி.பி.பிரெளன், தெலுங்கு அகராதியில் இவர்களை சாக்கடைகளிலும், பொற்கொல்லர் வீட்டுக் குப்பையிலும் தங்கத்தைத் தேடும் சாதியார் எனக் கூறியுள்ளார். ஆறுகள், ஓடைகள் இவற்றின் படுகைகளில் தங்கத்தைச் சலித்து எடுப்பதின் மூலமும் இவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இச்சாதியின் பெயர் தண்ணீர் எனப் பொருள்படும் ‘ஜல’ என்பதும் சலித்து எடுத்தல் எனப் பொருள்படும். இதற்கு இணையான ‘ஜலகார’ என்ற சாதிப்பிரிவு கப்பேரர்களின் ஓர் உட்பிரிவாகப் பெல்லாரி மாவட்ட விவரக் குறிப்பில் பதியப்பட்டுள்ளது.

தங்கத்தைத் சலித்தெடுப்பவர்கள் நகைக்கடைக்கு முன்னுள்ள துர்நாற்றம் வீசும் சாக்கடைகளில் பணி செய்து கொண்டிருப்பதைக் காணலாம். நகரத்தில் இத்தொழிலை சில ஆண்டுகளுக்கு முன்வரை ஒட்டர்களே தங்கள் தனி உரிமையாக மேற்கொண்டிருந்தனர். அதன்பின் மற்ற தாழ்ந்த சாதியாரும் இதில் ஈடுபடலாயினர். பொன் கொழிக்கும் பணியினை வீட்டிலிருந்தபடியே பெண்கள் செய்கின்றனர். முதியவர்களும் ஆண்களும் தங்கள் ஓய்வு நேரத்தில் இப்பணி­யினை மேற்கொள்கின்றனர்.

இனி, இருளர் இனத்தவர்கள் எவ்வாறு தங்கத்தை சேகரிக்கின்றனர் என்பதைக் காணலாம். இந்த வேலையைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். விடியற்காலையில் மூன்றுமணி முதல் இவ்வேலையைச் செய்யத் தொடங்குகின்றனர். பெண்களே மண்ணைத் தண்ணீரில் இருந்து சலிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். மீதி இருக்கும் சில வேலைகளான தங்கத்தைப் பிரித்து உருக்கும் பணியில் ஆண்கள் ஈடுகின்றனர். தங்கம் கலந்த மண்ணை (கருப்பு மண்) நீரில் சலித்து எடுப்பதை இவர்கள் சன்னம் எடுத்தல் என்று சொல்கின்றனர்.

மற்ற சமூகத்தாரைப் போலவும் இருளர் மக்களும் பொதுவாக நகை உற்பத்தி செய்யும் கடைத்தெருக்களில் மீதி இருக்கும் சிதறிய மண்ணை எடுத்து வந்து நீர்நிலைப் பகுதிகளான குளம், குட்டை, ஆறு, ஏரி நீர்நிலை போன்ற பகுதிகளில் மண்ணை ஒரு கொப்பரையிலிட்டு தண்ணீர் விட்டுக் கழுவ, கொப்பரை வழியே ஓடும் நீர் அதன் முன் ஒரு குட்டையாகத் தேங்கி நிற்கும். அவ்வாறு தேங்கிய நீரை ஒரு மண்பானையில் சேகரித்துக் கொப்பரை­யிலுள்ள குப்பை மீது ஊற்றியபடி அதனை மற்றொரு கையால் தொடர்ந்து அசைத்தபடி இருப்பர். கனமில்லாத குப்பைக் கூளங்கள் இவ்வாறாக அந்தக் கொப்பரையை விட்டு வெளியேற்றப்படும். கனமான கற்கள் முதலானவை அவ்வப்போது கையால் பொறுக்கி வெளியே எறியப்படும். தொட்டியில் ஒரு சில கைப்பிடி அளவு கருமணல் சேரும் வரை இவ்வாறு செய்தபடி இருப்பர். அந்த அளவு கருமணல் சேர்ந்தவுடன் அதனோடு கொஞ்சம் பாதரசத்தை விட்டு ஓரிரு மணித்துளிகள் மிக வேகமாக தேய்ப்பர். இவ்வாறு பொன் கொழிக்கும் செயல் தொடர்ந்து நடைபெறும். பின் நன்கு அலசி எடுப்பார்கள். சில நேரங்களில் சாக்கடை நீர், கழிவுநீர்க் கால்வாய் பகுதிகள் போன்ற பகுதிகளில் இம்மண்ணை எடுக்கின்றனர். இதில் தங்கம் (சன்னம்) உள்ளிட்ட வெள்ளி, ஈயம், பாதரசம், உலோகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலந்து நிற்கும். இதில் உள்ள தங்கத்தை மட்டுமே பிரித்து எடுப்பது இவர்களின் முதன்மைத் தொழிலாக உள்ளது.

அதோடு இரண்டாவது நிலையில் வெள்ளியையும் பிரித்து எடுப்பதையும் காணமுடிகிறது. உதாரணமாக பத்துமூட்டை மண்ணிற்கு அரைகிராம் தங்கத்தை சுத்திகரித்து எடுப்பதாகக் கூறுகின்றனர். அலசிய மீதி இருக்கும் கருப்பு மண்ணை இவர்கள் மட்கேட்டி மண் என்கின்றனர். கடைசியில் இருக்கும் மண்ணை ஒரு மண்சட்டியில் போட்டு திராவகம் என்னும் திரவத்தைப் போட்டு மீண்டும் ஊற வைக்கும்பொழுது தங்கம் மட்டுமே தனியே நிற்கிறது. பிறகு மீண்டும் ஒருமுறை நீரில் போட்டு அலசி எடுப்பார்கள். அப்படி அலசும்போது மேலே மிதக்கும் நீரில் இருந்து வெள்ளியை தனியே எடுக்கும் முறைகூட இவர்கள் அறிந்து இருந்தனர். இந்த நீரை மூன்று மாதம் வரை ஊற வைத்த பிறகு வெள்ளியை தனியே பிரித்து எடுப்பார்கள்.

அடுத்ததாக வெள்ளி கலந்த தண்ணீரை வெளியே எடுத்த பின், ஒரு சிறிய நெருப்புச்சட்டியில் மண்பானையின் ஓட்டைக்கொண்டு மீதித் துகள்களுடன் உப்பு மற்றும் பாதரசம் சேர்த்து அடுப்பில் வேக வைக்கின்றனர். பாதரசமானது தங்கத்தை மட்டும் தனியே பிரித்து எடுத்து விடுகிறது. மீண்டும் ஒருமுறை உப்பு, பாதரசம் மற்றும் மண்துகள்களைக்கொண்டு ஒரு பாத்திரத்தில் பிசைந்து எடுப்பர். இவ்வாறு செய்யும்பொழுது சிறிய தங்கத்துகள்கள் பாதரசத்தோடு ஒட்டிக் கொள்ளும் ஒட்டிய தங்கத்தை அடுப்பில் மண்சட்டியை வைத்து சூடாக்கும் பொழுது தங்கம் முழுவதும் ஒன்றாக சேர்ந்து விடுகிறது. இறுதியில் தண்ணீர் ஊற்றி ஆற வைத்து துடைத்து எடுப்பர்.

இதோடு மட்டுமில்லாமல் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் ஆற்றுப் பகுதிகளில் கரையோரம் தேங்கி நிற்கும் வண்டல் மண் மற்றும் கருப்பு மண்ணைக் கொண்டும் தங்கத்தைப் பிரித்து எடுக்கின்றனர். அதேபோல கடல்களில் சுரப்புகுத்தும் இடங்களில் இம்மண்ணை எடுப்பதாக சொல்கின்றனர். எடுத்துக்காட்டாக, கடலில் எதிர்பாராமல் இறந்தவர்களின் நகைகள் அல்லது கடற்கரைக்கு வந்து செல்பவர் தெரியாமல் விட்டுச் செல்லும் நகைகள் இம்மண்ணில் கிடைப்பதாக சொல்லுகின்றனர். பண்டையகால அரசர்கள் பயன்படுத்திய நகைகள், இதரபொருட்கள், நாணயங்கள் போன்றவை கடற்கரை ஓரங்கள், நீர்நிலைப் பகுதியில் எதிர்பாராத விதங்களில் கிடைக்கிறது என்கின்றனர். ஒட்டுமொத்தமாக இவர்களின் தொழில்திறமையை பார்க்கும்பொழுது பொற்கொல்லருக்கு இணையான திறமையைப் பெற்றிருக்கின்றனர் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

- தீ.ஹேமமாலினி

Pin It