தென் மாநிலங்களைப் பொருத்தவரை பிஜேபியின் நிலைமை கைப்பிள்ளையின் நிலைமையைவிட நாளுக்கு நாள் ரொம்ப மோசமாகிக்கொண்டே போகின்றது. திரும்பிய பக்கமெல்லாம் தர்மஅடி கொடுத்து மக்கள் ஓட ஓட காவிக்கும்பலை விரட்டி அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல நாள், பல பேரைக் கடித்து வைத்துவிட்டு கையில் சிக்காமல் போக்கு காட்டி வந்த நாய் வசமாக ஒருநாள் சிக்கினால், எப்படி மக்கள் அதை விரட்டி விரட்டி கல்லால் அடிப்பார்களோ, அப்படி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் காலிகளை கேரள மக்கள் பார்த்த இடத்தில் எல்லாம் அடித்து கதற விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தங்களுக்கு அடித்தளமே இல்லாமல் வெறும் கையில் கேரளாவில் முழம் போட பார்த்த சங்கிகளை பின்னங்கால் பிடரியில் பட, பின்னி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஊருக்கு நாளு சில்லரை ரவுடிகளை கட்சியில் வைத்துக் கொண்டு காலித்தனம் செய்துவந்த கும்பல், எந்த நேரத்தில் எலும்புகள் உடைக்கப்படுமோ என்ற மரண பயத்திலேயே காலத்தை ஓட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
மத்தியில் ஆட்சியில் இருந்தால் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா மாநிலங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து காவிக்கொடி பறக்க விட்டுவிடலாம் என்று கனவு கண்ட காக்கி டவுசர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி இருக்கின்றார்கள் கேரள மக்கள். ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பெண்களை எல்லாம் பொறுக்கிகளை வைத்து அச்சுறுத்தி வந்த கும்பலுக்கு, இன்று கேரள மக்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கின்றார்கள். ஏதோ சபரிமலை விவகாரத்தில் பினராய் விஜயனின் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கேரள மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் துளி அளவு கூட ஆதரவு கிடையாது, எதிர்ப்புதான் இருக்கின்றது என்பது போல சில பாப்பாத்திகளை வைத்து கூட்டம் நடத்தி அதையே ஒட்டுமொத்த மாநிலப் பெண்களும் பிரதிபலிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் மூலம் உருவாக்க பார்ப்பன அடிவருடிக் கும்பல் முற்பட்டது. தமிழ்நாட்டில் ‘தின மலம்’ இன்று காலைவரை இதையேதான் செய்துகொண்டு இருக்கின்றது. ஆனால் சங்கிகள் என்னதான் பொய்ச் செய்திகளை வெளியிட்டாலும், சபரிமலை விவகாரத்தில் பினராயி அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஏறக்குறைய 50 லட்சம் பெண்கள் ‘பெண்கள் சுவர்’ என்ற நிகழ்ச்சி நடத்தி பார்ப்பன பொய்யர்களின் முகத்தில் கரியைப் பூசி இருக்கின்றார்கள். ஏறக்குறைய 650 கிலோ மீட்டர் தூரம் பெண்கள் அணிவகுத்து நின்று தங்களது ஏகோபித்த ஆதரவை பினராயி அரசுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள்.
நிச்சயம் உலக அளவில் இவ்வளவு பெண்கள் கலந்துகொண்ட மனிதச் சங்கிலி இதற்கு முன் எங்கேயாவது நடந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. பெண்களின் வலிமையையும் ஒருமைப்பாட்டையும் உலகறியச் செய்த நிகழ்வாக அது மாறியிருக்கின்றது. இத்தனைக்கும் பின்பும் மீண்டும் காவி பயங்கரவாதிகள் அடங்காமல் பெண்களின் மனிதச் சங்கிலி போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த பிந்து அம்மினி(40), கனகதுர்கா(44) என்ற பெண்கள் 02/01/2019 அன்று ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்து ஐயப்பனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளார்கள். அங்கே சென்ற பெண்களை ஐயப்பன், கொழுப்பெடுத்த சங்கராச்சாரி சங்கர மடத்திற்கு வந்த பெண்களை பாலியல் வன்முறை செய்தது போன்றோ, தேவநாதன் கோயில் கருவறையில் ஆன்மீக ஆராய்ச்சி செய்தது போன்றோ செய்யாமல் மிக கெளரவமாகவே நடத்தியுள்ளார். அந்தப் பெண்கள் எப்படி சென்றார்களோ அப்படியே திரும்பியிருக்கின்றார்கள். இதன் மூலம் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசிக்கச் சென்றால் ஐயப்பனின் புனிதம் கெட்டுவிடும் என்ற பார்ப்பனக் கும்பலின் புரட்டு உடைக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இதை வைத்து எப்படியாச்சும் கேரளாவில் காலூன்ற முடியுமா என கங்கணம் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல், தங்களின் கண்முன்னாலேயே தங்கள் திட்டம் தவிடு பொடியாவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கலவரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றது. 03/01/2019 அன்று கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த கும்பல் அதை அங்கே யாருமே கண்டுகொள்ளாததால் ஆத்திரத்தில் பேருந்துகளை உடைத்தும் கடைகளுக்குத் தீ வைத்தும் தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முயன்றுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு 3200க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிகளை கைது செய்திருக்கின்றது. இன்னும் தப்பியோடிய பொறுக்கிளை தேடிக் கொண்டு இருக்கின்றார்கள். பல இடங்களில் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கடைகளை அடைக்கச் சொல்லி ரவுடித்தனம் செய்த காலிகளை திக்கு தெரியாமல் ஓட விட்டிருக்கின்றார்கள்.
சமூகம் மாறி வருவதையும், கருத்துக்கள் மாறிவருவதையும் பிற்போக்கு பார்ப்பன, பார்ப்பன அடிவருடிக் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இன்னும் தாங்கள் நினைத்ததைத்தான் ஒட்டுமொத்த மக்களும் தங்களின் கருத்தாக ஏற்று அதற்கு விசுவாசமாக நடக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆனால் கேரளாவின் சூழல் தற்போது முற்றிலும் மாறி இருக்கின்றது. 50 லட்சம் பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆணாதிக்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள் என்றால் அங்கே முற்போக்கு சிந்தனைக்கு ஆதரவாகவும், ஆணாதிக்க பார்ப்பன சித்தாந்தத்திற்கு எதிராகவும் பெண்களிடம் சிந்தனை ரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றது. கேரளா இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கின்றது. பினராயி விஜயன் தேர்தல் அரசியலில் நின்று என்ன சாதிக்க முடியுமோ அதை சாதித்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றார். இந்தியா முழுவதும் உள்ள முற்போக்குவாதிகள் அனைவரும் பினராயி விஜயனின் செயலை பாராட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஏற்கெனவே தென் மாநிலங்களில் அரசியல் அநாதையாக சுற்றிக் கொண்டு இருக்கும் பிஜேபி, ஐயப்பன் கோயில் பிரச்சினையில் முற்றிலும் அம்பலமாகி ஒரு அருவருக்கத்தக்க ஜந்துவைப்போல மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றது. பிஜேபிகாரனின் மூஞ்சியில் முழித்தாலே தரித்திரம் பிடித்துக் கொள்ளும் என்ற மனநிலைக்கு மக்களை அவர்கள் தள்ளியிருக்கின்றார்கள். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்பார் மார்க்ஸ். அது அப்படியே இந்த காவிக் கும்பலுக்கு பொருந்தியிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் பிஜேபியை யாரும் வந்து போராடி வீழ்த்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களது செயல்பாடுகளால் அவர்களே தங்களது இருத்தலுக்கு சவக்குழி தோண்டிக் கொள்வார்கள். மேலும் இந்தப் பிரச்சினையில் கேரள காங்கிரசின் அயோக்கியத்தனமான நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியை முற்போக்கு கட்சி என்று சொம்பு தூக்கும் பிழைப்புவாதிகளையும் அம்பலப்படுத்தி இருக்கின்றது.
ஒரு நேர்மையான அரசை ஒட்டுமொத்த மக்களும் ஆதரிக்கும் போது அதற்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு அந்த மக்களே புத்தி புகட்டுவார்கள் என்பதைத்தான் கேரள மக்கள் பினராயி அரசுக்கு அளித்துவரும் ஏகோபித்த ஆதரவு காட்டுகின்றது. இது போன்ற எதிர்ப்பு இனி வரும் காலங்களில் தென் மாநிலங்களைத் தாண்டி வட மாநிலங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கின்றது. ஏற்கெனவே வட மாநிலங்களில் அதன் கோட்டைகள் ஒவ்வொன்றாக சரிந்து வருகின்றன. அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதுதான் அறிவியல். மோடியின் ஐந்தாண்டு மக்கள் விரோத கார்ப்ரேட் அடிவருடி ஆட்சியும், நாடு முழுவதும் மாட்டை வைத்தும், மதத்தை வைத்தும், சாதியை வைத்தும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் செய்த அடாவடித்தனங்களும் இப்போது பண்பு ரீதியான மாற்றத்தை எட்டி இருக்கின்றன. கேரள மக்களின் மனநிலையில்தான் இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உள்ளார்கள். தங்களை ஐந்தாண்டுகளாக கடித்து வைத்து சித்தரவதை செய்த நாயை விரட்டி விரட்டி அடிக்க அவர்கள் ஆவேசத்துடன் காத்துக் கிடக்கின்றார்கள். நாய் வசமாக மாட்டியது என்றால் அப்புறம் நாய்பாடுதான்.
- செ.கார்கி